ஆனந்த போர்க்களம் – 7

ஒருவித எரிச்சலோடு புடவையைச் சுற்றிக் கொண்டிருந்தாள் சந்தியா. இந்த வீட்டில் அவளுக்கு ஒத்து வராத ஒரே ஜீவன் அவளின் அருமை கணவன் தான்.

பெரும்பாலும் ஒதுங்கியே இருப்பவன், அத்தி பூத்தாற்போல் எங்காவது அழைத்துச் செல்வதும் உண்டு. திருமணம் முடிந்த சில வாரங்கள் உறவினர் வீட்டில் கொடுத்த விருந்துகளுக்குப் போய் வந்தார்கள். அதன்பிறகு அவ்வப்பொழுது விசேஷ வீடுகளுக்கும்.

இன்று காரணமே இல்லாமல் நண்பர்களைப் பார்க்கப் போக வேண்டும் என்று கிளம்பி இருக்கச் சொல்கிறான். அந்த ரௌடி கூட்டத்தோடு நான் என்ன செய்வது என்ற எரிச்சல் சந்தியாவிற்கு.

கல்லூரி படிக்கும் காலத்திலேயே அடிதடி என்று சுத்தி திரியும் இவனையும், இவனுக்கு ஒத்துப் போகும் இவன் கூட்டத்தையும் இவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது.

இப்பொழுதெல்லாம், ‘இவர் தான் அப்படி செஞ்சாருன்னா கூட இருந்தவங்க தடுத்திருக்க வேண்டாமா?’ என்ற ஆதங்கம் அடிக்கடி எழுகிறது.

ஒரு தலைமுறை மூத்த, கணவனின் மரியாதையை நிறையவே சம்பாதித்திருந்த அவனின் பெரியப்பா வேதநாயகமும், இவளின் அப்பா நாராயணனும் சொல்லியே கேட்காதவன் நண்பர்கள் சொல்லியா கேட்டுவிடவா போகிறான்?

இது கூட புரிந்து கொள்ளாமல், அர்த்தமற்ற கோபத்தோடு கிளம்பியவளின் அடிமன ஆழத்தில் இருந்தது கணவனின் முரட்டு குணம் குறித்த ஆதங்கம் மட்டும் தான்!

திருமணம் முடிந்த இந்த ஓரிரு மாதங்களில் அழகாக வீட்டோடும், மற்றவர்களோடும் பொருந்தி போய் விட்டவளுக்கு, இதுபோல கூடிய சீக்கிரம் கணவனோடும் பொருந்திப் போக மாட்டோமா என்றொரு ஏக்கம் ரகசியமாய் உள்ளுக்குள் துளிர்விட தொடங்கியிருந்தது.

இவளைக் கண்டுகொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவன், இவளின் இருப்பிற்காக முகம் சுளித்ததும் இல்லை. அவனது ஒட்டாத தன்மையும், நேர்த்தியும், அவனிடம் தென்பட்ட கண்ணியமும் நாளாக நாளாக அவளை வசீகரித்திருக்க… அதன் வெளிப்பாடு தான் இந்த காரணமற்ற கோபம்.

“கிளம்பிட்டியா?” என்றபடி வீரேந்திரன் வந்தான். வேகமாகத் தலையை நாலா பக்கமும் உருட்டினாள்.

கோபம், ஆதங்கமெல்லாம் அவனைப் பார்த்தால் கப்சிப் என அடங்கிவிடும் என்பது கிளைக்கதை.

வீரேந்திரனின் டிபார்ட்மெண்ட்டில் கெட் டுகதெர் போல அரேஞ் செய்திருந்தார்கள். முதலில் இவன் வர மறுத்திருப்பான் போலும்! நண்பர்களின் கட்டாயத்தில் வந்திருக்கிறான் என்று அவர்களின் பேச்சிலிருந்து புரிந்தது.

ஆண்களும் பெண்களுமாய் அவரவர் குடும்ப சகிதம் நிறைய பேர் வந்திருந்தார்கள். இன்னும் பலருக்குத் திருமணம் ஆகவில்லை போல! எல்லாருமே இவளிடம் நன்றாகத் தான் பேசினார்கள்.

கணவன் கூட அவளைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியதில்லை அவனின் வகுப்பு தோழிகள் அத்தனை ஆர்வமாய் இவளைக் குறித்து விசாரித்துத் தெரிந்து கொண்டார்கள். கூடவே விராவைப் பற்றி இவளிடம் நிறைய நிறைய சொன்னார்கள்.

“எங்க யார்கிட்டயும் முகம் கொடுத்துக் கூட பேச மாட்டான். ஆனா எங்களுக்கு ஒரு பிரச்சினைன்னா முதல் ஆளா அவன் தான் நிப்பான்” என்றாள் ஒருத்தி பெருமையாய்.

“சிரிக்கவே காசு கேப்பானே உன் புருஷன். ஆமா உன்கிட்ட எப்படி?” என்று மற்றொரு பெண் கண்சிமிட்டிக் கேட்டாள்.

‘என் முகத்தைப் பார்க்கவே காசு கேட்பாரா இருக்கும்’ என்று சந்தியா மனதிற்குள் கணவனைத் தாளித்து விட்டு, முகத்தை மட்டும் புன்னகை வாடாமல் வைத்துக் கொள்ள, “அச்சோ நீ இப்படி அமைதியா இருந்தா அவனை எப்படி சமாளிப்ப?” என்று கேலி செய்து எல்லாரும் சிரித்தார்கள்.

‘சாமாளிக்கிறதா? நானா? அதுக்கான அவசியம் வருமா என்ன?’ என்று எண்ணம் போகையிலேயே ஏக்கமாகவும் இருந்தது. முகத்தில் எதையும் காட்டாமல் வெட்கம் போலப் பாவனை காட்டிக் கொண்டாள்.

இங்கு கொண்டு வந்து சேர்த்ததோடு தன் கடமை முடிந்தது என்று அவளைத் திரும்பியும் பார்க்காமல் திரியும் கணவன் மீது அவளுக்குக் கோபமாக வந்தது. இதுக்கு எதுக்கு என்னை கூட்டிட்டு வரணும். அவர் மட்டும் வந்திருக்க வேண்டியது தானே என எரிச்சலுற்றாள்.

சந்தியாவின் பார்வை வீராவையே தொடர்வதைக் கண்டுகொண்ட அவனின் தோழிகள் அவளைப் பார்த்து கேலியாக ரசித்துச் சிரித்ததை அவள் கவனிக்கவில்லை.

கணவன் கண்டுகொள்ளாததால் சந்தியா தன்னோடு பேசிய பெண்களோடே சுற்றித் திரிய வேண்டியதாய் இருந்தது. பாவம் அவர்களும் நான்கு ஆண்டுகள் கழித்துச் சந்தித்து கொண்டிருந்தபடியால் கொஞ்ச நேரத்திலேயே இவளை மறந்து அவர்களுக்கான பேச்சிற்குள் மூழ்கிப் போக, அவள் அங்கு அதிகப்படி என்று தெரிந்தும் வேறு வழியில்லாமல் அவள் அங்கேயே இருக்க வேண்டியதாயிற்று.

பாஃவே முறையில் உணவு பரிமாறத் தொடங்கியிருக்க, நண்பர்களோடு பேசியபடியே வீரேந்திரன் உணவுண்ண தொடங்கிவிட்டான். அவனையே பார்வையால் வட்டமிட்டுக் கொண்டிருந்த சந்தியாவின் முகம் அதைப் பார்த்ததும் வாடிப் போயிற்று.

என் நினைப்பே இவனுக்கு இருக்காதா? இவனோடு வந்தே இருக்கக் கூடாதோ?

“சாப்பிட போலாமா சந்தியா?” அவளின் யோசனையைக் கலைத்து உடனிருந்தவர்கள் அழைத்தார்கள்.

சிறு சிரிப்புடன் அவர்களோடு இணைந்து கொண்டாள். அவரவர் தட்டில் உணவை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தபோது வீரா அருகே சென்றார்கள் அனைவரும்.

‘ம்ப்ச் அங்கே ஏன் போறாங்க?’ என சந்தியாவிற்குச் சலிப்பாக வந்தது. அமைதியாக உடன் சென்றாள்.

“என்ன வீரா பொண்டாட்டி பக்கம் கூட திரும்பிப் பார்க்க மாட்டேங்கிற?” ஒரு பெண் கேலி செய்ய, மற்ற அனைவரும் அதற்கு சிரிக்க, சந்தியாவிற்கு அவமானமாக இருந்தது.

இப்படி எல்லாரும் விளையாட்டாக விமர்சிக்கும் அளவா எனக்கு வாழ்க்கை அமைய வேண்டும் என்று எண்ணியவள் உணவில் மட்டும் கவனம் போல நின்றிருந்தாள்.

“அங்கே தான் நீ இதை புரிஞ்சுக்கணும்டி. பொண்டாட்டியைப் பார்த்தா நம்மளும் கண்ணுல படுவோம். நம்ம வீரா யாரு ஏகபத்தினிவிரதன் ஆச்சே… அப்படி எல்லாம் பார்ப்பானா?” என்றாள் இன்னொரு பெண்.

இதற்கும் சிரிப்பலை. வீரா லேசாகச் சிரித்தான் வேறொன்றும் சொல்லவில்லை. அவன் பார்வை சந்தியாவை அளவிட்டது. தலையைக் குனிந்து நின்றிருந்தவளுக்கு அவனின் பார்வை புரியவில்லை.

“வீராவோட சிரிப்பை பார்த்தீங்களா? நம்ம கண்ணுல இவன் சிரிப்பு தென்பட சந்தியா வர வேண்டியதா இருக்கு”

“சந்தியாவும் நம்ம காலேஜ் தான் போல… தலைவர் எதுவும் சந்துல சிந்து பாடி இருப்பாரோ… என்ன வீரா இது நிஜமாலுமே அரேஞ்டு மேரேஜ் தானா?” பாரபட்சமின்றி கேலியில் இறங்கியிருந்தது நண்பர்கள் கூட்டம். தனக்குக் காதே கேட்கவில்லை என்கிற பாவனையில் சந்தியா உணவை அளந்து கொண்டிருந்தாள்.

“என்ன உங்களுக்கெல்லாம் தைரியம் கூடிருச்சு போலவே… நம்ம வீராவையே கலாய்க்கறீங்க… அவன்கிட்ட பேசவே பயந்த காலம் எல்லாம் மறந்துடுச்சா?” அங்கிருந்த ஒருவன் தன் வகுப்பு பெண்களைப் பதிலுக்குக் கேலி செய்தான்.

அசராமல், “எங்களுக்கென்ன பயம்? அதுதான் சந்தியா இருக்காளே…” என அமைதியாக ஒதுங்கியிருந்தவளை உள்ளிழுத்தார்கள்.

“இது பெரிய சப்போர்ட் தான்… அப்ப வீராவால கண்டிப்பா ஒன்னும் பண்ண முடியாது” என்று சொன்னவன் சிரிக்க மற்றவர்களும் சிரித்தார்கள்.

சந்தியாவிற்கும் இது சாதாரண விளையாட்டு பேச்சு என்று புரிகிறது தான். ஆனாலும் தாங்கள் வாழும் வாழ்க்கைமுறை நினைவு வர மனம் கனத்து போனது. பெயருக்கு புன்னகைத்தாலும் முகத்தில் பொலிவே இல்லை. அது வீராவின் பார்வையிலும் பட்டது. அவன் புருவங்கள் யோசனையில் சுருங்கிற்று.

இப்படியே ஆங்காங்கு கூடிக் கூடி பேசியபடி அனைவரும் உணவை முடித்தார்கள்.

என்னவோ ஒரு மாதிரி மனதளவில் சோர்ந்து போனது போல் தெரிய சந்தியா சென்று அமைதியாக அமர்ந்து கொண்டாள். கணவனைப் பார்வையால் பின் தொடர்வதையும் நிறுத்தியிருந்தாள்.

அப்பொழுது தான் வீரேந்திரன் அதை செய்தான். நண்பர்களோடு சேர்ந்து மது எடுத்துக் கொண்டான். எதேச்சையாக திரும்பிப் பார்த்த சந்தியா உச்சபட்ச அதிர்ச்சியில் அதிர்ந்து போனாள்.

இவனுக்கு இந்த பழக்கம் வேற இருக்கா? என்னோடு வந்திருக்கிறானே… திரும்பி இவன் தானே காரை ஓட்ட வேண்டும்… அந்த எண்ணம் கூட இருக்காதா?

ஒருமாதிரி கையறு நிலையில் அவன் குடிப்பதை வெறிக்க வெறிக்கப் பார்த்து கொண்டிருந்தவளுக்குத் தொண்டையையும் மனதையும் என்னவோ அடைத்தது. மொத்தமாக இரண்டு கிளாஸ் குடித்திருப்பான். அதன்பிறகு குடிக்கவில்லை.

சந்தியா அவனிடமிருந்து தன் பார்வையை மாற்றவில்லை. அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் மது எடுத்துக்கொண்ட போது அமைதியாக அங்கேயே இருந்தவளுக்கு, அவர்கள் இருந்த கூட்டத்திற்குள் ரசாபாசம் ஆகும்போது அமைதியாக இருக்க முடியவில்லை.

வீரேந்திரன் தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது இன்னொருவன் வந்தான். வீராவிடம் எதுவோ வம்பு வளர்த்தான். கொஞ்ச நேரத்தில் வாய்ப்பேச்சு சண்டையில் வந்து நின்றது.

அங்கு சூழல் மாற தொடங்கியபோதே சந்தியா எழுந்து அவ்விடம் நோக்கி நடக்கத் தொடங்கி விட்டாள்.

அச்சமும் படப்படப்புமாக இவள் அவர்களை வேகமாக நெருங்கும் போதே வீரா அடித்த அடியில் எதிரில் இருந்தவன் தூரப்போய் கீழே விழுந்திருந்தான்.

கீழே விழுந்தவனை மேலும் அடிக்கும் பொருட்டு முன்னோக்கி எட்டு வைக்க தொடங்கியவனின் முறுக்கேறிய கரத்தை வேகமாகப் பிடித்துக் கொண்டாள் சந்தியா.

சில்லென்ற கரம் அவனின் கோபத்தைத் தணிக்கவில்லை.

மாறாக கோபத்தில் தணலாய் ஜொலித்த முகத்தோடு மனையாளைத் திரும்பி முறைத்தான். பயத்தில் வெளிறிய முகத்தோடு, இறைஞ்சல் பார்வையோடு சந்தியா அருகில் நின்றிருந்தாள்.

“கையை முதல்ல விடுடி…” வீரா அடிக்குரலில் சீறினான். அவன் நினைத்தால் நொடியில் அவளின் கையை உதறியிருக்க முடியும். என்னவோ அந்த யோசனை அவனுக்கும் வரவில்லை. அவன் தன் கையை உதறி விடாததை சந்தியாவும் கவனத்தில் கொள்ளவில்லை.

“பிளீஸ்…” என்றாள் கெஞ்சலாக.

“யூ ஆர் கிராஸிங் யுவர் லிமிட்… முதல்ல கையைவிடு… இங்கிருந்து தூர போ…” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

அவள் கையையும் எடுக்கவில்லை. பார்வையையும் மாற்றவில்லை.

அதற்குள் கீழே விழுந்து கிடந்தவனை மற்றவர்கள் தூக்கி நிறுத்தியிருந்தார்கள். “மச்சான் சண்டை வேண்டாம் விடுடா” என்றான் ஒருவன்.

“டேய் நீ கிளம்புடா” என அடிவாங்கியவனை அங்கிருந்து அனுப்பப் பார்த்தார்கள்.

“மச்சான் அடிச்சுக்கவா கெட் டுகதேர் வந்தோம். பிரீயா விடுடா” என இன்னொருவன் சமாதானம் செய்தான்.

அடிவாங்கியவன் அங்கிருந்து சென்று விட்டான் என்று தெரிந்ததும் தான் வீரேந்திரனின் கையையே விட்டாள்.

“இதுவரை வீராவை யாரும் கண்ட்ரோல் செஞ்சதே இல்லை. அவனும் யாருக்கும் அடங்கி போனது இல்லை. சந்தியா சாது மாதிரி தெரிஞ்சாலும் வீராவையே கன்ட்ரோல் பண்ணிட்டா பாரேன். ஹப்பா செம ஸ்வீட்… செம போல்ட்…” இவர்களுக்குள் இருக்கும் உட்பூசல் தெரியாமல் சிலாகித்துப் பேசிய ஒரு பெண்ணின் குரல் இவர்கள் செவியில் வந்து விழ, சந்தியாவிற்கு ஐயோ என்றிருந்தது.

வீராவோ புலியின் சீற்றத்தோடு நின்றிருந்தான்.

அவனின் நண்பர்களின் எந்த சமாதானமும் அவனிடம் எடுபடவில்லை. யாரிடமும் பேசாமல் விறுவிறுவென அங்கிருந்து சென்றான்.

சந்தியா அவனைப் பின்தொடர்ந்து வேகமாக நடந்தபடியே எல்லாருக்கும் பொதுவாகத் தலையசைத்து விடைபெற்றாள்.

காரில் ஏறி அமர்ந்தவளின் கழுத்தை வலக்கரத்தால் இறுகப் பற்றியவன், “என்னடி என்னை பொண்டாட்டி தாசன்னு காட்டணுமா உனக்கு? என்னையே தடுக்குமளவு தைரியம் எங்க இருந்து வந்தது உனக்கு?” என்றான் ஆக்ரோஷமாக.

முகம் முழுவதும் வலியின் சாயல் தெரிந்த போதும் கணவனை வெறுமையான விழிகளால் பார்த்தாள்.

அவள் முகமும் பார்வையும் அசைக்க, ‘ச்சே!’ என்று கையை உதறியபடி உருவியவன், தன் கோபத்தை வண்டி ஓட்டுவதில் காட்டினான்.

வாடிய முகத்தில் கண்ணீரைச் சிற்றருவியாய் சிதறவிட்டபடி கண்மூடி அமர்ந்திருந்தாள் சந்தியா.

அன்றைய உறக்கத்திலும் சந்தியா பொல்லாத சொப்பனங்களைக் கண்டு அலறி துடித்தாள். வீரேந்திரன் மீண்டும் யோசனையானான். தன் கோபம் மறந்து மனைவியை தன் கை அணைப்பில் உறங்க வைத்தான்.