இரண்டு நாட்கள் ஹரி வரவில்லை என்றதும் அனிக்கு ஹரியை பற்றி யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. மீனாவிடம் கேட்டாலும் ஒழுங்கான பதில் இல்லை…. ஹரியின் அத்தையிடம் பேச அனிக்கு பயம். அவர் தானே அவளுக்கு தலைமை ஆசிரியர்.
நான் என்னுடனே ஹரியை ஊருக்கு அழைத்து சென்று விடுவேன் என்று வைஷணவி கேலியாக கூறியதை உண்மை என்று நம்பி பயந்து கொண்டு இருந்தவள், ப்ரணவும் சதுரங்க வகுப்புக்கு வருவதால்… அவனிடம் ஹரியை பற்றி கேட்க….
ரொம்ப நாள் லீவு… என்பது மட்டும் தான் அவனுக்கு தெரிந்தது. ஹரி எப்போது மீண்டும் வருவான் என்பதை பற்றியெல்லாம் அவனுக்கு தெரியவில்லை…
“உனக்கு ஹரி சார் வீடு தெரியாதா….” அஸ்வத் கேட்க… “தெரியாது….” என்று பாவமாக சொன்னவள் “ஏன் கேட்கிற?” என்றதும் “தெரிஞ்சா அங்க போய் பார்க்கலாம்.” என்று அவன் சொன்னதும், அனிக்கு பளிச்சென்று ஒன்று தோன்றியது.
ஹரி அவளை அதிக முறை அழைத்து சென்ற இடம் தேவ்வின் உணவகம் தான். ஹரியும் தேவ்வும் நண்பர்கள் என்று அவளுக்கு தெரியும். அப்படியென்றால் தேவ்விடம் சென்று கேட்டால் ஹரியை பற்றி தெரியும். அவனிடம் ஹரியின் வீட்டிற்கு அழைத்து செல்ல சொல்லி கேட்கலாம் என்று நினைத்தாள்.
அனிக்கு ஹரியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. அதற்கும் இப்போது ஒரு வழி கிடைத்து விட…. உடனே கிளம்ப துடித்துக்கொண்டு இருந்தாள்.
அதற்கு ஏற்றார் போல் விஷ்வமும் வீட்டின் உள்ளே உறங்கிக்கொண்டு இருந்தார். அவர் எப்பவுமே அனி பள்ளியில் இருந்து வந்ததும் தான் சிறிது நேரம் சென்று படுப்பார்.
இது தான் நல்ல நேரம் என்று நினைத்த அனி அஸ்வதும், ப்ரணவும் விளையாடிக்கொண்டு இருந்த போது…. யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து மெதுவாக கிளம்பி விட்டாள்.
அரை மணி நேரம் சென்று எழுந்து வந்த விஸ்வம், அஸ்வதும் ப்ரணவும் மட்டும் இருப்பதை பார்த்து, அனி எங்கே என்று கேட்க….
“உள்ள இருப்பா…” என்றனர் இருவரும்.
“உள்ள இல்லையே….நான் அங்க இருந்து தானே வந்தேன்.” என்றவர், உள்ளே சென்று எல்லா இடங்களிலும் பார்த்து விட்டு வந்தார்.
அஸ்வதும் ப்ரணவ்வும் அனி எங்கே என்று தெரியாமல் இருவரும் முழித்தனர். விஸ்வம் ஒருவேளை அவள் வீட்டிற்கு சென்று இருக்கிறாளா என்று போய் பார்த்து விட்டு வந்தார். மீனா வேலைக்கு சென்றிருப்பதால் வீடு பூட்டி இருக்க… அங்கே வெளியில் கூட அனி இல்லை.
அந்த தெருவில் தேடி பார்த்துவிட்டு, ஒரு வேளை பள்ளியில் இருக்கிறாளோ என்று நினைத்து அங்கு தேடி சென்றார். ஹரி வகுப்பு எடுக்கும் சமயத்தில் தான் அவனோடு இருப்பாள் மற்ற நேரம் அங்கே செல்ல மாட்டாள்.
ஒருவேளை ஹரி இன்று வகுப்பு எடுக்க வந்திருப்பானோ என நினைத்து அங்கே சென்று பார்க்க… அங்கேயும் அனி இல்லை. அனியை காணாமல் விஸ்வத்துக்கு பதட்டத்தில் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது.
அவர் அந்த பள்ளி வளாகத்திலேயே தளர்ந்து போய் அமர்ந்து விட… அங்கிருந்த காவலாளி சென்று ஹரியின் அத்தையை அழைத்து வந்தார்.
ஹரியின் அத்தை விமலா விஸ்வத்திடம் விவரம் கேட்டவர் “இங்க தான் இருப்பா பயப்படாதீங்க.” என்றவர், அஸ்வத் மற்றும் ப்ரணவ்வை விசாரிக்க…. அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை….
“இருந்தாலும், அவர் விடாமல் அவர்களை மீண்டும் மீண்டும் விசாரித்தார். நீங்க மூன்னு பேரும் தான சேர்ந்து இருந்தீங்க. கடைசியா என்ன பேசுனீங்க? சண்டை போட்டீங்களா… என்று கேட்க, அஸ்வதும் ப்ரணவும் பயந்து விட்டனர்.
“இல்ல மிஸ்…. சண்டை எல்லாம் போடலை… அனி ஹரி சாரை பார்க்கனும்னு சொன்னா… அவரை தேடி போய்டாளோ….” அஸ்வத் சொல்ல… அதை கேட்ட மற்றவர்கள் திடுக்கிட்டனர்.
விமலா உடனே ஹரியை அழைத்து, அனி காணாமல் போனதை சொல்ல… அதிர்ச்சி அடைந்த ஹரி, ஒரு நொடி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றவன், தான் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அனிக்கு ஆபத்து என்பதை உணர்ந்து, அடுத்து என்ன செய்வது? என்று யோசிக்க ஆரம்பித்தான்.
ஏற்கனவே அனி சென்று அரை மணி நேரத்திற்கும் மேல் ஆனதால் உடனே அந்த பகுதியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்து அனியை பற்றி விவரம் சொல்லி தேட ஆரம்பிக்க சொன்னான். தன்னிடம் இருந்த அவளின் புகைப்படத்தையும் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தான்.
ஹரியின் குடும்பம் அதே ஊரில் பல வருடங்களாக இருப்பதால்… அதோடு ஹரிக்கும் உயர் காவல் அதிகாரிகளோடு தொடர்பு இருந்ததால்… அவனால் அந்த ஏற்பாட்டை செய்ய முடிந்தது.
ஹரி அப்போது வீட்டில் இருந்ததால் வைஷ்ணவியும் விஷயம் கேள்விப்பட்டு பதட்டமடைந்தார். அவரும் ஹரியுடன் கிளம்ப… இருவரும் அனியின் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.
விஸ்வம் அதிக பதட்டத்துடன் இருக்க… அவரின் மகன் மனோஜும் வேலை முடித்து வந்திருந்தான். அவர்கள் இருவரும் அக்கம் பக்கம் தேடிக்கொண்டு இருந்தனர்.
மீனாவிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வது என்று தெரியாமல்? விஸ்வம் இன்னும் மகளிடம் சொல்லாமல் இருந்தார்.
ஹரிக்கு அப்போது தான் மீனாவின் நினைவு வந்தது. தனக்கே இப்படி இருக்கும் போது… பெற்றவள் குழந்தையை காணோம் என்றால்… என்ன ஆவாள்? என்று யோசித்து கலங்கியவன்,
“மீனாவுக்கு இப்ப சொல்ல வேண்டாம். அவங்க வேலை முடிஞ்சு வர்றதுக்குள்ள எப்படியும் அனியை கண்டு பிடித்து விடலாம்.” என்றான்.
விஸ்வத்தையும் மனோஜையும் அந்த ஏரியாவின் காவல் நிலையத்திற்கு அனுப்பி முறையாக புகார் பதிவு செய்ய சொன்னவன், அவனே அனியை தேடிக்கொண்டு புறப்பட்டான்.
மகன் சென்றதும் வைஷ்ணவியும் சும்மா இருக்கவில்லை அவரும் அனியை தேடி புறப்பட்டார். நடந்தே போய் பார்ப்போம் சின்ன குழந்தை தான ரொம்ப தூரம் போய் இருக்க மாட்டாள் என்றே நினைத்தார். செல்லும் வழியெல்லாம் அங்கிருந்தவர்களிடம் அனியை பற்றி விசாரித்துக்கொண்டே சென்றார்.
ஹரிக்கு எங்கு செல்வது என்று ஒன்றும் தெரியவில்லை…. அவன் இதுவரை அவன் வீட்டிற்கு அவளை அழைத்து சென்றது இல்லை… தான் மட்டும் தனியாக இருப்பதால் தான் அவன் அழைத்து சென்றது இல்லை…
இப்போது தன்னை தேடி சென்ற குழந்தை எப்படி இருக்கிறதோ என்ற கவலை மனதை அரிக்க … அனியோடு அடிக்கடி சென்ற பாதையிலேயே… சுற்றிலும் பார்வை அலையவிட்டபடி சென்றான்.
கிளை சாலைகள் முடிந்து முக்கிய சாலைக்குள் வந்தவனுக்கு அங்கிருந்த வாகன போக்குவரத்தை பார்ததும் மனதில் திக்கென்றது.
சின்ன குழந்தை வண்டியில் எதுவும் மாட்டி இருந்தால்…. நினைக்கவே அவனின் சர்வமும் நடுங்கியது. கடவுளிடம் பல வேண்டுதல்களை வைத்தபடியே சுற்றிலும் பார்த்துக்கொண்டே சென்றான்.
அப்போது அவனின் செல் அழைத்தது எடுத்து பார்த்தால் தேவ் தான் அழைத்தான். அவனுக்கு ஹரியின் அத்தை விஷயத்தை சொல்லி இருந்தார். எடுத்ததும் வேறு பேசி நேரத்தை வீணாக்காமல் “இதோ நான் இங்க இருந்து கிளம்புறேன். இங்க ஓட்டல்ல வேலை செய்றவங்களையும் தேட சொல்லி அனுப்பி இருக்கேன். கவலைப்படாதே கிடைச்சிடுவா…” என்றான்.
“ரொம்ப பயமா இருக்கு டா…. அப்பான்னு ஆசையா வந்த குழந்தைய விரட்டிட்டேன். ஆனா அவ என்னை தேடி போய் இருக்கா…. எங்க இருக்கா? என்ன ஆனானே தெரியலை….”
“இந்த நிமிஷம் அவ என்ன சொன்னாலும்… நான் கேட்பேன் டா…. எனக்கு அவ நல்லபடியா கிடைச்சிட்டா போதும்….கடவுள் எனக்கு திரும்ப ஒரு வாய்ப்பு கொடுப்பாரா….”
ஹரி அணியோடு சென்ற பாதையில் எல்லாம் தேடி அலைந்த போதும் அவன் கண்களில் அனி படவே இல்லை… காவல் நிலையத்திற்கு அழைத்து கேட்டான். அவர்கள் நாங்களும் தேடிக்கொண்டு இருக்கிறோம் என்றனர்.
மீனா அலுவலகத்தில் இருந்து வரும் நேரம் ஆனதால்…. வண்டியை வீட்டிற்கு திருப்பினான். அவள் முகத்தை எப்படி பார்க்க போகிறோம் என்றே அவனுக்கு தெரியவில்லை…. ஆனால் இந்த அதிர்ச்சியை அவள் தனியே தாங்கும் படி விடக்கூடாது.
அனி காணாமல் போனதற்கு தானே பொறுப்பு என்று நினைத்தான். அதனால் அவள் தன்னை என்ன பேசினாலும் வாங்கிக்கொள்ள வேண்டியது தான் என்ற முடிவோடு தான் கிளம்பினான்.