“தெரியலை…. அதை ஹரிகிட்ட தான் கேட்கணும். நீயே அவன் வந்ததும் கேளு…” என்றதும், மீனாவின் முகம் போன போக்கை பார்த்து வைஷ்ணவிக்கு மேலும் சிரிப்பு வந்தது. அவர் சிரித்தபடி சமையல் அறைக்குச் செல்ல…. மீனாவும் அவருடன் சென்றாள்.
அன்று இரவே வெங்கட் ஊட்டிக்குக் கிளம்புவதாக இருந்தது. அதனால் அவருக்கு வைஷ்ணவி உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது…. ஹரியும் அனியும் வந்தனர். வைஷ்ணவி அவர்களையும் சாப்பிட சொன்னார்.
மீனா உள்ளே சமையல் அறையில் சப்பாத்தி சுட்டுக்கொண்டு இருந்தாள். அவள் மொத்தமாகச் சப்பாத்தி சுட்டு எடுத்து வந்ததும் வைஷ்ணவி எல்லோருக்கும் பரிமாற… மீனா மகளை உணவு மேஜையில் உட்கார வைத்து அவளுக்கு ஊட்டி விட்டாள்.
“ஹரி, மீனா எங்களோட ஊட்டிக்கு வர ரெடியா இருக்கா…. நீயும் உன் ஜெஸ் கிளாசை இனி அங்க வந்து எடு….” வைஷ்ணவி கேலியாகச் சொல்ல….
“ம்ம்… வந்துட்டா போச்சு…. ஆனா இங்க இருக்கிற ஷோரூம் யார் பார்கிறது?” ஹரி அனியை பார்த்து கேட்க….. அவன் சொன்னதைக் கேட்ட அவள் சிரிக்க…. மீனா மகளைப் புரியாமல் பார்த்தாள்.
“அம்மா, அப்பாவுக்குப் பைக் கடை இருக்குமா…. இவ்வளவு பெரிசு….” எனக் கை இரண்டையும் விரித்துக் காட்டியவள் “அங்க நிறையப் பைக் இருக்கு….. நான் எல்லாத்திலேயும் ஏறினேனே….அப்பா இப்ப என்னை அங்க தான் கூடிட்டு போனாங்க.” அனி பெருமையாகச் சொல்ல….
அப்ப எதுக்கு ஜெஸ் கிளாஸ் எடுத்தான்? என்று மீனாவுக்கு ஒன்றும் புரியவில்லை…. ஆனால் எதையும் வாய்விட்டுக் கேட்காமல் அமைதியாக இருந்தாள்.
இரவு உணவு முடிந்ததும், வெங்கட் ஊருக்கு கிளம்ப…. ஹரி அவரை வழி அனுப்ப பேருந்து நிலையம் செல்ல…. அனி தானும் அவர்களோடு தொத்திக்கொண்டாள். அவள் உறங்கினாலும் உறங்கி விடுவாள் என்று ஹரி காரில் தான் சென்றான்.
அவர்கள் சென்றதும் உள்ளே வந்த மீனாவிடம் வைஷ்ணவி பேசிக்கொண்டு இருந்தார்.
“ஹரி ஸ்கூல் படிக்கும் போதே ஜெஸ் நல்லா விளையாடுவான். நான் தான் படிப்பு கெட்டுடுமேன்னு ரொம்ப விளையாட விட மாட்டேன். அப்படியும் அவன் ஸ்டேட் பிளேயர், நல்ல ரேங்க்ல இருந்தான். காலேஜ்ல மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சான்.”
“அப்பவே பைக் பைத்தியம் கொஞ்ச நாள் வெளிய வேலை பார்த்திட்டு அப்புறம் அவனே சொந்தமா இந்தப் பைக் ஷோரூம் ஆரம்பிச்சான். சின்னக் கடையா ஆரம்பிச்சது இன்னைக்குப் பெரிய கடையா வளர்ந்து நிற்குது.”
“அந்த ஷோ ரூம்லயே சர்வீஸ் சென்டர், ஸ்பேர் பார்ட்ஸ் செக்க்ஷன் எல்லாமே இருக்கு…. நல்ல வியாபாரம். எல்லாமே நல்லா தான் போயிட்டு இருந்தது. திடிர்னு பிருந்தா இறந்ததும், அவனுக்கு இருந்த தனிமையைப் போகிக்கத்தான் திரும்ப ஜெஸ் விளையாட ஆரம்பிச்சான். அவனோட அத்தை சொன்னதுனால சாயங்காலம் மட்டும் அங்க வந்து கிளாஸ் எடுத்தான்.”
“அவன் அங்க கிளாஸ் எடுக்க வந்ததும் நல்லது தான். அதனால தான் நீயும் அனியும் கிடைச்சீங்க.”
“இருந்தாலும் அத்தை, உங்க வசதி எல்லாம் பார்க்கும் போது…. எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு…. எல்லாம் இந்த அனியால தான். இல்லைன்னா நீங்க உங்க வசதிக்கு ஏத்த மாதிரி பார்த்திருப்பீங்க இல்லையா….”
“பார்த்திருப்போம் தான் இல்லைன்னு சொல்லலை… ஆனா ஹரி அதுக்குத் தயாரா இல்லையே… அப்புறம் ஏன் அதை நினைச்சு பீல் பண்ற?”
“ஒரு விஷயம் புரிஞ்சிக்கோ மீனா… ஹரிக்கு பிடிக்காத விஷயம் எதையும் வற்புறுத்தி செய்ய வைக்க முடியாது. அதனால அவன் எதோ கட்டாயத்தால இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான்னு நினைக்காத….
அவர் பேசிக்கொண்டிருந்த போதே ஹரிணி அவரைச் செல்லில் அழைத்தாள்.
“போய்டீங்களா ஹரிணி…”
“வந்துட்டோம் மா…. அவர் வந்ததும் கடைக்குப் போய்டார். இனி எல்லாக் கணக்கு வழக்கும் பார்த்துட்டு நைட் லேட்டாத்தான் வருவார்.”
“ஓ… சரி, உன் அத்தை மாமா ஒன்னும் சொல்லலையே…”
“மாமா இன்னும் வரலை… அத்தை முகத்தைத் தூக்கி வச்சிட்டு தான் இருக்காங்க.”
“சரி விடு ரெண்டு நாள்ல சரி ஆகிடும். நீ எதுவும் கோபமா பேசி வைக்காத…..” என்றவர் போன்னை வைத்து விட்டு, மீனாவிடம் ஹரிணியின் குடும்பக் கதைகளைச் சொல்லிக்கொண்டு இருந்தார்.
ஹரி வந்ததும் வைஷ்ணவி சென்று அங்கிருந்த இன்னொரு அறையில் படுத்து விட்டார்.
அவர் மீனாவையோ ஹரியையோ எங்கே உறங்க போகிறார்கள் என்றோ… இல்லை ஒரே அறையில் உறங்குங்கள் என்றோ சொல்லவில்லை…. நான் கல்யாணம் பண்ணி வச்சிட்டேன் என்னோட பொறுப்புத் தீர்ந்தது. இனி உங்க பாடு என்பது போல் இருந்தார்.
மீனா மகளின் உடை மாற்றி, அவளைப் பாத்ரூம் அழைத்துச் சென்று விட்டு வந்து படுக்கச் சொல்ல… அவள் தன்னோடு ஹரியையும் இழுத்துக்கொண்டு வந்தாள்.
“எனக்குக் கதை சொல்லுங்கப்பா….நான் அதைக் கேட்டுட்டே தூங்குவேன்.”
ஹரியும் அவள் உறங்கியதும் மாடிக்கு சென்று விடுவோம் என நினைத்துக் கட்டிலில் அவள் அருகில் படுத்தான். மீனா அவர்கள் வருவதற்கு முன்பே நைட்டி மாற்றி இருந்தாள். அவள் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அனி மதியம் நன்றாக உறங்கி எழுந்ததால் அவ்வளவு எளிதாக உறங்குவதாக இல்லை…. அவள் ஹரியை போட்டு துளைத்து எடுத்துக்கொண்டு இருந்தாள்.
கதை சொல்லி ஓய்ந்து போன ஹரி அனிதாவிற்கு முன்பே உறங்கி விட…. இவ்வளவு நேரம் என்ன பண்றாங்க? என எட்டி பார்த்த மீனா அங்கே ஹரி உறங்கிவிட்டதைப் பார்த்தவள்,
ஐயோ ! இப்ப நான் எங்க தூங்கிறது? அத்தையும் அந்த ரூம் கதவை மூடிட்டாங்க. இப்ப என்ன பண்றது? என யோசித்தவள், மதியம் போல் அந்த அறையிலேயே தரையில் போர்வை விரித்துப் படுத்துக்கொண்டாள்.
அவள் படுத்ததும் எழுந்த அனி “அம்மா, அஸ்வத் வீட்ல அவன் அவங்க அப்பா அம்மா கூடத் தான படுப்பான். நீங்களும் கட்டிலுக்கு வாங்க.” என அழைக்க….
வேகமாக எழுந்த மீனா “இப்ப நான் எந்திரிச்சு வந்தேன், உனக்கு உதை விழும் பேசாம படு….” என்றாள்.
“எனக்கு உங்க கூடத் தூங்கணும்.”
“அப்ப கீழ வா….”
“எனக்கு அப்பா கூடவும் தூங்கணும்.” அனி சிணுங்க…..
“இத்தனை நாள் என் கூடத் தான தூங்கின…. அதனால இன்னைக்கு உங்க அப்பாவோட தூங்கு. நான் இங்க இருந்து உன்னைப் பார்த்திட்டு இருப்பேனாம். எனக்கு அங்க படுத்தா தூக்கம் வராது. பேசாம படு அவரையும் எழுப்பி விட்டுடாத.” மீனா சொல்ல…. அனியும் அமைதியாகப் படுத்துக்கொண்டாள்.
மீனா வெளியில் கோபமாக இருந்தாலும் உள்ளுக்குள் அமைதியாக உணர்ந்தாள். இதுவே அவள் வீட்டில் என்றால்…. இந்நேரம் பத்து தடவையாவது கதவு தாழ்ப்பாள்கள் போட்டிருக்கிறதா என்று பார்த்திருப்பாள்.
படுத்தாலும் அமைதியாக உறங்க முடியாது. இன்று ஏனோ மனதில் பரபரப்பு இல்லை…. எப்போதும் மனதை அரிக்கும் அனியை பற்றிய கவலை இல்லை…. ஹரி அவளை நன்றாகப் பார்த்துக்கொள்வான் என்ற நிம்மதியினாலோ என்னவோ ரொம்பவும் பாதுகாப்பாக உணர்ந்தாள். அதனால் படுத்ததும் உறங்கிவிட்டாள்.
ஹரிக்கு அதிகாலையிலேயே முழிப்பு தட்டி விட்டது. முதலில் எங்கு இருக்கிறோம் என்றே அவனுக்குப் புரியவில்லை…. பிறகு தான் அருகில் இருந்த அனியை பார்த்தான். அதற்குப் பிறகு தான் மீனாவின் நினைவே வந்தது.
அவள் எங்கே என்பது போல் பார்த்தவன், அவள் அதே அறையில் தரையில் படுத்திருப்பதைப் பார்த்துத் திரும்பக் கண் மூடி உறங்க ஆரம்பித்தான். அவன் இப்படிப் படுத்ததும் உறங்கி பல மாதங்கள் ஆகிகிறது. என்னவோ இன்றைக்கு மனம் அமைதியாக இருந்தது.