Advertisement

 கரை காண காதலே – 6

“வாங்க வாங்க புது மாப்பிளை சார், வாங்க..” என்று சிறு சந்தோசமும், கிண்டலுமாய் கலந்து தன் அறைக்குள் நுழைந்த ரமேஷை வம்பிழுத்து கொண்டிருந்தான் வேதாந்த்..

அவன் கிண்டலில் சிறிது வெட்கம் வர பெற்றவனாய், மெலிதாய் இதழை சுளித்தான் ரமேஷ்.. யார் சொன்னது பெண்களுக்கு மட்டும் தான் வெட்கம் வரும் என்று.. ஆண்களுக்கும் வரும்… தன்னவளை நினைவில்கொள்ளும் போது..

ப்ரியாவின் நினைவு வருகையில், அப்படியே மஹதியின் நினைவும் சேர்த்து வர, ரமேஷின் அத்தனை நேர உணர்வுகள் மாறி,    

“பாஸ் எனக்கு நிச்சயம் பண்ணி இருக்கிற பொண்ணு யாருன்னு தெரியுமா??” என்றான் அதிர்ச்சி மாறாது..

“யாரு..?”

“பிரியா.. பிரியங்கா மெஷின்ஸ் அவங்களோட ரெண்டாவது பொண்ணு!!!!”

“அப்படியா…?” என்று முகத்தை அப்பாவியாய் வைத்து ஒன்றும் தெரியாதது போல கேட்டான்..

“ஆமா பாஸ்.. எனக்கே அங்க போனதுக்கு பின்னாடி தான் தெரிஞ்சது  பாஸ்… அங்க அவங்க அக்கா, அதான் அன்னிக்கு நம்ம ஆர்டர் வேணாம்ன்னு சொல்லிட்டு சண்டை போடுற மாதிரி பேசிட்டு இருந்தாங்களே, மஹதி.. அவங்களை பார்த்ததும் எனக்கு பயங்கர ஷாக் ஆகிடுச்சு பாஸ், ஆனா அவங்க என்னவோ பறிகுடுத்த மாதிரியே இருந்தாங்க பாஸ்..” என்று அவன் சொல்லிக்கொண்டே போக வேதாந்த் முகத்தில் வேதனையின் சாயல் படர்ந்திருந்தது…

‘உன்னை இந்த நிலைமைல கொண்டு வந்துட்டேனே மஹா.. நான் என்ன, ஏதுன்னு தெரிஞ்சுக்காம பண்ணின வேலையால நீ இப்படி மாறிட்டியே மஹா…. அதுக்காக உன்னோட இந்த நிலைமையை இப்படியே விட மாட்டேன் மஹா…. சீக்கிரமாவே இதுக்கு ஒரு முடிவு எடுக்கிறேன்…’ என்று மனதோடு அவளிடம் பேசியவன், ரமேஷின் குரலில் தெளிந்தான்..

“பாஸ், இவ்வளோ நேரமா கூப்பிட்டிட்டு இருக்கேன், அதை கவனிக்காம  எதோ யோசனைலைல இருக்கீங்க??”

“இல்ல உன் மாமியார் வீட்ல இந்த ஆர்டர் வேணாம்னு சொன்னங்கல்ல அதை தான் யோசிச்சுட்டு இருக்கேன் ரமேஷ்…” என்று வேதாந்த் கிண்டலாய் சொல்வது போல் சொல்ல,

“பாஸ் நான் இங்கதான் வேலை பார்க்கிறேன், இங்க தான் சம்பளம் வாங்குறேன், சோ அவங்க முடிவுல என்னால தலையிட முடியாது..” என்று வேகமாய், கொஞ்சம் கோபமாய் சொல்லிவிட்டான் ரமேஷ்..

“ஹேய் ரமேஷ் இப்போ நான் உன்னை ஒண்ணுமே சொல்லலையே.. இப்போ எதுக்கு இப்படி எல்லாம் சொல்ற.. சரி சரி விடு இந்த ஆர்டரை பத்தி எல்லாம் யோசிக்காதே நீ,.. இதை நான் பார்த்துகிறேன்… நீ போய் உன் கல்யாண கனவை எல்லாம் ஸ்டார்ட் பண்ணு போ..” என்று மலர்ந்த முகத்தில் புன்னகையுடன் வேதாந்த் சொல்ல,

பாஸ் சொல்வதை செய்வது தானே அவன் வேலை, அதனால் வேதாந்த் கொடுத்த வேலையை சிறப்பாக செய்ய சென்று விட்டான் ரமேஷ்..

கணினியின் முன் அமர்திருந்த வேதாந்த் முகம், விரக்தியாய் பெரு மூச்சை வெளியேற்றியது. மனமோ மஹதியின் எண்ணத்தில் மூழ்கியது…

வேதாந்தின் விழிகள் கணினியில் பதிந்திருக்க, சட்டென்று அவனது கண்கள் கூர்மையுற்றது… 

“இந்தா ஆரம்பிச்சுட்டாள்ல, இவளை வச்சுக்கிட்டு…” என்று மனதில் வாயடிக்கொண்டே “ப்ரம் ப்ரியா மெஷின்ஸ்” என்று இன்பாக்ஸில் வந்திருந்த மெயிலை ஓபன் செய்தான்..

‘உங்கள் ஆர்டர் மற்றும் ப்ரோபோசல், காண்டிராக்ட் தொடர விரும்பம் இல்லை…’ என, விருப்பமின்மை தெரிவிக்கும் விதமாக வந்திருந்தது…

“நான் நெருங்கனும்னு நினைச்சு போனா, இவ விலகுறதுக்கு என்ன என்ன வேலை பாக்கணுமோ அதை எல்லாம் பண்றாளே…” என்று பல்லை கடித்தவன், நிதானமாய் கைகள் இரண்டையும் டேபிளின் மெதுவாய் வைத்து, இரு கைகளையும் இணைத்து பிடித்து  இரு கட்டை விரலால் நெற்றி பொட்டில், கண்களை மூடி யோசித்து கொண்டிருந்தான்..

பின் ஏதோ முடிவு எடுத்தவனாய், தன் அலைபேசியை எடுத்து ஒருவருக்கு  அழைப்பு விடுத்திருந்தான்..

இங்கே மஹதியின் வீட்டில், தமிழ் ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தார்.. அப்போது கமலாவதி அவர் அறையிலிருந்து வெளிவந்தவர் தமிழின் அருகில் அமர்ந்து, “தமிழ்…” என்றழைக்க,

அவர் அழைத்ததை கூட கவனிக்காமல், தமிழ் அவரின் சிந்தனையிலேயே உழன்று கொண்டிருந்தார்…

“தமிழ்…” என்று அவரின் கையை அழுத்தி அழைத்தார் கமலாவதி..

“ஆங்.. என்ன அத்தை கூப்பிட்டீங்களா??”

“ஆமா ரெண்டு தடவை கூப்பிட்டேன், நான் கூப்பிட்டதை கூட கவனிக்காம அப்படி என்ன யோசிச்சுட்டு இருக்கே??”

“ஹ்ம்ம் வேற என்ன யோசிக்க போறேன், எல்லாம் மஹதி பத்தி, இந்த புது ஆர்டர் பத்தி தான் அத்தை…” வேதனையின் உச்ச குரலில் சொன்னார் தமிழ்..

“எனக்கும் புரியுது தமிழ், ஆனா நம்ம மதியை பத்தியும் யோசிக்கணுமே.. அவ இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் மாறிட்டு வர்றா… இந்த நேரத்தில அவங்களால ஏதாவது பிரச்னை வந்திடுச்சின்னா, திரும்பவும் பழைய மாதிரி மாறிடுவாளோன்னு பயமா வேற இருக்கு…” கண்களில் சிறிது பயத்தை தேக்கி கமலாவதி சொல்ல,

“அதை தான் அத்தை நானும் யோசிச்சுட்டு இருக்கேன், இந்த ஆர்டர் நம்பி எக்ஸ்ட்ரா ஐம்பது பேரை வேற வேலைக்கு சேர்த்துட்டேன் அத்தை.. இப்போ இந்த ஆர்டர் கேன்சல் பண்ணினா அவங்களுக்கு வொர்க் லோட் எப்படி குடுக்க முடியும்.. இது ஒரு பக்கம்ன்னா, அந்த கம்பெனி டீல் கேன்சல் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க, மஹதி கண்டிப்பா இந்த கம்பெனி கூட டீல் வேணாம்ன்னு சொல்றா..

அவ சொல்றதில்லையும் தப்பு இல்ல.. அவளால முடியாதுன்னு தெரிஞ்சும் நம்ம எப்படி அதை செய்ய சொல்ல முடியும் அத்தை, ஆனா எனக்கு இந்த விஷயத்தில் எந்த மாதிரி முடிவு எடுக்கன்னும், தெரியலை.. ஒருப்பக்கம் ப்ரியா கல்யாணம்.. இன்னொரு பக்கம் மஹதி.. இன்னொரு பக்கம் அந்த ஆர்டரும், அதுக்காக நான் வேலைக்கு எடுத்த ஆளுங்களும்.. மஹதிக்கு நடந்தது நல்லா தெரிஞ்சும் நம்ம இந்த ஆர்டர் அவளை பண்ண சொல்றது தப்புதான்.. ஆனா, நம்மள நம்பி வேலை செய்றவங்களுக்கு என்ன சொல்ல??” என்று தன் குழப்பத்தை சொல்லிக் கொண்டிருந்தார்…

குழப்பமான சூழ்நிலைகள், எப்போதும் சாதகமான முடிவுகளை எடுக்க விடுவதில்லை. இவர்கள் இருவரும், இதை பற்றியே விவாதித்து கொண்டிருக்க தமழின் மொபைல் அடித்து தன் இருப்பை உணர்த்தியது…

“ஹலோ…”

“எஸ், யார் வேணும் உங்களுக்கு??”

“மேடம் ப்ரியா மெஷின்ஸ் ஓனர் Mrs.தமிழ் செல்வி கூட பேசணும்..”

“நான் தான் சொல்லுங்க, நீங்க யாரு..”

“நான் வேதாந்த் மோட்டோர்ஸ் ஓனர், வேதாந்த் பேசுறேன்..”

அவனின் பதிலில் சிறிது அதிர்ந்தவராய், என்ன பேச என்று தெரியாமல் அமைதியாய் இருந்தார். கண் முன்னே மஹதியின் கண்ணீர் வழியும் முகமும் வலி நிறைந்த பார்வையும் வந்து போனது..

“ஹலோ மேடம் , லைன்ல இருக்கீங்களா”..

“சொல்லுங்க தம்பி..”

“உங்க கம்பெனில இருந்து எங்க ப்ரோபோசல், அண்ட் ஆர்டர் கேன்சல் பண்றதா மெயில் வந்திருந்தது மேடம்.. அது  எதனால, என்ன காரணம்ன்னு தெரிஞ்சிக்கலமா ??” என்று எதுவுமே தெரியாதவன் போல கேட்டான்..

அவனிற்கு என்ன பதில் சொல்வது என்று  பதட்டமாய் யோசிக்க தொடங்கினார். எத்தனை தொழில் மீட்டிங்குகள்.. எத்தனை நபர்கள்.. எத்தனை டீலர்கள்.. எத்தனை வெற்றிகள் பார்த்தவருக்கு இந்த ஒரு தருணத்தை எப்படி கையாள்வது என்று தெரியாமல் போனது..

ஆனாலும் அவரின் பதற்றத்தை வெளியில் காட்டாது அமைதியாகவே இருக்க, அவனே பேசினான்.. 

“சீ மேடம், ஜஸ்ட் ரிலாக்ஸ் நான் உங்கக்கூட கொஞ்சம் பர்சனலா பேசணும், பேசலாமா??” என்றதுமே தமிழ் செல்விக்கு முகம் யோசனையாய் மாறியது..

“என்கிட்டேயா..??!!!” என்று யோசனையாய் இழுக்க

“உங்க கிட்டே மட்டும் தான் இதை பத்தி பேச முடியும் மேடம்.. சொல்ல போனா உங்களால மட்டும் தான் இந்த விஷயத்தில் எனக்கு உதவ முடியும்…” என்று மென்மையாய் சொன்னவனின்  குரலை  ஆச்சர்யமாய் கேட்டுக் கொண்டிருந்தார்…

பின்னே, அவனின் ஆளுமைக்கும், குரலுக்கும் சிறிது கூட சம்பந்தமில்லாமல் பேசுபவனை கண்டு ஆச்சர்யபட தானே வேண்டும்… முன்பே அவர் வேதாந்தை பார்த்திருக்கிறார்.. தொழில் முறை மீட்டிங், பார்ட்டி என்று செல்லும் இடம் எல்லாம் அவனுக்கு இருக்கும் மதிப்பையும் கண்டு  இந்த இளம் வயதில் இவ்வளவு வேகமா என்று அவரே வியந்து இருக்கிறாரே…!!!!!

அவனின் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தவர், அவனின் குரலிலேயே சிந்தை கலைந்தார்..

“என்ன சொல்லணுமோ சொல்லுங்க தம்பி..”

“முதலில் நான் நன்றி சொல்லிக்கிறேன் மேடம்… இப்போது இருக்கும் நிலைமையில் நான் யார், நான் என்ன என்ன செய்து இருக்கிறேன் என்று உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. ஆனா அதை எல்லாம் தெரிஞ்சும் நானா வந்து பேசியும் கூட அதை பத்தி என்கிட்டே ஒரு வார்த்தை கூட கேட்காம  நான் பேசனும்ன்னு சொன்னதுமே, எந்த எதிர்ப்பும் காட்டாம பேசுறீங்களே அதுக்கு தான் நன்றி சொன்னேன் மேடம்..” என்றவன்,
தொடர்ந்து பேச, பேச தமிழின் முகம் இன்னதென்று இனம் காண முடியாத பாவனைகளை காட்டி கொண்டிருந்தார்..

அவரின், முகத்தையே பார்த்து கொண்டிருந்த கமலாவதியும் தமிழின் முகபாவனைகளை  திகைத்து பார்த்து கொண்டிருந்தார்.. அழைப்பில் இருப்பவன் என்ன பேசுகிறான் என்று தெரியாது ஆனால் தமிழின் முகத்தில் பிரதிபலிக்கும் உணர்வுகள் மட்டும் இது மிக மிக முக்கியமான விஷயம் என்றுசொல்ல, கமலாவதி இருவரும் பேசி முடிப்பதற்குக் காத்துக்கொண்டு இருந்தார்..  

வேதாந்த் பேசி முடித்திருப்பான் போல, தமிழின் முகத்தில் சிறு மலர்ச்சி போல் காணப்பட்டது…

“நீங்க சொல்றது எல்லாம் சரி தான் தம்பி, ஆனா இதுக்கு எல்லாம் மதி ஒத்துக்கனுமே…!!!”

“அதை பத்தி எல்லாம் நீங்க கவலையே பட வேண்டாம் மேடம், எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்… நீங்க உங்க இரண்டாவது பெண் கல்யாணத்தில் கவனம் செலுத்துங்க..” என்றான்.

தமிழ் செல்விக்கு அப்போது தான் புரிந்தது, ரமேஷ் வேலை செய்வது இவனிடம் என்று.. ஒரே பெயரில் எத்தனையோ பேர் தொழில் செய்கிறார்கள்.. ரமேஷை பற்றி விசாரிக்கையில் அவனின் வேலை பற்றியும் விசாரித்து இருந்தார் தான்.. ஆனாலும் அப்போது இந்த வேதாந்த் கம்பனி என்று அவர் நினைக்கவில்லை..

வேதாந்த் அவரின் பதிலுக்காக காத்திருப்பது உணர்ந்து “சரிப்பா..” என்றுசொல்ல,

“சரி மேடம் நான் ஆர்டர் சம்பந்தமான வேலையை பார்த்துக்கிறேன்.. தேங்க்ஸ் அகைன்..” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்..

தமிழ் என்ன சொல்ல போகிறார் என்ற ஆவலில் அவர் முகத்தையே பார்த்திருந்தார் கமலாவதி..

“என்னமா போன்ல யாரு, என்ன சொன்னங்க???”

“வேதாந்த் மோட்டோர்ஸ் அவங்க கம்பெனி எம்டி தான் பேசினாங்க அத்தை…”

“அவனா?? என்ன சொன்னான்..”

வேதாந்த் ஆரம்பத்தில் பேச ஆரம்பித்தது முதல், அத்தனையும் சொல்லி முடித்தார் தமிழ்.. அதை கேட்ட கமலாவதியோ,  “தமிழ் இது எல்லாம் சரி வருமா??” என்று யோசனையாய் கேட்க

“வரணுமே அத்தை அப்போ தானே, மதி வாழ்க்கை நல்லா இருக்கும்… இவளை எப்படி விடவும் முடியாதே…” என்றார்..

“அதே எண்ணம் தான் எனக்கும் தமிழ்.. அவள் வாழ்க்கை சிறப்பாய் அமைந்தால் அதுவே போதும்மா..”  என்று தன் பேத்தியின் நலனை தெரிவித்து கொண்டார்…

மேலும் அவர்கள் பேச்சு வேறு வேறு திசைகளில் சென்று கொண்டிருந்தது..

மதிய உணவிற்கு மஹதி வீட்டிற்கு வந்திருந்தாள்…

“வா மதி, சாப்பாடு எடுத்து வைக்கவா???”

“இதோ ரெப்ரெஷ் ஆகிட்டு வந்திறேன் மா…” என்று சொல்லி சென்றவள் பத்து நிமிடத்தில் வந்தாள்..

“நீங்க, பாட்டி எல்லாம் சாப்பிட்டாச்சாம்மா?”

“நாங்கள் சாப்பிட்டு ரொம்ப நேரம் ஆகிடுச்சு மதி… நீ தான் லேட்…” என்றவாறே அவளுக்கு பரிமாறினார்..

அதற்கு மேல் எதுவும் பேசாமல், அமைதியாய் உண்டு முடித்தாள்… மதிய உணவிற்கு பிறகு கமலாவதி ஓய்வு எடுக்க சென்று விட்டார்.. தமிழும் தன் அறைக்குள் சென்று விட்டார்..

மஹதி, உண்டு முடித்ததும் சிறிது நேரம் அமர்ந்திருந்தவள், எதோ முடிவு எடுத்தவளாய் தன் தாயின் அறைக்கு சென்றாள்..

“அம்மா…” என்று அழைத்தபடி..

“சொல்லு மதி, என்னம்மா???”

“உங்க கிட்டே கொஞ்சம் பேசணும்…” என்ற மகளை சிறிது யோசனையாய் பார்த்திருந்தார்..

அவரின் பார்வையிலேயே சம்மதத்தை உணர்த்தவள், எப்படி ஆரம்பிப்பது என்று திணறினாள்..

“என்னடா மதி, ஏதோ பேசனும்ன்னு சொன்ன?? என்னடா அது சொல்லுமா..” என்று அவள் பேச ஊக்கினார்…

“அது வந்து நான் கொஞ்ச நாள் பாரின் போகலாம்ன்னு இருக்கேன் மா… ஒரு ஆறு மாச படிப்பு இருக்கும்மா, நம்ம மெஷின்ஸ் பத்தின படிப்பு, அதான் அதை படிக்க போகலாமான்னு நினைச்சுட்டு இருக்கேன்மா..” என்று தயக்கத்துடனே சொல்லி முடித்தாள்..

தமிழோ அவளின் கூற்றில் நம்ப முடியாத பார்வை பார்த்தார்..

அவரின் பார்வையில் தலை குனிந்தவள், “இல்லமா  அது வந்து.” என்று இழுக்க,

“எனக்கு உண்மையான காரணம் தெரிஞ்சாகனும் மதி..” என்ற  குரலில் நீ உண்மையான காரணத்தை சொல்லியே ஆகா வேண்டும் என்ற கட்டளை ஒளிந்திருந்தது..

“இல்லமா இன்னிக்கு வேதாந்த் மோட்டோர்ஸ் ப்ரோபோசல் கேன்சல் பண்றதுக்கு மெயில் பண்ணி இருந்தேன், பட் அவங்க கேன்சல் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்கம்மா, அப்படி கேன்சல் பண்ணினாலும் அவங்க கேக்கிற நஷ்ட ஈடு வேணும்ன்னு சொல்றாங்கம்மா, அவ்வளோ தொகை நம்மால கொடுக்க முடியாதும்மா..

அந்த பணம் இருந்தா நாம நம்ம பேக்டரியை இன்னும் டெவலப் பண்ணலாம்மா… அது மட்டும் இல்லாம ப்ரியா வேற அவ கல்யாணத்துல என்னால எதுவும் பிரச்னை ஆகிடுமோன்னு நினைக்கிறா..  அதனால, எனக்கு எந்த பக்கம் முடிவு எடுக்கிறதுன்னு தெரியலைம்மா, ஏன்னா அந்த ஆர்டர் அந்த கம்பெனி கூட என்னால பண்ண முடியாது..

ஆனா பண்ணித்தான் ஆகணும்னு கட்டயாம்… அதான்மா நான் கொஞ்ச நாள் வெளியே போயிடு வரேன்னு சொல்றேன்.. அதுக்குள்ள இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்திடுமே..” என்று அழுகையினுடனே மனதில் இருக்கும் கனங்கள் எல்லாத்தையும் கொட்டிக்கொண்டிருந்தாள்…

அவள் சொன்னதை கேட்க, கேட்க தமிழாலும் அவள் எடுத்திருக்கும் முடிவு சரி என்பது போலவே நினைக்க ஆரம்பித்திருந்தார். ஆனாலும் வேதாந்த் பேசியது மனதில் தோன்றியது..

“நான் இன்னிக்கே அந்த யுனிவெர்சிட்டி அப்ளிகேஷன் போடுறேன்மா என்று கண்ணீரை துடைத்த படியே வெளியேறினாள்…

தன் அம்மா தன் முடிவுக்கு சம்மதம் சொல்லவில்லையே என்பதை மறந்திருந்தாள்.. இதை தமிழும் கவனித்திருந்தார், பின் எதோ முடிவு எடுத்தவராய் வேதாந்த்திற்கு அழைத்தார் பேசவென..

அந்த பக்கம் அழைப்பு ஏற்று கொண்ட பின், மஹதி சொன்னவை எல்லாம் ஒரு வரி விடாமல் எல்லாத்தையும் சொல்லி முடித்திருந்தார்…

அதைக் கேட்ட வேதாந்த், “நீங்க ஏதும் பயப்படதீங்க மேடம், இந்த விஷயத்தை எப்பிடி டீல் பண்ணணுமோ அப்படி நான் பண்ணிக்கிறேன்.. தப்பு என்னோடது தான் முழுக்க முழுக்க.. அதை சரி பண்ண எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.. நான் மிஸ் பண்ணிட மாட்டேன்..” என்று உறுதியாய் சொன்னவனின் குரலில் தமிழ் சிறிது தெளிந்து, அழைப்பைத் துண்டித்தார்..

“இவளை என்ன தான் செய்றது, எதுக்காக இப்படி பிரச்சனைகளை கண்டு ஓடி ஒளியனும்னு நினைச்சுட்டு இருக்கா.. எப்போ இருந்தாலும் அவள் இதை எல்லாம் சமாளிச்சு தானே ஆகணும்.. இப்படியே விட்டா இவ சரி வர மாட்டா…” என்றவாறே தன் காரை எடுத்து கொண்டு சீறி பறந்தான்..

மஹதி… அவள் பயத்தால் இந்த முடிவு எடுக்கவில்லை, எங்கே இங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் தன் கடந்த காலத்தை நினைவூட்டி விடுமோ??? அதனால் தான் பழைய நிலைக்கே சென்று விடுவோமோ, ப்ரியா கல்யாணத்தில் பிரச்சனைகள் வருமோ???? தன்னால் அவள் வாழ்வு கெட்டு விடுமோ??? என்று பல விதமான யோசனைகள், காரணங்கள் அவளை சூழ்ந்து இருந்ததாலேயே இந்த முடிவு எடுத்தாள்…

ஆனால் அவளின் இந்த முடிவே, இன்னும் அவள் நிலைமையை மோசமாக்க போகிறது என்று அவளிடம் யார் சொல்வது…

 

 

 

Advertisement