Advertisement

20
 
ஒரு பக்கம் யாருமே ஏர்போர்ட் வரலைன்னு வருத்தமா இருந்தாலும் அக்காவுக்கு எப்படி இருக்கோன்னு கவலையாவும் இருந்துச்சு.
 
என்னோட போனு ஷிப்லயே எங்கயோ மிஸ் ஆகிட்டு. அதனால தான் எனக்குன்னு போன் இல்லை இப்போ. வள்ளிக்கண்ணு வீட்டில தனியா எப்படி இருப்பான்னு எனக்கு அவளை பத்தி கவலை இப்போ.
 
தனியா இருக்கவே பிடிக்காதுன்னு சொல்லுவா… என்ன செஞ்சுட்டு இருப்பான்னு தெரியலை, நிச்சயம் என்னை ரொம்ப எதிர்பார்த்திட்டு இருப்பான்னு தெரியும்.
 
அவ மாசமா இருக்காளே அவளுக்கு போன் பண்ணி தொந்திரவு பண்ண வேணாம்ன்னு தான் ஊர்ல இருந்து நான் அம்மாக்கு போன் பண்ணேன். ஆனா அவ எங்க வீட்டில இருக்கான்னு அப்போ தான் தெரிஞ்சுது.
 
எனக்கு இப்படி ஆகிட்டுன்னு தெரிஞ்சதும் இங்க வந்திருப்பான்னு நினைக்கிறேன். கேப் புக் பண்ணிட்டு அதுல போயிட்டு இருக்கேன், தாமஸ் என்னை ட்ரோப் பண்றேன்னு சொன்னான், நான் தான் வேணாம்ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
 
வீடு நெருங்க நெருங்க உள்ள ஒரு இனம்புரியா உணர்வு. அந்த ஒரு மணி நேரம் எனக்கு ஒரு யுகமா தெரிஞ்சது.
 
இதோ வந்தாச்சு எங்க வீடு வாசல் முன்னாடி வண்டி நிக்குது. நான் காசை கொடுத்திட்டு ஏதோ நினைப்புல மேல நிமிந்து பார்த்தா வள்ளிக்கண்ணு பால்கனில நின்னுட்டு என்னையவே பார்த்திட்டு இருக்கா.
 
நானும் பார்த்திட்டே இருக்கேன். “நீ இரு நான் வர்றேன்னு…” சொல்லி உள்ளே போனேன்.
 
ஷ்ரவன் தான் இருந்தான் அவன்கிட்ட பேச அவன் அழுதிட்டான் என்னை பார்த்து. அவனை சமாதானப்படுத்திட்டு மாடிக்கு போனேன்.
 
எனக்கு இந்த நிமிஷம் எவ்வளவு சந்தோசம் தெரியுமா அதை சொல்ல வார்த்தையே இல்லை. என்னோட குழந்தையை சுமந்திட்டு என் வள்ளிக்கண்ணு என் முன்னாடி நிக்கறா, உள்ள வந்து அவளையே தான் பார்த்திட்டு இருந்தேன்.
 
அவளை முழுசா என் கண்ணுக்குள்ள நிறைச்சுக்கறேன். வயிறு கொஞ்சம் மேடா தெரிஞ்சது. அப்படியே அவளை கட்டிக்கணும் போல இருந்துச்சு. அவளும் என்னையவே பார்த்திட்டு வாசல்லவே நிக்குறா வழிவிடாம.
 
வழிவிடுவியான்னு கேட்கவும் வழிவிட்டு நின்னா. என்னோட திங்க்ஸ் கீழே வைச்சுட்டு அவளை பாக்குறேன். என்னை தாவி வந்து கட்டிக்கிட்டா.
 
அவ அழறா என்னால சமாதானப்படுத்த முடியலை. எனக்குமே கண்ணு கலங்குது. திரும்ப நான் வருவேனான்னு எனக்கே தெரியாம இருந்துச்சு. அந்த மாதிரி ஒரு நிலையில தானே எல்லாரும் என்னை எதிர்பார்த்திட்டு இருந்திருப்பாங்க.
 
அவளோட அழுகை அதிகமாகிட்டே இருந்துச்சு. வயித்துல பிள்ளைய வைச்சுக்கிட்டு இப்படி அழறாளேன்னு அவளை நிமித்த பாக்குறேன்.
 
இன்னும் நல்லா என் மேல ஓட்டிகிட்டு அழுதிட்டு இருக்கா. என்னை எந்தளவுக்கு அவ தேடியிருக்கான்னு அவ எனக்கு கொடுத்த இறுக்கத்துல புரிஞ்சுக்க முடிஞ்சுது.
 
நான் தான் அவளை கட்டிக்கணும்ன்னு நினைச்சேன். ஆனா அவளோட மேடான வயித்தை பாத்துட்டு தான் அவசரப்படக் கூடாதுன்னு இருந்தேன்.
 
ஆனா அவ இப்படி கட்டிக்குவான்னு நினைக்கலை. அதும் அவ அழறது எனக்கு தாங்கவே முடியலை. அப்படியொரு அழுகை அழறா.
 
நினைச்சு நினைச்சு ஏங்கி ஏங்கி அழறா. “நான் வந்துட்டேன் வள்ளிக்கண்ணு அழாத…”
 
“உன்னைவிட்டு நான் அவ்வளவு சீக்கிரம் போய்ட மாட்டேன்னு…” சொன்னேன். என் வயித்துல லேசா குத்தினா.
 
“உங்களை நான் போக விட்டிருவேன்னு நினைச்சியளோன்னு…” சொன்னா.

 

மதினி திடிர்னு சோர்வா உட்கார்ந்திட்டாவ, ஒரு வடியா வருதுங்காவன்னு அண்ணன் சொன்னாவ. அத்தை எனக்கு சாப்பாடு கொடுத்திட்டு இருந்தாவ அப்போ. எங்க ரூம்ல தான் இருந்தாவ.
 
அண்ணன் சொல்லவும் அத்தை அங்க வேகமா எழுந்தாவ. நானும் கூடவே எழுந்தேன். “நீ சாப்பிடுல, நான் போய் பாத்துட்டு வர்றேன்னு…” சொல்லிட்டு அத்தை போய்ட்டாவ.
 
மதினிக்கு எட்டு முடிஞ்சு ஒன்பதாம் மாசம் தான் தொடங்கி இருக்கு. இவியள பத்தி எந்த தகவலும் தெரியாததுனால சீமந்தம் பண்ணுறது பத்தி நாங்க யோசிக்கவே இல்லை.
 
ஆனா அவிய வீட்டுல முத குழந்தைன்னு அவியளே எல்லாம் செஞ்சுட்டாவ. அத்தை மாமா போன வாரம் தான் அங்க போயிட்டு வந்தாவ.
 
அண்ணன் குழந்தை பிறந்த பிறகு வேணா அம்மா வீட்டுக்கு போய்க்கோன்னு மதினிட்ட சொல்லிட்டாவலாம். அதனால தான் அவியளை இங்க கூட்டிட்டு வரலை.
 
இவிய வாராவன்னு தெரிஞ்சதும் வாறேன்னு சொல்லி மதினி ஒரே அழுகையாம் நேத்து தான் அத்தை போய் கூட்டிட்டு வந்தாவ, பிளைட்ல.
 
எனக்கு ஒரே பதட்டமா இருக்கு மதினி எப்படி இருக்காவன்னு. யாரைப்பத்தி யோசிக்கன்னே புரியலை இவிய வேற வந்திருவாவ இவியளை இப்போ யார் கூப்பிட போவான்னு இருக்கு எனக்கு.
 
அத்தை அவசரமா வந்தாவ அவிய தோரணையே சரியில்லை எனக்கு கவலையா இருந்துச்சு. “சொல்லுங்க அத்தை மதினி எப்படி இருக்காவன்னு கேட்டேன்”
 
“உம் மதினிக்கு வலி வந்திட்டு ரொம்ப நேரமா வலிச்சுட்டு இருந்திருக்கு சொல்லாம விட்டிருக்கா. ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும், நீ பத்திரமா இருந்துக்கல…”
 
“ஷ்ரவன் உனக்கு துணையா இங்கன தான் இருப்பான். ஆரவ் பிரண்டுக்கு போன் பண்ணி சொல்லியாச்சு. அவன் ஆரவ் ட்ராப் பண்ணிட்டு போறேன்னு சொல்லியிருக்கான்…”
 
“உங்க மாமாவும் எங்களோட தான் ஆஸ்பிட்டல் வாராவ. அவியளுக்கு இங்க இருக்கணும்ன்னு இருக்கு, மகளையும் பாக்கணும்ன்னு நினைக்காவ, அதான் நான் கூடவே கூட்டிட்டு போறேன்”
 
“நான் அங்க போயிட்டு உனக்கு போன் பண்ணுதேன். நீ தனியா இருந்துக்குவியால…”
 
“நீங்க போயிட்டு வாங்க அத்தை, நா இருந்துக்கிடுவேன்…”
 
“ஆரவ் வரும் போது நாங்க இங்க இல்லைன்னு நினைச்சா கவலையா இருக்குன்னு…” சொல்லி அத்தை கண்ணு கலங்குதாவ. அழுவுதாவ இவியளை நினைச்சு.
 
“நீங்க அதெல்லாம் எதையும் யோசிக்காம போயிட்டு வாங்க அத்தை நா பாத்துக்கிடுதேன், அவிய வந்ததும் உங்களுக்கு போன் போடுதேன்…”
 
அவியளை சமாதானப்படுத்தி போயிட்டு வரச்சொன்னேன். அவிய கிளம்பி போகவும் வீடே வெறிச்சுன்னு இருக்கு. என் கொழுந்தேன் இவிய தம்பி ஷ்ரவன் “மதினி நீங்க போய் படுங்க, அண்ணன் வர்ற வரைக்கும் நான் இங்க இருக்கேன்னு…” சொன்னாவ.
 
“பரவாயில்லை நா இங்க இருக்கேன்னு” சொன்னேன்.
 
அரைமணி நேரம் கழிச்சு அத்தை போன் பண்ணாவ, மதினிக்கு பிரசவவலி தான் வந்திருக்காம். ஆனா வலி இன்னும் அதிகமாகணுமாம், டாகடர் நைட்டுக்குள்ள குழந்தை பிறந்திரும்ன்னு சொன்னாவலாம்.
 
இவிய வந்துட்டாவலான்னு கேட்டாவ, இன்னும் வரலைன்னு சொன்னேன். என்னை பத்திரமா இருக்கச் சொல்லிட்டு வைச்சுட்டாவ.
 
எனக்கு இப்போ அத்தை பேசினதுலவே மனசெல்லாம் ஓடுது. எனக்கும் இப்படி தான் வலிக்குமா, ரொம்ப வலி எல்லாம் நா எப்பவும் தாங்க மாட்டேனே. கால்ல லேசா கீறினாலே வீட்டை ரெண்டாக்கிருவேன். இந்த வலி எப்படியிருக்குமோன்னு எனக்கு பயமா இருக்கு.
சும்மா இருந்தா மனசு கண்டப்படி அலையுது. இவிய வேற இன்னும் வீட்டுக்கு வரலை, மதினி வேற ஆஸ்பிட்டல் போயிருக்காவ எல்லாம் சேந்து எனக்கு என்னென்னவோ நினைப்பை கொடுக்கு.
 
கண்ணசந்து வருது, என்னால உட்கார முடியலை. இவியளை பாக்காம எனக்கு உறங்கவும் முடியாது. கொஞ்ச நேரம் கால் நீட்டி படுக்கலாம்ன்னு எழுந்து எங்க ரூமுக்கு போனேன்.
 
“நா உள்ள போய் படுத்திருக்கேன் கொஞ்ச நேரம், அவிய வந்தா குரல் குடுங்கன்னு…” கொழுந்தன்கிட்ட சொன்னேன். அவிய தலையாட்டவும் தான் ரூமுக்கு போனேன். அத்தை கீழே ரூமு மாத்திக்கோன்னு சொன்னாவ, நா தான் வேணாம்ன்னு சொல்லிட்டேன்.
 
இந்த ரூம்ல தானே நாங்க இருந்தோம். இங்க இருந்தா இவியளோட இருக்க மாதிரி இருக்கும் எனக்கு. கொஞ்ச நேரம் கட்டில்ல கால் நீட்டி படுத்திருந்தேன். அப்படியே படுத்து இருந்தாலும் மேலுக்கு வலிக்கற மாதிரியே இருக்கு.
 
சித்த நடப்போமேன்னு பால்கனிக்கு போனேன். ரோடு பக்கம் தெரியற மாதிரி உள்ள பால்கனில உலாத்திட்டு இருந்தேன்.
 
இவிய வந்தா தெரியணும்ல அதான் அங்க போனேன். ரோட்ல ஏகப்பட்ட வண்டிங்க போகுது வருது, எங்க வீட்டுக்குள்ள எந்த வண்டியும் வர்ற மாதிரி தெரியலை.
 
திரும்பி உள்ள போகலாம்ன்னு நினைக்கும் போது வண்டி சத்தம் கேட்டுச்சு. படபடன்னு இருந்துச்சு மெதுவா திரும்பி பாக்கேன் கார் வந்து வீட்டு முன்னாடி நிக்கு.
 
இவிய தான் கீழே இறங்குதாவ. ஆளு ரொம்ப இளைச்சு போயிட்டாவ, முகமெல்லாம் ரத்தமே இல்லாம வெளுத்துகிடக்கு.
 
காசு கொடுத்திட்டு பேக் எடுத்திட்டு மேலே பாக்காவ. நா இதை எதிர்பாக்கவே இல்லை. அவிய என்னையவே பாத்திட்டு இருக்காவ. நா கீழே போகலாம்ன்னு பாக்கேன், அவிய நீ இரு நா வர்றேன்னு சொன்னாவ.
 
உள்ளுக்குள்ள என்னவோ செய்யுது. எத்தனை மாசம் கழிச்சு இவியளை பாக்கேன். மேல வருவாவன்னு நான் காத்திட்டு இருக்கேன். பத்து நிமிஷம் ஆச்சு இன்னும் வரலை.
 
கொழுந்தன்கிட்ட பேசிட்டு இருப்பாவன்னு தெரியும் இருந்தாலும் மனசு இவியளை பாக்கணும்ன்னு துடிக்குதே என்ன செய்ய.
 
வாசல்கிட்டவே எந்திச்சு வந்திட்டேன், இவிய படியேறி வாராவ. என்னையவே பாத்திட்டு இவிய வாசல்லவே நிக்காவ.
 
நான் அப்படியே அவியளை இறுக்கி கட்டிக்கிட்டேன். என் கண்ணுல இருந்து கண்ணீர் வந்திட்டே இருக்கு. இவிய என்னைய நிமித்தி பாக்க முயற்சி பண்ணுதாவ.
என்னால முடியலை ஓன்னு அழுதேன். என்னோட அழுகை சத்தம் கேட்டு கீழே இருந்து கொழுந்தன் குரல் கொடுக்காவ “அண்ணா என்னாச்சுன்னு??”
 
“ஒண்ணுமில்லை ஷ்ரவன் நான் பார்த்துக்கறேன்னு…” இவிய குரல் கொடுக்காவ.

 

இனிமே நாங்க ரெண்டு பேருமே சேர்ந்தே கதை சொல்றோம்.
 
“போதும் வள்ளிக்கண்ணு அழாத?? எல்லாம் சரியாகிடுச்சு…”
 
“ஒவ்வொரு நாளும் உங்களை பாக்க மாட்டோமான்னு இருக்கும். என் உயிரே என்கிட்ட இல்லை”
 
என்னை மேல இருந்து கீழ வரை ஆராய்ச்சியா பார்க்குறா என் பொண்டாட்டி. “என்ன வள்ளிக்கண்ணு பாக்குறே??”
 
“இதென்ன கையில இப்படி இருக்கு… வேற எங்கெல்லாம் அடிப்பட்டிருக்குன்னு” கேட்டு அதை என்னை காட்ட வைச்சு என்னாச்சுன்னு முழுசா சொல்லவும் அதுக்கு ஒரு மூச்சு அழுதா.
 
“அந்த நேரம் உங்களுக்கு என்ன தோணிச்சு”
 
“திரும்பவும் உங்களை எல்லாம் பார்ப்போமான்னு இருந்துச்சு… அந்த நினைப்போட தான் மயங்கினேன் கடைசியா…”
“நீங்க என்னைய நினைச்சியலா…”
 
“உன்னை மட்டும் தான் அதிகமா நினைச்சேன்னு சொன்னா நீ நம்புவியா… ஒவ்வொரு நாளும் எழும் போதும் உன்னோட நினைப்போட தான் எழுந்துப்பேன். நீ பிரக்னென்ட்ன்னு தெரிஞ்சப்போ எவ்வளவு சந்தோசம் தெரியுமா”
 
“அந்த நேரம் உன்கூட இருக்க முடியலைன்னு அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு. உனக்கும் அப்படி தானே இருந்திருக்கும். பாதியிலேயே எதாச்சும் போர்ட்ல இறங்கி பிளைட் பிடிச்சி வந்திருவோமான்னு கூட தோணிச்சு…”
 
“உன்னை உடனே பார்க்கணும் போல இருந்துச்சு. அப்படி உன்னைப்பத்தி நினைச்சுட்டு இருந்தப்போ தான் இப்படியொரு சம்பவம் நடந்துச்சு…”
 
“எல்லாம் சரியாகி இதோ இப்போ உன் முன்னாடி முழுசா நிக்கறேன். இதெல்லாம் யாரால தெரியுமா…”
 
“உன்னோட நம்பிக்கையால, உண்மை தான் எனக்கு அப்படி தான் தோணுது. அன்னைக்கு போன்ல சொன்னியே, எல்லாரும் அழறாங்க. எனக்கு தெரியும் நீங்க வந்திடுவீங்கன்னு சொன்னியே…”
 
“உன்னோட அந்த நம்பிக்கை தான் என்னை மீட்டு கொண்டு வந்திருக்கு. உன்கிட்ட நான் அதை எதிர்பார்க்கலை. உன்னோட அந்த தைரியம் அந்த நம்பிக்கை எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு, இப்பவும் இருக்கு…”

“நான் ஊருக்கு போகும் போதும் இந்த வேலை தான் பார்க்கறேன்னு சொன்ன போதும் பார்த்த வள்ளிக்கண்ணு இல்லை நீ… நிறைய மாறியிருக்க…”
 
மறுபடியும் என்னை இறுக்கி அணைச்சுக்கிட்டா என் மேல சாஞ்சுக்கிட்டு திரும்பவும் அழுகை.
 
“ஐ மிஸ் யூ, ஐ லைக் யூ, ஐ நீட் யூ அண்ட் ஐ… ஐ லவ் யூ…” சொல்லி என் முகம் முழுக்க முத்தம் கொடுத்தா.
 
இதை நான் வள்ளிக்கண்ணுகிட்ட இருந்து எதிர்பார்க்கவேயில்லை. அவகிட்ட நான் கேட்டப்போ சொல்லாதை நான் கேக்காமலே சொன்னா.
 
“வள்ளிக்கண்ணு… ப்ளீஸ் இப்படி குனிஞ்சுட்டு சொன்னா எனக்கு எப்படி தெரியுமாம். என் கண்ணை பார்த்து சொல்லேன்…”
 
“சொல்ல மாட்டேன்னு…” அவிய மேல சாஞ்சுட்டேன்.
 
“ப்ளீஸ்… ப்ளீஸ் வள்ளிக்கண்ணு…”
 
“ஐ லவ் யூன்னு…” சொல்லிட்டு அவியளை பாக்க அவிய என்னையவே பாத்துட்டு இருந்தாவ.
 
“வள்ளிக்கண்ணு நான் பாப்பாவை தொட்டு பாக்கவா உனக்கு வலிக்காதுல”
“உங்க பிள்ளைய தொடுறதுக்கு என்கிட்ட அனுமதி கேப்பியளா…”
 
அவ சொல்லவும் குனிஞ்சு அவளோட வயித்துல கை வைச்சேன். லேசா ஏதோவொரு அதிர்வு, எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து போச்சு.
 
“என்னங்க?? என்னங்க??”
 
“என்ன வள்ளிக்கண்ணு??”

“பாப்பா அசைஞ்சுதுங்கன்னு…” சொல்றா.
 
நான் அப்படியே அவ வயித்தை கட்டிக்கிட்டேன். என்னோட கண்ணு கலங்கி ஈரம் பட்டிருச்சு போல “என்னங்க…”
 
“சொல்லு வள்ளிக்கண்ணு…”

“என்னைய அழ வேணாம்ன்னு சொல்லிட்டு நீங்க எதுக்கு அழுதிய??”
 
“இது அழுகைன்னு யாரு சொன்னா, உங்களை எல்லாம் பார்ப்போமான்னு நினைச்சேன். இந்த நிமிஷம் எவ்வளவு சந்தோசமானது தெரியுமா… அதுல வந்த ஆனந்த கண்ணீர் தான் இது…”
 
“சாப்பிட்டியலா??”
 
“மனசு நிறைஞ்சு இருக்கு வள்ளிக்கண்ணு. சாப்பாடெல்லாம் வேணாம். பிளைட்ல சாப்பிட்டதே போதும். அக்காவுக்கு எப்படி இருக்குன்னு அம்மாகிட்ட கேட்கணும்… உன்னோட போனை கொடு…”
 
“உங்க போன் என்னாச்சு??”
 
“கப்பல்ல மிஸ் ஆகிட்டு…”
 
அவ போனை வாங்கி அம்மாகிட்ட பேசினேன், அவங்க ஒரு பக்கம் அழ ஆரம்பிச்சுட்டாங்க, அவங்களை சமாதானப்படுத்தி அக்காவை பத்தி விசாரிச்சேன்.
 
குழந்தை பிறந்தாச்சாம் அக்காவுக்கு, பையன் பிறந்திருக்கான்னு சொன்னாங்க. அடுத்து அப்பா பேசினார், அவரோட குரலும் உடைஞ்சு போயிருந்துச்சு.
 
என்னை எல்லாரும் எவ்வளவு மிஸ் பண்ணாங்கன்னு அந்த நிமிஷம் என்னால உணர முடிஞ்சது. பசங்க வளர்ந்த பிறகு அப்பாக்கும் அவங்களுக்கும் இடையே ஒரு சின்ன கேப் வந்திரும்.
 
அதுக்காக அவங்களுக்கு பசங்க மேல பாசம் இல்லைன்னு அர்த்தமில்லை. பசங்களுக்கும் அப்பா மேல பாசமோ மரியாதையோ இல்லைன்னும் அர்த்தமில்லை.
 
அதை காட்ட அவங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கலைன்னு சொல்லலாம். பசங்க அப்பாவோட அன்பை அவங்க அப்பாவா ஆகும் போது தெரிஞ்சுக்குவாங்கன்னு சொல்வாங்க. எனக்கும் தெரியுது எங்க அப்பாவோட அன்பு புரியுது.
 
அவரோட இந்த குரல் நான் இதுவரைக்கும் கேட்காதது. அழுகை இல்லை ஆனா உடைஞ்சு போய் கேட்குது. அடுத்து அத்தான் பேசினாவ, அவியகிட்டையும் பேசினேன். நாளைக்கு வந்து பார்க்கறேன்னு சொல்லி வைச்சுட்டேன். வள்ளிக்கண்ணுகிட்டவும் சொன்னேன் அவளுக்கும் ரொம்ப சந்தோசம்.
 
“வள்ளிக்கண்ணு ரொம்ப நேரமா நின்னுட்டு இருக்கே, வா உட்காரலாம்ன்னு…” சொல்லி கட்டில்ல உட்கார்ந்தேன். அவளும் என் பக்கத்துல உட்கார்ந்தா, என் கையை பிடிச்சுக்கிட்டு என் தோள்ல சாய்ஞ்சுட்டு இருக்கா.
 
“போன வருஷம் நாம நினைச்சிருப்போமா வள்ளிக்கண்ணு…” அவ நிமிந்து என்னை பார்த்தா.
 
“என்னன்னு விளங்க சொல்லுதியளா??”
 
“நாம இப்படி இருப்போம்ன்னு…”
 
“எனக்கு கல்யாணம் நடக்கும்ன்னே அப்போ தெரியாது. உங்களை பிடிக்குமா பிடிக்காதான்னு கூட தெரியாம தான் கட்டிக்கிட்டேன்…”
 
“நீங்க உங்களை எனக்கு பிடிக்க வைச்சிட்டிய… உங்களையே எப்பவும் நினைக்க வைச்சிட்டிய…”
 
“உங்க பேச்சு, செயல்ன்னு ஒவ்வொண்ணும் உங்களைப் பத்தியே நினைக்க வைச்சிய. எனக்காக பாத்து பாத்து செஞ்சிய, எங்க எப்படின்னு தெரியாமலே நீங்க என் மனசை களவாண்டுட்டிய…”
 
“நான் மட்டும் தானா, நீ தான் என்னை களவாடிட்ட, உன்னை வேணாம்ன்னு சொல்லிட்டு நானும் உன்னை தான் கட்டிக்கிட்டேன்”
 
“நம்ம கல்யாணத்துக்கு பிறகு உரிமையோட உன்னை சைட் அடிச்சேன், உன்னோட இருந்த ஒவ்வொரு நாளும் எனக்கு ரொம்ப சுவாரசியமானதா புதுசா சந்தோசமா இருந்துச்சு. உன்னோட வெள்ளந்தியான பேச்சு அவ்வளவு பிடிக்கும் எனக்கு…”
 
“உன்னோட இப்போதைய பக்குவமான பேச்சும் எனக்கு பிடிச்சிருக்கு. இப்போ சொல்லு நான் திரும்பவும் வேலைக்கு போனான்னு…” சொல்லி, முடிக்காம அவளை பார்த்தேன்.
 
“பத்திரமா போயிட்டு வாங்கன்னு சொல்லுவேன்னு…” திடமா சொன்னேன்.
 
“ஐ லவ் யூ வள்ளிக்கண்ணு…”

 

நாம அவியளை டிஸ்டர்ப் பண்ண வேணாங்க, வாங்க நம்ம வேலையை பாப்போம், அவியளே ரொம்ப நா கழிச்சு பாத்துருக்காவ, அவிய சந்தோசமா இருக்கட்டும். அவியளுக்கு நல்ல படியா குழந்தை பிறக்கணும்ன்னு வாழ்த்திட்டு நாம கிளம்புவோம் வாங்க…

Advertisement