Advertisement

15

ஆத்திசூடி – கேள்வி முயல்

பொருள் – கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்.

அபராஜிதன் சொன்னது தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகம் வேறு அவளுக்கு. கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவள் “என்ன சொன்னீங்க??” என்றாள் அதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு.

“இனிமே நீ கோர்ட்டுக்கு போக வேண்டாம்” என்று ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி நிதானமாய் அவன் சொன்னதை கேட்டவள் “ஏன்??” என்றாள் ஒற்றை வரியில்.

“என் பொண்டாட்டி வேலைக்கு போறது எனக்கு இஷ்டமில்லை” என்றவனை ‘இவ்வளவு தானா நீ’ என்ற பார்வை பார்த்தாள்.

“உங்க ஸ்கூல்ல லேடி டீச்சர் எல்லாம் வொர்க் பண்றாங்களா??” என்றாள் திடிரென்று.

அவள் எதற்கு கேட்க வருகிறாள் என்று புரிந்தவனாய் “நான் சொன்னது என் மனைவி வேலைக்கு போறது எனக்கு பிடிக்கலைன்னு, சோ நீ இனிமே கோர்ட், கேஸ்ன்னு அலையறதை விட்டிடு”

“ஓஹோ!!” என்றவள் அமைதியாக இருந்தாள்.

‘நம்ம சொன்னதும் கேட்டுட்டாளா அவ்வளவு மரியாதை வந்திட்டா, இல்லை பயமா’ என்று யோசித்தவனுக்கு நன்றாகவே தெரியும் இதில் ஒன்றைக் கூட அவள் செய்யப் போவதில்லை என்று.

“லைட் ஆப் பண்றேன்” என்று அதையும் அறிவிப்பாய் சொன்னவன் கட்டிலில் அமர்ந்திருந்தவளை தன் புறம் இழுக்க முதலில் அதை கவனியாதவள் அவன் நோக்கம் புரிந்ததும் தன் எதிர்ப்பை காட்டினாள்.

அதில் அவனுக்கு எரிச்சலும் கோபமும் வர “என்ன பிரச்சனை உனக்கு??” என்றான்.

“எனக்கு பிடிக்கலை??”

“நேத்து பேசாம தானே இருந்தே??” என்ற அவன் கேள்விக்கு பதில் கொடுக்க அவளுக்கு விருப்பமில்லை.

அவள் தொடர்ந்து அவன் கைகளில் இருந்து தன்னை விடுவிக்க முயன்றவள் வெற்றியும் கண்டு எழுந்து விளக்கை போட்டிருந்தாள்.

“எதுக்கு இப்படி தேவையில்லாத ஆர்ப்பாட்டம் பண்றே??”

“என்னோட மறுப்பு உங்களுக்கு ஆர்ப்பாட்டமா இருக்கா??”

“பின்னே இல்லாம எப்படி இருக்கு. நேத்து நீ எதுவும் சொல்லவே இல்லையே”

“ஓகே நேத்து ஏன் நான் பேசாம இருந்தேன்னு உங்களுக்கு தெரியணும் ரைட்”

“ஒரே காரணம் தான் அது நீங்க என் புருஷன் அப்படிங்கறதால மட்டுமில்லை. நீங்க மாறிட்டீங்கன்னு எனக்கு தோணினதுனால மட்டும் தான். தப்பு செஞ்சவன் தன்னை திருத்திக்க அவனுக்கு சட்டம் ஒரு வாய்ப்பை எப்பவும் கொடுக்கும்”

“அப்போ நான் தப்பு பண்ணவன்னு சொல்ல வர்றீயா??” என்றவனின் முகம் செவ்வானமாய் சிவந்திருந்தது கோபத்தில்.

“நான் அப்படி சொல்லலை எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கணும்ன்னு சொல்ல வந்தேன். நீங்க மாறவே இல்லைன்னு இப்போ நல்லா புரியுது எனக்கு”

“உன் சித்தப்பா நான் சொன்னதை நம்பின மாதிரி நீயும் நம்பிட்ட போல” என்றான் இகழ்ச்சியாய் இதழ் வளைத்து.

“எங்க சித்தா நம்பினார்ன்னு உங்களுக்கு தெரியுமா??”

“அப்புறம் எப்படி நீ என்னை கல்யாணம் பண்ணியாம்??”

“எனக்கு பிடிக்காததை யாரும் திணிக்கவே முடியாது. எனக்கு வேணாம்ன்னு தோணிட்டா அது எப்பவும் வேண்டாம் தான். அதையும் யாரும் என் மேல திணிக்க முடியாது”

“அப்போ நீ என்னை நம்பிட்டே அதானே”

“எஸ் நம்பிட்டேன், நம்புறேன். உங்களுக்கு என் மேல லவ் எல்லாம் இல்லை, ஆனா ஒரு ஈர்ப்பு இருக்கு அது தெரியும். அதை நம்பி மட்டும் தான் உங்களை மேரேஜ் பண்ணிக்கிட்டேன்”

“அதான் மேரேஜ் ஆகிடுச்சுல அப்புறம்…” என்றவன் முடிக்கவில்லை. அவன் முடிக்காது விட்ட வார்த்தைகளை கோர்க்க தெரியாத அளவிற்கு அவள் முட்டாளில்லையே.

“பிடிக்கலைன்னு மனைவி மட்டுமில்லை, விலைமாதுவே சொன்னாலும் அவங்களை தொடக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது” என்றாள்.

‘இதுக்கு தான் சட்டம் படிச்சவளை கல்யாணம் பண்ணிக்கக்கூடாதுங்கறது’ என்பது தான் அவன் எண்ணமாக இருந்தது.

“நான் ஒண்ணும் அதுக்காக அலையறவன் இல்லை” என்றான் வீம்பாய்.

அதைப்பத்தி எனக்கொண்ணுமில்லை என்னும் பாவம் அவளிடத்தில். எவ்வளவு திமிர் இவளுக்கு ‘இப்போக்கூட இவ அடங்க மாட்டேங்குறாளே’ என்றவன் கட்டிலில் விழுந்தான். அருகே இருந்த அவள் தலையணையை கையால் தள்ளிவிட்டான் கோபத்தில்.

சற்று நேரத்தில் விளக்கணைத்து வந்தவள் அந்த தலையணையை எடுத்து அவனருகில் போட்டுக்கொண்டு ஒருக்களித்து படுத்துக்கொண்டாள். 

ஒரு வார்த்தை கொல்லும் ஒரு வார்த்தை வெல்லும் என்பார்கள் அவன் சொன்ன ஒரு வார்த்தை தான் அவளை கொன்றது. அதனாலேயே தான் அவள் முடிவெடுக்கும் பொறுப்பை மாணிக்கவாசகத்திடமே விட்டிருந்தாள்.

அன்று நீதிமன்ற வளாகத்தில் அவன் சொன்னது இப்போது தான் சொன்னது போல அவள் காதில் கேட்டுக் கொண்டேயிருந்தது. 

“இந்திரசேனா உங்க மேல எனக்கு கோபம் இருக்கறது உண்மை தான். ஏன்னா அன்னைக்கு நீங்க ரொம்ப பேசிட்டீங்க, ரொம்ப ரொம்ப பேசிட்டீங்க அதை நான் என்னைக்கும் மறக்கவே மாட்டேன்”

“லாஸ்டா ஒண்ணு சொல்லணும் சேனை எப்பவும் பின்னாடி தான் இருக்கணும், முன்னாடி வரணும்ன்னு நினைக்கக்கூடாது. இனிமே கொஞ்சம் நீங்க அடக்கி வாசிங்க” என்று அவன் சொன்னது அவளை ரொம்பவே காயப்படுத்தி இருந்தது.

அவன் பேசியதற்கு அன்று பதிலடி கொடுக்க முடியாது போனாலும் அவன் தங்கையின் திருமணத்தின் போது கொடுத்திருந்தாள்.

“என் குரு எப்பவும் விலை போக மாட்டார்ன்னு நான் சொன்னது சரியாப்போச்சு பார்த்தீங்களா. என்னமோ பெரிசா பேசுனீங்க. என் சித்தா என்னை எவ்வளவு பெருமைப்படுத்திட்டாருன்னு தெரிஞ்சுக்கோங்க”

“இதுக்கு மேலயும் சேனை முன்னாடி வரக்கூடாது, கருணை பின்னாடி வரக்கூடாதுன்னு ஏதாச்சும் சொன்னீங்க அப்புறம் நடக்கறதுக்கு நான் பொறுப்பில்லை”

“சேனையோட பொறுப்பு தலைவனை காக்கறது தான். அது முன்னாடி வந்து செய்யாம புற முதுக்கிட்டு ஓடாது தெரிஞ்சுக்கோங்க” என்று பதில் கொடுத்திருந்தாள் அன்று.

அவள் எப்படி அவன் சொன்னதை மறக்கவில்லையோ அவனும் அவள் சொன்னதை மறக்கவே இல்லை. 

வீடு வெறிச்சென்று ஆனது, உமையாள் கிளம்பிவிட்டிருந்தாள். அகல்யாவும் அகிலேஷும் கூட மறுவீடு அன்று நேரே அங்கு வந்துவிடுவதாக கூறி மறுநாளே கிளம்பிவிட்டிருந்தால் மூவர் மட்டுமே அவ்வீட்டில்.

அவ்வளவு பெரிய வீட்டில் வீடு நிறைய ஆட்களுடன் இருந்தவளுக்கு அந்த வீட்டின் தனிமை வெறுமையை கொடுத்தது. காலையில் தாமதமாய் தான் விழிப்பு வந்தது அவளுக்கு.

கண்களை கசக்கி எழுந்து கட்டிலில் அமர்ந்தவளின் பார்வை அருகே பார்க்க அங்கு அபராஜிதன் இல்லை. குளியலறையில் இருப்பான் என்ற எண்ணத்தோடு எழுந்து அவள் பேஸ்ட் பிரஷ் சகிதம் வாஷ்பேசின் முன் நின்றாள்.

பல் விளக்கி வந்து அலைபேசி எடுத்து நேரம் பார்க்க எட்டு மணி என்றது அது. அச்சோ எட்டாச்சே என்று லேசாய் பதட்டம் எழ குளியலறை கதவை பார்க்க அது வெளிப்புறம் சாற்றியிருந்தது. 

அவசரமாய் தன் உடையை எடுத்துக்கொண்டு குளித்து வெளியே வந்தவள் நேரே சமையலறை செல்ல அங்கு கரிகாலன் காலை உணவை செய்து முடித்திருந்தார். அதை கண்டதும் குற்றவுணர்வு பொங்கியது அவளுக்கு.

“அச்சோ மாமா நீங்க ஏன்?? நான் வந்து செய்ய மாட்டேனா??”

“உனக்கு சுமாரா தானேம்மா சமைக்க வரும்ன்னு சொன்னே. அதான் நானே செஞ்சிட்டேன், நம்ம மூணு பேருக்கு தானேம்மா அதை செய்ய மாட்டேனா”

“இருந்தாலும் நான் இருக்கேன்ல மாமா. எனக்கு நீங்க சொல்லிக்கொடுத்தா நான் செஞ்சி தர மாட்டேனா”

“அதுக்கென்னம்மா சொல்லிக் கொடுத்திட்டா போச்சு. ஆமா நீ இந்த யூடியூப் எல்லாம் பார்த்து செய்ய மாட்டியா??”

“செய்யலாம் மாமா ஒரு டிஷ்க்கு ஓராயிரம் வீடியோ வருது. ஒவ்வொண்ணு ஒவ்வொரு தினுசுல இருக்கு. அதை பார்த்து நான் புதுசா ஒரு டிஷ் செஞ்சிட்டா என்னாகறது. அதான் நான் ரிஸ்க் எடுக்கலை”

“நீங்களோ அம்மாவோ செய்யறதெல்லாம் அப்படியில்லைல. கை பழக்கம், கைப்பக்குவம்ன்னு தனி தானே” என்று அவள் சொன்னதை ரசித்தார் அவர். உண்மை தானே அவள் சொன்னதும்.

“குருமா ரொம்ப வாசமா இருக்கு எப்படி செய்யணும். நீங்க எப்படின்னு மட்டும் சொல்லுங்க மாமா, நான் அதை நோட் பண்ணிக்கறேன் என் மைன்ட்ல”

“வக்கீலாச்சே அதெல்லாம் நல்லா தான் நோட் பண்ணுவே” என்று சிரித்தவர் அவளுக்கு தேவையானதை சொல்லச் சொல்ல அவள் சந்தேகத்தை கேட்கவும் அதையும் அவளுக்கு புரியும் படி தெளிவு செய்தார்.

மாமனார் மருமகளின் உறவு அழகாக அப்பா மகள் உறவாக மலர்ந்திருக்க கணவன் மனைவி உறவு தான் புரியாத புதிராக இருந்தது.

“மாமா அவர் எங்கே??”

“உன்கிட்ட சொல்லலையாம்மா”

இல்லையென்பதாய் தலையாட்டினாள் அவள். “நம்ம ஸ்கூல் மெயின் ப்ரான்ச்ல சிபிஎஸ்இ கொண்டு வரலாம்ன்னு இருக்கோம் அதுக்கு தான் ஒருத்தரை பார்க்க போயிருக்கான்ம்மா. அரைமணி நேரத்தில வந்திடுவான். அவனுக்கு டிபன் வைச்சுடும்மா, நான் சாப்பிட்டு அதுக்குள்ள கிளம்பணும்” என்றவருக்கு காலை உணவை அவள் பரிமாற அவர் உண்டுவிட்டு வெளியே கிளம்பி சென்றுவிட்டிருந்தார்.

அபராஜிதன் பத்து மணிக்கு தான் வீட்டிற்கே வந்தான். முகத்தில் களைப்பின் சாயல், அதைக் கண்டதும் உள்ளே சென்று அவனுக்கு பருக குளிர்ந்த நீர் கொண்டு வந்து கொடுக்க ஒன்றும் சொல்லாமல் அதை அப்படியே வாங்கி தொண்டையில் சரித்துக் கொண்டான்.

அவளுக்கே அவளைக் குறித்து ஆச்சரியம். பின்னே கனவின் முகம் பார்த்தே அவன் களைப்பை உணருவதும் அவன் தாகம் தணிப்பதும், அவன் தேவை கவனிப்பதும் என்று அனைத்தும் அவளுக்கே புதிதாய் இருந்தது.

இதெல்லாம் எப்படி எனக்கு வந்துச்சு என்ற அவளின் கேள்விக்கு இருக்கும் ஒரே பதில் மஞ்சள் கயிறு மாயம் தான் வேறு என்ன இருக்க முடியும்.

அவனுக்கு டிபன் பரிமாறி தானும் உண்டு முடிக்க அவர்கள் அறையில் இருந்து தன்னை சீர்ப்படுத்திக் கொண்டு மீண்டும் கிளம்பியிருந்தான் வெளியே செல்ல.

அதைக்கண்டதும் அவன் இரவு பேசியது எல்லாம் ஞாபகத்தில் வர “எங்கே கிளம்பிட்டீங்க??” என்றாள்.

“இதென்ன கேள்வி கிளம்பும் போது”

“எங்கன்னு சொல்லுங்க” என்றாள் அழுத்தி.

“ஸ்கூல்க்கு தான்”

“போக வேண்டாம்” என்றாள் அவள் அழுத்தந்திருத்தமாய்.

“அதைச் சொல்ல நீ யாரு??”

“உங்க பொண்டாட்டி”

“பொண்டாட்டின்னா என்ன வேணா சொல்லலாமா”

“புருஷன் என்ன வேணா சொல்லலாம்ன்னு இருக்கும் போது பொண்டாட்டியும் சொல்லலாமே தப்பில்லையே”

“ஓஹோ நேத்து நான் உன்னை கோர்ட்டுக்கு போக வேண்டாம்ன்னு சொன்னதுக்கு பதிலுக்கு பதிலா. நேத்து நீ பேசாம அமைதியா இருக்கும் போதே நான் யோசிச்சிருக்கணும், என் தப்பு தான்” என்றவன் தன் லேப்டாப் பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டான்.

“ஸ்கூல்க்கு இனிமே நீங்க போகக் கூடாதுன்னு…”

“போவேன்” என்றான் அவளை முடிக்க விடாது.

“உங்களை மாதிரி நானும் அப்படிச் சொல்ல மாட்டேன்னு சொல்றதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு”

“சேனா” என்று கத்தினான்.

“இந்திரசேனா” என்றாள் அவள்.

“எனக்கு நீ சேனா தான்” என்றான் அழுத்தி.

“நான் கோர்ட்டுக்கு கிளம்பப் போறேன். நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான ஹியரிங் இருக்கு” என்றாள் அவனிடம் அறிவிப்பாய். சென்றவன் நின்று அவளை திரும்பிப் பார்த்தான்.

“நான் உன்னை போகக்கூடாதுன்னு சொல்லியும் நீ திருப்பி அதே தான் செய்வேன்னு சொல்வியா. நீ போகக்கூடாது”

“அன்னைக்கு ஏதோ சொன்னியே சேனையோட வேலை தலைவனை காப்பாத்தறதுன்னு. சேனை என்னைக்கும் தளவைனுக்கு பின்னாடி தான். தலைவனால முடியாதப்போ சேனை முன்னாடி வரட்டும். தலைவன் இருக்கற வரைக்கும் சேனை என்னைக்கும் பின்னாடியே தான் இருக்கணும்” என்றவனை எரித்துவிடும் பார்வை பார்த்தாள் அவள்.

Advertisement