Advertisement

12

ஆத்திசூடி – நன்மை கடைப்பிடி

பொருள் – நல்வினை செய்வதை எவ்வளவு இடையூறு வந்தாலும் உறுதியாக தொடரவும்.

வீடே பரபரப்பாக இருந்தது, வீட்டில் உள்ள அத்தனை பேரும் அங்கு தானிருந்தனர். வீட்டின் செல்லச்சுட்டி அஸ்வினை கூட கிண்டர்கார்டன் அனுப்பவில்லை.

அகத்தியன் கிளினிக்கிற்கு விடுமுறை விட்டிருந்தார் காலை வேளை மட்டும். மாணிக்கவாசகமோ தான் அன்று செய்ய வேண்டிய வேலைகளைனைத்தும் கேசவனிடம் ஒப்படைத்திருந்தார்.

அபிமன்யு, நகுலன், முகிலன் மூவருமே அன்று விடுப்பு எடுத்திருந்தனர். அவ்வீட்டின் ஒரே செல்ல இளவரசி இந்திரசேனாவை பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் சும்மாவா!!

அவ்வளவு ஆர்ப்பாட்டத்திலும் பரபரப்பில்லாத இருவர் இருந்தனர். ஒன்று நம் தலைவி இந்திரசேனா மற்றொருவர் குட்டிப்பையன் அஸ்வின்.

“அத்தை இன்னைக்கு என்ன பங்க்ஷன்??”

“இன்னைக்கு பங்க்ஷன்னு உனக்கு யார் சொன்னா என் சக்கரைக்கட்டி??”

“அம்மா சொன்னாங்க”

“உங்கம்மாவுக்கு வேலை இல்லை அதெல்லாம் நம்பாதா”

“நீ பொய் சொல்ற அத்தை. இன்னைக்கு ஏதோ பங்க்ஷன் தான். பாரு எல்லாரும் வீட்டில இருக்காங்க. அப்பா கூட இருக்காரு, சித்தப்பா எல்லாம் இருக்காங்க”

“பாருப்பா என் செல்லக்குட்டிக்கு விவரத்தை” என்றவள் குழந்தைக்கு இரு கையாலும் திருஷ்டி கழித்தாள்.

“நீ ஏன் இன்னும் கிளம்பாம இருக்க, ரெடியாகு அத்தை எல்லாரும் வெளிய போலாம்” என்றான் அஸ்வின். அது அவ்வீட்டில் நடக்கும் இயல்பான செயல் தானே.

அனைவருமே வீட்டில் இருக்கிறார்கள் என்றால் அது விடுமுறை தினமாக இருக்கும், அல்லது வெளியே குடும்பத்துடன் ஒன்றாய் செல்லும் தினமாக மட்டுமே இருக்கும் என்பதை குழந்தை கூட நன்றாக அறிந்து வைத்திருந்தான்.

“நீ போய் ரெடியாகு பேபி. நான் கிளம்ப லேட்டாகும்”

“ரொம்ப லேட் பண்ணாத அத்தை. அப்புறம் உன்னை விட்டுட்டு போய்டுவேன்” என்று சொல்லிவிட்டு அவன் வெளியே ஓடிவிட லேசாய் ஒரு முறுவல் படர்ந்தது அவளிடத்தில்.

இரண்டு நாட்களுக்கு முன் தான் வீட்டினரிடம் சம்மதம் என்று சொல்லியிருந்தாள். அவளின் சித்தப்பாவிடம் பேசிய பின்னே தான் அதுவும் நடந்தது. அன்றைய நாளைய நினைத்து பார்த்தாள்.

————-

“சித்தா உங்ககிட்ட பேசணும்” என்று வந்து நின்றவளை முறைத்தார் அவர் சுற்றிமுற்றி பார்த்தவாறே.

‘இவரு என்னப்பா ரொம்ப வக்கீலா இருக்காரு’ என்ற எண்ணத்தை அப்படியே தட்டி வைத்து அவர் முகத்தையே பார்த்து நின்றாள்.

“இது ஒண்ணும் வீடில்லை” என்றார் கண்டிப்பாய். எப்போதுமே அவர் அப்படித்தான் வீட்டில் அவள் அவருக்கு பாப்பா அதுவே வேலை என்று வந்துவிட்டால் தன் ஜூனியர். அந்த எண்ணத்தில் மட்டுமே அவளை பார்க்க, பேச, கண்டிக்க, திட்ட என்று தான் இருப்பார்.

“எனக்கு இப்போ பேசணும்”

“வீட்டில பேசலாம்”

“இன்னைக்கு லஞ்ச்க்கு உங்களோட ஜாயின் பண்ணிக்கறேன். எத்தனை மணிக்கு கிளம்பினாலும் என்னைக் கூட்டிட்டு போகணும்” என்று சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

‘இவளுக்கு வர வர ரொம்ப சேட்டை கூடிப்போச்சு’ என்று மனதிற்குள் தன் மகளை செல்லமாய் திட்டிவிட்டு அவளுக்கு மெசேஜ் அனுப்பினார் உணவருந்தும் நேரமும், இடமும் சொல்லி.

இந்திரசேனா வருவதற்கு முன்பே வந்திருந்தார் மாணிக்கவாசகம். அவருக்கு தெரியும் மகள் எதற்கு பேசவேண்டும் என்று சொன்னாள் என்பதை அறிந்திருந்தார்.

அவர் இன்னமும் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. பொதுவாக அபராஜிதனைப் பற்றி யோசித்து மகளுக்கான மாப்பிள்ளையாய் நினைக்கும் போது அவனை மறுப்பதற்கு அவருக்கு எந்த காரணமும் இல்லை.

ஆனால் இந்திரசேனாவின் இடத்தில் இருந்து அவளுக்காக யோசிக்கும் போது அவரால் சரியென்று உடனே சொல்ல இயலவில்லை. அவருக்கு தான் தெரியுமே இந்திரசேனாவிற்கு அபராஜிதனின் மீது பெரிதாய் எந்த நல்ல எண்ணமும் இல்லையே.

ஆரம்பமே அவர்களுக்குள் முட்டலும் மோதலும் தானே. ஒரு புறம் மோதலில் ஆரம்பித்து பின் காதலில் முடியும் என்று தன்னைத்தானே சமாதானம் செய்துக் கொண்டாலும் இந்திரசேனாவிற்காக யோசிக்க வேண்டும் என்றால் அவரின் பதில் இல்லை என்பது தான்.

ஒரு மாதிரி இரண்டும் கெட்டான் மனநிலை தான் அவரிடம். அவர் எதையெதையோ யோசித்துக் கொண்டிருக்க “சித்தா வந்து ரொம்ப நேரமாச்சா” என்ற குரலில் சுயநிலைக்கு வந்தவர் நிமிர்ந்து அவளைப் பார்த்தார்.

“நீ சரியான நேரத்துக்கு தான் வந்திருக்கே பாப்பா. நான் தான் சீக்கிரமே வந்திட்டேன்” என்றார் அவர்.

“சித்தாக்கு அப்படியென்ன யோசனை??”

“யோசனை எல்லாம் ஒண்ணுமில்லை. சரி நீ சொல்லு என்ன சாப்பிடுறே??”

“நார்த் இண்டியன் தாலி”

“என்ன??”

“நார்த் இண்டியன் தாலி சித்தா??”

“ஏன் தமிழ்நாட்டு தாலியெல்லாம் உனக்கு பிடிக்காதா??”

“அதைத்தான் தினமும் சாப்பிடுறேனே. இன்னைக்கு புதுசா சாப்பிடறேனே”

“அதெல்லாம் எதுவும் வேண்டாம் தமிழ்நாட்டு தாலி… ச்சே நம்ம ஊர் சாப்பாடு தான் ஆர்டர் பண்ணப் போறேன்” என்றவர் அதையே பேரரிடமும் சொல்லி அனுப்பினார்.

“இதுக்கு எதுக்கு என்னைய கேட்டுக்கிட்டு??” என்று முணுமுணுத்தாள்.

“சொல்லு பாப்பா”

“என்ன சொல்ல, அதான் நீங்களே சொல்லி அனுப்பிட்டீங்களே!!” என்று முகத்தை தொங்கப் போட்டவாறே சொன்னாள் அவள்.

அவள் சொன்னவிதம் பார்த்து லேசாய் அவர் முகத்தில் புன்னகை அரும்பியது. “நான் இதை கேட்கலை பாப்பா”

“தெரியும் தெரியும் நீங்க இதை கேட்கலைன்னு” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உணவு வந்துவிட மகளுக்கு முதலில் எடுத்து வைத்தார் அவர்.

“இப்போ ஓகே ஆகிட்டீங்களா சித்தா??”

“நான் நல்லா தானே பாப்பா இருக்கேன்”

“நான் வரும் போதே பார்த்தேன் உங்க முகமே சரியில்லை”

“இப்போ நார்மலா தான் இருக்கேன் பாப்பா”

“அப்போ நான் கேட்க வந்ததை கேட்கலாம் தானே”

“கேளு பாப்பா”

“வீட்டில ரெண்டு அம்மாவும் என்னை திட்டுறாங்க. என்னால தான் நீங்க எதுவுமே சொல்லாம இருக்கீங்களாம். நான் தான் உங்ககிட்ட எதையோ சொல்லிட்டேன்னு என்னை இன்னைக்கு ஒரு பிடி பிடிச்சிட்டாங்க”

“அவங்க பேசினதை எல்லாம் விடுங்க சித்தா. நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க??”

“இன்னும் எந்த முடிவுக்கும் நான் வரலை பாப்பா??”

“ஏன் சித்தா??”

“எனக்கு பயமாயிருக்கு பாப்பா இது உன் வாழ்க்கை. கடவுள் புண்ணியத்துல நீ நல்லா இருப்பே பாப்பா. ஆனா  உனக்கு ஒண்ணுன்னா அது காலத்துக்கும் என்னை பாதிக்கும் பாப்பா. என் முடிவு தப்புன்னா என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலை பாப்பா. யாரும் என்னை எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க தான். ஆனா என் மனசாட்சியே என்னை கொன்னுடுமே பாப்பா”

இந்திரசேனா அவர் முகத்தையே தீவிரமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். தான் அவருக்கு எவ்வளவு சிரமத்தை கொடுத்துவிட்டோம், எத்தனை பெரிய பாரத்தை அவரின் மீது ஏற்றி வைத்துவிட்டோம். 

“எத்தனையோ கேஸ்ல இது சரி இது தப்புன்னு முடிவுவெடுக்க முடிஞ்ச என்னால உன் விஷயத்துல எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியலை பாப்பா. உங்கப்பாகிட்ட கூட நீ கேட்கலை உன் வாழ்க்கையை பத்தி என்ன முடிவெடுக்கணும்ன்னு என்கிட்ட கேட்டிருக்க, நான் அதை சரியா செய்யணும்ல பாப்பா”

“நீங்க என்னோட குரு சித்தா. என்னை வழி நடத்த உங்களால முடியும், அம்மா அப்பா எல்லாரும் என்னோட வழித்துணையா வருவாங்க. ஆனா நீங்க தான் வழியை காட்டுவீங்க, அதனால தான் சித்தா உங்ககிட்ட அந்த பொறுப்பை ஒப்படைச்சேன்”

“இப்போ எனக்கு புரியுது சித்தா உங்க மேல எத்தனை பெரிய சுமையை நான் இறக்கி வைச்சிருக்கேன்னு”

“சுமை அது இதுன்னு பெரிசா பேசாதே பாப்பா”

“நீங்க இல்லைன்னு சொன்னாலும் அது உண்மை தானே சித்தா”

“பாப்பா ப்ளீஸ் இப்படில்லாம் பேசாத”

இந்திரசேனா தனக்குள் ஏதோ முடிவெடுத்தவளாய் நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினாள். வேறு எந்த பேச்சும் பேசவில்லை. உணவருந்த ஆரம்பித்திருந்தனர், வேக வேகமாய் சாப்பிட்டு முடித்திருந்தாள் அவள் இப்போது. 

இந்திரசேனாவிற்கு பிடித்த ஐஸ்கிரீமை சொல்லியிருந்தார் மாணிக்கவாசகம். “சித்தா” என்றழைத்தாள் மகள்.

“சொல்லு பாப்பா”

“நான் முடிவு பண்ணிட்டேன்”

“என்ன முடிவு??”

“நானே என் முடிவை சொல்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்”

“புரியலை பாப்பா”

“கல்யாணம் பத்தி தான் சித்தா”

“ஏன்டா என்னாச்சு??”

“உங்களை என்னால கஷ்டப்படுத்த முடியாது. நீங்க நான் கேட்கற கேள்விக்கு பதில் சொன்னா மட்டும் போதும். நான் முடிவு எடுத்துக்கறேன்”

“ஹ்ம்ம் கேளு பாப்பா”

“அவர் எனக்கு மாப்பிள்ளையா வராம உங்களுக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணுக்கு அவர் மாப்பிள்ளையா இருந்தா. அதாவது வேற ஒரு பொண்ணுக்கு பார்த்துக்கற மாப்பிள்ளைன்னு வைச்சுக்கோங்க. உங்ககிட்ட அந்த பையன் ஓகே வான்னு கேட்டா நீங்க என்ன சொல்வீங்க”

“சரின்னு சொல்லுவேன்”

“ஏன்??”

“நிஜமாவே நல்ல பையன், எந்தவித கெட்டப் பழக்கமும் இல்லை பாப்பா அவர்கிட்ட, பெரியவங்களை மதிக்கற பையன். நல்ல குடும்பம், அந்த வீட்டுக்கு போற பொண்ணு மகாராணி மாதிரி வைச்சுக்குவாங்க”

“ஹ்ம்ம் அப்புறம்”

“அப்புறம் என்ன அவ்வளவு தான்”

“அதே பையனை எனக்கு பார்க்கணும்ன்னா??”

“ஓகேன்னு தான் நான் வீட்டில சொல்லிட்டேனா பாப்பா”

“கொஞ்சம் முன்னாடி முடிவெடுக்க முடியலைன்னு சொன்னது”

“ஒரு மகளுக்கு அப்பனா அவருக்கு நான் ஓகே சொன்னேன். அதே மகளோட இடத்துல இருந்து நான் யோசிக்கணும்ன்னா அதுக்கு தான் என்கிட்ட பதில் இல்லை, என்னால முடிவெடுக்க முடியலை”

“ஓகே சித்தா உங்க எல்லாரோட விருப்பம் தான் என்னோட விருப்பமும். எனக்கு முழுசம்மதம்ன்னு வீட்டில சொல்லிடுங்க” என்றாள்.

அவள் சொன்னதும் அவரின் முகம் தவுசண்ட் வாட்ஸ் பல்ப் போல பிரகாசமாகியது. அவ்வளவு சந்தோசம் அவரின் முகத்தில். இதற்காகவே எதையும் செய்யலாம் என்றே தோன்றியது அவளுக்கு. இந்த பத்து நாட்களாய் அவளும் பார்க்கிறாள் தானே வீட்டினரை.

இவளின் முகம் பார்த்தே அத்தனை பேரும் காத்திருந்தார்களே. ஒருவரின் முகத்தில் தோன்றிய சந்தோசமே இப்படி இருக்கிறதே. மற்றவர்களும் விஷயம் கேட்டு மகிழ்வார்களே என்று தான் எண்ணம் ஓடியது அவளுக்கு.

“சித்தா எனக்கு இப்போ சொல்லுங்க. ஏன் முடிவெடுக்க உங்களுக்கு குழப்பம். கோர்ட்ல நீங்க ஜட்ஜை குழப்புவீங்க. இப்போ என்னடான்னா உங்களுக்கே குழப்பம்ன்னு சொல்றீங்க. நம்புற மாதிரி இல்லையே??”

“அடிக்கழுதை நான் என்னைக்கு ஜட்ஜை குழப்பிவிட்டேன். கதையா சொல்றே??”

“அதெல்லாம் பலமுறை செஞ்சிருக்கீங்க. ஒரு முறைன்னா ஞாபகத்துல இருக்கும்”

“பாப்பா என்னைக்கு அப்படி நடந்துச்சு??”

“அதெல்லாம் இன்னொரு நாள் சாவகாசமா சொல்றேன்”

“என்கிட்டவே வாய்தா வாங்குறியா, இன்னொரு நாள்ன்னு. சரி போகட்டும் விடு”

“சொல்லுங்க சித்தா”

“பாப்பா நீ முடிவெடுக்க முன்னாடி இதை நான் சொல்லியிருந்தா நான் சொன்னதை வைச்சுத்தான் நீ முடிவெடுத்திருப்ப. அதனால தான் நீ உன் முடிவை சொன்ன பிறகு இதை சொல்றேன்”

“எனக்கு முடிவெடுக்க முடியாம எல்லாம் இல்லை. என்னோட குழப்பம் ஒண்ணு தான். அது உனக்கு பிடிக்காததை என்னால செய்ய முடியாது. அபராஜிதன் செஞ்சது சரி தப்புன்னு நான் பேச வரலை. ஆனா உனக்கு அது பிடிக்கலை”

“முதல்ல அவர் மேல உனக்கு விழுந்த பிம்பமே சரியில்லாம போய்டுச்சு. நிச்சயம் அதைவைச்சு நீ எந்த முடிவும் எடுப்பே”

“அப்படி எடுத்தா தான் என்ன தப்பு சித்தா??”

“நான் சொல்றதை கேளு பாப்பா. அவங்க நல்ல குடும்பம் இதையெல்லாம் வைச்சு மட்டும் நான் எதையும் பேசலை”

“அவர் என்னை விரும்பறேன்னு சொன்னதா சொன்னீங்களே அதான் காரணமா??”

“அதை நான் நம்பலை”

“எனக்கு புரியலை சித்தா”

“அவர்க்கு உன் மேல இருக்கறது விருப்பமில்லை. ஒரு ஆர்வம் அது பின்னாடி உனக்கு சாதகமா அமையும். அதுவும் ஒரு காரணம் தான். ரெண்டு பொண்ணுங்களோட பிறந்தவரு, கண்டிப்பா உன்னை புரிஞ்சிப்பாரு”

“அம்மா இல்லாத பிள்ளை உன்னை அவரோட அம்மாவுக்கு மேல நடத்துவாரு. இதெல்லாம் யோசிச்சு தான் எனக்கு சரின்னு தோணிச்சு” என்று அவர் விளக்க ‘இவ்வளவு இருக்கிறதா இதில்’ என்று தான் பார்த்திருந்தாள் அவள்.

அவள் நிகழ்வுக்கு வர சாதனா உள்ளே வந்துக் கொண்டிருந்தார். “என்னடி கூப்பிட்டே இருக்கேன், நீ விட்டத்தை வெறிச்சு பார்த்திட்டு இருக்கே??”

“எதுக்கு கூப்பிட்டீங்க??”

“கரடியா கத்திட்டு இருக்கேன் புடவையை கட்டுன்னு. ரெண்டு அண்ணிங்க இருக்காங்க, ஒருத்தியும் உன்கூட வந்து இருக்கலை. என்னத்தை சொல்ல” என்று அவர் சத்தமாய் ஆரம்பித்தவர் பின் முணுமுணுப்பாய் முடித்தார்.

இவர் பேசியது கேட்டதோ அன்றி அவர்கள் உணர்ந்து தான் வந்தார்களோ, திவ்யாவும், நளினாவும் உள்ளே வந்தனர்.

“என்ன அத்தை அவங்க வர்ற நேரமாச்சு. இவ இன்னும் புடவையை கூட கட்டாம இருக்கா” என்றாள் நளினா.

“நான் அங்க அடுப்பில வேலையா இருக்கேன். இங்க யாராச்சும் கூட இருந்து அவளுக்கு சொல்ல வேண்டியதா இருக்கு” என்றார் நேரடியாக மருமகள்களை குறை கூறாது சுற்றி வளைத்து.

“நீங்க அங்க பாருங்க அத்தை நாங்க இந்திராவை பார்த்துக்கறோம்” என்ற நளினா “திவி நீ போய் சின்னத்தைகிட்ட பூ வாங்கிட்டு வா. நான் இவளை ரெடி பண்றேன்” என்று சொல்ல திவ்யா வெளியே சென்றாள்.

ஒரு வழியாய் இரு மருமகள்களும் இந்திரசேனாவை தயார் செய்திருக்க ‘இது வேண்டாம் அது வேண்டாம்’ என்று அவள் படுத்திய படுத்தலில் அவளின் அண்ணிமார்கள் போதும் போதும் என்றாகிவிட்டனர்.

தாங்களும் இதெல்லாம் செய்திருக்கிறோம் என்ற காரணத்தால் அவர்களால் இந்திரசேனாவை புரிந்துக் கொள்ள முடிந்தது. அவளுக்கு அமைதியாகவே எடுத்து சொன்னார்கள் இருவரும்.

அபராஜிதன் தன் குடும்பம் வந்து சேர்ந்திருந்தார்கள் அவளைப் பார்க்க. ஹாலில் அவர்கள் பேசும் சத்தம் கேட்க அஸ்வினை அவளுக்கு துணை வைத்து அவளின் அண்ணிகளும் வெளியே சென்றுவிட்டிருந்தனர்.

இவளை அழைத்து வரச்சொல்லி அவர்கள் பேசுவது கேட்டது. இரு அண்ணிகளும் உள்ளே வர அவளுக்குள் ஒரு பதட்டம் எழுந்தது. ஏனோ அது அவளுக்கு பிடிக்கவில்லை, இவனுக்கெல்லாம் எனக்கு எதுக்கு டென்ஷன் ஆகுது என்று யோசித்தவளின் பதட்டம் கூடியதே தவிர குறையவில்லை.

Advertisement