ஆனந்த போர்க்களம் – 9

நேற்று இரவு உறங்கிய மனைவிக்கு முத்தமிட்டதற்காக மன்னிப்பு கேட்ட வீரேந்திரன், இன்றிரவு மீண்டும் தன் வசமிழந்து சில முத்திரைகளை அவள் முகத்தில் பதித்த பிறகே கண் அயர்ந்தான்.

ருசி கண்ட பூனை அனுதினமும் இதைத் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

சந்தியா இப்பொழுதெல்லாம் கணவனிடம் ஒருசில வித்தியாசங்களை உணர்கிறாள். கணவன் ஓரிரு நொடி அவளையே ஊன்றிப் பார்ப்பது போல ஒரு எண்ணம். அந்த நேரத்திலெல்லாம் உள்ளம் ஒரு மாதிரி படபடப்பானது அவளுக்கு. கணவனின் இவ்விதமான பார்வைகள் அவளுக்கு முற்றிலும் புதிது.

எப்பொழுது பார்க்கிறான் என்றெல்லாம் இல்லை. அடிக்கடி இதுபோல பார்வைகள் அவளைத் தொடர்ந்துகொண்டே இருக்க, கொஞ்சம் திணறித் தான் போனாள்.

தன் வாழ்வின் இந்த எதிர்பாரா திருப்பம் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதற்குக் காரணம் எங்கே வாழ்நாள் முழுவதும் நாங்கள் இப்படியே தான் இருப்போமா என்கிற அவளுடைய அச்சம் தான்!

தன் அச்சம் அவசியமில்லை என்று புரிந்ததும் சந்தோசப் பட்டவள் இன்னொன்றை நினைக்க மறந்திருந்தாள். இன்னமும் வீரேந்திரன், அவள் மணமுடிக்க மறுப்பு சொன்ன அதே முரடன் தான் என்பதை யோசிக்க மறந்தாளோ என்னவோ?

அதை அவளுக்கு ஆணித்தரமாக உணர்த்த ஒரு சம்பவமும் விரைவில் நடந்தேறியது.

“சந்து… கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாமா?” ஸ்ரீதரன் அந்த விடுமுறை தினத்தின் காலையிலேயே கோரிக்கை வைத்தான்.

‘சந்து… பொந்துன்னுட்டு… விதவிதமா பேரு வைக்கிறான்… லூசு பையன்…’ என்றொரு பார்வை பார்த்தாள்.

அவனோ, “உனக்கு கெஃக் நேம் தான் பர்பெக்ட் மேட்ச்… இருந்தாலும் அப்பப்ப எதையாவது ட்ரை செய்யணும் இல்லை…” என நியாயம் பேசினான்.

உஃப் என்று நீளமாக மூச்சு விட்ட சந்தியா காலையிலேயே அவனிடம் சண்டையை வளர்க்க விருப்பப்படாமல், “எங்கே போறோம்?” என்று விசாரித்தாள்.

“ஒரு குட்டி ஷாப்பிங்…”

“ஏன் கூட உன் வாணரப்படை வரலையா? திடீர்ன்னு ஷாப்பிங் போக என்னை கூப்பிடற?”

“பாய்ஸ், கேர்ள்ஸ் எல்லாரும் தான் வருவாங்க… நீ வேற பூமர் அண்ணி மாதிரி அளவோட இரேன்டான்னு சொல்லுவ… அதுதான் ஒரு சேஞ்சுக்கு இன்னைக்கு உன்கூட ஷாப்பிங் போகலாம்ன்னு யோசிச்சேன்”

சந்தியா அவனை நம்பாத பார்வை பார்த்தாள். “நிஜமா உனக்காகத் தான் அப்படி யோசிச்சேன் கெஃக்… அதோட உன் டேஸ்ட் எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுப்பேன் இல்லை…” அழகாகச் சமாளித்தான்.

சந்தியாவின் பிறந்தநாள் ஓரிரு வாரத்தில் வரவிருக்க அவளுக்காக உடை வாங்குவதென்பது தான் அவனுடைய குறிக்கோள். அவளுக்காக வாங்குவது அவளையே அழைத்துச் சென்று அவளுக்குப் பிடித்தது போல வாங்கி தருவோமே என்ற யோசனையில் அவளை கிளப்பிக் கொண்டிருந்தான்.

என்னவோ அண்ணன், அண்ணி இன்னும் சுமூகமாக இல்லை என்பது வரை அவனுக்குப் புரிந்திருந்தது. வீட்டில் பெரியவர்கள் இருந்திருந்தாள் விசாரித்திருக்கக் கூடுமோ என்னவோ… அவனால் விசாரிக்கவும் முடியவில்லை. இருவருக்கும் எடுத்துச் சொல்லும் வயதும் அவனுக்கு இல்லை.

அண்ணி லோன்லியாக உணர்ந்து விடக்கூடாது என்பதால் கொஞ்சம் அவனால் முடிந்தவரை இதுபோல மெனக்கெட்டான்.

சந்தியா யோசித்தபடியே இருக்கவும், “நீ எதுக்கு இவ்வளவு சீன் போடற… என்னவோ நீ தான் வீட்டைத் தூக்கி நிறுத்த போற மாதிரி. சீக்கிரம் கிளம்பி வா…” என துரிதப்படுத்தினான்.

“படுத்தறடா…” என்று சலித்தாலும் வேகமாகக் கிளம்பி வந்தாள். அவர்கள் செல்லப்போவது அவர்களின் கடைக்குத் தான் என சந்தியாவிற்குத் தெரியாது.

ஆட்டோ பிடித்து இருவரும் கடையை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்க, “என்ன வாங்க போற ஸ்ரீ” என விசாரித்தாள்.

“கேசுவல்ஸ் தான் அண்ணி…” என்றான் அவனும். ஆட்டோ டிரைவர் இருப்பதால் இருவரும் அப்போதைக்கு நல்ல பிள்ளைகள் போலப் பேசிக்கொண்டனர்.

இவர்கள் சண்முகம் ஸ்டோர்ஸ் சென்று இறங்கியதும், “இங்கே தான் வாங்க போறியா?” என விசாரித்தாள்.

அவளை ஒருமாதிரி பார்த்தவன், “எல்லாம் இங்கேயே இருக்கும்போது நம்ம வேற எங்கே போறது?” என அவன் கேட்க,

“ச்சு… அதுக்கில்லை… நான் இன்னும் இந்த கடைக்கு வந்ததில்லை… அதுதான் எப்படி இருக்கும்ன்னு கேட்க கேட்டா…”

அவனுக்கு அப்பொழுது தான் விளங்கியது அண்ணிக்கு அவர்கள் கடைதான் அது என்று கூட தெரியவில்லை என்று! அண்ணனை நொந்து கொள்வதா அண்ணியை நொந்து கொள்வதா என விழி பிதுங்கிப் போனான்.

பதின் பருவத்திற்கே உள்ள துருதுருப்பில் கொஞ்சம் விளையாடும் ஆசையும் சேர்த்து வந்தது.

“வேற ஏதாவது கடை நல்லா இருந்தா சொல்லு… போயி பார்க்கலாம்” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

“இல்லை இல்லை இங்கேயே பார்க்கலாம். அதுதான் வந்துட்டமே… கடையும் பார்க்க நல்லா தான் இருக்கு…” என்றவளைப் பார்க்கச் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாக சிரித்தான்.

“எதுக்கு இப்படி சிரிக்கிற?” அவளுக்கு விளக்கினால் தானே?

“ஒன்னும் இல்லை வா…” என அழைத்துப் போக, வாட்ச்மேன் பெரிய புன்னகையுடனும், மரியாதையான குரலிலும், “வாங்க தம்பி…” என வாயெல்லாம் பல்லாக வரவேற்றார்.

பார்ரா மரியாதையை என்றொரு வியந்த பார்வை பார்த்தவளிடமும், “வாங்கம்மா… இன்னைக்கு தான் முதல் தடவை கடை பக்கம் வரீங்க ரொம்ப சந்தோஷம்” என்க அவளுக்குத் தலை சுற்றியது.

இவர் என்ன வாட்ச்மேனா? இல்லை ஜோசியரா?

“அண்ணன்கிட்ட…” எனத் தொடங்கியவரை முடிக்க விடாமல், “அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். நீங்க பிரீயா விடுங்க…” என அவசரமாகத் தடுத்தவன், “உள்ளே போகலாமா அண்ணி?” என அவளை அழைத்துச் சென்றான்.

என்னவோ நெருடியது சந்தியாவிற்கு. ஏதோ ஒரு முடிச்சின் நுனி புரியாத நிலை!

அவளின் குழப்பத்தைக் கண்டும் காணாமலும், “ம்ப்ச் எங்கே பாரு லேடீஸ் பர்ஸ்ட் தான்… பாரு கிரௌண்ட் பிளோர் முழுக்க லேடீஸ் கலெக்ஷன். சரி வந்தது வந்துட்டோம். முதல்ல உனக்குப் பார்ப்போம் வா…” என அவளை யோசிக்க விடாமல் கூட்டிப் போக,

“எனக்கெதுக்குடா? உனக்கு வாங்கத்தானே வந்தோம். உனக்கே பார்க்கலாம்” என்றவளின் பேச்சைக் காதிலேயே வாங்காமல்,

“என்ன டிரஸ் பார்க்கலாம் அண்ணி?” என்று விசாரித்தான்.

“விளையாடாத… எனக்கெல்லாம் எதுவும் வேண்டாம். உன் ஷாப்பிங் முடி. சீக்கிரம் கிளம்பலாம். இங்கே என்னவோ எல்லாரும் நம்மையே குறுகுறுன்னு பார்க்கிற மாதிரி இருக்கு…” இறுதி வாக்கியத்தை மட்டும் முணுமுணுத்தாள்.

அங்கிருந்த சேல்ஸ் மேனேஜர் வேகமாக அவர்களை நெருங்கி, “வாங்க வாங்க மேடம்… சேரீஸ் பார்க்கறீங்களா? நிறைய நியூ கலெக்ஷன்ஸ் வந்திருக்கு…” என்று மிகவும் பவ்வியமாகக் கேட்க, அதிகப்படியான மரியாதையில் புருவம் சுருக்கினாள்.

அங்கு சுற்றியிருந்த சேல்ஸ் பெண்களின் பார்வை இவளிடம் ஆர்வமாக இருப்பதையும் கவனித்தவள் மிகவும் குழம்பிப் போனாள். சில முகங்கள் எங்கேயோ பார்த்த உணர்வை வேறு தர, சட்டென்று பொறி தட்டியது.

கண்ணை அகல விரித்து ஸ்ரீதரனை நோக்க, அவன் கேலி சிரிப்புடன் நின்றிருந்தான்.

‘அடப்பாவி! இது நம்ம கடையா? சொல்ல மாட்டியா?’ என அவனைக் கண்ணைச் சுருக்கி முறைத்தவள், அவன்மீது கொலைவெறியில் இருந்தாள். அவளின் முகமே நொடியில் மாறிப் போனது. ஒருமாதிரி சங்கடமான சூழ்நிலை!

எல்லோர் கவனமும் தங்கள் மீதே இருக்க, முயன்று முகத்தை இயல்பாக்கி, சிரமப்பட்டு மென்சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்தவள், “இல்லை ஸ்ரீக்கு தான் பார்க்கணும். நான் இன்னொரு நாள் வரேன். இன்னைக்கு நேரம் இல்லை அதுதான்…” என அவர்கள் மனம் நோகாமல் இதமாகச் சொன்னபோதும், அவர்களின் முகம் வாடுவதை இவளால் உணரமுடிந்தது.

கடையின் முதலாளி முதன்முதலாக வந்திருக்கிறாள். அவளின் மனம் குளிர நடந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு இருப்பது புரிந்தது.

ஆனால், அவளின் நிலை பரிதாபம் அல்லவா? திருமணமான இந்த மூன்றரை மாதங்களில் கணவனாக அவளைக் கடைக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவளைப் பெயருக்காகக் கூட அழைத்தும் வந்ததில்லை. அப்படியிருக்க அழையா விருந்தாளியாக அவளே இங்கு அதிகப்படி என்று உள்ளே உறுத்திக் கொண்டிருக்க, இந்த வரவேற்பு நிறைய சங்கடத்தைத் தந்தது.

எல்லோரின் பார்வையும் இவள் பின்னே பாய, திரும்பி பாராமலேயே கணவனின் இருப்பை அவளால் உணர முடிந்தது.

ஸ்ரீதரன் மீது அத்தனை கோபம். சின்ன பையன் தெரியாமல் செய்து விட்டான் என்று என்ன முயன்றும் ஒதுக்க முடியவில்லை. அவளின் தற்போதைய பரிதவிப்பான நிலை அதற்கு விடவில்லை.

“ஹாய் அண்ணா…” என்றான் ஸ்ரீதரன் பின்புறம் திரும்பி.

அண்ணனின் பார்வை அண்ணியிடமே நிலைத்திருப்பது புரிந்து, அவளின் கையை சுரண்டினான்.

நீண்ட பெருமூச்சை விட்டவளுக்குத் திரும்ப வேண்டும் என்று புரிகிறது. ஆனாலும் இன்னமும் அது முடியவில்லை. திரும்பி அவன் முகத்தைப் பார்த்து எந்த உணர்ச்சியை கொண்டு வர, என்ன பேச? அதுவும் எல்லோர் பார்வையும் தங்கள் மீதே மொய்க்கையில் புது மனைவியாக எப்படி நடந்து கொள்ள?

திரும்ப முடியாமல் வேரூன்றி நின்றாலும் வேடிக்கை பொருளாகி விடுவோம் எனப் புரிந்து, லேசாகத் திரும்பி, சிறு புன்னகையுடன், “சர்ப்ரைஸ்…” என்றாள் கணவனைப் பார்த்து கண்சிமிட்டி.

மற்றவர்களின் முன்பு காட்டும் மனைவி என்ற அவதாரம் என வீரேந்திரனுக்கு புரியாமல் இல்லை. கையை கட்டியபடி அழுத்தமாக அவளையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தவன், “வெல்கம்…” என்றான். இதழ்கள் மில்லிமீட்டர் அளவு கூட விரியவில்லை. அதேசமயம் கோபம் போலவும் தெரியவில்லை.

அவனாக அழைத்ததில்லை என்றபோதும் அவள் வந்ததில் விருப்பமின்மையும் இல்லை போல!

ஆனால், மனைவி என்ற உரிமையைச் சுமப்பவளுக்கு இதுமட்டும் போதுமா என்ன? அவளின் மனம் வாடியது.

அவர்களின் அருகே நெருங்கியவன், “என்ன சாப்பிடறீங்க?” என விசாரித்தான்.

சந்தியா அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்து தலையைக் குனிந்திருக்க, ஸ்ரீதரனோ, “ப்ரூட் ஜூஸ் சொல்லுண்ணா. நல்ல வெயில்… அண்ணிக்கும் ஜூஸ் தானே பிடிக்கும்” என்றான்.

‘ஆமா என்னைப்பத்தி உங்க அண்ணனுக்குத் தெரியும் பாரு… நீ வேற ஏன்டா’ என மெலிதாக முணுமுணுத்தவளின் சொற்கள் அவன் செவியில் ஸ்பஷ்டமாக விழுந்திருந்தாலும் அதைக் கண்டுகொள்ளாதவன் போல நின்று கொண்டான்.

கடைப்பையன் ஒருவனை அழைத்து, “ஆப்பிள் ஜூஸ் நாட்டுச்சர்க்கரை போட்டு… ஐஸ் இல்லாம ஒன்னு… ஐஸ் போட்டு ஒன்னு… சீக்கிரம் வாங்கிட்டு வா…” என்று அனுப்ப, அவளின் விழிகள் விரிந்து போனது.

கணவனுக்குத் தன்னை இந்தளவு புரியுமா? என்று ஆச்சரியத்தோடு அவனை ஏறிட, அவனோ அழுத்தமாக அவளைப் பார்த்தான். உனக்குத் தான் என்னைப்பற்றி இம்மி கூட தெரியாது என்று சொன்னது அந்த பார்வை!

அவளுக்கு அந்த பார்வையின் அர்த்தம் புரியவில்லை.

‘இந்த பார்வைக்கு என்ன அர்த்தமாம்?’ என்று குழப்பமாக அவனைப் பார்த்தாள்.

ஸ்ரீதரனிடம் திரும்பியவன், “முதல்ல உங்க அண்ணிக்கு எடுத்துட்டு அப்பறம் உனக்கு எடுத்துக்கோ…” என்றான் வீரேந்திரன்.

“சரிண்ணா…” என்று ஸ்ரீ வேகமாகத் தலையாட்ட, எனக்கு ஒன்னும் வேண்டாம் என்று முறுக்கிக்கொண்டு நின்றிருந்த சந்தியாவை வீரா பார்த்தால் தானே?

“நீங்களே கூட வந்து எடுத்து தாங்களேன்… அண்ணிக்கு ரெண்டு வாரத்துல பர்த்டே வேற வருது…” என அண்ணனின் காதில் ஸ்ரீதரன் கிசுகிசுத்தான்.

பிறந்தநாள் எல்லாம் வீரேந்திரன் கணக்கில் கொள்வதே இல்லை. தம்பி பிறந்தநாளைக் கொண்டாட அவனுக்குப் பணம் தருவதோடு சரி.

அதனால், ‘இதென்ன? புடவை எடுக்க நான் எதற்கு?’ என்று எரிச்சல் வந்தாலும், சுற்றிலும் இத்தனை பேர் இருக்க, முதல்முறை கடைக்கு வந்தவளோடு தான் உடன் இல்லாவிட்டால் நன்றாக இருக்காது என்றும் விளங்கியது.

அதோடு தான் முறையாக அவளை இங்கு முன்பே அழைத்து வந்திருக்க வேண்டுமோ என்ற உறுத்தலும் தோன்றியிருக்க, அவளிடம் திரும்பி, “சேரீஸ் பார்க்கலாமா?” என்று கேட்க, சந்தியாவிற்குத் தலை சுற்றாத குறை தான்!

அகல விரிந்த விழிகளோடு அவனைப் பார்த்தாள். அவளின் முகமே அவளை காட்டிக் கொடுக்க, “வேற டிரஸ் பார்க்கணும்ன்னாலும் பார்க்கலாம்” என்றான் வீரா. ஸ்ரீதரன் அதற்குள் அங்கிருந்து நழுவி இருந்தான்.

சந்தியா திருதிருவென விழிக்க, “என்ன?” என்றான் மென்குரலில்.

“இல்லை சொல்லாம வந்திருக்கோம். உங்க வேலை டிஸ்டர்ப் ஆகும். நீங்க பாருங்க. நான் ஸ்ரீகூடவே பார்க்கிறேன்” என்றாள் மெதுவாக.

“அவன் எங்கே இங்க இருக்கான்?” கிண்டலாகக் கணவன் வினவ, அப்பொழுது தான் ஸ்ரீ நழுவி இருப்பதையே கவனித்தாள்.

அவள் முகம் தவிக்க, “நம்ம கடைக்கு தான் வர்றோம்ன்னு தெரியாம தானே வந்த? அப்பறம் எப்படி சொல்லிட்டு உன்னால வர முடியும்?” என்று அவன் கேட்க,

இதென்ன இவனுக்கு இத்தனை தூரம் நம்மை புரிகிறது என குழம்பிப் போனாள். கூடவே, ‘ச்சு! எனக்கு தான் இவரைப் பத்தி எதுவும் தெரிய மாட்டீங்குது’ என்றொரு கூச்சமும்!

அனைவரின் பார்வையும் இவர்கள் மீதே இருக்க, இன்னும் வெட்கியவள், “பிளீஸ் எல்லாரும் இங்கேயே பார்க்கிறாங்க. நீங்க கிளம்புங்க. நான் வாங்கிக்கறேன்” என்றாள் முகம் சுருக்கி கெஞ்சலாக.

அவன் அவளையே ஊன்றிப் பார்த்திருக்க, ஆரம்பிச்சுட்டாரு என மனதிற்குள் சலித்தாலும் அவளின் கன்னம் சிவப்பேறியது.

அவள் வருவதற்காக சில நொடிகள் அவகாசம் தந்தவன், அவள் அசையவில்லை என்றதும், கையைப்பற்றி அவனே அழைத்துப் போனவன், அவனே புடவை, சுடிதார் என எடுத்து குவிக்க, “பிளீஸ்…” என அவனை அவசரமாகத் தடுத்தவள், இரண்டு, மூன்று மட்டும் எடுத்துக் கொண்டு, “போதும் பிளீஸ்…” என்றாள் கெஞ்சலாக.

கெஞ்சல் அசைத்ததோ அவளின் பாவனை அசைத்ததோ அவனின் தலை தாமாகச் சரி என்று ஆடியது.