Advertisement

2

ஆத்திசூடி – ஓரஞ் சொல்லேல்

பொருள் – எந்த வழக்கிலும் ஒரு பக்கம் பேசாமல் நடுநிலையுடன் பேசு.

இந்திரசேனா இரவு படுக்க வெகு நேரமாகியது. காலையில் மிகத்தாமதமாகவே எழுந்திருந்தாள். கண்கள் எரிந்தது இன்னமும். அன்று முக்கியமான வழக்கின் அடுத்த கட்டம் அதற்கு தான் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.

குளித்து தன் அறையில் இருந்து வெளியே வந்தவள் நேரே சமையலறை செல்ல அங்கு அவளின் அன்னை சாதனா இட்லி ஊற்றிக் கொண்டிருந்தார்.

“குட் மார்னிங்ம்மா”

“இப்போ தான் உனக்கு விடிஞ்சுதா??”

“என்ன பண்ணம்மா நைட் கொஞ்சம் வேலை”

“சாப்பிடுறியா??”

“இதென்னம்மா கேள்வி வைம்மா. நான் பிறந்ததே அதுக்காக தானே” என்று அவள் சொல்லவும் அவள் தலையில் செல்லமாய் ஒரு குட்டு வைத்தவர் அவளுக்கு தட்டில் இட்லி வைத்து கொடுத்தார்.

“அம்மா பொடி வைச்சு எண்ணெய் ஊத்திக் கொடுங்கம்மா”

“வேணாம் தினமும் எல்லாம் சாப்பிடக்கூடாது”

“ப்ளீஸ்ம்மா”

“இன்னைக்கு கண்டிப்பா முடியாது”

“போம்மா” என்றவள் அங்கிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்து உணவருந்த ஆரம்பித்தாள்.

“ம்மா எங்க உன்னோட இரட்டைக்கிளவி காணோம்”

“அடி வாங்க போறே நீ. அவளை வம்பிழுக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதா” என்றவர் “அவளும் அனன்யாவும் கடைக்கு போயிருக்காங்க”

“நாயகிம்மா மார்கெட் போனா பஞ்சாயத்தோட தானே வருவாங்க. பார்ப்போம் இன்னைக்கு என்ன பஞ்சாயத்துன்னு”

“உனக்கு ரொம்ப கொழுப்பு அவ பஞ்சாயத்து கூட்டிட்டு வராளா, பாவம் அவ” என்று தன் கணவரின் தம்பி மனைவிக்கு பரிந்து பேசினார் சாதனா.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கட்டும் நாம் அவர்கள் குடும்பத்தைப் பற்றிய அறிமுகத்திற்கு சென்றுவிடுவோம். அவர்களது அழகிய கூட்டுக்குடும்பம் மூன்று தலைமுறையாய் அது தொடர்கிறது.

மூத்தவர் இந்திரசேனாவின் தந்தை அகத்தியன் குழந்தைகள் நல மருத்துவர். அகத்தியனின் மனைவி சாதனா, அவர்களுக்கு இரு பிள்ளைகள் மூத்தவன் அபிமன்யு சிஏ முடித்துவிட்டு சொந்தமாய் அலுவலகம் வைத்திருக்கிறான். அபிமன்யு, அவன் மனைவி நளினா, அவர்களின் ஒரே செல்ல மகன் அஸ்வின். 

நம் நாயகி அறிமுகம் தான் முன்பே பார்த்தாயிற்றே. அந்த வீட்டின் ஒரே பெண் வாரிசு அவள் தான். அனைவருக்கும் செல்லப்பெண். ஆனாலும் ஒருவரும் அவளிடம் தங்கள் செல்லத்தை அவளிடம் காண்ப்பித்துக் கொள்ளவே மாட்டர்.

அகத்தியனின் தம்பி அவர் மனைவி நாயகி, அவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள், மூத்தவன் நகுலன் அகத்தியனை போன்றே மருத்துவம் பயின்று தனியே கிளினிக் ஒன்று வைத்திருக்கிறான்.

இளையவன் முகிலன் மட்டுமே அந்த குடும்பத்தில் அதிகம் படிக்காதவன். பிகாம் முடித்துவிட்டு ஒரு தனியார் கம்பெனியில் கணக்காளராய் வேலை செய்கிறான். 

நகுலனின் மனைவி திவ்யா இரண்டு மாதங்களுக்கு முன் தான் அவர்களுக்கு திருமணம் முடிந்திருந்தது. இது தான் அவர்களின் குடும்பம்.

அண்ணன் தம்பி ஒரே வீட்டில் பெண் கட்ட வேண்டும் என்று அகத்தியனும் அவர் தம்பியும் சிறு வயதில் முடிவெடுத்திருந்தனர். அவர்களுக்கு முந்தைய தலைமுறையில் அப்படித்தான் இருந்தனர். குடும்பமும் ஒற்றுமையாய் இருந்தது. அதை கண்டு வளர்ந்தவர்கள் என்பதால் அப்படியொரு எண்ணம்.

சிறு வயது முடிவெல்லாம் பின்னாளில் மாறத்தானே செய்யும். அகத்தியனின் தம்பி தன் தோழனின் தங்கையை விரும்ப ஆரம்பித்திருந்தார். 

தம்பிக்கு அவர் விரும்பிய பெண்ணையே மணமுடித்த அண்ணன் சாதனாவை மணந்திருந்தார். அண்ணன் தம்பி இருவருக்கும் ஓரிரு வருடங்கள் தான் வித்தியாசம் என்பதால் இருவரின் திருமணமும் ஒரே நாளிலேயே நடந்திருந்தது.

உடன்பிறந்த அக்கா தங்கையை கட்டியிருந்தால் கூட அவ்வளவு ஒத்துமையுடன் இருந்திருப்பார்களோ என்னவோ சாதனாவும் நாயகி அப்படியொரு ஒற்றுமை. ஒருவர் அறியாமல் மற்றவரிடம் எந்த ரகசியமும் இருந்ததில்லை.

இருவரும் அக்கா தங்கையை பழகியிருக்கவில்லை, தோழிகளாய் பழகியதாலேயே அப்படியொரு இணக்கமும் புரிதலும் அவர்களிடத்தில்.

அடுத்த தலைமுறையும் தங்கள் பெற்றவர்களின் ஒற்றுமையை தாங்களும் கடைப்பிடித்தனர். நகுலனின் மனைவியும் அபிமன்யுவின் மனைவியும் கூட நன்றாகவே பழகினர். தங்கள் மாமியார்மார்களின் அளவுக்கு இல்லாது போனாலும் சண்டை சச்சரவு என்பது அவர்களுக்குள் வந்ததில்லை.

அங்கு ஒரு முக்கியமானவர் வருகிறார் அவரை கவனிப்போம். “ம்மா பீபி எங்கம்மா??”

“கழுதை அப்பாவை போய் பீபின்னு பேசிட்டு இருக்க. உனக்கு ரொம்பவே செல்லம் கொடுத்து நீ கெட்டுபோய்ட்ட”

“எப்படி நீங்கல்லாம் எனக்கு ரொம்ப செல்லம் கொடுத்திட்டீங்க இதை நம்ம பக்கத்து வீட்டுல இருக்க வாஹினி கூட நம்ப மாட்டா”

“உனக்கு என்ன செல்லம் கொடுக்கலைன்னு சொல்லு”

“என்ன கொடுத்தீங்கன்னு நீங்க சொல்லுங்க??”

“உங்கப்பா ஆசைப்பட்ட மாதிரி நீ டாக்டர் ஆகலையே. நீ ஆசைப்பட்ட படிப்பை தானே படிச்சே”

“எல்லாம் ஒரே படிப்பு மாதிரி தான்மா. பொதுவா என்ன சொல்வாங்க டாக்டர்கிட்டயும் வக்கீல்கிட்டயும் உண்மையை சொல்லுங்கன்னு தானே. பாரு அப்பா டாக்டர் நான் வக்கீல் எங்ககிட்ட யாரும் பொய் சொல்ல மாட்டாங்கல்ல” என்று புது கருத்தை சொன்னவளின் காதை பிடித்து அவர் திருகவும் அகத்தியன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

“இங்க என்ன நடக்குது??” என்றார்.

“யாரும் நடக்கலை, இவர் தான் இப்போ நடந்து வந்தார்” என்று முணுமுணுத்தாள் மகள்.

“என்ன சொன்னே??” என்றவருக்கு மகள் சொன்னது நன்றாகவே காதில் விழிந்திருந்தது.

“ஒண்ணும்மில்லைன்னு சொன்னேன்ப்பா” என்றாள் பவ்வியமாய்.

வீட்டில் இருக்கும் மற்ற அனைவரையுமே அவள் ஆட்டி வைப்பாள். அனைவரிடமும் வாயடிப்பாள். அவள் வாய் பேசாது அமைதியாக போகும் ஒருவர் அகத்தியன் மட்டுமே.

ஏனோ சிறு வயது முதலே அவள் அப்படித்தான். அகத்தியனும் ஒரே பெண்ணென்று செல்லம் கொடுக்கவில்லை, ஆனால் அவருக்கு மகளிடத்தில் மிகுந்த பிரியம்.

“கோர்ட்டுக்கு கிளம்பாம இங்க என்ன அரட்டை??”

“நைட் கொஞ்சம் நோட்ஸ் எடுத்தேன்ப்பா, தூங்க நேரமாகிடுச்சு. இன்னைக்கு மதியத்துக்கு மேல தான் எங்களுக்கு ஹியரிங் இருக்கு”

“அதனால லேட்டா போகலாமா, பொறுப்பு வேணாமா. செய்யற வேலையில சுத்தமிருக்கணும், பொறுப்பாயிருக்கணும், கவனமாயிருக்கணும்” என்று அவர் பாடம் எடுக்க ‘உனக்கு இது தேவையா’ என்று தன்னையே நொந்துக் கொண்டு இட்டிலியை வேக வேகமாய் விழுங்கி எழுந்திருந்தாள் அவள்.

“கிளம்பறேன்ம்மா, போயிட்டு வர்றேன்ப்பா”

“நைட் எந்நேரம் படுத்தாலும் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கணும். நேரத்துக்கு சாப்பிடணும் இப்படி அவசர அவசரமா முழுங்கிட்டு போனா உடம்புல எப்படி ஒட்டும்… நாளைக்கு நீ எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட வந்திருக்கணும்”

“ஹ்ம்ம் சரிப்பா” என்றவள் தன் அன்னையை முறைத்துவிட்டு ஓடியேவிட்டாள் அங்கிருந்து.

அவள் வெளியே வரவும் நாயகி உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தார். “எங்கே போனீங்கம்மா இவ்வளவு நேரமா வர்றதுக்கு உங்களுக்கு??”

“மார்கெட்டுக்கு போனா இவ்வளவு நேரமாகிடுது. விலையா விக்கறானுங்க ஒவ்வொரு காய்கறியும் யானை விலை குதிரை விலை சொல்றானுங்க”

“ஆமா ஒரு யானை விலை என்ன?? ஒரு குதிரை விலை என்ன??”

“எனக்கென்னடி தெரியும்??”

“இப்போ தான் சொன்னீங்க காய்கறி எல்லாம் யானை விலை, குதிரை விலை சொல்றாங்கன்னு கேட்டா தெரியலைன்னு சொல்றீங்க”

“கழுதை கழுதை நான் என்ன சொல்ல வந்தா நீ என்னடி சொல்றே?? வர வர உனக்கு குசும்பு அதிகமாகிட்டே போகுது. போற இடத்துல புருஷன்காரன் எங்களை தான்டி இடிப்பான். இப்படியெல்லாம் பேசி வைக்காத”

“ஏன்மா நான் இப்படி பேசினா அவன் என்னை இடிப்பானா?? என்னம்மா இதெல்லாம்”

“சரி சரி அதெல்லாம் விடு எங்க கோர்ட்டுக்கு கிளம்பிட்டியா??”

“ஆமாம்மா கிளம்புறேன்”

“பார்த்து போயிட்டுவா”

“சரிம்மா” என்றவள் கிளம்பியிருந்தாள்.

தன் வண்டியை எடுக்கச் செல்லும் போது தான் நினைவு வந்தவளாய் “அண்ணி எங்கம்மா??”

“உங்க பெரியண்ணியும் சின்ன அண்ணியும் பியூட்டி பார்லர் போய்ட்டாங்க. மார்க்கெட்டுக்கு வந்தவ பாதி வழியில உங்க பெரிய அண்ணி போன் பண்ணவும் கிளம்பிட்டா”

“நல்ல மாமியார்” என்று கையை சூப்பர் என்பது போல் அபிநயம் பிடித்தாள் அவள்.

“போடி” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார் நாயகி.

——————-

இந்திரசேனா காலையில் எப்போதும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அவர்கள் அலுவலகத்திற்கு தான் முதலில் செல்லுவாள். அங்கு தான் அவர்களின் கிளையண்ட்ஸ் எல்லாம் வருவார்கள். காலையில் ஒருவர் வருவார் என்றும் தான் வருவதற்கு முன்பு அவரிடம் விஷயம் என்னவென்று கேட்டு வைத்துக்கொள்ள சொல்லி முதல் நாளே மாணிக்கவாசகம் அவளிடம் சொல்லியிருந்தார்.

அலுவலகம் வந்து இவள் கதவை திறக்கவும் கூட்டும் பெண்மணி இவளுக்கு முன்பே அங்கு நின்றிருந்தார். “என்னக்கா இன்னைக்கு சீக்கிரம் வந்திட்டீங்க போல”

“நான் எப்பவும் போல தான் பாப்பா வந்திருக்கேன். நீ தான் இன்னைக்கு லேட்டு”

“என்ன செய்யக்கா நைட் தூங்க லேட்டு அதான் காலையிலயும் லேட்டு”

“நேரமா தூங்குறது இல்லையா பாப்பா ஏன் இப்படி தூங்காம உடம்பை கெடுத்துக்கற”

“வேலை இருக்கும் போது தானேக்கா” என்றவள் அவர் கூட்டி முடித்து சென்றதும் சாமி போட்டோவில் போட்டிருந்த பழைய பூவை எடுத்து போட்டுவிட்டு கையோடு கொண்டு வந்திருந்த பூவை போட்டு விளக்கை ஏற்றி சாமி கும்பிட்டாள்.

வாசலில் நிழாலடவும் தன் வேண்டுதல் முடித்து இருக்கையில் அவள் அமர “மாணிக்கவாசகம் சார் இல்லைங்களா??”

“இனிமே தான் வருவாங்க உள்ள வாங்க” என்றாள்.

“சார் எப்போ வருவார்??”

“வர்ற நேரம் தான் நீங்க உள்ள வந்து உட்காருங்க” என்றாள்.

அப்போது டீ கொடுக்கும் பையன் வர “சார் உங்களுக்கு காபியா?? டீயா??”

“எதுவும் வேண்டாம்மா??”

“பரவாயில்லை சார் சாப்பிடுங்க” என்றவள் “ரெண்டு டீ கொடுத்திட்டு போடா தம்பி” என்றாள்.

அவன் சென்றதும் “சொல்லுங்க சார் என்ன விஷயமா வந்திருக்கீங்க. சார் நேத்து சொன்னாரு நீங்க வருவீங்கன்னு நீங்க தாமோதரன் தானே”

“ஆமாம்மா”

“சொல்லுங்க”

அவர் தான் வந்த விஷயத்தை அவளிடம் சொன்னார். அவர் பேத்தியை அவர்கள் வீட்டின் அருகே உள்ள பள்ளியில் சேர்க்க சொல்லி அவர் சொல்லியிருக்க மகனும் மருமகளும் சிறந்த பள்ளி என்று சொல்லி சற்று தள்ளி உள்ள அந்த மிகப்பெரிய பள்ளியில் சேர்க்க ஆவன செய்திருந்தனர்.

அங்கு டொனேஷன் எல்லாம் கிடையாது, கட்டணமும் நியாமானதாய் இருக்கும் என்று வேறு சிலரும் சொல்லியிருக்க மகனும் மருமகளும் ஒரே பிடியாய் அந்த பள்ளியில் சேர்க்க பார்ம் வாங்கி கொடுத்தும் விட்டிருந்தனர்.

இதற்கிடையில் பள்ளியில் இருந்து அழைப்பு வந்திருக்க அங்கு சென்றால் அவர்கள் இவர்கள் வேலை, வசதி எத்தனை பேர் என்று அனைத்து விபரமும் கேட்டுவிட்டு பள்ளியில் குழந்தையை சேர்க்க இரண்டு லட்சம் டொனேஷன் கேட்டிருக்கின்றனர்.

அவரின் மகனும் மருமகளும் அதைக்கொடுத்தாவது குழந்தையை பள்ளியில் சேர்க்க தயாராய் இருக்க இவர் தான் வீட்டில் சண்டை போட்டு இதோ வந்து நின்றிருக்கிறார் அப்பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்ப.

“யார் சார் உங்களுக்கு சொன்னாங்க அந்த ஸ்கூல்ல டொனேஷன் எல்லாம் கிடையாது, பீஸ் கம்மின்னு”

“ஏற்கனவே அந்த ஸ்கூல்ல படிச்சுட்டு இருக்க குழந்தைகளோட பேரன்ட்ஸ் தான்மா”

“நீங்க நல்லா விசாரிச்சீங்களா நிஜமாவே அப்படியெல்லாம் கிடையாது தானே”

“இல்லைம்மா நான் ஒருத்தருக்கு பதினஞ்சு பேருக்கு மேல விசாரிச்சுட்டேன். யாருமே நான் சொன்னதை நம்பலை”

“இப்போ நாம நோட்டீஸ் அனுப்பினா மட்டும் என்னாகும்ன்னு நீங்க நினைக்கறீங்க”

“அந்த ஸ்கூல்ல இப்படி ஏமாத்துறாங்கன்னு மத்தவங்களுக்கு தெரியணும்மா அதுக்கு தான். என் மகனும் மருமகளும் வேலைக்கு போறாங்க, நல்லா சம்பாதிக்கறாங்க”

“அந்த காசு அவங்களுக்கு பெரிய விஷயமா தெரியலை. ஆனா அதுக்காக அவங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு நான் கூடவே இருந்து பார்க்கறேன்ம்மா. நாங்க ஒண்ணும் பணக்காரங்க கிடையாது”

“நல்லாயிருக்கோம் அவ்வளவு தான் இப்படி ஸ்கூலுக்கே எல்லாம் கொட்டிக் கொடுத்திட்டா இன்னும் அந்த புள்ளைக்கு படிக்க நிறைய இருக்கேம்மா அதுக்கும் அவங்க தயாராகணும்ல”

“புரியுதுங்க ஆனாலும் இதுல பெரிசா என்ன நடக்கும்ன்னு எனக்கு இன்னும் கொஞ்சம் யோசனையா தான் இருக்கு”

“எனக்கு ரெண்டே காரணம் தான்மா ஒண்ணு அந்த ஸ்கூல் தப்பாயிருக்கணும், வெளிய அவங்க இப்படி அப்படின்னு நம்ப வைச்சிருக்கணும், இல்லையோ உண்மையாவே அவங்க சொன்னதை செய்யறவங்களா இருக்கணும்”

“அவங்க அப்படி உண்மையாவே செய்யறவங்களா இருந்தா அங்க மேனேஜ்மெண்ட்ல தான் ஏதோ கோளாறா இருக்கணும்”

“அப்போ நீங்க நேர மேனேஜ்மெண்ட்கிட்ட பேச வேண்டியது தானே”

“என்னம்மா பேசறே நீ, அங்க பிரின்சிபால்க்கு மேல வேற யாரையும் நம்மை பார்க்கவே விடறதில்லை, இதுல அதுக்கு மேல இருக்க ஆளை நான் எங்க நேர்ல பார்க்க”

“நாங்க அந்த ஸ்கூல்ல படிக்கிறவங்களா இருந்தா ஒரு வேலை கரெஸ்பாண்டன்ட் பார்க்க முடியலாம். இங்க நாங்க அட்மிஷன் போடவே இந்த பாடா இருக்கேம்மா” என்றார் அவர்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மாணிக்கவாசகம் வந்திருந்தார். அவர் எப்போதோ உள்ளே வந்து அமர்ந்திருந்தார். இருவருக்கும் இடையூறு செய்யாது அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு முடித்திருந்தார்.

அவர் நேரே அவர்களை நோக்கி வரவும் இந்திரா எழுந்து நின்றாள். “உட்காரு இந்திரா” என்றவர் தாமோதரனின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டார்.

“நீங்க பேசினது எல்லாம் கேட்டேன். நாங்க என்ன பண்ணணும்ன்னு நீங்க இப்போ நினைக்கறீங்க”

“இல்லைங்க வந்து எனக்கென்னங்க தெரியும். உங்ககிட்ட கேட்டா அதுக்கு ஒரு வழி சொல்வீங்கன்னு தான்” என்றார் வந்திருந்தவர் பவ்வியமாய்.

‘யோவ் என்கிட்ட நோட்டீஸ் அனுப்பச் சொல்லிட்டு அவர்கிட்ட நீங்க சொல்லுங்கன்னு சொல்லிட்டு இருக்க. எல்லாம் ஆளைக்கண்டு ஏமாத்துங்கயா. பாருங்க பாருங்க ஒரு நாள் இந்த உலகமே என் பேச்சை கேட்கும்’ என்று பொருமியவாறே அவர்கள் பேசுவதை கவனித்தாள்.

மாணிக்கவாசகம் அந்த பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பச்சொல்லி அவளிடம் சொல்ல ‘இதெல்லாம் தேவையா ஒரு தரம் போய் பேசிட்டு வரலாம். நம்ம சொன்னா யார் கேட்பா’ என்று மனதிற்கு எண்ணிக்கொண்டே அவள் சிஸ்டமில் அமர்ந்தாள்.

அவள் நோட்டீஸ் தயார் செய்து அதை மாணிக்கவாசகத்திடம் கையெழுத்துக்காக வைக்க அவர் கையொப்பம் இட்டதும் அதை கவரில் போட்டு அவள் அனுப்பிவிட்டாள்.

Advertisement