ஆனந்த போர்க்களம் – 1

சொந்த தந்தையிடம் தான் இத்தனை தூரம் போராட வேண்டியிருக்கும் என்று சந்தியா எண்ணிப்பார்த்ததே இல்லை. அதிலும் தன்மீது உயிரையே வைத்திருக்கும் தந்தையிடம்!

கண்ணில் கரைகட்டி நின்ற கண்ணீருடன் மீண்டும் தந்தையிடம் மன்றாடினாள். “அப்பா… பிளீஸ் புரிஞ்சுக்கங்க அவருக்கும் எனக்கும் ஒத்தே வராதுப்பா…”

அவள் சொல்லிக்கொண்டிருக்கும் விஷயத்தில் இம்மிகூட இணக்கம் காட்டாமல், “வீரா தான் நான் உனக்காகப் பார்த்திருக்கும் மாப்பிள்ளைன்னு சொல்லிட்டு இருக்கேன். கொஞ்சம் கூட என்னை மதிக்காம, என் பேச்சுக்கு ஒத்துக்காம இப்படி முரண்டு பிடிச்சா என்ன அர்த்தம்?” தந்தையின் உறுமலில் அரண்டு போனாள்.

உதடுகள் நடுங்க… “அந்த மாதிரி எல்லாம் இல்லைப்பா…” என வேகமாக சொன்னவள், மேலும் தொடர்ந்து, “அப்பா நான் படிச்ச காலேஜில் தான் அவரும் படிச்சாரு. ரொம்ப ரொம்ப முரடுப்பா. எப்பவும் அடி தடி சண்டை தான்! அதோட அவருக்கு பொண்ணுங்களை பிடிக்கவே பிடிக்காது. அவர்கிட்ட பேச போன பொண்ணை கொஞ்சம் கூட யோசிக்காம எல்லாரும் பார்க்க அறைஞ்சிட்டாருப்பா. அந்த பொண்ணு நடுங்கி போயி விழுந்ததை நேரில் பார்த்தவ நானு. அவரோட முரட்டுத்தனத்துக்கு கண்டிப்பா என்கூட ஒத்து போகாதுப்பா. கொஞ்சம் யோசிங்கப்பா. பிளீஸ்…” என்றாள்.

“அப்ப… நானு? நான் முரடன் இல்லையா? வட்டி வாங்க சிரிச்சிட்டேவா போக முடியும்? அப்படிப்போனா வாங்கின பணத்தைச் சரியா திருப்பி தருவாங்களா முதல்ல?” என்றார் நாராயணன் காட்டமாக.

“அச்சோ… நான் அதை தப்பு சொல்லவே இல்லையேப்பா…”

“இல்லையே இப்ப தானே சொன்ன… வீரா முரடன் அவன்கூட வாழவே முடியாதுன்னு… அப்ப என்னை நம்பி உங்க அம்மா வந்து வாழலையா? ஏதோ ஒரு பொண்ணு என்னவோ பேசி அவன்கிட்ட அடிவாங்கினா அதை பெருசா சொல்லுவியா நீ? அந்த பொண்ணு யாருன்னு உனக்கு தெரியுமா? வீராகிட்ட என்ன பேசுச்சுன்னு தெரியுமா? ஒரு பொண்ணு கூட கொஞ்சி, குலாவி அதை நீ பார்த்திருந்தா அந்த பையனை குறை சொல்லலாம். இப்படி என்ன நடந்ததுன்னே தெரியாம அவன் அடிச்சான் அதை நான் பார்த்தேன்னு சொன்னா… உனக்கெல்லாம் அறிவு இருக்குமா இருக்காதா?”

இப்படி பேசுபவரிடம் என்ன விளக்க முடியும்? அதோடு அந்த பெண் ஓவியா அவனிடம் காதல் சொல்லச் சென்றால் என்றும் அவளுக்குத் தெளிவாக தெரியுமாயிற்றே! அதை அப்பாவிடம் சொல்ல முடியுமா? அவளுக்குத் தந்தையிடம் பேசவே முடியாத அச்சத்தில் நா உலர்ந்தது. கடவுளே இன்னும் என்ன சொல்லி அப்பாவுக்கு புரியவைக்க? தலையில் பெரிய பாரங்கல்லை சுமப்பது போல பாரமாக உணர்ந்தாள். ஆனால் அமைதியாக இருந்தால், வீரேந்திரனுக்கு மனையாள் ஆகிவிட நேரிடுமே!

எச்சில் விழுங்கிக்கொண்டு, இல்லாத தைரியத்தை இழுத்துக் கொண்டுவந்து, “அப்பா… கொஞ்சம் யோசிங்கப்பா. அவரோட முரட்டுத்தனத்தைத் தினம் தினம் நேரில் பார்த்து பயந்து நடுங்கினவ நான். காலேஜ் சேர்ந்த முதல் ஒரு வருஷமும் எப்படா இந்த வருஷம் முடியும் இவர் படிப்பை முடிச்சிட்டு காலேஜை விட்டு போவாருன்னு யோசிக்கிற அளவு எனக்கு அவர் மேல பயம். என்னால எப்படி அதெல்லாம் மறந்து அவரை கல்யாணம் செய்ய முடியும்? அவரை பார்த்தாலே எனக்கு பயம் தான் வரும்பா. என் நிலைமையில இருந்து கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்” என்றாள் கெஞ்சலாக.

அவள் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஆனால், நாராயணன் இளகவேயில்லை. அவருக்கு தன் முட்டாள் மகள் மீது எல்லையற்ற எரிச்சல். எவ்வளவு நல்ல மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டு வந்து நிறுத்தினால், இந்த பெண் அவன் அருமை புரியாமல் இப்படிக் கண்டபடி உளறிக்கொண்டு திரியுதே… அம்மா இல்லாத பிள்ளை என்று நான் தான் செல்லம் கொடுத்துக் கெடுத்து வைத்திருக்கிறேன் போல என்று தன் வளர்ப்பின் மீதே கூட அவருக்குப் பயங்கர அதிருப்தி.

முகம் இறுக, “என் சொல்படி கேட்டு கல்யாணம் செய்யறதா சொல்லி இருந்த தானே?” என்று கேட்க,

“இப்பவும் உங்க விருப்பம்போல நடந்துக்கறேன் பா. ஆனா, இவர் மட்டும் மாப்பிள்ளையா வேணாம். பிளீஸ் ப்பா” என்றாள் பாவமாக.

“நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணறதை பார்த்தா… அந்த முத்துராமன் சொன்னது நிஜம் தான் போல. காலேஜில் யார் கூடவோ சுத்தறியாமே?” நாராயணனுக்கு தன் மகள் அப்படியில்லை என்று தெரியும். அவள் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார். வேறு வழியின்றி இந்த பேச்சை உள்ளுக்கு இழுத்தார்.

“அய்யோ அப்பா… நான் தான் அப்படி எதுவும் இல்லைன்னு அப்பவே சொன்னேனே ப்பா”

“ஆமா… சொன்ன… நானும் என் புள்ளை பொய் சொல்லாதுன்னு நம்பினேன். ஆனா இப்ப என்னால நம்ப முடியலை…”

இதற்கு என்ன சொல்வது? அவளுக்குத் தவிப்பும் கலக்கமுமாக இருந்தது.

“இவரை தானேப்பா வேண்டாம்ன்னு சொல்லறேன். நீங்க வேற யாரை பார்த்தாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன். எனக்கு பிடிக்கலைன்னு தானே இவ்வளவு தூரம் சொல்லறேன். நீங்க கொஞ்சம் எனக்காக யோசிங்கப்பா”

“அப்ப நான் உனக்காக யோசிக்க மாட்டேன்? உன்னைப் பாழும் கிணத்துல தள்ளி விடுவேன் அப்படித்தானே? அம்மா, அப்பா இல்லாம தானும் கட்டுக்கோப்பா வளர்ந்து… தம்பியையும் தானே வளர்த்து… படிக்கும்போதிருந்தே அப்பா தொழிலையும் கவனிச்சு, அதுலேயும் முன்னேறி… இப்படி ஒரு பையனை எங்கே போயி தேட முடியும்? கல்யாணமே வேண்டாம்ன்னு முரண்டு பிடிக்கிறவன், என் மேல இருக்க மரியாதைக்காக நான் கேட்டேன்னு உன்னை கட்டிக்க சம்மதம் சொல்லியிருக்கான். ஒத்த பிள்ளையை கால காலத்துல நல்ல இடத்துல கட்டி தரணும்ன்னு நான் பாடுபடறேன். நீ சுலபமா முரடன், பிடிக்கலைன்னு கதை சொல்லிட்டு இருக்க… என்னத்த படிக்க வெச்சேனோ கொஞ்சம் கூட அறிவுங்கிறது இல்லை…”

சந்தியா தந்தையிடம் பேசுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என கால தாமதமாகப் புரிந்து கொண்டாள்.

வீரேந்திரனை நினைக்க இப்பொழுதும் அவளுள் அச்சம் பிறக்க, முதுகுத்தண்டு சில்லிட்டது. வேறு வழியே இல்லாமல், “சரிப்பா உங்க இஷ்டம்…” என்று ஓய்ந்த குரலில் சொன்னதோடு அறைக்குள் புகுந்து முடங்கிக் கொண்டாள்.

நாராயணன் வீரேந்திரனுக்காகவும் பார்த்தார். மகளுக்காகவும் பார்த்தார். மகளின் பலமான மறுப்பு அவரை யோசிக்க வைத்தாலும், நல்லது தானே செய்கிறோம்… சீக்கிரம் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணித் தான் மிகவும் கண்டிப்போடு பேசி மகளை திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தார். அதோடு வீரேந்திரனையும் வேறு எந்த வகையிலும் திருமணத்திற்கு இழுத்துப் பிடிக்க முடியாது. இந்த முறை அவனிடம் சம்மதம் வாங்கியதே மிகப்பெரிய விஷயம். இப்பொழுது பார்த்து மகள் ஜகா வாங்கினால் அவரும் தான் என்ன செய்வார்?

சந்தியாவுக்கு கல்யாண கனவுகள் இருக்கிறது தான்! இப்பொழுது அவையெல்லாம் அவள் கண் எதிரிலேயே தீக்கிரையாவதைக் கையறு நிலையில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒருவேளை அம்மா உயிரோடு இருந்திருந்தால் புரிய வைத்திருக்க முடியுமோ என்று யோசித்தவள், உடனேயே ‘மம் ஹ்ம்ம் இல்லாத தாயை எண்ணி இப்பொழுது கலங்கி என்ன பயன்?’ என்று தன்னைத்தானே நொந்தும் கொண்டாள்.

அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வராமல் இருந்திருந்தாலும், அதோடு… அந்த முத்துராமன் அங்கிள் வேறு தான் யாரோடு பேசிக்கொண்டிருந்தபோது பார்த்துத் தொலைத்தாரோ… அதை அப்படியே கொண்டு வந்து அப்பாவிடம் வத்தி வைக்காமல் இருந்திருந்தாலும் கூடத்தான் இந்த திருமணம் நடந்திருக்காது?

விதி… விதி… என்று சொல்வது இதைத்தான் போலும் என எண்ணிக் கொண்டிருந்தவளின் வதனம் வாடிப்போனது.

ஆனால் இதுபோன்ற எந்த சூழல்கள் இல்லாதிருந்தாலும் நாராயணன் வீரேந்திரனை தான் மணமகனாகத் தேர்ந்தெடுத்திருப்பார் என்று அவளுக்குத் தெரியவில்லை பாவம்.

மாலையில் பெண் பார்க்க வருகிறார்கள். இதோ! இப்பொழுது வரை போராடி பெரும் தோல்வியை பெற்று விட்டாள். நிதர்சனம் இதுதான் எனப் புரிந்தாலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அழுது கொண்டே இருந்தவள் தன்னையும் மீறி உறங்கிப் போனாள்.

நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே நாராயணன் அழைப்பு விடுத்திருந்தார். பெண் பார்க்க வருவது என்பது சம்பிரதாயத்துக்குத் தான்! திருமணத்தை இவளின் தந்தை நாராயணனும், மணமகனின் பெரியப்பா வேதநாயகமும் எப்பொழுதோ முடிவு செய்து விட்டார்கள். இரண்டு மணிபோல உறவுகள் வரத்தொடங்க, இவளின் பெரியத்தை புவனா தான் போய் இவளை எழுப்பினார்.

“என்ன சந்தியா இப்படிச் சோர்ந்து போயி தெரியற? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்கன்னு தெரியாதா உனக்கு? இப்படி இருக்க? போ… போயி முதல்ல குளிச்சிட்டு வா…”

முகம் மலர்வே காட்ட மறுத்தது. ஏதோ முடிக்கிவிட்ட பொம்மை போலக் குளித்துவிட்டு சோர்ந்து போய் அமர்ந்து கொண்டாள். காலையில் அரைகுறையாக உண்டது. மதியம் உணவை மறந்து உறங்கியிருந்தாள். சுத்தமாகத் தெம்பே இல்லை.

அவளின் சோர்வு புரிந்து, “என்ன இப்படி இருக்க? உடம்பு எதுவும் சரியில்லையா? முகமே களையா இல்லையே” என காய்ச்சல் இருக்கிறதா என்றெல்லாம் புவனா ஆராய,

“நல்லா தான் இருக்கேன் அத்தை…” என்று புன்னகைக்க முயன்றாள்.

“இரு சாப்பிட ஏதாவது தரேன்” என்றவர் உள்ளே சென்று கொஞ்சம் உணவைப் போட்டு வந்து அவளிடம் கொடுக்க, “இந்நேரத்துக்கு எதுக்கு அத்தை? வேணாம் விடுங்க” என்றாள் சோர்வாக.

“பார்த்தா மயங்கி விழப்போறவ மாதிரி இருக்க… முதல்ல நல்லா சாப்பிடு…” அன்பும் அதட்டலுமாகச் சொன்னவர், அவளின் ஈரத்தலையை பிரித்து உலர்த்த தொடங்கினார்.

“பையன் என்ன படிச்சிருக்கானாமா?” அத்தை விசாரிக்க,

“இன்ஜினியரிங்…” என்றாள் இயந்திரமாக.

“எங்கே வேலை செய்யறாங்க?”

‘அவன் கோபத்துக்கு அவன் எல்லாம் எங்கே வேலை செய்ய முடியும்?’ என மனதிற்குள் எண்ணியபடியே, “ஏதோ கடை வெச்சிருக்கிறதா அப்பா சொன்னாங்க அத்தை” என்றாள் அக்கறையற்ற குரலில்.

பொலிவற்ற முகத்தையும் இயந்திரத்தனமான வார்த்தைகளையும் புரிந்து கொள்ளுமளவு புவனாவிற்குப் பக்குவம் போதவில்லை!

“என்ன கடையாமா? எங்கே வெச்சிருக்காங்க?” என தன் விசாரணையை மேலும் தொடர்ந்தார்.

அலுப்பாக இருந்தது அவளுக்கு. அதெல்லாம் அவள் கேட்டுக்கொள்ளவே இல்லையே… “அப்பா கிட்ட விசாரிக்காம என்கிட்ட விசாரிக்கறீங்க அத்தை…” என்றாள் உணவை உண்ண முடியாமல் திணறியபடி. அவளுக்கு உணவே இறங்க மறுத்தது.

ஒவ்வொரு நொடியும் சந்தியாவிற்கு திக் திக்கென இருந்தது. கை, கால்களில் மெல்லிய நடுக்கம். மனமெங்கும் இனம்புரியாத பயம்!

“எவ்வளவு நேரம் சாப்பிடுவ? அள்ளி வாயில போட்டுட்டு வா. தலையை உதறி விட்டுட்டேன்… இவங்க எல்லாம் அலங்காரம் பண்ணி விடுவாங்க…” என சற்றுமுன் வந்திருந்த உறவின பெண்களைக் காட்டி சொன்னார்.

எல்லாரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதால் உணவை உண்ண வேகம் காட்டினாள். ஆனால், உணவு தொண்டையில் இறங்கினால் தானே! தண்ணீரைக் குடித்து உணவை விழுங்கினாள்.

அதன்பிறகு அவளுக்கு ஆரஞ்சு வண்ணத்தில் மென்பட்டு உடுத்தி, உறவுப் பெண்கள் பார்த்து பார்த்து அலங்கரிக்கத் தொடங்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் சோர்வையும் மீறி தேவதையென ஜொலித்தாள்.

“வாவ்… ரொம்ப அழகா இருக்க…” என அக்கா முறை உறவு பெண்ணொருத்தி திருஷ்டி கழிக்க, பதிலுக்கு மெலிதாக சிரித்தாள். கண்களைக் கூட எட்டாத புன்னகை.

திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்ணுக்குரிய பொலிவு, வெட்கம், பூரிப்பு என எதுவுமே அவளிடத்தில் இல்லை. வெறுமனே ஒரு புன்னகை… சிறு தலையசைப்பு அவ்வளவுதான் அவளின் எதிர்வினை…

அழகாய் ஜொலித்த பெண்ணை, அவளது ஈடுபாடற்ற முகத்தை ஜன்னல் வழியே புருவம் சுருங்க பார்த்தபடி நின்றிருந்தான் வீரேந்திரன்.