Advertisement

17

ஆத்திசூடி – தொன்மை மறவேல்

பொருள் – பழைமையை மறவாதிருக்க வேண்டும்

“சாதனா” என்று அகத்தியன் அழைக்க “இதோ வர்றேங்க” என்று உள்ளிருந்து குரல் கொடுத்த சாதனா அடுப்பை அணைத்துவிட்டு வந்தார்.

“ஹ்ம்ம் சொல்லுங்க” என்றார் நெற்றியில் வழிந்த வியர்வையை புடவை முந்தானையால் துடைத்தவாறே.

“உட்காரு” என்றவர் டேபிள் பேனை சுத்தவிட்டார்.

“என்ன திடீர்ன்னு என் மேல கரிசனம்”

“எப்பவும் இருக்கறது தான் சாதனா, சாப்பிட்டியா??”

“இனிமே தான் சாப்பிடணும் நீங்க எதுக்கோ என்னை கூப்ப்பிட்டீங்க என்ன விஷயம்??”

“இந்திரா என்னைக்கு மறுவீட்டுக்கு வர்றா?? எதுவும் போன் பண்ணாளா??”

“அன்னைக்கு கேட்கும் போது புதன்கிழமைன்னு சொன்னாங்க. இப்போ வியாழக்கிழமைன்னு சொல்றாங்க. நாளைக்கு வருவாங்கன்னு நினைக்கிறேன்”

“இன்னும் என்ன நினைக்கிறேன்னு சொல்றே. உறுதியா என்ன ஏதுன்னு கேட்டுக்க மாட்டியா”

“அதெல்லாம் ஆம்பிளைங்க நீங்க பேசணும். எங்களை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பீங்க” என்று பதில் கொடுத்தார் சாதனா.

“இது… இதெல்லாம் எங்களுக்கு எப்படி தெரியும் நீங்க தானே பார்க்கணும்”

“அப்புறம் எதுக்கு என்னை கூப்பிட்டு கேட்டீங்க. எங்க போக்குல விட வேண்டியது தானே” என்றார் சாதனாவும் விடாது.

“என்ன சாது இப்படி பேசறே?? இந்திரா இல்லாம வீடே என்னவோ போல இருக்கு?? எனக்கு தூக்கமே வரலை அவளை பார்க்காம” என்ற கணவரை முறைத்தார் அவர்.

“அவளை ஓயாம திட்டிட்டே இருப்பீங்க இப்போ தேடுதா உங்களுக்கு??”

“அதெல்லாம் அவ சரியா இருக்கணும்ன்னு சொல்லுறது. அதுக்காக மக மேல எனக்கு பாசம் இல்லைன்னு சொல்வியா நீ. நிறைய பாசம் இருக்கு, எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பாசத்தை கொட்டி அவளை கெடுத்து வைச்சிடக் கூடாதுன்னு தான் நான் ஸ்டிரிக்ட்டா இருந்தேன். அது ஒரு தப்பா”

“சரி சரி போதும் உங்க புராணம் இப்போ என்ன இந்திரா எப்போ வர்றான்னு உங்களுக்கு தெரியணும் அதானே”

“அதைத்தானே அப்போல இருந்து கேட்டுட்டு இருக்கேன்”

“நாளைக்கு வர்றாங்க அவங்க வீட்டில இருந்து எல்லாரும். இங்க ரெண்டு நாள் தங்கிட்டு அப்புறம் தான் அவங்க வீட்டுக்கு போவா போதுமா” என்று சாதனா சொல்லவும் அகத்தியன் அகமகிழ்ந்து போனார் மகளின் வருகை குறித்து.

“அவ ரூம்ல ஏசி வொர்க் ஆகுதான்னு செக் பண்ணியா?? அவ ஒரு முறை சரியா வேலை செய்யலைன்னு சொன்னாளே. நான் உடனே ஆளை கூப்பிட்டு சரி பண்ணச் சொல்றேன்” என்று அவர் அலம்பல் செய்ய தலையில் கை வைத்து அமர்ந்தார் சாதனா.

“என்ன சாது நான் பேசிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு தலையில கை வைச்சு உட்கார்ந்து இருக்கே”

“எல்லாம் உங்க தம்பி சரிபண்ணிட்டாரு. நீங்க இப்போ தான் வந்து கேட்கறீங்க என்னாச்சுன்னு. ஆளைப்பாரு வேலை பார்த்திட்டு இருந்தவளை கூப்பிட்டு வம்பளந்துகிட்டு. இன்னைக்கு கிளினிக் இல்லையா உங்களுக்கு கிளம்புங்க பாருங்க மணி பத்தாகப் போகுது” என்று சாதனா அவரை விரட்டவும் மனைவியை முறைத்தவாறே கிளினிக்கிற்கு கிளம்பினார் அவர்.

—————

“அப்பா அகல்யா எப்போ வர்றா??”

“காலையில் நேரா இந்திரா வீட்டுக்கே வந்திடறேன்னு சொல்லியிருக்கா அபி”

“அதெல்லாம் வேணாம்ப்பா அவளை இங்க வந்திட சொல்லுங்க. நாம எல்லாம் ஒண்ணா சேர்ந்து போகலாம். ரெண்டு நாளைக்கு அவளை இங்க ஸ்டே பண்ண சொல்லிடுங்கப்பா”

“ரெண்டு நாள் தானே அபி நான் மேனேஜ் பண்ணிக்க மாட்டேனா??”

“ஒண்ணும் வேணாம்ப்பா, அவ இருக்கட்டும். நான் அகிலேஷ்கிட்ட பேசறேன் அவங்க வீட்டில இருக்கறதுக்கு பதில் இங்க இருக்க போறாங்க அவ்வளவு தானேப்பா”

“அபி அவ இப்போ நம்ம வீட்டு பொண்ணில்லை இன்னொரு வீட்டுக்கு போய்ட்டா அவளை தொந்திரவு பண்ணுறது சரியா இருக்காது”

“ஓகேப்பா அவளை தொந்திரவு பண்ண வேண்டாம் நாங்க நாளைக்கே உங்க கூட திரும்பி வந்திடறோம்” என்றான் அவன்.

அப்பாவும் மகனும் உணவு மேஜையில் பேசிக்கொண்டிருந்ததை தொந்திரவு செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் இந்திரசேனா. அவ்வப்போது இருவருக்கும் பரிமாறி கொண்டிருந்தாள். அவர்கள் பேச்சில் அவள் இடையிடவேயில்லை.

“ம்மா நீ சொல்லும்மா இவனுக்கு” என்று கரிகாலன் பேச்சில் அவளை இழுக்கவும் தான் திரும்பி பார்த்தாள் அவரை. 

“என்ன சொல்லணும் மாமா??”

“நாங்க பேசிட்டு இருக்கறதை நீ கேட்டுட்டு தானே இருக்கே. நீயே ஒரு நல்ல பதில் சொல்லும்மா” என்றார் அவர்.

“அவங்க சொல்லுறதுல ஒரு தப்பும் இல்லையே மாமா. நீங்க எப்படி தனியா மேனேஜ் பண்ணுவீங்க அதுக்கு தானே அவங்க சொல்றாங்க. அவங்க சொல்றதையும் நீங்க கேட்கலாமே”

“அகல்யா அண்ணிகிட்ட நீங்க பேச முடியாதுன்னா சொல்லுங்க நான் வேணும்ன்னா பேசுறேன், அகிலேஷ் அண்ணாகிட்ட பெரியம்மாகிட்ட எல்லார்கிட்டயும் பேசி நான் சம்மதம் வாங்குறேன் உங்களுக்கு ஓகேவா சொல்லுங்க” என்று நீளமாய் பேசி முடித்தாள் அவள்.

அபராஜிதனுக்கு சற்று ஆச்சரியம் தான் இந்திரசேனா அவன் கூற்றை ஆமோதிக்க மாட்டாள் என்று அவனே எண்ணிக் கொண்டிருந்தான். அவள் பேசியது அவனுக்கு கொஞ்சம் சந்தோசம் தான். 

தன் முடிவு தவறானது அல்ல என்று எண்ணி அவனுக்கு உவகை தான் அந்த நொடியிலும். ஒரு வழியாக அகல்யாவை வரவழைத்து கரிகாலனுக்கு துணைக்கு வைத்துவிட்டு அவர்கள் மறுவீடு செல்வதென்பது உறுதியாகியது.

அகல்யாவுக்கு அழைத்து பேசிவிட அவள் தான் பார்த்துக்கொள்வதாக கூறிவிட நிம்மதியானார்கள் கணவனும் மனைவியும்.  காலையில் அங்கு வந்துவிடுவதாக கூறியிருந்தாள் அகல்யா.

மறுநாள் காலை உணவுக்கு பின் அவர்கள் கிளம்புவதாக இருக்க அகல்யாவும் அகிலேஷும் வந்துவிட்டிருந்தார்கள். இந்திரசேனா மட்டும் இன்னும் கிளம்பியிருக்கவில்லை.

“என்ன இந்து இன்னும் கிளம்பாம இருக்கே??” என்றாள் அகல்யா வந்ததும் வராததுமாய்.

“இல்லை அண்ணி காலையில டிபன் வேலை எல்லாம் இருந்துச்சுல. எல்லாரும் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் டிரஸ் மாத்திக்கலாம்ன்னு இருந்திட்டேன். ஒரு அஞ்சு நிமிஷம் தான் நான் ரெடியாகிடுவேன்” என்றவளின் முகம் பளபளவென்றிருந்தது, தாய் வீடு செல்லும் சந்தோசம் அதில் தெரிய அகல்யா தனக்கும் அப்படித்தானே இருந்தது என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த அபராஜிதன் தங்கையிடம் “எங்க உங்க அண்ணி??” என்றான்.

“இப்போ தான் டிரஸ் மாத்த போயிருக்காங்க”

“ஓ!!” என்றவன் “அகிலேஷ் எங்கே??”

“அப்பாவும் அவரும் பேசிட்டு இருக்காங்க அண்ணா. நீ உன் டிரஸ் எல்லாம் எடுத்து வைச்சிட்டியா??”

“எதுக்கு அகல்??”

“ஹ்ம்ம் நாய் குலைக்கும் போது தூக்கி குப்பையில போட, ஆளைப்பாரு எதுக்குன்னு கேட்குது. ஏன் அண்ணா நீயெல்லாம் எப்படித்தான் கல்யாணம் பண்ணி… என்னவோ போ இந்த அண்ணி கொஞ்சம் பாவம் தான்”

“எதுக்கு அகல் என்னை திட்டுறே??”

“பின்னே மறுவீட்டுக்கு போகப் போறே. ரெண்டு மூணு நாள் அங்க தங்கிட்டு வரத்தானே போறீங்க. உன் டிரஸ் எல்லாம் எடுத்து வைச்சியான்னு கேட்டா எதுக்குன்னு கேட்கறே??”

“ஓ!! அதுக்கா ஓகே ஓகே புரியுது” என்றவன் நகர “சீக்கிரம் கிளம்பி வாங்க. நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்பணும். அக்கா வேற எனக்கு அப்போவே போன் பண்ணியாச்சு இன்னும் கிளம்பலையான்னு. அக்காக்கு என்னால பதில் சொல்ல முடியாது” என்று சொல்லியனுப்பினாள் அவன் தங்கை.

‘கல்யாணம் ஆனதும் பெரிய மனுஷியாகிட்டதா நினைப்பு இவளுக்கு. எனக்கே சொல்லித் தர்றா பாரு’ என்று மனதிற்குள் தங்கையை செல்லமாய் கடிந்துக் கொண்டே அவன் அறைக்குள் நுழைய இந்திரசேனா அவனுக்கு முதுகுகாட்டி நின்றுக் கொண்டிருந்தாள்.

அழகியநாவல் பழ நிறத்தில் டிசைனர் புடவை ஒன்றை அணிந்துக் கொண்டு நின்றிருந்தவளை கண்டவனின் கண்கள் பளிரென்று தெரிந்த அவளின் இடையில் விழ மனதை கண்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை அவனால்.

செல்பில் எதையோ தீவிரமாய் தேடிக் கொண்டிருந்தவளின் பின்புறம் தான் அவன் கண்ணில் விழுந்தது. அதற்கே அவன் மனம் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது அவளைக் கண்டு. மெல்ல அறைக்குள் நுழைந்தவன் சத்தமில்லாமல் கதவை லாக் செய்து அவளை நெருங்கினான்.

இந்திரசேனா அவள் வீட்டிற்கு செல்வதற்கு எடுத்து வைக்க அவளின் பேவரிட் சுடிதார் ஒன்றை தான் எங்கு அடுக்கினோம் என்று தேடிக் கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாய் பழகியிருந்த அபராஜிதனின் சென்ட்டின் மணம் அவளருகே உணர்ந்த போது தான் அவன் அவளுக்கு வெகு நெருக்கமாய் இருக்கிறான் என்று உணர்ந்தாள் அவள்.

அதை உணர்ந்து அவள் திரும்பும் முன் அவளின் இடையை அழுந்தப் பற்றியிருந்தான் அவன். இந்திரசேனாவால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை அவனின் அந்த நெருக்கத்தில்.

சற்று முன்பு அகல்யா கொடுத்திருந்த பூவை அவள் தலையில் வைத்திருக்க அதன் மணம் அவனை கிறங்கச் செய்திருக்க அப்படியே அவள் மேல் சாய்ந்து பூவின் மணத்தை ஆழ்ந்து சுவாசித்தான்.

இந்திரசேனாவிற்கு கை கால் எல்லாம் சில்லிட்டு கொண்டிருந்தது. வேணாம்ன்னு சொல்லு என்று அறிவு சொல்லியதை மனம் கேட்காது அப்படியே நின்றிருந்தாள் அவள்.

ஒரு நொடியில் அவளை தன் புறம் திருப்பி அவள் இதழை பற்றியிருந்தான் தன் இதழால். நீண்ட நெடிய முத்தம் இடைவேளை ஏதுமில்லாது போக அதை இடையூறு செய்யும் விதமாய் அகல்யாவின் குரல் கேட்டது.

“அண்ணா சீக்கிரம் வாங்க டைமாகுது” என்றாள் வெளியில் இருந்து.

இந்திரசேனா தான் பதறிக் கொண்டிருந்தாள் ‘அச்சோ என்னை நினைப்பாங்க’ என்று. ஆனால் அபராஜிதனுக்கு அந்த கவலையெல்லாம் இல்லை என்பது போல அவள் இதழில் தேனை சுவைத்துக் கொண்டிருந்தான்.

அவளின் திமிறலை எல்லாம் அவன் பொருட்படுத்தவில்லை. அவள் எதிர்பாரா நொடியில் அவளை மெல்லவே விடுவித்தவன் இன்னமும் போதாது என்ற உணர்வில் அவள் இரு கன்னத்திலும் அழுத்தமாய் முத்தம் பதித்து பின் வெளியேறி இருந்தான்.

அவளுக்கு தான் அறையை விட்டு வெளியே வரவே முடியவில்லை. ஒரு மாதிரியாக இருந்தது, படபடவென்று அடித்துக் கொண்டது. இன்னொரு முறை கூப்பிடுறதுக்குள்ள கிளம்பிடணும் என்ற எண்ணத்தில் முயன்று தன்னை சரிப்படுத்திக் கொண்டு அறையில் இருந்து வந்தாள்.

அப்போதும் கூட அகல்யாவின் பார்வை அவளை கூர்ந்து நோக்குவது போலவே அவளுக்கு தோன்றியது. அவள் சாதாரணமாய் தான் பார்த்தாள், இந்திரசேனாவிற்கு தான் குறுகுறுவென்று அவள் பார்க்கிறாளோ என்ற எண்ணம்.

நல்ல வேளையாய் அபராஜிதன் அங்கில்லை. இருந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பாளோ. அபராஜிதன் காரை எடுத்துக் கொண்டிருக்க மற்றவர்கள் வீட்டை பூட்டி வந்தனர்.

“இந்து நீ முன்னாடி ஏறிக்கோ” என்றுவிட்டு அகல்யா தன் கணவன் அப்பா சகிதம் பின்புற கதவை திறந்தாள்.

“இல்லை அண்ணா முன்னாடி உட்காரட்டுமே” என்று இவள் சொன்னதை அவர்கள் கேட்கவில்லையே தவிர அபராஜிதன் கேட்டுவிட்டிருந்தான். அவன் பார்வை இவள் மீதே படிந்திருந்தது.

அபராஜிதனின் அருகில் அமர்ந்தவளுக்கு அவன் பார்வையை சந்திக்கவே முடியவில்லை. ‘நோன்னு சொல்லிட்டு அவன் கட்டிப்பிடிச்சா பேசாம நிப்பியா நீ’ என்று தன்னைத்தான் திட்டிக் கொண்டிருந்தாள்.

“என்னை திட்டுறியா??” என்றான் மெல்ல அவளுக்கு மட்டுமே கேட்கும் விதத்தில்.

“எதுக்கு??” என்றாள் இப்போது நிமிர்ந்து அவனைப் பார்த்தவாறே. அவனோ நல்ல மூடில் இருந்தான் போல உதட்டை குமித்து காண்பித்து இதுக்கு என்று சொல்ல அவள் முகத்தில் சட்டென்று நாணம் படர்ந்துவிட முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்.

அவளின் முகத்தை திருப்தியுடன் பார்த்துக் கொண்டவன் உல்லாசமாய் பாட்டொன்றை விசிலடித்துக் கொண்டே வண்டியை ஓட்டினான்.

Advertisement