ஆனந்த போர்க்களம் – 2

“ஏன் மாப்பிள்ளை உனக்குன்னு பொண்ணு கொடுக்க நான், நீன்னு போட்டி போடறாங்க. இத்தனை நாளும் யாருகிட்டேயும் பிடி கொடுக்காம இருந்த… இப்ப அந்த நாராயணன் கேட்டதும் ஒத்துக்கிட்ட. கொஞ்சம் யோசிச்சு பார்த்திருக்கலாமே…”

வீரேந்திரனிடம் அத்தனை எளிதில் யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது. யாரும் கேட்கத் துணியாததை அவனது ஒன்றுவிட்ட அக்கா கணவன் மூர்த்தி பதில் வராது என்று தெளிவாக தெரிந்தும் வீம்புக்குக் கேட்டு நின்றார்.

தன் மகள் மேனகாவை வீரேந்திரன் மறுத்துவிட்ட கோபம் அவருக்கு. என் மகளின் அழகென்ன, தகுதியென்ன, சொத்தென்ன… அவளை மறுத்துவிட்டு இன்னொரு பெண்ணை பார்ப்பானா இவன் என உள்ளுக்குள் கருவிக் கொண்டிருந்தார் அவர்.

வீரேந்திரன் அவர் பேசியது காதிலேயே விழவில்லை என்ற பாவனையில் கையில் வாட்சை கட்டிக் கொண்டிருந்தான்.

“என்ன பெருசா அந்த நாராயணன் பண்ணிட்டான். தொழில்ல தடுமாறினப்ப கொஞ்சம் அவசரத்துக்குப் பணம் கொடுத்திருக்கான். அதுவும் வட்டிக்கு தானே கொடுத்தான். சும்மாவா தூக்கித் தந்தான்… ஆனா எவ்வளவு விவரம் பாரு சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிச்சிருக்கான். இந்த புத்திசாலித்தனம் எனக்கில்லாம போச்சு…” என்று நீண்டதாகப் பெருமூச்சு விட,

“அக்கா…” என்ற வீரேந்திரனின் சத்தத்தில் வீடே அதிர்ந்தது.

அவனின் அக்கா லீலாவதி பதறியடித்துக் கொண்டு வந்து நின்றார். தம்பி வாய் திறந்து ஒன்றும் பேசவில்லை. அவன் அழுத்தமாகப் பார்த்து நின்றதிலேயே கணவன் ஏதோ ஏடாகூடமாகப் பேசி வைத்திருக்கிறார் என்று புரிந்தது. கணவனை எதுவும் கேட்க தைரியமில்லாததால் கையை பிசைந்து கொண்டு நின்றாள்.

ச்சே! இவளுக்காகவும் பெரியப்பாவுக்காகவும் இவர்களைப் பொறுத்துப் போக வேண்டியதாக இருக்கிறது என்ற கடுப்புடன் முகத்தைச் சுளித்தான் வீரேந்திரன். இல்லாவிட்டால் அப்பாவும், மகளும் ஆடும் ஆட்டத்திற்கு வீட்டிற்குள் வர விடுவானா அவன்?

“சொல்லு தம்பி…” குரலே மேல் எழாமல் கேட்டு நின்றாள் லீலா.

“பொண்ணு போட்டோ பாத்தியா?”

இவன் இதைக் கேட்கவா இப்படி கத்தி கூப்பிட்டான். அதோட மத்தவங்க அபிப்பிராயம் எல்லாம் என் தம்பி கேட்க மாட்டானே என உள்ளே அலசியபடியே, “நம்ம நாராயணன் அண்ணன் பொண்ணு தானே தம்பி. நான் நிறைய தடவை நேரிலேயே பார்த்திருக்கேன். மகாலட்சுமி மாதிரி இருப்பா. உனக்கு ரொம்ப பொருத்தம்” என சொல்லி வெள்ளந்தியாய் சிரித்தாள். ஹப்பாடா! இதற்காகத்தான் தம்பி கூப்பிட்டானா என்ற ஆசுவாசம் அவளுக்கு!

லீலா சொல்லியதை கேட்டதும் அவளின் கணவன் மூர்த்தி வீரேந்திரனின் பின்புறம் நின்றபடி மனைவியை கடுமையாக முறைக்க, மகள் மேனகாவோ கண்களில் நெருப்பு பறக்க இரண்டடி தள்ளி நின்றிருந்தாள்.

‘நான் என்ன சொல்லி வெச்சேன்னு தெரியலையே… அப்பனும் மகளும் முறைக்கிறாங்களே…’ என விழித்தபடியே லீலா அசட்டு சிரிப்பொன்றைச் சிந்திவிட்டு, “கூப்பீட்டீங்களா சின்னம்மா… இதோ வரேன்…” என அழைக்காத குரலுக்குப் பதில் சொல்லியபடி அங்கிருந்து வேகமாக மறைந்து விட்டார்.

லீலாவதி வீரேந்திரனின் பெரியப்பா வேதநாயகத்தின் மகள். சிறுவயது முதலே வீரேந்திரன் மீது சுயநலமில்லாமல் பாசத்தைக் கொட்டுபவள். அதனாலேயே வீராவுக்கும் இவளை பிடிக்கும். அதுவும் கணவன், மகள் இருவரும் அவளைப் பெரிதாக மதிக்காமல் ஒதுக்கியே வைத்திருக்க, அவள் ஏதோ சந்தோசமாய் இருப்பதே இது போன்ற விசேஷங்களில் தான்!

அந்த விசேஷங்களிலும் இவளை ஒதுக்கி வைக்க இவனுக்கு மனம் வருவதில்லை. அதனால் தான் இரண்டு தொல்லைகளின் இணைப்போடு அக்கா வருவாள் என்று தெரிந்தும் வேறு வழியில்லாமல் அழைப்பு விடுப்பான்.

இந்த தொல்லைகளிலிருந்து தப்பிக்கும் வழி அவனுக்கு நன்றாகவே தெரியும்! முகதாட்சண்யமின்றி பேசி விடுபவனும் கூட! இன்று என்னவோ கொஞ்சம் மூட் சரியில்லை என்பதால் அக்காவை உள்ளிழுத்து விட்டான்.

அவளால் அவள் கணவனை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்தும் வேண்டுமென்றே அவனே பார்க்காத, ஏன் அவன் கைக்குக் கூட வராத பெண்ணின் போட்டோவை நீ பார்த்தாயா என கேட்டுவைக்க, அவன் எதிர்பார்த்தது போலவே அப்பன், மகளின் மூக்குடைக்கும் விதமாக லீலா பதில் சொன்னதில் ரொம்பவுமே திருப்தி பட்டுக் கொண்டான்.

மூர்த்தி அதன்பிறகு அவனிடம் வாயடிக்கவில்லை. வீரேந்திரனை முறைத்த தோரணையில் தான் அவ்விடத்தை விட்டு அகன்றார்.

மேனகாவிற்கு பதினெட்டு வயது தான் நிறைந்திருக்கிறது. இப்பொழுது தான் கல்லூரியிலேயே சேர்ந்திருக்கிறாள். வயதிற்கேற்ப செய்கையோ பொறுப்போ அவளிடம் துளியும் இருக்காது. நிறைய அலட்டிக் கொள்வாள். பணம் இருக்கிறது என்ற கர்வமோ என்னவோ எல்லாரையும் மட்டும் தட்டிக் கொண்டே இருப்பாள்.

மேனகாவைப் பற்றி நன்கு அறிந்திருந்த வீரேந்திரனிடம் அவளை மணமுடிக்க சம்மதமா என்று மூர்த்தி கேட்டு வந்திருக்க, “அவ வயசென்ன? என் வயசென்ன? போங்க முதல்ல பொண்ணை படிக்க வையுங்க… பதினெட்டு வயசுல கல்யாணமாம்…” என கத்தி அனுப்பி விட்டிருந்தான். இந்த விஷயம் இன்னும் லீலாவதிக்கோ, வேதநாயகத்திற்கோ கூட தெரியாது.

வீரேந்திரன் வாயால், ‘உங்க பொண்ணை எனக்கு கட்டி கொடுங்க மாமா’ என கேட்க வைக்க வேண்டும் என்ற வெட்டி வைராக்கியம் அவன் மறுத்த கோபத்தில் மூர்த்திக்கு உருவாகியிருக்க, இப்பொழுது அவனுக்கு திருமணம் என்று தெரிந்ததில் இப்படி வெளிப்படுகிறது.

வீரேந்திரன் இருபத்தேழு வயது ஆண்மகன். அவனுக்கு மீசை துளிர்விடத் தொடங்கிய பதின்பருவத்திலேயே அவனது பெற்றோர் இருவரும் விபத்தில் தவறிவிட, அதிலிருந்து அவன் தலையில் பெரும் பாரம் தான்!

வயதான பாட்டி, இவனை விட பதினோரு வயது இளைய தம்பி, அப்பா விட்டுச் சென்ற தொழில், இவனது படிப்பு என்று மூச்சுவிடக்கூட நேரமில்லை. இவன் பள்ளி இறுதியாண்டில் இருக்க படிப்பையும் நிறுத்த முடியவில்லை.

படிப்பையும் பார்த்து, பாட்டி உதவியுடன் ஐந்து வயது தம்பியையும் தேற்றி வளர்த்து, பதினேழு வயதிலேயே அப்பா விட்டுப்போன துணிக்கடை வியாபாரத்தையும் கையிலெடுத்து என வயதுக்கு மீறி நிறைய செய்தான்.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேராமல் இரண்டு வருடங்கள் வியாபாரத்தைத் தான் பார்த்து வந்தான். அதன் நுணுக்கங்கள் தெரியாமல், தொழிலை யாரோ ஒருவரிடம் நம்பி ஒப்படைத்து விட்டு மேற்பார்வை பார்க்கத் தெரியாமல் விழிக்கக் கூடாதே! சின்ன பையன் என்று சொல்லி எளிதாக ஏமாற்ற ஒரு கூட்டமே காத்திருந்த போது, ஐயனாராய் நிமிர்ந்து நின்றான்.

ஜிம் உடற்பயிற்சி என தனது நேரத்தைக் கொஞ்சம் ஒதுக்கி ஆஜானுபாகுவாய் தோற்றத்தில் மாறினான். தன்னுடைய தோற்றத்திலேயே மிரட்டல் தொனி கொண்டு வந்திருக்க, அவனிடம் வம்பு வளர்பவர்களிடமும் அவனின் வாய் பேசவில்லை கை தான் பேசியது.

இயல்பிலேயே வீரேந்திரன் முரடன் தான்! அம்மா, அப்பா கட்டுப்பாட்டில் இருந்தவரையே அவன் வம்பு சண்டைகள் ஓயாது. இப்பொழுது கட்டுப்படுத்த ஆளின்றி காட்டாற்று வெள்ளமாய் சுழன்றவனை அணையிட ஆளில்லாமல் போக அவனது சண்டைகள் பெருகியது.

வீரேந்திரனின் செயல்களில் பயந்தவர்கள் அவனுடைய தந்தையின் நண்பரான நாராயணனும், அவனின் பெரியப்பா வேதநாயகமும் தான்.

இருவருமே அவனுக்கு எப்படி எடுத்துச் சொல்ல எனத் தெரியாமல் தடுமாறி, வேறு வழியின்றி கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சொல்லி, அவனிடம் எதற்கும் பயனில்லாமல் போனது.

வேறு வழியின்றி தான் இருக்கும் கட்சியிலேயே ஒரு உறுப்பினராக வீரேந்திரனையும் நாராயணன் சேர்த்து விட்டுவிட்டார்.

அவர் பினான்ஸ் தொழிலில் ஏற்படும் சிக்கல்களுக்கு உதவியாக இருக்கும் என்று ஒரு முக்கிய கட்சியில் பல காலமாக உறுப்பினராக இருக்கிறார். இப்பொழுது அங்கேயே வீரேந்திரனையும் இணைத்துவிட, அவன் அடிதடி செய்ய வேண்டிய சூழல் வந்தாலும் கட்சி சார்பாக நாராயணன் பார்த்துக் கொண்டார்.

ஆனால் அந்த அடிதடிகளின் பயனால், யாரும் அவனைச் சிறுவனாய் பார்த்ததே இல்லை. முரடன் என்றே அனைவரிடமும் பதிவானான்.

அவன்கிட்ட பேச முடியுமா? அவன் வம்பு நமக்கெதுக்கு? என்றெல்லாம் கொஞ்சம் ஒதுங்கிக் கூடப் போனார்கள்.

தொழிலில் கொஞ்சம் ஸ்திரமான பின்னர் தான் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கல்லூரியில் சேர்ந்தான். காலையில் கல்லூரி, மாலையில் தொழில்! அவனது முரட்டு தனத்துக்கும், நேர்மைக்கும் கல்லூரியிலும் பல வம்புகள் விடாப்பிடியாக அமையும். தவறென்று தெரிந்தால் தயங்காமல் கை நீட்டி விடுவான்.

அவன் நான்கு ஆண்டுகள் இன்ஜினியரிங் முடிப்பதற்குள் அந்த கேம்பஸிற்குள் அவன் சண்டை போடாத இடமே கிடையாது. அவனைப்பற்றித் தெரியாதவர்கள் ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லுமளவு அவன் பிரபலம். யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும் முதல் ஆளாய் நிற்பவன் என்பதால் அவனுக்கு அபிமானிகளும் அதிகம்!

கல்லூரி படிப்பை முடிப்பதற்குள் பாட்டி தவறிவிட, வீட்டு வேலைக்கு ஆள் வைத்து வீட்டையும் தம்பியையும் கவனித்துக் கொண்டவன், படிப்பு முடிந்ததும் தொழிலை மொத்தமாகக் கையிலெடுத்துக் கொண்டான்.

சில ஆண்டுகளில் பாட்டியும் தவறிவிட அவனுக்கு பெரிய இடி தான்!  தம்பி ஸ்ரீதரனுக்கு பெற்றோரின் பாசம் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் வந்துவிடக்கூடாது என்று முடிந்தவரை அவனுக்காகவும் நேரம் ஒதுக்குவான்.

இப்படி தம்பி, தொழில் என்று மூன்று ஆண்டுகளாகக் கழித்து வந்தவனின் தொழில் வளர்ச்சி, வருமானம் எல்லாம் பார்த்து திருமணத்திற்காகத் தொடர்ந்து அணுகிக்கொண்டே இருந்தார்கள். யாருக்கும் பிடிகொடுத்துப் பேசியதில்லை.

இந்த சூழலில் தான் வேதநாயகம் நாராயணனின் பெண்ணை திருமணம் செய்துகொள்ளச் சம்மதமா என்று கேட்டு வந்தார்.

வேதநாயகமும் நாராயணனும் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது.

நாராயணனின் மகள் சந்தியா படிப்பை முடித்திருக்க, அதையறிந்த வேதநாயகம் மகளின் திருமணத்தைக் குறித்து அவரிடம் கேட்டார்.

சமீபத்தில் உடல்நிலையில் தொய்வைச் சந்தித்த நாராயணனும் சந்தியாவின் திருமணத்தை சீக்கிரம் நடத்திவிடும் முடிவில் தான் இருந்தார். அதனால், “பார்க்க தொடங்கிட்டேன் அண்ணா. சீக்கிரம் முடிச்சிடணும். உங்களுக்கும் நல்ல இடம் தெரிஞ்சா சொல்லுங்க… தெரிஞ்சவங்க கிட்டயும் சொல்லி வெச்சிருக்கேன்” என சொல்ல, வேதநாயகத்திற்கு வீரேந்திரனுக்கு பார்த்தால் என்ன என்றுதான் தோன்றிற்று.

“நம்ம வீராவுக்கே பார்த்துடலாமா?” என்று தன் மனதில் பட்டதை உடனேயே சொல்லியும் விட, “வீராவா? அவன் கிட்ட ஒரு வருஷமா கல்யாணத்துக்கு கேட்டுக்கிட்டே தானே இருக்கோம். இன்னும் பிடி கொடுக்காம இருக்கானே…” என்றார் யோசனையாக.

“அது ஏதோ ஒரு பொண்ணை கேட்டதுக்கு மறுத்திருப்பான். உன் பொண்ணுன்னு சொன்னா உடனே மறுக்க மனசு வராது. கண்டிப்பா யோசிப்பான். அவனை நம்ம இப்படியே விடவும் முடியுமா? உனக்கு அவன் மேல அபிப்பிராயம் இல்லாட்டி வேணா…” என்றவரின் பேச்சை முடிக்க விடாமல்,

“அதென்ன அண்ணே இப்படி சொல்லிட்டீங்க… நம்ம வீராவை நான் அப்படி விடுவேனா? என்ன நாம கேட்டு மறுத்திட்டா நல்லா இருக்காதுன்னு தான்…” என்றார் கொஞ்சம் தயக்கமாக.

“சரி நீ பேச வேண்டாம் நான் பேசிக்கிறேன். அதுக்கு முன்ன ஜாதகம் பார்த்துடலாம். அவன் சரின்னு சொன்னா அவன் மனசு மாறும் முன்னாடி கல்யாணத்தை முடிச்சு வெச்சுடலாம்” என்று வேதநாயகம் அடுக்க,

இப்படி விருப்பம் இல்லாதவனுக்கு மகளை முடித்துக் கொடுப்பதா என்ற யோசனை நாராயணனுக்கு வந்தாலும், எங்கே இந்த வாய்ப்பையும் விட்டால் வீரா ஒற்றையில் நின்று விடுவானோ என்று அவன்மீதும் இருந்த அக்கறையில் தான் ‘நல்லதே நடக்கணும்’ என்ற வேண்டுதலுடன் வேதநாயகத்திடம் சம்மதம் தெரிவித்தார்.

என்னவோ வீரேந்திரனுக்கு திருமணம் என்ற யோசனையே இப்போதைக்கு இல்லை. எல்லாரும் நச்சரிக்கையில் கோபம் தான் வந்தது.

இப்பொழுது அவன் கஷ்டகாலத்தில் கூடவே இருந்த ஒருவரின் பெண்ணை திருமணம் செய்துகொள் என்ற கோரிக்கையுடன் பெரியப்பா வந்து நிற்க, மற்ற பெண்களை சொன்னதுபோல எளிதாக மறுக்க வேறு முடியவில்லை.

என்ன முயன்றும் அவரிடம் மறுக்க மனம் வராமல், ‘அதெப்படி சரியா வரும் பெரியப்பா…’ என்று சொல்ல நினைத்தாலும் முடியாமல் போக, “ஒத்து வந்தா பாருங்க பெரியப்பா” என்று சொல்லிவிட்டான். சொன்ன நொடியிலிருந்து ஏன் அப்படி சொன்னோம் என நொந்து போனான்.

ச்சே! கல்யாணமெல்லாம் நமக்கு ஒத்து வருமா? என மனதிற்குள் தினம் தினம் பஞ்சாயத்து செய்கிறான்.

இவன் பெரியப்பாவிற்கு இவனது போக்கு தெரியுமே! எத்தனையோ முறை திருமணத்தை குறித்துப் பேசியும் பிடிகொடுக்க மறுத்தவன், நாராயணன் மகள் என்றதும் கண்டிப்பாக மறுக்க மாட்டான் என்ற எண்ணத்தில் தானே இப்படி ஒரு திட்டம் போட்டார். அவர் எண்ணம் போலவே அவன் சொல்லிவிட உடனேயே வேலையைத் தொடங்கி விட்டார்.

ஏற்கனவே பொருத்தம் பார்த்த ஜாதகத்தை வீரேந்திரனின் கண்துடைப்புக்காக மீண்டும் ஒருமுறை பார்க்கச் சென்றனர்.

ஜாதக பொருத்தம் பார்க்கப் போகிறோம் என்ற விஷயம் வீரேந்திரனுக்கு சொல்லப்பட, ‘என்ன அதுக்குள்ளையா? ச்சே! இப்ப இந்த கல்யாணம் பண்ணி நான் என்ன செய்ய போறேனாம்?’ என கடுப்பானான். சரி ஜாதகம் ஒத்து வந்தால் தானே! அதை அப்பறம் பார்த்துக்கலாம் என அப்போதைக்கு ஒதுக்கியும் வைக்க, பார்த்தால் ஜாதகம் பொருந்தி விட்டதாம்!

நமக்கு மட்டும் சோதனை லாரி லாரியா வரும் போல எனக் கடுப்பாக மட்டும் தான் முடிந்தது இவனால்.

அங்கொருத்தி இவன் பேரைத் திருமணத்திற்குச் சொன்னதும், தனக்கு மட்டும் பிரச்சினை ரயில் நிறைய வருவது போல உணரப்போகிறாள் என்று இவன் அறிய நியாயமில்லை பாவம்!

ஜாதகம் பொருந்திய செய்தி வந்ததும், “பெண்பார்க்க போய் வரலாம். கூடவே கொஞ்சம் நெருங்கிய சொந்தங்களையும் கூட்டிப் போனால், உறுதியும் செய்துவிட்டு வந்துவிடலாம்” என பெரியப்பா வேகத் திட்டம் போட அவனுக்கு விழி பிதுங்கியது.

இந்த கடுப்போடு தான் அவன் பெண்பார்க்கத் தயாராகிக் கொண்டிருந்தான்.