Advertisement

அரசிளம்பரிதி              மனம் பொய்த்த பொழுதுகள்

                   வருடம் – 1997

                              

                   அத்தியாயம் -1

                  மறக்க முடியுமா?

’அம்மா ஏன் இப்படி செய்தாய்?’

கடைசியாக அம்மா பேசிய வார்த்தைகள் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஏன்? ஏன்?? ஏன்??? விடை கிடைக்காத வரையில், வாழ்நாள் முழுவதற்கும் இந்த கேள்வி மனதில் ஒலித்துக் கொண்டுதானிருக்கும் என்று தோன்றியது. மெல்லத் தோன்றிய எண்ணம் தான், கடந்த சில நாட்களில் மனம் முழுவதும் வியாபித்துக் கொண்டு விட்டது. அம்மா, வெறும் வார்த்தைகளில் மட்டும் முடித்துக் கொண்டு விடவில்லையே. அம்மாவின் தொடர்ந்த செய்கைகள், அதன் விளைவுகள் என மனம் சென்ற திசை, எல்லாம் சேர்ந்து இதில் இருந்து விடிவு கிடைக்குமா என்ற சிந்தனையை இந்த பிரச்சனை துவங்கிய நாளில் இருந்தே துவக்கி விட்ட மனது இப்போதும் கேள்வி கேட்டது.

அன்னை மட்டுமே பிரச்சனையும் இல்லையே. இன்னும் வேறு எத்தனையோ இருக்கிறதே.

இங்கு வந்து சேர வேண்டுமென்பது குணாவின் விருப்பம் இல்லையே. அவர்களாகத்தான் கொண்டு வந்து சேர்த்தார்கள். வீட்டுக்கு அடிக்கடி வந்துபோக முடியாத தொலைவில் இருப்பதுதான் நல்லது என்றுதானே அவனிடம் தெரிவிக்கப்பட்டதும். ஆனால், யாருக்கு நல்லது? வினாக்களுக்குப் பஞ்சமேயில்லை.

அதிலும் முதலாவதாக. ஆம். அங்கு சேர்ந்த என்பதை விட, சேர்க்கப்பட்ட முதல் முதல் நபர் குணாதான்.

இப்போது, மெனக்கெட்டு திருட்டுத் தனமாக வெளியில் சென்று சென்னைக்கு அழைத்துக் கூடப் பேசி விட்டானே. அங்கு பேசுவதால், எதுவும் சாதகமாக மாறி விடும் என்ற எண்ணத்தில் அவன் அழைக்கவில்லை தான். ஆனால், புரிதல்? ஆறுதலான வார்த்தைகள், இப்படியான சூழலிலும் கூட உன்னுடன் நானிருக்கிறேன் என்றொரு உறுதி!! அதிலும் கூட பேசுவதற்கு முன்பே கேள்வியிருக்கத்தான் செய்தது. ஆனால், கிடைக்க வேண்டிய மன உறுதிக்கோ, அல்லது எந்த விதமான ஆதரவு நிலைக்கோ உறுதி கிடைக்காத போதும், அவனது சந்தேகமான எண்ணம்தான் சந்தேகத்திற்கிடமின்றி உறுதியானது. “உன்னுடைய திருவிளையாடல்கள், அதிலும் பழையவையே ஆயிரம் இருக்கிறது. அப்போதில் இருந்து இப்போது வரையிலானது எல்லாம் இங்கு நான் மட்டுமில்லை, எல்லோருக்குமே தெரியும். அதிலும் இப்போது நீ செய்திருப்பது, நீ மட்டும் நேரில் இருந்திருந்தால்.. உனக்கு என்னிடம் பேச வேறு தோன்றுகிறதோ? எதற்கு வீண் பேச்சு? உன்னிடம் பேசி நேரத்தை வீணடிக்க முடியாது. எனக்கு வேலை இருக்கிறது. இனி எனக்கு அழைக்காதே.” என கோபமும், எரிச்சலும், வெறுப்பும், முடிவுமாய், உத்தரவிட்டு தொலைபேசி வைக்கப்பட்டு விட்டது.

“என்ன சொன்னாங்க? என்ன சொன்னாங்க” என்று பரபரத்த மணியிடம் என்னவென்று கூறுவான்?

மணிக்கும், பதில் தானாகவே புரிந்துதான் இருந்தது. இன்னார் பேசுகிறேன் என்றது தவிர குணா வேறு எதுவும் பேசியிருக்கவில்லையே. அதற்கு மேலே பேசாமலே அவன் முகம் மாறிய விதம், அருகிலிருந்து மணியும் கவனித்துக் கொண்டுதானே இருந்தான். அதற்கு மேலே பேசுவதற்கே எதிர்ப்புறத்தில் இருந்தவர் வாய்ப்பளிக்கவில்லை என்பதை குணாவின் நிராசை நிறைந்த விழிகள் சொல்வதைப் புரியாது போவதற்கில்லையே.

அன்றைக்கு குணாவின் அம்மா இங்கு வந்திருந்தபோது, மணி குணாவுடன் இல்லை. அதனாலேயே குணாவின் அன்னையின் பேச்சினை நேரடியாகக் கேட்கவோ, குணாவுக்கு ஆதரவாக ஏதும் சொல்லவோ அவனால் முடியாது போனது. ஆனால், உடனிருந்தவர்கள் அவர் பேசியதை சொன்னார்கள். குணா, எதுவும் சொல்லவில்லை. சொல்லாமலே, அவன் நிலை எல்லோருக்கும் புரிந்துதான் போனது.

மணிக்கு அனைத்தும் ஆச்சர்யமாக இருந்தது. முந்தைய வருடம், வீடு சென்றிருந்த மணிக்கு எதேச்சையாக உடல்நலமற்று போன போது, அவனால் இங்கு உடனடியாகத் திரும்ப முடியவில்லை. திரும்புவதற்கும் மணியின் குடும்பத்தினர் விடவுமில்லை. மாதக் கணக்கில், தகவலற்ற விடுப்பாகிப் போய் விட, அதுவே இங்கு ஒரு கட்டத்தில் சிக்கலாகி விட, குணாதான், மணியை வீடு வந்து குடும்பத்தவர்களிடம் பேசி அழைத்து வந்தான். இதோ, இப்போது, குணாவின் குடும்பத்தினர், குணாவை நடத்தும் விதம், அதிலும் குணாவுக்கு வெறும் உடல்நலமின்மையல்லவே பிரச்சனை. எப்படி அவர்களால், இப்படி நடந்துகொள்ள முடிகிறது? வேறு எவரும் அவனுக்கு உதவ முடியாது என்பது அவர்களுக்குப் புரியாமல் போனது எப்படி? அல்லது புரிந்தும் இப்படித்தான் நாங்கள் இருக்க முடியும் என்றிருக்கிறார்களா? இப்படியும் ஒரு குடும்பம் தங்கள் வீட்டுப் பிள்ளையை நிராதரவாகக் கைவிடுமா?

அதிலும், குணாவுக்கு இந்த புதிய சிக்கல்கள் இல்லாத நிலையிலேயே ஏற்கனவே உள்ள பிரச்சனைகளே பெரிதல்லவா? அதுவும் எல்லோருமே அறிந்தவைதானே?? அப்படியான சூழ்நிலையில், இது நடந்திருக்கக் கூடியதா என ஏன் யாரும் சிந்திக்கவில்லை? சிந்திக்காமல் போனது கூடப் பரவாயில்லை. இத்தனை வன்மத்துடன் ஏன் நடந்து கொள்கிறார்கள்?

தன் வீட்டினருக்கும், குணாவின் குடும்பத்திற்குமான இந்த வேறுபாடு, மணிக்குத் தான் எத்தனை பாக்கியசாலி என்பதை உணர்த்தியது. இத்தனைக்கும், குணாவின் அம்மாவைக் கொண்டு, இனத்தின் அடிப்படையில், அவர்கள் தங்கள் இனத்தவர்கள்தான் என்று மணி அறிவான். அதைக் கொண்டு அவர்கள் பழக்கம் இல்லையென்ற போதும், இந்த குடும்ப அமைப்பிலான வேறுபாடு அவ்வப்போது, மனித விசித்திரங்களை எண்ணிப் பார்க்கச் செய்து விடுகிறது என எண்ணிக் கொண்டான் மணி.

மணிதான், குணாவை சென்னைக்கு அழைத்துப் பேசு என்று சொன்னது. மற்றவர்களும் கூட மணி எடுத்துக் கொடுத்த பிறகு, அதை ஆதரிக்கவே செய்தார்கள். குணா, அதை மறுத்துதான் சொன்னான். அதனால் எந்த உபயோகமும் இருக்கப் போவதில்லை என்றான். அதையும் எல்லோரும் சேர்ந்து இவனைத்தான் குற்றம் சாட்டிப் பேசி, அவனை இந்த தொலைபேசி அழைப்பினை செய்திட சம்மதிக்க வைத்தார்கள்.

“நீதான் உன் குடும்பத்து ஆட்களைத் தவறாக நினைக்கிறாய். உனக்கு ஆதரவாக இருக்க மாட்டாங்க என்று நீயாகக் கற்பனை செய்து கொண்டு, பிரச்சனைகளைப் பெரிதாக்கிக்கிக் கொள்கிறாய்” என்று எல்லோருமே அவனைத் திட்ட, மிகவும் கோபமும், முறைப்புமாய் பார்த்த போதும், கடைசியில், “என்ன, இந்த ஒரு அழைப்பினை செய்துட்டால் தெரிந்து விடும்தானே. என்னுடன் யார் வேண்டுமானாலும் வரலாம், எல்லோரும் கூட வரலாம். வந்து நீங்களாகவே தெரிந்துக்கோங்க” என்று சொல்லித்தான் மணியை அழைத்து வந்தான்.

இருவருக்கு மேலே அந்த நேரத்தில், அதுவும் குணாவுடன் வெளிச் செல்வது உசிதமில்லை என்றுதான் எல்லோரும் சேர்ந்து, குணாவும், மணியும் மட்டும் செல்வது என முடிவெடுத்தார்கள். அதிலும் மணிக்கு ஆயிரம் அறிவுரைகள். குணா கொஞ்சம் பேசியவுடன், தொலைபேசியை வாங்கிக் கொண்டு, மணியே இங்கு உள்ள நிலவரத்தை எடுத்துச் சொல்ல வேண்டும், குணாவுக்கு சாதகமாக எப்படியாவது பதில் வாங்கி விட வேண்டுமென்றெல்லாம்.

”ஹ ஹா ஹா” சத்தமிட்டு சிரித்தான் குணா.

அமைதியாக நடந்து கொண்டிருந்த போது திடுமெனக் கேட்ட நகைப்பொலி, அந்த இரவுப் பொழுதில், சுற்றிலும் ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில், சற்று ஓங்கிதான் ஒலித்தது. சட்டென நின்று, குணாவை மணி முறைத்துப் பார்த்தான். ‘இப்போ எதுக்கு இந்த பைத்தியம் சிரிக்குது?’ உள்ளே இவனுக்கு மறை கழன்று விட்டதோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

“எதற்கு இப்போது இப்படி பேய் மாதிரி சிரிக்கிற?”

“நான் தான் சொன்னேனே. நீங்களெல்லாம் கேட்டீங்களா? என்னவோ இன்றைக்கே பெரிய இவனுங்க மாதிரி, எல்லாப் பிரச்சனையும், அதுவும் இந்த ஒரு தொலைபேசி அழைப்பில் முடிந்து விடுவது போல என்னவெல்லாம்  சொன்னீங்க. எனக்கு என் குடும்பத்து ஆட்களைத் தெரியாதா? போங்கடா டேய்..” என சற்று சத்தமாகவே சொன்னான் குணா.

இந்த ஒரு தொலைபேசி பேசுவதற்காக, மாலை கவிழ்ந்து இருள் சூளும் வரை பொறுத்திருந்து, உடல் வலி பற்றிய சிந்தனையைத் தவிர்த்து, யாருக்கும் தெரியாமல் ஒளிந்து மறைந்து சென்று, அதற்கு தொலைபேச இட்ட சில்லறை கூட, வீண். ச்சே. மனம் சலித்தது. அத்தோடு மட்டுமில்லையே. திரும்பி வந்த போது, தூரத்தில் தெரிந்த உருவங்கள் கடந்து போகும் வரை மூச்சடக்கி, அரவமற்று சுற்றுச் சுவர் ஓரமாய் வளர்ந்திருந்த புதர் போன்ற செடியின் புறம் மறைந்து நின்று, அதன் பிறகு சுவரேறி குதித்து, அதற்கும் கூட மணியின் உதவி நாடி, அறைக்குள் வந்து சேரும் வரை அவனுக்கு மட்டுமா உடன் வந்த மணிக்கும் சரி, அறையில் மீதம் இருந்த மற்றவர்களுக்கும் சரி, எல்லோருக்கும் எத்தனை பதற்றம், எத்தனை அச்சம்.

மாட்டிக் கொண்டால், தன்னால் மற்றவர்களுக்கும் பெரும் சிக்கல் தானே? சொன்னால், இவர்கள் கேட்டால்தானே.

அதிலும் அன்றைய நிலையில், அத்தனை அப்பட்டமான தோல்வி அது. முழுமையாக பலனற்றுப் போய்விட்ட முயற்சி. இதனைத் தன்னால் என்றேனும் மறக்க முடியுமா? வாழ்வின் மறக்க முடியா நிகழ்வுகளின் எண்ணிக்கையில் இன்னுமொன்று கூடியிருக்கிறது. தொலைபேசியில் கேட்ட திருவிளையாடல்கள் என்ற வார்த்தை, எதை சொல்லியிருக்கக் கூடும் என்பதைப் புரிந்து, மனம் மீண்டும் சிரித்தது. அதில் எதை இவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்? என்னைப் பற்றி தவறாகப் புரிந்து கொள்வது மட்டும்தான் மற்றவர்கள் வழக்கம் என்றா? உடலின் வலியோடு போட்டியிட்டு வென்றது மனது. முதுகினைத் தடவிப் பார்த்து, லேசாகப் பிசகிக் கொண்டது போல தோன்றிய காலினையும் பார்த்து, உடலோடு, மனதின் சுமையின் அழுத்தம் தாங்காமல் விழிகளில் நீர் சுரந்தது. வாழ்நாளின் பல சந்தர்ப்பங்களைப் போலவே ‘ஒருவேளை அப்பா இருந்திருந்தால்’ என்று சிந்தித்து விட்டு, இத்தனை வருடங்களில், தந்தையின் குணத்தையும் உணர முடிந்திருந்ததால், இதழ்கள் அத்தனை களேபரத்திலும் மெல்லிய ஏளனப் புன்னகையுடன் தன்னைத் தானே பிதுக்கிக் கொண்டது.

குணா. பெயர் மட்டும்தான் இப்படி. அவனிடம் குணம் இருக்கிறதோ இல்லையோ, சுற்றிலும் இருப்பவர்களிடத்தில் ஒருவரிடத்திலும் குணத்தைத்தான் காணோம். தங்கள் குணத்தை எங்கோ ஒளித்து வைத்துவிட்டு, அதைத் தேடித்தான் இப்படிப் பெயர் வைத்தார்களோ. எப்படி எதற்காக வைத்திருந்தாலும் தான் என்ன. வைத்தவர் இப்போது உயிருடன் இல்லை. மற்றவர்களுக்கு குணாவின் குணத்தில் நம்பிக்கை இல்லை, அதிலும் அறவே இல்லை. இல்லையென்றால் ஏனிப்படி குணா இந்த வேளையில் இப்படி சிந்தித்துக் கொண்டு, விழிகளில் நீர் சுரந்து கட்டிக் கொண்டு மடை திறந்து பாயவா எனக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இருக்க வேண்டியிருக்கும்.

வாழ்க்கை கடினமானதுதான். ஆனால், இந்த அளவிற்குக் கடினமாக இருக்கத்தான் வேண்டுமா என்ன. உள்ள நிலையில் தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என நிறைய சிந்தித்துப் பார்த்து விட்டான். ஒன்றுமே தோன்றவில்லை. இங்கிருந்து கிளம்பிச் சென்று விட வேண்டுமோ? கிளம்பி விட்டால் மட்டும் போதுமா? எங்கு செல்வது? என்ன செய்வது? அதிலும் இந்த நிலையில் இருக்கும்போது. ஏன் இந்த நிலையானது? ஏன் எனக்கு மட்டும் இப்படியொரு நிலை?? இத்தனை அனுபவிக்கும் வகையில் செய்த பாவம் என்ன? பாவம்.., இதுதான் துவக்கம், இனிதான் வாழ்வில் எத்தனையோ அனுபவிக்க வேண்டியவை இருக்கிறது என்று அந்த இளைஞனுக்குத் தெரியவில்லை.

இரவுகள் உறக்கமற்றவையாகி, பகல்கள் முற்றிலும் வெளிச்சமற்றுப் போய்.. புதர் மண்டிப் போன தாடியும்,

மறுநாள் காலை எல்லோரும் எழுந்து காலை கிளம்ப வேண்டியவர்கள் கிளம்பி, மற்றவர்களும் அடுத்து செல்வதற்குத் தங்களைத் தயார்ப் படுத்திக் கொள்ள, அந்த அறையை விட்டு வெளிச் செல்லவே வாய்ப்பற்ற நிலையில் குணா மட்டும் படுத்தவாறே தன்னைச் சுற்றி நடப்பவைகளை வேடிக்கை பார்த்திருந்தான்.

மணிதான் அப்போதும் வந்து, “உடம்பு நல்லா இருந்தா எழுந்துத் தொலை, இப்படி அழுது வடியாதே” எனக் காலால் ஒரு எத்தி விட்டுப் போனான். அதற்கும் அசையாது சிறிது நேரம் படுத்திருந்தவனை முரளியின் முறைப்பு அசைத்தது.

மெல்ல எழுந்து, பல் துலக்கி, மணி கொண்டு வந்து கொடுத்த உணவினை உண்டு விட்டு, மீண்டும் படுத்துக் கொண்டான், குணா.

“டேய்.. படுக்காதே. சாப்பிட்ட உடனே படுக்கறியே, அறிவில்லை. நாங்க போகும் வரையாவது படுத்துத் தொலையாதே. உன்னைப் பார்த்து எங்களுக்கும் தூக்கம்தான் வருது” என்று கடுப்படித்தான் மணி.

சற்று தள்ளி நின்றிருந்த முரளியின் முகமும் அதைத்தான் சொன்னது. முரளி, குணாவுடன் பேசுவதில்லை. இந்த பிரச்சனை துவங்கிய பிறகு என்றில்லை. அதற்கு முன்பிருந்தே, முந்தைய வருடத்தில் இருந்தே ஒரு சிறு பிரச்சனையில் பேசுவதை நிறுத்தி விட்டான்.

ஆனால், அவனும் கூட ஒரு கட்டத்தில் குணா ஊரில் இருந்தபோது, மற்ற எல்லோரும் தொலைபேசி செய்து பேசிய போது, பேசத்தான் செய்தான். எல்லாம் சரியாகி விட்டது என்று நினைத்த போது, அந்த தொலைபேசி அழைப்பைக் கொண்டே பிரச்சனைக்குப் பிள்ளையார் சுழி போட்டு விட்டான் குணா. இப்படியாகும் என்று நினைத்தோ, இப்படியாக வேண்டும் என்ற நோக்கத்திலோ அவன் அதை செய்திருக்கவில்லையென்றாலும் கூட, அது அப்படியாகத்தானே முடிந்திருந்தது. இது இப்படியாகி இருக்கிறது என்பதையும், ஊரிலிருந்து திரும்பும் வரை குணா அறிந்திருக்கவில்லை. தன்னைச் சுற்றி ஒரு வலையைத் தான் பின்னிக் கொண்டதோடு, அந்த வலைக்குள் மற்றவர்களையும் உள்ளிழுத்து வைத்த கதையின் ஒரு சிறு துளியும் குணா அறிந்தவனல்ல.

இப்போதும் கூட, அந்த தொலைபேசி அழைப்பைக் கொண்டு எப்படி சூழல் இப்படியானது என முழுமையாக அவனுக்கு மட்டுமல்ல, அப்போது இங்கேயே இருந்த மற்றவர்களுக்கும் விளங்கவேயில்லை. மர்மம் மர்மமாகவே நீடிக்கவும்தான், எல்லோரின் கோபத்திற்கும் குணா உள்ளாக நேரிட்டது. தனக்கும் அது புரியவில்லை என்று சொன்னதை யாருமே நம்பவும் இல்லை. பலன், மற்றவர்கள் ஓரளவிற்கு சமாதானம் ஆகிப் போன போதும், முரளியின் கட்டுக்கடங்காத கோபம் குறையவில்லை. அதனைக் காட்டிக் கொள்ளக் கூட குணாவிடம் அவன் பேச விரும்பவில்லை. இதோ இத்தனைத் தொல்லைகள் குணாவைச் சூழ்ந்து கொண்டுவிட்ட பொழுதிலும் கூட.

குணாவினால் அதிகம் பாதிக்கப்பட்டது என்னவோ, செந்தில்தான். பதிலுக்கு, செந்திலால், குணாவுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. செந்திலிடம் நடந்த விசாரணைகள், குணாவிடம் நடக்கவில்லை. குணாவுக்கு மட்டும் இந்த விடயத்தில் விசாரிக்காமலே தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள் என்று வெகு தாமதமாகப் புரிந்திருந்தது. ஒருவேளை, குணா விசாரிக்கப்பட்டிருந்தால், சிக்கலின் நுனி, அவனுக்குப் பிடிபட்டிருந்திருக்கக் கூடும். ஆனால், குணாவுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவே இல்லை. அதுபற்றி, குணாவின் குடும்பத்தினர் துவங்கி மணி, முரளி உள்பட யாருமே சிந்தித்ததாகவும் தெரியவில்லை.

ஒரு அடிப்படை உரிமை கூட அவனுக்கு கிடைக்கவில்லை. ஆனால், அதை எதிர்த்து நிற்கவும் முடியவில்லை. இதில், தொடர்புடைய எவரின் ஆதரவும் குணாவுக்கு இல்லை. அவ்வாறான நிலையில், குணாவினால் என்ன செய்ய முடியும்? இதில், இவன் தான் தவறு செய்தான் என பிறரின் கோபம் வேறு.

குணாவுக்கும், முரளியின் கோபம் புரிந்திருந்தது. அதிலுள்ள நியாயமும் தெரிந்துதான் இருந்தது. ஆனால், குணாவும் இப்படி இழுத்து விட வேண்டும் என்று நினைக்கவில்லையே. சற்றும் எதிர்பாராத விதமான திருப்பமில்லையா இது? இப்படி ஒரு இடியாப்பச் சிக்கல் உருவாகும் என்று அவனுக்கும் தெரியாதே.

என்றைக்கு இங்கு தான் இருப்பது அவர்களுக்குத் தெரிய வருகிறதோ, அப்போதே அங்கிருந்து கிளம்பி விட வேண்டியதாக இருக்கும் என்று புரியாத நிலையில் இல்லை அவன். ஆனால், எங்கும் போகும் நிலையிலும் அவன் இல்லையே. பிறர் உதவியற்று ஒரு நொடி கூட அவனால் இந்த சில நாட்களாக இங்கு இருந்திருக்க முடியாது, இனியும் கூட, ஏதோ ஒரு தீர்வோ அல்லது இங்கிருந்து கிளம்புவதற்கான முடிவோ ஆகும் வரையிலும் இவர்களின் உதவி நீடித்தால் மட்டும்தான் அவன் இங்கே இருக்க முடியும்.

அந்த வகையில் மட்டும் அவன் சற்றே கொடுத்து வைத்துதான் இருக்கிறான். ஆனால், ஒவ்வொரு வேளையும் பயந்து பயந்து, உணவுக்காகவும் கூட பிறர் உதவியில் இருப்பது, அதிலும் திருடித் திருடி உண்பது, மனதை அரித்துக் கொண்டிருக்கிறது.

‘பிச்சைக்காரர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை’

ஆம். இன்னும் எத்தனை நாட்களென்றாலும், அது திருட்டு சாப்பாடுதான் என்றாலும் கூட அதையே உண்டு, மனம் இடும் கூச்சல்களை அடக்கியபடி, வாய் திறவாதுதான் இருந்தாக வேண்டும். வெகுநாட்கள் இந்நிலை நீடிக்க வாய்ப்பில்லை. ஏதேனும் ஒரு வகையில் இது முடிவுக்கு வரத்தான் வேண்டும். அந்த முடிவு, எந்த திசையில் இருந்து, யாரிடமிருந்து வந்தாலும் வரும்போது வரட்டும். இதுவரை செய்தவையெல்லாம் போதும். பேசியவையும் போதும். இங்கிருந்தோ அல்லது அங்கிருந்தோ யாரோ கட்டாயமாக இவற்றையெல்லாம் முடித்து வைக்கத்தான் போகிறார்கள்.

அது நல்ல விதமானதாக இருந்தாலும் சரி அல்லது மற்ற விதமாக இருந்தாலும் சரி. தானாக எதையும் கெடுத்துக் கொண்டு விடக் கூடாது; அனைத்தையும் கெடுத்து விட்டதாக இது வரை வாங்கிய ஏச்சுக்களே போதும். இனியும் அதையே செய்ததாக ஆகக் கூடாது. எல்லோரும் சொல்வதில் ஒன்று உண்மைதான். அது அவன் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டு நிற்பது. சூடு, சுரணை என்பதையெல்லாம் ஒரு அளவோடுதான் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆ! சூடும், சுரணையும். அவை இன்னும் அவனுக்கு இருக்கத்தான் செய்கிறது. அறவே அற்றுப் போய் விடவில்லை. ஒரு முறை, இனி வராதே என சொன்ன இடம் சென்றான் தான். ஆனால், மீண்டும் போகவில்லை. அங்கும் வெகுவாகப் போராடவும் இல்லை. போராட சக்தியும் இல்லை. உடல் அதனை அனுமதிப்பதாகவும் இல்லை. முதுகின் சுமை இப்போது இன்னும் வெகுவாகக் கூடித் தெரிந்தது.

இங்கு இப்போது உதவுபவர்கள் எவரும் அவனுக்கு உதவி செய்துதான் ஆக வேண்டுமென்பதில்லை. உடனிருந்து பழகிய பழக்கத்திற்காக செய்கிறார்கள். இரக்கத்தின் காரணமாகத்தான் செய்கிறார்கள். உடல் வளர்கிறதோ இல்லையோ, மனம் வயதுக்கேற்றபடி வளர்ந்து விடுகிறதே. உடல் வளர்க்க உதவி விடுகிறார்கள்; ஆனால் மனம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் யாரிடமும் இல்லையே. என்ன செய்வான் அவன்? மனம் தானாக சிதைந்து கொண்டிருக்கிறதே. இளைஞனாக வளர்ந்த பிறகு, அதிலும் ஆண்மகனாகவும் இருக்கும்போது, பிறரின் இரக்கம், பரிதாபமாக அவர்கள் அவனை நோக்கும் அந்த பார்வைகள், உரிமையற்ற உணவு, அதை மறுக்கவும் முடியாத சூழல், இருப்பதற்கும் இடமற்ற நிலை, அதை மீறி எங்கும் போகவும் வழியற்று, ஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்ந்து இவையெல்லாம் சரியாகி விடுமென்ற அசட்டு நம்பிக்கையோடு காத்திருப்பதைத் தவிர வேறேதும் செய்ய முடியாத நிலையென அவன் மனம் அவனைக் கூறு போட்டுக் கொன்று கொண்டிருக்கிறது.

ஆனால், செய்வதற்கு எதுவும் இல்லை. எதுவுமே இல்லை.

உண்மைதானே? இப்போது என்ன செய்வது என்பதோ, எப்படி இந்த நிலையினை மாற்றுவது என்பதோ அவனது கைகளில் இல்லையே. ஆனால், யார் கைகளில்தான் இருக்கிறது? அதுதான் அவனுக்குத் தெரியவில்லை. அன்னையிடமா அல்லது அன்னையிடம் பேசியவர்களிடமா? இல்லை என்னை அழைக்காதே என்றவரிடமா? அல்லது அன்னையையோ, இவர்களையோ தன் பேச்சை மந்திரத்திற்கு உட்படுவது போலக் கேட்டுக்கொள்ள வைக்கும் எவரிடமுமா?

அப்படி எவரும் இருக்கிறார்களா என்ன? இங்குள்ளவர்கள் நிலை, நிச்சயமாக அது எட்டாக் கனி. ஆனால், அன்னை? அவரை சிலரைக் கொண்டு அணுக முடியலாம். அன்றைக்கு அங்கு சென்றபோதே அதை செய்திருக்கலாம் தான். ஆனால், அப்படி யார் காலிலும் போய் விழ வேண்டாமென்று ஒரு வீம்பு. இப்போதும் எதுவும் மாறி விடவில்லை. ஒருவேளை அவர்களுக்கும் கூட இவன் நிலை தெரிந்திருக்கலாம். ஆனால், எவரும் இவனை அழைத்து எதுவும் கேட்டு விடவும் இல்லை.

அவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே யாருடைய அன்புக்கும் அவன் பாத்திரனனானதில்லை. பிறரின் அன்பிற்கு உரியவனாக அவனும் நடந்து கொண்டதுமில்லை. காட்டப்படாத அன்பு, திருப்பி செலுத்துவதற்கான திசைக்கு இட்டுச் செல்லவில்லை. தானாக அன்பு சுரக்கும் வகையில் மனதுக்கு யாரையும் பிடித்துப் போகவுமில்லை. இதில் அவன் அன்னையும், சிறு வயதிலேயே மறைந்து விட்ட அவன் தந்தையும் கூட உள்ளடக்கமே.

இங்கு வந்து அவன் சேர்ந்த விதம் எவ்வாறாக இருந்தாலும், இங்கும் அவன் தன்னை நல்ல விதமாகதான் நடத்திக் கொண்டான். குறையாக எதையும் எண்ணியதுமில்லை; காட்டிக் கொண்டதுமில்லை. இன்றைக்கு இங்கு இவனைத் தூற்றிக் கொண்டிருக்கும் எல்லோரும் சில மாதங்கள் முன்பு வரைக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள் தான். அவர்களை அவன் கொண்டாட வைத்தான் என்பதுதான் உண்மை.

ஒருவகையில், அந்தக் கொண்டாட்டங்களே பின்னால் எதிராகிப் போகுமென்று அவனென்ன, எவரேனும் நினைத்திருப்பார்களா? உண்மையில் அந்தக் கொண்டாட்டம் தான் அவனது முக்கிய எதிரி. அதுவல்லாது வலைப் பின்னல்களாய் இவையெல்லாம் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லைதான்.

ஆனால், சிக்கல்கள் வேறு விதமாகவும் அப்போதே சின்ன சின்னதாக வளர்ந்திருக்கிறது. பிறர் கேட்டு செய்த மிகச் சிறு செயல்களும் கூட அவனுக்குப் பின்னாலே எதிராகிப் போகுமென்று தெரிந்திருந்தால், அவற்றை அவன் செய்திருக்க வாய்ப்பே இல்லைதான். பிறர் செய்யும் சிறு பிழைகளுக்கு தான் ஏற்கும் பொறுப்புகள், அவர்களைக் காத்து விடுவதில் மகிழ்ந்திருக்கவும் வாய்ப்பில்லை. எல்லோரும் தன்னைக் கொண்டாடும் விதத்தினில், தன் போக்கில் அவற்றையெல்லாம் பெரிதாக எண்ணாமல் இருந்ததும் மிகப் பெரும் தவறு.  மட்டித் தனமான செயல்கள். ஆனால், செய்த பிறகு சிந்தித்து, சிந்திய பாலுக்கு வருந்தி என்ன.

செந்தில் வந்திருக்கக் கூடும். அடுத்த வேளையாகி விட்டதே. அவர்கள் நேரம் முடிந்த பிறகுதானே இவர்களின் நேரம். எப்போதோ வந்திருக்க வேண்டும். மணி, முரளி உள்பட எல்லோரும் சென்று விட்டார்களே. போகும் போது குணாவுக்கு மதிய உணவு கொண்டு வந்து கொடுத்துதான் போனார்கள். முடியாத நிலையே இப்போது கூடாத நிலையாகவும் ஆகிப் போனது. விசித்திரம் தான். ஆனால், வாழ்வில் எது விசித்திரமில்லை? அப்பாவின் நாற்பதாவது வயதில், அவரின் ஐந்தாவது வாரிசாகப் பிறந்தது, பிறப்பின் சிக்கல் முதல், குறிப்பாக குணாவின் வாழ்வில் எதுதான் விசித்திரமில்லை?

 

மீண்டும் ஒரு ஏளனப் புன்னகையை இதழ்கள் சிந்த, மதியம் உண்டதினாலோ, இரவில் உறங்காததினாலோ கண்கள் சொக்க, முகம் ஏளனத்தினைத் தொலைத்து விட்ட போதும், இளநகையோடே உறங்கிப் போனான் குணா. உறக்கத்திலும் கூட ஏதேதோ சிந்தனைகள் ஓடியது போலும். அவ்வப்போது, அவன் முகம் காட்டும் பாவனைகள் அருகிருந்து பார்க்கும் யார்க்கும் சிரிப்பு வரும். இத்தனை விதமான பாவனைகளைக் காட்டும் இந்த இளம் இளைஞனுக்கு அப்படி என்னதான் சிக்கல்களோ அல்லது என்னதான் இத்தனை உவகைக்கு இருக்கிறதோ என மாற்றி மாற்றி சிந்திக்கத் தூண்டும் பாவனைகள். அத்தனை விதமான முகபாவனைகள். அதை இரசித்திருக்கத்தான் அப்போது அருகினில் யாருமில்லை, ஒருவேளை அருகில் யாரேனும் இருந்தாலும் கூட அன்றைய சூழ்நிலையில் இரசித்திட மனமும் இருக்காது.

Advertisement