Advertisement

18

ஆத்திசூடி – துன்பத்திற்கு இடங்கோடேல்

பொருள் – முயற்சி செய்யும் பொழுது வரும் துன்பத்திற்காக அஞ்சி அதனை விட்டு விடாதே.

இந்திரசேனாவின் வீட்டிற்கு அவர்கள் வந்து சேர பதினோரு மணியாகி இருந்தது. அவர்கள் வண்டியின் சத்தம் கேட்கவும் நளினா வேகமாய் ஓடிவந்தாள்.

“என்ன அண்ணி எதுக்கு வேகமா ஓடி வர்றீங்க??”

“வாசல்லவே நில்லுங்க அதைச் சொல்லத் தான் வந்தேன்”

“ஏன்??”

“ஆரத்தி எடுத்து உள்ள கூப்பிடுவாங்க அண்ணி” என்றாள் அகல்யா.

உமையாள் இருவரிடமும் சொல்லிவிட்டு தான் சென்றிருந்தாள் உறவுமுறை சொல்லி அழைக்க வேண்டும் என்று. அவர்கள் இருவருக்கும் சில அது மறந்துவிடும் பெயர் சொல்லியே அழைத்துக் கொள்வர். மற்றவர்கள் முன்னிலையில் அண்ணி என்று சொல்லிக் கொள்வர்.

“ஓ!! ஆனா இதெல்லாம் எதுக்கு??”

“ஹான் எனக்கு நீங்க எடுத்ததெல்லாம் மறந்து போச்சா” என்றாள் அகல்யாவும்.

“அது… ஆமா ஆனா எனக்கு ஒரு மாதிரி இருக்கு”

“நீங்க முதல் முதல்ல வீட்டுக்கு வரும் போது எடுத்தோம் தானே”

“அப்போ எதுவுமே மைன்ட்ல இல்லை”

“அகல்யா” என்று நளினா அழைத்தாள்.

“சொல்லுங்கக்கா” என்றவாறே அவள் உள்ளே சென்றாள்.

“வா சேர்ந்து எடுப்போம்”

“நானா நான் எதுக்கு நீங்க எடுங்கக்கா??”

“அகல்யா எடும்மா” என்று நாயகியும் சொல்ல இருவருமாக சேர்ந்து ஆரத்தி எடுத்தனர். 

“அண்ணா காசு கொடு” என்றாள் அகல்யா.

“இதுக்கு தான் நீ வேகமா உள்ள ஓடி வந்தியா??”

“ஆமா அதுக்கு தான் அக்காக்கு கொடுத்த மாதிரி கம்மியாவெல்லாம் கொடுத்தா வாங்கிக்க மாட்டோம். எங்க ரெண்டு பேருக்கும் ஈக்குவலா கொடுக்கணும். அப்போ தான் ஒத்துக்குவோம், என்னக்கா”

‘இல்லை’ என்று தலையாட்டினாள் அவள். “அட ஆமான்னு சொல்லுங்கக்கா” என்றாள் அகல்யா.

அபராஜிதன் மூன்று இரண்டாயிரம் தாள்களை அவளிடம் கொடுத்தான். “மூணு பேருக்கும் சேர்த்து, இப்போ வழிவிடறியா” என்றான்.

‘இவன் என்ன அள்ளி இறைக்கிறான். பிராந்தாகிட்டானோ’ என்று திரும்பி அவனைப் பார்த்தாள் இந்திரசேனா.

‘என்ன பார்க்குறே’ என்று பதிலுக்கு பார்த்தான். அவள் நினைத்ததை ஒற்றை விரலை தலைக்கு நேரே சுற்றிக்காட்டி பைத்தியமா என்பது போல் அவள் சைகையில் செய்ய ‘அடிங்க’ என்றான் அவன் வாயசைவில்.

‘போய்யா’ என்று திரும்பிக்கொண்டாள் அவள். வந்திருந்தவர்களை வரவேற்று நலம் விசாரித்துக் கொண்டனர். 

மதிய உணவுக்கு பின்னர் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க இந்திரசேனா மெல்ல எழுந்து உள்ளே வந்திருந்தாள்.

“நீ என்ன இங்க வந்து நிக்கறே??” என்றார் சாதனா.

“அங்க இருந்து நான் என்ன பண்ணப் போறேன்” என்றாள் மகள்.

“நாயகி இவளைப் பாரேன் எப்படி பேசறான்னு. கல்யாணம் பண்ணியும் கூட இவளுக்கு பொறுப்பே வரலை” என்று புலம்ப ஆரம்பித்தார் சாதனா.

“சாது அவ இப்போ என்ன பண்ணிட்டான்னு நீ புலம்பறே”

“பாரு அங்க மாப்பிள்ளையை தனியாவிட்டு இவ பாட்டுக்கு இங்க வந்து நிக்கறா. அவருக்கு இவளை தவிர வேற யாரை நல்லாத் தெரியும் சொல்லு. இவ இருந்தா தானே அவருக்கு வித்தியாசமா தெரியாது. நீ போய் மாப்பிள்ளை கூட இரு கிளம்பு”

“ம்மா அவரு இதுக்கு முன்னாடி என் கூடவேவா சுத்திட்டு இருந்தாரு. என்னமோ நான் இல்லைன்னா அவரு இருக்க மாட்டாருங்கற மாதிரி பேசிட்டு இருக்கீங்க. அவர்க்கு என்னைத் தவிர வேற யாரையும் தெரியலைன்னா அப்படியே விட்டிற முடியுமா. அப்புறம் எல்லார்கூடவும் அவர் எப்போ பழகுறதாம். அதெல்லாம் பழகட்டும், நான் மட்டும் அவங்க வீட்டில போய் பழகலை. அது போலத்தான்”

“நாயகி சத்தியமா இவளால எனக்கு பீபி எகிற போகுது பாரு. எப்படி பேசுறான்னு பாரு, இவங்கப்பாகிட்ட அப்போவே சொன்னேன் இவளை வக்கீலுக்கு படிக்க வைக்க வேணாம்ன்னு. இவகிட்ட நம்மால பேச முடியுதா பாரு. நீயே சொல்லு இவளுக்கு, இவகிட்ட பேசினா எனக்கு டென்ஷன் தான் ஏறுது” என்றார் சாதனா.

“இந்தும்மா அம்மாவை ஏன்டா டென்ஷன் பண்றே?? அவருக்கு இங்க செட்டாக ஒரு நாளாச்சும் வேணும்ல அதுவரைக்கும் அவர் கூட இரு சரியா”

“ஹ்ம்ம்” என்றவள் தன் அன்னையை திரும்பி பார்த்து முறைத்தவாறே வெளியேறினாள் அங்கிருந்து. 

“அத்தை எதுக்கு அவளை வெளிய அனுப்பறீங்க?? எல்லா அம்மாவும் செய்யற மாதிரியே நீங்களும் செய்யறீங்க. கல்யாணம் ஆன புதுசுல எல்லா பொண்ணுங்களுக்கும் அவங்க அம்மாவை ரொம்பவே தேடும் அத்தை”

“அதுவும் மறுவீட்டுக்கு வர்றப்போ முதல்ல அம்மாவை பார்க்கணும்ன்னு தான் ஓடிவருவோம். நீங்க இப்படி விரட்டினா அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்” என்று நளினா பேசியதை ஆச்சரியமாகவே பார்த்துக் கொண்டிருந்தனர் இரு மாமியாரும்.

உண்மை தானே அவளும் இதெல்லாம் அனுபவித்திருக்கிறாள் தானே. அதனாலேயே இந்திரசேனாவின் உணர்வுகளை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

“புரியுதும்மா ஆனாலும் இவளைப்பத்தி தான் உனக்கு தெரியுமே. நான் இப்படி செய்யலைன்னா அவ இங்க உட்கார்ந்து கதை பேசிட்டே இருப்பா”

“நீங்க அவகிட்ட ரெண்டு வார்த்தை நல்லா பேசிட்டு அப்புறம் போகச் சொல்லியிருந்தா அவளே போயிருப்பா அத்தை” என்றுவிட்டு அனைவருக்கும் டீயை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

“என்ன சாது பார்க்கறே, அவ சொல்றதும் சரி தானே”

“சரி தான் நாயகி, பாவம்ல நான் இந்துவை ரொம்ப திட்டிட்டனா” என்று கேட்கும் போதே கண்கள் கலங்கிவிட்டது சாதனாவிற்கு.

“லூசு எதுக்குடி அழறே?? நம்ம பொண்ணுக்கு நம்மளை நல்லா தெரியும் விடு”

“எனக்கு கொஞ்சம் பயம் தான் இவ அங்க எப்படி இருப்பாளோ என்னவோன்னு. அதான் அப்படி கண்டிப்பா நடந்தேன். மாமியார் இல்லாத வீடா போச்சு, இல்லைன்னா இவ ஏதாச்சும் எடக்குமடக்கா பேசினா என்னாகும் சொல்லு. அதெல்லாம் யோசிச்சு தான் இவ எல்லார்கிட்டயும் அனுசரிச்சு போகணுமேன்னு எனக்கு கவலை” என்றார் அவர்.

“அதெல்லாம் நம்ம புள்ளை நல்ல புள்ளையாவே நடந்துக்குவா. அவ என்ன சின்ன குழந்தையா எதையும் புரியாம புரிஞ்சுக்காம நடக்க, நீ முதல்ல கண்டதும் யோசிச்சு குழம்பாத சரியா” என்று சமாதானம் செய்தார் அவர்.

வீட்டில் அகத்தியன், அபிமன்யு, முகிலன், பெண்கள் மூவர் மற்றும் அஸ்வின் மட்டுமே இருந்தனர். திவ்யா கருவுற்றிருப்பதால் அவளை அவர்கள் வீட்டில் வந்து அழைத்துச் சென்றிருந்தார்கள் இரண்டு நாட்கள் சீராட்டி வருகிறோம் என்று.

மாணிக்கவாசகம் ஒரு கேஸ் விஷயமா கோர்ட்டுக்கு சென்றிருந்தார். நகுலன் மருத்துவமனையின் இருந்து இன்னமும் வந்திருக்கவில்லை.

பேசிக்கொண்டிருக்கும் போது கரிகாலன் தன் மருமகளை புகழ்ந்து பேசினார். “பொண்ணை ரொம்ப நல்லா வளர்த்து இருக்கீங்க. ரொம்பவும் பக்குவம், தெரியாததை தெரிந்துக்கணும்ன்னு நினைக்கிறது, யாருக்கும் கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு எல்லாம் செய்யறா” என்று அவர் பாட்டுக்கு அவளைப் பற்றி பேச உள்ளே குளிர்ந்து அன்னையர் இருவருக்கும்.

“டி நாயகி இதெல்லாம் கனவில்லையே. அவ மாமனாரு என்ன இப்படி புகழ்ந்து தள்ளுறாரு. பாரு நம்மகிட்ட பண்ணுற சேட்டையெல்லாம் பண்ணிட்டு அவர் முன்னாடி எப்படி பம்மிட்டு நிக்கறான்னு” என்று மகளைப் பார்த்தவாறே நாயகியிடம் சொன்னார்.

“உனக்கு அவளை குறை சொல்லலைன்னா இருக்க முடியாதே. பாரு நான் சொன்னேன்ல நம்ம பாப்பா எல்லார்கிட்டயும் அட்ஜஸ்ட் பண்ணிக்குவான்னு”

“மாமியார் இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் சேதி”

“அவங்களும் பாராட்ட தான் செஞ்சிருப்பாங்க” என்றார் நாயகி.

“நீ அவளை ஒண்ணும் சொல்ல விடமாட்டியே” என்ற சாதனாவிற்கு மகளை குறித்து பெருமிதமே.

அகல்யாவும் தன் தந்தையுடன் சேர்ந்து அவளுக்கு ஆதரவாகப் பேச இன்னும் மகிழ்ச்சி நாயகிக்கும், சாதனாவிற்கும்.

நான்கு மணியளவில் கரிகாலன், அகல்யா, அகிலேஷ் அனைவரிடமும் விடைப்பெற்று அங்கிருந்து கிளம்பியிருந்தனர். 

“நீங்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க, இந்து கூட்டிட்டு போ” என்று சாதனா சொல்லி அப்புறம் நகர்ந்திருந்தார்.

“அந்த ஸ்ட்ரைட் ரூம் தான் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. எனக்கு மதியம் தூக்கம் வராது”

“எனக்கு தூக்கம் வருது வந்து கம்பெனி கொடு”

“அதான் சொன்னேனே எனக்கு தூக்கம் வராதுன்னு”

“சரி தூங்காம இருக்க கம்பெனி கொடு” என்றவன் அவள் கரம் பற்றி தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றான் அவளை.

அவனே கதவை சாற்றிவிட்டு வந்தவன் “தூங்கலாமா??” என்றான் சட்டையின் முதல் இரண்டு பட்டனை கழற்றியவாறே.

“எனக்கு…”

“தூக்கம் வராது அதானே, வா” என்று அவன் கை நீட்ட முறைத்துக்கொண்டே நின்றிருந்தாள் அவள்.

“இப்போ என்னாச்சு??”

“எவ்வளவு ஆசையா வந்தேன் எல்லார்கிட்டையும் பேசுறதுக்கு. உங்களுக்கு தூக்கம் வந்தா நீங்க தூங்க வேண்டியது தானே. என்னை எதுக்கு இழுத்துட்டு வந்தீங்க”

“இவ்வளவு நாளும் நீ அவங்க கூடத் தானே பேசிட்டு இருந்தே, இப்போ என் கூட பேசு”

“இனிமே உங்ககூடத் தானே பேசப்போறேன். அவங்ககிட்ட தினமும் இப்படி பேச முடியுமா” என்று அவன் சொன்னதையே அவளுக்கு சாதகமாய் திருப்பிச் சொன்னாள்.

“நீ வக்கீலுக்கு படிச்சிருக்கக்கூடாது” என்றான் அவனும் அவளின் அன்னையை போல். ஏற்கனவே அவள் அன்னை வேறு அப்படிச் சொல்லியிருக்க இப்போது அவனும் சொன்னதும் அது அவளுக்கு கோபத்தை வரவழைத்தது.

“அதுக்கு என்ன இப்போ. நான் வக்கீல் படிச்சதுல உங்களுக்கு என்ன நஷ்டம் இல்லை கஷ்டம்” என்றாள் படபடவென்று.

“எதுக்கு டென்ஷன் கூல். நீ வக்கீல் படிச்சதுனால எல்லாமே பாயின்ட் பாயின்ட்டா பேசுறா அது தான் எனக்கு நஷ்டமும் கஷ்டமும் எனக்கு அப்படியெல்லாம் பேச வரலையே. உன்கிட்ட பதிலுக்கு பதில் என்னால பேச முடியலையே” என்று அவன் சொல்லவும் சட்டென்று குளிர்ந்தாள் அவள்.

ஏறியிருந்த கோபம் நன்றாகவே இறங்கியிருந்தது அவன் கூறிய பதிலில். “அதுக்கு நான் என்ன பண்றதாம்”

“நீ ஒண்ணும் பண்ண வேண்டாம்” என்றவன் எதிரில் நின்றிருந்தவளின் கரம் பற்றி இழுத்து கட்டிலில் சாய்க்க அவனிடமிருந்து திமிறினாள். அவள் கழுத்து வளைவில் அவன் முத்தமிட கூசிப்போனது அவளுக்கு.

“இப்போ பதில் சொல்லு இந்த முத்தம் உனக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு” என்று அவன் சொல்லவும் அவளுக்கு கோபம் முன்பை விட அதிவேகமாக வர அடுத்து அவன் சொன்னதைக் கேட்டு அது புஸ்சென்று போனது.

“பிடிச்சிருக்குன்ன பிடிச்சிருக்குன்னு சொல்லு, இல்லைன்னா பிடிக்கலைன்னு சொல்லு. அதுவும் இல்லைன்னா எப்படி கொடுக்கறதுன்னு சொல்லிக்கொடு கத்துக்கறேன்” என்று அவன் சொல்லவும் பதிலே வரவில்லை அவளிடமிருந்து.

“உன்னைக்கூட பேச வைக்காம இருக்க என்னால முடியும் போலவே” என்றவன் பேசிக்கொண்டே அவள் நுதல், கண்கள், மூக்கு, கன்னம் என்று முத்தம் வைத்துக்கொண்டே சொல்ல சுத்தமாய் பேச்சிழந்தாள் அவள்.

Advertisement