Advertisement

16

ஆத்திசூடி – தீவினை அகற்று

பொருள் – பாவச் செயல்களை செய்யாமல் இரு.

இந்திரசேனாவிற்கு ஒன்று மட்டும் மிக நன்றாக புரிந்தது அது அபராஜிதன் வேண்டுமென்றே அவளை காயப்படுத்துகிறான் என்று. அவளை மட்டம் தட்ட முயலுகிறான் என்று, அவனுக்கு பதில் சொல்ல வாய் வரை வந்துவிட்ட வார்த்தைகளை கஷ்டப்பட்டு விழுங்கினாள்.

‘உனக்கு பேச நல்லதொரு சந்தர்ப்பம் வரும் காத்திரு’ என்று அவள் அறிவு எடுத்துரைக்க அவனைக் கண்டு ஏளன சிரிப்பொன்றை உதிர்த்து அங்கிருந்து நகர்ந்தாள்.

“பதில் சொல்லாம போனா என்ன அர்த்தம்”

“பதில் சொல்ல விருப்பமில்லைன்னு அர்த்தம்” என்றவளை என்ன செய்ய என்று தான் பார்த்திருந்தான் அவன்.

என்ன நினைத்தானோ மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை கிளம்பிச் சென்றிருந்தான். வீட்டில் யாருமில்லை அவள் மட்டுமே, தனிமை அப்படியொரு வெறுமையை கொடுத்தது அவளுக்கு.

அவர்கள் வீட்டில் அவள் ஒரு நாளும் தனியே இருந்ததில்லை. ஊரில் திருமணம், முக்கிய நிகழ்வு செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கிளம்பினால் கூட யாராவது அவளுக்கு துணைக்கு இருக்கவே செய்வர். வீடு இப்படி மொத்தமாய் ஆளரவமின்றி இருந்ததேயில்லை.

அபராஜிதனின் வீடு அந்த தெருவிலேயே கடைசி வீடு. இவர்கள் வீட்டிற்கு சற்று தள்ளி பசுமையான வயல்வெளி தொடங்கிவிடும். யாருமற்ற தனிமை கொல்ல அவள் வீட்டிற்கு அழைக்க எண்ண அவளின் சின்ன அண்ணன் முகிலன் அழைத்தான் அவளுக்கு.

‘நாம நினைச்சதும் போன் பண்றாங்க’ என்ற எண்ணத்தில் கண்கள் கலங்கிவிட அழைப்பை ஏற்று காதில் வைத்தவளின் காதிலே தேனாய் ஒலித்தது அவள் அண்ணன் அவளை “பாப்பா” என்றழைத்தது.

இவளும் பதிலுக்கு “அண்ணா” என்று சொன்னது தான் தாமதம் எதிர்முனையில் சத்தமேயில்லை.

இவளோ மீண்டும் மீண்டும் “அண்ணா… அண்ணா…” வென்று அழைக்க ஏதோ சத்தம் மட்டுமே கேட்டது. சில நொடிகளில் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

——————

“முகிலா என்னடா என்னாச்சு??” என்று நாயகி கேட்க அவனோ ஒன்றும் சொல்லாமல் அழ ஆரம்பிக்க அவருக்கு பயமே வந்துவிட்டது.

தங்கைக்கு பேசுகிறேன் என்று அழைத்துவிட்டு பேசாமல் அழுதுக் கொண்டிருப்பவனைக் கண்டால் அவருக்கு எப்படி இருக்கும். “டேய் என்னன்னு சொல்லிடு அழுடா, எனக்கு பயமாயிருக்கு” என்று இவர் பதட்டத்துடனும் உடைந்த குரலுடனும் கேட்க சாதனாவும் வந்துவிட்டார்.

“அம்மா… அம்மா…” என்றானே தவிர வார்த்தைகளே வரவில்லை.

“என்னன்னு சொல்லித்தொலைடா” என்ற நாயகி ஓங்கி அவன் முதுகில் ஒன்று வைக்க “அம்மா பாப்பா பாப்பா என்னை அண்ணான்னு கூப்பிட்டா” என்றான் கண்களை துடைத்துக் கொண்டு.

“அதுக்காடா அழறே, நான் பயந்தே போயிட்டேன். அண்ணான்னு கூப்பிட்டா சந்தோசப்படுறதுவிட்டு எதுக்குடா அழறே??”

“ம்மா உனக்கு தெரியாதாம்மா இதுவரைக்கும் பாப்பா என்னை  அண்ணான்னு அதிகம் கூப்பிட்டதேயில்லைன்னு” என்றான் அவன்.

ஆம் அவள் இதுவரை முகிலனை அண்ணா என்றெல்லாம் அதிகம் அழைத்ததேயில்லை. பெரியவர்கள் இருவரையும் மட்டுமே அண்ணா என்று அழைப்பாள். முகிலனை வாடா போடா என்று தான் பேசுவாள்.

“இப்போ அவ அண்ணான்னு கூப்பிட்டதுக்கா முகில் அழறே” என்றார் இப்போது சாதனா.

“இல்லை பெரியம்மா அவ நம்மளை மிஸ் பண்றான்னு நினைக்கிறேன். அது அவளோட குரல்லையே தெரியுது, பெரியம்மா ப்ளீஸ் பெரியம்மா பாப்பாவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க ப்ளீஸ். எனக்கும் அவ இல்லாம இந்த வீடு பிடிக்கவே இல்லை” என்று கலங்கியவனுக்கு என்ன ஆறுதல் சொல்ல என்று தான் பார்த்திருந்தார்கள் அவ்விருவரும்.

முகிலன் சற்று அதிகமாக கற்பனை செய்கிறானோ என்று தான் பெரியவர்களுக்கு தோன்றியது. அவள் சாதாரணமாய் கூட பேசியிருக்கலாம். அதை கேட்டுவிட்டு இவன் இப்படி வருந்துகிறானே என்று தான் நினைத்தனர் அவர்கள்.

இந்திரசேனா முகிலனை விடுத்து சாதனாவிற்கு அழைக்க அவர் போனை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டார். “இந்தும்மா எப்படிடா இருக்கே??”

“ஹ்ம்ம் இருக்கேன்ம்மா” என்ற மகளின் பதில் அந்த அன்னையருக்கு திருப்தியானதாக இல்லை.

“என்னாச்சு தங்கம் ஏதாச்சும் பிரச்சனையா சுரத்தே இல்லாம பேசுறே” என்று பதறினார் நாயகி.

“நாயகிம்மா அதெல்லாம் ஒண்ணுமில்லை, சும்மா ஓவரா கற்பனை பண்ணாதீங்க. வீட்டில யாருமில்லை, வீடே அமைதியா இருக்கு. நம்ம வீட்டை நினைச்சுக்கிட்டேன், யாராச்சும் ஒருத்தர் வீட்டில இருந்துட்டே இருப்பாங்கல்ல” என்று ஏக்கமாய் அவள் சொல்லவும் அவர்களுக்கு புரிந்து போனது முகிலன் சரியாய் தான் கணித்திருக்கிறான் என்று.

“மாப்பிள்ளை இல்லையா??”

“ஸ்கூல்க்கு கிளம்பிட்டாங்க”

“உங்க மாமனார்”

“அவங்களுக்கும் வேலை இருக்குன்னு கிளம்பிட்டாங்க. அகிலேஷ் அண்ணாவும், அகல்யாவும் கூட நாளைக்கு அங்க வீட்டுக்கு வரும் போது வர்றேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க”

“நீ கிளம்பி இங்க வரியா பாப்பா” என்றான் முகிலன் இடையிட்டு.

“டேய் நீ அங்க தான் இருக்கியா. போன் பண்ணிட்டு பேசாம கட் பண்ணிட்டே, லூசாடா நீ” என்றாள் அவனிடம்.

அவனோ மாறாக சிரித்துக் கொண்டிருந்தான். சாதனாவிடமும் நாயகியிடமும் ‘பாருங்க அவ இப்படித்தான் என்கிட்ட பேசுவான்னு சொன்னேன்ல’ என்றான் வாயசைப்பாய்.

“இந்தும்மா அண்ணன்டா மரியாதையா பேசணும்” என்றார் சாதனா.

“ஆமா அவனுக்கு நான் என்னைக்கு மரியாதை கொடுத்திருக்கேன்”

“கொஞ்ச நேரம் முன்னாடி நீ அண்ணான்னு கூப்பிட்டேன்னு அவன் ஒரே ஒப்பாரி வைச்சுக்கிட்டு இருக்கான்” என்றார் நாயகி.

“எதுக்கும்மா??”

“தங்கச்சி தனியா இருக்கு, பீல் பண்ணிட்டு இருக்கு அதான் என்னை அண்ணான்னு பாசமா கூப்பிடுதுன்னு ஒரே அழுகை. அதான் போன் பேசாம வைச்சுட்டான்” என்று நாயகி சொல்லவும் அவளுக்கு எப்படியோ ஆனது,

கண்கள் கலங்கிக் கொண்டிருந்தது. ஓவென்று அழ வேண்டும் போல இருந்தது. “அம்மா நான் அப்புறம் பேசறேன்” என்றுவிட்டு போனை வைத்தவளுக்கு கட்டுப்படுத்த  முடியாமல் அழுகை பொங்கியது.

பள்ளிக்கு வந்ததும் அங்கு கணக்கு வழக்குகளை பார்க்கவும் மற்ற வேலைகளும் அவனுக்கு அதிகமாய் இருந்தது. இதில் பிரின்சிபாலின் இடத்திற்கு வேறு ஒருவரை இன்னமும் நியமிக்காததால் அவனே அதன் பொறுப்பையும் வேறு கவனிக்க வேண்டியதாய் இருந்தது.

வேலை சற்று ஓயவும் இந்திரசேனா முகம் கண் முன் வர ரொம்ப பேசிட்டமோ என்று தான் தோன்றியது அவனுக்கு. அவள் மீது பெரிதாய் அவனுக்கு எந்த கோபமும் இல்லை தான் ஆனால் அவள் பேசியது அவனின் ஈகோவை சீண்டிவிட்டிருந்தது.

அது தான் இவ்வளவு தூரத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. அபராஜிதன் எப்போதும் சொல் பொறுக்காதவன் யாரும் சொல்லும்படியும் அவன் வைத்துக் கொண்டதேயில்லை.

முதல் முறை சறுக்கியது பள்ளியின் மானம் காக்கவென்று அவன் பிரின்சிபால் செய்த தவறை வெளியே கசிந்துவிடாமல் செய்ய அவன் மேற்கொண்ட முயற்சியில் தான்.

அவன் செய்ததும் ஓரளவிற்கு சரி தானே. அவன் கடமையை அவன் செய்தான். தந்தைக்கு மகனாய் பள்ளியின் பொறுப்பை நிர்வகிப்பவனாய் அவன் செய்தது சரி தானே.

என்னே இருவருமே வார்த்தைகளை சற்று அதிகமாய் கொட்டியிருந்தனர். அதனால் தான் அவர்களுக்குள் முட்டிக்கொண்டு நிற்கிறது. அவன் தன் வேலையில் சரியாய் இருக்க வேண்டும் என்று நினைப்பது போல் அவளும் தன் வேலையில் சரியாக இருக்க வேண்டும் என்று எண்ணியதில் எந்த தவறுமில்லையே.

பியூன் வந்து அழைப்பது கூட கேட்காமல் கண்ணை மூடியிருந்தவனது சிந்தை முழுக்க இந்திரசேனாவே நிறைந்திருந்தாள்.

“சார்” என்று இன்னும் சத்தமாய் பியூன் அழைக்கவும் கண் விழித்து பார்த்தான். 

“சொல்லுங்க”

“உங்களை பார்க்க ஒருத்தர் வந்திருக்காரு, உள்ள அனுப்பட்டுமா சார்” என்று கேட்டுக்கொண்டு நின்றிருந்தார் அவர்.

“லஞ்ச் டைம்ல வந்திருக்காரு. சரி அனுப்புங்க, ஆனா ஒரு பத்து நிமிஷம் கழிச்சு” என்று சொல்ல அவர் வெளியே சென்றார்.

‘வீட்டில தனியா என்ன செஞ்சிட்டு இருக்காளோ’ என்ற எண்ணம் அவனை சும்மாயிருக்கவிடவில்லை. கையில் இருந்த போனை எடுத்து அவளுக்கும் அழைத்தும் விட ‘இவளுக்கு நாமே போன் பண்ணா ரொம்ப பேசுவா’ என்று எண்ணி அழைப்பை துண்டித்துவிட்டான்.

அவள் போனை வந்து எடுப்பதற்குள் அது அணைந்திருக்க ட்ரூ காலரில் அழைத்தவரின் பெயரை பார்த்ததும் தலை முதல் கால் வரை ஒருவித பதட்டம் வந்தது.

‘ச்சே இந்திரா என்னடி இப்படி பண்றே?? புருஷன் போன் நம்பர் கூடவா உன்கிட்ட இல்லை, அசிங்கம்டி, ட்ரூ காலர்ல வேற செக் பண்ணி பார்க்கறே’ என்று ஒரு மனம் கேலி செய்ய மற்றொரு மனம் அவளுக்காய் வாதாடியது.

‘ஆமா கல்யாணம் நிச்சயம் பண்ணி அவரு நிதம் போன்ல பேசுனாரா என்ன ஞாபகம் வைச்சுக்கறதுக்கு. அவரும் நம்ம நம்பர் கேட்கலை, நாமளும் கொடுக்கலை’

‘ஆனா அவர்கிட்ட என் நம்பர் இருக்கே. எப்படி?? வேணும்ன்னு நினைச்சா வாங்கியிருக்கலாம்’ என்று அவள் மனமே அவளை குற்றம் சாட்டவும் அவளுக்காய் வாதாடவும் செய்ய குழம்பியது அவளுக்கு.

அவளின் குழப்பத்தை ஒதுக்கி வைத்து அவனுக்கு போன் செய்ய போனை எடுத்தவன் “அபராஜிதன்” என்றான் எடுத்ததும்.

‘ஆமா இவரு பேரு தெரியாமத்தான் போன் பண்ணோம் பாரு’ என்று கிண்டல் செய்துக் கொண்டாள் மனதிற்குள்ளாக.

இவளும் பதில் பேசவில்லை, என்ன பேச என்று தெரியவில்லை சட்டென்று போனை வைத்துவிட்டாள். இருவருமே போனையே வெறித்துக் கொண்டிருந்தனர். அவள் போன் செய்வாள் என்று அவனும், அவன் அழைப்பான் என்று அவளும்.

Advertisement