Advertisement

                                        அத்தியாயம் – 2

                   வருடம் – 1996

                    புது மலர்கள்

காலையில் கல்லூரி துவங்குவதற்கு சற்று முன்புதான் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் என்றால், அவனும், அவனது பெற்றோரும். இதுவரை, வீடு விட்டு வெளிச்சென்று தங்கியதில்லை அவன். அப்பா என்றால் மரியாதையும், அம்மா என்றால் அன்பும் மனதில் அவனுக்கு உடனடியாகத் தோன்றி விடும் எண்ணங்கள்.

அப்பாவுக்கு உறவின் வழியாகவோ அல்லது நண்பரின் வழியிலோ அறிமுகம் ஆகியிருந்த சதுரகிரி அந்தக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர். அவர் எந்த வகையில் அறிமுகமானவர் என்று அவன் தன் தந்தையிடம் கேட்டுக் கொண்டதில்லை. முந்தைய ஆண்டே இந்தக் கல்லூரியைப் பற்றி பெருமிதமாகப் பேசி, இங்கே அவனை சேர்க்கலாம் என அப்பா முடிவெடுத்திருந்தார். கணிணி படிப்பு என்று முடிவான பிறகு, பொறியியலுக்குதான் முயற்சிக்க வேண்டுமென்று அவன் எண்ணியிருக்கவில்லை.

அப்பொழுது, அந்தக் கல்லூரி துவங்கி இரண்டு ஆண்டுகள் மட்டுமே முடிந்திருந்த நிலையிலும், கல்லூரி நல்ல கல்லூரி. விரிவுரையாளர்கள் நன்கு அமைந்திருக்கிறார்கள். கடந்த மூன்று பல்கலைக் கழகத் தேர்வுகளிலும் பல்கலை அளவில் முன்னணி பெற்றிருந்தது அந்தக் கல்லூரி.

பெரிய கல்லூரிகளை நாடி, இடம் கிடைக்குமா எனக் காத்திருப்பதை விட இந்தக் கல்லூரியில் சேர்வது சரியான முடிவு என்றுதான் அவனுக்கும் தோன்றியது. அப்பாவின் முடிவுகளுக்கு எப்பொழுதும் அவன் கட்டுப்படுவது வழக்கம்தான் என்ற நிலையில், இது அவனுக்குமே இசைவான ஒன்றாகத் தெரிந்ததில், கல்லூரியிலும் வந்த உடனே சேர்த்துக் கொள்ளவும், சிரமமின்றி வேலை முடிந்த திருப்திதான்.

அந்த நகரின் நடு மத்தியில், ஒரு குடியிருப்புப் பகுதியில்தான் அந்தக் கல்லூரி அமைந்திருந்தது. கல்லூரியின் நுழைவு வாயில், பெரும் வளைவுகளை வைத்து, காவலர்களால் சூழப்பட்டிருக்கவில்லை. சற்று பெரிய வீட்டின் சுற்றுச்சுவரில், இரும்பிலான தோள்பட்டை உயரத்திற்குக் கம்பிக் கதவுகள் இடப்பட்டிருந்தது. அந்த இடம் முன்பு ஏதேனும் மழலையர் பள்ளி இருந்திருக்கும் இடமாக இருக்கலாம். கல்லூரியின் அலுவலகக் கட்டிடம், சற்று பெரிய இரண்டு வீடுகளை இணைத்த பகுதி என்பதற்கு மேலே சொல்ல ஏதுமில்லை. அந்தக் கலை அறிவியல் கல்லூரி துவங்கி அப்போது இரண்டு ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. அந்தக் கல்லூரியின் முதல் வருடத்தில் இணைந்த மாணவர்களே, அந்த ஆண்டில்தான் இறுதி வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள்.

அதோ, மாணவர்களுக்கான வகுப்புகள் அந்த அலுவலகக் கட்டிடத்தில் இருந்து நூறு அடி கடந்தால், நான்கு முதல் ஐந்து வகுப்பறைகள், தற்காலிகமாக எழுப்பப்பட்ட கட்டிடங்களின் மேலே கூரை வேய்ந்து காணப்படுகின்றன. அந்த வகுப்பறைகளுக்கு முன்பாக ஒரு கபடிப் போட்டிக்கான மைதானத்தின் அளவிலான இடம் இருப்பதாகத் தெரிகிறது. அந்த இடத்தினில், ஆறு அல்லது ஏழு அடிகள் இடைவெளியில், சற்று இடம் விட்டு, சிறு மரங்கள் நடப்பட்டிருக்கிறது. பின்புறம் சற்று தள்ளி, மாணவர், மாணவிகளுக்கான அவசர உதவிகளுக்கான கழிவறைகள் காணப்படுகிறது. அதையொட்டி, வகுப்பறைகளுக்கு முன்பாக உள்ள இடத்திற்கு சற்று குறைவான அளவிலான இடம், அலுவலகக் கட்டிடத்திற்குப் பின்பு, ஒரு பெரிய வீட்டின் சராசரி கொல்லைப் புறம் போலவே சில பல மரங்கள் காணப்படுகிறது. அங்கேயே சற்று முன்பாக, மாணவர்கள், மாணவிகள் உணவருந்தி விட்டுக் கைகழுவுவதற்கான சில குழாய்களும், கை கழுவுவதற்கு ஏதுவாக சிறு மேடை அமைப்புகளும் செய்யப்பட்டிருக்கிறது. அதிலிருந்து, அலுவலகக் கட்டிடத்தின் பின்பகுதியில் நுழைந்தால், அந்தக் கட்டிடத்தின் பின்புற அறைகள், சில பாடங்களுக்கான ஆய்வகமாக செயல்பட்டு வருவதைக் காண முடிகிறது.  

அப்போதைக்கு அந்தக் கல்லூரியின் மொத்த இடமும் அவ்வளவே.

கீற்று வேய்ந்த வகுப்பறைகள் என்றவுடன் ஏனோ பாலர் பள்ளி செல்வது போல ஒரு எண்ணம் வரத்தான் செய்தது. பின்னாட்களில், அந்தக் கல்லூரி ஆசிரியர்களின் படம் எடுக்கும் திறனுக்கு, அந்தக் கீற்றுக் கொட்டகை கூட அவசியமில்லை என்றெண்ணினான் அவன். வகுப்புகளை அத்தனைத் தெளிவாக எடுத்தார்கள் விரிவுரையாளர்கள்.

இவனுடைய பெற்றோருடன், இன்னும் சில பெற்றோர்கள், அவர்கள் வகுப்புக்கு நேரெதிரே இருந்த ஒரு மர நிழலில் பேசிக் கொண்டிருக்க, அவனுக்கு அந்தக் கல்லூரியில் முதல் நாள் துவங்கி விட்டிருந்தது.

முதல் நாள், முதல் வகுப்பே தமிழ். தமிழ் ஐயா இளவழகன் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு, மாணவர்களையும் அறிமுகம் செய்து கொள்ளச் சொன்னார். தன் முறை வந்தபோது, தன்னைப் பற்றிய அறிமுகம் செய்து கொண்டதோடு, மற்றவர்கள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொண்ட போது, முடிந்த வரை, அவர்களின் பெயர்களை, ஊரை, அவர்கள் படித்த பள்ளி என நினைவு வைத்துக் கொள்ள முயற்சி செய்து, மூன்று மாணவர்களுக்கு முன்பாக அறிமுகம் செய்து கொண்டவனின் பெயரை நினைவுபடுத்திப் பார்த்தால், இவன் தனக்குள்தான் அசடு வழிந்து கொள்ள நேர்ந்தது.

“அடங்குய்யா, அடங்கு. அவர்கள் எங்கேயும் போய் விட மாட்டார்கள். இனி இன்னும் மூன்று வருடங்களை இங்குதான் கழிக்க வேண்டும். பொறுமையாக எல்லோருடனும் பழகி, நட்பு பாராட்டிக் கொள்ளலாம்” என்று இவன் எண்ணிக் கொண்டிருந்த போது, ஒரு குறும்பான மாணவன் எழுந்து நின்றான்.

இவன் ஏற்கனவே அறிமுகம் செய்து கொண்டவன் தானே, பிறகு ஏன் எழுகிறான், ஆமாம், இவனது பெயர் என்னவென்று சொன்னான்? அவன் தன் பெயர் கூறி ஐந்து நிமிடங்கள் கூடக் கடந்திருக்காது. ஆனால், அந்தப் பெயர்தான் கிஞ்சித்தும் நினைவில்லை. வேகமாக தலையைத் தட்டிக் கொள்ளக் கையை உயர்த்தி, இருக்கும் இடம் உணர்ந்து, மனதுக்குள்ளாகத் தலையைத் தட்டிக் கொண்டு ‘ஹிஹிஹி’ என அசடு வழிந்து கொண்டான் அவன்.

ஆனால், தமிழ் ஐயாவுக்கு, அது போலக் குழப்பங்கள் எதுவும் இல்லை போலும். அவன் பெயரை சரியாகக் குறிப்பிட்டு, “என்ன சுந்தர், என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

“இல்லை ஐயா, எனக்கு ஒரு சந்தேகம்”

“கேளுங்கள் சுந்தர். என்ன சந்தேகம்? எதில் சந்தேகம்?” இன்னும் பாடமே துவக்கவில்லை, அதற்குள் என்ன சந்தேகம் வந்திருக்கப் போகிறது இவனுக்கு என்ற பாவனை இளவழகனின் முகத்தில்.

“பொதுவான சந்தேகம் தான் ஐயா. நாம் தான் இன்னும் பாடமே துவங்கவில்லையே” அவரைப் புரிந்து சொன்னான் அவன்.

வகுப்பில் எல்லோர் முகங்களிலும் புன்னகை அரும்ப, இளவழகனும் இலேசாக புன்னகைத்து, “பரவாயில்லை, கேளுங்கள் சுந்தர்” என,

“ஐயா, இது இரு பாலர் கல்லூரி தானே?” மாணவர்களிடையே இதே கேள்வி உள்ளே இருந்ததோ, பதிலறிய எல்லோருக்குமே ஆர்வம் இருந்ததோ, மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதையும், இலேசான அசட்டுப் புன்னகையைப் பரிமாறிக் கொள்வதையும் பார்த்தார் இளவழகன்.

“ஆமாம் சுந்தர். அதற்கு என்ன?” என்ற கேள்வியில் புன்னகை மறைந்து போய், ஏதோ ஆகாத கேள்வி வரப் போகிறது என்ற பாவனை வந்து சேர்ந்துது இளவழகனின் முகத்தில்.

“இல்லை ஐயா. இங்கே இந்த வகுப்பில் எல்லோரும் ஆண்கள் மட்டுமாக இருக்கிறார்களே. பிறகு எப்படி ஐயா, இது இருபாலர் கல்லூரி?”

ஒரு நொடி, முகம் சற்று இறுக்கமாகி, வலிந்து தன்னைத் தளர்த்திக் கொண்டு இளவழகன் பேசு முன்பு, அந்த சுந்தரே தொடர்ந்தான்.

“தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள் ஐயா. நான் இதுவரை படித்தது எல்லாமே ஆண்கள் மட்டுமே பயிலும் பள்ளிகள் தான். இருந்தாலும், நான் எங்கள் வீட்டில் பெண்களைப் பார்த்திருக்கிறேன். எனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள்.  அவளுடன் பழகுகிறேன். மாமா வீட்டுப் பெண்கள், அத்தை வீட்டுப் பெண்கள் என்று பெண் பிள்ளைகளிடம் பழகுவது எனக்கு இயல்புதான். ஏனோ, எங்கள் வீட்டின் அருகில் சிறந்த பள்ளியாக இருந்தது, ஆண்கள் மட்டும் பள்ளியாகிப் போனது. அதில் பயின்றதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லையென்றாலும், இயல்பாய் பெண்களுடன் பழகுவதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லை. இது இரு பாலருக்கான கல்விக் கூடம் என அனுமதி பெற்றுத் துவக்கி விட்டு, ஆண்கள் மட்டுமான வகுப்பு என்பது என்னவோ ஒரு ஏமாற்று போல, ஆண், பெண் நட்பு என்பதே தவறானது என்ற எண்ணத்தைக் கொடுக்கிறதோ, ஆண் – பெண் நட்பாகப் பழக முடியாது என்று நம்பப்படுகிறதோ என்பதாய்த் தோன்றியது. அதனால்தான் கேட்டேன் ஐயா. பெண்களுடன் பழகியே தீர வேண்டுமென்றோ, வாய்ப்பில்லாமல் போய் விட்டதே என நொந்து போயோ இதைக் கேட்கவில்லை” அந்த மாணவன், பேசி முடித்து விட்டு, சக மாணவர்களை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தான். அதுவரை அவனை நோக்கி கேலியாய் நோக்கிய விழிகளில் வியப்பேறி இருந்தது.

இந்த விளக்கம் கூறப்படுவதற்கு முன்பு உள்ளபடியே, அந்த சுந்தரை நோக்கி சிரிப்பதற்குக் காத்திருந்தவர்கள் இப்போது அமைதியாகி விட்டனர். ஏதோ, விளையாட்டாய் கேட்கப்பட்ட கேள்வி என எண்ணியிருந்தவர்களும் கூட, இப்போது, இது எத்தனை உண்மையான ஒரு கேள்வி என சிந்திக்கத் துவங்கி இருந்தனர்.

இரு பாலர் கல்லூரி என அனுமதி பெற்றுவிட்டு, ஆண், பெண் பிள்ளைகளுக்குத் தனித் தனி வகுப்புகள் என்ற கட்டுப்பாடு ஏனோ? இந்த சமூகம், ஆணும், பெண்ணும் பழகுவதை இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஏனிப்படி தவறாய்ப் பார்க்கிறது? அதிலும் ஒரு கல்விக் கூடத்தினை நிறுவி, நடத்தி வரும் மெத்தப் படித்தவரே, ஆண் – பெண் உறவு நிலைகளை வித்தியாசமாகப் பார்க்கிறாரோ?

அப்படியா எல்லோரும் பிழை புரிந்து விடுவார்கள்? எதற்காக இந்தப் பிரிப்பு? எதற்காக இந்தத் தடுப்பு? இதற்கு ஆண்கள் மட்டுமாகவோ அல்லது பெண்கள் மட்டுமாகவோ பயிலும் கல்லூரிக்கான அனுமதியினைப் பெற்றிருக்கலாமே? மாணவர்களின் மனங்கள் அலசியது.

எல்லோருமே இதற்கு இளவழகனின் பதில் என்னவாக இருக்கும் என்று ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஏனென்றால், அவரும் கூட ஒரு இளைஞரே.

சற்றே தன்னை வலிந்து தளர்த்திக் கொண்டிருந்த இளவழகன், இப்போது தான் அந்த மாணவனுக்கு எதிர்மறையான எந்த பதில் அளித்தாலும், அது கல்லூரி நிர்வாகத்தை விட்டுக் கொடுப்பதாக ஆகி விடும் என உணர்ந்ததால் சற்று பதற்றமடைந்து, அதை வெளிக்காட்டாது சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசுவதாகத் தோன்றியது.

“சுந்தர், இந்தக் கல்லூரி நிர்வாகம், இரு பாலருக்கான கல்வி நிறுவனம் துவங்கதான் விழைந்ததா என்பது நாம் அறியாதது. நன்கு கவனியுங்கள். என்னையும் உங்களுடன் இணைத்துதான் சொல்கிறேன். அதில் நானும் உங்களுடன் தான் இருக்கிறேன். எனக்கும் இந்த நிர்வாகம், கல்லூரி துவக்கும்போது கொண்டிருந்த நிலைப்பாடு தெரியாது. ஆனால், அதே சமயம், துவக்கிய பிறகு, இது கல்விக் கூடம், கல்விக்கான கூடம் மட்டும்தான் என்ற நோக்கத்தை நிர்வாகம், இங்கு பணியில் சேர்கின்ற பொழுதே கூறித்தான் பணியமர்த்துகிறது. என்னைப் பணியமர்த்தியபோது, என்னிடமும் இதை மிகக் கண்டிப்புடன் குறிப்பிட்டது கல்லூரி நிர்வாகம். ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம். இங்கு மாணவர்களுக்கு மட்டுமல்ல, பணியில் இருப்பவர்களுக்கும் கூட அதே பொதுவான அறிவுறுத்தல்களும், கட்டுப்பாடுகளும் தான். எதிர்பால் நட்பினை நோக்கிய பார்வையுடன் நாம் இந்தக் கல்லூரியில் இணையவில்லை. நீங்கள் உங்கள் கல்வியினை மேம்படுத்தவும், நான் என் பணி நிமித்தமும் தான் இங்கே கூடியிருக்கிறோம். உங்களின் கடமை, பயில்வது; உங்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு சிறப்பாக முனைந்து முழுமையான ஈடுபாட்டுடன் பயில்வது; என்னுடைய, என்னைப் போன்ற விரிவுரையாளர், பேராசிரியர்களின் பணி, கடமை, உங்களுடைய கல்வியறிவினை விசாலப்படுத்த, செம்மைப்படுத்த என் சக்திக்கு இயன்ற அளவில் முயற்சியிட்டு, ஊக்கமளித்து, முன்னேற்றுவது.

நாம் நமக்கு இங்கே ஒரு பாலினத்தினருடன் மட்டும்தான் பழக வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றோ, மாற்று பாலினருடன் பழகுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றோ சிந்தனைகளுக்குள் இறங்காதிருப்போம். நமக்கான ஏதோ ஒரு அடிப்படையான உரிமை மறுக்கப்படுகிறது என்பது போலான எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, நமக்குள் நாம் புதிய புதிய சிக்கல்களை உருவாக்கிக் கொள்ளாமல் இருப்போம். இங்கு எதற்காக நம் பெற்றோர்கள் நம்மை சேர்த்திருக்கிறார்கள்; என்னைப் போன்றோரின் குடும்பத்தினர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று மட்டும் சிந்திப்போம். மற்றபடி, நீங்களே கூறியது போல நாம் எல்லோருமே ஒரு அன்னையின் வயிறு உதித்தவர்கள் தான். எல்லோருக்கும் உடன் பிறந்த சகோதரிகள் இல்லாமல் இருக்கலாம். மாமா, அத்தை மகள்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பக்கத்து வீட்டிலோ, உறவிலோ, நம் வீட்டிலோ, பெண்களுடன் பழகுவதற்கு நமக்கு இந்த உலகம் வாய்ப்புகளை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. பெண்களின்றி நாம் இல்லை. பெண்களுடன் பழகுவது தவறும் இல்லை. ஆனால், வாழ்க்கையில், இது ஒரு சிறு பகுதி, மிகச் சிறிய காலகட்டம் சுந்தர். நீங்கள் கல்வி பயில வந்திருக்கும் இடத்தில்தான் பெண்களுடன் பழகவும், நட்பு கொள்ளவும் வேண்டுமென்பதில்லை. இப்போது உங்கள் கவனம் இருக்க வேண்டியது, உங்களை யார் ஏமாற்ற விழைகிறார்கள் என்று கவனிப்பதில் இல்லை; உங்கள் வாழ்க்கையில், நீங்கள் எப்பொழுதும் எதிலும், யாரிடமும் ஏமாறாமல் இருப்பது எப்படி என்பதில்தான். இதை சுந்தர் மட்டுமில்லை, நாம் எல்லோருமே நினைவில் கொள்வோம்.” என்று கூறி முடித்தார்.

ஏனோ அவரின் உரை நீண்டதாக இருந்தபோதும், இன்னும் எதுவோ சொல்வதற்கு மீதம் இருக்கும் உணர்வு எல்லோருக்குமே இருந்தது.

அப்போது மற்றுமொரு புதியவன் எழுந்து, “ஐயா, நான் பேசுவதில் தவறிருந்தால் மன்னித்து விடுங்கள். சுந்தரின் நோக்கம், நம் உரிமை மறுக்கப்படுகிறது என்ற அடிப்படையிலானது என்றோ அல்லது கல்லூரி நிர்வாகம் மாணவர்களையோ, மாணவிகளையோ வஞ்சிக்கிறது என்று கூறுவதாகவோ தோன்றவில்லை. ஆனால், ஐயா, இதுபோல கட்டுப்பாடுகளும், தளைகளும் மிகக் கண்டிப்பாக இடப்படுகிறபொழுது, அங்குதான் அந்தக் கட்டுப்பாடுகளும், தளைகளும் அதிக அளவில் மீறப்படும் என்று வாசித்திருக்கிறேன். சாதாரணமாக, வெகு இயல்பாக கிடைக்கக் கூடிய ஒன்றை, விலங்கிட்டு வைக்கும்போது, நேர்மறையான நிகழ்வுகளை விட, எதிர்மறை விளைவுகள் அதிகமாகி விடாதா ஐயா?” என்று கேட்க, சுந்தரின் கேள்விக்கு சாதுர்யமாக பதில் கூறி தப்பித்துக் கொண்டவர், இப்போது என்ன கூற போகிறார் என்று அந்த வகுப்பு முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தபோது, அந்த பாடவேளை முடிந்ததற்கான ஒலி அடிக்கவும், இளவழகன் ஆயாசப் பெருமூச்சு ஒன்றினை வெளியிட்டு, நிம்மதி நிறைந்த முகபாவனை காட்டினார்.

“மிகுதி அறிமுகங்களை, விவாதங்களை நம் அடுத்த வகுப்பில் வைத்துக் கொள்வோம். இப்போது எழுப்பிய கேள்வியைப் பற்றி தொடர்வதாக இருந்தாலும் நாமே தொடர்வோம். மற்ற விரிவுரையாளர்களிடம் இது பற்றி பேசி, நிர்வாகத்தின் செவிகளுக்கு இது எட்டினால், நமக்குதான் தேவையற்ற சிக்கல். இதை மனதில் வைத்து, நம் அடுத்த வகுப்பு வரை பொறுமையாக இருங்கள். நன்றி” என்று கூறி விடைபெற்றார் இளவழகன்.

அன்றைய மற்ற வகுப்புகளும் பெரும்பாலும் அறிமுகம், வெகு இயல்பான கேலிப் பேச்சுக்கள் எனதான் சென்றது. மறு வகுப்பின் பாடவேளை துவங்க இருக்கையில் பார்த்த பொழுது, அவனின் தந்தையும், தாயும், அவர்கள் வகுப்புக்கு நேர் எதிரே இருந்த ஒரு மரநிழலில் மற்ற மாணவர்களின் சில பெற்றோர்களுடன் பேசியபடி அமர்ந்திருந்தவர்கள், இப்போது ஒரு பெண்மணியிடம் மட்டுமாகப் பேசியிருக்கக் கண்டு, அவனுக்கு சற்று வியப்பாக இருந்தது. அதற்கான காரணம், இரண்டாவது பாடவேளைக்குப் பிறகு விடப்பட்ட இடைவேளையின் போதுதான் தெரிந்தது.

அவன், தன் பெற்றோரை நாடிச் செல்ல, அதே போல அந்த சுந்தருக்கு ஆதரவாகப் பேசிய புதியவனும், தன் பெற்றோரை நாடி வர, புதியவனைக் காட்டி “அப்பா தம்பி, இந்த தம்பியும் உங்க வகுப்புதான் போல. ஒருத்தரை ஒருத்தர் கவனிச்சுக்கங்க தம்பி. ஒற்றுமையா இருந்துக்கிடணும் என்னய்யா நான் சொல்வது” என்றார் அவனின் அப்பா.

அவனும், அந்த மாணவனும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டு, கைகுலுக்கிக் கொண்டார்கள்.

இவன் தன் பெயரைச் சொல்ல, அவனும் தன் பெயர் சொல்லி அறிமுகம் செய்து கொண்டனர். அவன் செவியருகினில் குனிந்து, “கண்டு கொள்ளாதீர்கள். அப்பா நிறைய அறிவுரைகள் எப்போதும் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்” என்று குரலைத் தழைத்துக் கூற, புதியவன் முகம் புன்னகை பூசிக் கொண்டது.

ம்கூம். இது வேலைக்காகாது என்று நினைத்தானோ என்னவோ, “அப்பா நாங்க பார்த்துக்கறோம்ப்பா. நீங்க கிளம்புவதாக இருந்தால், கிளம்புங்கப்பா. அம்மாவையும் அழைத்து வந்திருக்கீங்க இல்லையா?” என்றான். அவனின் அம்மா, எப்போதுமே சற்று நோய்வாய்ப் பட்டவர். அதனாலேயே பெரும்பாலும் வெளியில் அதிகம் வந்து கொள்வதில்லை.

“சரிய்யா, நாங்க சதுரகிரியிடம் சொல்லிவிட்டுக் கிளம்புகிறோம். இங்கே எதுவும் சிக்கல் செய்துகொள்ளாமல் இருக்கணும். நல்லாப் படிக்கணும். இன்னும் இரண்டு, மூன்று வாரங்களுக்குப் பரீட்சை எதுவும் இருக்காது என்று சொன்னாங்க. ஊருக்கு வெள்ளியன்று கல்லூரி முடிந்தவுடன் கிளம்பி விடணும். அக்காவின் கடிதம் நாளை வந்து விடும். பிள்ளைக்கு அடுத்த வாரமாவது வீடு வரக் கொடுத்து வைத்திருக்கிறதோ என்னவோ? நான் ஊர் போய் சேர்ந்து, அக்காவின் கடிதம் வரப் பார்த்து விட்டு, கடிதம் போடுகிறேன். ஊருக்கு வர முடியாத நிலை என்றால் சனியன்று உன் கடிதம் அப்பா எதிர்பார்ப்பேன். நினைவில் இருக்க வேண்டும். சரியா?” என்று தன் மகனிடம் கூறிவிட்டு, புதியவனின் அன்னையின் பக்கமாகத் திரும்பி, ”நீங்களும் எங்களுடன் வருகிறீர்களா அம்மா? அதுதான் அவர், உடல்நலமில்லை என சற்று ஓய்வெடுத்துக் கொண்டு, பிள்ளைக்கு இங்கு இருந்து முடிந்தால் எல்லாவற்றையும் பார்த்துக் கொடுத்து விட்டு, பிறகு கிளம்பி வருவதாகவும், நீங்கள் பணிக்கு செல்ல வேண்டுமென்பதால், முன்பாகக் கிளம்பிச் செல்லுங்கள் என்றும் சொல்லிச் சென்று விட்டாரே” என்றார் அவனின் தந்தை.

அவனுடைய தந்தையேதான் பேசினாரே தவிர, அவனுடைய அன்னை வாய் பேசாது, புன்னகைத்த முகமாகவே இருந்தார். அவனுக்குத் தெரியும். தன் கணவர் எதையும் சரியாக செய்வார் என்ற நம்பிக்கை பூரணமாக இருப்பதைத்தான் அப்போது அவனது அன்னை உணர்த்திக் கொண்டிருந்தார். அன்னை, தன் மகனின் தோள் தொட்டுத் தடவிக் கொடுத்தது தவிர்த்து வேறு எதுவும் செய்யவில்லை.

புதியவனுக்கோ, அந்தக் குடும்பத்தின் பிணைப்பு கண்டு வியப்பாக இருந்தது. அன்று திங்கள் கிழமை. வெள்ளியன்று மகனை ஊருக்கு வரச் சொல்கிறார். ஊர் போய் சேர்ந்த உடன் கடிதம் போடுகிறேன் என்கிறார். அக்காவின் கடிதம் நாளை வருமென்கிறார். வெள்ளியன்று ஊருக்கு வரவில்லையென்றால், சனியன்று மகனின் கடிதம் வர வேண்டுமென்கிறாரே.

சற்று பொறாமையாகவும் கூட இருந்தது புதியவனுக்கு. எத்தனை நெருக்கமான மனங்கள். அவன் அங்கு பயின்ற வரை, அந்தக் குடும்பப் பிணைப்பு அப்படியே இருக்கத்தான் கண்டான் அவன். அவர் சொன்னவையெல்லாம் தவறாது நடந்து வந்தது. புதன், வியாழனில், அந்தத் தந்தையிடமிருந்து தவறாமல் ஒரு கடிதம் வந்து விடும். அதில் தவறாமல், புதியவனைப் பற்றி நலம் விசாரித்து எழுதுவார் அந்த அன்பான தந்தை. இவன் அதை வழக்கமாக, மற்ற பகுதிகள் தெரியாத வண்ணம், முன்னும், பின்னும் கைகளை வைத்து மறைத்து, கடிதத்தை மடித்து வைத்துக் கொண்டு காட்டுவான்.

“ஏனடா, இப்படி சிரமப்பட்டுக் கொண்டு காட்டுகிறாய்? அந்த ஒரு சில விநாடிகளில் இந்தக் கடிதத்தில் வேறு என்ன கண்டுவிடுவேன் என்று அத்தனை தூரம் மறைக்கிறாய்? நானென்ன, உன் தந்தையையா களவாண்டு விடப் போகிறேன்?” என்று புதியவன் அவ்வப்போது கேட்பான். அந்தத் தந்தையின் பொறுப்பும், அன்பும், கனிவும் அத்தனைப் பிடித்துப் போனதோ புதியவனுக்கு?

“போடா, போடா. மற்றதெல்லாம் எங்கள் குடும்ப விவரங்கள். அவையெல்லாம் உனக்கு எதற்கு?” என்று நொடிப்பான் இவன். வெள்ளி அல்லது சனிக் கிழமைகளில், அவன் ஊருக்குக் கிளம்பிச் சென்று விடுவான். வெள்ளியன்று இடை சிறுத்திருப்பவன், திங்களன்று இடை பெறுத்து வருவதாகத் தோன்றும்.

“எப்படியடா இது? எங்களுக்கும் தான் சொல்லேன், நாங்களும் முயன்று பார்க்கிறோம்” என புதியவனும் மற்றவர்களுமாக இணைந்து அவனைக் கேலி செய்வதும் வழமைதான்.

அந்தக் கடித இரகசியம் கூட என்னவென்று ஒருநாள் புதியவனுக்குத் தெரிய வந்தது. அது தெரிய வந்த விதம், தெரிந்த செய்தி, அதன் பிறகு அவனை அத்தனை கலாட்டா செய்ய வைத்தது. அதை எத்தனையோ வருடங்கள் கழிந்தும் அவ்வப்போது நினைவு வரவும், நினைவு வந்தபோதெல்லாம், அந்த கடித இரகசியம், புதியவனின் இதழ்களை மலரச் செய்திருக்கிறது.

அப்படிப்பட்டப் பெரும் இரகசியம் தான் அது. ஹ..ஹா..ஹா..

இவையெல்லாம், அவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்த பிறகு நடந்தவை. கல்லூரியின் முதல் நாளுக்கு மீண்டும் சென்றால்.., இதோ இருவரிடையே இன்னும் அந்த அந்நியத் தன்மை விட்டுப் போகவில்லை. வாங்க, போங்க என்று நொடிக்கொரு ‘ங்க’வைப் போட்டு மரியாதையாக அழைத்துக் கொண்டுமாய் இருந்தார்கள்.

இதனிடையில், அவர் சொல்வது சரிதான் எனப் பட்டது போல, புதியவனிடம் ஒரு தலையசைப்புடன் விடைபெற்றார், அவனின் அன்னை. புதியவனும் அமைதியாகவே விடை கொடுத்தான் அவர்களுக்கு.

அவர்கள் விடைபெற்று நடக்கவும், அவன் புதியவனிடம், “வாருங்கள், நாம் வகுப்புக்குப் போவோம். நான் கல்லூரி விடுதிதான். நீங்கள்?” என்று கேட்டபடியே வகுப்புக்குச் செல்லத் திரும்பினான்.

“நானும் தான். ஆனால், உங்கள் அப்பா சொன்னாரில்லையா, நாங்கள் தங்கியிருக்கும் அறை, நம் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் ஒருவருடையது. என்னுடைய பெட்டி, படுக்கைகள் அங்குதான் இருக்கிறது. அவருடைய அறை இங்கிருந்து ஒரு பத்து நிமிட நடை தூரம் தான். அவர்தான், அதாவது அந்த அண்ணாதான் விடுதியில் கொண்டு வந்து விடுவதாக சொல்லி இருக்கிறார். எப்போது வருவோமோ தெரியாது.” என்றான்.

“ஓ. வரும்போது வாங்க. நாம் விடுதியில் கேட்டு ஒரே அறையெடுத்துக் கொள்வோமா?” எனக் கேட்ட அவனுக்கோ, “நிச்சயமாக” என்று கூறி புன்னகைத்த புதியவனுக்கோ, அந்தக் கல்லூரி விடுதியின் நிலவரம் அப்போது தெரியாது என்பதாலேயே அந்தப் பேச்சு அப்போதைக்கு சாத்தியமாயிற்று.

கல்லூரியில் முதல் நாள், முத்துலிங்கத்தின் அறையில்தான் கழித்தான் புதியவன். முத்துலிங்கம் அங்கு பயில்வதாலும், அதிலும் மிக நல்ல மதிப்பெண்களைப் பெறுவதாலும் தான், இந்தக் கல்லூரியில் சேர்க்கப்பட்டிருந்தான். மறுநாள் கல்லூரி முடிந்த பிறகு புதியவனை விடுதியில் கொண்டு விடுவதாக சொல்லியிருந்தான் முத்துலிங்கம். முத்துலிங்கத்தோடுதான் அன்று மதிய உணவு. மதிய உணவு முடித்துக் கொண்ட பிறகு, அதுவரை உடனிருந்த அவன் தந்தை சுந்தரமும் ஊருக்குக் கிளம்பி விட்டார். மீண்டும் முத்துலிங்கத்தின் அறைக்கு வந்தபோது, அங்கேதான் குமரனை சந்திக்க நேர்ந்தது, இவனுக்கு. குமரனும் விடுதியில் தங்கியிருப்பவர் தான். வயது இருபத்து ஆறு என்றார் அவர். பார்த்தால், முப்பது வயது மதிக்கத் தக்கத் தோற்றம். அந்த உயரமும், முரட்டுத் தனமான உடலும். மாநிறத்தில் பார்க்க நன்றாகத்தான் இருந்தார்.

குமரனை சந்தித்தது ஒரு வித்தியாசமான அனுபவம்தான் இவனுக்கு. இத்தனை வயது பெரியவர், கல்லூரியில் பயில்வதில் வியப்பு தோன்றியது.

“என்ன தம்பி, ஆச்சர்யமாக இருக்கிறதா? பெண்களை நம்பினால் இப்படித்தான். அது அதை உரிய வயதில் செய்ய முடியாது போகும், படிக்கிற வயதில் கல்யாணம் செய்தேன். அவள்தான் என்னை கல்யாணம் செய்தால்தான் ஆச்சு, இல்லையென்றால் செத்து விடுவேன் என்றாள். சரிதான், பிடித்தவளை இன்று என்றால் என்ன, வேறு ஒரு நாள்தான் என்றாலென்ன என்று கோவிலில் வைத்து, தாலி கட்டினேன். ஊரில் இருக்க வேண்டாம் என்றாள் அவள். சரிதான் என வடக்கே சுற்றுலா போனோம். அதற்குப் பெயர்தான் தேனிலவு என்று சொல்வாங்க, இல்லையா? எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.

வீடு திரும்பியவுடன், அவளுடைய வீட்டினருக்கு வியர்த்து விட்டது. என்னிடம் படிப்பு இல்லையென்று அவளுடைய வீட்டில் ஓதி அவளை அழைத்தார்கள். சண்டை பெரிதானது. கல்யாணம் செய்து பத்து நாட்களில், இவள், தன் தந்தையின் கைகளில் போய் மூக்கை சிந்திக் கொண்டு நிற்கிறாள். அவள் அண்ணன், கொடுவாள் எடுத்து வெட்ட வருகிறான். தடுத்துத் திருப்பினால், அவன் தோளில் வெட்டு விழுந்து விட்டது. கொலைச் சதி என்று வழக்கில் இழுத்து விட்டு, சிறையனுப்பி, சில வருடங்களை அங்கு கழித்து, வழக்காடி, அது தற்காப்புக்காக செய்ததுதான் என நிரூபித்து வெளி வந்து பார்த்தால், எவளால் இத்தனையுமோ அவள் இடுப்பில் ஒன்று, வயிற்றில் இன்னொன்று என்று நிற்கிறாள்.

ம்ம்.. எது என்னிடம் இல்லையென்று அவள் போனாளோ, அது என்னிடம் இல்லையென்று இருக்கக் கூடாது என்றுதான் மீண்டும் படிக்க வந்தேன். அதனாலே, இந்தப் பெண்களை மட்டும் நம்பாதே தம்பி” என்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தார்.

புதியவன், முத்துலிங்கத்தைத் திரும்பிப் பார்த்தான்.  முத்துலிங்கத்திடம் ஒரு அசட்டுப் புன்னகை மட்டுமே இருந்தது. குமரன் கிளம்பியபோது, விடுதிக்குத் தன்னுடன் வருகிறாயா என்று கேட்டார். ஏனோ சென்று விடலாமே எனத் தோன்றவே, முத்துலிங்கத்திடம் செல்லவா என ஒரு பார்வை பார்த்து, அங்கிருந்து சம்மதமாய்த் தலையசைப்பு வரவும், வருகிறேன் என்று முத்துலிங்கத்திடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டான் இவன்.

இந்தக் கல்லூரி நிர்வாகம் பரவாயில்லையே. சிறை சென்று மீண்டவருக்கும் கூட கல்வியைத் தொடர ஒரு வாய்ப்பளித்திருக்கிறதே என சிந்தித்துக் கொண்டேதான், குமரனுடன் பேருந்தில் பயணித்து, விடுதியை அடைந்தான் புதியவன்.

உண்மைதானே. என்னதான் அவர் அந்தக் குற்றத்தை செய்யாத போதும், அது பிறருக்கு அவ்வளவு உறுதியாகத் தெரியாதுதானே. அவ்வாறிருந்தும், கல்லூரியில் பிற மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் ஒரு வாய்ப்பினைத் தர மனம் வர வேண்டுமென்றால், அந்தக் கல்லூரி நிர்வாகம் மெச்சத் தகுந்ததுதானே.

விடுதிக்குள் நுழைந்த உடன், முன்பிருந்த வரவேற்பு மேசையில் அமர்ந்திருந்தவர், விடுதிக் காப்பாளர் இன்னும் வரவில்லை என்பதால், புதிய மாணவர்களுக்கு அவர் வந்த பின்புதான் உள்ளே அனுமதி என்று கூற, என்ன செய்வது என இவன் யோசித்த போது, குமரன் தான், புதியவனுடைய பெட்டி, படுக்கைகளை தன்னிடம் கொடுத்து விட்டு, அங்கேயே காத்திருக்கும்படி கூறி, பெட்டி, படுக்கைகளை வாங்கிக் கொண்டு சென்றார்.

அந்த வரவேற்பு மேசையே வித்தியாசமாக இருந்தது. இது ஒரு விடுதியின் வரவேற்பு அறை போலவே இல்லையே. இந்த மேசை, ஏதோ கல்லாப் பெட்டி போலவே இருக்கிறதே என்று தோன்றியிருக்க, அதைப் பார்த்துக் கொண்டிருந்தான் புதியவன்.

சென்ற சில நிமிடங்களில் திரும்பி வந்த அவர், தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு, “இரவு உணவுக்கு முன்பு இங்கு நமக்கு வேலை இல்லை. வருகிறாயா, கோவிலுக்கு சென்று வருவோம். கோவிலுக்கு செல்வாய்தானே?” என்று கேட்க, சம்மதமாய்த் தலையசைத்தான் புதியவன்.

அவர் அப்படிக் கேட்டதில் புதியவனுக்கு வியப்பு கூடியது. பொதுவாகவே அவரைப் போன்ற கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வந்தவர்கள், இறைவனை நம்புவது அரிது. நம்பினாலும் கூட, கோவிலுக்கு செல்லும் வழக்கம் கொண்டிருப்பது மிகவும் அரிது.

மீண்டும் அவனது வியப்பினை அவனது முகமே காட்டிக் கொடுக்க, அப்போதுதான் விடுதிக்கு வெளியில் வந்திருந்த நிலையில், குமரன் சத்தமாக சிரித்து வைக்க, புதியவன் தான் சற்று சங்கடப்பட்டான்.

அவனருகே வந்து அவனது தோளில் கை போட்டுக் கொண்டவர், “தம்பி, நீ ரொம்ப நல்லப் பையனடா. உன்னை எனக்கு அத்தனைக்கு அத்தனை பிடித்திருக்கு. நீ பேச, கேட்க வேண்டியதை எல்லாம் உன் கண்கள் உன்னை முந்திக் கொண்டு கேட்டு விடுகிறது. எதுவும் கேளாமலே எல்லாவற்றையும் கேட்டு விடுகிறாய். புரிந்தவர்கள், விருப்பம் இருந்தால் பதில் தரலாம். விருப்பம் இல்லாத நிலையில் அமைதியாக இருந்து விடலாம். புரியாதவர்களிடம், உனக்குப் பிரச்சனையே இருக்காது” என்று கூற,

புதியவனோ, குமரனை, ’யார், நான்.. பேசத் தெரியாதவன்? அப்படிச் சொன்னால் எங்க ஊரில் பிறந்த குழந்தை கூட அடிபட்டாலும் பரவாயில்லை என்று விழுந்து விழுந்து சிரிக்கும். ஏதோ போனால் போகிறது. புதிதாய்ப் பார்த்தவராச்சே. வயதில் வேறு பெரியவராக இருக்கீங்களே என்றுதான் இந்த அமைதி, தெரியுமா’ என்று அதையும் சொல்லாமலே ஒரு நக்கலோடு பார்த்து வைக்க, குமரன் அதற்கும் ஒரு வெடிச் சிரிப்பை எடுத்து விட, ’ம்கூம். இது சிரமம்தான் போலயே’ என்று எண்ணிப் பார்க்க, புதியவன் தோளில் ஒருமுறை அத்தனைக் கடினமான ஒரு அழுத்தம் கொடுத்து விட்டுக் கைகளை எடுத்துக் கொண்ட குமரன்,

“நீ பலே ஆளாகத் தெரிகிறாய் தம்பி. உன்னுடன் பழகிப் பார்க்கணும் என்று தோன்றுகிறது. பார்ப்போம். நான் பெயருக்குதான் விடுதியில் இருப்பதாக இருக்கும். சில நாட்கள், உங்க முத்துலிங்கத்தின் அறையில், வேறு சில நாட்கள், வேறு சிலரின் அறைகளில் இருப்பேன்.” என்று கூறிக் கொண்டு வர,

‘அது எப்படி விடுதியில் அப்படி விடுவார்கள்’ என்று புதியவன் யோசனைக்குள் புக, மீண்டும் அவன் முகபாவனையிலேயே புதியவனின் எண்ணத்தை உணர்ந்து,

“அதெல்லாம் அப்படித்தான். சிறை சென்று திரும்பியவன் என்றொரு முத்திரை இருக்கிறதில்லையா எனக்கு. அதனாலோ என்னவோ, என்னைக் கேள்வி கேட்பவர் எவரும் இல்லை. என் போக்கில் விட்டு விடுவாங்க.” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கோவில் வந்து விட, கோவிலினுள் நுழைந்து கோபுரத்தின் உச்சியைப் பார்த்தான் இவன்.

“சரி, நம்மைப் பற்றி நாம் பிறகு பேசிக் கொள்வோம். இப்போது நம்மைப் பற்றி உள்ளிருப்பவன் கொஞ்சம் சிந்திக்க விடுவோம், வா” என்று கூறியவாறே கோவிலுக்குள் சென்றான் குமரன். குமரனுடனான பழக்கம், புதியவனுக்கு ஏதேனும் சிக்கலைக் கொடுக்குமோ என்னவோ, புதியவனுக்கு, குமரனை, அவரின் பின்புலமறிந்தும் மிகவும் பிடித்திருந்தது. அவருக்காக எதுவும் எழுதித் தருவது, அவர் கேட்கும் சிறு சிறு உதவிகளைச் செய்வதும் கூட அவனுக்குப் பிடித்தமாய்த்தான் இருந்தது. இவரை விட்டும் இவரது மனைவி, தப்பு, தப்பு, முன்னாள் மனைவி, விலகிப் போனாரே என்றெண்ணிக் கொண்டான் புதியவன்.

அந்தக் கல்லூரியின் மதிய உணவு இடைவேளை அது. அந்தக் கல்லூரி இரண்டு வேளைகளாகப் பிரிந்து இயங்கியதால், காலை பாடவேளை முடிந்து மாணவர், மாணவிகள் வீடு திரும்பக் கிளம்பிச் சென்று கொண்டிருந்த நேரம். அது போலவே மதிய நேரத்திற்கான வகுப்புகளுக்கான மாணவ மணிகள் கல்லூரியின் நுழைவு வாயிலினுள் நுழைந்து கொண்டிருந்தனர்.

அப்படிப் பரபரப்பான சூழ்நிலையிலும், அந்தக் கல்லூரியின் அலுவலகக் கட்டிடத்தின் முன்பு, கல்லூரியினுள் நுழையும் இடத்தில் சிறு கூட்டம் நின்று யாரோ பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தது. அப்பொழுது அங்கே முதல்வர் என்று பெயரிடப்பட்ட அறையில் இருந்து பேசி முடித்து விட்டு, ஒரு நிமிர்வோடு வெளி வந்தாள் மிருதுளா. அவளுடன் அவளது தந்தையும் வந்தார்.

அவள் பேசியது, அங்கே பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்ததாகத் தெரிகிறது. ஆங்காங்கே நிற்பவர்கள், திக்பிரமை பிடித்து சிலை போல நின்றனர். அதை அலட்சியம் செய்தபடி, வேகமாக நடந்து சில படிகளைக் கடந்து சென்றாள் மிருதுளா.

அவளைப் பார்த்த உடன், அவளுடைய கல்லூரித் தோழியரும், அடுத்த வருட மாணவிகளில் அவளை அறிந்தவர்களும் அவளருகே நெருங்க, அவளது தந்தை, கல்லூரி வளாகத்தை விட்டு வெளிச் சென்று நின்றார்.

“டீ, மிருது” என்று அருகில் வந்த தன் தோழியரிடம், “எல்லாம் முடிந்து விட்டதடி. இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தபோது மக்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்பது எனக்கு இப்போது நன்றாகப் புரிகிறது. அந்த மாதிரிதான் இருக்கிறது எனக்கு. ஒரு வழியாக நான் இங்கிருந்து தப்பித்துக் கொண்டேன். எனக்கு உங்களைப் பார்க்கத்தான் பாவமாக இருக்கிறது. இருந்தாலும் யார்தான் என்ன செய்ய ? எப்போதும் ஒரு கவனத்துடன் இருங்கள். சென்று வருகிறேனடி. உங்களைப் பிரிவது சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால், நானும் இதே ஊரில்தானே இருக்கப் போகிறேன், குறைந்தபட்சம் இந்த ஒரு ஆண்டுக்காவது. வார விடுமுறைகளில் சந்திக்க முடிந்தால் சந்திப்போமடி. நான் வரவா?” என்று கூறிவிட்டு, அவர்களில் ஒருத்தியின் கரங்களை இலேசாக அழுத்திக் கொடுத்து விட்டு, நிற்காது செல்ல, சற்று தள்ளி நின்று, தன் மகள், தோழியரிடம் பேசி விட்டு வருவதற்காகக் காத்திருந்த அவளது தந்தையும் அவளுடன் இணைந்து கொண்டார். அடுத்த முப்பது விநாடிகளில் வேக வேகமாக அங்கிருந்து அவர்கள் சென்று மறைந்தனர்.

அவளது தோழியருக்குப் புரிந்தது. அத்தனை மிருதுவான ஒரு பெண்ணை, இப்படி கடினமானவளாக்கி விட்டிருந்தது அந்தக் கல்லூரி நிர்வாகம். கடந்த ஒரு வருடமாக அவள் பட்டவை மிக அதிகம். அவளைப் போல மேலும் சிலருக்கும் இது போல நடந்ததுதான். அவர்களெல்லாம், அந்தக் கல்லூரி நிர்வாகத்திடம் மட்டுமல்ல, மற்றவர்களிடமும் தங்கள் இயல்பைத் தொலைத்து நின்றார்கள். மிருதுளாதான், தன் இயல்பினை சிறிதும் மாற்றிக் கொள்ளவில்லை. நிர்வாகத்தை எதிர்த்து எதுவும் செய்திடாத போதும், தான் எந்தப் பிழையும் புரியவில்லை, எந்த விதத்திலும் என்னில் மாற்றம் அவசியமும் இல்லை என்ற திடம் அவளிடம் எப்பொழுதுமே இருந்தது. அவள், தன் நிமிர்வினை எதற்காகவும் விட்டுக் கொடுக்கவில்லை.

மிருதுளா சென்று சில நிமிடங்கள் மட்டுமல்ல, அடுத்து வந்த சில நாட்களும் கல்லூரி முழுவதுமே மிருதுளாவைப் பற்றிதான் பேசியது. கல்லூரியின் இறுதியாண்டு மாணவியான அவள் மீது சில முறைகள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, இப்போது அவளாகவே கல்லூரியை விட்டு விலகி, வேறு கல்லூரி ஒன்றில் சேர்ந்திருக்கிறாள் என்றும் முந்தைய கல்வி ஆண்டில் நிகழ்ந்த சில சம்பவங்கள் என்று, கண், காது, மூக்கு வைத்து பேசப்பட்டது.

பல விதமான செய்திகள். ஒரே நிகழ்வுக்கு வெவ்வேறு விதமான வர்ணங்கள். எது உண்மை, எது பொய் என ஏகத்திற்கும் குழப்பம். ஆனால் ஒன்று. அவளை மட்டும் தான் கல்லூரி நிர்வாகம் தண்டிக்க முனைந்திருந்ததே தவிர, அவளுடன் சேர்த்து வேறு எவரும் தண்டிக்கப் படவில்லை. அது ஒரு இருபாலர் கல்லூரியாக இருந்த நிலையில், பல விதமான எண்ணங்களில் ஆழ்த்தியது, மிருதுளா பற்றிய செய்திகள்.

முதலாமாண்டு மாணவிகள் இருவர் கூட மிருதுளாவைப் பற்றிதான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“என்னடி மது, அந்த அக்கா அப்படிப் பேசிவிட்டுப் போகிறாங்க? ஒரே குழப்பமாக இருக்கிறதில்லையா?”

”ஆமாமடி. ஒன்றுமே புரியவில்லை. ஆனால், தப்பு எதுவும் செய்யாமலா நடவடிக்கை எடுப்பார்கள்?”

“ஏய். அவர்கள் முகத்தைப் பார்த்தாயா இல்லையா? அவர்கள் பேசியதைக் கேட்டாய்தானே? அவர்களா தப்பு செய்திருப்பாங்க? எனக்கு அப்படித் தோணலைப்பா”

“உண்மைதான் செல்வி. அவர்களைப் பார்த்தால் அப்படித் தோன்றவே இல்லைதான். ஆனாலும், நமக்கு இங்கு எல்லாமே புதியதுதானே? அதற்குள்ளாக அவர்களைப் பற்றியோ, இல்லை, அவர்கள் பேச்சை வைத்து எந்த முடிவுக்குமோ நம்மால் எப்படிப்பா வரமுடியும்?”

“இல்லைடி மது. அந்த அக்காவை, இவர்கள் ஏதோ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களென்று நினைக்கிறேன். அவர்களும், தனக்குத் தவறென்று தோன்றாததை தான் ஏன் நிறுத்த வேண்டுமென்று இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அந்த அக்கா வகுப்பில் அவர்களுடைய தோழிகளாக இருந்தவர்களிடம் பழகி என்ன நடந்ததென்று தெரிந்து கொள்ளலாம் மது. ஆனால், எனக்கு நிச்சயம், அந்த அக்காவின் மேல் எந்தத் தப்பும் இருக்காது என்று. அவர்கள் இங்கேயே தொடர்ந்து படித்திருந்தால், அவர்களிடம் பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். ப்ச்ச். அதுதாண்டி வருத்தமாக இருக்கு. ஆனால், இத்தனைப் பிரச்சனையிலும் அவங்க கொஞ்சம் கூடக் கலங்கவில்லை பார்த்தாயா? அது போலதாண்டி நாமும் இருக்கணும்” என அழுத்தம் திருத்தமாகக் கூறினாள் செல்வி.

அவர்களிருவரும், அந்தக் கல்லூரியில் இணைந்து அன்றுதான் இரண்டாவது நாள். பள்ளி விட்டு கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் புது மலர்கள் அவர்கள். முந்தைய நாள்தான் அவர்கள் இருவருக்குள்ளுமாகவே அறிமுகம். கல்லூரி விடுதியிலும் அவர்கள் ஒரே அறையை சேர்ந்தவர்கள். அதனால் சட்டெனப் பழகி விட்டபொழுதிலும், மறுநாளே இப்படி ஒரு நிகழ்வினை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

மிருதுளா, அந்தக் கல்லூரி அலுவலகத்தில், முதல்வர் அறையில் அவரோடு தர்க்கித்தபோது, அறை கதவும், சாளரங்களும் திறந்திருக்க, அவளுடைய தோழியர், அங்கு பேசப்படுவதைக் கேட்டிருக்க, வெகு குறுகிய இடமானபடியினால், அந்த இடம் விட்டு நகர இயலாமல் தான் முதலில் அங்கு அவர்கள் நின்றார்கள். ஆனால், பேசப்பட்ட செய்தியும், பேசப்பட்ட விதமும் அங்கேயே அவர்களை நிற்கச் செய்தது என்பதோடு, மிருதுளா, அலுவலகம் விட்டு வெளிவந்து, தன் தோழியரை எச்சரித்துப் போனதையும் நின்று கவனித்திருந்தனர், செல்வியும், மதுவும்.

அந்தக் கல்லூரிக் காலத்தின் பிற்பகுதியில், தனக்கு நேரப் போகும் சோதனைகளைப் பற்றிய நிமித்தம் அவளுக்கு அப்பொழுதே கூறுவார் யாருமில்லையே. அப்படி அவளுக்கு யாரேனும் கூறியிருந்தால், மிருதுளாவின் எச்சரிக்கையைப் பற்றி சிந்தித்து, அதற்குத் தக்க நடந்திருப்பாளோ? மிருதுளாவைப் பற்றி இத்தனை பெருமையாக நினைத்திருப்பாளா? அல்லது அவளைப் போல நிமிர்வாக அனைத்தையும் அவள் கைகொள்ள வேண்டுமென்று எண்ணிடுவாளா?

மிருதுளாவையே மீண்டும் சந்தித்து நடந்தவை அறிந்தபோது, செல்வி அவளைப் புரிந்து கொண்டாள். அது அவளுக்கு உதவியதா, மேலும் குழப்பியதா என்பது விடை தெரியா பெரும் கேள்வி. காலம், பல சோதனைகளை வைத்துக் காத்திருந்தது. அதிலும், அந்த சோதனையை வலுவாக மாற்றுபவளே இதோ அந்த மதுதான் எனத் தெரிந்திருந்தால், அவளோடுதான் பழகியிருப்பாளா? காலம் கேட்க இருக்கும் கேள்விகளுக்கு செல்வி, என்ன பதில் தர இருக்கிறாள்?

ஒரு பக்கம், குமரனைச் சந்தித்த புதியவன், அந்தக் கல்லூரியைப் பற்றி பெருமிதமாக நினைக்க, இங்கு செல்வியோ, மிருதுளாவைக் கொண்டு, குழம்பி நிற்கிறாள். காலம், என்ன சொல்லும்? எவர் கருத்து எப்படி மாறும்? சூழல் இவர்களை எங்கு கொண்டு நிறுத்தும்?

அவன், ஒரு விதமான இறுக்கமான குடும்ப சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவனென்றால், இவளோ முற்றிலும் கலகலப்பான சூழலில் வளர்ந்தவள்.

அந்தக் கோவில் நகரத்தில், அடுத்த இரு வருடங்களின் நிகழ்வுகள் என்ன விதமாக இருக்கப் போகிறது?

Advertisement