ஹரியின் மடியில் இருந்த அனிக்கு மீனா உணவை அள்ளி கொடுக்க…. அனியும் சாப்பிட்டாள்.

“சீக்கிரம் சாப்பிடு அப்பாவுக்குப் பசிக்கும்.” என்றதும், திரும்பி ஹரியை ஒரு பார்வை பார்த்தவள், அதன்பிறகு உணவையும் வேகமாக உண்டு முடித்தாள்.

மீனா மகளைத் தூக்கி சென்று வாய் கழுவி குடிக்க நீர் கொடுத்து. உள்ளே அறையில் சென்று படுக்க வைத்து விட்டு வந்த போது…. தேவ் அவன் குடும்பத்துடன் கிளம்பிக்கொண்டு இருந்தான்.

“மீனா வீட்டுக்கு வரணும். ஹரி அழைச்சிட்டு வா….” என்றபடி விடைபெற்று சென்றனர்.

அவர்கள் சென்றதும் மீனா தன் மீதி உணவை தொடர்ந்தாள். ஹரியும் வைஷ்ணவியும் அவளோடு உட்கார்ந்து சாப்பிட்டனர்.

“ஏன் அண்ணி, அனி சாப்பிடாம விட மாட்டீங்க போலிருக்கே?” ஹரிணி கேட்க….

“எல்லோரும் உன்னை மாதிரி இருப்பாங்களா…” வைஷ்ணவி மகளை வார….

“அப்படி இல்லை…. அவளுக்கு ரெண்டு வயசு ஆனதுல இருந்து நான் வேலைக்குப் போறேன். அதனால மதிய சாப்பாடு சரியாவே கொடுக்க முடியாது. வீட்ல இருக்கும் போதாவது நல்லா சாப்பிட வச்சிடனும்னு நினைப்பேன்.”

மீனா சொன்னதும் அங்கே கனத்த மௌனம் நிலவியது. பெற்ற குழந்தைக்கு வயிற்றுக்கு உணவு கொடுக்க முடியாமல்… வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பது அவளுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும் என்று எல்லோருக்குமே நன்றாகப் புரிந்தது.

மீனா சாப்பிட்டு முடித்துப் பாத்திரம் எல்லாம் கழுவி வைத்து சமையல் அறையை ஒதுங்க வைக்க…. வைஷ்ணவி அவளைத் தடுத்தார்.

“நீ வா மீனா…. அப்புறம் செஞ்சிக்கலாம்.”

“இருக்கட்டும் அத்தை, காலையில இருந்து நீங்க தான் வேலை பார்கறீங்க.” என்ற மீனா வேலையை முடித்து விட்டே வெளியே வந்தாள்.

மதிய உணவு முடித்த சிறிது நேரத்திற்கெல்லாம் விக்ரமும் ஹரிணியும் கிளம்ப….

“அதுக்குள்ள போகணுமா…” மீனா கேட்க….

“திடிர்னு கிளம்பி வந்துட்டோம். அடுத்தத் தடவை வரும் போது நிறைய நாள் இருக்கேன். இதுக்கே வீட்டுக்குப் போனா பேச்சு வாங்கணும்.” ஹரிணி சொல்ல…

“அவங்களோடது கூட்டுக் குடும்பம். அதோட பெரிய பிசினஸ் வேற…. எல்லோருக்குமே வேலை சரியா இருக்கும். இதுல திடிர்னு இவங்க வந்துட்டா.. அங்க இருக்கிறவங்களுக்கு வேலை அதிகம் இருக்கும் இல்லையா…..” வைஷ்ணவி தன் சம்பந்தி வீட்டை விட்டுக்கொடுக்காமல் பேச…. ஹரிணி தன் தாயை பார்த்து ஒழுங்கு காட்டி விட்டு சென்றாள்.

“எப்ப எங்க வீட்டுக்கு வரீங்க?” விக்ரம் மீனாவை பார்த்து கேட்க…. மீனாவின் பார்வை சட்டென்று ஹரியிடம் திரும்ப….

“கொஞ்ச நாள் கழிச்சு வரோம்.” என்றான் அவன்.

“கண்டிப்பா வரணும். அம்மா அப்பா மீனாவையும் அனியையும் பார்க்கனும்னு நினைப்பாங்க.” என்ற விக்ரம் அனைவரிடமும் விடைபெற்றுக் காரில் ஏறினான்.

ஹரி அவர்களுக்காக டிரைவர் ஏற்பாடு செய்திருந்தான். போனதும் விக்ரமிற்கு வேலை இருக்கும், அதோடு விடியற்காலையில் எழுந்தது வேறு களைப்பாக இருக்கும் என்று நினைத்தான்.

அவர்கள் சென்றதும் உள்ளே வந்த மீனாவிடம் “நீயும் போய் அனியோட படு….” வைஷ்ணவி சொல்ல… மீனாவும் சரி என்று உள்ளே சென்றாள்.

“எப்ப டா அந்த ரூமுக்குக் கட்டில் வரும்?” வைஷ்ணவி ஹரியிடம் கேட்க….

“அது இனிமே தான் வாங்கணும். நாளைக்குப் போய் வாங்கிறேன்.” என்ற ஹரி மாடிக்கு செல்ல…. தன் கணவர் படுத்திருந்த அறைக்குள் வைஷ்ணவி சென்றார்.

வெங்கட் அமைதியாக இருந்தார். அதைப் பார்த்த வைஷ்ணவி “என் மேல கோபமா….” என்றதும்,

“கோபம் இருந்தது ஆனா இப்போ இல்லை…. எனக்கே மீனாவையும் அனியையும் பார்த்தா வேற யாரோ மாதிரி தோணலை….ஹரி வேற யாரோடவும் இப்படி ஒட்டவும் மாட்டான். இது தான் சரி…”

“இப்ப மட்டும் உங்க பையன் ரொம்ப ஒட்டுதலா இருக்கானா….” வைஷ்ணவி கேலியாகக் கேட்க….

“இல்லை தான். ஆனா… சீக்கிரமே சரி ஆகிடுவான். ரெண்டு பேரும் காலையில கல்யாணத்துக்கு முன்னாடி இருந்ததுக்கு இப்ப பரவாயில்லை…. நீ சட்டுபுட்டுனு ஊருக்கு கிளம்புற வழிய பாரு…. அவங்க ரெண்டு பேர் மட்டும் தனியா இருந்தா…. சீக்கிரம் எல்லாம் சரி ஆகிடும்.”

தன் கணவர் சொல்வது வைஷ்ணவிக்கும் சரி என்றே பட்டது. ஆனால் மீனவுக்கும் இந்த வீடு பழக வேண்டுமே… அதனால் ஒரு நான்கு நாட்கள் இருப்போம், அதோடு எல்லோருமே உடனே விட்டுவிட்டு சென்றால்…. நன்றாக இருக்காது என நினைத்தார்.

இருந்த அலுப்பில் எல்லோருமே மாலை வரை நன்றாக உறங்கினர்.
முதலில் அனி தான் எழுந்தாள். எழுந்ததும் அவள் மீனாவை எழுப்ப…. அவள் எழுந்து தலைவாரி முகம் கழுவியவள், மகளையும் தயார் செய்து அழைத்துக் கொண்டு வெளியே வர… அப்போது தான் வைஷ்ணவியும் வந்தார்.

“ஆறு மணி ஆனதே தெரியலை…. நீ விளக்கேத்து மீனா… நான் காபி போடுறேன்.” என வைஷ்ணவி சமையல் அறைக்குச் செல்ல…. மீனா அவர் சொன்னதைச் செய்தாள்.

அனிதா ஹரியை தேட… அவன் மாடியில் இருக்கிறான் என்றதும், மாடிக்கு சென்றவள், உறங்கி கொண்டிருந்தவனின் அருகே சென்று தானும் படுத்துக்கொள்ள…. அரைகுறை உறக்கத்தில் இருந்த ஹரி அனியின் ஸ்பரிசத்தில் விழித்தவன், அவளைத் தூக்கி தன் மீது போட்டுக்கொண்டான்.

“அனி மா… அனி குட்டி…. அனி செல்லம்… இந்த வீடு உனக்குப் பிடிச்சிருக்கா டா…”

“ம்ம்… நல்லா இருக்குப்பா…. ஆனா இங்க மட்டும் ஏன் இப்படி இருக்கு?…” என அந்த அறையைச் சுற்றி பார்வையைச் சுழற்றியபடி அனி கேட்க….

“இது இவ்வளவு நாள் பூட்டி இருந்தது. இனி தான் ஆள் வச்சு கிளீன் பண்ணனும். கிளீன் பண்ணதும் இதை நாம விளையாட்டு ரூம் ஆக்கிடலாம். நிறைய டாய்ஸ் வாங்கி வைக்கலாம்.”

ஹரி சொன்னதற்கு அனி சந்தோஷமாகத் தலையாட்ட இருவரும் எழுந்து கீழே வந்தனர்.

மாலை காபி ஆனதும் ஹரி அனியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான். வெங்கட் ஹாலில் அமர்ந்து டிவி பார்க்க…. வைஷ்ணவியும் மீனாவும் டைனிங் டேபிளில் அமர்ந்து ஒருவர் சப்பாத்திக்கு மாவு பிசையவும் மற்றவர் காய் நறுக்கியபடியும் பேசிக்கொண்டு இருந்தனர்.

“இவ்வளவு பெரிய வீட்டை விட்டுட்டு உங்களுக்கு ஊட்டிக்கு போக எப்படி அத்தை மனசு வந்தது?”

“உங்க மாமா ஒரு பிரைவேட் கம்பெனியில பெரிய பதிவியில இருந்தாங்க. அவருக்கு ஓய்வு கிடைச்சதும், என்ன பண்றதுன்னு யோசிச்சோம்? அதுக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே ஹரியையும் பிருந்தாவையும் தனிக்குடித்தனம் வச்சாச்சு.”

“அதுவரை ஓடிட்டே இருந்துட்டு…. திடிர்னு ஒரே இடத்தில உட்கார்ந்து இருக்க உங்க மாமாவால முடியலை…. அப்போ தான் ஊட்டியில ஒரு ஹொலிடே ஹோம் விலைக்கு வந்தது. ஏற்கனவே எங்களுக்கு அங்க ஒரு இடம் இருந்தது. அதை வித்து அதோட மேற்கொண்டு பணம் போட்டு… அந்த ஹொலிடே ஹோமை வாங்கிப் பக்கத்திலேயே எங்களுக்கு ஒரு வீடு கட்டிகிட்டோம்.”

“இப்ப அங்க ரொம்ப ஹாப்பியா எங்க ரெண்டாவது இன்னிங்க்ஸ் தொடக்கி இருக்கோம். ஒவ்வொரு தடவையும் புதுப் புது மனுஷங்களைப் பார்த்துப் பழகிறது அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.”

“அங்க நம்ம வீடு பக்கத்திலேயே கடை ஹோட்டல் எல்லாம் இருக்கு… அதனால அங்க வந்து தங்கிறவங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கிறதுனால…. சில பேர் தொடர்ந்து ஒவ்வொரு சீசனுக்கும் நம்ம இடத்துக்கே வருவாங்க.”

“எங்களுக்கும் நல்லா பொழுது போகும். அதோட நல்ல வருமானமும் கூட…. நாம சும்மா இல்லை…. நமக்கும் செய்ய எதோ வேலை இருக்கு அப்படிங்கிறதே எங்களை உற்சாகமா வச்சிருக்கு.”

“நீங்க சொல்றது கேட்கிறப்பவே நல்லா இருக்கு அத்தை…. எனக்கும் அங்க வரணும் போல இருக்கு…. நாங்களும் அங்கையே வந்துட்டா நாம சேர்ந்து இருக்கலாம் இல்லை…” மீனா சொல்ல….

வைஷ்ணவி அவளைப் பார்த்து புன்னகைத்தவர் “நீங்களும் அங்க வந்துட்டா நல்லா தான் இருக்கும். ஆனா ஹரியோட வேலை….” என்றதும்,

“அவங்க ஜெஸ் தான சொல்லித்தறாங்க, அதை அங்க சொல்லித்தர முடியாதா…..” மீனா வெகுளியாகக் கேட்க….

அதைக் கேட்டு சிரித்த வைஷ்ணவி தன் கணவரை ஜாடையாகப் பார்க்க…. அவரும் சிரிப்பை அடக்கிக்கொண்டு இருப்பது தெரிந்தது.