ஆனந்த போர்க்களம் – 6

புது மஞ்சள் தாலி மின்ன அழகு பதுமையாய் அமர்ந்திருந்தாள் சந்தியா. திருமணம் நல்லபடியாக முடிந்திருந்தது. இதுநாள் வரை ஒரு துளி ஈடுபாட்டைக் கூட வீரேந்திரன் அவள்மீது காட்டியிருந்ததில்லை. இருந்தாலும் இந்த இரவை எதிர்கொள்வதில் அவளுக்கு அத்தனை பயமாக இருந்தது.

வெட்க சிவப்பே கன்னங்களில் ஏறாமல் மணமகளாகிய பெருமைக்குரிய சந்தியா, இந்த நாளின் மிச்ச மணித்துளிகளையும் அவ்வாறே கடக்க நேருமா என்று தெரியவில்லை.

‘உன்மேல இண்ட்ரெஸ்ட்டே இல்லைன்னு சொல்லிட்டாரு. கண்டிப்பா எதுவும் நடக்காது. நீ பயப்படாத…’ என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாள்.

என்னவோ அந்த ஆறுதலும் பிடித்தமாய் இருந்து தொலைக்கவில்லை. அதற்கான காரணமும் அவளுக்கு விளங்கவில்லை.

சற்று நேரம் சென்றுதான் வீரேந்திரன் அறைக்கு வந்தான். இன்னமும் வெளிச்சமாக இருந்த அறையையும், கடிகாரத்தில் நேரத்தையும் பார்த்தவன், “ம்ப்ச்… இன்னும் தூங்காம என்ன செய்யற?” என்றான் அதிருப்தியாக.

இதென்ன கேள்வி என்ற வெறுமையான பார்வை அவளிடம்.

“தூங்கினா ஒரே இடத்துல தூங்குவியா இல்லை கட்டில் முழுக்க உருண்டுட்டு இருப்பியா?” முதல் கேள்விக்குப் பதில் வராத போதும் அடுத்த கேள்வி வேகமாக வந்திருந்தது அவனிடம்.

என்னடா இது என்ற பாவனை தான் அவளிடம்! ஏன் இப்படிக் கேட்கிறான் என்று வேறு புரியாமல், “அதெல்லாம் இல்லை…” என்றாள்.

“அப்ப ஓகே… கல்யாணம் நடக்குதேன்னு பெரிய கட்டில் தான் போட சொல்லியிருக்கேன். என்ன உருண்டாலும் அந்த பக்கம் மட்டும் உருண்டுக்க… நீ இந்த சைட்… நான் இந்த சைட்” என கட்டிலில் பாகம் பிரித்தவன்,

“அப்பறம் ரொம்ப முக்கியமான விஷயம். ஏற்கனவே சொன்னது தான். இருந்தாலும் திரும்பவும் சொல்லறேன். இந்த பாசத்தை காட்டறேன். என் புருஷனை அன்பாலேயே மயக்கறேன் அது இதுன்னு எதுவும் ட்ரை பண்ணிடாத… எனக்கு அதெல்லாம் சுத்தமா பிடிக்காது.

நான் இப்படியே இருக்கிறது தான் எனக்கு பிடிச்சிருக்கு… என்கிட்ட, என்னை சார்ந்த விஷயத்துல நீ அட்வான்டேஜ் எடுத்துக்காத வரை இந்த லைப் சுமூத்தா போகும். அதை நீ மீறிட்டா…” என்றவனை முடிக்க விடாமல் சந்தியா இடையிட்டாள்.

விரும்பியோ விரும்பாமலோ இன்றுதான் இவன் கையால் தாலியை வாங்கி இவன் வாழ்வில் ஓர் அங்கமாகியிருக்கிறாள். இன்றே எதுவும் அபசகுனமாய் பேசி வைக்கப் போகிறான் என்று அவசரமாக இடையிட்டவள்,

“உங்ககிட்ட யாரும் நீங்க ஏன் சினிமா ஹீரோ ஆகலைன்னு கேட்டிருக்காங்களா?” என்றாள் சம்பந்தமே இல்லாமல்.

சுழித்த புருவங்களுடன், “ஏன்?” என்றான்.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க டிப்ஸ் கொடுங்கன்னு எதுவும் கேட்டிருக்கங்களா என்ன?” மீண்டும் அப்பாவியாய் இமை சிமிட்டி கேட்டாள்.

“ம்ப்ச்… என்ன உளறிட்டு இருக்க?”

“பின்ன என்னவோ உங்களை பார்த்தாலே பொண்ணுங்க மயங்கி விழற மாதிரியும்… உங்க பின்னாடி உங்களை மயக்க நிறைய பொண்ணுங்க கியூவுல நிக்கிற மாதிரியும் எதுக்கு இத்தனை பில்ட் அப் தரீங்க. உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும் இந்த கல்யாணம் பிடிக்கலை தான்… ஆக வீணா வெட்டி கதை சொல்லி நேரத்தை போக்காம தூங்குங்க…” என்று பொரிந்தாள்.

மனதிற்குள் சொல்ல முடியாத பாரம். திருமணம் திருமணம் தானே! இப்பொழுது பிடித்தமின்றி இதில் அடியெடுத்து வைத்திருந்தாலும் எதிர்காலத்தில் மாற்றம் வரும் என்று நினைத்திருந்தாள். இவன் பேசுவதைப் பார்த்தால் வாழ்நாள் முழுக்க வெறுமையான வாழ்க்கை தான் போல!

இந்த எண்ணப்போக்குடன் இருப்பவர்களெல்லாம் எதற்குத் திருமணம் செய்ய வேண்டும்? வேண்டாம் என்று விடாப்பிடியாக மறுத்து நின்றிருக்க வேண்டியது தானே! அதை விட்டுவிட்டு, ச்சு! எல்லாம் என் நேரம்… என சலித்தபடி படுக்கையில் சரிந்திருந்தாள்.

அப்பா உங்களுக்கு ஏன் இவனை இந்தளவு பிடிக்கும்? மகளுக்கும் நிகராக இவனைப் பிடிக்க என்ன காரணம்? உங்களின் தன்னலமற்ற அன்புக்குக் கொஞ்சம் கூட பொருத்தமற்றவன் இவன். இதை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உணராமலே இருந்தால் பரவாயில்லை. உணர நேர்ந்தால் எந்தளவு உடைந்து போவீர்களோ? என்று கலக்கத்தில் தவித்தபடியே தான் உறங்கத்தை தழுவினாள்.

கனவில் ஏதேதோ சஞ்சலங்கள். எங்கோ திக்கற்ற காட்டில் தனியாக மாட்டிக் கொண்டது போல மாய காட்சிகள். இன்னொரு கனவில் நீண்ட நெடிய பாதையில் தன்னந்தனியாக நடந்து கொண்டிருக்கிறாள். திடீரென்று அவளின் பாதையில் ஒரு பெரு பள்ளம் உருவாகி அது அவளை உள்ளிழுத்துக் கொள்கிறது.

வீல் என்று கத்தியபடி பள்ளத்தில் விழுந்து கொண்டிருக்கிறாள். யாரோ தன்னை இழுத்துப் பிடித்துக் காக்க முயல்கிறார்கள். முதுகை ஆதரவாகத் தடவித் தருகிறார்கள். தண்ணீரைப் பருக கொடுத்து ஆசுவாசப்படுத்துகிறார்கள். மெல்ல அமைதியானவள் மீட்டவரின் அருகாமையிலேயே நன்றாக உறங்கிப் போகிறாள்.

தன் கரங்களுக்குள் சுருண்டிருந்த மனைவியை யோசனையாகப் பார்த்தபடி வீரேந்திரன் படுத்திருந்தான். அவளது சுழித்திருந்த புருவங்களை இதமாக நீவி விட்டும், முதுகில் ஆதரவாகத் தட்டி தந்தும் கொண்டிருந்தான்.

‘எதுக்கு இவ்வளவு பயம் இவளுக்கு?’ என்ற யோசனை தான் அவனிடம். அவள் அமைதியடைந்து ஆழ்ந்த உறக்கத்தைத் தழுவிய பிறகு தான் இவன் உறங்கினான்.

சந்தியா உறக்கம் களைந்து எழுந்தபோது வீரேந்திரன் ஏற்கனவே எழுந்து விட்டிருந்தான்.

‘இவனிடம் இப்பொழுது பேச வேண்டுமா? இல்லை நம் வழக்கமான வேலையைப் பார்த்தால் போதுமா?’ என்ற குழப்பம் அவளுக்கு. அதைத் தொடர்ந்து, ‘இந்த வீட்டின் மருமகளாய் இந்த வீட்டில் நான் என்ன செய்ய வேண்டியிருக்கும்? அதெல்லாம் யார் எனக்கு சொல்லுவார்கள்?’ என்ற யோசனை தொடர்ந்தது.

மாமனார், மாமியார் இல்லாத வீட்டில் கணவனின் ஆதரவும், அன்புமின்றி அடியெடுத்து வைத்திருக்கும் தன் நிலையை நினைத்துப் பரிதாபப்படுவதைத் தவிர அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை. அவள் முகம் வாடிப் போயிற்று.

“என்ன ஆச்சு? எதுவும் வேணுமா?” என்று வீரேந்திரனின் குரலில் அவனை மெளனமாக ஏறிட்டுப் பார்த்தாள். அவன் குரலில் தெரிந்த அனுசரணையில் கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

“ம்ப்ச்… இப்ப இங்கே நான் என்ன செய்யணும்ன்னு தெரியலை” என்றாள் சலிப்புடன்.

“ஏன் அங்கே தூங்கி எழுந்ததும் என்ன செய்வ?”

“எங்க அப்பா கிட்ட பேசுவேன். வீட்டு வேலை செய்வேன். சமைப்பேன், பிரீ லான்சர் ஜாப் கூட…” என்றுவிட்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவள் சிவில் இன்ஜினியரிங் முடித்திருந்தாள். நாராயணனுக்கு அவளை வேலைக்கு அனுப்பும் எண்ணம் இல்லை என்று தெரிந்ததும் கல்லூரி படிக்கும்போதே 2D பிளான் போடுவதற்காக ஆட்டோ கேட் (Auto CAD) கோர்ஸும், 3D மாடலிங் வரைவதற்கான ரெவிட் (Revit) கோர்ஸும் முடித்திருந்தபடியால், கல்லூரியின் கடைசி செமஸ்டரிலிருந்து பிரீ லான்சர் பிராஜெக்ட்களை எடுத்துச் செய்து வருகிறாள். அதில் ஒன்றிரண்டு நிறுவனம் பிராஜெக்ட் இருக்கும்போது இவளை நேரடியாகவே தொடர்பு கொள்ளும் அளவிற்கு தன் வேலையில் சில மாதங்களிலேயே முன்னுக்கு வந்திருந்தாள்.

“இங்கேயும் அதையே செய்ய வேண்டியது தானே… இதெல்லாம் எதுக்கு யோசிச்சிட்டு இருக்க…” என்று அவன் இலகுவாகச் சொல்லி முடித்ததும், என்னடா இது இந்த ரௌடி இப்படி எல்லாம் நார்மலா பேசறவன் இல்லையே… எங்கேயோ இடிக்குதே… என யோசித்தவளின் புருவம் யோசனையாய் சுருங்கியது.

இவளிடம் முதன் முதலில் பேசியபோதும் இலகுவாகத் தான் பேசினான் என்பது அவளுக்கு வசதியாக மறந்து போயிற்று. அன்றைய நாளுக்குப் பிறகு திருமணம் வரையிலும், அவன் பேசாமல் விட்ட பொழுதுகளின் கோபம் தான் அவளையுமறியாமல் அவளுக்குள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

“இப்ப என்ன?” என்றான் அவளின் யோசனையைப் பார்த்து. ஒன்றுமில்லை என்று தலையசைத்தவள் மாற்றுடையோடு குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.

செல்பவளின் முதுகையே யோசனையாகப் பார்த்திருந்தான் வீரேந்திரன். அவனுக்கு அவளிடம் இப்படி புடவை எல்லாம் அணிந்து கொண்டு தூங்காதே என்று சொல்லவேண்டுமாய் இருந்தது. ஆனால், நேற்று கனவில் அவள் அலறிய அலறலில் மிரண்டு போயிருந்தவன், அவளிடம் இதுபோல எதைக் குறித்தும் பேசுவதற்கு வெகுவாக தயங்கினான்.

ஏற்கனவே மிரண்டு போயிருக்கிறாள். கொஞ்சம் இங்கே பொருந்திப் போகட்டும். நாம் பாட்டுக்கு அது இதுவென சொல்லி, அதை இவள் மனதிற்குள் குழப்பி… தன்னை பேய், பிசாசு போலப் பார்த்து வைப்பாள் எதற்கு வம்பு என்று எண்ணியவன், இனிமேல் கொஞ்சம் இவளிடம் பார்த்துப் பேச வேண்டும் என்ற அவசர முடிவொன்றை எடுத்தபடி வெளியே கிளம்பிச் சென்றிருந்தான்.

அந்த வீட்டில் சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வதற்குக் கல்யாணி என்ற ஒரு அம்மா இருந்தார். சந்தியாவிடம் முதலில் ஆதரவுக்கரம் நீட்டியது அந்த அம்மா தான். அடுத்த ஆதரவுக்கரம் அவளின் கொழுந்தன் ஸ்ரீதரனிடம் இருந்து கிடைத்தது. அதில் அவளின் நாட்கள் நல்லபடியாகச் சென்றது.

சந்தியாவைப் பொறுத்த வரையில் பிறந்த வீட்டில் இருந்ததற்கும் புகுந்த வீட்டில் இருப்பதற்கும் எந்த மாறுதலும் இல்லை. அங்கு என்ன செய்தாளோ அதையே தான் இங்கும் செய்து கொண்டிருந்தாள்.

என்ன அந்த முசுடு, ரௌடி வீரேந்திரனோடு ஒரே அறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதாக இருந்தது. அவ்வளவு தான் வித்தியாசம். அதிலும் அப்படியொன்றும் அதிக தொல்லை இல்லை. அவன் பொதுவாக அதிக நேரம் வீட்டில் இருப்பதில்லை.

அதை ஒதுக்கினால், அவளுக்கு இரண்டு நன்மைகள். அது கல்யாணி அம்மாவும், ஸ்ரீதரனும் தான்.

கல்யாணி அம்மாவோடு இருந்தால் நன்றாகப் பொழுது போகும். எல்லா சீரியலையும் பார்த்து வில்லன்களையும், வில்லிகளையும் சுவைப்படத் திட்டுவார். அப்பறம் அந்த ஏரியாவில் இருக்கும் எல்லா வீட்டுக் கதைகளும் அவருக்குத் தெரியும். வாயை திறந்தால் ஒரே கிசுகிசு தான்.

‘கல்யாணிம்மா நமக்கெதுக்கு அதெல்லாம்? என இவள் சொன்னாலும் விடவே மாட்டார்.

‘அவ புருஷன் செஞ்ச அழும்புக்கு நானா இருந்தா மண்டையில கல்லே போட்டு கொன்னிருப்பேன்… அவ என்னடான்னா அப்பாவி…’ என அவரால் அப்பாவி வரையறுக்கப்பட்ட அந்த பெண், உண்மையில் புருஷனை அடித்த அடியில் அவன் கையில் மாவுக்கட்டுடன் படுத்திருப்பான் என்பது வேறு கதை.

“ஆமாம்… ஆமாம்… ரொம்ப அப்பாவி தான்! பாவம்” என இவள் வம்பிழுப்பது தெரியாமல் அடுத்த கதையைச் சொல்லத் தொடங்கி விடுவார்.

ஸ்ரீதரனோ சகோதரனா நண்பனா என பிரித்தறிய முடியாத கலவை. இப்பொழுதெல்லாம் அவன் அண்ணி என்று அவளை அழைப்பதே இல்லை கெஃக் (kegg) என்பது தான் அவளுக்கு அவன் சூட்டியிருக்கும் பெயர். அவளும் அவனை ஆயர்பாடி என்று தான் அழைப்பாள்.

“நீ சொல்லற பேரு உனக்கு வாயில நுழையுதா?” என்று தலையிலடித்து கொள்வான் கொழுந்தன்.

“அதெல்லாம் நுழையும். உனக்கு ரெண்டு எழுத்துல பேரு வைக்கணும். அர்த்தம் இருக்கோ இல்லையோ எதையாவது வைக்க வேண்டியது…” என்று அவள் தொடங்கும் போது ஸ்ரீதரன் கேலியாக உதடு வளைப்பான். அதற்கான அர்த்தம் இன்று வரையிலும் அவளுக்கு புரியவில்லை. என்ன என்று விசாரித்தாலும் சொல்லித் தொலைய மாட்டான். அழுத்தக்காரன். பிடிவாதக்காரன்.

இவளே தொடர்ந்து, “நான் வெச்சிருக்க பேரு தான் உனக்குப் பக்கா பொருத்தம். உன்னை மாதிரி அர்த்தம் இல்லாததை எல்லாம் நான் வெக்க மாட்டேன்” என்பாள் உதடு சுளித்து.

“பர்பெக்ட் 90ஸ் கிட்ஸ்…” என சொல்லிச் சிரிப்பான் அவன்.

“போடா போடா… மாயக்கண்ணன் மாதிரி எந்நேரமும் பொண்ணுங்க கூட்டத்தோட சுத்தற நீ எல்லாம் 90ஸ் கிட்ஸ் பத்தி பேச வந்துட்ட… சரியான 2k கிட்ஸ்டா நீ? நாங்க 90ஸ் கிட்ஸ் எல்லாம் எவ்வளவு டிஸ்பிளின் தெரியுமா?” என்று இல்லாத காலரை தூக்கி விட்டபடி சொல்லக் சொல்ல கேலியாக வாய் பொத்தி சிரிப்பான்.

அவன் கேலியில் கோபம் பொங்க, “உன்னை…” என முதுகில் மொத்துவாள். அவனும் பதிலுக்கு இவளை மொத்துவான். இப்படி இவர்கள் சண்டையும் கலகலப்புமாக இருப்பதை வீரேந்திரன் அறிந்ததே இல்லை.

அவனைப் பொறுத்தவரையில் சந்தியாவால் வீட்டிற்கும், தனக்கும் எந்த தொல்லையும் இல்லை என்பதே அவனுக்கு போதுமானதாக இருந்தது.