ஆனந்த போர்க்களம் – 16

கோபத்தில் சொன்ன வார்த்தைகளுக்கு எந்தளவு மதிப்பு தருவது என சந்தியா நல்ல நிலையில் இருந்திருந்தால் நிச்சயம் யோசித்திருப்பாள்.

ஆனால், ஏற்கனவே சோர்ந்து, வாடிப் போயிருப்பவளுக்கு இந்த நிலைமையைக் கையாள தெரியவில்லை.

ஒரு கோபத்தில் அறைக்குள் இடமில்லை என்று கணவன் சொன்னதன் அர்த்தம் இந்த வீட்டிற்குள்ளேயும், அவன் மனதிற்குள்ளேயும் இடமில்லை என்பதாகவே அவளுக்கு தோன்றியது.

பசியில், அதிர்வில் ஒரு மாதிரி அரை மயக்க நிலையில் இருந்தவளை குறைந்தபட்சம் வீரேந்திரன் உறங்கவாவது விட்டிருக்கலாம். ஆனால், அப்பொழுது போய் அவன் இவ்வாறு பேசி சென்றிருக்க சோபாவில் ஓய்ந்து அமர்ந்திருந்தவளுக்கு மனம் சுத்தமாக விட்டுப் போனது.

மேற்கொண்டு இந்த வீட்டில் இருக்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. அப்படியுமா நாம் ரோசம் கெட்டு இங்கு இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான்!

ஆனால், கை கால்களைக் கூட அசைக்க முடியாத நிலையில் அவளும் தான் என்ன செய்வாள்? அப்படி ஒரு சோர்வு! இந்த சூழ்நிலை அவள் முற்றிலும் எதிர்பாராதது!

அண்ணன் வீட்டை விட்டு வெளியேறியதை உறுதி செய்ததுமே ஸ்ரீதரன் அறையை விட்டு வேகமாக வெளியே வந்துவிட்டான்.

அண்ணியை சமாதானம் செய்ய வேண்டும் என்ற வேகத்தில் வந்தவனுக்கு அண்ணியின் சோர்ந்த தோற்றம் வெகுவாக உலுக்கியது. கொஞ்ச நேரம் முன்பே உடம்பு சுட்டதே என பதறியபடியே,

“அண்ணி ரொம்ப உடம்பு முடியலையா? நாம ஹாஸ்பிட்டல் போலாம் வா…” என்றவன் வேகமாக டேக்சி ஒன்றையும் புக் செய்தான்.

மறுக்கும் நிலையில் கூட அவள் இல்லை. அத்தனை அயர்வு!

அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீதரன் அருகிலிருந்த தண்ணியை எடுத்து அவளுக்குப் பருக கொடுத்தான். கொஞ்சமாக எடுத்துக் கொண்டாள்.

உள்ளே ஓடிச் சென்று பாலை மிதமான சூட்டில் கொண்டு வந்து தந்தான். “பாலை மட்டும் கொஞ்சம் குடிச்சுக்க சந்து. உதவிக்கு கல்யாணி அம்மாவும் வேற இல்லை. இன்னும் ரெண்டு நாள் ஆகுமே வர… உனக்கு எதுவும் இல்லை தானே…” என்றான் கவலை குரலில்.

அவள் பேசத் தெம்பின்றி மறுப்பாகத் தலையசைக்க, “ம்பச்… எல்லாம் என்னால தான்…” என வெகுவாக வருந்தினான்.

“ஸ்ஸ்ஸ்…” என்றாள் சன்னமான குரலில். ஆறுதலாக அவன் கையையும் பிடித்து கொண்டாள். அப்பொழுதும் அவன் முகம் தெளியவே இல்லை.

அதற்குள் புக் செய்த வண்டி வந்திருக்க, அடுத்த சில நிமிடங்களில் சந்தியா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள்.

அங்கு அட்மிட் செய்ய வேண்டும் என்று மருத்துவர் சொல்லிவிட, ஸ்ரீதரனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அண்ணன் மேல் கோபம் இருந்தபோதும், அந்த நேரத்தில் உதவிக்காக அவனைத் தான் அழைக்கத் தோன்றியது.

வீரேந்திரன் வீட்டிலிருந்து கிளம்பி நேராகக் கடைக்குச் சென்று விட்டான். இன்று கடைக்கு சரக்குகள் கொஞ்சம் வர வேண்டியிருந்தது. கூட நிற்க வேண்டிய அவசியம் இல்லைதான்! எல்லா நாட்களும் நிற்கவும் முடியாது என்பதால், அததற்கு என்று நம்பகமான ஆட்களை ஏற்கனவே நியமித்து இருக்கிறான்.

ஆனால், இன்று வீட்டுக்குப் போக விருப்பமில்லாத காரணத்தால் கடைக்கு வந்து மேற்பார்வைக்காக நின்று கொண்டான்.

அந்தநேரம் தான் ஸ்ரீதரன் அழைத்தான். எடுத்துப் பார்த்ததும் இந்நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறியதால், இது சந்தியாவின் தூண்டுதலின் பேரில் வந்த அழைப்பாக இருக்கும் என தான் வீரேந்திரனுக்கு தோன்றியது. ஆக, அழைப்பை ஏற்காமல் விட்டு விட்டான்.

‘அவனையே அடிச்சிட்டு அவனையே தூதும் விடறா பாரு… சரியான ஆளு தான் இவ. ம்பச் இவளை போயி அப்பாவின்னு நினைச்ச நம்மளை சொல்லணும். புத்தி புல் மேய தான் போயிருக்கு நமக்கு’ தனக்குள் எண்ணியபடி கோபத்தைக் கொஞ்சமும் குறையாமல் இழுத்துப் பிடித்தபடி இருந்தான்.

இன்னமும் அவனால் மனைவியின் செயலை ஏற்க முடியவில்லை. அதெப்படி இவள் தோளுக்கு மேல் வளர்ந்த ஆண் பிள்ளையை அடிப்பாள் என்ற கோபம் குறைவேனா என்றது.

அதற்குள் ஸ்ரீதரன் இரண்டாம் முறை அழைத்திருந்தான். ஏற்கும் எண்ணமே இல்லை வீராவுக்கு.

அண்ணனின் கோபம், வீம்பு, பிடிவாதம் ஒருமாதிரி கோபத்தைத் தந்தது ஸ்ரீதரனுக்கு.

நேரம் காலம் புரியாமல், அவசரத்திற்கு உதவாமல் இப்படித் தவிக்க விடும் கோபம் எதற்கு என்றொரு எரிச்சல்! குடும்ப உறவுகளையே புறக்கணித்து அப்படி என்ன கோபம் வேண்டிக் கிடக்கிறது என்றொரு கடுப்பு!

‘இவனை எல்லாம் அம்மா, அப்பா அடிச்சு வளர்க்காம என்ன தான் பண்ணிட்டு இருந்தாங்களோ’ என்று அவர்களையும் குறை சொன்னான்.

பழனி மலையின் உச்சியில் தந்தை மீது கோபம் கொண்டு ஆண்டியாக நின்ற அந்த வேலவனின் மனநிலை தான் ஸ்ரீதரனுக்கும் இச்சமயம்!

மேற்கொண்டு அண்ணனைத் தொடர்புகொள்ளும் எண்ணம் வராமல், சந்தியாவின் தந்தை நாராயணனுக்கு அழைத்து விட்டான்.

“சொல்லுப்பா என்ன இந்த நேரத்துல?” பதற்றத்துடன் ஒலித்தது நாராயணனின் குரல்.

“மாமா பயப்பட எதுவுமில்லை. அண்ணன் கடையில கொஞ்சம் வேலையிருக்குன்னு போயிட்டான். அண்ணிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்திருக்கேன். அதுதான் உங்களையும் துணைக்கு கூப்பிடலாம்ன்னு போன் போட்டேன் மாமா” சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொல்லிவிட,

அவருக்கு இன்னமும் பதற்றம் தான்! மனிதர் வேறு அவசரத்திற்கு வர முடியாதபடி வெளியூரிலும் இருக்க ரொம்பவுமே பயந்து போனார். அவரை சமாளிக்க ஸ்ரீதரன் தான் வெகுவாக போராட வேண்டியிருந்தது.

கடைசியாக நாராயணன், அவரின் அக்கா புவனாவை உடனே துணைக்கு அனுப்பி வைப்பதாகச் சொல்லி வைத்தவர், அவரும் நாளை காலைக்குள் இங்கு வந்து விடுவதாகத் தெரிவித்தார்.

அவர் சொல்லி வைத்தது போல கொஞ்ச நேரத்தில் சந்தியாவின் அத்தையும் வந்துவிட, துணைக்கென்று ஒரு ஆள் வந்ததும் தான் ஸ்ரீதரனுக்கு ஆசுவாசமே!

சந்தியாவிற்கு ட்ரிப்ஸ் இறங்கிக் கொண்டிருந்தது. அவள் உறங்கிய நிலையில் இருக்க, புவனாவை அங்கிருந்த மற்றொரு கட்டிலில் படுக்கச் சொன்னவன், இவன் கீழே போர்வை விரித்து படுத்துக் கொண்டான்.

வீட்டிற்குப் போய்விட்டு மறுநாள் காலை வருமாறு புவனா இவனிடம் சொன்னார் தான், இவன்தான் மறுத்துவிட்டு இங்கேயே தங்கிக் கொண்டான்.

கொஞ்ச நேரத்தில் தன்னையறியாமல் ஸ்ரீதரன் உறங்கிப் போக, புவனாவும் கண் அசந்திருந்தார்.

அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நிசப்தமான நேரத்தில் ஸ்ரீதரனின் கைப்பேசி சத்தமிட, உறக்கத்தில் இருந்தவனுக்கு தெரியவில்லை. புவனா தான் சத்தம் கெட்டு எழுந்தவர் கைப்பேசி அழைப்பை எற்றார்.

“எங்கடா இருக்கீங்க?” பதற்றமாக ஒலித்தது வீரேந்திரனின் குரல்.

“மாப்பிள்ளை நான் தான் புவனா பேசறேன். இந்த *** ஹாஸ்பிடல்ல தான் இருக்கோம். உங்க தம்பி கூட துணைக்கு நானும் இருக்கேன். சந்தியாவுக்கு ட்ரிப்ஸ் இறங்குது. பயப்பட எதுவும் இல்ல. நீங்க நாளைக்கு காலைல வாங்க” என்று சொல்லிவிட்டு வைக்க, அடுத்த சில நிமிடங்களில் பதறி எடுத்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்திருந்தான் வீரேந்திரன்.

வழக்கம்போல உறக்கத்தில் பொல்லாத சொப்பனங்களைக் கண்டு, சந்தியா கொஞ்சம் அலறி துடிக்க, புவனா அவளது நெஞ்சை நீவி சாந்தப்படுத்திக் கொண்டிருந்த நேரம் வீரேந்திரன் சரியாக உள்ளே நுழைந்தான்.

கதவு திறந்த சத்தத்தில், நர்ஸ் தான் யாரோ உள்ளே வருகிறார் போல என்று எண்ணியபடி திரும்பிய புவனா அங்கே வீரேந்திரனை எதிர்பாராமல் திகைத்தார்.

“இந்த நேரத்துல நீங்க எதுக்கு இங்க வந்தீங்க மாப்ள? நான்தான் ஒன்னும் இல்லன்னு சொன்னேனே” சந்தியாவை அமைதிப் படுத்தியபடியே புவனா சொல்ல,

தலை கலைந்து, விழிகள் சிவக்க ஏனோதானோ என்ற தோற்றத்தில் இருந்த வீரேந்திரனின் பார்வை முழுவதும் கட்டிலில் ஓய்ந்து படுத்திருந்த சந்தியாவிடமே!

சாதாரண விடிவிளக்கின் ஒளியில் அரைகுறையாகத் தெரிந்த சந்தியாவின் பிம்பத்தையே இமைகளை கூட அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதிலும் அவள் பயந்து அரற்றி  கொண்டிருப்பதைப் பார்த்ததும், மனம் கனத்து போனது!

அவனின் கலக்கம் புரிந்து, “உடம்பு சரியில்லாததுக்கு எதுக்கு மாப்ள இவ்வளவு கவலை படறீங்க? அவளுக்கு ஒன்னும் இல்ல. நாளைக்கு காலையில நல்லா உங்க கிட்ட பேசுவா பாருங்க. இதுக்கு போயி கலங்கிட்டு…” என அவனைச் சமாதானப்படுத்த, அவன் முகம் அப்போதும் தெளியவில்லை.

சந்தியாவின் அரற்றலும் இன்னும் ஓய்ந்த பாடில்லை!

“அங்கேயே ஏன் நிக்கிறீங்க மாப்பிள்ளை உள்ளே வாங்க” என புவனா குரல் கொடுக்க, அவர் குரல் கலைத்ததோ இல்லை மனைவியை அருகில் காணும் எண்ணத்தினாலோ அவனும் உள்ளே வந்திருந்தான்.

புவனா தன் குரலை மெதுவாக்கி, “பத்து வருஷமா இப்படியே உள்ளுக்குள்ளேயே மறுகிட்டு இருக்கா… எப்ப தெளிஞ்சு வெளியே வருவாளோ தெரியல… கடவுளுக்கு இந்த குழந்தை மேல இன்னமும் கொஞ்சம் கூட கருணை வரமாட்டேங்குது பாருங்களேன்…” என்றவரிடம் நீண்டதொரு பெருமூச்சு இயலாமையுடன்.

மனைவியைப் பார்வையால் வருடியபடியே, அவளின் கரத்தை மென்மையாகப் பற்றிக்கொண்டு அடர்ந்த அமைதியைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தவன், புவனா சொன்ன விஷயத்தில் மெல்ல விழியுயர்த்தி அவரைப் பார்த்தான்.

அவர் முகம் வெகுவாக கலங்கி இருந்தது. “உங்ககிட்ட சொல்லி இருப்பாளா என்னன்னு தெரியல மாப்ள…” என்றவரின் குரல் வெகுவாக உள்ளே போயிருந்தது.

அவரின் குரலின் கரகரப்பும், முகத்தின் கலக்கமும் அவனையும் பாதிக்க அவனது அத்தனை நேரம் மௌனம் உடைந்தது.

நெற்றி யோசனையில் சுருங்க, “என்ன விஷயம் பெரியம்மா?” என விசாரித்தான்.

அவருக்கும் சந்தியாவின் நிலையை எண்ணி பாரம் உள்ளே அழுத்திக் கொண்டிருந்ததோ என்னவோ, இத்தனை நாட்களும் தம்பியிடம் கூட பகிராத விஷயத்தை இன்று இவனிடம் பகிரும் எண்ணத்திற்கு வந்திருந்தார்.

“சந்தியாவோட அம்மா, அண்ணா தவறிப் போனது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் மாப்பிள்ளை” என்றதும் மெல்லத் தலையசைத்தான்.

“வாணியும், சரவணனும் கலவரத்துல இறந்து போனதா தான் எல்லாரும் நினைச்சிட்டு இருக்காங்க மாப்பிள்ளை… ஆனா அவங்க ரெண்டு பேருமே பகைக்குப் பலியானது எங்க ரெண்டு பேரை தவிர யாருக்கும் தெரியாது…” என்றவரின் முகத்தில் பெரும் துக்கம்!

கேட்ட வீரேந்திரன் அதிர்ந்து போனான். இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று!

புவனா நடந்ததைச் சொல்லச் சொல்ல அவனுக்குச் சினம் பெருகியது. இப்படியும் மனிதர்களா என்று, எப்பொழுதோ நடந்த அநியாயத்திற்கு இன்று மதயானையின் ஆக்ரோஷத்தோடு முகம் இறுக நின்றிருந்தான்.