அனைவரின் முன்பும் தன்னை அடக்கினாளே என்று மனைவி மீது கோபத்தில் இருந்த வீரேந்திரன், திருமணத்தன்று உறக்கத்தில் அரற்றியது போலவே இன்றும் மனையாள் அரற்றுவதைப் பார்த்ததும் தன் கோபம் மொத்தமும் மறந்து போனான்.
அவளின் ஒவ்வொரு அலறல் சத்தத்திற்கும் அவளைத் தேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகிப் போனது.
யாருக்கும் அஞ்சோம்… எதற்கும் அஞ்சோம்… எங்கும் அஞ்சோம்… எப்போதும் அஞ்சோம்… என்று மகா கவி பாடி வைத்தது போல நிமிர்ந்த நெஞ்சோடு அச்சமின்றி சுற்றித்திரியும் அவனுக்கு இப்படி பயத்தில் நடுங்கும் ஒரு மனைவி! இதை எண்ணியவனுக்குச் சிரிப்பு தான் பொங்கியது.
‘இவ்வளவு பயத்தோட இருக்கிறவ எப்படி என்னை தடுக்க என்கிட்ட வந்தா? நானும் எப்படி அவளை உதறிட்டு போகாம நின்னேன்?’ நடந்தது எல்லாமே இப்பொழுது நினைக்க அதிசயம் போலத் தோன்றியது வீராவுக்கு.
இதுவரை இம்மியளவு கூட மனையாளுக்கு அவன் உரிமை தந்ததில்லை. ஆனாலும் அவன் சினத்தில் சீறி நின்றபோது தயக்கமின்றி அவனைத் தடுத்து நிறுத்தினாள் என்றால் அவனுக்கு ஆச்சரியமாக இருக்காதா என்ன? இதற்கும் அந்தளவு தைரியமான பெண் கூட இல்லை.
‘ஏன் அப்படி செய்தாளாம்?’ என்ற கேள்வி எழ மனமெங்கும் இனம்புரியாத உல்லாசம் அலை அலையாய் பரவி பேரலையாய் அவனை வாரிச் சுருட்டியது.
அவனின் கண்கள் மின்ன, முகம் கனிந்து வசீகரிக்க, இதழ்கள் குறுநகையில் விரிய, கோபம் மொத்தத்தையும் தொலைத்து இருந்தான் அந்த நொடி.
இடதுகையின் அணைப்பில் தன்னை ஒண்டி படுத்ததிருந்த மனைவியின் முகத்தை விடிவிளக்கின் ஒளியில் பார்த்தபடி படுத்திருந்தவனின் மனதில் ஓராயிரம் சலனங்கள் நொடியில் குடியேறிக் கொண்டது.
சின்னஞ்சிறிய வட்ட முகம். பயத்திலும் பதற்றத்திலும் சற்றே சுருங்கி இருந்தது. மெல்லப் பெருவிரல் கொண்டு அவளின் புருவங்களை நீவி விட்டான்.
சந்தியாவின் முகம் சற்று நேரத்தில் இயல்பாகவும் அவளின் முழுவடிவைத் தன்னை மறந்து அளக்க தொடங்கியிருந்தான். கன்னத்தின் மென்மையை வெகுநேரம் பரிசோதித்து உணர்ந்தவன் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
இப்பொழுது வீராவின் பெருவிரல் நீண்டு மனையாளின் இதழ்களை வருட அவனின் மூச்சுக்காற்றின் அனல் கூடியது. தன்னை முற்றிலும் இழந்த நிலையில் அவளின் இதழ்களை முத்தமிட்டான்.
இத்தனை நேரமும் விரல்கள் உணர்ந்த ஸ்பரிசம் இதழ்களும் உணர உன்மத்தம் பிடித்த நிலை அவனுக்கு. மீண்டும் மீண்டும் இதழ்களை முத்தமிட்டான். அவன் இதழ்கள் கன்னத்தின் மென்மையையும் சேர்த்துப் பரிசோதித்தது. முகம் முழுவதும் ஊர்வலம் சென்று இன்புற்றது.
அத்தனை நேரம் பயத்தில் அரற்றியவள் வெட்கத்திலும் கூச்சத்திலும் சிணுங்கத் தொடங்கியிருந்தாள்.
மனைவியின் சிணுக்கம் இன்னும் இன்னும் போதையேற்றியது. மீண்டும் ஒருமுறை இதழ்களை அழுத்தமாக முத்தமிட்டு மனமேயில்லாமல் விலகிக் கொண்டான்.
உன் கன்னங்களைத் தீண்டத் துடிக்கும் இதழ்களுக்கும்,
உன் உதடுகளைப் பற்றத் துடிக்கும் பற்களுக்கும்,
என்ன பதில் சொல்வதென்று நீயே சொல்லித் தந்துவிடு!
கொஞ்சம் நானும் பிழைத்துப் போகிறேன்…
உண்மையில் சந்தியாவிடம் சொன்னதுபோல காலத்திற்கும் மனைவியிடம் ஒதுங்கியிருக்கும் எண்ணமெல்லாம் அவனிடம் இல்லை. அப்படி ஒரு எண்ணமிருந்திருந்தால் திருமணத்திற்குச் சம்மதித்து இருந்திருக்கவே மாட்டான்.
என்ன அதைச் சரியாக மனைவியிடம் விளக்கிச் சொல்ல அவனுடைய தன்னகங்காரமும், அகம்பாவமும் ஒத்துக்கொள்ளவில்லை. என்னைக் கல்யாணம் செய்துக்கிறதுக்கு அவ்வளவு பயமா உனக்கு என்கிற வீம்பு அவனுக்கு.
இப்பொழுது உரிமையோடு தன் கையை பற்றி, தான் போடவிருந்த சண்டையைத் தடுத்த விதத்தில், அந்த நேரத்தில் எல்லையற்ற கோபம் வந்திருந்தாலும், இப்பொழுது நிதானத்தில் யோசிக்கையில் ஹப்பா ஒருவித பரவச நிலை தான்! அதில் தான் கொஞ்சம் பித்தாகிப் போனான் அந்த கோவக்காரன்.
வீரேந்திரன் தன் ஆவல்களைக் கட்டுப்படுத்தி சந்தியாவையே பார்த்தபடி படுத்திருந்தான்.
“சாரி கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்…” என்று உறங்கும் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு புன்னகைத்தான். என்னவோ இதுபோல இனி அவசரப்படப் போவதில்லை என்பதுபோல இருந்தது அவன் மன்னிப்பு!
“இப்ப என்னால என்னைக் கட்டுப்படுத்தவே முடியலை…” எனத் தாபத்தோடு சொன்னவன், நீண்டதொரு பெருமூச்சை விட்டுவிட்டு, “ஆனா எனக்கு இப்படி வேணவே வேணாம். என்னை பயத்தோட பார்க்கும் உன் கண்ணில் காதல் நிறைஞ்சு வழியணும். அந்த நொடி எனக்கு எந்த கட்டுப்பாடும் இருக்க போறதில்லை” ஆசையாய் அவளிடம் கதை பேசிக்கொண்டிருந்தான்.
சந்தியாவும் தன் அலறலைச் சுத்தமாய் நிறுத்தியிருக்க, “ஆக, உன் பயத்துக்கும் அலறலுக்கும் கட்டிப்பிடி வைத்தியமும், என் முத்தமும் தான் மருந்தா? இது தெரியாம முதல் ராத்திரியைச் சைவமா வீணாக்கிட்டேனே” அங்கலாய்ப்பாகச் சொன்னவன், அவளையே பார்த்துக் கொண்டும், அவளிடம் ஆசையாய் காதலாய் பேசிக் கொண்டும் உறங்கிப் போனான்.
‘அச்சோ! இதென்ன கனவு?’ என்று வெட்கத்தோடே தான் சந்தியா அடுத்தநாள் கண்விழித்தாள்.
“ஹ்ம்ம் நடக்கட்டும்… நடக்கட்டும்…” எனக் கேலியாகச் சிரித்தவனின், தலையில் கொட்டி, “அண்ணின்னு கொஞ்சமாச்சும் மரியாதை தரியா நீ?” என்று கோபம் போலக் கேட்டாள்.
“ஆஹான்… நீ அண்ணியா? காமெடி பண்ணாத கெஃக்… என் பிரண்ட் அனன்யா கிட்ட அவ ஸ்கூல் யூனிபார்ம் வாங்கி தரேன். நீயும் மாட்டிட்டு எங்களோட ஸ்கூலுக்கு வா… பார்க்க எனக்கு தங்கச்சி மாதிரி இருக்க… நான் உன்னை அண்ணின்னு சொல்லறதா… ஹவ் பஃன்னி…” ஸ்ரீதரன் சொல்லிவிட்டுக் கைகொட்டிச் சிரிக்க,
“அடேய் ஆயர்பாடி…நீயும் உன் அண்ணனும் வளர்ந்துட்டே போனா நாங்க என்னடா செய்ய முடியும்? ஏதோ காலேஜ் படிச்சிட்டு இருந்தா கூட ரெண்டு மூணு வருஷ கேப் தானேன்னு விடலாம். நீயே ஸ்கூல் போயிட்டு இருக்க… இன்னும் உருப்படியா உனக்கு மீசை கூட வளரலை… உனக்கு நான் தங்கச்சியா? ரொம்ப கிண்டலா போச்சு உனக்கு…” என கத்தியபடி கையில் கிடைத்த பொருளை எடுத்துக்கொண்டு அவனை அடிக்க துரத்த,
அண்ணியிடமிருந்து லாவகமாகத் தப்பியபடி, “ஏய் நான் உன்னை ரெண்டு மாசமா அப்படி தான் கூப்பிட்டு இருக்கேன். உனக்கென்ன இன்னைக்கு மட்டும் ஞானோதயம்… அப்ப நேத்து கண்டிப்பா சம்திங் சம்திங்… என்னடி சிங்கத்தை சாச்சு புட்டியா?” என அவளை மேலும் வெறுப்பேற்றி வாயடித்தான்.
“அடேய்… அண்ணின்னு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்கா? உன்னை இன்னைக்கு என்ன செய்யறேன் பாரு… நான் என்ன கேக்கறேன்? நீ என்ன உளறிட்டு இருக்க? எனக்கு மரியாதை தர முடியுமா முடியாதா?”
“வெரி குட் வெரி குட்… நல்லா பேச்சை மாத்தற… இதுதான் பர்ஸ்ட் ஸ்டெப்… கீப் இட் அப்… இப்படித்தான் லவ் பண்ணனும்…”
“வேணாம்டா உன்னோட கிருஷ்ணர் வேலை எல்லாம் எங்ககிட்ட வேணாம். நீயே ஆயர்பாடி ஹீரோவா இருந்துக்க… எங்களை உள்ளே இழுத்தா நான் பொல்லாதவ ஆயிடுவேன் பார்த்துக்க…” என்றவள் அவனைப் பிடிக்க முடியாத களைப்பில் மூச்சுவாங்க சோபாவில் தொப்பென அமர்ந்தாள்.
“ஏன் கெஃக் உனக்கு வீரா அண்ணன் ராமரா தான் இருக்கணுமா? இண்ட்ரெஸ்டிங்… சொல்லு சொல்லு இன்னும் என்ன எல்லாம் எக்ஸ்பெக்டேஷன்?” அவள் அருகில் அமர்ந்து கதை கேட்க வந்தவனைக் குனிய வைத்து முதுகில் மொத்தினாள்.
“முதுகுல தூசி எல்லாம் போயிடுச்சு…” என்று அவள் அடியைத் துச்சமாகப் பேசியவன், “சரி சரி இப்ப சொல்லு… உனக்கு இன்னும் என்ன எல்லாம் ஆசை… அண்ட் முக்கியமான விஷயம்… அண்ணன் என்னை மாதிரி எல்லாம் இல்லை பொண்ணுங்களை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டான். லீலா அக்கா பொண்ணு மேனகா இல்லை… எவ்வளவோ ட்ரை பண்ணினா. ஆனா அண்ணன் மசியவே இல்லையே… உனக்கு என்னவோ நிறைய லக் போல… அதுதான் இப்படி எனக்கு அண்ணியா வந்து இருக்க… சரி சரி சீக்கிரம் அடுத்து என்னன்னு சொல்லு சொல்லு…” என்றான் ஆர்ப்பரிப்பாய், ஆர்வமாய்.
“என் புருஷனை பத்தி எனக்கே தெரியும்” என ரோஷமாய் சொன்ன சந்தியா,
“ஸ்கூல் முடிஞ்சு வந்து எத்தனை நேரம் ஆச்சு… போ.. போயி டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு வா… நான் இன்னைக்கு சமோசா ட்ரை பண்ணினேன்…” என்றாள் அண்ணியாக.
“அய்யோ கல்யாணி அம்மாவை சமைக்க விடாம, இப்படி சமைச்சு சமைச்சு கொடுமை படுத்தறியே…” என்று ஸ்ரீதரன் தலையில் கை வைத்துக் கொள்ள,
“யாரோ இந்த வாரம் லன்ச் பாக்ஸுக்கு மஸ்ரூம் பிரியாணி செஞ்சு தர சொன்னாங்க… வேண்டாமா?” என்று சீண்டிச் சிரித்தாள்.
“ஹி.. ஹி… சும்மா அண்ணி… நீ செஞ்சது தான் அருமையா இருக்குமே… அது சும்மா விளையாட்டுக்குச் சொன்னது… இதோ இப்ப ரெப்ரெஸ் ஆயிட்டு வந்துடறேன்” என்று அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
அத்திப் பூத்தாற்போல அண்ணி என்று அழைப்பவனை வாஞ்சையாகப் பார்த்திருந்தது சந்தியாவின் விழிகள்.
இத்தனை காலமும் இருவருமே தனித்தனி ஆட்கள். தங்கள் சோகம், சந்தோசம், விளையாட்டு, ஆர்ப்பரிப்பு, துக்கம் என எதையும் பகிர்ந்துகொள்ள வீட்டில் ஆட்கள் இருந்ததேயில்லை.
அன்புக்காக ஏங்கும் ஒத்த அலைவரிசையில் இருவருமே இருந்ததில், திருமணத்திற்குப் பிறகு எளிதாக ஒருவரோடு ஒருவர் ஒட்டி கொண்டனர். அதோடு மற்றவரிலும் தங்களுக்கான எல்லா உறவையும் தேடியும் கொண்டனர்.
சந்தியாவிற்கு ஸ்ரீதரன் தான் அவளுடைய தாய், தந்தை, அண்ணன், நண்பன் எல்லாமுமே! சில சமயம் மாமியார், மாமனாராய் கூட இருப்பான்.
அவனுக்கும் அப்படியே தான்! என்ன அவன் லிஸ்டில் இவள் தாத்தா, பாட்டியாகவும் அவ்வப்பொழுது கிரின்ஞ் செய்வதுண்டு. அப்பொழுதெல்லாம் அடிதடி இன்னும் அமர்க்களப்படும். சண்டை போட்டுக்கொண்டு ஓரிரு நாட்கள் பேசாமல் கூட முகத்தை தூக்கி வைத்துச் சுற்றியும் கொள்வார்கள். அவர்களாகவே சமாதானமும் ஆகிவிடுவார்கள்.
இவர்களின் பாசப்பிணைப்பு எப்படி வீரேந்திரனுக்கு தெரியாதோ… அதேபோல அடிதடியும், அதன்பிறகு இருவரின் சமாதானமும் கூட அவனுக்குத் துளியும் தெரியாது.
ஓரளவு வீட்டில் நேரம் ஒதுக்கியிருந்தாலோ அல்லது தம்பி, கல்யாணி அம்மாவிடம் கூடுதலாக பேச்சுக் கொடுத்திருந்தாலோ எல்லாம் தெரிய வந்திருக்கும்.
எங்கே திருமணத்திற்கு முன்பு விசாரிப்பது போலத் தம்பி சாப்பிட்டானா? நல்லா இருக்கானா? என கல்யாணி அம்மாவிடம் செய்த விசாரணை இப்பொழுது கூடுதலாக மனைவியைப் பற்றியும் அதே வகையான விசாரணை அவரிடமே தொடர்கிறது. அவ்வளவு தான்!
தம்பியிடம் முன்பெல்லாம் கொஞ்சம் நேரம் செலவழிப்பான். இப்பொழுது அவன் பள்ளிப் படிப்பின் முக்கிய கட்டத்தில் இருக்க, “எல்லாம் ஓகே தானே டா? எதுன்னாலும் அண்ணா கிட்ட தயங்காம சொல்லணும்…” என்பதோடு முடிந்து விடும்.
“ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணி எல்லாம் படிக்கத் தேவையில்லை ஸ்ரீ…” என்பான் சில நேரம். ஸ்ரீதரன் சிரித்தபடி தலையாட்டுபவன் மறுநாள் அதை சந்தியாவிடம் சொல்லி கொட்டு வாங்கிக் கொள்வான்.
“அதுக்குன்னு ஜஸ்ட் பாஸா எடுக்க முடியும். மரியாதையா படிக்கிற” என்று அதட்டுவாள்.
“எப்படி கெஃக் மரியாதையா படிக்கிறதுன்னா எப்படி கையை கட்டி, வாயைப் பொத்தியா?” என்று சீரியஸாக கேட்பான்.
“படவா…” என்று கொட்டிவிட்ட தலையைத் தேய்த்து விட்டபடி சிரிப்பவள், “ஆமா கெஃக் அப்படின்னா என்னடா?” என ஆயிரமாவது முறைப் பதில் வராது என்று தெரிந்தும் கேட்பாள்.
மர்ம சிரிப்புடன் அந்த வளர்ந்த வாண்டு சென்றுவிடுவான்.
விவகாரமான பெயராகத்தான் இருக்கும் என்று தெரிந்திருந்தாலும் கோபம் துளியும் வந்ததில்லை சந்தியாவிற்கு.
இவர்களின் புதிரான உறவுமுறை புரியாமல் இதற்குள் தலையை விடும் வீரேந்திரன் காலங்கடந்து வருந்தப் போகிறான் பாவம்!