ஆனந்த போர்க்களம் – 4

“சந்தியா…” வேலைக்குக் கிளம்பிய நாராயணன் வாசல் வரை சென்றுவிட்டு மீண்டும் அழைக்க, “சொல்லுங்கப்பா…” என உடனேயே ஓடி வந்தாள்.

அவளின் தலையை ஆதரவாக வருடிப் பரிவுடன் பார்த்தார். ஒன்றும் புரியாமல் அவரையே பார்த்திருக்க, “அப்பா மேல எதுவும் கோபம் இல்லையே…” என்றார் கவலையுடன்.

அவரின் குரலின் தவிப்பிலும், கவலையைச் சுமந்திருந்த முகத்திலும் சந்தியாவுக்கு உருகிப் போனது. “என்னப்பா நீங்க?” என்றாள் தவிப்பாக. தந்தையின் இடக்கரத்தை அழுத்தமாக தன் கரங்களுக்குள் பொதித்து வைத்து அழுத்தம் தந்தாள். “எனக்கு எந்த கோபமும் வருத்தமும் இல்லப்பா. பிடிவாதம் பிடிச்சு உங்களைக் கஷ்டப்படுத்தி இருக்க கூடாதுப்பா. ரொம்ப சாரி” என்றாள் குன்றிய குரலில்.

“வீரா ரொம்ப நல்லவன் மா. கோபம், பிடிவாதம் மட்டும் தான் அவன்கிட்ட அதிகம்… அம்மா, அப்பா இல்லாம வளர்ந்தவன் இந்த குறை கூட இல்லாட்டி எப்படிம்மா?” என்றார் அவளுக்கு எதையோ உணர்த்த முயன்றவராய்.

அவரின் மனசஞ்சலம் புரிய, “நீங்க எனக்கு நல்லது தான் செய்வீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்குப்பா… எதுவும் யோசிச்சு குழப்பிக்காதீங்க” என்றாள் சமாதானமாக.

“சரிம்மா பாத்து பத்திரம். சாயங்காலம் தெரிஞ்சவங்க வரதா சொல்லி இருந்தாங்க. வந்துட்டு போனதும் போன் பண்ணு… சரியா” என்றவர் கிளம்பி விட்டிருந்தார்.

 .

அப்போதைக்கு தலையசைத்தவளுக்குத் தந்தை கிளம்பியதும் தான் உறுத்தியது… ‘தெரிஞ்சவங்க வந்தா தானே போன் பண்ணனும். வந்துட்டு போன பிறகு எதுக்கு போன் பண்ண சொல்லறாரு? ஒருவேளை எதுவும் கொடுக்க வருவாங்க போல…’ அவளாகவே யோசித்து, அவளாகவே பதிலும் கண்டறிந்து கொண்டு வீட்டினுள்ளே போய் விட்டாள்.

சந்தியா விருந்தினரின் வருகைக்காக மாலையில் காத்திருக்க, வருகை தந்ததோ வம்புகள் படை. ஆணும் பெண்ணுமாய் ஐவர் இவளுடன் படித்த நண்பர்கள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டிற்கு வந்திருக்க, அவர்களை எதிர்பார்க்காதவள் திகைத்துத் தான் போனாள்.

வந்தவர்கள் யாரும் அவளின் நெருங்கிய நண்பர்கள் இல்லை. இதற்கு முன்னர் வீட்டிற்கு வந்ததும் இல்லை. ஏன் இன்று வீட்டிற்கு வருவதாகத் தகவல் கூட சொல்லவில்லை. பொதுவாக உடன் படிக்கும் ஆண் நண்பர்களிடம் சந்தியா சிக்கனமாக பேசுவதோடு சரி. இப்படி வீடு வருமளவு நட்பெல்லாம் அவர்களோடு வைத்துக் கொள்வதில்லை. அம்மா இல்லாமல் தனியாக இருக்கும் பெண் என்பதால் அதையெல்லாம் அவளே புரிந்து தான் நடந்து கொள்வாள்.

இப்பொழுது திடீரென்று இவர்கள் வந்து நிற்க, வரவேற்கவே தயக்கமாக இருந்தபோதும், வீடுவரை வந்தவர்களை என்ன செய்ய என்று தெரியாமல் சம்பிரதாயத்துக்கு வீட்டிற்குள் அழைத்தாள்.

அதிலும் இவர்களோடு வந்திருக்கும் வருண், கல்லூரியில் இவளை வெறிக்க வெறிக்கப் பார்ப்பவன். அவன் நோக்கம் புரிந்தவள் அவன் இருக்கும் திசைக்கே திரும்ப மாட்டாள். இன்று அவனையும் வரவேற்க வேண்டிய தன் நிலையை நொந்து தான் போனாள்.

இது மேனகாவின் ஏற்பாடு. வீரேந்திரனுக்கு திருமணம் என்றதும் சந்தியாவைப் பற்றி விசாரிக்கத் தொடங்கி விட்டாள். அவளுக்குக் காதல், அது, இதுவென இருந்து அவள் கம்பியை நீட்டி விட்டால் நமக்கு தானே லாபம் என்று விசாரித்தவளுக்கு உவப்பாக ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

வெகு தீவிர விசாரிப்பில் கொசுறாகக் கிடைத்தது தான் வருணைப் பற்றிய செய்தி. எப்படியாவது அவன் காதலை நன்கு தூண்டிவிட்டு திருமணத்திற்கு முன்பு… முடிந்தால் திருமணத்தன்றே சந்தியாவை வருணோடு கிளப்பி விட்டுவிட்டால், பிறகு எல்லாம் தன்போல நமக்கு சாதகமாக வந்துவிடும் என்று மனக்கோட்டை கட்டினாள்.

அதற்கு தகுந்தாற்போல நேற்று பெண் பார்க்கும் வைபவத்தில் சந்தியா வீரேந்திரனை ஏறெடுத்தும் பார்க்காமல், பயத்தோடும் பதற்றத்தோடும் இருந்ததை கவனித்தவளுக்கு தன் திட்டம் எளிதாக நிறைவேறி விடும் என்ற குதூகலம் தான்.

அதிலும் வீரேந்திரன் சந்தியாவைப் பார்த்துப் பேசுவதற்காக மறுநாள் வருவதாக சொல்லியிருக்க, அப்பொழுதே கலகத்தைத் தொடங்கிவிடுவோம் என்றுதான் வருணைச் சந்தியா வீட்டுக்குக் கிளப்பி விட்டது.

சந்தியாவிற்கு நடந்து கொண்டிருக்கும் திருமண ஏற்பாட்டையும், அதில் அவளுக்கு விருப்பம் இல்லையென்றும் வருணுக்குத் தெரியப்படுத்தியவள், ‘அவள் வீட்டிற்கு உன் தோழர், தோழிகளோடு போ… சந்தர்ப்பம் கிடைக்கும்போது தனியாகப் பேசிப்பார்…’ என்றும் வேறொருவனை வைத்துத் தூண்டிவிட, இதோ அவள் திட்டப்படி வருண் சந்தியாவின் வீட்டிற்குள் நுழைந்து விட்டான்.

“என்ன விஷயம் ரோஜா? எல்லாரும் திடீர்ன்னு வந்திருக்கீங்க. என்ன ஸ்பெஷல்?” என எல்லாருக்கும் குடிக்கத் தண்ணீர் கொடுத்தபடியே சந்தியா விசாரித்தாள். மறைமுகமாக ஏன் வந்தீர்கள் என்றுதான் கொஞ்சம் நாகரீகமாக கேட்டு வைத்தாள்.

அப்பொழுது தான் வாசல்படி ஏறியிருந்த வீரேந்திரன், காலிங் பெல் அடிக்க நினைத்த நேரம், வெளியிலிருந்த காலணிகளை பார்த்துவிட்டு உள்ளே எட்டிப் பார்க்க, சந்தியா இவ்வாறு விசாரிப்பதைக் கேட்டு வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டான்.

‘ரொம்ப நல்ல விருந்தோம்பல். இவளைத் தேடி வீட்டுக்கு வந்தீங்க பாருங்க’ என்று முணுமுணுத்து விட்டு, சரி அவர்கள் போகட்டும் அப்பறம் நாம் போகலாம் என வெளியிலிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டான்.

“என்ன சந்தியா நாங்க உன் வீட்டுக்கு வரக் கூடாதா என்ன?” என்று ரோஜா கேட்டாள்.

“அச்சோ! அப்படியெல்லாம் இல்லை. திடீர்ன்னு வந்திருக்கீங்களே எதுவும் விசேஷமான்னு தான் கேட்டேன். சரி என்ன சாப்பிடறீங்க காபியா? டீயா?” என உபசரித்தாள்.

“உன் கையால விஷம் கொடுத்தா கூட குடிக்க இங்க ஒருத்தன் தயார் தான்…” என வருணை பார்த்தபடி ஒருவன் கேலியாகச் சொல்ல, சந்தியாவிற்கு அது ரசிக்கவில்லை. முகம் மாறாமல் காக்க வெகுவாக சிரமப்பட்டாள்.

அருகிலேயே அமர்ந்திருந்ததால் வீரேந்திரனுக்கும் தெளிவாகக் கேட்டிருக்க, அவன் சுழித்த புருவங்களோடு உள்ளே தன் பார்வையை ஓட்டினான். அவளைப் பார்க்காமல் மற்றவர்களை நோட்டம் விட வேண்டும் என்று எண்ணியபடியே திரும்பினாலும் அவனால் அவளை கவனிக்காமல் இருக்க முடியவில்லை

இந்த கேலி பிடிக்கவில்லை என்ற அசூயை தோற்றத்திலிருந்த சந்தியா மீது அவன் பார்வை சில நொடிகள் நிலைத்தது.

அதற்குள், “டேய்! அடங்குடா…” என்றொரு பெண் குரல் முன்னே பேசியவனை அதட்டி விட்டு, “எங்களுக்கு டீ போதும் சந்தியா” என்று புன்னகையோடு கூறியது.

‘அதெல்லாம் அவங்களுக்கு தேவையில்லை. நீ போகாதே…’ என்றது வீரேந்திரனின் மனம்.

ஆனால், சந்தியா விருந்தோம்பல் பார்ப்பாள் போலும். விருப்பம் இல்லாத போதும் தேநீர் தயாரிக்கச் சென்றாள்.

‘இவ எதுக்கு இப்ப இவங்களை உபசரிக்கணும்…’ வீரேந்திரனுக்கு காரணமற்ற எரிச்சல். தனக்குப் பிடிக்காத பெண், பொருத்தமில்லாத பெண், பிடிக்காத திருமணம் என்பதெல்லாம் மறந்தவன் போல உரிமைப்பட்டவன் போல கோபம் மட்டும் வந்தது அவனுக்கு.

அந்த கோப நெருப்புக்கு நெய் வார்த்தது போல உள்ளே சலசலப்பு. அங்கிருந்த மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் மடமடவென்று அவ்விடத்தில் ஏதேதோ செய்தார்கள்.

பலூன்கள், வண்ண தோரணங்கள், கொத்து கொத்தான மலர்கள் என அவ்விடத்தை நொடியில் மாற்றியமைத்தார்கள். சூழல் புரிந்துவிட்ட வீரேந்திரனுக்கு நெஞ்சம் பற்றி எரியாத குறை தான்!

முகமெல்லாம் கோபத்தில் சிவந்து போயிற்று. கை நரம்புகள் புடைத்துக் கொண்டு நின்றன. யாரிடம் இவர்கள் வாலாட்டுவது என்று பல்லைக் கடித்தான். தனக்கு உரிமையான பொருளை இன்னொருவன் அபகரிக்க முயல்வது போலக் கட்டுக்கடங்காத ஆத்திரம்!

அந்த நேரம் தேநீரோடு அங்கு வந்த சந்தியா சூழல் புரியாமல் விழித்தாள்.

பிறகு எதையோ கண்டறிந்தவள் போல, “என்ன ரோஜா யாருக்கு பர்த்டே? இங்கே சர்ப்ரைஸ் பிளான் பண்ணியிருக்கீங்களா? என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம் தானே நானும் அப்பா கிட்ட பெர்மிஷன் வாங்கி இருப்பேன்” என்று சொன்னபடியே முகத்தில் ஈயாட நின்றிருந்தவர்களிடம் தேநீர் கோப்பையைக் கொடுத்தபடியே,

“ஆமா யாருக்கு பர்த்டே? யாரு வராங்க?” என்று வாசலை வேறு எட்டிப்பார்க்க, சட்டென்று தன் தலையை உள்ளிழுத்து மறைத்துக் கொண்ட வீரேந்திரனுக்கு அடக்க முடியாத சிரிப்பு.

வாயைப் பொத்தி சத்தமின்றி சிரிக்க முயன்றதில் கண்ணில் நீரே நிறைந்து போயிற்று. அப்பொழுதுமே சிரிப்பு நிற்க மறுக்க, ஓரளவு ஆசுவாசப்படுத்து உள்ளே எட்டிப்பார்க்க இன்னும் முழித்தபடி தான் அவர்கள் நின்றிருந்தனர்.

“டீயை வெச்சுட்டு ஏன் சும்மா நிக்கறீங்க? சீக்கிரம் குடிங்க. ஆறிட போகுது…” என்றாள் சந்தியா.

“ஹான்…” என்றவர்களுக்கும் மெல்லிய ஆசுவாசம் தேவைப்பட்டதோ என்னவோ ஒன்றும் பேசாமல் தேநீரைக் குடித்தார்கள்.

அவர்களிடம் காலி கோப்பையை வாங்கிக் கொண்டு சந்தியா உள்ளே திரும்ப இவர்களுக்குள் மீண்டும் சலசலப்பு.

“உன் ஐடியாவும் நீயும்” என ஒரு பெண்ணை பார்த்து ஒருவன் திட்ட, “நீ பிரபோஸ் பண்ணுடா… நாங்க செட்டப் தான் ரெடி செஞ்சு தர முடியும். உனக்காக பிரபோஸும் செய்ய முடியுமா?” என அந்த பெண் பதிலுக்குக் கத்தினாள்.

“டேய்! வருண்… இவகிட்ட சண்டை போடற நேரமா இது? சந்தியா வந்ததும் உன் மனசுல இருக்கிறதை சொல்லுடா…” என ஒருவன் அவனைத் திசை திருப்பினான்.

ஆழ்ந்து மூச்சிழுத்து முன்னும் பின்னும் நடந்து தன்னை ஆசுவாசப் படுத்தியவனை இப்பொழுது சுவாரஸ்யமாக வீரேந்திரன் வேடிக்கை பார்த்தான்.

இந்த காதல் எல்லாம் அவனுக்குப் பரிச்சயமற்றது. முற்றிலும் புதியது. காதலுக்காக… அதைச் சொல்வதற்காக ஒருவன் இவ்வளவு தடுமாறுவானா என்று அதிசயித்துப் பார்த்தான்.

சந்தியா அப்பொழுது தான் சமையலறையில் இருந்து வெளியே வந்தாள். இவர்கள் ஆளுக்கு ஒருபுறம் நின்றிருக்க, ‘என்ன சொல்லி இவர்களை அனுப்புவது? இங்கு பர்த்டே கொண்டாட எல்லாம் அப்பா விடமாட்டாரே! அதை எப்படிச் சொல்வது?’ என்ற தீவிர யோசனையில் வந்தவளின் முன், சிகப்பு நிற ரோஜா பூங்கொத்துடன் வருண் மண்டியிட்டு அமர்ந்தான்.

சந்தியா பதறி விலக, “ஐ லவ் யூ சந்தியா…” என்றான் அவன்.

அவளுக்கு அச்சம், படபடப்பு, ஆத்திரம்! பேச வார்த்தைகளே வரவில்லை. பயத்தில் அவள் கால்கள் பின்னோக்கி நடந்தது.

அவளே சமாளிக்கட்டும் என்று வீரேந்திரன் நின்று கொண்டான். என்னவோ வருண் காதல் சொல்ல முயற்சி செய்வதைச் சுவாரஸ்யமாகக் கவனிக்க முடிந்தவனால், அவன் சந்தியாவிடம் காதல் சொன்னதை ரசிக்க முடியவில்லை.

மட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் தலைக்கேறியது. அவனை அடித்து நொறுக்கும் ஆவேசம் ஏனென்றே அவனுக்குப் புரிய மறுத்தது. அந்த காட்சியைக் காணச் சகிக்காமல் கண்களை இறுக மூட சொல்லி ஒரு மனம் போராட, மறு மனமோ கண்களை மூட அனுமதிக்காமல் சதி செய்தது.

சந்தியா அச்சத்தில் கண்களில் நீர் வடியப் பின்னோக்கி நகர, வருண் எழுந்து அவளை நோக்கி வந்து அவளின் கையைப்பற்ற முயற்சி செய்தது மட்டும் தான் தெரியும்.

அதற்குள் அவன் தோளில் அழுத்தமாக ஒரு கரம் விழுந்திருக்க, யாரென்று திரும்பி பார்த்தவனின் கன்னத்தில் இடியென்று இறங்கியிருந்தது வீரேந்திரனின் கரம்.

அதில் நிலைகுலைந்து விழுந்திருந்தான். வருணின் நெஞ்சில் மிதித்தபடி, “அவ கண்ணுல தண்ணியை பார்த்த அப்பறமும் அவ கையை பிடிக்க போற…” என்று விரல் நீட்டி எச்சரித்தவனின் அனல் பார்வையில் அவன் அரண்டு போனான்.

“ஹே… நீங்க எல்லாம் என்ன ஜென்மங்க? ஒரு பொண்ணு தனியா இருக்கும்போது வீட்டுக்குள்ள வந்து ஹாரஸ் பண்ணறீங்க?” என்று மற்ற நால்வரையும் பார்த்து கத்த,

“இல்லை… இல்லை… சீனியர்… சந்தியாவுக்கு கட்டாய கல்யாணம் நடக்கிறதா கேள்விப் பட்டோம்… அதுதான்” என்று அவர்கள் தந்தியடித்தனர்.

“அப்படின்னு அவ உங்ககிட்ட சொன்னாளா?” என்றான் அருகில் நின்ற மற்றொருவனை ஓங்கி ஒரு அறை விட்டு.

“இல்லை… இல்லை… சீனியர்” அவன் வாயில் ரத்தம் வழியப் பதறினான்.

ஏற்கனவே அரண்டிருந்த சந்தியா, வீரேந்திரனின் திடீர் வருகையிலும் அவனது ஆக்ரோஷத்திலும் இன்னும் அரண்டு போனாள்.

வீரேந்திரன் அழுத்தமாக அவளைப் பார்க்க, “இல்லை… எனக்குக் கட்டாய கல்யாணம் எல்லாம் நடக்கலை…” என்று வேகமாக உளறினாள்.

“பயந்தாங்கோளி… தொடை நடுங்கி…” அவன் வாயிற்குள் முணுமுணுத்தான்.

ஐவரையும் கண்டிப்புடன் நோக்கி, “அவ சொன்னது காதில் விழுந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். கொசுறு தகவலா அவளுக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை நான் தான்னும் தெரிஞ்சுட்டு போங்க… நீங்க வாலாட்ட நினைக்கிறது மிசஸ். வீரேந்திரன்னு நினைப்பு உங்களுக்கு இருக்கட்டும்” என்று உறும, அதிர்ந்து போனவர்கள் விட்டால் போதும் என்று ஓட எத்தனிக்க,

அதற்கு விடாமல் சொடக்கிட்டு அவர்களை நிறுத்தியவன், “இந்த குப்பையெல்லாம் யாரு கிளீன் பண்ணுவாங்க?” என்று கேட்க, எல்லாவற்றையும் அள்ளி போட்டுக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஓடியிருந்தனர்.