மறுநாள் காலை வைஷ்ணவி அவர் அறையில் இருந்து வெளியே வந்து போது வீடு அமைதியாக இருந்தது. இன்னும் யாரும் எழுந்துகொள்ள வில்லைப் போல் என நினைத்தவர், சமையல் அறைக்குச் சென்று சத்தம் வராமல் மெதுவாக வேலைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.
எதோ சத்தம் கேட்க கண்விழித்த ஹரி, தன் அருகில் படுத்திருந்த அனியை காணாது ஒருவேளை மீனாவிடம் இருக்கிறாளோ என நினைத்து மீனாவின் பக்கம் பார்க்க …அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவள் அருகிலும் அனி இல்லை….
வேகமாக எழுந்து அமர்ந்த ஹரி தன் பார்வையைச் சுழல விட…. குளியல் அறைக் கதவை திறக்க அனி போரட்டிக்கொண்டு இருந்தாள்.
அவள் சொன்னதைக் கேட்டதும் ஹரியின் முகத்தில் முறுவல் அரும்ப “உனக்கு எப்பவுமே அர்ஜெண்டா தான் உச்சா வருமா….” என அவளைக் கேலி செய்தபடி கதவை திறந்து விட்டான்.
“நீங்க உள்ள வராதீங்க….” எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்ற அனி ரொம்ப நேரமாக வெளியே வரவில்லை….
ஹரி பாத்ரூம் வெளியேவே நடை பயின்று கொண்டு இருந்தவன், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் “அனி இன்னும் உள்ள என்ன பண்ற?” எனக் குரல் கொடுக்க… அந்தச் சத்தத்தில் மீனா பதறி அடித்து எழுந்தாள்.
“என்ன ஆச்சு?” மீனா எழுந்தபடியே அவனிடம் கேட்க….
“ரொம்ப நேரம் ஆச்சு அனி உள்ள போய்… இன்னும் வரலை…” என்றதும், மீனா சென்று கதவை திறந்து பார்க்க…. அனி அங்கே நீரில் விளையாடிக்கொண்டு இருந்தாள்.
“அனி… என்ன பண்ற?”
“பாத்ரூம் போக வந்தேனா…. போயிட்டு இந்தக் குழாயத் திறந்ததும் என் மேல எல்லாம் தண்ணி விழுந்து நனைஞ்சு போச்சு… அது தான் குளிக்கிறேன்.”
“பொய் சொல்லாத… உனக்குத் தண்ணியைப் பார்த்தா ஆடனும்.” என்றவள், மகளுக்குச் சோப்பு போட்டு குளிக்க வைத்து, அங்கிருந்த துண்டால் அவளைச் சுற்றி வெளியே விட்டுவிட்டு கதவை மூடிக்கொண்டாள்.
ஹரி படுக்கையில் இருந்த போர்வைகளை மடித்து வைத்துக்கொண்டிருந்தவன், அனியை அந்தக் கோலத்தில் பார்த்துவிட்டு “ஹே வாலு…. என்கிட்டே பாத்ரூம் போறேன்னு தான சொல்லிட்டு போன….” என்றான்.
“ஹி… ஹி…. சும்மா தண்ணியைப் பார்த்ததும் ஆசையா இருந்துச்சு….” என்றவள் “குளிருதுப்பா…” என்று ஹரியிடம் சென்று ஒண்ட….
அவளைத் தூக்கி கட்டிலில் விட்டவன், வேறு ஒரு துண்டை எடுத்து அவளுக்குத் தலை உடம்பு எல்லாம் துடைத்து விட…. குளியல் அறையில் இருந்து வெளியே வந்த மீனா, ப்ரஷில் பேஸ்ட் வைத்துக் கொண்டு வந்தவள் “பல்லு விலக்காம குளிச்சாச்சு…. இந்தா பல்லு விலக்கு….” என ப்ரஷை மகளிடம் கொடுத்து விட்டு தான் படுத்திருந்த போர்வையை எடுத்து மடித்து வைக்க ஆரம்பித்தாள்.
அனி பல் விலக்குவதாகப் பெயர்ப் பண்ணிக்கொண்டு இருப்பதைப் பார்த்து சிரித்த ஹரி, அவளைத் தூக்கி சென்று வாஷ் பேசின் எதிரே சேரில் நிற்க வைத்தவன், அவளிடம் இருந்த ப்ரஷை வாங்கி அவனே தேய்த்து விட்டு, வாயை கழுவி அழைத்து வந்தான்.
மீனா அவளின் உடைகளை எடுத்துக் கட்டிலில் போட…. உள்ளாடையைக் கையில் எடுத்த அனி “அப்பா, கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பிக்கோங்க….” என்றதும், ஹரி வேண்டுமென்றே திரும்பாமல் இருக்க….
“ப்ளீஸ் ப்பா….” அனி கொஞ்சி கேட்க…. முகத்தில் அரும்பிய முறுவலுடன் அவன் திரும்பிக்கொள்ள…. அனி வேகமாக உடையை அணிந்துவிட்டு “இப்ப பாருங்க…” என்றாள்.
அவள் அவசரத்தில் அந்த உள்ளாடையைக் கூடச் சரியாக அணியவில்லை…. மீனா அதைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொள்ள…. ஹரி அதைச் சரி செய்தவன் மற்ற ஆடைகளை அவனே எடுத்து போட்டு விட்டான்.
ஒரு காலை வேளை இவ்வளவு அழகாக இருக்கக் கூடும் என்று இருவருமே அன்று தான் உணர்ந்தனர். அதை இழக்க மனமில்லாமல் தான் அங்கேயே இருந்தனர்.
இரவு ஹரி எங்கே தூங்கினான் என்று கூட வைஷ்ணவிக்குத் தெரியாது. ஒருவேளை மாடியில் இருக்கிறானோ என்று நினைத்துக்கொண்டு இருந்தார். ஆனால் கீழே அறையில் இருந்து அனி, ஹரி மற்றும் மீனாவின் பேச்சுக் குரல்கள் கேட்க…. அவருக்குத் தன் மகனும் அவர்களுடன் ஒரே அறையில் இருப்பது ஆச்சரியாமாகவும் அதே சமயத்தில் சந்தோஷமாகவும் இருந்தது.
அதைக் காணும் ஆவலில் அவரும் அவர்கள் இருந்த அறைக்குச் சென்றார். கதவு பூட்டாமல் வெறுமனேதான் இருந்தது. கதவை தட்டியவர் “நான் உள்ளே வரலாமா…” என்றதும்,
“வாங்க மா….. எதுக்குக் கேட்டுட்டு இருக்கீங்க?” ஹரி சொன்னதும், புன்னகையுடன் உள்ளே நுழைந்த வைஷ்ணவி அனியை பார்த்து விட்டு “அதுக்குள்ள குளிச்சாச்சா…” என ஆச்சர்யப்பட….
“அதை ஏன் மா கேட்குறீங்க? காலையில இருந்து அவ பண்ற அட்டகாசம் இருக்கே…..” மீனா சொல்ல….
ஹீ… ஹீ…. என அனி வைஷ்ணவியைப் பார்த்து அசடு வழிய….
“அவ தான் குட் கேர்ள்…. காலையிலேயே சமத்தா எழுந்து குளிச்சு ரெடி ஆகி இருக்கா…. நீங்க ரெண்டு பேரும் தான் லேட்.” என்றதும் மீனா சென்று தன் செல்லை எடுத்து நேரத்தை பார்த்தவள் “ஐயோ ! மணி எட்டா….” என அதிர்ச்சி ஆக….
ஹரியும் சென்று ஜன்னல் திரைச்சீலையை விலக்கியவன்
“ரூம்ல வெளிச்சம் இல்லாததுனால பொழுது விடிஞ்சதே தெரியலை…..” என்றான்.
“சரி சீக்கிரம் கிளம்பி வாங்க… நீ வாடா அனி… நான் உனக்குப் பால் தரேன்.” என்றபடி அனியை அழைத்துக்கொண்டு வைஷ்ணவி செல்ல…. அதுவரையில் ஒரே அறையில் சகஜமாக இருந்த ஹரிக்கும் மீனாவுக்கும் இப்போது தனியே இருப்பது சங்கடமாக இருந்தது.
உடைகள் இருந்த தன் பையை எடுத்துக்கொண்டு ஹரி பக்கத்து அறைக்குச் செல்ல…. அவன் சென்றதும் மீனா அறையின் கதவை மூடி விட்டுக் குளிக்கச் சென்றாள்.
காலை வேளைக்கு வைஷ்ணவி பூரிக்கு மாவு பிசைந்து உருளைக்கிழங்கு மசாலா செய்து வைத்திருந்தார். மீனா வந்ததும் அவள் பூரி போட்டு எடுக்க…. ஹரி வந்ததும் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டனர்.
மாடியை பெயிண்ட் அடிக்க ஆட்கள் வந்தனர். ஹரி அவர்களை அழைத்துச் சென்று சொல்ல வேண்டியவற்றைச் சொல்லிவிட்டு வந்தான்.
ஹரி அனியோடு வெளியே சென்றவன், திரும்பி வரும் போது மகளின் அறைக்குப் பெரிய கட்டிலோடு வந்தான். இரண்டு பேர் படுக்கும் அளவிற்குப் பெரிய கட்டில். அதிலேயே பொம்மைகள் வைத்துக்கொள்ளலாம்.
மீனா தன்னுடைய உடைகளையும் அனிதாவின் உடைகளையும் அந்த அறையில் இருந்த அலமாரியில் அடுக்கி வைத்தாள். மீனாவிடமோ அனியிடமோ போதிய உடைகள் இல்லை என்பதைக் கவனித்த வைஷ்ணவி, இன்றே ஷாப்பிங் செல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார்.