Advertisement

அரிவை விளங்க அறிவை விலக்கு . – 07
பத்து நாட்களுக்கு பிறகு:
த்ரிவிக்ரமனின் ஃபிளாட் மிக அமைதியாக இருந்தது ; அங்கு வசிப்பதோ இரண்டே பேர் ; அவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதே இல்லை என்னும் பொழுது சப்தங்கள் எங்கே வரும்? மூன்று படுக்கையறை கொண்ட அந்த வீட்டில், இவர்கள் இருவருக்குமான அறையை நங்கை, த்ரிவிக் இருவரும் புறக்கணித்து, மீதமிருந்த அறைகளில் ஆளுக்கொரு அறையாக எடுத்துக்கொண்டு தஞ்சம் அடைந்திருந்தனர்.
சமையலறையில் இருவரும் தனித்தனியாக சமைத்துக் கொண்டனர். த்ரிவிக், அலுவலகம் செல்லும் வரை நங்கை எழுவதே இல்லை. விழித்திருந்தாலும் வெளியே வருவதில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கிட்டத்தட்ட மூன்று நான்கு நாட்களுக்கு மேல் ஆனது. பேச்சு ? மூச்.. ..இனி எங்கே பேசுவது? அந்த ஒரு நாளில்.. ஒரு மணி நேர பேச்சுவார்த்தையில் அனைத்திற்கும் சேர்த்து முற்றுப்புள்ளி வைத்திருந்தனர் தம்பதிகள் இருவரும்.
திரிவிக்ரமன் தனது திருமணத்திற்கு முன்பான பழைய வாழ்க்கைக்கு திரும்பி இருந்தான். காலை ஜாகிங். வந்ததும் பத்து பதினைந்து ஊறவைத்த பாதாம், ஒரு கப் முளைவிட்ட பயிறு, பிரெட் என அவன் காலை உணவினை முடித்து தயாராகி வெளியே சென்றால், பின் வீடு திரும்புதல் என்பது இரவு எட்டு மணிக்குத்தான். இந்த பத்து நாட்களில் நான்கு நாட்கள் வெளியூருக்கு சென்று வந்தான். வெளியே காண்பதற்கு அமைதியாக இருந்தாலும், த்ரிவிக்-கின் உள்ளம் உலைக்களமாய் கொதித்தது. காரணம் அவள் பேசிய பேச்சுக்கள் அப்படி, பேச்சு மட்டுமா?…. அதை நினைக்க நினைக்க த்ரிவிக்ரமனின் முகம் ரத்த நிறம் கொண்டது ..
அப்படி என்னதான் நடந்தது?
அன்று:
த்ரிவிக் திட்டமிட்டபடியே அலுவலக பணியாளர்கள் அனைவரையும்  இந்தியா கேட் கூட்டி சென்று,  பிரபல ஹோட்டலில் பார்ட்டி கொடுத்துப் பின்னரே  அவரவர் வீட்டிற்கு வழியனுப்பி வைத்தான். ஷில்பா வேண்டாமென்றால் த்ரிவிக் விடுவானா என்ன?, அனைத்தும் முடிந்து அமைதியாய் வீடு வந்து சேர்ந்தான்.ஆம்.. அமைதிதான் … புயலை உள்ளடக்கிய அமைதி.
நங்கையும் ஒரு பூகம்பத்திற்கு தயாராகவே இருந்தாள். கண்டிப்பாய் போன் வாட்ஸப் பதிவினை ஏன் பார்க்கவில்லை என்று சப்தம் போட போகிறான், குடியிருப்பில் உள்ள ஒருவரின் உடல்நலக்குறைவே காரணம், என்பதை விளக்கினால் கேட்டுக்கொள்வான். இல்லையேல் நான்கு திட்டு திட்டினாலும் , அமைதியாய் இருந்துவிட்டு,  பின்..  விளங்கங்கள் தர வேண்டியதுதான் என்று நல்ல விதமாகத்தான் எண்ணினாள்.
வீடு வந்த  திரிவிக்கிரமன் காலில் இருந்த ஷூவை கழட்டி அதனுடைய அலமாரியில் எடுத்து வைத்தான். அவன் குடிக்க தண்ணீர் கொடுத்தவள், அமைதியாய் நின்றாள். நீர் அருந்தியவன், கிளாஸை டேபிளில் வைத்து…. கையை கட்டிக்கொண்டு, குற்றம் சாடும் தோரணையில் நின்று, நிதானமாய் கேள்வி கேட்டான். “ஏன் போன் பண்ணல?”,
கேள்வியை உள்வாங்கியவள், புரியாமல் பார்த்தாள்.”என்.. எதுக்.. நான் ஏன் பண்ணனும்?”, குழப்பத்துடன் பதில் கேள்வி கேட்டாள்.
“யாரைக் கேட்டு குழந்தைகளை பார்த்துக்கறேன் -ன்னு ஒத்துக்கிட்ட?”, குரல் மெல்ல அவனையறியாமலே உயர்ந்தது.
” ஓ!  அதுவா, நாம பார்க்-ல பாத்தோமே அந்த பாப்பாதான், அவங்கம்மா வந்து பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு உடம்பு சரியில்ல, அந்த வீட்டுல வேற ஒரு குழந்தை இருந்ததா, ஹாஸ்பிடல் போறோம்,  குட்டிப்பசங்க ரெண்டு பேரையும் பாத்துக்க முடியுமா-ன்னு கேட்டாங்க. நானும் சரின்னு சொன்னேன்”, சற்றே படபடப்பு குறைந்தவளாய் பதில் கூறினாள்.  ஸ்ஸ்… இவ்வளவுதானா? இதற்குத்தான் த்ரிவிக்-கிற்கு கோபமா? இலகுவாய் சமாளித்து விடலாம் என்று ஆசுவாசமானாள்.
“அவங்க நம்பிக்கையான ஆளுங்கன்னு உனக்கு எப்படி தெரியும்?”, அவளின் அமைதியை கண்டு இன்னமும் கோபமானவன்..பற்களை கடித்தபடி , வார்த்தையை மென்று துப்பினான்.
“ஒருத்தங்களை பாத்தா நம்பலாமா கூடாதான்னு கூட தெரியாதா என்ன? “, அசிரத்தையாய் பதிலுரைத்து.., கிச்சனுக்குள் நடந்தாள். தொடர்ந்து .. “என்னைக் கேக்கறீங்க? நீங்க, இந்தமாதிரி நாங்கெல்லாம் வர்றோம்-ன்னு ஒரு போன் பண்ணமாட்டீங்களா?, எல்லாத்துக்கும் மெசேஜ் தானா?, கெஸ்ட் வரும்போது பேக்கு மாதிரி நின்னேன்.  மானமே போச்சு. ச்சே..”, சாப்பாடு மேஜையின் மேல் இருந்த மாதுளையின் முத்துக்களை பிரிக்கவென கத்தி கொண்டு பழத்தை கீறி பிளக்க ஆரம்பித்தாள்.
அதுவரை பொறுமையை  இழுத்துப் பிடித்திருந்தவன்..  உச்சபட்ச கோபத்தில்,நங்கையின் பின்னோடே வந்து, அவள் தோளைப் பிடித்து விருட்டென திரும்பியவன், “யேய் .. நிறுத்து . கேள்வி கேட்கணும்ங்கிறதுக்காக என்கிட்டே argue பண்ணாத, பிரியாணியை கடைல வாங்கி வைன்னு, என் ஆபிஸ் கேபினுக்குள்ள இருந்து கத்தனும்-னு நினக்கிறயா? என் PA நீரஜ், என் கூடவேதான் இருப்பான். யாருக்கும் தெரிய வேண்டிய அவசியமில்லாத விஷயத்தை வாட்சப்-ல அனுப்பலாம். வீட்ல நீ மட்டுந்தான இருப்ப, சோ ப்ளூ டிக் பாத்தோடனே நீ மெசேஜ் பாத்துட்ட-ன்னு நினச்சேன். இதுல என்ன தப்பு ?”, என அவன் மீண்டும் பொரிய .. “ஓ இப்படி ஒரு பாயிண்ட் இருக்கோ?”, நங்கையின் மனம் த்ரிவிக் சொல்வது சரிதான் என்றது. அதனால், அமைதி காத்தாள். விக்ரமன் இத்தோடு விட்டிருக்கலாம்…..
“லிசன்.  இப்ப போன் பண்ணினேன் … பண்ணல, கெஸ்ட் வந்தாங்க .. நீ பக்கி மாதிரி இருந்த இல்லங்கிறது இல்லை பிரச்சனை. குழந்தைங்களைப் பாத்துக்கட்டுமா வேணாமா-ன்னு என்கிட்டே கேட்கணுமா ? இல்லையா? நீயே உன் இஷ்டப்படி  பண்ணுவியா?”, அவனுக்கு அவள் பாதுகாப்பு பற்றிய கவலை.
“ஏன்? அப்படி என்ன என் இஷ்டப்படி பண்ணிட்டேன்? அடுத்தவங்களுக்கு ஒரு ஹெல்ப் பண்றது தப்பா?”, நங்கை, விட்டேனா பார் என்று மல்லுக்கு நின்றாள்
“முட்டாள். அடி முட்டாள்.எவனாவது குழந்தைய சாக்கு வச்சு உள்ள வந்தா என்ன பண்ணுவ ? ராபரி பண்ணியிருந்தா? அவ்வளவு ஏன் ? கொலையே பண்ணியிருந்தா? பெரிய மதர் தெராசான்னு நினைப்பா உனக்கு? “, இவன் அவளுக்கு மேல் இருந்தான், இவன் மனதுக்குள் அப்படி ஒரு பயம் ஓடியது நிஜம் “உனக்கு ஏதாவது ஆனா என்ன பண்றது ? ” என்று கேட்க வேண்டியதை இப்படிக்  கேட்டால் ….. ?
பால் ஈனும் மாட்டினை பசு என்றும் கூறலாம், மாடென்றும் பகிரலாம். சொல்லின் வீர்யம் புரியாமல், த்ரிவிக் மாடென்றான். மாடு முட்டவும் செய்யுமே?
” சும்மா ஓவரா பண்ணாதீங்க. அதான் ஒண்ணுமாகலையில்ல. எனக்கும் சொந்தமா யோசிக்க தெரியும் “, வார்த்தைகள் தடிக்க…
“ஓ மை காட் .  இது உனக்காக தான் சொல்றேன் னனு கூட தெரியாத மரமண்டையா இருக்கே நீ? well. ஐ டோன்ட் கேர். இந்த வீட்ல இனி எது நடந்தாலும் எனக்கு தெரிஞ்சு தான் நடக்கணும். அதுமட்டுமில்ல , நான் சரின்னு ஓகே சொன்னதுக்கு அப்புறம் தான் நடக்கணும்.. காட் இட் ?”, ஸ்ட்ரிக்ட் ஆபிசரானான்.
“அப்படி எல்லாம் கேரண்டி வாரண்டி கொடுக்க முடியாது. அண்ட் எல்லாத்துக்கும் உங்கள கேக்கணும் அவசியமும் கிடையாது. this is my home too.”, அம்மா வீட்டில் இளவரசியாய் கோலோச்சிய நங்கை பேசினாள்.
கடுங்கோபத்துடன், “நோ. இது எங்க அம்மா எனக்காக வாங்கி வச்ச வீடு.இங்க, எனக்கு என்ன தேவைன்னு பார்த்து செய்யதான் நீ  வந்திருக்க. மத்த குழந்தைகளுக்கு ஆயாம்மா வேலை பாக்கறதுக்கு கிடையாது. வேறென்ன தெரியும் நீ படிச்ச படிப்புக்கு? நேத்து வந்தாங்களே என்னோட ஆபீஸ் ஸ்டாப். அவங்கள மாதிரி உனக்கு வேலை செய்யத் தெரியுமா என்ன?…”, த்ரிவிக்ரமன் வார்த்தையை விட்டான்.
அதுவரை, தன் செயலின் தாக்கத்தால் , கணவனுக்கு தர்ம சங்கடமானதொரு நிலை வந்ததே என்ற வருத்தத்தில் இருந்த நங்கையை, த்ரிவிக்கின் சொல்லம்புகள் சரியாக தாக்கின. “ஆஹா!, இத்தனை நாளாய் நம்மைப் பற்றி இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறானா இவன்?” என்ற எண்ணம் தலையெடுக்க, ஆத்திரத்தில், அனிச்சையாய் கையில் இருந்த கத்தியின் கைப்பிடியை இறுக்கிப் பிடித்திருந்தாள்.
சில தருணங்கள், சிற்சில நொடிகள், சின்னதாய் ஒரு வார்த்தை பலர் வாழ்க்கையை  மொத்தமாய் புரட்டிப் போடும், அவர்களின் வாழ்க்கைப்பாதையை தீர்மானிக்க வைக்கும். அந்த ஒரு நொடி நங்கையின் வாழ்வில் வந்தே விட்டது.
ஆழ மூச்சிழுத்து தன்னை சமன் செய்து கொண்டாள். இந்த வினாடியிலிருந்து, அவள் எதிர்காலப் பாதை மாறப்போகிறது என்பதை அறிந்தவளாய்…. மெல்லத் தலை நிமிர்த்தி, எதிரில் நின்றவனை மேல்பார்வை பார்த்து, “மிஸ்டர் த்ரிவிக்ரமன்..கல்யாணத்துக்கு முன்னாடியே … எனக்கு என்ன தெரியும், நான் என்ன படிச்சிருக்கேன்-னு உங்க அப்பாம்மாகிட்ட தெளிவா சொன்னதா ஞாபகம். அண்ட் ஆமா, நான் உங்க அகராதிப்படி ஆயா வேலை பாக்கத்தான் படிச்சிருக்கேன், இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க. இங்க இனிமேல் அதேதான் செய்யவும் போறேன்”, என்று அவள் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று தீர்மனமாய் கூறினாள்.
நங்கை நல்லாள், குடும்ப உறவுகளிடையே வளர்ந்தாலும், இவளை இளவரசியாய் நடத்தும் சுற்றத்தார். [உண்மையும் அதுதானே? அனைத்திற்கும் வாரிசு என்பது இவள்தானே? ], தவிர அவள் வாய் விட்டு சொல்லும் முன்… மகள் நினைப்பதை மனத்தால் யூகித்து நடத்திக் காட்டும் தந்தை, என இருந்தவள். அது சில நேரங்களில் சரியாகவும், பல நேரங்களில் சரியில்லாததாகவும் இருக்கும், தந்தையின் மனம் வேதனைப்படக் கூடாதே என்று இவள் ஜீரணித்தவை அதிகம். அங்கே பாசம் தெரிந்ததால், தேவை பின்னுக்கு சென்றது.
அதிலும் இப்பொழுது, தன்னை எதற்கும் உபயோகமில்லாதவள் என்று த்ரிவிக் கூற, அது நங்கைக்கு பெரிய அவமானமாகவே தோன்றியது.  தவிர, அவளுக்கே அவளுக்கென ஒரு வீடு வந்த பின்னும், மீண்டும் மற்றவர் முடிவுக்கே கட்டுப்படுவதென்பது இயலாத காரியமாய் தோன்ற, இங்கே, இப்போது தலையாட்டத் துவங்கினால், இனி எப்பொழுதும் தலையாட்டும் பொம்மையாகவே இருக்க வேண்டியதாகிவிடும் என்றும்  நினைத்தாள். ஆக, “கட்டுக்குள் நில்”, என்று கணவன் ஆணையிட.. “அடங்க மறு”-க்கும் பெண் சிறுத்தையாய் பொங்கி எழுந்தாள் மனைவி.
இன்னொரு பக்கம் கண்களில் தணலே தெறிக்க நின்ற   த்ரிவிக்ரமனோ, அவனது ஏழாம் வகுப்பில் இருந்து தனியே விடுதியில்  வளர்ந்து வருபவன், தாய், தந்தை, குடும்பம் மற்றும் சமூக அமைப்பு தெரியாதவனில்லை, ஆனால் தன்னிச்சையாய் முடிவெடுக்கப் பழகியவன். அவனுக்கு சரியென்று தோன்றினால், அந்த ஒன்றிலேயே நின்று செயல்படுத்துபவன். அதுதான் அவன் தொழில் வெற்றியின் ரகசியம் கூட. சில விஷயங்கள் தொழிலுக்கு சரி? குடும்பத்திற்கு?
“நிச்சயமா அதுக்கு நான் அலோ பண்ண மாட்டேன். நீ சென்னை போகலாம். நான் உங்கப்பாக்கு கால் பண்றேன். அடுத்த பிளைட்-ல டிக்கட் போடறேன். ரெடியாயிரு.”, என்று உறும …
நங்கை பொறுமையிழந்து சட்டென கையை உயர்த்தி, “ஏய் மிஸ்டர்.. அப்பாகிட்ட சொல்லனும் ஆட்டுக்குட்டி கிட்ட சொல்லனும்ன்னு நினைச்சீங்க.. நான் மனுஷியா இருக்க மாட்டேன். கோடி கோடியா கொட்டி கொடுத்து கட்டிவச்சா,  திருப்பி அனுப்புவீங்களோ? தொலைச்சிடுவேன் தொலைச்சு…”, கடிபட்ட பற்களுக்கிடையே வார்த்தைகளை துப்பினாள். அவள் கையில் இருந்த கத்தியை அப்பொழுதுதான் கவனித்தாள். சற்றே தெளிந்து, கையை இறக்கினாள்.
நங்கைக்கு, த்ரிவிக்ரமனிடம் கத்தி காண்பித்தது சிறிது அதிகப்படியாய் தோன்றியது. தன்னால் ஒரு சிறிய கவலை கூட தந்தைக்கு வரக்கூடாது என நினைத்து நங்கை இதுநாள்வரை செயல்பட, திருமணமாகி ஒரு மாதம் கூட முடியாத நிலையில், அவரிடம் அனுப்புகிறேன் என்பதோடல்லாமல், அவரிடமே பிரச்சனைப் பேசப் போகிறேன் என கணவன் கூறியதும், தந்தையின் வருத்தமான முகம் கண்களுக்கு வர, அவள் கோபம் எல்லை மீறியது. அதன் தாக்கமே அந்நிகழ்வு.
அவளது பத்தாவது வயதில், அவளது அன்னை திடீரென உலகத்தை விட்டு நீங்க, இவர்கள் மூவருமான குடும்பம் அது. வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தாலும், நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்த அந்த இழப்பு அனைவரையும் நிலைகுலைய வைத்திருந்தது. மோகனசுந்தரத்துக்குமே, அடுத்து என்ன என்பது தெரியாத கையறுநிலை. அன்று வரை மனைவி முத்தழகி வீட்டை நிர்வகிக்க, இவர் அலுவலகம் சென்று வந்தார். அன்று காலை சிற்றுண்டி கொடுத்து வழியனுப்பிய மனைவி, அந்தி சாயும் நேரம், இதயத்தைப் பிடித்துக் கொண்டு  சாய்ந்து விட்டதாய் வந்த ஒற்றை அலைபேசி அழைப்பில், அவர் உலகமே அஸ்தமனமாகியது. வீட்டை அடைந்தவர், மனைவியை மடியில் தாங்கி அமர்ந்தவர், அழக்கூட தோன்றாமல் அதிர்ச்சியில் இருந்தார்.
தூக்க கலக்கத்தில் இருந்த நங்கை, கூடத்தில் சோஃபாவில் தந்தையின் மடியில் படுத்திருந்த அன்னையிடம், “அம்மா, பசிக்கிதுமா, பூரி செஞ்சுதர்றேன்னு சொல்லிட்டு, தூங்கிட்டே இருக்கீங்க. ப்பா, அம்மாவை எழுப்புங்கப்பா.”, என்ற பெண்ணைப் பார்த்தும், “முத்து, நல்லா சாப்பாடு கேக்கறாம்மா, எடுத்துட்டு வா”, என்று வெடித்து அழ… அன்றுதான் தந்தை அழுது பார்த்தாள், நங்கை. பின், சொந்தங்கள் வர வர, காரியங்கள் நடந்தன.
அவரும் நிதர்சனத்தை உணர்ந்து, பங்காளி முறையில் சில சொந்தங்களை, வேலையும் கொடுத்து, வீட்டிலும் இருக்க வைத்தார். ஆனாலும், அன்று பேச்சைக் குறைத்தவர், தேவைக்கு மேல் அனாவசியமாக ஒரு வார்த்தை, மற்றவரிடம் உதிர்த்தவர் இல்லை. அவரது உணர்வுகள்/உணர்ச்சிகள், அது மகளைப் பற்றியதோ, மற்றதைப் பற்றியதோ,  அவர் மனதுக்குள் அவரது முத்துவுடன் மாத்திரமே. 
அன்று அவர் அழுவதை பார்த்த நங்கை, அதன்பிறகு, எதற்காகவும் அவர் அவளைக்கொண்டு கவலை கொள்ள கூடாது என்று உறுதி எடுத்திருந்தாள். அவரிடம் த்ரிவிக்ரமன் பேசுகிறேன் என்றதும் அவளையறியாமல் வெகுண்டதும் இதனால்தான்.
ஆனால், த்ரிவிக்ரமன், நங்கையை சென்னையில் இருக்கும் அவனது அம்மாவிடம் அனுப்ப எண்ணியிருந்ததோ, விமான நிலையத்தில், இவளை அழைத்துக்கொள்ள மட்டுமே மோகனசுந்தரத்தை வரச்சொல்வதாக இருந்ததோ, இவளுக்கு தெரியுமா என்ன?
த்ரிவிக்ரமன்….. இன்னமும் நங்கை கத்தி காண்பித்த அதிர்ச்சியில்  இருந்து வெளியே வரவில்லை.
அரிவை அறிவானா?

Advertisement