Advertisement

1

ஆத்திசூடி – ஆறுவது சினம்

பொருள் – கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

அழகான காலைப்பொழுது அந்த நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இருந்தது. ஆட்கள் வருவதும் போவதுமாக சுற்றிலும் இருந்தனர்.

காக்கி உடை அணிந்த காவலர்கள், கருப்பு கோட்டு அணிந்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பொதுமக்கள் என்று அனைவருமே கலந்திருந்தனர்.

முதல் மாடியில் இருந்த அந்த நீதிமன்ற வளாகத்திற்குள் மற்றவர்களுடன் நாமும் நுழைவோம். அது ஒரு சிவில் கேஸ் சில வருடங்களாக நடந்துக் கொண்டிருக்கும் அந்த வழக்கிற்கு இன்னமும் தீர்ப்பு வந்தபாடில்லை.

அன்று எப்படியாவது அந்த வழக்கை முடித்துவிட அதன் வழக்கறிஞர் தீவிரமாய் வாதிட்டுக் கொண்டிருந்தார். அவர் வாதத்தை இடையூறு செய்யும் விதமாய் “எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம், அதை பார்த்த தமன்னா மயங்கி விழுந்துரும்” என்று அந்த அரங்கத்தை ஒரு நொடியில் அதிர வைத்த பெருமை நம் நாயகி இந்திரசேனாவையே சேரும்.

“இந்திரா உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன், கோர்ட்க்குள்ள போனை ஆப் பண்ணி வைக்கணும்ன்னு” என்று முறைத்திருந்தார் அவளின் சீனியர்.

அனைவரின் பார்வையும் அவளை குற்றம் சாட்ட நீதிபதியை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்து மன்னிப்பை வேண்டியவள் “சாரி சார்” என்றாள் தன் சீனியரிடம். “ஆப் பண்ணி வை முதல்ல” என்று அவர் சொல்லவும் தன் அலைபேசியை அணைத்து தன் கருப்பு கோட்டின் பாக்கெட்டில் போட்டாள்.

“பண்ணிட்டேன் சார்”

“நல்லது கேசை கவனி” என்றுவிட்டு அவர் அங்கு நடப்பதை கவனிக்க ஆரம்பித்தார். அவர்கள் வாதிடப்போகும் வழக்கு அடுத்ததாக வரப்போவதால் அங்கு தான் அமர்ந்திருந்தார்கள் அவர்கள். சிறிது நேரம் கடந்திருந்தது.

“ஹாவ்” என்று இந்திரசேனா கொட்டாவி விட அருகிருந்தவர் அவளைப் பார்த்து முறைத்தார். அதையெல்லாம் கண்டுக்கொல்லாதவலாக அவள் வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

சற்று நேரத்தில் அவள் தூங்கி அவர் மீதே விழ “இந்திர” என்று அடிக்குரலில் அவர் குரல் கொடுக்க திடுக்கிட்டு விழித்தவள் அவரைப் பார்த்து அசடு வழிந்தாள்.

“என்ன பண்ணிட்டு இருக்கே நீ?? ஆர்கியூவ்மெண்ட்ஸ் போயிட்டு இருக்கு. நீ தூங்கிட்டு இருக்க. இதெல்லாம் பார்த்து நோட்ஸ் எடுத்துக்கோ” என்றார் அவர்.

“சார் போங்க சார் நீங்க வேற நான் காலேஜ் முதல் வருஷம் சேர்ந்தப்போ ஆரம்பிச்ச கேசு. நான் லா முடிச்சு உங்ககிட்ட ஜூனியரா சேர்ந்தே வருஷம் ஒண்ணு ஓடிப்போச்சு. இன்னும் கேசு போயிட்டு இருக்கு. இதெல்லாம் பார்த்தா எனக்கு தூக்கம் தான் சார் வருது. சட்டுப்புட்டுன்னு கேசை முடிக்கிறதை விட்டு” என்று அவள் மீண்டும் கொட்டாவி விட நன்றாகவே முறைத்தார் அவர்.

“சாரி சார்”

“உன் மேல நான் ரொம்ப நம்பிக்கை வைச்சிருக்கேன் இந்திர. நல்லா படிச்சு முதல் வகுப்பில பாஸ் பண்ண பொண்ணாச்சே, புத்திசாலியா இருப்பேன்னு நினைச்சுட்டு இருக்கேன். என் நம்பிக்கையை கெடுத்திடாதே”

“அப்படியெல்லாம் செய்ய மாட்டேன் சார்” என்றாள்

“சரி கேசை கவனி”

“ஹ்ம்ம்” என்றவள் ஒரு நோட்டையும் பேனாவையும் கையில் எடுத்துக்கொண்டு குனிந்து எழுதிக் கொண்டிருந்தாள்.

‘பரவாயில்லை நம்ம சொன்னதை கேட்டு நோட்ஸ் எல்லாம் எடுக்க ஆரம்பிச்சுட்டா, நல்ல பொண்ணு தான் ஆனா கொஞ்சம் குறும்பு’ என்று எண்ணிக்கொண்டு அவளின் சீனியார் மாணிக்கவாசகம் அங்கு நடக்கும் வாத பிரதிவாதங்களை கவனிக்க ஆரம்பித்தார்.

மத்திய நேரமாகிப் போனதால் நீதிபதி அங்கு நடக்கும் விவாதத்திற்கு இடைவேளை விட்டுச்செளால் ஒவ்வொருவராய் கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.

“இந்திர நீ எடுத்த நோட்ஸ் எல்லாம் எடுத்திட்டு என்னோட சேம்பர்க்கு வந்திடு” என்றவாறே எழுந்த மாணிக்கவாசகத்திற்கு அவள் பதில் கொடுக்காது குனிந்துக் கொண்டிருக்க “இன்னும் என்னம்மா நோட்ஸ் எடுத்திட்டு இருக்க, கிளம்பும்மா போதும்” என்றார் அவர்.

அப்போதும் அவள் எழாது போக “இந்திரா” என்று அவர் தனனியும் மறந்து சத்தமாய் அழைத்திட “சார்” என்றவாறே உறக்கத்தில் இருந்து எழுந்தவளை என்ன செய்ய என்று பார்த்திருந்தார் அவர்.

 

“என்ன பண்ணிட்டு இருக்கே நீ??” என்று அடிக்குரலில் கத்தினார்.

“சார் தூக்கம் வந்திடுச்சு சார். நைட் சரியா தூங்கலை”

“இதென்ன உங்க வீடா தூங்குறதுக்கு. தொழில் நடக்கற இடம் இங்க வந்து தூங்கறே, நம்ம வேலைங்கறது நமக்கு சரஸ்வதி தேவியும் லட்சுமி தேவியும் வாசம் செய்யற இடம். இங்க வந்து தூங்கறே”

“தப்பு தான் சார், இனிமே இப்படி நடக்காது” என்பதை சத்தமாய் சொன்னவள் “ஒரு வேளை லட்சுமி தேவி வரும் போது கூட அவங்க அக்காவையும் கூட்டிட்டு வந்திருப்பாங்களோ” என்று அவள் தனக்குள் மெல்ல முணுமுணுத்தாள். 

அவள் மெல்லமாகவே முணுமுணுத்த போதும் அவள் வாயசைப்பை கண்டுவிட்டவர் ‘ரொம்ப கஷ்டம்’ என்ற பார்வை பார்த்து நகர்ந்துவிட்டார்.

அவரின் பார்வையை அவள் இனம் கண்டுவிட ‘இதெல்லாம் எனக்கு தூசு’ என்று அதை தட்டிவிட்டுக் கொண்டு அவள் நகர அவரின் மற்றொரு ஜூனியரான கேசவன் எங்கிருந்தோ ஓடிவந்தான். 

“இங்க என்ன பண்ணிட்டு இருக்கே. சீனியர் கோபமா போறாரு, வழக்கம் போல ஏதாச்சும் அவரை டென்ஷன் பண்ணியா என்ன”

“ஆமா உன் சீனியரை நாங்க டென்ஷன் பண்றோம். தூங்கிவிட்டானாம், அது ஒரு குத்தம் என்று என்னை முறைத்து செல்கிறார்”

“ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் தான். நம்ம சீனியர் எல்லார் கண்ணுலயும் விரலைவிட்டு ஆட்டுவாரு. அவரு கண்ணுலயே நீ விரலைவிட்டு ஆட்டுற. எனக்கு ஒருத்தரை நினைச்சு ரொம்பவே கஷ்டமா இருக்கு” என்றான் அவளிடம்.

“யாரைடா சொல்றே??”

“உன்னை கட்டிக்க போறவன் தான்… பாவம் அவனை நீ என்ன பாடு படுத்தப் போறியோ”

“பார்த்துக்கலாம் விடுடா கே7”

“ஏய் என்னை அப்படி கூப்பிடாதேன்னு சொன்னா கேட்க மாட்டியா??”

“உன் பேரு அதானேடா”

“உன்னைவிட நான் பெரியவன் தெரியுமா உனக்கு ஒரு வருஷம் முன்னாடியில இருந்தே நான் சார்கிட்ட ஜூனியரா இருக்கேன். பெரியவன்னு மரியாதையா பேச மாட்டேங்கறே”

“டேய் கே7”

“உன்கிட்ட பேசினேன் பாரு என்னை” என்றவன் தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தான்.

“என்னங்கடா நீங்க நான் பேசவே ஆரம்பிக்கலை அதுக்குள்ள எல்லாம் இடத்தை காலி பண்றீங்க. ச்சே அப்புறம் நீங்கலாம் எப்படிடா என் ஆர்கியூமென்ட் எல்லாம் கேப்பீங்க”

“ஆண்டவா நான் வாதாடினா அதை கேட்க இந்த கோர்ட்க்குள்ள நாலு பேராச்சும் இருக்க மாதிரி பார்த்துக்கோப்பா” என்று அவள் வாய்விட்டு சொல்ல “நாலு பேரா, ஜட்ஜ் கூட இருக்க மாட்டாரு” என்றான் கேசவன் இவள் தனியே பேசுவதை கேட்டுவிட்டு.

“டேய் கே7 நீ இன்னும் இங்க தான் இருக்கியா??” என்றவள் அவன் பின்னாடியே ஓட அவன் இவளிடமிருந்து தப்பித்து சேம்பருக்குள் சென்று சரணடைந்தான்.

ஓடிவந்தவள் உள்ளே வேகமாய் நுழைய மாணிக்கவாசகத்தை இடித்துவிட அவர் மீண்டுமாய் அவளை முறைத்திருந்தார்.

“இந்திரா” என்றார் அழுத்தமான குரலில்.

“சார்”

“என்ன சொல்லப் போறே சாரி சார் இனிமே பண்ண மாட்டேன் சார் அதானே”

“இல்லை சார் நான் ஓடிவர்றதை பார்த்து நீங்க கொஞ்சம் நகர்ந்திருக்கலாம்லன்னு” என்றவள் அவரின் முறைப்பில் தன் சுட்டித்தனத்தை மூட்டைக்கட்டிவிட்டு அட்டென்ஷன் மூடுக்கு வந்தாள்.

அவர் அதையெல்லாம் கவனிக்காதவராய் “கெட் அவுட்” என்று அவர் கத்தவும் “சாரி சார், இனிமே” என்றவள் தொடரும் முன்னே “அவுட்” என்று சொல்ல முகத்தை தொங்கப் போட்டவாறே வெளியேறினாள் அவள்.

அவள் அப்புறம் செல்லவும் “சார் சார் அவளை ஏன் சார் வெளிய போக சொன்னீங்க. இன்னைக்கு கேஸ்க்கு நோட்ஸ் எல்லாம் அவ தான் சார் எடுத்து வைச்சிருக்கா” என்றான் கேசவன்.

“இவளோட எனக்கு தலைவலி, இடத்தை கொடுத்தா மடத்தை பிடிப்பா” என்று வாய்விட்டு சொன்னவர் கேசவனை பார்த்தார். 

அவரின் பார்வை புரிந்தவனாய் “நான் போய் கூட்டிட்டு வந்திடறேன் சார்” என்று வெளியே ஓடினான் அவன். 

மெல்ல புன்னகைத்துக் கொண்டவர் ‘ஒண்ணு இப்படி இன்னொன்னு அப்படி’ என்று எண்ணிக்கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தார் கையில் ஒரு வழக்கின் குறிப்புகளை மேற்பார்வை பார்த்தவாறே.

“இந்து” என்ற குரலில் இந்திரசேனா திரும்பி முறைத்தாள் அவனை.

“என்ன முறைக்கிறே??”

“என் பேரை சுருக்கி கூப்பிட்டா எனக்கு பிடிக்காதுன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்”

“எனக்கு சொன்னியே அதை உனக்கே நீ சொல்லிக்கிட்டியா??”

“எனக்கு ஏன் சொல்லணும்??”

“நீ மட்டும் என் பேரை சுருக்குறே”

“கே7 உன் பேரை நான் முழுசா தானேடா கூப்பிட்டேன். வேணாம்ன்னா சொல்லு இனிமே கே அப்படின்னு வேணா கூப்பிடுறேன்”

“அம்மாடி நீ எப்படி வேணா என் பேரை கூப்பிட்டுக்கோ கே மட்டும் வேணாம். அப்புறம் எல்லாவனும் என்னை ஒரு மாதிரியா பாப்பானுவ”

“அந்த பயம் இருக்கட்டும். ஆனா கேன்னு கூப்பிட்டா ஒரு மாதிரி பார்க்க என்ன இருக்கு. எல்லாரும் மனுஷங்க தானே”

“தாயே என்னை மன்னிச்சிரு நான் எதுவும் சொல்லலை. தயவு செஞ்சு நீ மேகலா கேஸ்க்கு எடுத்த நோட்ஸ் எல்லாம் கொடும்மா. அடுத்த ஹியரிங் நம்மோடது தான்”

“ஓ!! அதுக்கு தான் நீ என் பின்னாடியே வந்தியா. நான் கூட என் மேல இருக்கற அக்கறைன்னு நினைச்சேன்”

“அக்கறையும் இல்லை சக்கரையும் இல்லை அதை கொடும்மா முதல்ல” என்று கையை நீட்டினான்.

“நான் தான் வந்து கொடுப்பேன்” என்றவள் மீண்டும் சேம்பருக்குள் நுழைய தலைவலி ஆரம்பித்தது மாணிக்கவாசகத்திற்கு.

“சார்” என்றவள் அவள் தயார் செய்திருந்த குறிப்பை எடுத்து அவரிடம் நீட்ட அதை வாங்கி படிக்க ஆரம்பித்தவர் முகம் மலர ஆரம்பித்தது.

என்ன தான் விளையாட்டு பிள்ளையாய் சுட்டித்தனம் செய்தாலும், சோம்பேறித்தனமாய் இருந்தாலும் அவள் வேலையில் எப்போதும் குறையிருந்ததில்லை. 

மிகத்தெளிவான குறிப்புகள் நிச்சயம் அவர்களுக்கு சாதகமானதாகவே வழக்கு முடியும் அப்படியான குறிப்புகளும் மேற்கோள்களும் எடுத்து வைத்திருந்தாள்.

மாணிக்கவாசகத்தின் முகத்தை பார்த்த கேசவன் ‘கவுத்திட்டா சாரை கவுத்திட்டா, நான் மாங்கு மாங்குன்னு வேலை செய்யறேன். இவ எல்லா கலாட்டாவும் பண்ணிட்டு லாஸ்ட்டா நல்லா வேலையும் பார்த்து அவரை கவுத்திடுறா’ என்று எண்ணி பொருமினான்.

அவன் பொருமினாலும் அவனுக்கு இந்திரசேனாவை மிகப்பிடிக்கும். தன் உடன்பிறந்த தங்கையை போன்று தான் அவளை நினைத்திருக்கிறான்.

—————

குரோம்பேட்டையை தாண்டிய நெமிலிசேரி என்னும் பகுதி அது. அந்த வீதியின் கடைசியில் தனியே அமைந்திருக்கும் அழகிய பெரிய வீடு அது.

இரண்டு அடுக்குகள் கொண்ட அவ்வீட்டின் தரைத்தளத்தில் தான் கரிகாலனின் வீடு. முதல் மாடியை இரண்டு பகுதிகளாக பிரித்து அதை வாடகைக்கு விட்டிருக்கின்றனர்.

கரிகாலன் ஆரம்பக்காலத்தில் பள்ளி வாத்தியாராக இருந்தார். அரசுப்பள்ளியில் வேலைக்கு முயன்றவர் அது அவரின் கனவாகவே போயிருக்க அவர் கனவை ஊக்கும் வகையில் மனைவி கொடுத்த அறிவுரையின் படி சிறிய அளவில் ஐந்து வகுப்பு வரை பிள்ளைகள் பயில அவர் ஆரம்பித்த பள்ளி தான் பின்னாளில் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி என்றாகி இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கும் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக இருக்கிறது.

காலையில் சஷ்டி கவசம் ஓடிக்கொண்டிருக்க பூஜை முடித்து கடவுளை தொழுது கிளம்பியிருந்தார் கரிகாலன். வெளியில் அவர் வரவும் அவ்வீட்டின் ஒரே ஆண் வாரிசான அபி என்ற அபராஜிதன் வந்து நின்றான்.

“அபி இன்னைக்கு நீ பொறுப்பேத்துக்கற நாள், சாமி கும்பிட்டு அம்மாகிட்டயும் ஆசி வாங்கிட்டு சீக்கிரம் வந்திடு, நான் முன்னாடி கிளம்பறேன்” என்றார் அபராஜிதனின் தந்தை கரிகாலன்.

“ஞாப்கமிருக்குப்பா கொஞ்சம் வெயிட் பண்ணுங்கப்பா நானும் உங்க கூடவே வந்திடறேன்”

“நோ அபி எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் ஒண்ணு இருக்கு. அதை முடிச்சுட்டு நான் நேரா அங்க வந்திடுவேன், நீயும் அங்க வந்திடு நான் கிளம்பறேன்”

“ஓகேப்பா” என்ற அபராஜிதனின் வயது இருப்பத்தியெட்டு. உடன்பிரந்தஹ்டு ஒரு தமக்கையும் தங்கையும். தமக்கை உமையாள் திருமணமாகி சிவகாசியில் வசிக்கிறாள். தங்கை அகல்யாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அவனின் அன்னை அவன் தங்கை பிறந்த சில நாட்களிலேயே உடல் நலம் குன்றி இறந்துவிட்டிருந்தார்.

அகல்யாவின் திருமணம் முடிந்ததும் அபராஜிதனுக்கும் முடித்துவிட கரிகாலன் எண்ணம் கொண்டிருக்கிறார். அவனுக்காய் புதிதாய் சென்று பெண் தேடத் தேவையில்லையே. அவரின் தங்கை மகள் விண்ணரசி தயாராய் இருக்கிறாள்.

அபராஜிதன் எதையும் இப்படித்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அதன் வழி மட்டுமே சிந்திக்கவும் செயல்படவும் கூடியவன், அவனுக்கு சோம்பேறித்தனம் என்பது அறவே பிடிக்காது. அவன் தந்தையை கொண்டே அவன் பிறந்திருந்தான்.

கரிகாலன் கூட சமயத்தில் விட்டுக்கொடுத்து நடந்துக் கொள்வார், சூழ்நிலையை பொறுத்து. அந்த விஷயத்தில் அவன் அவருக்கு நேரெதிர், எதற்காகவும் யாருக்காவும் விட்டுக்கொடுக்காதவன், விட்டுக்கொடுக்கவும் விரும்பாதவன் அவன்.

நேரம் எட்டை தாண்டவும் சரியாய் வீட்டிலிருந்து கிளம்பியிருந்தான். ஒன்பது மணிக்கு அவன் பொறுப்பேற்க வேண்டும், அடுத்த அரைமணியில் அங்கிருந்தான்.

ஒன்பது மணி அடிக்க இரண்டு நிமிடங்கள் இருந்தது. இன்னமும் அவன் தந்தை கரிகாலன் வந்திருக்கவில்லை. அபராஜிதனின் முகம் மெல்ல மாற ஆரம்பித்திருக்க சரியாய் உள்ளே நுழைந்தார் அவர்.

“ஹாய் ஆல் சாரி பார் தி டிலே, ப்ளீஸ் சிட் டவுன் ஜென்டில்மேன்ஸ், ப்ளீஸ் மேடம்” என்று அனைவரையும் பார்த்து சொன்னவர் தன் மகனை பார்த்தார். அவன் முகம் கோபத்தில் இருப்பது புரிந்தது, இருந்தாலும் அதை கண்டுக்கொள்ளாதவராய் தான் வந்த வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

“உங்க எல்லாருக்கும் தெரியும் நினைக்கிறேன், பிரின்சிபால் உங்ககிட்ட சொல்லியிருப்பார். அபராஜிதன் இன்னையில இருந்து இந்த ஸ்கூளோட பொறுப்பை ஏத்துக்க போறான். இனிமே நம்மோட கரெஸ்பான்டன்ட் நம்மோட சிஇஓ ரெண்டுமே அவர் தான்” என்று அனைவருக்கும் தன் மகனி அறிமுகம் செய்தும் அவன் பொறுப்பு குறித்தும் தெரிவித்தார்.

“சார் அப்போ நீங்க??”

“நானும் இருப்பேன் என் மகனுக்கு துணையா தவிர நான் சிவகாசிக்கு போறேன். அங்க இருக்க நம்மோட ஸ்கூல் பொறுப்பை நான் எடுத்துக்க இருக்கேன். என் பெரிய பொண்ணு கூடவும் இருக்க பிரியப்படறேன். எனக்கு எப்படி எல்லாரும் ஒத்தழைப்பு கொடுத்தீங்களோ அதே ஒத்துழைப்பை அபிக்கும் நீங்க கொடுக்கணும்” என்றவர் “அபி யூ கேரி ஆன் அதுக்கு முன்ன இதுல சைன் பண்ணிடு…” என்று அவர் ஒரு கோப்பை மகன் முன் நீட்டினார்.

அபராஜிதன் கடுங்கோபத்தில் இருந்தான் ‘அதென்ன அவங்க ஒத்துழைப்பு கொடுக்கறது. நம்மகிட்ட அவங்க வேலை செய்யறாங்க, செய்ன்னா அவங்க செய்யணும். நாம் அதிகாரம் தான் செய்யணும்,பணிஞ்சி போகக்கூடாது. இந்தப்பாக்கு இதெல்லாம் எப்போ தான் தெரியுமோ’ என்று எண்ணியவன் தன் எண்ணத்தை முகத்தில் துளியும் காட்டாது அவர் நீட்டிய கோப்பில் கையெழுத்திட்டான்.

அவன் பொறுப்பேற்ற ஒரே வாரத்தில் அப்பள்ளிக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்று வந்தது. அதை பிரித்து பார்த்தவன் கோபத்தில் அதை தூக்கி விசிறியடித்தான்.

Advertisement