சந்தியாவும், ஸ்ரீதரனும் உடைகளை எடுத்து முடித்திருந்தனர். வீரேந்திரனும் பொறுப்பாக அவர்களை ஆட்டோவில் ஏற்றி விடுவதற்காக வாயில் வரை வந்திருந்தான்.
அந்த நேரத்தில் தான் யாரும் எதிர்பாராத விதமாக அந்த சம்பவம் நடந்தது.
கடையின் வெளியே யாருக்காகவோ இரு இளம் பெண்கள் காத்திருக்க, அதில் ஒரு பெண்ணிடம் ஒரு இளைஞன் வம்பளந்து கொண்டிருந்தான்.
அத்தனை நேரமும் அவர்களின் பேச்சு சத்தம் குறைவாக இருக்க, யாரும் பெரிதாக அவர்களை கவனிக்கவில்லை. இப்பொழுது அந்த பெண்ணும் அவனும் ஆத்திரமாகக் கத்தி சண்டையிட்டுக் கொண்டிருக்க, அதில் ஒரு சிலரின் கவனம் அவர்களிடம் திரும்ப தொடங்கியிருந்தது.
வீரேந்திரன் பார்த்த உடனேயே அங்கு அந்த இளைஞன் ஏதோ பிரச்சினை செய்கிறான் என்று கணித்து விட்டான். கோபம் பெறுக ஆத்திரத்தோடு அந்த இளைஞனை நோக்கி நகர, சுற்றி இருந்த எல்லாரின் கவனமும் கூட இப்பொழுது அவர்களிடமே இருக்க, யாரும் எதிர்பாராத விதமாக நொடியில் அந்த கொடூரம் அரங்கேறி இருந்தது.
அந்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து, “எல்லாம் இந்த அழகு இருக்க திமிருடி… அதுதான் நான் எல்லாம் உனக்கு மனுஷனா தெரியலை…” என்று ஆங்காரமாகக் கத்தியவன், அந்த பெண் சுதாரிக்கும் முன் அவள் முகத்தில் அந்த ஆசிட்டை ஊற்றி விட்டு வேகமாகத் தப்பி ஓடப்பார்த்தான்.
அதற்குள் அவர்களை சமீபித்திருந்த வீரேந்திரன் ஓட முயன்றவனின் கழுத்திலேயே தன் வலது கையால் ஒரு வெட்டு வெட்ட, அவன் தடுமாறிக் கொண்டிருந்தபோதே அவன் வயிற்றில் பலமாக ஒரு உதை விட்டு கீழே சரித்திருந்தான்.
சத்தம் கேட்டு வெளியே வந்த கடை பையன்களிடம், “இவனை கட்டுங்கடா…” என கர்ஜிக்க, நான்கைந்து பேர் வேகமாக அவனைச் சூழ்ந்தார்கள்.
பாதிக்கப்பட்ட பெண் கதறி அழுதாள். தாங்க முடியாத வலியால் முகத்தை மூடி புழு போலத் துடித்துக் கொண்டிருந்தாள். பார்ப்போரின் உள்ளம் எல்லாம் கனத்து போகும்படியான அழுகை, கதறல். அவளின் அலறல் மட்டுமே அங்கு ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது.
அந்த கயவன் ஊற்றிய அமிலத்தை உடனடியாக டையலூட் (பலம் குறைந்ததாக மாற்ற) செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்த வீரேந்திரன், கடை ஊழியன் ஒருவனைப் பார்த்து, “சீக்கிரம் ஓஸ் பைப் மூலம் இங்கே தண்ணி கொண்டு வாடா…” என்று கட்டளையிட, அவன் வேகமாகக் கடைக்குள் ஓடினான்.
“டேய்… இந்த கேன் வாட்டரை பிரிச்சு சீக்கிரம் கொடுங்க. இந்த பொண்ணு மேல ஊத்தனும்…” என அங்கிருந்த குடிநீர் கேன்களை பார்த்துக் கூறிக்கொண்டே வேகமாக ஒரு கேனை பிரித்து அந்த பெண் மீது மூச்சு முட்டாதவாறு ஊற்றத் தொடங்கி இருந்தான்.
“முகத்துல இருந்து கையை எடும்மா… கையுக்கும் ஆசிட் பரவும்…” என்று வீரேந்திரன் சொன்னதை அந்த பெண்ணால் செயல்படுத்த முடியவில்லை. எரிச்சலும் வலியும் உயிர் போனது. முகத்தை வெட்டி எரிந்து விட்டால் கூட போதும்… உயிரே இந்த நொடியில் ஆவியானால் கூட சம்மதம் என்றிருந்தது அந்த பெண்ணிற்கு! அத்தனை நரக வேதனையான வலி!
அந்த பெண் கதறுவதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. சின்ன பெண்ணாகத் தான் இருப்பாள். மிஞ்சிப் போனால் ஸ்ரீதரன் வயது தான் இருக்கும். பாவம் எத்தனை வலிக்கிறதோ என வீராவின் இதயம் பாரமானது.
“நான் ஆம்புலன்சுக்கு கால் பண்ணிட்டேன் அண்ணா…” என ஸ்ரீதரன் வந்து வேகமாகச் சொன்னான்.
அந்த பெண்ணுடன் கூட வந்த பெண், பயத்தில் உடல் நடுங்க அழுதபடியே இருக்க, சந்தியாவும் பயத்தில் முகம் வெளிறி நின்றிருந்தாள். அவளின் நெஞ்சம் தடதடத்து கொண்டிருக்க, இரு கை கொண்டு நெஞ்சை அழுத்திப் பிடித்தபடி நின்றிருந்தாள்.
வீரேந்திரனோ, சந்தியாவை நோக்கி, “சீக்கரம் இங்கே வா… இந்த பொண்ணோட ஆர்னமெண்ட்ஸ் எல்லாம் ரிமூவ் பண்ணு. அது இருந்தா ஆசிட் இன்னும் ரியாக்ட் செய்யும். காயம் அதிகம் ஆயிடும்… அப்படியே முகத்துல இருந்து கையை விலக்கிப் பிடி… அப்பதான் ஆசிட்டை டையலூட் செய்ய முடியும்…” என்று சொன்னான்.
சுற்றி வேடிக்கை பார்த்த மனிதர்கள் பலர் ஒதுங்கி நிற்பதும், அந்த பெண்ணின் வேதனையை வீடியோ பதிவு செய்வதுமாக இருக்க, கணவன் இத்தனை பரபரப்புடன் தன்னால் முடிந்த உதவியைச் செய்யும்போது, தான் மட்டும் நடுங்கி, ஒதுங்கியிருக்க வெட்கியவள் வேகமாக அந்த பெண்ணின் அருகே சென்று, அவளை மெல்ல தாங்கி பிடித்து அவளின் கம்மல், செயின் எல்லாவற்றையும் அகற்ற தொடங்கியிருந்தாள்.
“இதென்ன இந்த புள்ள இப்படித் தாங்கி பிடிச்சிட்டிருக்கு… அந்த பொண்ணு மேல ஊத்தின ஆசிட் இவ மேல படாதா?” என கூட்டத்தினர் பேச,
லேசாக கையில் பட்டுவிட்டால் என்பதற்கே இத்தனை பயப்படுபவர்கள் முகம் முழுவதும் அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டிருக்கும் இளம் குருத்தின் நிலையைப் பற்றி யோசிக்க மறுப்பதை என்னவென்று சொல்வது?
சூழ இருந்தோரின் பேச்சிற்குச் சந்தியா எந்த எதிர்வினையும் காட்டவில்லை. கதறித் துடிப்பவளைச் சரிந்து போகாதவாறு நேராகத் தாங்கி பிடித்தாள்.
அந்த பெண்ணை நேராக அமர வைத்ததும் நீர் ஊற்றுவது இன்னும் கொஞ்சம் எளிதாக இருந்தது. சந்தியாவைப் பார்த்து மேலும் இரு பெண்கள் அந்த பெண்ணின் அருகே ஆதரவுக்காக வந்தனர். அவர்கள் முகத்திலிருந்து அந்த பெண்ணின் கரத்தை விலக்கி பிடித்தனர்.
அதற்குள் வீரேந்திரன் சொன்னதுபோல தண்ணீர் கேனை வேகமாகப் பிரித்து வைக்கத் தொடங்கியிருந்தனர் இரண்டு பேர். அதில் ஒருவன் அவனும் நீர் எடுத்து ஊற்ற வர, “பாத்துடா மூச்சு முட்டிட போகுது… மெதுவா ஊத்தனும்…” என்றவன், “இன்னும் நிறையத் தேவைப்படும்…” என்றும் சொல்ல,
அதற்குள் கடைக்குள் இருந்த தண்ணீர் பைப்பிலும் ஓஸ் பைப்பை இணைத்தபடி உள்ளே சென்றவன் வந்திருந்தான்.
கிட்டத்தட்ட அடுத்த அரைமணி முதல் முக்கால் மணி நேரத்திற்கு அறுபது லிட்டர் வரை சுத்தமான நீரை ஊற்ற வேண்டியதிருக்கும். அசுத்தமான நீர் தொற்றை இன்னும் அதிகரித்து விடும் என்பதால் அதை ஊற்றக் கூடாது. நீர் இல்லாத பட்சத்தில் பாலை கூட ஊற்றலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பெருமளவு பாதிப்பு குறைந்து விடும்.
“எரிச்சல் குறையும் வரைக்கும் தண்ணி ஊத்தணும்… உனக்கு ஒன்னும் ஆகாது பயப்படாத…” என தைரியம் சொல்லி இப்பொழுது ஓஸ் பைப்பின் உதவியோடு அந்த பெண்ணின் மேல் தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தான்.
அந்த பெண் எரிச்சல் தாங்க முடியாமல் இன்னமும் விசும்பிக்கொண்டே இருந்தாள்.
“ஒன்னும் இல்லம்மா. எதுவும் ஆகாது பயப்பாடாத…” என்று சந்தியாவும் ஆறுதல் சொல்ல, வலியில் துடிக்கும் பெண்ணவளால் பாவம் எதையும் உணர முடியவில்லை.
தோழியின் நிலையை, அவள் வேதனையைக் கண்கூடாகப் பார்க்க முடியாமல் அழுது தேம்பிக் கொண்டு அவளின் தோழி அந்த பெண்ணின் அருகிலேயே நின்றிருந்தாள்.
யாரோ ஒருவர் பெற்றவர்களுக்குத் தகவல் சொல்லச் சொன்னதைக் கேட்டதும், அழுதபடியே பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டினருக்கு அவள் தோழி ஒருபுறம் தகவல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
பாதிக்கப்பட்டிருந்த பெண்ணோ நீரில் நனைந்ததில் விறைத்து வேறு போயிருந்தாள்.
கதறி கதறி மயங்கிய நிலையில் இன்னமும் வலியும் எரிச்சலும் தாங்காமல் அரற்றி கொண்டிருந்தாள். அவன் ஆசிட் வீசும்போது வேகமாக முகத்தைத் திருப்பி தன்னை காக்க நினைத்திருந்த போதும், அவளின் வலது கன்னம், தாடை, கழுத்து எல்லாம் ஆசிட் பட்டிருந்தது.
முதலுதவியின் பயனால் அடுத்த அரைமணி நேரத்தில் அந்த பெண்ணின் எரிச்சல் மெல்லக் குறையத் தொடங்கியிருந்தது. ஆம்புலன்ஸும் வந்து சேர்ந்திருக்க, உடன் நின்றிருந்தவனிடம் வீரேந்திரன், “ஹரி இவங்களோட கூட போயி எதுவும் உதவி தேவைன்னா செய். அவங்க வீட்டுல இருந்து ஆளுங்க வர வரைக்கும் கூட துணைக்கு இரு” என்றவன் தன் கையிலிருந்த பணத்தை கொடுத்து அனுப்பினான்.
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களின் முகம் எப்படிப் பாதிப்படையும் என சந்தியாவுக்கும் தெரியுமே… ஆக, அந்த பெண்ணை குறித்து கவலை அதிகமாக இருந்தது.
ஆனால், வீரேந்திரன் செய்த முதலுதவியால் பாதிப்பு பெருமளவு குறைந்துவிடும் என்று அப்பொழுது அவளுக்குத் தெரியாது.
ஆம்புலன்ஸ் சென்ற வழியைப் பார்த்துக் கொண்டிருந்தவள், திடீரென பின்னால் கேட்ட அலறல் சத்தத்தில் பதறித் திரும்பியிருந்தாள்.
அந்த பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கிய கொடூரனை அடித்து வெளுத்துக் கொண்டிருந்தான் வீரேந்திரன். கணவனின் மூர்க்கத்தனத்தையும், வேகத்தையும் பார்த்து நடுங்கி போனாள்.
வேகமாக அவனிடம் ஓடி, “விடுங்க போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவோம். நீங்க ஏன் அடிக்கறீங்க…” என்று தடுக்க முயல,
ஆத்திரம் கண்ணை மறைக்க அந்த கொடியவனை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தவன், தடையை ஏற்படுத்திய மனைவியை உதறிவிட, விழப்போனவளை ஸ்ரீதரன் தான் தாங்கி பிடித்தான்.
“சந்து… என்ன இது? அண்ணனுக்கு இருக்க கோபத்துல அவர்கிட்ட போயிட்டு இருக்க… அதெல்லாம் அவரே பார்த்துப்பாரு. நீ பேசாம இரு… இப்படி செஞ்சவனை சும்மாவா விடமுடியும்? எதுவா இருந்தாலும் கோபம் தணிஞ்சதும் அவர்கிட்ட சொல்லிக்கலாம்” என அண்ணியைத் தான் ஸ்ரீதரன் தடுத்தான்.
“நான் யாருன்னு தெரியாம கை வைக்கறீங்க…” என அடி வாங்கியவன் அந்த நிலையிலும் சீறினான். அவன் கண்ணில் தெரிந்த வெறியில் சந்தியாவின் அடிவயிற்றில் பயம் கவ்வியது.
“நீ யாரா இருந்தா எனக்கென்னடா? ஒரு பொண்ணை இப்படி வேதனை படுத்திப் பார்க்கிறவன் எல்லாம் என்ன மனுஷன்? உன் வீட்டுலேயும் பொண்ணுங்க இருப்பாங்க தானே? உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனுஷ தன்மையே இருக்காதா? வெறிநாய் மாதிரி திரிவியா?” என வீரேந்திரன் இன்னும் அடிக்க, அதற்குள் அங்கு வந்திருந்த காவல்துறையினர், “என்ன வீரேந்திரன் எதுக்கு இப்படி அடிக்கறீங்க? அதுதான் நாங்க வருவோம் தானே?” என்று அதிருப்தியாக சொல்லி, அடி வாங்கி மயக்க நிலையிலிருந்தவனை இழுத்து சென்றார்கள்.
“இனி இப்படி அடிதடி எல்லாம் வெச்சுக்காதீங்க. எத்தனை முறை உங்களை வார்ன் செய்யறது? ஏதாவது ஆயிட்டா நீங்களும் வீணா போலீஸ் கேஸுன்னு அலையணும்…” என இன்ஸ்பெக்டர் வந்து தனியாக அழைத்துச் சொல்லிச் செல்ல,
சந்தியா பயத்தோடு ஸ்ரீதரனை ஏறிட்டுப் பார்த்தாள்.
“பயப்பட எதுவும் இல்லை அண்ணி. அண்ணனுக்கு தெரிஞ்சவங்க தான் எல்லாரும். சும்மா வார்ன் பண்ணுவாங்க. அது அவங்க டூயூட்டி தானே… மத்தபடி அண்ணனுக்கு ரொம்ப பழக்கம். நீ ரொம்ப வொரி பண்ணாத. இதெல்லாம் அண்ணாவே பார்த்துப்பான்… நீ முதல்முறை பார்க்கிறதாலே பயப்படற…” என்று சமாதானமாகச் சொல்ல, அவளுக்கு முகம் தெளியவே இல்லை.
அதற்குள் வீரேந்திரன் ஸ்ரீதரனுக்குக் கண் ஜாடை காட்ட, சிறு தலையசைப்பை அண்ணனுக்குத் தந்தவன், அங்கிருந்து ஆட்டோவில் அண்ணியோடு ஏறிக்கொண்டான்.
சந்தியாவின் முகம் இன்னும் தெளியாததைக் கண்டு, “ஸ்ஸ்ஸ்… அண்ணி நீ கொஞ்சம் அமைதியா இரு. இப்ப எதுவும் யோசிக்காத…” என அவளின் கையை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தான்.
சந்தியாவுக்கு உள்ளம் படபடத்தது. இன்னமும் பயம் விடவில்லை.
வம்பு சண்டை, வாய்த்தகராறு என்பது வேறு! அடிதடி என்பது வேறல்லவா?
அந்த பெண்ணுக்கு உதவியது வரை எல்லாம் சரிதான்! ஆனால் தப்பு செய்தவனை அடித்தது? என்ன முயன்றும் அவளால் அதை நியாயப்படுத்தவே முடியவில்லை. அதிலும் அடிவாங்கிய பையனின் கோபம், சீற்றம்? அவன் யாரோ என்னவோ? அவன் பின்புலம் எப்படிப்பட்டதோ?
அவனால் எதுவும் இவருக்கு ஆபத்து வந்துவிட்டால் அந்த நினைவே நடுக்கத்தைத் தந்தது. அடிவயிறு வரை ஜில்லிட்டது.
பயந்து நடுங்குபவளைப் பார்க்க ஸ்ரீதரனுக்கு பாவமாய் இருந்தது. “ஒன்னும் இல்லை அண்ணி…” என்று சமாதானம் செய்தான்.
கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தவளின் கண்கள் கலங்கியிருந்தது. முகம் பயத்தில் வெளிறிப் போயிருந்தது.
“ஸ்ஸ்ஸ்… சின்ன குழந்தை மாதிரி… முதல்ல வீட்டுக்கு போலாம் நீ பயப்படாத…” ஆட்டோவில் வைத்து அவனால் வேறு என்ன பேச முடியும்?
“நான் அப்பாகிட்ட போறேன் ஸ்ரீ… என்னை அங்கே கொண்டு போயி விடறியா?” என்றாள் பாவமாக.
“இல்லை ஸ்ரீ… கோச்சுக்கிட்டு எல்லாம் போகலை. ரொம்ப பயமா இருக்கு… கொஞ்ச நேரம் அங்கே இருக்கணும்… பிளீஸ்…” என சிறுபிள்ளை போலக் கதறுபவளை மேற்கொண்டு அதட்டவும் மனம் வரவில்லை.
“நிஜமாவே நீ சின்ன குழந்தை தான் கெஃக்…” என சலித்தாலும் அவளின் பிறந்த வீட்டுக்கே வண்டியை விடச் சொன்னான்.
“நானும் உன் கூடவே இருக்கேன்…” என்று வற்புறுத்தலுடன் கேட்டவனை, வேண்டவே வேண்டாம் என்று மறுத்து அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.
ஸ்ரீதரனுக்கு முதல்முறை சந்தியாவின் அதிகப்படியான பயம் குறித்து என்னவோ உறுத்தத் தொடங்கியது.
வீட்டுக்கு போய்விட்டீர்களா என்று கேட்பதற்காக அழைத்த அண்ணனிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டான். அண்ணி பயந்து நடுங்கியது முதல் அது தனக்கு உறுத்துகிறது என்பதுவரை!
“விடு… அவளுக்கு அவங்க அம்மா, அண்ணா ஞாபகம் வந்திருக்கும்… நான் பாத்துக்கிறேன். நீ பிரீயா விடு…” என்றதோடு வைத்து விட்டான்.
ஸ்ரீதரனுக்கு முன்கதை எதுவும் விவரமாகத் தெரியாது. சில வருடங்களுக்கு முன்பு சந்தியாவின் அம்மாவும், அண்ணனும் ஒரு கலவரத்தில் இறந்து போனார்கள் என்றளவில் தெரியும்.
அவர்களின் இழப்பு அண்ணியை ரொம்பவும் பாதித்திருக்கும் போல என்று அண்ணன் சொன்னதை வைத்து ஊகித்துத் தெரிந்து கொண்டவனுக்கு… அவளின் பலவீனத்தைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
விவரம் தெரியாத வயதில் பெற்றவர்களை விபத்தில் பறிகொடுத்தவன் தான் ஸ்ரீதரனும். அதற்காகத் தான் ஒன்றும் பலவீனமாகி விடவில்லையே… இவள் இப்படிப் பயந்து நடுங்குகிறாள் என்றால், எந்தளவு பாதிப்படைந்திருக்க வேண்டும் என்று கவலையுற்றான்.
ஆனால், விவரம் தெரியாத வயதில் விதிவசத்தால் விபத்தில் பெற்றோரை இழப்பதற்கும், விவரம் தெரிந்த வயதில் கண்ணெதிரில் பகைக்குப் பலியாய் அம்மாவையும் அண்ணனையும் இழப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறதல்லவா?