Advertisement

AVAV 11 (4)
வேலைகளை முடித்து வேலையாட்கள் கிளம்பியதும், வீட்டை பூட்டிக் கொண்டு அவளது அலுவலகம் வந்து விட்டாள். மதியம் வரை அனைத்தும் ஒரே தாள கதியில் சென்றது. பின்னர், மூன்று மணி அளவில்,  இரு பெற்றோர்கள் அவர்களது பிள்ளையை சேர்ப்பதற்காக வந்தனர்.  இவளது காரியதரிசி, அவர்களுடன் பேசி தேவையான விண்ணப்பங்களை கொடுத்து, அனைத்து விவரங்களையும் சேகரித்தார். பின், க்ரீச் செயல்பாட்டினை பார்க்கவேண்டும் என்று அவர்கள் கேட்க, காரியதரிசி-யை அலுவலகத்தில் இருக்கப் பணித்து, நங்கை அழைத்துச் சென்றாள். உள்ளே அதன் வசதிகளை, கட்டுப்பாடுகளைக் குறித்து விளக்கியவள், மைதானத்திற்கு அழைத்து சென்றாள். இன் டோர்/அவுட் டோர் இரண்டையும் காண்பித்தவள், “இதை நாங்க, இந்த பிளாட் ஓனர்ஸ் அசோசியேஷன்-ல பேசி, தினமும் மூணு மணி நேரம் க்ரீச்-க்கு, வாடகைக்கு எடுத்திருக்கோம். மொதல்ல பசங்க, எதுல இன்ட்டெரஸ்ட் காமிக்கறாங்கன்னு பாத்து, அதுல அவங்களை டெவலப் பண்ண உங்ககிட்ட சொல்லுவோம்”.
இவளது அணுகுமுறையில், வந்தவர்களுக்கு முழு திருப்தி. உடனடியாக, பாரத்தினை [forms] பூர்த்தி செய்து, பணம் கட்டி செல்வதாகக் கூறி…பேச்சு நீண்டது.
சரியாக அதே நேரத்தில், ஆபிஸில், ஒருவன் அரக்கப்பரக்க வந்தான், குர்ஷரன் அப்பாவிற்கு ஆக்ஸிடென்ட் ஆகி விட்டதென்றும், அவளை அழைத்துப் போக தன்னை அனுப்பியதாகவும் கூறினான். காரியதரிசி, உடனே குர்ஷரனின் தாயாருக்கு அழைப்பு விடுக்க… அது நாட் ரீச்சபிள் என்று பதிலளித்தது.
“அவங்க ஹாஸ்பிடலுக்கு உள்ள இருப்பாங்க, போன் ரீச் ஆகாது, ப்ளீஸ் உடனே குழந்தையை அனுப்புங்க, அவங்கப்பா பாக்கணும்ங்கிறார்”, என்று கெஞ்சி கேட்டவுடன், மீண்டும் அவளது அன்னையை தொடர்பு கொள்ள முயன்றவர், தோல்வியை தழுவ…  நங்கைக்கு அழைத்து விபரம் சொன்னார். சற்று நேரம் யோசித்தவள்… “ம்ம்.. வந்திருக்கறவரோட, ID ப்ரூப், காண்டாக்ட் நம்பர் வாங்கிட்டு அனுப்பிடுங்க”, என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவள்.. ஏதோ தோன்ற… மீண்டும் காரியதரிசியை அழைத்து…. “எந்த ஹாஸ்பிடல்-ல அட்மிட் பண்ணிருக்காங்கன்னு கேட்டு, அங்க போன் பண்ணி கிராஸ் செக் பண்ணிக்கோங்க. “என்றாள்.
அவரும் அவ்வாறே செய்தார், அந்த மருத்தவமனையில், “இங்க மூணு ஆக்சிடென்ட் கேஸ் வந்துருக்கு, இன்னும் பேர் அட்ரஸ்-ல்லாம் கேட்கலை, எமெர்ஜென்சி வார்டு-கு போயிருக்காங்க, இனிமேதான் விவரங்களை கேட்டு வாங்கணும்.” என்று பதில் வர, போனை வைத்தவர், அடுத்த அறையில் காத்திருந்தவனைப் பார்த்து, “சரி, கூட்டிட்டு போங்க”, என்று அப்பிள்ளையை அழைத்துவர சொன்னார். அவளோ, யாரோ புதிதாய் வந்துள்ளதைக் கண்டு, போகமாட்டேன் என்று முரண்டு பிடிக்க… சமாதனப் படுத்தி அக்குழந்தையை அவனுடன் அனுப்பிவைத்தார்.
அவர்கள் சென்ற ஐந்தே நிமிடத்தில், பிள்ளையை அழைத்துச் செல்லவென, குர்ஷரனின் அன்னை வந்தார். அவரைப்பார்த்த காரியதரிசி, பதட்டமானார். அவசரமாக…
“அஞ்சு நிமிஷம் முன்னாலதான உங்க வீட்டுக்காரருக்கு ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிட்டல்-ல இருக்கறதா ஒருத்தன் வந்து ஷரனை கூட்டிட்டு போனானே?”, எனவும்,
“வாட்?… அப்படி எதுவும் இல்லையே?”,
“அப்ப சீக்கிரமா வந்திருக்கீங்க?”, அவர் வரும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பே வந்திருந்ததால் காரியதரிசி கேட்க..
” நான் தலைவலிக்குதுன்னு ஆஃபீஸ்ல ஒன் ஹவர் பர்மிஷன் போட்டு வந்தேன்.  யார் வந்து கூப்பிட்டாலும் அனுப்பிடுவீங்களா?”, என்று அவர் ஹைப்பர் டென்ஷானாகி கத்த…., நங்கை உள்ளே வந்தாள். நொடியில் விஷயத்தை கிரகித்தவளின் அடிவயிற்றில் அட்ரினல் அதிகமாய் சுரந்தது. நங்கை, முதன்முறையாக பயம் என்றால் என்னவென உணர்ந்தாள்.
“ஹாஸ்பிடலுக்கு செக் பண்ணுங்கன்னு சொன்னேனே?”, என்று காரியதரிசியைக்  கேட்க, “பண்ணினேன் மேம், மூணு கேஸ் வந்திருக்கு, இன்னமும் பேர் அட்ரஸ் வாங்கலைன்னு சொன்னாங்க., அவசரமாச்சேன்னு அனுப்பினேன்”, வியர்வை ஊற்றாய் பெருக… கையைப் பிசைந்தார்.
“உங்க போனுக்கு என்னாச்சு?”, குர்ஷரனின் அம்மாவைப் பார்த்து நங்கை கேட்டாள்.
“ஏன்? என்கிட்டத்தான் இருக்கு.”, கைப்பையில் கைவிட்டு தேடியவர், “இல்ல தெரில.. எங்கயோ மிஸ் பண்ணிட்டேன்”, அவருக்கு அழுகை ஆரம்பமாகி இருந்தது. மனதை ஒருமுகப்படுத்தி  முழுதாக ஒரு நிமிடம் யோசித்தவள்…. “வாங்க போலாம், உங்க பொண்ணை கண்டுபிடிக்க வேண்டியது என் பொறுப்பு.”, சொன்னவள் வார்த்தையில் எஃகின் உறுதி.
காரை எடுத்தவள், நேராக சென்றது, CCTV பதிவுகளைத் தேடி. இவள் சென்ற நேரம்… அந்த மேலதிகாரி இல்லை, அவருக்கு கீழ் பணிபுரிபவன், தனக்கு பதிவுகளைத் தர அதிகாரமில்லை என்று தர்க்கம் செய்தான். ஷரனின் அம்மா அழுகையோடு அவனிடம் கெஞ்ச… நங்கை…நேராக அவனது காபினுக்குள் வந்து, கொத்தாக அவன் சட்டையைப் பிடித்தாள், “டேய்… அந்த பொண்ணு உன் பொண்ணா இருந்தா இப்படித்தான் சொல்லுவியா?” அட்சர சுத்தமாய் தமிழில் கேட்டாள்.
அவள் கண்களின் தீவிரம் கண்ட அவனுக்கு என்ன புரிந்ததோ?, அடுத்த பத்து நொடியில் திரையில் அவளது மழலையர் விடுதியின் முன் நடந்தவைகள் ஓட ஆடம்பித்தது. அதிலிருந்து கார் நம்பரை குறிப்பெடுத்தவள், அந்த பணியாளை நோக்கி “இதனால என்ன ப்ரோப்ளம் வந்தாலும், என்னை காண்டாக்ட் பண்ணுங்க”, அவளது விசிட்டிங் கார்டு கொடுத்தாள்.
போனை எடுத்தவள், முதலில் த்ரிவிக்-கை அழைக்க நினைத்தவள்…. யோசித்து … ப்ரஜனை கூப்பிட்டாள்,
“நமஸ்தே தீதி..  நீங்களே கூப்பிட்டு இருக்கீங்க. என்ன விஷயம் சொல்லுங்க? “, என்க ….
“கிரீச்-லேர்ந்து ஒரு பொண்ணை கடத்திட்டங்க,  கிளம்பி பதினஞ்சு நிமிஷம் ஆச்சு. கார் நம்பர் sms பண்றேன்,  உடனே கண்டிபிடிக்கணும்”, ரத்தினைச் சுருக்கமாக சொன்னவள், தொடர்ந்து…  ஷரினின் அன்னையைப் பார்த்தபடி “ஆப் தி ரெக்கார்ட்” , என்றாள்.
“ஓ மை காட் !!!, நான் என்ன பண்ணலாம்னு பாக்கறேன்”, என்றவன், காவல் துறையின் உயர்பதவியல் இருந்த நண்பனை அழைத்து விபரங்கள் தெரிவிக்க… அவர் கார் பதிவு என்னை வைத்து,  அடுத்த பத்து நிமிடங்களில் அது எங்கே இருக்கிறதென கண்டுபிடித்து, தானும் அங்கே வருவதாகக் கூறினார்.
அந்த பத்து நிமிட காத்திருப்பு…. பத்து யுகமாய்…. நரக வேதனையுடன் கழிந்தது, காரிலிருந்து இரு பெண்களுக்கும். பிரதான சாலையில் தான், காரை இருத்தி இருந்தாள், எங்கே செல்வதென தெரிய வேண்டுமல்லவா? இப்பொழுது அக்காரின் இருப்பிட வரைபடமே வர…. நங்கை கைகளில் கார் பறந்தது.  அவளது தற்போதைய பயம், அப்பெண்ணை கார் மாற்றி அனுப்பி இருக்கக்கூடாதென்பதே, ஆனால் அத்தனை நேரமாகவில்லை என்று அவளுக்கு அவளே சமாதனப் படுத்தியும் கொண்டாள்.
இவரகள் மேப் காண்பித்த அப்பழைய கட்டிடத்தைச் சென்று சேரும்போது, பிரஜனின் காவல் துறை நண்பர், அவ்விடத்திற்கு அருகாமை சரகத்தில் பணியில் இருந்த இரண்டு காவல் துறை அதிகாரிகளை அனுப்பி இருக்க… அவர்களும் வந்து விட்டனர்.
அவர்களுக்கு முகமன் தெரிவித்து நங்கை உட்பட அனைவரும்  அவ்வீட்டில் நுழையும்போது, நல்லவேளையாக எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்பட்டிருக்கவில்லை. வீடு வெளியே மட்டுமே சற்று சிதிலமடைந்து இருந்தது.உள்ளே ஓரளவுக்கு சுத்தமாகவே இருந்தது. ஹாலில் ஆளில்லாததை பார்த்து குர்ஷரனின் அன்னைக்கு மயக்கமே வந்தது. ஒரு அதிகாரியை அவருக்கு துணையாய் நிற்க வைத்து, மற்ற இருவரும் ஆளுக்கு ஒரு அறைக்கு சென்று சப்தமின்றி தேடத் துவங்க… இரண்டு அறை தள்ளி பேச்சு சப்தம் கேட்க… அந்த அறைக்கு விரைந்த நங்கைக்கு …. அக்குழந்தை கையில் சாக்கோ பாரை வைத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததும்,  அருகே அமர்ந்திருந்த அவன் பேசியபடியே அவளது  உடைகளை களைந்து கொண்டிருந்ததும் மட்டுமே தெரிந்தது.
ஆளரவம் கேட்டு அவன் திகைத்து நிமிர, ‘ஙொய்’, …. வந்த வேகத்தில் அவனை அறைய ஆரம்பித்த நங்கை, தொடர்ந்து கண்மண் தெரியாமல் அடித்துக் கொண்டே இருந்தாள். சப்தம் கேட்டு காவலரும் வர, அவன் அலறிப் புடைத்து  கட் பனியன் மற்றும் உள்ளாடையோடு வெளியே ஓடினான்.
அதற்குள் மயக்கம் தெளிந்த அந்தப்  பெண்மணி மகளின் குரல் கேட்க, பாய்ந்து உள்ளே சென்று கட்டிக்கொண்டாள். நடந்த கலவரத்தில் அது பயந்து அழுக ஆரம்பித்து இருந்தது. மெல்ல சமாதானம் கூறி அக்குழந்தையின் ஆடையை திருத்தி, இருவரும் வெளியே வந்தனர். அங்கே…
நடுத்தெருவில்… வாயிலிருந்து ரத்தம் ஒழுக, தப்பிக்கும் நோக்கில் வேகமாக கூடத்திற்கு ஓடியவன், அவனைப் பிடிக்க வந்த இரண்டு காவல் அதிகாரிகளையும் தள்ளிவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க… பின்னாலேயே வந்த நங்கையின் கையில் அகப்பட்ட கட்டையை அவன் கால்களை பார்த்து தூக்கி ஏறிய.. நீட்டிக்கொண்டிருந்த ஆணிகளோடு இருந்த அக்கட்டை, அவனது பின்னந்தொடையை குத்தி நிற்க… ஓடிய வேகத்தில் நான்கு அடி சென்ற பின்னர், அவன் ஓட இயலாது தெருவில் விழுந்தான். விழுந்தவன், கையால் அந்த கட்டையை தன்  உடலில் இருந்து பிய்த்து எடுக்க… வலி பொறுக்காது மல்லாந்து கிடந்தான்.
அவன் விழுந்ததை பார்த்தவள், குர்ஷரனையும், அவள் அன்னையையும் பார்த்து, “நீங்க இங்க இருக்கறது யாருக்கும் தெரிய வேண்டாம். வீட்டுக்கு போங்க”,என்று சொல்லி குர்ஷரனை ஒரு முறை ஆரத் தழுவி விடை கொடுத்தாள். அவர்களுடன் காவலர் ஒருவர் துணையாக சென்றார். மற்றொருவர், காவல் நிலையத்திற்கு போன் செய்து விபரங்களை தெரிவித்துக் கொண்டிருந்தார்.
வெளியே வந்த நங்கை  பாதி மயக்கத்தில் இருந்த அக்கயவனைப் பார்க்க பார்க்க .. கோபம் கொப்பளிக்க அருகிருந்த கட்டையை எடுத்தவள்…  கைகளை ஆணிகள் பதம் பார்த்ததையோ… குருதி கொப்பளித்ததையோ அறியாதவளாய்… அவன் அருகே வர… உயிர் பயத்தோடு அவன் எழுந்து ஓட நினைக்க…. அவன் மேல்  காலை வைத்து, அவன் எழுந்து தப்பிக்கவோ, திருப்பித் தாக்கவோ முடியாதவாறு தன் மொத்த பலத்தையும் பிரயோகித்து, கட்டையை அவன் அடி வயிற்றில் இறக்கினாள். அக்கயவனின் கத்தலைக் கேட்டு வேடிக்கை பார்க்கவென கூட்டம் சேர ஆரம்பிக்க, அதில்.. கடவுள் சிலா ரூபங்களை தட்டில் ஏந்தியவாறு வீடு வீடாக சென்று பிச்சை கேட்கும் சாது ஒருவரும் இருந்தார். இவள் நின்ற கோலத்தில் பார்த்து அதிர்ந்தார். மங்கையவள் மாகாளி அவதாரமாய் நின்றிருந்தாள்.
“பேட்டி.. இஸ்க்கோ சோட் தோ , மாரோ மத் , சப் பக்வான் தேக்கூங்கீ”, என்று அவனை விட்டுவிடுமாறும், அவனைக் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று இவளை சாந்தப்படுத்தவெனக் கூற…,
அதுவரை கோபமாய் இருந்தவள் …திரும்பி அவரைப் பார்க்கும்போது …. ரௌத்திரமே உருவாக நின்றாள், கோவைப்பழமென சிவந்திருந்த கண்களால் உறுத்து விழித்து,
அடித்தொண்டையில் இருந்து கர்ஜித்தாள். ” பக்வான்?.. கோன்
பக்வான்?.. கிஸ்கோ பக்வான்? .. , யஹா கோயி பக்வான் நஹி. பந்த் கரோ, சப் மந்திர், மஸ்ஜித் அவுர் சர்ச் கோ பந்த் கரோ”. [கடவுளா? யார் கடவுள்? யாரோட கடவுள்? இங்கே எந்த கடவுளும் இல்லை. எல்லா கோவிலையும், மசூதியையும், சர்ச்களையும் இழுத்து மூடுங்க], என்று கோபாவேசத்தோடு கூறியதோடு,
அவரது கையில் இருந்த விக்கிரகங்களையும், படத்தினையும் பார்த்து, மனதுக்குள் “ஐஞ்சு வயசுக்கு குழந்தையை வக்கிரமா பாக்கறவன் மனுஷன்னா, அவனை மாதிரி ஆளுங்களை படைக்கிற நீ கடவுளா?, ஒம்பது மாசக் குழந்தையை புணர்ச்சிக்கு தூக்கிட்டு போற, ஏழு வயசு பிஞ்சை எரிச்சு கொல்ற ஆளுங்களை படைக்கிற நீ கடவுளா?, கடவுள்ன்னா காப்பாத்துவார், இங்க எத்தனை நிர்பயாக்கள்? ஒருத்தர காப்பாத்தக் கூட நீ வரலியே?, உனக்கெல்லாம் கோவில்? கும்பாபிஷேகம்?”, என நினைத்து ஆத்திரத்தில் அவர் கையில் வைத்திருந்த சுவாமி படங்கள் இருந்த தட்டினைத் தூக்கி வீசினாள்.
அரிவை செய்தது சரியா?

Advertisement