“அங்க பாருங்க வயசானவங்க கூட எவ்வளவு ஆர்வமா வராங்க. இதெல்லாம் ஒரு ஸ்வீட் மெமொரீஸ் தான். மிஸ் பண்ணாதீங்க… வாங்க.” தீப்தி மீனாவை பிடித்து இழுக்க….

“ரொம்பப் பண்ணாம வாடா…. நாங்களும் தான் ஆடறோம்.” எனத் தேவ் ஹரியை அழைக்க….

“போங்க… போங்க…” என அனி அவர்களைத் தள்ளி விட… வேறு வழியில்லாமல் இருவரும் சென்றனர்.

நடுவில் பெரிய பலூனாக வைப்பார்கள் என்று பார்த்தால்…. சின்னப் பலூன். அதனால் இருவருக்கும் இடையில் மிகக் குறைந்த இடைவெளியே…. இருவரின் நெற்றிக்கும் நடுவில் பலூன் இருந்தது. ஹரி குனிந்து நின்றிருந்தான்.

இப்படியெல்லாம் கஷ்ட்டப்பட வேண்டுமா என்று இருந்தது மீனாவுக்கு….. பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும். மற்றவர்கள் ஆட…. இவர்கள் இருவரும் அப்படியே இருந்தனர்.

அவர்கள் ஆடாமல் நிற்பதை பார்த்து அனி டென்ஷன் ஆகி “அம்மா, அப்பா ஆடுங்க.” எனச் சத்தமிட்டாள்.
“மீனா…” ஹரி சத்தமாக அழைக்க… அவள் திடுக்கிட்டு போய் அவனைப் பார்க்க… இருவர் நெற்றில் இருந்த பலூன் நழுவிவிட…. ஹரி மீனாவை அருகில் இழுத்து பலூன் கீழே விழாமல் தடுத்து நிறுத்தினான்.

இப்போது இருவரின் மத்திய பகுதியில் பலூன் இருந்தது. நெருக்கமாக நிற்க வேண்டிய நிலை…. மீனா மற்றவர்கள் ஆடுவதை வேடிக்கை பார்த்தாள். எல்லோருமே பலூன் நழுவாமல் இருக்க மெதுவாக அசைந்தபடி இருந்தனர் அவ்வளவு தான்.

ஹரி மீனாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு மெதுவாக நடனமிட… மீனா அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள். அப்போதே நிறையப் பேரின் பலூன் விழுந்திருந்தது. அதனால் நான்கு தம்பதிகள் மட்டும் தான் இருந்தனர். தேவ்வும் தீப்தியும் அழகாக ஆடினார்கள்.

மீனா பலூன் விழாமல் இருப்பதில் தான் கவனமாக இருந்தாளே தவிர….. அவள் ஹரியை பார்கவே இல்லை….

“ஹப்பாடா… நிறையப் பேர் அவுட் ஆகிட்டாங்க. இப்ப அவுட் ஆனா கூடப் பரவாயில்லை….” என நினைத்தபடி மீனா ஹரியை பார்க்க… அவன் அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்தப் பார்வை உடலுக்குள் ஊடுருவி செல்ல…. நொடியில் மீனாவின் உடல் சில்லிட தொடங்கியது. அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் இமையைத் தாழ்த்திக் கொண்டவள், பிறகு மீண்டும் அவனைப் பார்க்க…. அதற்குள் அவன் பார்வை மாறி இருந்தது.

இப்போது மேலும் இரண்டு ஜோடிகள் போட்டியில் இருந்து வெளியேறி இருந்தனர். ஹரி மீனா , தேவ் தீப்தி ஜோடிகள் மட்டும் தான் இருந்தனர்.

பாடல் முடிந்து தேவ் தீப்தி ஜோடிக்கு முதல் பரிசும் இவர்களுக்கு இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டது. அனிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை…. அவள் எல்லோரிடமும் அவங்க என்னோட அம்மா அப்பா எனப் பெருமை பேசிக்கொண்டு இருந்தாள்.

ஆதித்யா கேக் வெட்டி முடித்ததும், தேவ்வும் தீப்தியும் விருந்தினர்களை உணவுண்ண அழைத்துச் சென்றனர். செல்வதற்கு முன் தீப்தி மீனாவிடம் கேக்கை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கச் சொல்லிவிட்டு சென்றாள்.

மீனா கேக்கை துண்டு போட…. ஹரி அவளுடனே இருந்தான். அனி தேவ்வின் இரண்டாவது மகனை தூக்கி வைத்தபடி திரிந்தாள்.

ஹரி பக்கத்தில் இருந்தது ஏனோ மீனாவுக்குப் பதட்டமாக இருந்தது. அவள் கேக்கைக் தீவிரமாக வெட்டுவது போல் குனிந்து கொண்டாள்.

“அப்புறம் டான்ஸ் நல்லா இருந்துச்சா…” ஹரியே பேச்சை ஆரம்பிக்க….

“ஐயோ ! ரொம்பப் பயமா இருந்தது. ஆமாம் நம்ம பலூனும் உடையலை தான…. அப்புறம் எதுக்கு நமக்கு மட்டும் ரெண்டாவது பரிசு தான் குடுத்தாங்க.?….” மீனா கேட்க….

“ம்ம்…. அவங்க ஒழுங்கா ஆடினாங்க. நாம எங்க ஆடினோம். அதனால தான்.” ஹரி புன்னகைக்க… மீனா அசடு வழிந்தாள்.

தேவ் தீப்தியோடு சாப்பிடலாம் என இவர்கள் காத்திருந்த நேரத்தில் மீனாவையும் அனியையும் சேர்த்து நிற்க வைத்து ஹரி புகைப்படங்கள் எடுக்க….

“அப்பா, நாம மூன்னு பேரும் சேர்ந்து எடுத்துக்கலாம்.” அனி சொன்னதும், ஹரி செல்பி எடுத்தான்.

மூன்று பேரும் சேர்ந்து எடுக்கும் முதல் புகைப்படம் நன்றாக வந்திருந்தது. அதனால் திரும்பச் சில படங்கள் எடுத்தனர். எதற்காகவோ இவர்களைத் திரும்பி பார்த்த தீப்தி தேவ்விடம் இவர்களைக் காட்டி மகிழ்ந்தாள்.

மீனா உணவு எடுத்து வந்து மற்றவர்களோடு உட்கார்ந்து பேசியபடி மகளுக்கு அதைக் கொடுக்க… ஹரி சென்று தேவ்வுக்கு உதவி செய்தான். விருந்தினர் சென்றதும் இவர்கள் நால்வரும் சாப்பிட அமர்ந்தனர். பிள்ளைகள் உள்ளறையில் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

மூவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது. ஹரியும், மீனாவும் போட்டியில் கலந்து கொண்டது, சாதாரணமாகப் பேசிக்கொள்வது எல்லாவற்றையும் பார்த்து… இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளி நீங்கி விட்டதாகவே தேவ்வும் தீப்தியும் நினைத்தனர். அதனால் இருவரையும் கிண்டல் செய்து ஓட்டினார்கள்.

ஹரி முன்பு போல் கோபப்படாமல் அமைதியாக இருந்தது வேறு அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. தேவ்வின் இரண்டாவது மகன் மோனிஷை தூக்கிக்கொண்டு வந்த அனி “அம்மா, எனக்கும் விளையாட இது மாதிரி ஒரு தம்பி பாப்பா வேணும்.” என்றதும்,

“ம்கும் ம்கும்…” எனத் தேவ் இரும… தீப்தி வாய்விட்டு சிரிக்க…. மீனா மகள் சொன்னது காதில் விழாதது போல் “அனி உனக்குத் தூக்கம் வரலையா…. வீட்டுக்கு போகலாமா….” எனக் கேட்க…. ஹரியும் உடனே எழுந்து விட்டான்.

அப்போது தான் மீனா ஹரியின் முகத்தைப் பார்த்தாள். இதுவரை புன்னகை முகமாக இருந்தவனின் முகம் இருண்டு இருந்தது. எதுவோ சரியில்லை என அவளுக்குப் புரிந்தது.

அனிக்கு மோனிஷை விட்டு கிளம்பவே மனம் இல்லை…. அதை உணர்ந்த தீப்தி “நாளைக்கு லீவ் தான அவ இங்க இருக்கட்டுமே….” என்றதற்கு, மீனா ஹரியை பார்க்க… அவன் அனியிடம் அவளுக்கு இருக்கச் சம்மதமா எனக் கேட்க… அவள் சரி என்றாள்.

அனிக்கு முன்பே அவர்களை நன்றாக தெரியும். அதோடு இந்த முன்று மாதத்தில் அடிக்கடி இரு குடும்பங்களும் சந்தித்து கொண்டதால்…. அவளுக்கு அவர்களை அன்னியமாக தெரியவில்லை…. அதனால் இருந்து கொள்கிறேன் என்றாள்.

மீனா எப்போது வெளியில் சென்றாலும், அனிக்கு ஒரு சாதாரண உடையைத் தோல்பையில் வைத்திருப்பாள். அது காரில் இருந்ததால்…. அதைச் சென்று எடுத்து வந்து மகளுக்கு உடை மாற்றி விட்டு கிளம்பினாள்.

“சமத்தா இரு…. தொந்தரவு பண்ணாத…. நடு ராத்திரி எழுந்திட்டு அம்மா கிட்ட போகணும் அப்பா கிட்ட போகணும்னு சொல்லக்கூடாது. காலையில அப்பா கூப்பிட வருவாங்க. சரியா…”

“சரி மா… சமத்தா இருக்கேன். பாய் அப்பா…. பாய் மா….”

ஹரியோடு வெளியே வந்த தேவ் “இன்னைக்கு நைட் மஜாவா…. அனி வேற இல்லை…. என்ஜாய்.” அவன் இருக்கும் நிலை அறியாமல்…. நண்பனை வாழ்த்தி வழி அனுப்பினான்.

வரும் போது கார் விட இடம் இல்லாததால்… ஹரி தள்ளி காரை நிறுத்தி இருந்தான்.

“சரி டா… நாங்க போய்க்கிறோம், நீ போ….” எனத் தேவ்வை அனுப்பிவிட்டு ஹரியும் மீனாவும் சென்றனர். மீனா வழக்கம் போலவே காரில் பின்புறம் அமர்ந்து கொண்டாள். ஹரியும் எதுவும் சொல்லவில்லை…. அவன் செல்லும் வழியில் மீனாவோடு பேசக் கூட இல்லை…. எதையோ நினைத்தபடியே வந்தான்.

வீட்டிற்கு வந்ததும் மீனா காரில் இருந்து இறங்கி உள்ளே செல்ல…. ஹரி அவளோடு வரவில்லை…. அவன் வராததைக் கவனித்து மீனா நின்று திரும்பி அவனைப் பார்க்க….

“நான் கொஞ்சம் வெளிய போறேன்.” என்றவன், மீனா உள்ளே சென்று கதவை சாத்தியதும், காரை கிளம்பிக் கொண்டு சென்றே விட்டான்.