Advertisement

AVAV – 10

த்ரிவிக்கும் அவன் நண்பர்களும், அதற்கும் மேலாக அவர்களின் குடும்பமும்  அடித்த கூத்தில், இவர்கள் தாஜ்மஹால் போக வேண்டும் என்பதையே மறந்தனர்.

அந்தாக்ஷரி, நடனம் என்று பார்ட்டி களைகட்ட, த்ரிவிக்கின்  தந்தை ‘பலே பலே’ ,  பஞ்சாபி டான்ஸ் ஆடி அசத்தினார்.

அவரவருக்குப் பிடித்த மொழியில் பிடித்த பாடலைப் பாடுமாறு அனைவரும் வற்புறுத்த, பிரஜன், “உப்பு கருவாடு ஊற வச்ச சோறு”,  என்று தமிழ் பாட்டு பாடி ஆச்சரியப்படுத்தினான். அதன்பிறகு தான் தெரியும் அவன் கோயம்புத்தூரில் இளங்கலை பயின்றவன் என்று.

நிகிலேஷின் அம்மா, “குச்  நா கஹோ, குச் பீனா கஹோ” பாடினார். வைதேகி “என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே”, என்று கலக்கினார்.

த்ரிவிக்கின் முறை வர, அவன் நங்கையை பார்த்தவாறே, ” என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப்போகிறாய்? ” , என ஆரம்பித்தவன்.. அதில் வரும் வரியான “நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா”, பாடும்போது நங்கையின் கண்ணோடு கண் நோக்கி பாடினான்.

நங்கையின் முறை வர, “து ஹி ஏ முஜ்கோ பதாதே சாஹு மே யா நா?”, என்று பாட ஆரம்பிக்க ‘ஹே’, என்ற ஆரவாரத்துடன் கைதட்டல் அதிர்ந்தது. அதில் வரும் ஆண் பாடகரின் பகுதியான, “இத்நா பதாதூ துஜ்கோ?  ச்சாஹத் பே அப்நே முஜ்கோ”, என பிரஜன் தொடர, அந்தப் பார்ட்டி ஹால் தடதடத்தது.

கூடவே, நிகிலேஷ் மற்றும் அவன் மனைவி இருவரும் நடனமாட அரங்கம் களை கட்டியது. த்ரிவிக்கின் இன்னொரு நண்பனான ரோஹித், விசிலடித்து பாடலை ஹம் செய்து பாட, அவனுடைய ஒன்றரை வயது மகள் அழகாய் நடனமாடினாள். உற்சாகம் கரை புரள.. கை தட்டி ஆரவாரம் செய்து கொண்டிருந்த திரிவிக், பிரஜனின் ஆர்வப்பார்வை நங்கையின் மேல் விழுந்ததை கண்டு சற்று துணுக்குற்றான்.

அப்பொழுதுதான் அவனுக்கு இவர்களை ஆக்ரா அழைத்துச் செல்வதாய் கூறியது ஞாபகம் வந்தது. மணி பார்த்தால் ஆறரை. இதற்கும் மேல் ஆக்ரா சென்று, பிறகு பெற்றோரை ஊருக்கும் அனுப்புவது  என்பது இயலாத காரியம் என்பதை அறிந்தவன் அன்னையின் அருகில் வந்து, ” மா சாரிமா இன்னைக்கு தாஜ் போக முடியாது. டைம் ஆயிடுச்சு”, என்றான்.

“டைம் ஆகும்னு தெரியும் த்ரிவிக், நங்கை ஏற்கனவே சொல்லிட்டா பார்ட்டின்னா டைம் பார்க்க முடியாது சோ போறது கஷ்டம் தான்-ன்னு.”, என்றவர்… ஒலித்த பாடலுக்கு ரிதமாய் கைதட்டிக் கொண்டே..

“இதுக்கு எதுக்கு கவலைப் படுற? நாங்க ரிட்டர்ன் வரும்போது போகலாம் ரெண்டு நாள் லீவ் எக்ஸ்டென்ட் பண்றோம். போய் பார்ட்டிய என்ஜாய் பண்ணு.”, என்று முடித்தார்.

அந்த ஹோட்டலிலேயே வெளியே பார்க் இருந்ததால், ஒரே இடத்தில் அடைந்து கிடக்க வேண்டாம் என்று அங்கு வந்தனர். அங்கேயும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.

சூரியன் போகவா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம், காற்று இதமாக தென்றலாய் தாலாட்ட, அந்த அந்திப் பொழுது மிக மிக ரம்யமாய் அனைவர்க்கும் கழிந்தது.

ஒருவழியாய் இரவு உணவினை முடித்ததற்கு பிறகு, பெரியோர்கள் அவரவர் அலைபேசி எண்களை பகிர்ந்து கொண்டு, தொடர்பிலேயே இருக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட மிரட்டி, பிரியா விடை பெற்றனர்.

ஒருவாறாய் அனைவரும் கிளம்பும்போது மணி எட்டு. த்ரிவிக் & நங்கை இருவரும் , வைதேகி, ஸ்ரீராமுலு வின் பிரயாண திட்டத்தின் படி, எங்கே அவர்களை இறக்கிவிட வேண்டுமோ அங்கே விட்டு,  அவர்கள் கிளம்பும் வரை காத்திருந்து , பத்திரமாய் போகுமாறு அறிவுறுத்தி, அங்கிருந்து கிளம்ப காருக்கு சென்றனர்.

காரின் அருகே வந்த கணவன் மனைவி இருவரும், ஒருவித சங்கடமான நிலையில் இருந்தனர். பெரியவர்கள் இருந்தபோது..  சகஜமாய் இல்லையெனினும், அவர்கள் சந்தேகிக்கக் கூடாது என்பதை எண்ணி… இருவருக்குள்ளும் பேசுவது என்பது இருந்தது. அதற்கு முன் இரண்டொரு தவிர்க்க இயலாத வார்த்தைகளை மட்டுமே பகிர்ந்து கொண்ட  இந்த வினோத தம்பதிகள், இப்போது….கிட்டத் தட்ட நடுநிசியை நெருங்கிய இரவில், இரண்டொரு மனிதர்கள் மட்டுமே உலாவிக் கொண்டிருந்த அந்த ஆளரவமற்ற சாலையில்… தனிமையில் தடுமாறினர்.

“நீ நல்லா பாடற…”, மௌனத்தை உடைத்தான் த்ரிவிக். அவனுக்கு, அவளிடம் கேட்க ஒரு சில கேள்விகள் இருந்தது.

“தேங்க்ஸ்”, மொழிந்தாள் பதிலாய்.

“ஏன் நங்கை, எனக்கு உன்னை பிடிக்கும்-னு கூட தெரியாத அளவுக்கா நான் நடத்துகிறேன்?”, காரின் கைப்பிடியில் கை வைத்து கதவைத் திறக்க வேண்டியவன், அந்த யோசனையின்றி, நிமிர்ந்து அவளிடம் கேட்டான்.

“ஏதோ சின்ன சண்டை, தப்பா வாயை விட்டுட்டேன், அதனால கோவமா இருக்க-ன்னு நான் நினைச்சிட்டு இருக்கேன். ஆனா, அப்படியில்ல போலிருக்கே?”, என்று தீர்வை நோக்கி முதலடி வைத்தான் த்ரிவிக் .

“………………………”, மௌனமே அவளது மறுமொழி.

“என்ன பிரச்சனை? என்ன இருக்கு உன் மனசுல? உன்னோட இருக்கிற ஓரொரு நேரமும் வேற வேற முகம் காமிக்கற. இங்க வந்த பத்து பன்னெண்டு நாள்ல, உன்னை மாதிரி ஒரு பர்ஃபக்ட் வொய்ப் இல்லன்னு நினைக்க வைச்ச. அப்பறம் கொஞ்சம் விலகிப் போறா மாதிரி தோணிச்சு.  வீட்ல ஏற்பாடு செஞ்ச  பார்ட்டி சொதப்பல் ஆயிடும்-னு யோசிச்ச நேரத்துல, டக்குன்னு இதெல்லாம் ஒரு விஷயமான்னு, அரைமணி நேரத்துல சமாளிச்சுட்ட”.

“தெரியாதவங்க கிட்ட பேச்சு வச்சுக்காத, உனக்கு பாதுகாப்பு  இல்லன்னு சொல்ல வந்தேன், ஆனா, வேற வேற வார்த்தைகள் எனக்கே தெரியாம வந்துடுச்சு. உன்னை அடுத்தவங்களோட கம்பேர் பண்ணினது தப்புதான்… அப்படி-ன்னு யோசிச்சுட்டே இருக்கேன்…. அப்போ நீ திடீர்னு கத்தி காமிச்சு மிரட்ற”, என்று சிரித்தவன், “அப்பறமா அதை நினச்சு எத்தனை நாள் சிரிச்சேன் தெரியுமா?”, சொன்னவன்…

“உனக்கு என்னை பிடிக்கலைன்னா, தாராளமா தள்ளிப் போயிட நான் ரெடி. என்னடா இப்படி சொல்றானே-ன்னு பாக்கறயா ? நேத்திக்கு இந்த வார்த்தையை உன்கிட்ட சொல்லி இருப்பேனா-ன்னு கேட்டா… நிச்சயமா இல்லைன்னு தான் சொல்லுவேன். ஏன்னா, நேத்து வரைக்கும், உனக்கு என்னைப் பிடிக்கலையோன்னு,  ஒரு பெர்சன்ட் டவுட் இருந்தது.

“இன்னிக்கு எனக்கு சென்ட் பர்சென்ட் தெரியும், உனக்கு என்னை பிடிக்கும்-ங்கிறதை விட, என்னை மட்டும்தான் பிடிக்கும்னு ரொம்பத் தெளிவா தெரியும்.”

“யாரோட ஆர்வப்பார்வையும் உன்னை பாதிக்காது, மூணாவது மனுஷங்ககிட்ட என்னை விட்டுக் கொடுக்க மாட்ட, அதைவிட, என் அப்பாம்மாகிட்ட கூட என்னை இறக்கிப் பேச மாட்ட. காரணம், அம்மா ஏதாவது அட்வைஸ் பண்ணுங்கன்னு எதிர்பார்த்தேன். நத்திங். சோ, நீ ஒன்னும் சொல்லலை, எதையும் காமிச்சுக்கலை-ன்னு தெரிஞ்சிகிட்டேன்.

“எங்கயோ என் செயல்கள், உன்னை காயப்படுத்தி இருக்கு. சொல்லலாம்-னு தோணினா சொல்லு, என் பக்கம் விளக்கம் இருந்தா, கிளாரிஃபை பண்றேன்”, என்று மிக நீளமாக பேசப் பேச…. சன்னமாய் சாரலாய், மழை தூற ஆரம்பித்தது.

“ஊஃப்….  சரி போகலாம் வா”, த்ரிவிக் அழைத்தது கூட தெரியாமல், அவள் இவன் பேசிய விதத்தில் அசந்துபோய் இருந்தாள். இவளை அவனிடம் ஒப்புவிக்க, மனதில் நினைத்த விஷயங்களையெல்லாம் கூற இது சரியான நேரமா?-என்ற யோசனையுடன், மழை பெய்வது கூடத் தெரியாமல்.

மேலே தெளித்த துளித்தண்ணீரை உணர்ந்து நங்கை அண்ணாந்து பார்க்க, மிகச்சரியாய் அவள் இதழில் ஒரு துளி உட்கார…. பார்த்திருந்த த்ரிவிக் பித்தானான்.

இருள்… அவள்… இதழ் … மழை…

இருவரின் இடையே நின்ற கார், நீளமாய் அந்தச் சாலை அவனுக்கு பெரிய அகழியாய் தோன்ற….. ஆழப் பெருமூச்சு விட்டு, கார் கதவைத் திறந்தான்.

நங்கைக்கும் ஒருவித மோன நிலையே…  அவள் ஏதும் பேசுவாள் என்று காத்திருந்தவன், மழை வலுக்கவே…. வீட்டிற்கு செல்லத் துவங்கினான். “மழையே மழையே… இளமை முழுதும் நனையும் வரையில் வா “, என்று பாடலை  ஒலிபரப்பிய வானொலி இவன் மனதறிந்ததோ? பாடலைக் கேட்ட த்ரிவிக் சட்டென நங்கை முகம் பார்க்க, அதே நேரத்தில் குறுஞ்சிரிப்போடு கடைக்கண்ணால் அவளும் பார்க்க, வண்டி வேகமெடுத்தது.

வீடு வரும்வரை தொடர்ந்தது மௌனம். அது வீட்டினுள் தொடருமா இல்லை மங்கையவள் இதழவிழ்ப்பாளா? என்ற கேள்வியுடன் அவன் பார்வை அவள் மீதே இருக்க.. அவளோ.. அவளது உடையைக் கூட மாற்றாமல், அவளறைக்குச்  செல்ல தயாராகி கையில் போர்வையுடன் வர….  ஹாலில் இருந்த த்ரிவிக் பொறுமையிழந்தான்.

மென்நடையிட்டு இவனைத் தாண்டிச் செல்ல நங்கை எத்தனிக்க, சட்டென எழுந்தவன், அவளை இடையோடு வளைத்து சிறை பிடித்து, பேசாத அவள் அதரங்களை முற்றுகையிட்டான், வன்மையாய்… மிக வன்மையாய்.

முத்தம் – இதழ் யுத்தம் கூடவே ஆயத்தம்?

முத்தம் – ஆக்சிடோசின்/டோபோமைன் அதீத சுரப்பு?

அந்நீண்ட முத்தத்தில்,  த்ரிவிக்-கின்  கோபம் வந்த சுவடு தெரியாமல் போக…  அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு  தொய்ந்திருந்த நங்கையின் எடையை கைகளில் உணர்ந்தவன், அவளை அப்படியே இரு கைகளில் தூக்கி… அவளது அறைக்கே இட்டுச் சென்று, கட்டிலில் படுக்க வைத்து நிமிர்ந்து வெளியேற நினைக்க…

“இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன?”, சன்னமாய் நங்கை பாட…….

மிக்கப்பசித்தவனிடம்…  விருந்தே விருந்துண்ண அழைத்தால் என் செய்வான்?

அரிவை அறிந்தானா?

Advertisement