கிண்டி தாண்டி போரூர் வந்ததும், காரை ஒரமாக நிறுத்திய ஹரி மீனாவிடம் தண்ணீர் பாட்டிலை நீட்ட… அவள் குடித்ததும் “இப்ப ஓகேவா…” அவன் கேட்டதும், அவனை ஆச்சர்யமாகப் பார்த்த மீனா “உங்களுக்கு அவங்க யாருன்னு தெரியுமா…” எனக் கேட்க…

“ஏன் தெரியாம? அந்தப் பொம்பளை பட்டு புடவை கட்டி அவ்வளவு நகை போட்டிருக்கு. அதைப் பார்த்துப் பாத்ரூம் கழுவுரவங்கன்னு நீ சொன்னா நான் நம்பிடுவேனா…”. ஹரி சொல்ல….

அதற்குள் ஹரிணி “யாரு? என்ன?” என விசாரிக்க… ஹரி கடையில் நடந்ததைச் சொல்ல…. ஹரிணி விழுந்து விழுந்து சிரித்தாள். அவள் சிரித்ததும் ஹரிக்கும் மீனாவுக்குமே சிரிப்பு வந்தது.

“நல்லா வேணும்… நீங்க அவங்களை அப்படியே விட்டுட்டு வந்திருக்கக் கூடாது. இன்னும் நல்லா கேட்ருக்கணும்.” ஹரிணி சொல்ல… ஹரி பதில் சொல்லாமல் அனியை பார்த்தான்.

விடியற்காலையில் எழுந்தது அதோடு அலைச்சல் எல்லாம் சேர்ந்து சாப்பிட்டதும் பிள்ளைகள் மூவருமே உறங்கி இருந்தனர். மகள் உறங்கி விட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டே ஹரி பேச ஆரம்பித்தான்.

“எனக்கு எவ்வளவு நேரம் ஆகும் ஆகாஷ் முன்னாடி மீனாவை கொண்டு நிறுத்த…. பாருடா எங்க வீட்டு மகாராணின்னு சொல்லனும்னு எனக்கும் ஆசை தான். அனிக்காக மட்டும் தான் நான் அப்படிச் செய்யாம இருக்கேன்.”

“அவனுக்கு அனி இருக்கிறது தெரியாது. தெரிஞ்சு எனக்கு என் பொண்ணு வேணும்னு அவன் கேட்டா… சட்டப்படி அவனுக்கு அனிகிட்ட உரிமை இருக்கு….அதனால அவன் அனியோட பேச பழகச் சட்டம் அனுமதிக்கும். ஆனா என் பொண்ணு… அவ மனசு என்ன பாடுபடும். அந்த ஆகஷோட நிழல் கூட அனி மேல படக்கூடாது.”

“அவன் அனி மேல இருக்கிற பாசத்தில இல்லைனாலும், மீனாவை பழிவாங்கவாவது கண்டிப்பா அனிக்குத் தொந்தரவு கொடுப்பான். அதனால தான் அந்த அம்மா வர்றதுக்குள்ள காரை எடுத்திட்டு வந்திட்டேன். இப்ப அவங்க அம்மா மூலமா கண்டிப்பா ஆகஷ்க்கு மீனா நல்லா இருக்கான்னு தெரியவரும். இப்போதைக்கு இதுவே போதும்.”

“எனக்கு அனியோட நிம்மதியும் சந்தோஷமும் தான் முக்கியம்.” என்ற ஹரி காரின் டிக்கியை திறந்து பொருட்களை வைத்து விட்டு வந்து காரை எடுக்க… கார் பெங்களூரை நோக்கி விரைந்தது.

இங்கே ஆகாஷ் வீட்டில் ஹரி நினைத்தது தான் நடந்தது. மீனா வேறு திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பதை ஆகஷால் ஜீரணிக்கவே முடியவில்லை. இத்தனைக்கும் அவன் இன்னொரு திருமணம் முடித்து மனைவி குழந்தை என்று வாழ்கிறான். ஆனால் சந்தோஷமாக இருக்கிறானா எனக் கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

இவன் ஆடிய ஆட்டம் தெரிந்து அவனுக்குப் பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை… மீனாவை விரட்டி விட்டால்… பெரிய பணக்காரர்கள் பெண் கொடுக்க வரிசையில் நிற்பார்கள் என நினைத்து ஆகாஷின் பெற்றோர் கனவு கண்டு ஏமாந்து போய் விட….

இவனைப் போலவே ஒரு தறுதலையை மகளாகப் பெற்ற ஒரு பெற்றோர் மட்டும் தங்கள் மகளை ஆகாஷுக்குத் திருமணம் செய்ய முன் வந்தனர்.

இவர்களுக்கும் வேறு வழி இல்லை… அவர்களுக்கும் வேறு வழியில்லாமல் திருமணம் நடந்தது. வந்தவள் ராட்சசியே தான். அவளிடம் ஆகாஷின் ஜம்பம் பலிக்கவில்லை….

இவன் சிகரட் பிடித்தால் அவளும் பிடித்தாள். இவன் தண்ணி அடித்தால் அவளும் அடித்தாள். இவன் வெளியே சுற்றிவிட்டு இரவு தாமதமாக வந்தால்.. அவளும் அதையே செய்தாள்.

மீனா ஆகாஷிடம் கொடுமை படும் போது வேண்டுமென்றே பார்த்துக்கொண்டிருந்த ஆகாஷின் பெற்றோர், இப்போது நடப்பதையும் வெறுமனே பார்த்துக்கொண்டு தான் இருக்க முடிந்தது. எதாவது சொன்னால்……

“என்னை வரதட்சனை கேட்டுக் கொடுமை படுத்திறதா எழுதி வச்சிட்டு விஷம் குடிச்சிடுவேன்.” என மிரட்டினாள்.

ஆகாஷ் எதாவது கேட்டால், “நீயும் அப்படித்தானே பண்ற…உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.” என்றாள். ஆகாஷ் அவளை அடிக்கக் கைநீட்டினால்… அவளும் பதிலுக்கு அடித்து விடுவாள் என்று தெரியும். அதனால் ஆகாஷ் தன் மனைவியிடம் அடங்கிப் போக ஆரம்பித்தான்.

நீ ஒழுங்கா இரு… நானும் ஒழுங்கா இருக்கேன் என இருவரும் உடன்படிக்கைக்கு வர அதன் பிறகு இருவரும் ஒத்து வாழ்ந்தனர். ஆனாலும் ஆகாஷின் மனதில் தன் மனைவி மீது வெளியே சொல்ல முடியாத ஆத்திரம் இருந்தது. யாருக்கும் அடங்காமல் இஷ்ட்டம் போல் சுற்றிக்கொண்டு இருந்தவனை அடக்கி உட்கார வைத்துவிட்டாளே….

அவன் அடங்கி போக இன்னொரு விஷயமும் உண்டு. அவன் மனைவி பெரிய பணக்காரி. அவளோடு ஒத்து வாழ்ந்தால் தானே இன்னும் வசதியாக வாழலாம்.

இப்போது அவன் அம்மா வந்து மீனாவை பற்றி சொன்னதும், நான் வேண்டாம் என்று தூக்கி போட்டவள் நன்றாக வாழ்கிறாளே… ஆனால் நான் அடிமை போல அல்லவா இருக்கிறேன் என மனம் குமுறினான்.

நாம் நல்லது நினைத்தால் தான் நமக்கு நல்லது நடக்கும். இப்போதும் தன் தவறை ஆகாஷ் உணரவில்லை…. சிலர் எப்போதுமே திருந்த மாட்டார்கள்.

“டேய், நான் இவ்வளவு சொல்றேன். நீ சும்மா உட்கார்ந்திட்டு இருக்க…” ஆகாஷின் அம்மா கொதித்துப் போய்க் கேட்க….

“நான் வேற என்ன மா செய்ய முடியும். மீனாவால பின்னாடி பிரச்சனை வரக் கூடாதுன்னு, அப்ப கல்யாணம் நடந்ததுக்கான ஆதாரம் எல்லாம் அழிச்சாச்சு. இருந்தாவாவது அவ புருஷன் கிட்ட போய்க் காட்டலாம்.” என்றான் ஆகாஷ்.

“அவ புருஷனுக்கு முன்னாடி நடந்த கல்யாணம் தெரியாமல் எல்லாம் இருந்திருக்காது. அவ தான் தைரியமா என் முன்னாடி நின்னாளே… அதுவும் என்னைப் பார்த்து எப்படிச் சொல்லிட்டா….. என்னைப் பார்த்தா பாத்ரூம் கழுவுற மாதிரியா இருக்கு….”

“திரும்பத் திரும்ப அதையே சொல்லாதீங்க மா…. நான் என் பொண்டாட்டி கிட்ட வேற எனக்கு முன்னாடி கல்யாணமே நடக்கலைன்னு சொல்லி வச்சிருக்கேன். இது வேற தெரிஞ்சா அவ சாமி ஆடுவா…..”

“நீங்க பாட்டுக்கு என் பொண்டாட்டிகிட்ட எதாவது உளறி வச்சிடாதீங்க. அப்புறம் அவ நம்மை வீட்டை விட்டு வெளியே துரத்தினாலும் துரத்திடுவா….”

“வெளியே துரத்தினா கூட பரவாயில்லை…. பதிலுக்கு நானும் இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன்னு கிளம்பினாலும் கிளம்பிடுவா….”

“எல்லாம் உன்னால தான்டா…. நீ ஒழுங்கா இருந்திருந்தா இந்தப் பிரச்சனையே இல்லை….. உனக்கு ஒழுங்கான இடத்தில கல்யாணம் ஆகி இருக்கும். உன் பொண்டாட்டிட்ட இருக்க முடியாம தான் நான் வெளியவே சுத்திட்டு இருக்கேன்.”

“இந்த மீனாவை நான் ஒரு தடவை பார்த்துதான் இந்த நிலைமை…. இனியும் அவளைப் பார்த்தா… என் நிலைமை இன்னும் மோசமாகிடும். அதனால நீங்க அவளைப் பார்த்ததையே மறந்திடுங்க. அவளை எங்காவது பார்த்தாலும், பார்க்காத மாதிரி வந்துடுங்க.”

அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டபடி வந்த ஆகாஷின் அப்பா “அவளாடா உன்னைத் தேடி வந்தா… நீ தான அவ பின்னாடி சுத்தின… நீ அவளோட ஒழுங்கா குடும்பம் நடத்த மாட்டேன்னு தெரிஞ்சே…. நாங்களும் உனக்கு அந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சோம். உன் ஆசை தீர்ந்ததும் வெளியேவும் துரத்தினோம்.”
“இப்படித் தப்பெல்லாம் நாம செஞ்சிட்டு…. பழியை ஏன் அந்தப் பொண்ணு மேல போடுற….”

“உன்னைக் கல்யாணம் பண்ண பாவத்துக்காக அந்தப் பொண்ணு காலமெல்லாம் உன்னையே நினைச்சிட்டு இருக்க முடியுமா…. அவளுக்கு வேற நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு, சந்தோஷமாதான் இருக்கட்டுமே….”

“ஏற்கனவே நிறையப் பாவம் பண்ணி ஆச்சு. இனியாவது அம்மாவும் பையனும் திருந்திற வழிய பாருங்க.” எனச் சொல்லிவிட்டு அவர் உள்ளே செல்ல… தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பாவமாகப் பார்த்துக்கொண்டனர். வேறு என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது.