பகுதி – 14

ஹரி சென்ற பிறகு கூட மீனா யோசனையுடனே இருந்தாள். அந்தப் புகைப்படம் அவளுக்குத் தெள்ளத் தெளிவாக உண்மையைப் புரிய வைத்து விட்டது. அனிக்காக அவள் ஒன்றும் ஹரியை கவனிக்க வில்லை…. அவளுக்கே அவனைப் பிடித்திருக்கிறது. அதோடு அவனைக் கணவன் என்று தன் மனம் ஏற்றுக் கொண்டதும் விளங்கியது.

அவளுக்கு அதில் ஒன்றும் வருத்தம் எல்லாம் இல்லை…. ஏன் சந்தோஷமாகக் கூட இருந்தது. திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தான் ஆகி இருந்தது. அதற்குள் எப்படி இந்த மாற்றம் என ஒருபுறம் ஆச்சர்யமாக இருந்தாலும், ஹரியை யாருக்கு தான் பிடிக்காது.

கண்ணியமான பார்வை, நடத்தை. அவன் அனி மீது காட்டும் அன்பு. தன் மீது காட்டும் அக்கறை. மனைவி இருக்கும் போதே… அவள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஆண்கள் இருக்கும் உலகத்தில்… இல்லாது போன மனைவியின் மீது இன்னமும் அவன் வைத்திருக்கும் நேசம். என எல்லாமே அவனிடம் பிடித்தது.

அன்று சந்தோஷமாகவே வளைய வந்தாள். மதியம் ஹரிக்குப் பிடித்தது எல்லாம் சமைத்து வைத்தவள், ஹரி வந்த போது எப்போதும் போலவே ஒதுங்கி இருந்து கொண்டாள்.

அவளின் நேசத்தை அவனிடம் காட்ட வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை…. தனக்குப் பிடித்தால்… அவனுக்கும் பிடிக்க வேண்டும் என்பது இல்லையே…. அவன் விருப்பம் போலவே இருந்து கொள்ளட்டும் என நினைத்தாள்.

ஹரியும் அனியும் அந்த வார இறுதியில் சதுரங்க போட்டிக்கு செல்ல கிளம்பினர். ஹரியும் போட்டியில் பங்கெடுப்பதால்…. அனிக்கு துணைக்கு மீனாவும் சென்றாள்.

பெரிய ஹாலில் நுற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஐந்திலிருந்து எழுபது வயது வரை போட்டியாளர்கள் இருந்தனர். சின்னப் பிள்ளைகளுடன் பெரியவர்கள் விளையாடுவது பார்க்க மீனாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

போட்டி நடக்கும் போது பார்வையாளர்கள் வெளியே வந்து விட வேண்டும். அதனால் மீனா வெளியே அவர்களுக்காகக் காத்திருப்பாள்.

முதல் இரண்டு போட்டியில் அனி தோற்றிருக்க ஹரி வென்றிருந்தான். மீனா அவனுக்காக மிகவும் சந்தோஷபட்டாள். அவளின் மகிழ்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. எப்போதுமே தன் உணர்வுகளை மீனா அதிகம் காட்டி இருக்காததால்…. ஹரிக்கு வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது.

அவன் எதுவும் காட்டிக்கொள்ளாமல்…. தோற்றதால் சோகமாக இருந்த மகளைத் தேற்றிக்கொண்டு இருந்தான்.

“அப்பா கூட முதல் தடவை விளையாடும் போது ஜெயிக்கலை…. போகப் போகத்தான் ஜெயித்தேன். அதனால் டென்ஷன் ஆகாம விளையாடு….” என மகளைச் சமாதனம் செய்து அழைத்துச் சென்றான்.
இந்த முறை அனி ஹரி இருவருமே ஜெயித்து விட…. இரட்டிப்புச் சந்தோஷத்தில் இருந்தனர். அனியை கையில் பிடிக்க முடியவில்லை…. அவள் செய்த அலும்பு தாங்காமல்…. “போதும் டி கொஞ்சம் அடங்கு…” என்றாள் மீனா.

அன்றைய போட்டிகளின் முடிவில் ஹரி எல்லாவற்றிலும் வென்றிருக்க…. அனி இரண்டில் வென்றிருந்தாள். ஹரிக்கு பரிசு பணமாகவும், அனிக்கு இள வயது போட்டியாளர் எனப் பதக்கமும் வழங்கப்பட்டது.

அனி வயதுக்கு அவள் இரண்டு போட்டிகளில் வென்றதே பெரிய விஷயம் என்பதால்…. அதைக் கொண்டாட அடுத்த ஞாயிறு முழு நாளும் வெளியே சென்றனர்.

காலை குழந்தைகள் படத்துக்குச் சென்றவர்கள், மதியம் ஒரு ஹோட்டலில் உணவு முடித்தது விட்டு, ஒரு மாலில் சுற்றிக்கொண்டு இருந்தனர்.

மீனா மாலில் ஒரே மாதிரி இருந்த டாப்பை தனக்கும் மகளுக்கும் எடுத்தவள், பணம் கொடுக்கச் செல்ல… ஹரி அவளைக் கொடுக்க விடவில்லை… அவனே கொடுத்தான்.

மறுவாரம் சனிக்கிழமை தேவ்வின் மகன் ஆதித்யாவின் பிறந்தநாளுக்குச் செல்ல கிளம்பி கொண்டு இருந்தனர். மீனா அன்று மாலில் தனக்கும் அனிக்கும் ஒரே மாதிரி வாங்கி இருந்த டாப்பை எடுத்து அணிந்து கொண்டவள், மகளுக்கும் அதை அணிவித்து அழகாக ஒப்பனை செய்து விட்டாள்.

மகளுக்கு லிப்ஸ்டிக் போட்டுவிட்டவள் “நானும் போட்டுக்கட்டுமா அனி…” என்றதும், தன் அம்மாவை ஆச்சர்யமாகப் பார்த்த அனி “போட்டுக்கோங்க மா இன்னும் அழகா இருப்பீங்க.” என்றதும் லிப்ஸ்டிக் கண்மை எல்லாம் மிதமான அளவில் போட்டுக்கொண்டாள்.

மீனா கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொண்டு இருந்த போது “நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி டிரஸ் போட்டிருக்கோம். அப்பாவும் சேம் கலர் போட்டா நல்லா இருக்கும் இல்ல மா….” அனி கேட்க….

மீனாவுக்கும் அதே ஆசை இருந்தது. ஆனால் ஆமாம் இல்லை என்று எல்லாம் சொல்லாமல்….. “அப்பா கிட்ட இந்தக் கலர்ல ஷர்ட் இருக்கு….” என மட்டும் தான் சொன்னாள்.

அது போதாதா அனிக்கு. ஹரியிடம் சென்றவள், அவனை வற்புறுத்தி அந்தச் சட்டையை அணிய வைத்து இருந்தாள்.

மீனா அறையில் இருந்து வெளியே வந்த போது… அங்கே தந்தையும் மகளும் அவளுக்காகக் காத்திருந்தார்கள்.

“அப்பா, அம்மா அழகா இருக்காங்க இல்லப்பா…” என வேறு அனி ஹரியிடம் கேட்டு… அவன் ஆமாம் என்று சொல்லும் வரை அவனை விடவில்லை. மீனாவுக்கு முகம் சிவந்து தர்மசங்கடமாகி விட்டது.

“இன்னைக்கு அம்மாவும் பொண்ணும் தான் அங்க ஹைலைட்…. வாங்க…” எனக் கேலி செய்தபடி அவர்களை ஹரி அழைத்துச் சென்றான்.

இவர்கள் சென்று சேர்ந்த போது…. அங்கே விழா தொடங்கும் நேரம் ஆகிவிட்டது. இவர்கள் காரில் இருந்து இறங்கும் போது… வாயுளுக்கே வந்து தேவ்வும் தீப்தியும் வரவேற்றனர்.

“வாவ்…. மூன்னு பேரும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணி இருக்கீங்க… சேம் பின்ச்.” எனத் தீப்தி மூவரையும் கிள்ளி வைக்க….

“பிசாசு…. ஏன் டி கிள்ளுற….” ஹரி அனியின் கன்னத்தைத் தடவி விட்டபடி முறைக்க….. “ஹீ… ஹீ…. சும்மா…” எனத் தீப்தி சிரித்தாள்.

நிறையப் பேரை அழைத்துச் சிறப்பாகப் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். தீப்தியே நிகழ்ச்சி மேலாண்மை துறையில் இருப்பதால்…. விருந்தினருக்கு நிறைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

முதலில் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் நடத்தப்பட்டது. அனி, தேவ்வின் பிள்ளைகள் மற்றும் வந்திருந்த மற்ற நண்பர்களின் குழந்தைகள் என அனைவரும் ஆர்வமாகப் பங்கேற்றனர்.

அடுத்து பெற்றோரும் குழந்தைகளும் சேர்ந்து பங்கேற்கும் விளையாட்டு நிகழ்ச்சி. அதில் அனியோடு ஹரியும் மீனாவும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு கார்டிலும் ஒவ்வொரு குறிப்பு இருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் படித்துக் காட்டுவார்கள் அதன்படி பிள்ளைகள் செய்ய வேண்டும். கடைசியில் ஒரு இடத்தில் புதையல் இருக்கும் அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

பரிசு பெறா விட்டாலும் இம்மாதிரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதே மனதுக்குச் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் தரும்.

கடைசியாகத் தம்பதிகளுக்கு விளையாட்டு போட்டி வைத்தனர். அனியின் ஆசைக்காக ஹரியும் மீனாவும் சென்றனர். ஒரு பலூனை இருவருக்கும் நடுவில் வைப்பார்கள். பாட்டு முடியும் வரை பலூன் விழாமல் மற்றும் உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமான ஒன்று சும்மா நிற்க கூடாது நடனம் ஆட வேண்டும்.

விளையாட்டைப் பற்றித் தெரிந்ததும், மீனா மெதுவாக அங்கிருந்து நழுவி விட…. ஹரியும் எஸ்கேப். அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த தீப்தி அனியிடம் சென்று “பாரு உங்க அம்மா அப்பா மட்டும் தான் வரலை….” என ஏத்தி விட…. அவள் நேராகத் தன் பெற்றோரிடம் சென்றாள்.

“ஏன் நீங்க போகலை?”

“அம்மாவுக்கு டான்ஸ் ஆட தெரியாது டா….”

“இதுக்கு டான்ஸ் எல்லாம் தெரிய வேண்டாம். அதுவும் ஹரிக்கு தெரியும். ஒருத்தருக்குத் தெரிஞ்சா போதும்…” அனியின் பின்னே வந்த தீப்தி சொல்ல… ஹரி அவளை முறைத்தான்.