“எனக்கு அனிதா மீனா ரெண்டு போரையும் ரொம்பப் பிடிச்சிருக்கு. ஹரியும் மீனாவும் குழந்தைக்காக இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சாலும், கண்டிப்பா பின்னாடி அவங்க நல்ல கணவன் மனைவியா வாழ்வாங்க அப்படின்னு நான் நம்புறேன்.”

வைஷ்ணவியின் விளக்கத்தைக் கேட்ட விக்ரம் அதற்கு மேல் எதுவும் மறுத்து பேசவில்லை…. அவன் சென்று ஓய்வு எடுக்க…. ஹரிணியும் வைஷ்ணவியும் மதிய சமையலுக்குத் தயார் செய்தனர்.

ஹரி வந்து சாமான்களைக் கொடுத்து விட்டு அவன் வேலையைப் பார்க்க சென்றவன், அவனுடன் அத்விகாவையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

“பாருங்க மா அண்ணன் என்னோட பேசாமையே போய்ட்டான்.” ஹரிணி தன் தமயனை குறை சொல்ல….

“நீ அவனைக் கல்யாணம் பண்ணிக்கோ… பண்ணிக்கோன்னு தொலைச்சு எடுத்த….. அதுதான் அவனுக்குக் கோபம். இப்பவும் அவன் முழு மனசா கல்யாணத்துக்குச் சம்மதிக்கலை… அனிதாவை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாம தான் அமைதியா இருக்கான்.”

“அவன் சரியாகக் கொஞ்ச நாள் ஆகும். இவனுக்கு மேல மீனா…. ரெண்டு பேரும் என்னதான் செய்யப் போறாங்களோ…. எனக்குக் கவலையா இருக்கு.” என்றவர்,

ஹரி வாங்கி வந்திருந்ததை எடுத்து பார்த்துவிட்டு “இங்க பாரு எல்லாம் உனக்குப் பிடிச்சததான் வாங்கிட்டு வந்திருக்கான்.” என்றதும், ஹரிணிக்கு ஒரே சந்தோஷம்.

“சரி நான் பார்த்துக்கிறேன். நீ போய்க் கொஞ்ச நேரம் படு.” என்று சொல்ல ஹரிணியும் தன் கணவன் இருந்த அறைக்கு வந்தாள். அவள் வந்த போது விக்ரம் நல்ல உறக்கத்தில் இருந்தான்.

இந்த நேரத்தில் விக்ரம் உறங்குவது எல்லாம் உலக அதிசயம். சென்னையில் அவர்கள் நிறைய இடங்களில் பல்பொருள் அங்காடிகள் வைத்து நடத்துகிறார்கள்.

அதனால் காலையில் வீட்டில் இருந்து சென்றால்… வீடு திரும்பப் பத்துப் பத்தரையாகும். மதிய உணவை எடுத்து செல்ல ஆட்கள் யாரவது வருவார்கள். அதனால் மதிய உணவும் சேர்ந்து அருந்த முடியாது.

இரவு வந்து சாப்பிட்டு படுக்க… பதினோரு மணிக்கு மேல் ஆகும். நாள் முழுவதும் உழைத்த களைப்பில் விக்ரம் படுத்ததும் உறங்கி விடுவான். காலை அவன் தாமதமாக எழுந்து கொள்ள…. ஹரிணி சீக்கிரமே எழுந்து சென்றிருப்பாள். அவர்கள் இருப்பது கூட்டுக் குடும்பத்தில். மாமனார், மாமியார், கொழுந்தனார் அவரின் மனைவி குழந்தைகள் என்று இவர்களையும் சேர்த்து மொத்தம் பத்து பேர்.

மேல் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும், இத்தனை பேருக்கு சமைக்கவே நேரம் சரியாக இருக்கும். முன்று பெண்கள் சேர்ந்து செய்தாலும், குழந்தைகள் இருப்பதால் ஆளுக்கு ஒன்று செய்வது போல் இருக்கும்.

கணவனோடு தனியாக நேரம் செலவழிக்கவோ… இல்லை பேசிக்கொண்டு இருக்கவோ நேரம் இருக்காது. எதோ ஓடிக்கொண்டே இருப்பது போல் இருக்கும்.

முதலில் எல்லாம் ஹரிணி இதைப் பெரிதாக எடுத்துக்கொண்டது இல்லை… ஆனால் ஹரிக்கு திருமணமாகி பிருந்தா வந்ததும், அவளுக்குத் தான் நிறையச் சந்தோஷங்களை இழப்பது போல் தோன்றியது.

அப்போது ஹரிணி முதல் குழந்தை கருவுற்று இருந்தாள். அதனால் குழந்தை பெற்றுக்கொள்ளத் தன் தாய் வீட்டிற்குப் பெங்களூர் வந்திருந்தாள்.

பிருந்தா ஹரியுடன் சேர்ந்து தான் மூன்று வேலையும் உணவு அருந்துவாள். அவன் வர எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருப்பாள். எங்களோட சாப்பிடேன் என்றாலும் கேட்க மாட்டாள். ஹரியும் அவளுக்காகவே முடிந்த அளவு வேலையை முடித்து விட்டு வந்துவிடுவான்.

வார இறுதியில் இருவரும் சேர்ந்து சினிமா, கோவில், மால் என்று எங்காவது சென்று விட்டு வருவார்கள். ஹரி ஹரிணியையும் அழைக்கத் தான் செய்வான். ஆனால் வைஷ்ணவி அவர்களோடு செல்ல விடமாட்டார்.

“உனக்கு உங்க அண்ணனோட உறவு எப்பவும் வேணும்ன்னு நினைச்சா கொஞ்சம் தள்ளியே இருந்துக்கோ….” என்பார்.

பிருந்தா ஹரியிடம் தனக்குத் தான் முதல் உரிமை என்று நினைப்பாள். அவளுக்கு வேறு யாரும் அவனிடம் உரிமை கொண்டாடுவது பிடிக்காது. அதற்காக அவளுக்கு மட்டுமே ஹரி என்று பட்டாவா எழுதி கொடுத்திருக்கிறது. அவன் தனக்கும் சகோதரன் தானே என்று ஹரிணிக்கு கடுப்பாக வரும்.

திருமணத்திற்கு முன்பு ஹரி அவளிடம் அவ்வளவு பாசமாக இருப்பான். அவள் தன் பெற்றோரை விட ஹரியிடம் தான் எல்லாவற்றையும் மனம் விட்டு பேசுவாள். இத்தனைக்கும் வெங்கட்டும் வைஷ்ணவியும் பிள்ளைகள் மனம் அறிந்து தான் நடந்து கொள்வார்கள்.

ஹரியின் பாசம் குறையவில்லை… ஆனால் அவனுக்கு வந்த மனைவி அப்படி. தமையன் மேலிருந்த கோபத்தை ஒருநாள் ஹரிணி விக்ரமிடம் காட்டி நன்றாக வாங்கியும் கட்டிக்கொண்டாள்.

“நீங்களும் இருக்கீங்களே எங்க அண்ணனை பார்த்து கத்துக்கோங்க பொண்டாட்டிய எப்படி வச்சிகிறதுன்னு…. நிறை மாசமா இருக்கிற பொண்டாட்டிய பார்க்க கூட நீங்க வரலை…. ஆனா எங்க அண்ணன் அவர் பொண்டாட்டியை எப்படித் தாங்கிறான் தெரியுமா….”
அவள் சொன்னதைக் கேட்ட விக்ரம் ஆடி தீர்த்து விட்டான்.

“என்னோட வியாபாரமும் உங்க அண்ணன்னோடதும் ஒண்ணா…. உங்க அண்ணன் ஆள் போட்டுப் பார்த்தா போதும். நான் அப்படி இருக்க முடியுமா….கொஞ்சம் ஏமாந்தா தலையில துண்டை போட்டு தான் உட்காரனும்.”

“உன் அண்ணிக்கு யார் முன்னாடி எப்படி நடந்துகிறதுன்னே தெரியாது. எல்லாரும் இருக்கும் போதே புருஷன் மடியில படுப்பா… அவன் தலையை வருடுவா…..யார்கிட்டையாவது அவனை முதல்ல பேச விடுவாளா…. அவளே தான் பேசிட்டு இருப்பா…..”

“நான் அவங்களைத் தப்பு சொல்லலை… அது அவங்க வாழ்க்கை அவங்க இஷ்டபடி இருப்பாங்க. அவங்களுக்கு அது சரியா வரும். நமக்கு வராது. இப்படி அடுத்த வீட்டோட நம்ம வீட்டை ஒப்பிட்டு பார்த்திட்டு இருந்தா…நம்ம நிம்மதி போய்டும்.”

“இனியாவது அடுத்த வீட்டை பார்க்காம ஒழுங்கா இருக்கிற வழிய பாரு….” என்று விக்ரம் வைத்து விட… அவன் பேசியதிலேயே பத்து நாட்கள் சென்று வர வேண்டிய பிரசவ வலி அன்றே ஹரிணிக்கு வந்துவிட்டது.

ஹரிணிக்கு வலி வந்ததும், ஹரி சென்று காரை எடுக்க…. வைஷ்ணவி அவளை மெதுவாக அழைத்துக்கொண்டு வந்தார். அப்போது அங்கே வந்த பிருந்தா “நீங்க அவங்களை ஹாஸ்பிடல்ல விட்டுட்டு வந்திடுங்க. நாம குழந்தை பிறந்ததும் சேர்ந்து போய்ப் பார்ப்போம்.” என்றதும், ஹரிக்கு வந்ததே கோபம்.

“ஹாஸ்பிடல்ல விட்டுட்டு வர அவ யாரோ இல்லை… என்னோட தங்கை… அவளுக்குக் குழந்தை பிறக்கிற வரை நான் அங்க தான் இருப்பேன்.” என்றான் அவன் உறுதியாக.

அன்று தான் அவன் பிருந்தாவை கடிந்து பேசி ஹரிணி பார்த்திருக்கிறாள். அவளுக்குப் பிருந்தா கோபித்துக் கொள்வாளோ என்று பயம். ஆனால் பிருந்தா சண்டை எதுவும் போடவில்லை… அவளும் காரில் முன்புறம் ஏறி ஹரியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

அவள் எப்போதுமே அப்படித்தான். சண்டை என்று எதுவும் போட மாட்டாள். ஹரி சொன்னபடி வரவில்லை என்றால்… சாப்பிடாமல் இருந்து தன்னைத் தான் வருத்திக்கொள்வாள். அதிலேயே ஹரி உருகி விடுவான். அவள் அதிக அன்பை காட்டியே அவனைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தாள்.

ஹரிணி விக்ரமிடம் ஆசைப்பட்டுக் கேட்டது, பிரசவ நேரத்தில் அவளுடன் இருக்க வேண்டும் என்பதைத் தான். அவனும் வருவதாகச் சொல்லி இருந்தான். ஆனால் அவளின் அந்த ஆசை கூட நிறைவேறவில்லை…. விக்ரம் வருவதற்குள் அத்விகா பிறந்து இருந்தாள்.

தங்களையிட்டு ஹரி பிருந்தவுக்குள் பிரச்சனை வேண்டாம். அவர்கள் தனியாகச் சந்தோஷமாக இருக்கட்டும் என்று தான் தனிக் குடித்தனம் வைத்தனர். ஆனால் பிருந்தா இப்படி ஹரியை தவிக்க விட்டு செல்வாள் என்று யாருக்கு தெரியும்.