ஆனந்த போர்க்களம் – 17

சரவணன் படித்த பள்ளியில் அவனுக்கும் அவனுடன் பள்ளியில் பயின்ற அரசியல்வாதி ஒருவரின் மகன் ஜெயந்தனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்திருக்கிறது.

இருவருமே சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்கள். பள்ளியின் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்தனர். ஜெயந்தனை விடவும் சரவணன் சிறந்த பிளேயேராக இருந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. வேண்டுமென்றே வம்பு சண்டை இழுத்து அவனை அணியிலிருந்து விரட்டப் பலமுறை முயற்சித்தும் பலனளிக்காமல் போனது.

பிரச்சினை வேண்டாம் என்று விலகி விலகி போன சரவணன், அவன் தினம் தினம் வஞ்சம் வைத்து ஏதாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், ஒருகட்டத்தில் எதிர்த்து நிற்க தொடங்கினான். இருவரிடையேயும் அடிக்கடி சண்டை வளர்ந்து கொண்டே இருந்தது.

ஒருமுறை கைகலப்பு அதிகமாகிவிட, வாணிக்கும் விஷயம் தெரிந்து விட, மகனைப் பிடி பிடியெனப் பிடித்து விட்டார்.

“எதுக்கு உனக்கு இந்த சண்டை சச்சரவு எல்லாம்? உன் வயசுக்கு நீ செய்யற வேலை சரியா? இந்த பிரச்சினை தொடங்கினப்பவே நீ என்கிட்ட சொல்லியிருக்க வேண்டாமா? இனி உனக்கு அந்த ஸ்கூலே வேண்டாம். உங்க அப்பாகிட்ட சொல்லி உடனே வேற ஸ்கூல் மாத்தி விடறேன். சண்டை போட்டுட்டு வர வயசை பாரு…” என்று அவர் திட்டியதை கேட்ட சந்தியாவிற்கும் விஷயம் புரிந்துவிட்டது.

அண்ணன் பள்ளியில் சண்டை போட்டது யாருடன் என்றும் அவளுக்குத் தெரியுமே! பள்ளியில் அவளும் அந்த சண்டையை நேரில் பார்த்தவள் தானே?

ஆனால், சாதாரண பள்ளி சண்டைக்காக, அடுத்த இரண்டு நாட்களில் வந்த கலவரத்தை உபயோகித்து அண்ணனிடம் சண்டையிட்ட ஜெயந்தன் அண்ணனின் உயிரை எடுத்ததை நேரில் பார்த்த சந்தியா துடிதுடித்துப் போனாள். தடுக்க இடையில் வந்த அவளின் அன்னையையும் கொடூரமாக வெட்டி சாய்த்திருக்க, அவள் துடிதுடித்து அழுத அழுகையில் அவளை யாராலும் தாங்கக் கூட முடியவில்லை.

அவளின் கதறல் அந்த இடத்தையே உருக வைத்துக் கொண்டிருந்தது.

“அம்மா கிட்ட என்னை விடுங்க… ஐயோ அண்ணா உடம்புல நிறைய ரத்தம்… அவன் துடிக்கிறான். அவனுக்கு வலிக்கும். என்னை விடுங்க… நான் போயி பார்க்கணும்.

ஐயோ எங்க அம்மா… நான் அவங்க ரெண்டு பேரும் இல்லாமா என்ன பண்ணுவேன்? அச்சோ அவங்களை விட்டுடுங்க. யாராவது அவங்களை காப்பாத்துங்க. எங்க அண்ணா துடிக்கிறானே… ஐயோ அண்ணா… பிளீஸ் எங்க அண்ணனை விட்டுடுங்களேன்… அவன் பாவம்…

எங்க அம்மா அசையாம படுத்திருக்காங்களே… அவங்களுக்கு என்ன ஆச்சு பார்க்கணும். அண்ணா வலியில ரொம்ப துடிக்கிறான். பிளீஸ் என்னை விடுங்க.

அண்ணா என்னால உங்ககிட்ட வர முடியாதா? என்னை மட்டும் ஏன் விட்டுட்டு வந்தீங்க. உங்களோட கூட்டிட்டு வந்திருக்க வேண்டியது தானே?

அம்மா, அண்ணா என்னை விட்டு போகாதீங்க… ஐயோ இனி நான் என்ன பண்ணுவேன்… அம்மா… அண்ணா…” என அவளின் கதறலைக் கேட்ட அனைவரின் விழிகளிலும் நீர் நிறைந்தே இருந்தது.

அந்த ஜெயந்தனை எல்லாரும் பார்த்தார்கள் தான்! அந்த பள்ளி பேருந்தில் இருந்த பலருக்கும் அவனை நன்றாகவே அடையாளம் தெரிந்தது. பதினாறு வயதில் இரு உயிர்களை அனாயசமாக வெட்டி சாய்க்கிறான். அவனுக்கு உதவ அவன் அப்பா கட்சி ஆட்கள் அத்தனை பேர் சூழ இருக்கிறார்கள்.

நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, ஆணவமும், பணத்திமிரும் தந்த ஹோதாவில் இரக்கம் என்பது இம்மியும் இன்றி வெறிபிடித்த மிருகம் போல் வேட்டையாடும் வெறியுடன் நின்றவனை எல்லாரும் அச்சத்தோடு தான் பார்த்தார்கள்.

அப்படியிருக்க யார் அவனைத் தடுக்க முடியும்? யாருக்கு அவனைக் காட்டிக்கொடுக்கத் திடம் வரும்?

அந்த இரு உயிர்களும் கலவரக்காரர்களின் கோரப் பசிக்குப் பலியான உயிர்களாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

விஷயம் யாருக்கும் தெரிய வரவில்லை. சந்தியாவிற்குத் துணைக்கு இருந்த புவனாவுக்கு மட்டுமே அவள் இரவு அரற்றல்கள் உண்மையைப் புரிய வைத்திருக்க, அதுகுறித்து வற்புறுத்தி விசாரித்தவரிடம் அழுதபடி எல்லாத்தையும் சொல்லி விட்டிருந்தாள்.

“அண்ணன் எதுக்கு வம்பு சண்டைக்கு போகணும். அவன் பேசாம இருந்திருந்தா என்கூட இருந்திருப்பான் தானே? நமக்கு எதுக்கு இந்த அடிதடி வம்பு சண்டையெல்லாம்… எனக்கு அம்மாவும் அண்ணாவும் வேணும் அத்தை… அண்ணன் ஏன் என்னை பத்தி யோசிக்காம இப்படி பண்ணிட்டான்” என அழுது கரையும் பெண்ணுக்கு என்ன சமாதானம் சொல்வது?

நம்மால் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாது எனும்பொழுது தேவையற்ற வம்பு சண்டைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அப்பொழுதிலிருந்தே அவளுள் ஆழமாய் பதிந்து போனது.

பதின்ம வயதில் வந்த பெரும் பாதிப்பினால் அடிதடி, சண்டை, சச்சரவுகள் என்றாலே தன்போல பயம் வந்து விடுகிறது. அடியோடு ஒதுங்கி, ஒடுங்கிக் கொள்கிறாள்.

ஆனால், தொட்டதற்கும் சண்டைக்கு நிற்பவன் அவளுக்கு கணவன்! பாவம் ஏற்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் வாழ்க்கையில் தத்தளிக்கிறாள்.

சந்தியா ஒவ்வொருமுறையும் சின்னதான சண்டை சச்சரவுக்கும் வெகுவாக பயந்து போவதன் காரணம் இப்பொழுது வீரேந்திரனுக்கு தெளிவாகப் புரிந்தது. மனைவி மீது இரக்கம் சுரந்தது.

அவள் அனுபவித்த வேதனைக்கு அவனின் மனம் இன்று துடித்தது. விபத்தில் பெற்றோரை இழந்ததற்கே அந்தளவு பாதிக்கப்பட்டவன், அதுவும் கொஞ்சம் வளர்ந்த பிறகு, இவளானால் தன் கண் முன்னேயே பகைக்குப் பலியாய் உறவுகளை இழந்திருக்கிறாள். அதுவும் சின்ன வயதிலேயே! பாவம் எவ்வளவு துடித்தாளோ? எப்படி மீண்டு வந்தாளோ அவன் மனம் அவளுக்காக உருகியது.

சந்தியா ஒருநாளும் அவளின் வேதனையை அவனிடம் பகிர்ந்து கொள்ள முயன்றதில்லை என்றதில் அவனுக்கு என்னவோ போல இருந்தது.

இருவரும் ஆதர்ஷ தம்பதிகள் இல்லை தான் என்றாலும், தான் இன்னும் கொஞ்சம் இணக்கமாக அவளிடம் நடந்திருக்கலாம் என்று காலங்கடந்து வருந்தினான்.  தன் மனக்குறையை சொல்லுமளவு கூட மனைவிக்குத் தான் இடமளிக்காதது ஆழமான ரணத்தைத் தந்தது.

“அந்த அரசியல்வாதி பையன் யாரு பெரியம்மா?” தன் வேதனையைத் தொண்டையில் அழுத்தியபடி கேட்டான்.

“அவன் இப்ப பல்லு பிடுங்கின பாம்பு மாப்பிள்ளை… பதினாறு வயசுல ரத்தவெறியோட இருக்கிறவன் வேற எப்படி இருப்பான்?” என்று சொன்னவர் யார் என்றும் குறிப்பிட, “ஓ…” என்று கேட்டுக் கொண்டவனுக்கு தனக்கு அமையாமல் போன வாய்ப்பை எண்ணி வருத்தம் நிறையவே இருந்தது.

வீரா எதுவும் அவனை செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் சொந்த தந்தையையே கொல்ல முயற்சி செய்ததன் விளைவாக, அவன் தந்தையின் கவனிப்பில் ஏற்கனவே முடமாக இருக்கிறான் அவன்.

அடர்ந்த அமைதி அவ்விடத்தில்!

நீண்ட பெருமூச்சை விட்டபடி, “நீங்க படுத்துக்கங்க பெரியம்மா…” என்றான்.

“சரி மாப்பிளை. நீங்க வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு காலையில வாங்க… நான் சந்தியாவை பார்த்துக்கிறேன்” என்றதும் தலையசைத்துவிட்டு, அறையிலிருந்து வெளியேறியவன் அங்கிருந்த வராண்டாவின் நாற்காலியிலேயே அமர்ந்து கொண்டான்.

சந்தியாவிற்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அதைக் கூட உணராமல் அவளைச் சொற்களால் வதைத்த தன் அறிவற்ற தன்மையை வெகுவாக வெறுத்தான்.

தான் இன்னும் கொஞ்சம் பொறுமையாகவும், பொறுப்பாகவும் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று இப்பொழுது புரிகிறது. தேவையில்லாமல் வார்த்தைகளை வேறு இஷ்டத்திற்குச் சிதறி விட்டாயிற்று! இனி எப்படி அவள் முகத்தில் விழிப்பது என்றே அவனுக்குப் புரியவில்லை. கொஞ்சம் கலக்கமாகவும் தடுமாற்றமாகவும் இருந்தது.

தன்னைக் குறித்த சுய அலசலிலேயே இரவு முழுவதையும் பொட்டு தூக்கம் வராமல் கழித்தவன், அவ்வப்பொழுது சென்று மனைவியின் அறையையும் எட்டிப் பார்த்து வந்தான்.

மனைவி தங்கி இருந்த அறையில் இரண்டு கட்டில்கள் இருக்க, அதற்கு இடைப்பட்ட இடத்தில் ஸ்ரீதரன் படுத்திருந்தான். உள்ளே அமர்வதற்குக் கூட இடமில்லாததால் வீராவால் உள்ளேயும் இருக்க முடியவில்லை. ஒரு வித அலைப்புறுதல் அழுத்த வெளியேயும் அமைதியாக அமர முடியவில்லை.

விடியலின் சாயல் தொடங்கிய நேரம் மீண்டும் ஒரு முறை கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான். இனி மனைவி எப்பொழுது வேண்டுமானாலும் விழித்துக் கொள்ளலாம் என்று தோன்றியதாலோ என்னவோ அமைதியாகச் சென்று அவளின் கட்டிலிலேயே அமர்ந்து கொண்டான்.

அடுத்த அரை மணி நேரமும் அவளிடம் எவ்வித அசைவும் இல்லை. நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

அதற்குள் புவனா எழுந்திருக்க, இவனைக் கண்டதும், “ என்ன மாப்பிள்ளை நேரத்திலேயே வந்துட்டீங்களா?” என்று விசாரித்தவர் அவனை நன்கு பார்த்துவிட்டு, “நீங்க ராத்திரி வீட்டுக்குப் போகவே இல்லையா?” என திகைப்புடன் வினவினார்.

பதில் சொல்லாமல் லேசாகத் தலையை மட்டும் அசைத்துவிட்டு அமர்ந்திருந்தான் வீரேந்திரன்.

“எதுக்கு தான் இந்தளவு பயப்படுவீங்களோ?” என்றபடி எழுந்தவர் முகம் கழுவச் சென்றார்.

மருந்துகளின் விளைவால் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த சந்தியா இப்பொழுதுதான் கண்விழித்தாள். கண்விழித்தவளின் பார்வையில் முதலில் விழுந்தது வீரேந்திரனே!

இரவெல்லாம் சரியாக உறங்காததின் பலனாக, விழிகள் சிவந்து, கண்ணிமைகள் லேசாகத் தடித்து, முகம் சோர்ந்து, தலைமுடி கலைந்து பார்க்கவே கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தான்.

அவனைப் பார்த்ததும் தன் போல அவளின் விழிகள் அவனை அளவெடுக்கத் தொடங்கிய பிறகே நேற்றைய சம்பவம் நினைவில் வந்தது. நெஞ்செங்கும் மீண்டும் நெருஞ்சி முற்கள் குத்த சோர்வுடன் விழிகளை மறுபடியும் மூடிக்கொண்டாள்.

மனைவி விழித்ததையும், தன்னை வெகு சில நொடிகள் பார்த்துவிட்டு மீண்டும் வேகமாக விழி மூடிக்கொண்டதையும் கவனித்த வீரேந்திரனின் மனம் வாடியது.

மன்னிப்பை யாசிக்கும் விதமாக லேசாக அவளின் கரத்தினை பற்றி இதமாக வருடி அழுத்தம் கொடுக்க, சந்தியா தன் கையை வேகமாக உருவிக் கொண்டாள்.

வீரேந்திரன் லேசாகப் புன்னகைத்துக் கொண்டான். இதுபோன்ற ஊடல்கள் அவர்களுக்குள் முற்றிலும் புதிது!

மீண்டும் கண் திறந்து தன்னைப் பார்ப்பாள் என்று உறுதியாகத் தோன்றிட, பார்வையே மாற்றாமல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

சந்தியாவிற்கு நிறைய கோபம். ஆக, முயன்று தன்னை கட்டுப்படுத்தி, விழிகளைப் பிரிக்காமல் படுத்திருந்தாள். அவளின் கருவிழிகள் அவஸ்தையுடன் இங்கும் அங்கும் மூடிய விழிகளுக்குள் அலைய அவள் வெகுவாக தடுமாறிக் கொண்டிருப்பது புரிந்தது.

சின்ன புன்னகையோடே மீண்டும் இதமாக கரம் பற்றினான். சந்தியா மீண்டும் இழுத்துக் கொண்டாள்.

அதற்குள் புவனா வந்திருக்க அவர்களின் விளையாட்டு நின்றது.

கொஞ்ச நேரத்தில், தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட ஸ்ரீதரனும் அண்ணனை வெகுவாக முறைத்துக் கொண்டே திரிந்தான். இவர்கள் இருவரின் முறைப்பும், கோபமும், முகத்திருப்பலும் சிரிப்பைத்தான் வரவழைத்தது.

‘இவனை அடிச்சதுக்காக தானே அவளை கண்டிச்சேன். இப்ப இவனே நம்மளை வில்லன் மாதிரி பார்க்கிறான்… என்னதான் நடக்குதோ’ வீரேந்திரனுக்கு காரணம் புரியாமல் புலம்ப மட்டுமே முடிந்தது.

இவர்கள் மூவரின் கண்ணாமூச்சி விளையாட்டு சந்தியாவின் டெஸ்ட் ரிப்போர்ட்டுகளுடன் மருத்துவர் வரும்வரை தொடர்ந்தது.

மருத்துவர் வந்து இவளின் டெஸ்ட் ரிப்போர்ட்டை பார்த்துவிட்டுக் கேட்ட கேள்வியில் அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எதிர்வினையைக் காட்டினர்.