Advertisement

உன் குறும்புகள்

என்னை குழந்தையாய்

மாற்ற

உன் ஒற்றை

பார்வை

என்

ஆண்மைக்கு

சவாலாகியதேன்..



ஞாயிறன்று காலை ரிஷியின் அன்னை சுபா சமையலில் பரபரப்பாக இருந்தார்… வேலையாட்களின் உதவியுடன் வித விதமான சமையல் தயாராகிக்கொண்டிருந்தது…

இடையே ரிஷியிடம் வந்து ஶ்ரீ மற்றும் அவளது நண்பர்களின் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டார்…

அவரது ஆராவாரம் கண்டு அவரை கலாய்த்தான் ரித்வி..

“ஏன் பா… இன்னைக்கு யாராவது அண்ணாவை மாப்பிள்ளை பார்க்க வருகின்றார்களா??”

“என்ன ரித்வி கேட்குற?? வழமையா பொண்ணு பார்க்க வருகிறார்களானா தான் கேட்பாங்க…. நீ என்னடானா மாப்பிள்ளை பார்க்க வருகின்றார்களானு கேட்கிறாய்??”

“வேறு எப்படி பா கேட்பது???? கல்யாண வயசுல நம்ம வீட்டுல பொண்ணு ஏதும் இல்லை…  நாங்க பசங்க ரெண்டு பேரு தான் இருக்கோம்…. அம்மா பண்ணுற அலப்பறையை பார்த்தா எனக்கு அப்படி தான் தோன்றுகிறது….. அதான் அப்படி கேட்டேன்…”

“நீ சொல்வதும் சரி தான் ரித்வி… எனக்கும் அந்த குழப்பம் இருந்தது…. ஆனா என்ன இதை கேட்டா எனக்கு நானே சதி செய்து கொண்டதாக ஆகிவிடும்…எதுக்கு இந்த வம்புனு நானும் நடப்பதை பார்த்துட்டு இருக்கேன்…” என்று சீரியசாக சொன்னவரை பார்த்து சிரித்தான் ரித்வி…..

“ஹாஹா அப்பா…. இப்போ புரிகிறது…. அம்மா ஏன் இப்படி இருக்காங்கனு….. உங்க லூட்டிக்கு அவங்க தான் சரி…..” என்று ஒரு புறம் அரட்டை நடந்துக்கொண்டிருந்தது…..

சரியாக மதியம் ஒரு மணிக்கு வந்து இறங்கினர் ஶ்ரீ மற்றும் அவளது நண்பர் பட்டாளம்….

ஶ்ரீ, ஹேமா, சஞ்சனா ஒரு கேப்பில் வந்திறங்க அவர்கள் பின் சுந்தரும் ரவியும் வந்திறங்கினர்….

வாசலில் நின்றிருந்த ஶ்ரீ ஹேமாவிடம்

“அண்ணியாரே உங்க மாமியார் வீடு என்ன இந்தாஜோடா இருக்கு…. இதை கூட்டி பெருக்கவே ஒரு வருஷம் ஆகும் போல இருக்கே…” என்று கிண்டலில் இறங்க ரவியோ

“ஏன் ஶ்ரீ நீ அதைப்பற்றி கவலைப்படுற??? உன்னை ஏதும் ஆயா வேலைக்கு கூப்பிட்டாங்களா????” என்று வம்படிக்க

“இல்லை ரவி தோட்ட வேலைக்கு ஹயிட்டா வெயிட்டா ஒரு சாப்ட்வெயார் படிச்ச ஒரு கூமூட்டையை கேட்டாங்க… அதான் நீ அந்த வேகன்சிக்கு சரியா இருப்பனு தோன்றியது… அதான் நீ வேலை செய்ய போற இடம் இவ்வளவு பெருசாக இருக்குனு கவலைப்பட்டுட்டு இருந்தேன்…” என்று ஶ்ரீ ரவியை வார சஞ்சுவோ

“ஏன் ரவி உனக்கு இது தேவையா??? எப்படிடா நோஸ் கட் வாங்குவேனு தெரிந்தே அவகிட்ட மல்லுகட்டுற??”

“என்ன பண்ணுறது சஞ்சு சேவல் கூவாமல் சூரியன் உதிக்காது….அதே மாதிரி இந்த ஶ்ரீகிட்ட மொக்க வாங்காமா நாள் நல்லாவே போகவே மாட்டேங்குது….அதான்..”  என்று ரவி கூற

“ ஆமா சஞ்சு… ரவி சொல்லுறது ரொம்ப கரெக்ட்…. இவன் மொக்க வாங்குவதை பார்க்காட்டி எனக்கும் நாள் ரொம்ப டல்லா போகும்…”என்று சுந்தரும் அதை வழிமொழிய அதில் குஷியான ஶ்ரீ

“ பார்த்தியா பப்ளி… இப்போ சரி என் அருமையை புரிந்துக்கொள்…..” என்று இல்லாத காலரை தூக்கி விட அதை பார்த்த ஹேமா

“ஏன்டா இப்படி பண்ணிங்க??  சும்மாவே கதகளி, குச்சிப்புடி என்று டிசைன் டிசைனாக ஆடுவா…. அவளுக்கு சலங்கையை வேற கட்டி விட்டுட்டீங்களேடா…. இப்போ நான் என்ன பண்ணுவேன்…” என்று பதறியவளை பார்த்து அங்கொரு சிரிப்பலை பரவியது….

வாசலில் இருந்த செக்யூரிட்டியிடம் ஏற்கனவே இவர்களது வருகையை பற்றி சொல்லியிருந்ததால் எந்தவித கேள்வியும் ஐவரையும் உள்ளே அனுப்பினார்…

அவர்களது வருகையை அறிந்த ரிஷியும் ரித்வியும் அவர்களை வாசலுக்கு வந்து வரவேற்றனர்..

“என்ன ரித்வி அண்ணா… நான் ரெட் கார்ப்பட் வெல்கம் எதிர் பார்த்தேன்…. நீங்க என்னடானா ஒரு பொக்கே கூட இல்லாமல் இப்படி வெல்கம் பண்ணுறீங்களே.. சோ டிஸ்சப்பொயின்டட்…” என்று போலியாக வருந்தியபடி ரித்வியை பார்க்க அவனோ வேறொரு உலகத்தில் இருந்தான்… அதாவது தன் காதலி ஹேமாவுடன் கண்களால் உரையாடிக்கொண்டிருந்தான்… அவர்களது கவனத்தை கலைக்கும் பொருட்டு ஶ்ரீயே இல்லாத கொசுவை கண்டுபிடித்து

“சூ..சூ..இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை… சார் உங்களுக்கு ஏதும் தெரியலை…” என்று ரித்வியை கண்களால் காட்டியபடி ரிஷியிடம் கேட்க….

“தெரியிது தான் ஶ்ரீ…. ஆனா ஒன்றும் பண்ண முடியலையே… கைகட்டி பார்த்துட்டு தான் இருக்க வேண்டித்தான் இருக்கு…”

“இல்லை சார்… அப்படியெல்லாம் விடமுடியாது சார்… நம்மை டார்ச்சர் பண்ண அதுக்கு நாம ரிவென்ஜ் எடுக்கனும் சார்…. நான் களத்தில் குதிக்கப்போறேன் சார்… நீங்களும் வர்றீங்களா சார்??” என்று இல்லாத கொசுவிற்காக அவர்கள் இருவரும் வழக்கடித்துக்கொண்டிருக்க ரித்வி மற்றும் ஹேமா தவிர்ந்த அனைவரும் என்ன நடக்கின்றது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்…

வாசலிலேயே இவர்கள் வம்பழந்துக்கொண்டிருக்க வந்தவர்களை வரவேற்க சென்ற தம் புத்திரர்களை தேடி வாசலிற்கு வந்தனர் சுபா மற்றும் மூர்த்தி தம்பதியினர்….

“என்ன ரிஷி வாசலிலேயே வைத்து பேசிட்டு இருக்க… உள்ள கூட்டிட்டு வாப்பா…”

“நான் கூப்பிட்டேன் மா…. ஆனா இந்த ஶ்ரீ தான் ஏதோ கொசு பஞ்சாயத்து அப்படினு துண்டை போட்டுட்டா… அதான் என்னனு விசாரிச்சுட்டு இருக்கேன்…” என்று அவன் ஶ்ரீயை கோர்த்துவிட அவளோ

“ஆமா ஆண்டி…. இங்க ரெண்டு கொசு ரொம்ப தொல்லை பண்ணிட்டு இருக்கு… நானும் என்னென்னவோ பண்ணி பார்த்துட்டேன்…. ஆனா…. அதுங்களை ஒன்றுமே பண்ணமுடியலை.. நீங்களே சொல்லுங்க ஆண்டி.. அதுங்களை என்ன பண்ணலாம்…?” என்று பஞ்சாயத்தை அவரிடம் கொண்டு செல்ல மூன்றோடு நான்காக என்ன கூறுவதென்று தெரியாமல் அவரும் முழி பிதுங்கி நின்றார்….

சுபா மற்றும் மூர்த்தி வந்ததை உணர்ந்த ஹேமா அவர்களது வரவை தன் விழியசைவால் ரித்வியிடம் சுட்டிக்காட்ட தன்னிலை மீண்டவனுக்கு அப்போது தான் ஶ்ரீ அங்கு நடத்திக் கொண்டிருந்த நாடகம் தனக்கானது என்று புரிந்தது… எனவே நிலைமையை சமாளிக்கும் பொருட்டு ரித்வியே களத்தில் குதித்தான்…

“அம்மா… அதெல்லாம் ஒன்றும் இல்லைமா… ஶ்ரீ சும்மா ஜாலிக்கு விளையாட்டிட்டு இருக்கா… அவ எப்பவும் இப்படி தான்… ஶ்ரீ இப்போதைக்கு உன் விளையாட்டை முடித்துக்கொள்ளம்மா…பாவம் அம்மா கன்பியூஸ் ஆகிட்டாங்க…”என்று தன் வார்த்தைகளால் கெஞ்சியவன் பிறர் அறியா வண்ணம் கண்களாலும் ஶ்ரீயிடம் கெஞ்சத் தவறவில்லை… ஆனால் ஶ்ரீ அதெற்கெல்லாம் அசராமல் மேலும் ஏதோ கூற வர அவளை தடுக்கும் முகமாக ரித்வி

“யாருக்கும் சாப்பிடும் உத்தேசம் இல்லையா…?? வாங்க உள்ளே போகலாம்….” என்று அனைவரையும் உள்ளே அழைத்து சென்றான்…

அனைவரும் முன்னே செல்ல பின்தங்கிய ஶ்ரீ ரிஷியிடம்

“எப்படி சார் நம்ம பர்போமன்ஸ்….?”

“சான்சே இல்லை ஶ்ரீ…. நீ வேற லெவல்…”

“இது வெறும் டீசர் தான் சார்…. இன்னும் மெயின் பிக்கச்சர் எப்படி இருக்கும் என்று உள்ளே வந்து பாருங்கள்…”

“பார்க்கத்தானே போறேன்……ஐயம் வெயிட்டிங்…..” என்று விஜய் ஸ்டைலில் ரிஷி கூற இருவரும் சிரித்தபடி உள்ளே சென்றனர்….

வந்தவர்களுக்கு சுபா குடிக்கக்கொடுத்தார்… பின் அனைவரும் அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்க ஶ்ரீ ரிஷியிடம்

“சார் அக்காவையும் மாமாவையும் இன்னும் காணோம்…. கால் பண்ணி பார்த்தீங்களா???” என்று கேட்க அங்கிருந்த அனைவரும் ரிஷியை பார்க்க அவனோ ஶ்ரீயிடம்

“நீ யாரை கேட்குற ஶ்ரீ???”

“வேறு யாரை சார்…ப்ரீதா அக்காவையும் ஹரி மாமாவையும் தான்…” என்ற அவளது பதிலில் ரிஷியின் குடும்பத்தார் ஷாக் ரியாக்ஷன் கொடுக்க அதில் குழம்பியவள்

“ஏன் சார் இப்படி ஒரு ரியாக்ஷன்… நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா….??” என்று கேட்க ரிஷி,சுபா மற்றும் மூர்த்தியின் பார்வைகள் ரித்வியின் புறம் திரும்பியது…

அதுவரையில் ஶ்ரீயிற்கு எவ்வாறு இந்த விடயம் தெரியும் என்ற யோசனையில் உழன்றவனுக்கு அனைவரது பார்வையும் தன் புறம் திரும்புவது புரிந்தது…. உடனடியாக ரித்வி

“ஐயோ அம்மா… இதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை…. நான் எதுவும் சொல்லவில்லை…. நீங்க அவ்வளவு சொல்லியபிறகும் நான் சொல்லுவேனா அம்மா… எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை…. என்னை நம்புங்க அம்மா…” என்று காலில் விழாத குறையாக ரித்வி கெஞ்ச அங்கிருந்த அனைவரும் அவனது கூற்றின் அர்த்தம் புரியாது குழம்பி நின்றனர்…

எப்போதும் போல் தன் குழப்பத்தை தீர்த்துக்கொள்ள முன்வந்தாள் ஶ்ரீ..

“அண்ணா….எனி பிராப்ளம்…. நான் ஏதும் தப்பா கேட்டுட்டனா…???” என்று ரித்வியிடம் கேட்க

“ அதான் சூப்பரா செய்துட்டியே ஶ்ரீ…. இன்னும் என்ன இருக்கு… நீ ஏதும் தப்பா கேட்கலை மா… ஆனா அதான் தப்பாய் போய்விட்டது…” என்று ரித்வி மேலும் குழப்ப ஶ்ரீயோ ரிஷியை நாடினாள்..

“சார் என்னாச்சி… எதுக்கு ரித்வி அண்ணா இப்படி கன்பியூஸ் பண்ணுறாரு…”

“சொல்லுறேன் ஶ்ரீ…அதுக்கு முதலில் எனக்கு இதற்கு பதில் சொல்லு…ஹரியும் ப்ரீதாவும் வருவது உனக்கெப்படி தெரியும்…?”

“ப்ரீதா அக்கா சொன்னாங்க…” என்று பதிலில் ரித்வி பெருமூச்சுவிட அவனை கேள்வியாக பார்த்தாள் ஶ்ரீ..

தொடர்ந்து ரிஷியே

“பார்த்தீங்களா அம்மா… நம்ம ரித்வி எதுவும் பண்ணலை… ஆனா ஶ்ரீயிற்கு நீங்க சப்ரைஸ் கொடுக்கனும் என்று நினைத்தது தான் தப்பாய் போய்விட்டது…. நான் தான் சொன்னேனே ஶ்ரீ ரொம்ப ஸ்மார்ட்னு..”  என்ற உண்மையை விளக்க அங்கிருந்த அனைவருக்கும் அப்போது தான் அங்கு நடந்தேறிய நாடகத்தை பற்றி புரிந்தது…

“அப்போ இவ்வளவு நேரம் நடந்த கலவரத்திற்கு நீ தான் சூத்திரதாரியா??? இங்கேயும் உன் வீரதீர செயல்களை தொடங்கிட்டியா ஶ்ரீ???எதுக்கு???” சஞ்சு கேட்க அங்கொரு சிரிப்பலை பரவியது…

இவ்வாறு இவர்களது லூட்டியில் வந்து இணைந்து கொண்டனர் ஹரியும் ப்ரீதாவும்…

அன்று மாலை வரை ஒருவரை மாற்றி ஒருவர் கேலி செய்த வண்ணம் பொழுதை கடத்தினர்… ஶ்ரீயும் ரிஷியும் கூட்டணி அமைத்து ரித்வி மற்றும் ஹேமாவை வகையாய் செய்தனர்… ஒரு கட்டத்தில் முடியாமல் ரித்வி ஶ்ரீயிற்கு மெசேஜ் செய்து தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினான்… ஆனால் ஶ்ரீயோ அதை கண்டு கொள்ளாமல் தன் லூட்டியை தொடர்ந்த வண்ணமே இருந்தாள்…

மாலை நான்கு மணியளவில் வெயில் குறைந்ததும் தன் அடுத்த கொட்டத்தை ஆரம்பித்தாள் ஶ்ரீ…

“சார் உங்க கார்டனில் என்ன இருக்கு???”

“கார்டனில் என்ன இருக்கும் ஶ்ரீ?? மரம் பூஞ்செடி தான் இருக்கும்…” என்று ரிஷி கூற

“ஐயோ சார் நான் ஏதோ தங்கப்புதையல் இருக்கும் என்று நினைத்தேனே..”

“ஆமா ஶ்ரீ… புதையல் இருக்கு… ஆனா அதில் தங்கம் இருக்கானு தெரியவில்லை… வாவேன் போய் பார்த்துட்டு வருவோம்..” என்று ஶ்ரீயின் கேலிக்கே பதிலடி கொடுக்க அங்கிருந்த ரவியோ

“வரேவா… ஆளாளப்பட்ட ஶ்ரீயையே ரிஷி சார் வாயடைக்க செய்து விட்டுரே…ஹே எல்லாம் பார்த்துக்கோ….நம்ம ஶ்ரீ பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து போய் இருப்பதை….இப்படி ஒரே சந்தர்ப்பம் இனிமே நமக்கு கிடைக்காது… அதனால எல்லாரும் இப்பவே பார்த்துக்கோங்க…” என்று அவனும் கேலியில் இறங்க அதில் கடுப்பான ஶ்ரீ

“டேய் அடங்குடா… கொஞ்ச நேரம் அமைதியா இருக்கலாம்னு பார்த்தா விடமாட்டீங்க போலயே…… சார் உங்க கார்டனில் நாம விளையாட ஸ்பேஸ் இருக்கா…??”

“ஆமா இருக்கு….”

“அப்போ சரி… ஆண்டி ஏதாவது பெரிய ஷூட் இருந்தா தாங்களே… அதோட ஸ்நேக்சும் தாங்க….. சார் உங்க கிட்ட கார்ட் பேக் இருக்கா???

“இருக்கு ஶ்ரீ… அதோட நம்ம கார்டனில் மாமரமும் இருக்கு…”

“ஆண்டி அப்போ ஸ்நாக்ஸ் தேவையில்லை… ஒரு கத்தியும் பெப்பரும் சால்ட்டும் தாங்க…. ப்ரீதா அக்கா நீங்களும் சஞ்சுவும் அதை வாங்கிட்டு ஆண்டியையும் கூட்டிக்கிட்டு கார்டனுக்கு வாங்க…. ரித்வி அண்ணா நீங்க சார்கிட்ட கேட்டு கார்ட் பாக்கை எடுத்து ஹேமாகிட்ட கொடுத்தனுப்புங்க . அண்ணா ஜேபில் ஸ்பீக்ஙர் இருந்தா அதையும் எடுத்துட்டு வாங்க… அங்கிள் அப்புறம் ரவி, சுந்தர், ரிஷி சார், மாமா நீங்க எல்லாரும் என்கூட கார்டனுக்கு வாங்க…” என்று ஆளாளுக்கு ஒவ்வொரு வேலையை பணித்துவிட்டு அவள் முன்னே செல்ல ரவியோ

“என்னடா நடக்குது இங்க??? என்னமோ அவ பாட்டுக்கு எல்லாத்தையும் சொல்லிட்டு போற… வீட்டு சொந்தகாரங்க என்ன சொல்லுவாங்க அப்படீங்கிற பயமே இல்லாம போற…. இவளை எங்கேயிருந்துடா பிடித்தாங்க….” என்று ரவி புலம்ப அதில் சிரித்த மூர்த்தி

“என்ன ரவி யோசனை அதான் ஶ்ரீயே சொல்லிட்டாளே… அப்புறம் என்ன??? நடையை கட்டுங்க பா…”

“அங்கிள் நீங்களுமா….  இந்த ரிஷி பய தான் அவ தட்டுற தாளத்துக்கு ஆடுறானா நீங்களுமா???” என்று  ஹரி எகிற

“நான் மட்டுமில்லை ஹரி… அங்க பாரு உன் ஆண்டியும் அதைத்தான் செய்றா… அப்போ நான் எம்மாத்திரம் சொல்லு… கிளம்புங்க பா… இல்லை நம்ம ஜோடிகள் எல்லாம் வந்து நம்மை மிரட்ட ஆரம்பித்துவிடும்…” என்றுவிட்டு மூர்த்தி முன்னே நடக்க விதியே என்று மற்ற அனைவரும் அவரை பின் தொடர்ந்தனர்..

அங்கே கார்டனில் ஶ்ரீ ஒரு மாமரத்தை வலம் வந்துக்கொண்டிருந்தாள்… அதை பார்த்தவாறு அருகில் வந்த ஆண்கள் பட்டாளம்

“என்ன ஶ்ரீ ஏதும் வேண்டுதலா??எதுக்கு இந்த மரத்தை இப்படி சுற்றி வர்ற??” என்று ரவி அவளை வம்பிழுக்க

“வேண்டுதல் தான்டா அறிவுக்கொழுந்தே… உன்னை இந்த மரத்தில் எங்க கட்டி தொங்க விடலாம்னு இடம் தேடிட்டு இருந்தேன்…” என்ற அவளது பதிலில் அனைவரும் அவனை உனக்கு இது தேவையா என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்தனர்…

ஆனால் ஶ்ரீயினுடைய நண்பனாக இருந்து கொண்டு இதெற்கெல்லாம் பயப்பட முடியுமா???

“சரி ஶ்ரீ… சொல்லு என்ன செய்யனும்..??” என்ற ரவியின் கேள்வியில் அனைவரது உள்ளத்திலும் எவ்வளவு அடித்தாலும் தாங்குறாண்டா என்ற எண்ணமே எழுந்தது…

“மரத்து மேல ஏறுடா…”

“ஶ்ரீ நான் சீரியசா கேட்குறேன்…. நீ என்னடானா மரமேற சொல்லி காமெடி பண்ணிட்டு இருக்க…??”

“என்னை பார்த்தா காமெடி பண்ணுற மாதிரியா இருக்கு??”

“இல்லை தான்… ஆனா நீ சொல்லுறது காமெடியாக தான் இருக்கு..”

“சரி நீ போய்  மரத்துக்கு கீழ உட்காரு… சார், மாமா இரண்டு பேரும் ஏறுகிறீர்களா..?”  என்று அவள் கேட்டு முடிக்கும் முன் ரிஷி ஏறத்தொடங்கியிருந்தான்…

ஹரியோ “டேய் என்னடா நீ பாட்டுக்கு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஏறிட்ட… இருடா நானும் வர்றேன்… என் பொண்டாட்டிக்கிட்ட அடி வாங்கி கொடுக்காம இவன் ஓய மாட்டான் போல…” என்றுவிட்டு ஹரியும் ரிஷியை தொடர்ந்து ஏறினான்..

ஏறியதும் ரிஷி அங்கிருந்த மாங்கனியை பறித்து போட அவனை பின்தொடர்ந்து ஹரியும் அதையே செய்தான்…

கீழே விழுந்த கனிகளை ரவி, ஶ்ரீ மற்றும் சுந்தர் சேகரித்தனர்.. அவர்களுடன் இணைந்து கொள்ள வந்த மூர்த்தியை தடுத்துவிட்டாள் ஶ்ரீ..

ஒரு வழியாக கனிகளை பறித்து போட்டவர்கள் கீழே இறங்க அதற்கிடையில் வீட்டில் இருந்த அனைவரும் அங்கு வந்துவிட்டனர்…

ஒரு பெரிய விரிப்பை விரித்து  அதில் அனைவரும் அமர பெண்கள் அனைவரும் அந்த கனிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்ட அதற்கு தொட்டுக்கொள்ள உப்பு மிளகு கலவையை ரிஷியின் சொற்படி ஹரியும் சுந்தரும், ரித்வியும்,ரவியும் தயாரித்தனர்…

ஶ்ரீயோ ஜேபிஎல்லில் பாடலை ஒலிக்கச்செய்ய ஒழுங்கு செய்து கொண்டிருந்தாள்..

அவரவர் தாம் பொறுப்பேற்ற வேலையை முடித்துவிட்டு வர ஶ்ரீ ரித்வி கொண்டுவந்திருந்த காட் பெக்கிலிருந்த சீட்டுக்கட்டை உதறினாள்…

விளையாட்டிற்கு வரவில்லை என்று கூறிய சுபாவை கூட கட்டாயப்படுத்தி விளையாட வைத்தாள் ஶ்ரீ..

இடையிடையே ரித்வியையும் ரிஷியையும் வேலை வாங்குவதையும் நிறுத்தவில்லை… இது ரித்வி மற்றும் ரிஷியின் வீடென்பதால் அவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டது… இல்லையேல் அனைவருக்கும் சரமாரியாக வேலைக்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கும்…

இவ்வாறு பல கலாட்டாவுடன் அந்த நாள் அழகாக நிறைவடைந்தது..

அனைவரையும் வழியனுப்பிவிட்டு வந்து அமர்ந்த சுபா

“ரொம்ப நாளைக்கு பிறகு இப்படி சந்தோஷமாக இருந்திருக்கேன்… இந்த ஶ்ரீ பொண்ணு இருந்தாலே அந்த இடம் களை கட்டும் போல…அவங்க வீட்டுல இவ இல்லாட்டி பொழுது போகாது போல… என்ன தான் குறும்பு பண்ணாலும் மரியாதையாக நடந்துக்குறா…” என்று சுபா தொடங்க

“ஆமா சுபா… ரிஷியும் ரித்வியும் கூட அவங்க குழந்தையாக இருக்கும் போது இவ்வளவு சேட்டை பண்ணதில்லை… அவ்வளவு சேட்டை… அதுக்கு ஜால்ரா போட அவளது நண்பர் கூட்டம்…  ஶ்ரீ எவ்வளவு தான் சேட்டை பண்ணாலும் அவ மேல கோபமே வரமாட்டேன்குது… அதை அனுபவிக்கத்தான் தோணுது… என்னவென்றாலும்  ஒரு வீட்டுக்கு கட்டாயம் பெண் குழந்தை இருக்கனும்… இவ்வளவு நாளா ஒரு பெண் குழந்தை இல்லையே அப்படீங்கிற குறையை ஶ்ரீ இன்று ஒரு நாளிலேயே தீர்த்துட்டா ….” என்று மூர்த்தி தொடர

“அம்மா அவ இப்ப மட்டும் இல்லை காலேஜ் டைமில் இருந்து அப்படி தான்..  இவளை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துட்டே இருக்கும்… காலேஜ் சீனியஸ் இவளை பார்த்தாலே தலை தெறிக்க ஓடுவாங்க.. அவ்வளவு தூரத்திற்கு எல்லோரையும் படுத்தி வைத்திருந்தாள்… அவளை தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது… வாச்மேன்னில் இருந்து டிரெக்டர் வரைக்கும் எல்லோரும் இவளோட கைபொம்மை… பேசி பேசியே எல்லோரையும் மடக்கிருவா… இவ மட்டும் இல்லை… இவ தங்கை அனன்யாவும் அப்படி தான்… இரண்டும் சேர்ந்தா செம்ம லூட்டி தான்..”

“நல்ல பிள்ளைகள் ரித்வி… சரி ரிஷி.. எனக்கு ஒரு சந்தேகம்… நீ எதுக்கு மாமரம் இருக்க விஷயத்தை சொன்ன?? அதோட ஶ்ரீ சொல்வதற்கு முன் நீயா எல்லாத்தையும் எப்படி செய்த..?” என்று மூர்த்தி ரிஷியை ஆராயும் நோக்குடன் கேட்க ரிஷியோ எந்தவித தயக்கமும் இன்றி ஹரியின் திருமணத்திற்கு சென்றிருந்த போது நடந்த அனைத்தையும் கூறினான்…

“அப்போ அவ உன்னையும் விடவில்லையா அண்ணா…?? அவளுக்கு சிக்குன அடுத்த அடிமை நீங்களா??? பேஷ் பேஷ்…” என்று ரித்வி கூற சிரித்துக்கொண்டே எழுந்து சென்றான் ரிஷி…

அவனை தொடர்ந்து ரித்வியும் செல்ல சுபாவும் மூர்த்தியும் தம் பார்வைகளை பரிமாறிக்கொண்டு ஒரு முடிவிற்கு வந்திருந்தனர்….

Advertisement