Advertisement

 

Tamil Novel

                 கரை காணா காதலே – 5

அன்றைய தினம் காலையில் இருந்தே மஹதியின் வீடு சிறு பரபரப்புடன் காணப்பட்டது.. இன்று ப்ரியாவை பெண் பார்க்க வருகிறார்கள். மிக நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டினர் வந்திடுவர் என்றிருக்க,  ப்ரியாவின் அறையில் ஒரே சத்தமாக இருக்கவும் அங்கே விரைந்தார் கமலாவதி..

ப்ரியாவும், தமிழும் தான் காரசாரமாய் பேசிக்கொண்டு இருந்தனர்..

“நீ சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டிட்டு இருக்க முடியாது ப்ரியா.. அவ இங்க தான் இருப்பா” என்றார் தமிழ் வேதனையும், கோபமும் நிறைந்த குரலில்..

“என்ன தமிழ், ப்ரியா என்ன சொல்றா??? ஏன் அவ கிட்டே இவ்ளோ கோவமா பேசிட்டு இருக்கமா?” என்றபடி உள்ளே வந்தார் கமலாவதி..

“நான் சொல்றேன் பாட்டி..” என்றவள், தன் அம்மாவை ஒருபார்வை பார்த்துவிட்டு,    “என்னை பெண் பார்க்க வரும் போது மஹதி  வீட்ல இருக்க வேணாம்னு சொன்னேன் இது தப்பா??” என்றாள் வேகமாய்..

“ஏன் அப்படி சொல்ற??? அவ இல்லாம எப்படி… அவ இருந்தா உனக்கு என்ன பிரச்னை ப்ரியா??” என்றார் கமலாவதியும் புரியாது..

“வர்றவங்க அவளை பாத்துட்டு எதாவது சொல்ல போய், பின்ன என் வாழ்க்கைல எதாவது பிரச்னை வந்துடுச்சுன்னா?? நான் எனன் செய்ய??  அதான் அவ இங்க இருக்க வேணாம்ன்னு சொன்னேன் பாட்டி..” என்றாள் ப்ரியா சிறிதும் தன்னுடன் பிறந்தவளை பற்றி பேசுகிறோம் என்றில்லாமல்..

வேறொன்றும் இல்ல  மஹதியை பார்த்ததும், அவளது கடந்த  காலத்தை தெரிந்து கொண்டால் எங்கே இவளையும், இந்த சம்பந்தத்தையும் வேண்டாம் என்று ரமேஷ் வீட்டினர் சொல்லி விடுவார்களோ என்ற பயமே ப்ரியாவிற்கு……

ரமேஷை போட்டோவில் பார்த்ததிலிருந்தே மிகவும் பிடித்து  விட்டது ப்ரியாவிற்கு… அதனாலேயே இந்த பயம்..

ஒரு வகையில் சுயநலம்.. என்ன மாதிரியான எண்ணங்கள் இது… மஹதி யார்..?? உடன் பிறந்தவள்.. அவளின் இக்கட்டானா நிலைக்கு துணை நிற்க வேண்டியவளே இப்படி சுயநலமாக இருந்தால் அடுத்தவர்களை என்னவென்று சொல்ல…??

ப்ரியா வேண்டுமானாலும் இப்படி நினைக்கலாம், ஆனால் மற்றவர்கள் அதாவது அவளின் வீட்டில் இருக்கும் மற்ற இரு ஜீவன்களும் அப்படி நினைக்கவில்லையே..

“ அது எல்லாம் முடியாது ப்ரியா.. வீட்ல ஒரு விசேஷம் நடக்கும் போது அவ இல்லாம எப்படி??? ஏற்கனவே அவளுக்கு கல்யாணம் முடிக்காம உனக்கு முடிக்க போறோம்… அதுக்கே கேக்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்ல போறோம்னு தெரியலை.. இதுல அவ இங்க இல்லைனா, அதை வேற பெருசு பண்ணி கேள்வி கேப்பாங்க…. என்ன ஆனாலும் சரி அவளும் இங்க தான் இருப்பா.” என்று மிக கோவமாய் இரைந்து விட்டு சென்றுவிட்டார் தமிழ்..

“உங்க அம்மா சொல்றது தான் சரி ப்ரியா, அவ இல்லாம எப்படி… அப்படியே அவ இல்லைனாலும் எல்லாரும் அவளை எங்கன்னு கேள்வி கேப்பாங்க..  

நாங்க எத்தனை கேள்விக்கு, யார் யாருக்கு தான் பதில் சொல்ல முடியும்.. எல்லாம் நல்ல படியா நடக்கும்  ப்ரியா.. நீ கண்டதையும் நெனைக்காம இரும்மா..” என்று மென்மையான தொனியில் சொல்லிக் கொண்டிருந்தார் கமலாவதி…

“ ம்ம்ச்.. என்னமோ பண்ணிக்கோங்க… எதாவது பிரச்னை வரட்டும் அப்புறம் வச்சுக்கிறேன் உங்களை எல்லாம்…” என்று எரிச்சலாய் சொல்லி விட்டு சென்றாள் ப்ரியாவும்…..

இவை அனைத்தையும் பக்கத்து அறையில் இருந்து கேட்டபடி இருந்த மஹதியோ கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே இதழ்களில் வெறுமையான புன்னகையை படர விட்டாள்…

நல்ல நேரம் தொடங்கியதும், வந்துவிடுவோம் என்று சொன்ன  நேரத்திற்குள் சரியாய் வந்தவர்களை கண்டு மகிழ்ச்சியாய் வரவேற்றனர் ப்ரியா வீட்டினர்..

அனைவரின் வரவேற்பையும் ஏற்று  தலையசைத்து சிரித்து கொண்டே வந்தவன் மஹதியை பார்த்ததும் ஷாக் அடித்தது போல நின்று விட்டான் ரமேஷ்..

“இவங்க எங்க இங்க??? ஒருவேளை பொண்ணுக்கு சொந்தகாரங்களா இருப்பங்களோ??” என்று யோசனை ஓடியது அவனுக்கு..

அவனை மேலும் யோசிக்கவிடாமல், கமலாவதியே அவர்களை அறிமுகப் படுத்தி வைத்தார்..

“எல்லாருக்கும் வணக்கம்.. இவங்க தமிழ் செல்வி, என் மருமகள்… இவ பெரிய பேத்தி மஹதி, சின்ன பேத்தி ப்ரியாவை தான் நீங்க பாக்க வந்திருக்கீங்க..” என்று சுருக்கமாய் சொல்லி முடித்தார்..

அதை கேட்டதும் ரமேஷ் மேலும் அதிர்ந்தான்..

‘அப்போ ப்ரியங்கா மெஷின்ஸ் இவங்களோடது தானா?? அப்போ ப்ரியா மஹதி சிஸ்டர்ஸா??’ என்று தன்னுடைய யோசனையில் ரமேஷ் ஆழ்ந்திருக்க,

“எல்லா தகவலும் தரகர் எங்கக்கிட்டே சொல்லிட்டாரும்மா” என்றார் ரமேஷின் தந்தை சிவராம்.

“ பொண்ணு வர சொல்லுங்க பாக்கலாம்…” என்று கேட்டது ஏற யாராய் இருக்க முடியும்.. ப்ரியாவின் மாமியார் ஆக போகிறவர் தான்… வள்ளி.. ரமேஷின் தாய்…

சிவராமன், வள்ளி தம்பதிகளுக்கு ஒரு புதல்வன் ரமேஷ் மற்றும் புதல்வி சங்கீதா மட்டுமே… சங்கீதாவை திருமணம் செய்து கொடுத்து நான்கு வருடங்கள் ஆகிற்று.. கையில் மூன்று வயது குழந்தையுடன் அண்ணாவிற்கு பெண் பார்க்கும் விஷேசத்திருக்கு வந்திருந்தாள்..

ப்ரியாவை தமிழ் அழைத்து வர,  வந்தவள் அனைவரையும் வணங்கி விட்டு அவர்களுடனையே அமர்ந்து விட்டாள்…. ரமேஷின் கண்கள் என்னவோ ப்ரியாவின் மேல் மட்டுமே இருந்தது. அவ்வப்போது யோசனையாய் மஹதியின் மீதும்..

ஆரஞ்சு வண்ண பட்டில், கழுத்தில் மயில் டிசைன்கள் போட்ட மாங்காய் மாலையுடன், அதே டிசைனில் காதில் தொங்கட்டானுடன், பெண்ணிற்கு இயல்பாய் வரக்கூடிய வெட்கத்தில், கன்னங்கள் சிவக்க அமர்ந்திருந்தவளை பார்க்க பார்க்க திகட்டவில்லை அவனுக்கு…

ப்ரியாவும், லூயிஸ் பிலிப்ஸ் பார்மல் ஷர்ட், பாண்டில் நெடு நெடுவென உயரமாய், கருத்த நிறத்தில் ஆனால் கலையான முகத்தில் எப்போதும் சிரிக்கும் உதடுகள் என்று இருந்தவனை சிறிது சிறிதாய் ரசித்து கொண்டிருந்தாள்..

இரு வீட்டினருக்குமே மற்றவர்களை பிடித்துவிட, பெண்ணுக்கும் மாப்பிளைக்கும் சம்மதமா என்று கேட்டானர்.. அவர்களும் சம்மதமாய் தலையை ஆட்ட,  நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் நாள் குறித்தனர்..

ப்ரியாவின் எக்ஸாம், படிப்பு முடிந்ததும் வைத்து கொள்ளலாம் என முடிவானது.. அதற்கு பின் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு ரமேஷ் வீட்டினர்  கிளம்பினர்… செல்லும் முன் ப்ரியாவின் நம்பரை, தன் தங்கை வழியாக வாங்க மறக்கவில்லை ரமேஷ்..

இங்கே வந்திருந்த நெருங்கிய உறவுகளும் சிறிது நேரத்தில் கிளம்பிட,  அவர்களை எல்லாம்  நல்முறையில் உபசரித்து அனுப்பி, மற்ற  வேலைகளையும் முடித்து விட்டு அமர்ந்திருந்தனர் தமிழும், கமலாவதியும்….

ப்ரியாவோ ரமேஷுடன் கனவுலகத்திருக்கு சென்றிருந்தாள்.

மஹதி  சாப்பிட்டுவிட்டு வரவும் அவர்களுடன் சிறிது நேரம் பேசலாம் என்று அமர்ந்தாள்..

“மதிம்மா புது  காண்ட்ராக்டுக்கு தேவையானா எல்லா மெஷின்சையும் ஆர்டர் போட்டு இருந்தேனே என்னம்மா ஆச்சு அது எல்லாம்??” என்று வேலை விஷயமாய் ஆரம்பித்திருந்தார் தமிழ்..

அப்போது தான் மஹதிக்கு அந்த காண்ட்ராக்ட் ஞாபகமே வந்திருந்தது..

“ச்சை இதை எப்படி மறந்தேன்… ப்ரியா பிரச்னைல அம்மா கிட்டே இதை பத்தி சொல்ல மறந்துட்டேனே..” என்று தனக்குள் முனங்கியவளை தமிழின் குரல் கலைத்தது…

“என்ன மதிம்மா நான் பேசிட்டே இருக்கேன், நீ என்ன யோசனை பண்ணிட்டே இருக்க??? நான் அந்த காண்ட்ராக்ட்க்கு எக்ஸ்ட்ராவா தேவைபடுவாங்கன்னு புது ஸ்டாப்ஸ் எல்லாம் எடுத்து இருக்கேன்மா..” எனவும்,

“ஐயோ அம்மா என்னை கேக்காம ஏன் இப்படி பண்ணீங்க..??” என்றாள் மஹதி  பதட்டத்தில்..

அவளை விசித்திரமாய் பார்த்தபடியே, “என்ன மதி ஏன் இவ்ளோ பதட்டப்படுற?? என்ன ஆச்சு உனக்கு…. நானும் பாத்துட்டு தான் இருக்கேன், நீ அந்த காண்ட்ராக்ட் மீட்டிங் போய்ட்டு வந்ததுல இருந்தே சரி இல்லையேம்மா… நானும் இந்த ப்ரியா விஷயத்தில கவனம் வச்சிட்டு உன்னை சரியா கவனிக்கலையோன்னு தோணுது மதிமா…”

“அப்படி எல்லாம் இல்லம்மா… நான் நல்லா தான் இருக்கேன்.. எனக்கென்னமோ இந்த காண்ட்ராக்ட் வேணாம்ன்னு தோணுது அவ்ளோ தான்மா..” என்றவளை மற்ற பெண்கள் இருவருமே வித்தியாசமாய் பார்த்தனர்..

“அதான் ஏன் மதி.. இது எவ்வளவு பெரிய வாய்ப்பு நமக்கு, இதனால நம்ம தொழில் எவ்வளவு முன்னேற்றம் தெரியுமா.. இதனால நம்ம லாபமும் அதிகம், அதை விட நம்மக்கிட்டே வேலை செய்றவங்களுக்கும் இதனால எவ்வளோ லாபம்.. இவ்வளவு நன்மைகள் இருக்கும் போது இந்த வாய்ப்பை ஏன்டா வேணாம்னு சொல்ற???” குழப்பம் நிறைந்த குரலில் கேட்டார் தமிழ்.

அம்மாவிடம் என்ன சொல்லி இதை தடுப்பது என்று யோசிக்காமல் ஆரம்பித்து விட்டோமோ என்று இப்போது யோசித்து கொண்டிருந்தாள் மஹதி..

“அதாவது அம்மா அது பெரிய கம்பெனில.. சோ ஆர்டர்ஸ் எல்லாமே சீக்கிரமாவே டெலிவரி பண்ண சொல்லுவாங்க அதனால தான் நான் யோசிச்சுட்டு அப்பறமா ப்ரோபோசல் அக்செப்ட் பண்ணலாம்னு இருந்தேன்மா…” என்றாள் வார்த்தைகள தேடிப்பிடித்து

“ஆமாமா நீ சொல்றது சரி தான்மா… ஆனா அதுக்காக தானே புதுசா ஐம்பது பேரை வேலைக்கு சேர்த்து இருக்கோமே மதிமா… இன்னும் என்னடா???”

“இல்லமா அவங்க நெறைய கண்டிஷன்ஸ் எல்லாம் போடுவாங்களாம், நம்ம அதை எல்லாம் பண்ண முடியுமான்னு தெரியலையேம்மா… அதுனால தான் நானே கொஞ்ச டைம் வேணும்ன்னு கேட்டு இருந்தேன்..” என்று வாய்க்கு வந்ததை எல்லாம் உளறி கொட்டினாள்…

“இந்த உப்பு சப்பு இல்லாத காரணத்துக்காக எல்லாம் இவ்ளோ பெரிய காண்ட்ராக்ட் கேன்சல் பண்ண முடியாது மதிமா..” என்று திடமாய் மறுத்தார் தமிழ்..

“மதி எப்போ இருந்து இப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுருக்க???? எது வந்தாலும் ஒரு கை பாத்திடனும், எல்லா விஷயத்திற்கும் நல்லது, கெட்டதுன்னு எல்லாமே இருக்கும்.. ஆனா நம்ம நல்லதை மட்டுமே நெனைக்கணும் மதிமா…. இதை என்னால செய்ய முடியும்ன்னு நினைச்சு செய்மா..

உன்னால முடியாததுன்னு எதுவுமே இல்லைன்னு நெனைச்சுக்கோ மதிமா… இந்த காண்ட்ராக்ட் என்ன இதை விட பெரிய பெரிய காண்ட்ராக்ட் கூட உன்னால பண்ண முடியும் மதிமா.. அப்படி நெனைச்சு இதையும் பண்ணனும் மதிமா… சோ தயங்காம இந்த காண்ட்ராக்ட்ல என்ன பிரச்சனை, ஏன் இதை வேணாம்னு சொல்றன்னு தெளிவா சொல்லு மதிம்மா…” என்று கமலாவதி சிறிது ஊக்கம் கொடுத்து பேசினார்..

அவர் தான் கவனித்தாரே… மஹதி இந்த விஷயம் பேச ஆரம்பித்ததிலிருந்து ஏதேதோ உளறி கொண்டிருக்கிறாள் என்று… அவளிடம் இருந்து உண்மையான காரணத்தை பெறுவதற்காகவே அவளிடம் இவ்வாறு பேச தூண்டினார்…

கமலாவதியின் பேச்சை கேட்ட அவளும் ஒரு முடிவாய் உண்மையான காரணத்தை சொல்லி விடலாம் என்று பேச ஆரம்பித்தாள்..

“என்னால அந்த கம்பெனி கூட வேலை பாக்க முடியாதுமா…”

“அதான் ஏன் மதிமா..”

“அவர் என் கூட காலேஜ்ல படிச்சவரும்மா…”

இதை கேட்டதும் தமிழ், கமலாவதி இருவர் முகத்திலும் ஒரு திகைப்பு…

ஆனாலும் அதை வெளி காட்டாது “அதனால என்னமா??? நடந்ததை எல்லாம் மறந்திடு மதிமா… நீ அதை பத்தி யோசிக்காம வெளியே வா மதி…  நீ தான் எந்த தப்பும் பண்ணலையே மதிமா.. அப்பறம் என்ன மதிமா..” என்று அவளை இயல்பாக்கும் பொருட்டு இருவரும் அவளை தேற்றி கொண்டிருந்தனர்…

“இல்லமா நீங்க என்ன சொன்னாலும், என்னால அவங்க கம்பெனி கூட எந்த டீலும் வச்சிக்க முடியாதும்மா…” என்றாள் முகத்தில் சொல்ல முடியாத வேதனையை காட்டியபடியே…

அவளின் குரலையும் முகத்தையும் வைத்தே என்னவோ பெரிதாய் இருக்கிறது என்று கண்டுகொண்டனர் பெரியவர்கள்..

“எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லிடு மதிம்மா” கொஞ்சம் பயத்துடனே கேட்டார் தமிழ்…

“அந்த கம்பெனி யாருடையது தெரியுமா ம்மா???” என்றாள் கண்ணில் வழியும் நீரோடு..

“யாரோடது மதி??”

“வேதாந்த் கம்பெனி ம்மா அது…..” என்றவளுக்கு அவனின் பெயரை உச்சரிக்கும் போதே அத்தனை வழி..

“எந்த வேதாந்த் மதிமா..??

அதற்க்கு மேல் அவள் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை அவளுக்கு… அழுகையுடையே அவள் சொல்லி விட்டாள்….

“நான் ஜெயில்க்கு போக காரணமா இருந்த அதே வேதாந்த் தான் மா..” என்று அவர் மடியில் விழுந்து கதறினாள்…

அவளின் இந்த பதிலில் இருவருமே திகிலடித்தது போல் அமர்ந்திருந்தனர்….

இதேநேரம் அங்கு வேதாந்தோ மஹதியை பற்றிதான் யோசித்துக்கொண்டு இருந்தான்.. ஒருப்பக்கம் இந்த காண்ட்ராக்ட்.. இன்னொரு பக்கம் ப்ரியா ரமேஷ் திருமணம்.. இரண்டிற்கும் நடுவே மஹதி  என்ன மாதிரியான ஒரு முடிவை எடுப்பாள் என்று தீவிரமாய் யோசித்துக்கொண்டு இருந்தான்..

Advertisement