Advertisement

11

ஆத்திசூடி – சுளிக்கச் சொல்லேல்

பொருள் – கேட்பவருக்கு கோபம் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்

கரிகாலன் மகளின் வீட்டிற்கு வந்து பவானியிடம் இந்திரசேனாவை பெண் கேட்டதும் அவருக்கு அப்படியொரு சந்தோசம். அவரிடம் தன் தங்கை வீட்டினரிடம் பேசிவிட்டு அவர்கள் அபிப்பிராயம் பற்றி சொல்வதாக சொல்லியிருந்தார்.

அவருக்கு அளவில்லாத சந்தோசம் இருந்தாலும் உரிமைப்பட்டவர்களிடம் கேட்கத்தானே வேண்டும். அவர் வந்து சென்ற சில நிமிடங்களிலேயே தன் தங்கைக்கு அழைத்துவிட்டார்.

நாயகியின் போன் அடித்துக் கொண்டே இருக்க எட்டிப்பார்த்த சாதனா “நாயகி உனக்கு தான் போன் வந்திட்டே இருக்கு. பவானி அக்கா கூப்பிடுறாங்க பாரு, வந்து எடு” என்று குரல் கொடுக்க வேறு வேலையாய் இருந்த நாயகியும் உடனே எழுந்து வந்தார்.

போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தவர் “சொல்லுக்கா எப்படியிருக்கே??”

“நல்லாயிருக்கேன் நாயகி, உங்க வீட்டில எல்லாரும் சௌக்கியமா??”

“எல்லாரும் நல்லா இருக்காங்க. அப்புறம் மறுவீடு எல்லாம் முடிஞ்சாச்சு. இரண்டு மாசம் ஓடிப்போச்சுல. அகல்யாக்கு ஒருவழியா வீடு செட் ஆகிட்டா??” என்றார் நாயகி. 

“ஓகே தான், நம்ம திவ்யா மாதிரி தான் இருக்கா. இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பு வரணும். காலையில தினமும் லேட்டா தான் எழுந்து வர்றா” என்றார் சலிப்பாய்.

“அதெல்லாம் விடுக்கா அது ஒரு பெரிய விஷயமா நம்ம பொண்ணுன்னா நாம அமைதியா தானே இருப்போம். அதுவும் நம்ம வீட்டு பொண்ணு தான். சின்னஞ்சிறுசுங்க கொஞ்ச நாளைக்கு அப்படி இப்படித்தான் இருக்கும். நாமளும் அதெல்லாம் கடந்து தானேக்கா வந்திருக்கோம்”

“அதெல்லாம் எனக்கு புரியாம இல்லை. எதுவுமே கேட்கறதில்லையேன்னு அதுவே பழக்கமாகிட கூடாதுல, அதான். என்ன ஒண்ணு அகல்யா சொன்னா புரிஞ்சுக்கறா. அம்மா இல்லாத பொண்ணுல அதான் சில விஷயம் எல்லாம் தெரியலை”

“விளையாட்டுக்கு கூட இனிமே அவ முன்னாடி அம்மா இல்லாத பொண்ணுன்னு சொல்லிடாதக்கா. நீயே அம்மாவா இருந்து சொல்லிக்கொடு, தப்பில்லை”

“சரிடி நீ வேற நான் என்னமோ வில்லி ரேஞ்சுக்கு அட்வைஸ் மழை பொழியாத” என்றவர் “நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் கூப்பிட்டேன்”

“சொல்லுக்கா”

“நம்ம அகல்யாவோட அண்ணனுக்கு இந்துவை கேக்குறாங்கடி”

“என்ன?? என்னக்கா சொல்றே நீ?? அவங்களுக்கு தெரியுமா எல்லா விஷயமும். அவங்க எப்படி நம்ம குடும்பத்துல அவங்க எப்படிக்கா சம்மந்தம் பண்ணுவாங்க, இங்க வேறயாச்சே”

“எல்லாம் தெரியும் நானும் அகிலேஷும் எல்லாமே சொல்லிட்டோம். அவங்களுக்கு பொண்ணு தான் முக்கியம், நல்ல குடும்பம், நல்ல பொண்ணு இதுக்கு மேல என்ன வேணும்ன்னு கேட்கறாங்க”

“இல்லைக்கா ஜாதகம் எல்லாம்??”

“அபியோட ஜாதகம் என்கிட்ட தான் இருக்கு. அகல்யாவோட அப்பா கொடுத்திட்டு தான் போனார். உங்களுக்கு முதல்ல ஓகேவான்னு தெரியாம எப்படி அடுத்த கட்டத்துக்கு போக அதான்”

“நீ சொல்றதும் சரி தான்கா. நான் இங்க எல்லார்கிட்டயும் பேசிட்டு சொல்றேன். எதுக்கும் நீ ஜாதகத்தை கொடுத்துவிடு” என்றுவிட்டு போனை வைத்தவர் சாதனாவை தேடிச் சென்றார்.

“சாது என்னை பாரேன்” என்று அடுப்பில் வேலையாய் இருந்தவரை அழைக்க “என்னடி??” என்றார் அவர் திரும்பி.

“நம்ம பொண்ணுக்கு ஒரு மாப்பிள்ளை வீடு தேடி வந்திருக்கு சாது. அவங்க ரொம்ப பெரிய இடம், ஆனா பையன் நல்ல பையன்”

“என்ன சொல்றே நாயகி நிஜமாவா?? யாரு மாப்பிள்ளை?? எந்த ஊரு??”

“எல்லாம் இந்த ஊரு தான். நமக்கும் தெரிஞ்ச பையன் தான்”

“தெரிஞ்ச பையனா யாரைச் சொல்றே??”

“அகல்யாவோட அண்ணனுக்கு தான் கேட்கறாங்க சாது”

“என்ன அவருக்கா?? அவங்க எப்படி நம்ம வீட்டுல??”

“நான் அதெல்லாம் சொல்லாம இருப்பேனா, சொன்னேன். அவங்களுக்கு பொண்ணு தான் முக்கியம்ன்னு சொல்லிட்டாங்க. நல்ல இடம் சாது, பையனும் நல்ல பையன் தான். நாம கூட கல்யாணத்துல பார்த்தோமே, எவ்வளவு பொறுப்புல” என்றார் அவர்.

சாதனாவுக்கும் நன்றாகவே தோன்றியது. அவர்கள் இருவரும் தத்தம் கணவர்கள் வரவை எதிர்பார்த்து காத்திருந்தனர் அந்த நல்ல விஷயத்தை சொல்வதற்காய்.

அதற்குள் பவானி அகிலேஷிடம் ஜாதகத்தை கொடுத்துவிட்டிருக்க பெண்களுக்கு கை பரபரத்தது. தங்கள் கணவன்மார்கள் வந்ததும் அவர்கள் விஷயத்தை சொல்ல மாணிக்கவாசகம் முகம் யோசனைக்கு சென்றது.

அதைக் கண்டுக்கொண்ட அகத்தியன் “என்னாச்சு மாணிக்கம்?? ஏன் ஒரு மாதிரி ஆகிட்ட, இந்த சம்மந்தம் வேணாம்ன்னு தோணுதா, வேணாம்ன்னா நாம ஜாதகம் எல்லாம் பார்க்க வேண்டாம்”

“இல்லைடா அப்படியில்லை ஒரு சின்ன யோசனை வேற ஒண்ணுமில்லை. முதல்ல ஜாதகம் பார்ப்போம் அப்புறம் முடிவு செய்வோம்” என்று அவர் தன் முடிவை தள்ளிப்போட மறுநாளே பெண்கள் ஜாதக பொருத்தம் பார்க்க சென்றிருக்க அதுவோ அம்சமாய் பொருந்தி வந்திருந்தது.

பவானி முன்பே தன் தங்கையிடம் சொல்லியிருந்தார். ஜாதகம் பார்க்கச் செல்லும் போது அவரையும் கூட்டிச்செல்ல சொல்லி. பார்த்தால் அங்கு அவர் மட்டுமல்லாது அபராஜிதனின் தந்தையும் கூட வந்திருந்தார்.

அவருக்குமே ஜாதகமும் பொருந்திப் போனதில் கூடுதல் சந்தோசமே. நாயகி தன் தமக்கையிடம் தனியே “என்னக்கா இப்படி பண்ணிட்டே, அவரையும் வரச்சொல்லி இருக்கே??”

“அது ஒண்ணுமில்லைடி, ஜாதகம் பொருந்தலைன்னா அவரே நேர்ல தெரிஞ்சுக்கட்டும்ன்னு தான் கூட்டிட்டு வந்தேன். தவிர பொருந்தினாலும் நாம பொய் சொன்னோம்ன்னு இருக்கக்கூடாதுல”

“என்னத்தை யோசிச்சியோ போ. பாரு இப்போ அவர் எங்க முகத்தையே பார்க்கறாரு, நாங்க ஓகே சொல்வோமான்னு. இன்னும் எங்க வீட்டில எதுவும் ஓகேன்னு சொல்லவே இல்லை”

“சரி விடு அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்று அவர் முடித்துவிட்டார்.

ஜாதகம் பொருந்திய விஷயம் வீட்டினருக்கு சொல்லப்பட்டது. மாணிக்கவாசகம் கோர்ட்டில் இருந்ததால் அவருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லியிருந்தனர்.

“ஏங்க அதான் ஜாதகம் பொருந்திடுச்சே நீங்க என்ன சொல்றீங்க??” என்றார் சாதனா தன் கணவரிடம்.

“மாணிக்கம் வரட்டும் அவன்கிட்ட பேசிட்டு என் முடிவை சொல்றேன்” என்று முடித்தார் அவர்.

மாலை மாணிக்கவாசகம் வர அவர் தனக்கு சம்மதம் என்றிருக்க அகத்தியனும் சம்மதம் சொல்லிவிட வீட்டில் இருந்த மற்ற மக்களுக்கு விஷயம் சொல்லப்பட்டது. அவர்கள் தங்கள் முடிவை சொல்ல மேலும் இரண்டு நாட்கள் எடுத்திருக்க மூன்றாம் நாள் அவர்களும் தங்கள் சம்மதத்தை தெரிவித்த பின்னே தான் விஷயம் இந்திரசேனாவின் காதுக்கே சென்றது.

வீட்டு ஆண் மக்கள் தங்கள் முடிவை சொல்ல எடுத்துக்கொண்ட அவகாசம் மாப்பிள்ளையைப் பற்றி அவர்கள் நேரில் சென்று கண்டு விசாரித்து என்று திருப்தியான பிறகு தங்கள் சம்மதம் தெரிவித்து இருந்தனர் வீட்டில்.

சாதனாவும் நாயகியும் தான் இந்திரசேனாவிடம் சொல்லும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். “இந்தும்மா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்று நாயகி மெதுவாய் இழுத்து சொல்ல “என்ன நாயகிம்மா பீடிகை ரொம்ப பலமா இருக்கு??”

“எதுவா இருந்தாலும் பட்டுன்னு உடைச்சு சொல்லுங்க” என்றாள் அவள்.

“உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கோம்”

“அவ்வளவு தானா” என்றாள் அவள்.

“என்னடி நீ எதுவும் எங்ககிட்ட சண்டைக்கு வருவியோன்னு பார்த்தா, நீ ஒண்ணுமே சொல்லலை”

“நான் எதுக்கு சண்டை போடணும்?? எப்படியும் எனக்கு கல்யாணம் பண்ணத்தானே போறீங்க. இந்த வீட்டில வைச்சுட்டே இருக்க ஐடியா எதுவும் இருக்கா என்ன??”

“கழுதை நாங்க எப்போடி அப்படிச் சொன்னோம்” என்றார் சாதனா.

“நான் ஒண்ணும் அப்படிச் சொல்லலை. சித்தி சொல்றதை பார்த்தா அப்படித்தான் தோணிச்சும்மா. எனக்கும் உங்க முகத்தை எல்லாம் பார்த்து ரொம்ப போரடிக்குது. சீக்கிரம் பேக் பண்ணி விடுங்க” என்றவளை அவளின் அன்னையர் முறைத்தனர்.

“எதுல தான் விளையாடுறதுன்னு இல்லையா”

“பின்னே நீங்க ரெண்டு பேரும் அப்படியே டென்ஷனா வந்து என்கிட்ட கேட்டா வேற எப்படி சொல்வாங்களாம்”

“இந்துமா அதெல்லாம் விடு உனக்கு சம்மதமா??”

“இப்போ தான் நீங்க பாயிண்ட்டுக்கே வந்திருக்கீங்க??”

“எப்போ பார்த்தாலும் உனக்கு பாயிண்டு தானாடி. அப்பப்போ நீ வக்கீல்ன்னு நிருப்பிக்கற??”

“இப்போ நான் சொல்றதா வேண்டாமா??”

“சரி சரி சொல்லு”

“மாப்பிள்ளை யாரு?? என்ன பண்றான்?? எந்த ஊரு??”

“மாப்பிள்ளைக்கு இந்த ஊரு தான்”

“முதல் விஷயம் ஓகே, நெக்ஸ்ட்”

“மாப்பிள்ளை நம்ம அகல்யாவோட அண்ணன் தான்” என்று சொல்லவும் அதுவரை வம்பளந்து கொண்டிருந்தவள் அப்படியே வாயடைத்து போனாள்.

“யார் கேட்டாங்க??”

“என்னம்மா கேட்கறே??”

“பொண்ணு கேட்டது அவங்களா??”

“ஆமா அவங்க தான் பவானி அக்கா மூலமா கேட்டாங்க??”

“நீங்கலாம் என்ன நினைக்கறீங்க??”

“எங்க எல்லாருக்கும் சம்மதம், நீ மட்டும் ஓகே சொல்லிட்டா அவங்ககிட்ட சொல்லிடலாம். ஜாதகம் எல்லாம் கூட பொருந்தியிருக்கு” என்றார் சாதனா. மகள் சம்மதம் என்று சொல்லிவிடுவாளா என்று அவளையே பார்த்தார்.

‘ஜாதகம் பார்த்தாங்களா, என்ன நடக்குது இந்த வீட்டில எனக்கு எதுவும் தெரியலை’ என்று எண்ணியவள் இன்னமும் யோசனையிலேயே இருக்க நாயகி அவளிடம் “என்னம்மா என்ன யோசனை?? உனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்ன்னா சொல்லு. வேற மாப்பிள்ளை பார்க்கலாம்” என்றார் அவர்.

“நாயகி நல்ல வரன் வருது, வேணாம்ன்னு வேற சொல்லச் சொல்றியா நீ. அவ சரி சொல்லுவா” என்று இந்திரசேனாவை பார்த்தார் அவர்.

“சாது கல்யாண விஷயத்துல எல்லாம் கட்டாயப்படுத்த கூடாது. அவங்கங்க விருப்பம் தான். நீ பேசாம இரு” என்றவரும் இந்திரசேனாவை தான் நோக்கினார்.

இருவரும் அவளையே பார்ப்பதை உணர்ந்தவள் “எனக்கு கொஞ்சம் டைம் வேணும். நான் சித்தாகிட்ட பேசிட்டு தான் என்னோட சம்மதம் சொல்வேன்” என்று முடித்தாள் அவள்.

‘அப்படியே அவங்கப்பா மாதிரி. சித்தப்பா சரின்னு சொன்னா தான் இவளும் சொல்லுவா. எப்படியோ சரின்னு சொல்லிட்டா நல்லாயிருக்கும்’ என்ற பிரார்த்தனை அவளின் அன்னையின் மனதில்.

அவர்கள் பேசி சென்ற பின்னே இவள் மாணிக்கவாசகத்தை தேடிச் சென்றாள். இவளின் வரவை எதிர்பார்த்தவர் போல அவர் வாயிலிலேயே வரவேற்றார்.

“வாடா பாப்பா”

“உங்ககிட்ட பேசணும்”

“தெரியும் நீ வருவேன்னு”

“உள்ளே போகலாம்”

“சரி வா” என்றவர் அறைக்குள் செல்ல பின்னே தொடர்ந்தாள் அவள். எதிரெதிரே இருந்த இருக்கையில் இருவரும் அமர “சித்தா எனக்கு மாப்பிள்ளை பார்த்த விஷயம்”

“தெரியும்”

“உங்களுக்கு சம்மதமா??” என்றாள் அவரை ஊடுரும் பார்வை பார்த்து.

“நான் என்ன சொல்லியிருப்பேன்னு நீ நினைக்கிறே??”

“அதை நீங்க உங்க வாயால சொல்லுங்க”

“எனக்கு சம்மதம் தான்”

“எல்லாம் தெரிஞ்சும் நீங்க அப்படி சொன்னீங்களா??”

“தெரிஞ்ச பிறகு தான் சொன்னேன். உன் விஷயத்துல நான் விளையாடுவேனா, நான் அபராஜிதன்கிட்ட பேசினேன். உன்னை அவர் விரும்பறதா சொன்னார். அதனால தான் வீட்டில சொல்லி பொண்ணு கேட்டிருக்கார்”

“நம்புற மாதிரி இல்லை சித்தா”

“பாப்பா எல்லாரையும் எல்லா நேரத்துலயும் தப்பாவே நினைக்கக்கூடாதுடா”

“இப்போ நான் என்ன செய்யணும் சித்தா”

“முடிவு உன்னோடது பாப்பா, நாங்க யாரும் உன்னை கட்டாயப்படுத்த மாட்டோம்”

“நீங்க சொல்லுங்க நான் சரி சொல்றேன். எனக்கு அவர் செட்டாவார்ன்னு உங்களுக்கு தோணுதா”

“நான் ஏற்கனவே என் முடிவை சொல்லிட்டேனேடா”

“அது மத்தவங்ககிட்ட சொன்னது. இப்போ நான் கேட்கறேன், எனக்காக ஒரு முறை யோசிச்சு நீங்க சொல்லுங்க. நீங்க சொல்ற எந்த மாப்பிள்ளையும் நான் கட்டிப்பேன்” என்று சொல்லி அவர் தலையில் பெரும் பாரத்தை ஏற்றிவைத்து சென்றுவிட்டாள் அவள்.

இப்போது மாணிக்கவாசகம் தான் தவித்து போனார். அவருக்கு நிஜமாகவே அபராஜிதனை பிடித்திருந்தது. அவன் இந்திரசேனாவை விரும்பிகிறேன் என்று சொன்னதை அவர் நம்பவில்லை.

காதலித்து மணந்தவர் ஆயிற்றே, அவருக்கு தெரியாதா என்ன. ஆனால் அனைத்தும் மீறி அவன் அவரை ஏதோவொரு விதத்தில் கவர்ந்துவிட்டான் என்பது மட்டும் உண்மை.

அகல்யாவின் திருமணத்தில் அவர் நேரிலேயே அவனைப் பார்த்தாரே. பொறுப்பாய் இருக்கும் ஆண்மகன்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அபராஜிதன் அதில் ஒருவன் என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

அவனை வேண்டாம் என்று சொல்ல அவருக்கு நியாயமாய் ஒரு காரணம் கூட இருக்கவில்லை. ஆனால் மகளுக்காய் யோசிக்கும் போது அவரால் எந்தவொரு முடிவும் எடுக்க முடியவில்லை.

யோசனையோடே அந்த ஹோட்டலில் அமர்ந்திருந்தவர் அவர் எதிர்பார்த்த ஆளுக்காய் காத்திருந்தார். அவர் எதிர்பார்த்த ஆளும் வந்துவிட எழுந்து நின்று வரவேற்றார்.

“அங்கிள் நீங்க வந்து ரொம்ப நேரமாச்சா. சாரி நான் லேட் பண்ணிட்டனா” என்று அபராஜிதன் கேட்டதிலேயே அவருக்கு புரிந்து போனது அவன் எண்ணம்.

“நான் தான் சீக்கிரம் வந்திட்டேன், நீங்க சரியான நேரத்துக்கு தான் வந்திருக்கீங்க, உட்காருங்க” என்றார்.

“சொல்லுங்க அங்கிள்” என்று ஆரம்பிக்கவும் ஆள் வர ஆளுக்கொரு ஜூசை சொல்லி அமர்ந்திருந்தனர்.

“உங்களை நான் எதுக்கு வரச்சொன்னேன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை”

‘சொன்னாத்தானே தெரியும்’ என்று மனதிற்குள் அவருக்கு கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டான்.

“நிஜமாவே நீங்க எங்க பாப்பாவை விரும்பறீங்களா??”

‘என்னது பாப்பாவா, பீப்பா மாதிரி இருக்கா அவ பாப்பாவா’ என்று அவன் எண்ணம் செல்ல எதிரில் இருந்தவர் இவன் முகத்தை பார்ப்பதை உணர்ந்தவன் அவருக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைக்கு ஆளானான்.

“அதுல என்ன சந்தேகம் அங்கிள் உங்களுக்கு??”

“சந்தேகமில்லை, உங்களுக்கே தெரியும் எங்க பாப்பாவை நீங்க நேர்ல மீட் பண்ணும் போது நடந்த விஷயமெல்லாம். அதுக்காக”

“அதுக்காகவெல்லாம் யாராச்சும் பழிவாங்குவாங்களா அங்கிள்” என்று நிறுத்தி நிதானமாய் கேட்டவனின் கண்களையே உற்று நோக்கினார் அவர்.

அவன் கண்கள் பொய் பேசவில்லை என்று உணர்ந்தார். இருந்தாலும் அவருக்கு முழுத்தெளிவு வரவில்லை இன்னமும்.

“காதல்ன்னு எல்லாம் சொல்லி ரொம்ப  மிகைப்படுத்த விரும்பலை அங்கிள். அவங்களை நேர்ல பார்த்தப்போ நடந்ததெல்லாம் கசப்பான விஷயங்கள் தான். ஆனா அது தான் அவங்களை எனக்கு பிடிக்க வைச்சுது.அதைத்தான் நான் விருப்பம்ன்னு சொன்னேன்”

“அவங்க எல்லா சமயமும் ரொம்பவே சரியா பேசறாங்க. இப்படியொரு பொண்ணு நம்ம வாழ்க்கையில நம்ம கூட வரணும்ன்னு தோணிச்சு. உங்களுக்கு தெரியுமா இல்லையான்னு தெரியலை, இருந்தாலும் சொல்றேன்”

“எனக்கு ஏற்கனவே எங்க மாமா பொண்ணை பேசி தான் வைச்சிருந்தாங்க. அவளுக்கு நான் ரோபோ மாதிரி இருக்கேன்னு சொல்லி பிடிக்கலை. என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைன்னு சொல்லிட்டா”

“அப்போ அப்பா பீல் பண்ணி பேசிட்டு இருந்தார். உனக்கு எதாச்சும் ஒரு பொண்ணு மேல அபிப்பிராயம் இருந்தா சொல்லுன்னு அவர் சொன்னப்போ எனக்கு உங்க பொண்ணு தான் மைன்ட்ல வந்தாங்க”

“அந்த நிமிசத்துல இருந்து அவங்களைப்பத்தி மட்டுமே தான் யோசிச்சுட்டு இருக்கேன்” என்றான் அவன் அவரின் முகம் பார்த்து.

மாணிக்கவாசகம் இப்போதும் அவன் கண்களைத் தான் பார்த்தான். அவர்கள் கண்கள் இப்போது பொய்யுரைக்கவில்லை அவன் தப்பானவன் என்று.

அவனிடம் பேசி அவர் சற்று தெளிந்திருத்த போதும் இந்திரசேனாவினிடத்தில் அவர் எதுவுமே சொல்லவில்லை.

ஒரு வாரத்திற்கும் மேல் ஓடியிருந்தது. “ஏன்டி உனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்ல வேண்டியது தானே. மாப்பிள்ளை வீட்டுக்கு ஒரு பதிலும் சொல்லாம இருந்தா நல்லாவா இருக்கும். உன்னை மீறியா உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடுவோம்” என்று சாதனா அங்கலாய்த்தார் மகளிடம்.

“எதுக்கும்மா புலம்புறே?? ஒரே நாள்ல முடிவு சொல்லிட முடியுமா. காலம் முழுக்க வாழ வேண்டிய வாழ்க்கை ஒரு நொடியில பதில் தெரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சா நான் என்னம்மா பண்ண முடியும்” என்று அவருக்கு பதில் கொடுத்துவிட்டு சென்றாள்.

மறுநாள் மாணிக்கவாசகம் சேம்பரில் இருக்க நேரே அவர் முன் சென்று நின்றாள் அவள்.

Advertisement