“இப்ப எப்படி இருக்கீங்கம்மா?” என்று வினவிய மருத்துவர், அவளின் டெஸ்ட் ரிப்போர்ட்டுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
லேசாக தலையை அசைத்து, “இப்ப பரவாயில்ல டாக்டர்” என்று பதில் சொன்னவள் சோர்வுடன் தான் இருந்தாள். கண்ணிமைகள் எல்லாம் தடித்து, முகம் வாடி தெரிந்தாள்.
ரிப்போர்ட்டை பார்த்தவர், “கன்சீவா இருக்கீங்களா?” என்று கேட்டதும் சுற்றியிருந்த எல்லாரும் ஒவ்வொரு மாதிரி எதிர்வினை காட்டினார்கள்.
சந்தோஷம், ஆச்சரியம், திகைப்பு என பல்வேறு மனநிலைகளில் சூழ இருந்த மூவரும் இருக்க, வீரேந்திரனின் பார்வை மனைவியின் மீது கூர்மையாகப் படிந்தது.
அவளோ மறந்தும் இவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. காலையில் எழுந்ததிலிருந்தே அப்படித்தான் இவன் ஒருவன் அங்கே இருக்கிறான் என்று கூட கண்டுகொள்ளாமல் தான் இருந்தாள்.
இத்தனை நேரம் விளையாட்டாய் தெரிந்த ஊடல் இப்பொழுது விலகலாய் தோன்றி வலித்தது.
மனதை என்னவோ அழுத்த அவளையே விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, “தெரியலை டாக்டர். செக் செய்யணும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்” என்று அவள் சோர்வுடன் சொன்னதும் வீராவுக்கு இன்னமும் திகைப்பு.
அப்படியானால் முன்னமே இவளுக்கு அனுமானம் இருந்ததா என்று! ஏன் சொல்லவில்லை என்ற வருத்தத்தை விட, அதை அவள் சொல்வதற்கான வாய்ப்பை தான் தராமல் போனோமே என்றுதான் நொந்தான். என்ன மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என தன்மீதே கூட வெறுப்பாய் இருந்தது.
மருத்துவர் நாள் தள்ளிப்போன விவரம் கேட்டுக் கணக்கிட, நாற்பத்தைந்து நாட்களுக்கும் மேலாக ஆகியிருந்தது. “இத்தனை நாளா ஏன் செக் செய்யலை?” என விசாரித்தார்.
என்னவென்று பதில் சொல்வாள்? அவளுக்கோ இத்தனை நாட்களும் இதுகுறித்து யோசனையே வராமல் இருந்திருக்க, சமீபத்திய சமிக்ஞைகளால் தான் சந்தேகமே வந்தது. அதை ஊர்ஜிதம் செய்யும் முன்பே இங்கே இருக்கிறாள்.
உள்ளே போன குரலில், “இந்த வாரம் தான் செக் செயலாம்ன்னு இருந்தேன் டாக்டர்” என்றாள் மழுப்பலாக.
“இங்கேயே கைனோ வருவாங்க. அவங்களுக்கு எழுதி தரேன். ஒருமுறை பார்த்திடுங்க. இனி குழந்தையும் இருக்கிறதால நேர நேரத்துக்கு சரியா சாப்பிடணும். இந்த மாதிரி அஜாக்கிரதையா எல்லாம் இருக்கக் கூடாது” என்றதும் தலையை அசைத்தாள்.
“மீதி விவரம் எல்லாம் அவங்க சொல்லுவாங்க. அவங்களை பார்த்து பேசிக்கங்க. நீங்க இப்ப ரொம்ப அனிமிக்கா இருக்கிறதால, உங்களுக்கு இன்னும் ஒருநாள் ட்ரிப்ஸ் இறங்கினா பெட்டர். நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிக்கலாம்” என அவளின் கீழ்க் கண்ணை விரித்துப் பார்த்துப் பரிசோதித்தபடி சொன்னவர்,
நர்ஸ் செக் செய்த பிபி அளவையும் கேட்டுவிட்டு, “மத்தபடி பிபி, ப்ளட் டெஸ்ட் எல்லாம் நார்மல் தான்” என்றார்.
செல்லும் முன்னர், “கங்கிராட்ஸ்…” என மனதார வாழ்த்தி விட்டுச் சென்றார்.
வீரேந்திரன் அனைத்தையும் அமைதியாக அவதானித்தபடி நின்றிருந்தான். சந்தியா தன்னிடம் எதையாவது கேட்டோ, சண்டையிட்டோ, கோபப்பட்டோ இருந்தால் கூட பரவாயில்லை போல… இப்படிப் புறக்கணிப்பதை அவனால் ஏற்கவே முடியவில்லை.
அதிலும் இந்த சூழலில் கூட அவள் தன்புறம் திரும்பாத போது, அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
மருத்துவர் வெளியேறியதும், “சந்து…” என ஸ்ரீதரன் ஆவலாக அவளருகே நெருங்கி, “ரொம்ப சந்தோசம் அண்ணி…” என அவளைத் தோளோடு இதமாக அணைத்துப் பிடித்துச் சொன்னான். துளிர்த்து நின்ற கண்ணீரில் அவன் பரவசத்தை உணர முடிந்தது.
புவனாவும் வேகமாக நெருங்கி வந்து திருஷ்டி கழித்தார். “இத்தனை நாளா கவனிக்கலையா நீ?” பாசமாகத் தாடை வருடிக் கேட்டார். வெறுமனே சிரித்துச் சமாளித்தாள்.
“உங்க அப்பனுக்கு சொல்லிட்டு வரேன். ராத்திரி பதறி அடிச்சுட்டு போன் பண்ணினான். பாவம் இப்பவும் அங்கிருந்து பதறிட்டே தான் வந்துட்டு இருப்பான். இதுதான் விஷயம்ன்னு சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவான்” என பூரிப்புடன் சொல்லிவிட்டு கைப்பேசியோடு வெளியில் சென்று விட்டார்.
புவனா இங்கு எப்படி வந்தார் என இப்பொழுது விளங்கியது வீரேந்திரனுக்கு. இரவில் தான் கைப்பேசி அழைப்பை ஏற்காததால் ஸ்ரீதரன் மாமனாருக்கு அழைத்திருக்கக் கூடும் என புரிந்ததும் இன்னும் கஷ்டமாக இருந்தது. ஆத்திர அவசரத்திற்குக் கூட குடும்பத்திற்குத் துணையாய் இருக்க முடியாத தான் என்ன குடும்பத் தலைவன் என தன்மீதே கோபம் கொண்டான்.
வீரேந்திரன் இன்னமும் அசையாமல் அதே இடத்தில் வேரூன்றி நின்றிருந்தான். அவனுடைய மொத்த பார்வையும் மனைவியிடத்தில் மட்டுமே! அது புரிந்தாலும் அவள் திரும்பிக் கூட பார்க்கவில்லை. மனம் ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறியது.
கௌரவம் பார்க்கும் நிலையில் அவன் இப்போது இல்லை. தங்களுக்கான உயிர் என்பதில் சந்தோசம் ஒருபுறம்… மனைவியின் புறக்கணிப்பில் வேதனை மறுபுறம்… தான் அவளைச் சரியாக கவனித்துக்கொள்ளாத குற்றவுணர்வு மறுபுறம் என தனக்குள் தவித்தவன், மெல்ல நெருங்கி, “சந்தியா…” என்றான் சமாதானமாக.
சந்தியா திரும்ப மறுத்தாள். ஆனால், ஸ்ரீதரன் அக்கினியை விழிகளில் தவழவிட்டு எரிப்பது போல அண்ணனைப் பார்த்தான்.
“ம்பச்…” என ஸ்ரீதரனை அலட்சியமாய் பார்த்தபடி, “சந்தியா…” என்றான் மீண்டும் அழுத்தமாக.
“உங்ககிட்ட அண்ணி பேச மாட்டாங்க…” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பேசியது ஸ்ரீதரனே!
“நீயும் ஏன்டா புரியாம படுத்தற… ஏதோ கோபத்துல பேசிட்டேன். விடேன்…” என தளர்வோடு சொல்ல, அவன் அசைந்து கொடுக்கவே இல்லை.
“ஹான்… கோபம்… ரொம்ப நல்ல கோபம் உங்களுக்கு. அவ என்னைத் தானே அடிச்சா உங்களுக்கு என்ன வந்தது? நான் வந்து உங்ககிட்ட கம்ப்ளைண்ட் சொன்னேனா? இல்லை இத்தனை நாளா நான் அவளைப் போட்டு அடிச்சதுக்கு அவ என்னைக்காச்சும் உங்ககிட்ட வந்து கம்ப்ளைண்ட் சொல்லி இருக்காளா?” என்றதும்,
என்ன சொல்கிறான் இவன் என கடுப்போடு பார்த்தவன், “நீங்க ரெண்டு பேரும் என்ன சின்ன குழந்தைங்களா அடிச்சு விளையாடுவோம்ன்னு சொல்லறதுக்கு…” என்றான் முகம் சுருக்கி.
“அது என்னவா இருந்தாலும் எங்களுக்குள்ள… நீங்க எங்க உலகத்தை பார்த்ததே இல்லைங்கிற போது, தலையிடவும் கூடாது தானே?”
“டேய் நான் உன் அண்ணன் டா”
“சோ வாட்?” என்றான் அலட்சியமாக.
வீரேந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. இரு கைகளாலும் முகத்தை அழுந்த தேய்த்து, “சரி புரியலை… புரியாம எதுவோ பேசிட்டேன். அதுக்கு இப்ப என்ன செய்யலாம்ன்னு சொல்லற?” என்றான்.
“ஹான் நீங்க செஞ்சதுக்கு பனிஸ்மெண்ட் வேண்டாமா? சந்தியா சமாதானம் ஆகும்வரை உங்களோட நாங்க ரெண்டு பேரும் பேச மாட்டோம். நாங்க ஹாஸ்பிட்டல்ல இருந்து நேரா மாமா வீட்டுக்கு போறோம்…” என்று அறிவித்ததும்,
“என்னது???” என்றான் அதிர்ச்சியாக.
நிதானமாக, “டேய்… ஏதோ கோபத்துல பேசினா அதை போயி…” என வீரா எடுத்துச் சொல்ல முயற்சிக்க,
“அந்த கதையே இங்க வேண்டாம். நேத்து என்னை பேச விட்டீங்களா நீங்க? ஒரு தப்பு செய்யும்போது உரிய தண்டனை கிடைச்சா தான் அடுத்த முறை அந்த தப்பு செய்ய மனசே வராது. நேத்து எனக்கு கிடைச்ச அடி கூட அந்த வகை தான்! அதை நான் எப்பவும் தப்பு சொல்ல மாட்டேன். ஏன்னா அந்த அடி எனக்கு கண்டிப்பா தேவை. நான் செஞ்ச காரியம் அப்படி… இன்னும் சொல்லப்போனா என்கிட்ட கோச்சுக்கிட்டு பேசாம இருக்காம அண்ணி என்னை அடிச்சதே எனக்கு போதும்ன்னு இருந்தது…” அவன் பாட்டிற்குச் சொல்லிக்கொண்டே போக,
“சரி அப்ப உங்க அண்ணிகிட்ட சொல்லி என்னையும் அடிக்க சொல்லிடு…” என சாதாரணமாக வீரேந்திரன் சொல்லிவிட, ஸ்ரீதரன் தான் வாயடைத்துப் போனான்.
“என்னடா? உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமா? உன்கிட்ட மட்டும் கோச்சுக்கிட்டு பேசாம இருக்காம, உன்னை அடிச்சு கோபத்தை சரி பண்ணிக்குவா… நான் மட்டும் இளிச்சவாயா? அதுவும் நீங்க ரெண்டு பேரும் இல்லாம நான் மட்டும் என்ன செய்யறதாம். பேசாம உங்க அண்ணி கோபம் போற வரைக்கும் நானும் வீட்டோட மாப்பிள்ளையா வந்துடறேன்” என்றதும் லூசா இவன் என தான் பார்த்து வைத்தான்.
“பதில் பேசேன்டா…” என்றான் வீரா சலிப்பாக.
“நானும் நீங்களும் ஒன்னா. நான் சின்ன பையன். ஏதோ தெரியாம சொல்பேச்சு கேட்கலை. ஆனா உங்களுக்கு அப்படியா? என்னவெல்லாம் பேசுனீங்க? எங்க ரெண்டு பேரையும் பேசவே விடலை…” என்று அடுக்கடுக்காய் குற்றம் சுமத்தியவன்,
“என்னை குழப்பாம, நீங்க முதல்ல கிளம்புங்க…” என வீம்பாகச் சொல்ல, “உங்க அண்ணிகிட்ட பேச கூட நீ குறுக்க நிப்பியா? அவகிட்ட பேசிட்டு அவ போக சொன்னா போறேன்…” என்றான் வீராவும் அழுத்தமாக.