Advertisement

19

ஆத்திசூடி – கெடுப்ப தொழி

பொருள் – பிறருக்கு கேடு விளைவிக்கும் செயலை செய்யாதே

இரவு தான் மாணிக்கவாசகம் வீட்டிற்கு வந்தார். அபராஜிதன் வீட்டிலிருந்த மற்ற அனைவரிடமும் நன்றாகவே  பேசினான். மாணிக்கவாசகம் அவனிடம் பேச என்னவென்றால் என்ன என்பது போல இருந்தது அவன் பேச்சு.

அவரும் அவன் ஏதோ கவனிக்காது விட்டிருப்பான் என்று எண்ணி மீண்டும் ஏதோ பேச அந்த பேச்சை ஆரம்பித்து அதை அப்படியே பாதியில் விட்டு அவளின் அண்ணன்களிடம் பேச்சை வளர்த்து கொண்டிருந்தான் அவன்.

அபராஜிதன் அவரை வேண்டுமென்றே தவிர்ப்பதை புரிந்துக் கொண்டவர் அவனை அதற்கு மேல் தொந்திரவு செய்யவில்லை. “கொஞ்சம் வேலை இருக்கு நீங்க பேசிட்டு இருங்க” என்று சொல்லி எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

அவருக்கு புரிந்தது அங்கிருந்த இன்னொருவருக்கும் புரிந்திருக்க முகத்தில் வேதனையின் சாயல், ஏதோவொரு பாரம் நெஞ்சில் வந்து அழுத்தியது.

மாணிக்கவாசகம் கட்டிலில் சாய்ந்து தலை மீது கைவைத்து அமர்ந்திருக்க அறைக்கதவு தட்டப்பட்டது. அமர்ந்த வாக்கிலேயே தலையில் இருந்த கையை எடுத்துவிட்டு திரும்பி பார்த்தவர் “வா பாப்பா” என்றுவிட்டு இயல்பாய் அமர்ந்தார்.

“என்னாச்சு சித்தா??”

“என்ன கேட்கறே பாப்பா??”

“உங்களுக்கு என்னாச்சுன்னு கேட்டேன்??”

“ஒண்ணுமில்லையே”

“ஓ!! அப்போ ஏன் வேலை இருக்குன்னு உள்ள வந்தீங்க??”

“தெரிஞ்சுக்க வந்தியா?? இல்லை தெரிஞ்சுக்கிட்டே வந்தியா பாப்பா??” என்றார். யார் அவர் இந்திரசேனாவிற்கே குருவாகிற்றே அவள் கேட்க வந்ததை புரிந்தவராகவே பேசினார்.

“கவனிச்சதுனால கேட்க வந்தேன். உங்களுக்குள்ள என்ன பிரச்சனை சித்தா?? என்கிட்ட சொல்லக் கூடாதா??” என்றாள் மிகுந்த மனவருத்தத்துடன். அவளின் வாட்டம் அவளின் பேச்சிலேயே உணர்ந்தார் அவர்.

“என் மேலே கோபமா இருக்கும்!!”

“எதுக்கு??”

“அவர்கிட்ட நான் நேர்ல போய் பேசினது அவருக்கு பிடிக்கலையோ என்னவோ??”

“நேர்லயா?? எப்போ சித்தா?? என்கிட்ட நீங்க ஒண்ணும் சொல்லலையே அதைப்பத்தி??”

“நீ என்னை முடிவெடுக்க சொன்னல்ல பாப்பா அப்போ தான் நேர்ல பார்த்து அவர்கிட்ட பேசினேன். உங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவா ஒத்து போகலையே ஒரு வேளைன்னு நான் சொல்லும் போதே அதுக்காக எல்லாம் யாராச்சும் பழிவாங்குவாங்களான்னு பேசினாங்க”

“சித்தா அவங்ககிட்ட நீங்க இப்படியேவா பேசினீங்க??”

“ஹ்ம்ம்”

அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தனக்காக பேசப்போய் தான் அவருக்கு இந்த நிலைமையா. அடுத்தவன் அவளின் சித்தாவை எதுவாவது பேசினாலே அவளுக்கு அப்படி கோபம் வரும்.

ஏன் அபராஜிதனிடமே அவள் சண்டைக்கு சென்றிருக்கிறாளே திருமணத்திற்கு முன்பு. இப்போதோ கணவனாய் நிற்கிறான் அதற்காகவெல்லாம் அவள் பேசாமல் இருந்துவிடுவாளா என்ன!!

அவள் அங்கிருந்து கிளம்பும் வேகம் பார்த்தவர் “பாப்பா” என்றழைக்க நின்ற இடத்தில் இருந்தே திரும்பி பார்த்தாள்.

“எங்க வேகமா போறீங்க??”

“எங்கன்னு உங்களுக்கு நான் சொல்லித் தான் தெரியணும்ன்னு இல்லை சித்தா”

“வேணாம்டா இதெல்லாம் பெரிசுப்படுத்தாதே தானா எல்லாம் சரியாகும். என்னை அவருக்கு புரியும் போது புரியட்டும் விட்டிரு, நீ பேசி அதை அதிகப்படுத்தாதே”

“சித்தா” என்று ஓடிவந்து அவரை கட்டிக்கொண்டவளின் தலை கோதிக் கொடுத்தார் அவர். 

“சாரி சித்தா என்னால உங்களுக்கு ஒரு அவமானம்”

“இது ஒரு அவமானமா பாப்பா. என்னை அவங்களுக்கு பிடிக்கலை சோ நான் ஒதுங்கிட்டேன் அவ்வளவு தானே” என்று அவர் சுலபமாய் சொன்னாலும் அதன் பின்னால் இருந்த வலியை அவளால் உணர முடிந்தது அது இன்னும் அவளுக்கு வேதனையை தர கண்களில் கண்ணீர் நிற்காது வழிந்தது.

நாயகி தன் கணவரை தேடி உள்ளே வர மகள் அவர் மீது சாய்ந்து அழுந்துக் கொண்டிருந்ததை பார்த்து பதறினார்.

“இந்தும்மா என்னாச்சுடா எதுக்கு அழறே??”

“அது ஒண்ணுமில்லை நம்மளை இத்தனை நாள் மிஸ் பண்ணால்ல அதுக்கு தான் அழுகை” என்றார் மாணிக்கவாசகம்.

“நம்மளைன்னு எதுக்கு எங்களையெல்லாம் சேர்த்துக்கறீங்க. உங்க பொண்ணு உங்களை மிஸ் பண்ணான்னு சொல்லுங்க. அதுக்கு தானே அப்பாவும் பொண்ணும் சேர்ந்து இங்க அழுக்காச்சி சீன் அரங்கேற்றம் பண்றீங்க” என்றார் அவர்.

“உனக்கு பொறாமை நாயகி”

“ஒரு ஆமையும் இல்லை, சின்ன பிள்ளைங்க மாதிரி அழுதிட்டு இருக்காம போய் வேற வேலையை பாருங்க. அவளுக்கு ஆறுதல் சொல்றது விட்டு இவரும் கண்ணு கலங்கிட்டு இருக்காரு” என்று சொல்ல இந்திரசேனா நிமிர்ந்து தன் சித்தப்பாவை பார்த்தாள்.

அதற்குள் அவர் கண்களை துடைத்திருக்க ஈரத்தின் தடத்தை அவள் கண்டுக்கொண்டாள். “இந்தும்மா மாப்பிள்ளை உன்னை காணாம தேடிட்டு இருக்காரு, போ போய் அவரை பாரு” என்றார் நாயகி.

“ஹ்ம்ம் சரிம்மா” என்றவள் வெளியேறப் போக மாணிக்கவாசகத்தின் விழிகள் அவளிடம் வேண்டாம் என்பது போல சொல்ல அதை கண்டும் காணாது அவள் சென்றுவிட்டாள்.

இரவு அவர்கள் அறைக்கு வர கையில் கொண்டு வந்த பாலை அவனுக்கு நீட்ட அதை வாங்கிக் கொண்டான் அவன். 

அவள் யோசனை முகத்துடன் கட்டிலில் அமர்ந்திருக்க பாலை குடித்து முடித்தவன் அவளருகே வந்து அமர்ந்து அவளின் கரத்துடன் தன் கரத்தை பிணைத்துக் கொள்ள சட்டென்று உருவிக்கொண்டாள் அவள்.

என்னவென்பதாய் அவளைப் பார்த்தான். “சித்தாவை ஏன் அவாய்ட் பண்றீங்க??” என்று நேரடியாகவே கேட்டுவிட்டாள்.

“எனக்கு அவரை பிடிக்கலை??”

“காரணம்”

“அது எதுக்கு இப்போ??”

“எனக்கு தெரிஞ்சாகணும்”

“என்ன தெரியணும் இப்போ உனக்கு??” என்றான் சிடுசிடுப்பாய். அவள் மாணிக்கவாசகத்தின் பேச்சை எடுத்தது அவனுக்கு பிடிக்கவில்லை. அதுவும் அவர்களின் தனிமை பொழுதில் அதைப்பற்றி பேசியது அவனுக்கு அறவே பிடிக்கவில்லை.

“சித்தாக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை??”

“எனக்கு அவரை பிடிக்கலை, அதைத் தவிர எதையும் சொல்ல முடியாது”

“அது தான் ஏன்னு எனக்கு தெரியணும்” என்றாள் அவளும் விடாப்பிடியாய்.

“அந்தாளு யாரு என்னை கேள்வி கேட்க உங்கப்பா கூட என்னை கேள்வி கேட்கலை. அவர் கேட்டாலும் ஒத்துக்கலாம், இவரு யாரு என்னை கேட்க. பெத்த பொண்ணு மேல அப்பாவுக்கு இல்லாத அக்கறையா, இவருக்கு இருக்கு”

“அவருக்கு என் மேல அக்கறை இருக்கறதுல என்ன தப்பு”

“அவர் உனக்கு அப்பா இல்லை, சித்தப்பா அவ்வளவு தான். தவிர அவர் என்னை கேள்வி கேட்டவிதம் எனக்கு பிடிக்கலை”

“அவர் கேள்வி கேட்டது தான் பிடிக்கலைன்னா எங்க அண்ணனுங்க உங்க பின்னாடி ஆளனுப்பி அவங்களே உங்களை பின் தொடர்ந்து எல்லாம் கண்காணிச்சு இருக்காங்க. அதுக்கும் தானே நீங்க கோபப்படணும்”

“அவங்க கண்காணிச்சது எல்லாம் தெரியும். தவிர எனக்கு அவங்க மேல எல்லாம் கோபமே வரலை, ஏன் தெரியுமா. ஏன்னா என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது நான் அதெல்லாம் செஞ்சேன்”

“சோ உங்க சித்தப்பா பசங்களா இருந்தாலும் உங்க அண்ணனுங்க செஞ்சதை என்னால தப்பா பார்க்க முடியலை. ஆனா உங்க சித்தா என்கிட்ட பேசினது எனக்கு பிடிக்கலை, பிடிக்கலை, பிடிக்கவேயில்லை”

“போன்ல பேசினப்போவே அவர்கிட்ட நான் தெளிவா தான் சொன்னேன். என்னை நம்பாம என்னை நேர்ல வேற பார்த்து என்னை கை நீட்டி கேள்வி கேக்குறார். அவருக்கு யாரு அந்த அதிகாரத்தை கொடுத்தது”

“நான் தான்”

“நீ கொடுத்தா அவர் வந்து என்னை கேட்பாரா”

“அவர் பொண்ணு வாழ்க்கை அவர் தெரிஞ்சுக்கறதுல என்ன தப்பிருக்கு”

“உன்னோட அப்பா அகத்தியன், மாணிக்கவாசகம் இல்லை” என்றான் அவனும்.

“சோ நீங்க என் சித்தாவை அவமானப்படுத்துவீங்க அப்படித்தானே”

“நான் அப்படி சொல்லவேயில்லையே”

“நீங்க பண்ணதுக்கு என்ன அர்த்தம்”

“எனக்கு பிடிக்கலை ஒதுங்கி போனேன் அர்த்தம். போ போய் அந்தாளுகிட்ட சொல்லு, இப்படி கேவலமா உன்னை என்கிட்ட தூது அனுப்பிட்டு வேடிக்கை பார்க்க அந்தாளுக்கு வெட்கமா இல்லை” என்று அவன் பேசப்பேச அவளுக்கு கோபமும் ஆத்திரமும் கன்னாபின்னாவென்று எகிறியது.

“அந்தாளுன்னு பேசுவீங்களா அவரை” என்றாள்

“அந்தாளுக்கு அவ்வளவு தான் மரியாதை தரமுடியும்”

அபராஜிதன் பேசப்பேச அவளுக்கு அழுகையாக வந்தது. ஒவ்வொரு முறையும் அவளின் சித்தப்பாவை அந்தாளு என்று அவன் சொல்லும் போதெல்லாம் அப்படி வலித்தது அவளுக்கு.

மாணிக்கவாசகம் சொன்னது போல அவள் அவருக்காக அவனிடத்தில் பேசியிருக்க கூடாது என்று மிகத்தாமதமாக புரிந்தது அவளுக்கு. அவள் அவருக்கு சப்போர்ட் செய்து பேசியதே அவனுக்கு அவர் மீது இன்னும் வெறுப்பையே உண்டாக்கியது.

“அந்தாள்கிட்ட சொல்லு இனிமே நீ அவருக்கு ஜூனியர் இல்லைன்னு. கோர்ட்டுக்கும் வரமாட்டேன்னு அதையும் சொல்லு. அதை நீ சொல்லும் போது அவர் முகம் போற போக்கை நான் பார்க்கணும்” என்றவனை வெறுப்பாய் பார்த்தாள் அவள்.

Advertisement