அனிதாவின் அப்பா

பகுதி – 1

பெங்களூர் தேவனஹள்ளியில் உள்ள சதுரங்க பயிற்சி மையத்திற்குள் நுழைந்த ஹரிஹரனை பார்த்ததும் அங்கிருந்த மழழை பட்டாளம் ஆளுக்கொரு குரல் கொடுத்தது.

“ஹாய் சார்”

 “good evening sir”

 “sir… see this saran… he is taking my bishop sir….”

“no sir he is telling lies sir….”

“ok…ok no fighting. Let’s start the class….. Go and sit in your places.” என்றபடி அந்த அறையின் சுவரில் பெரிதாகத் தொங்கி கொண்டிருந்த சதுரங்க பலகையயின் அருகில் சென்ற ஹரிஹரன் “good evening சார்…” என்ற மழலையின் குரல் கேட்டு திரும்ப…. அங்கே மலர் சென்டிற்குக் கைகால் முளைத்தது போல்…. ஒரு குட்டி தேவதை நின்று கொண்டிருந்தது.

பிங்க் நிற கவுன் அணிந்து தலையில் இருபக்க குடுமியோடு பார்க்க புசுபுசுவென்று முயல் குட்டி போலவே இருந்தாள் அந்த சின்னப் பெண்.

அவளைப் பார்த்ததும் புன்னகைத்தவன் “ஹாய் அனிதா come… come….” என்றவன், உள்ளே வந்த பூச்செண்டை குனிந்து கைகளில் அள்ளிக் கொண்டான்.

“கிட்ஸ், ஷி இஸ் அனிதா…. நியூ ஸ்டுடென்ட்.” என்றவன் “நம்ம ஜெஸ் கிளாஸ்ல இருக்கிறதுலேயே குட்டி பொண்ணு இவங்க தான். ஜஸ்ட் சிக்ஸ் இயர்ஸ் ஓல்ட்.” என்றதும், அனிதா வெட்கத்துடன் புன்னகைக்க…. மற்ற மாணவர்கள் கை தட்டி உற்சாகக் குரல் எழுப்பினர்.

அவளை அங்கிருந்த இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, திரும்பச் சென்று…. சதுரங்க காய்களின் செயல்பாட்டைப் பற்றி விளக்க ஆரம்பித்தவன், மாணவர்களுக்குப் புரிந்ததா என்று கேள்விகள் கேட்டு சரி பார்த்துக்கொண்டான்.

சிறிது நேரம் சென்று மாணவர்களை இரண்டு இரண்டு பேராகப் பிரித்து விளையாட விட்டுவிட்டு அனிதாவிடம் வந்தவன், அவள் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

“அனிதா எந்தக் கிளாஸ் படிக்றீங்க?”

“ப்ரஸ்ட் ஸ்டாண்டர்ட் A செக்ஷன்.”

“நல்லா படிப்பீங்களா….”

“ம்ம்….”

“குட்…”

மேஜையில் இருந்த சதுரங்க பலகையில் வரிசையாக அடுக்கபட்டிருந்த காய்களைக் காட்டி ஒவ்வொன்றின் பெயர்களையும் கேட்க…. அனிதா சரியாகச் சொல்லிக்கொண்டே வந்தாள்.

“ஓ…. சூப்பர் அனிதாவுக்கு எல்லாமே தெரியுதே….. யார் சொல்லிக் கொடுத்தா….”

“தாத்தா….”

“அப்படியா….” என்றவன் “ஹார்ஸ் எப்படி மூவ் பண்ணும் தெரியுமா….” என்றதும், அவள் சரியாக வைத்துக்காட்ட…. அவளுடன் சிறிது நேரம் விளையாடி அவளுக்கு எதுவரை தெரிகிறது என்று பார்த்துக்கொண்டான்.

வகுப்பு முடியும் நேரம் ஆன போது….. உள்ளே இருந்த மாணவர்கள் கிளம்ப…. அடுத்த வகுப்பிற்கான மாணவர்கள் உள்ளே நுழைந்தனர்.

அனிதாவை அழைத்துச் செல்ல அவளின் தாத்தா வந்திருக்க….அவரை பார்த்து புன்னகைத்த ஹரிஹரன் “நல்லா விளையாட தெரியுதே…. நீங்க தான் சொல்லி கொடுத்தீங்களா….” என்றதும்,

“நான் ரிடையர் ஆகிட்டேன் சார் …. பொழுது போகணுமே… நானும் என் ப்ரண்ட் கிருஷ்ணாவும் விளையாடும் போது… இவ என் மடியில உட்கார்ந்து பார்த்திட்டே இருப்பா…”

“பக்கத்து வீட்டு பையன் இங்க கிளாஸ்க்கு வர ஆரம்பிச்சதுல இருந்து என்னையும் கிளாஸ்ல போடுன்னு ஒரே தொந்தரவு…. அது தான் சேர்த்து விட்டோம்.” என்றவர் தொடர்ந்து,
“இந்த ஸ்கூல்ல தான் படிக்கிறா….” என்றார்.

“இந்த ஸ்கூல் நடத்திறது என் அத்தை தான். அவங்க கேட்டுகிட்டதுனால தான் இங்க கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன்.” என்ற ஹரிஹரன் இன்னொரு மாணவனின் தந்தை அவனுக்காகக் காத்திருப்பதைப் பார்த்து, சிறு தலையசைப்புடன் விடைபெற்று அவரிடம் செல்ல…

“பாய் சார்….” என்று கையசைத்து விட்டு தன் தாத்தாவுடன் சென்றாள் அனிதா. அவள் வீடு அங்கிருந்து இரண்டு வீடுகள் தள்ளித்தான் இருக்கிறது.

வகுப்பு முடிந்ததும் அதே கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் இருந்த தன் அத்தையின் வீட்டிற்கு ஹரிஹரன் சென்றான்.

“வாடா வளர்ந்தவனே….. இன்னைக்கு எப்படிப் போச்சு கிளாஸ்…” என்றபடி, அவனுக்கு ஹாலில் இருந்த மின் விசிறியை போட்டு விட்டவர், அவனுக்கு எதிரில் அமர்ந்தார்.

“குழந்தைகளோட இருக்கிறது போர் அடிக்குமா என்ன?” சொல்லிவிட்டு ஹரிஹரன் அவன் அத்தையைப் பார்த்து புன்னகைக்க….

“உண்மை தான். அதனால தானே நானே ஸ்கூல் வச்சு நடத்துறேன். அந்தப் பிஞ்சு முகங்களைப் பார்க்கும் போது…. எல்லாக் கஷ்ட்டமும் மறந்து உற்சாகம் தனானாவே வந்திடும்.” என்றவர், ஹாலில் மாட்டியிருந்த தன் கணவரின் படத்தை வருத்தத்துடன் பார்த்துக்கொண்டார்.

இரவு உணவை இருவரும் சேர்ந்து அருந்த….. சிறிது நேரம் சென்று ஹரிஹரன் அவரிடம் விடைபெற்று அவன் வீட்டிற்குக் கிளம்பினான். இங்குக் கிளாஸ் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து…. இரவு உணவு அத்தையுடன் தான். அவருக்கும் வேறு யாரும் இல்லாததால்…. அவர் மனம் வருந்துமே என்ற காரணத்தால்…. அவருடனே இரவு உணவு முடித்துக்கொள்வான்.

வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அனிதாவுக்குக் கிளாஸ் என்பதால் அடுத்த நாள் அவள் வரவில்லை… அதற்கு அடுத்த நாள் சனிக்கிழமை எனபதால்…. ஹரிஹரன் நான்கு மணிக்கே வந்து பெரிய மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தான்.

ஹரிஹரனின் வண்டி நிறைப்பதை அவள் வீட்டில் இருந்தே பார்த்ததால்…. தன் தாத்தாவை தொந்தரவு செய்து அன்று சீக்கிரமே வகுப்பிற்கு வந்த அனிதா…. அங்கே ஹரி ஒரு பெரிய மாணவனுடன் அமர்ந்து விளையாடுவதைப் பார்த்தவள், நேராகச் சென்று அவன் மடியில் ஏறி அமர்ந்துகொண்டாள்.

விளையாட்டு மும்முரத்தில் முதலில் ஹரிஹரன் அவளைக் கவனிக்கவேயில்லை… சிறிது நேரம் சென்று தான், மெத்தென்று பூவை போல் தன் மடியில் அமர்ந்திருந்தவளை பார்த்தவனுக்கு உடலில் ஒரு சிலிர்ப்பு.

அவனையும் அறியாமல் அவன் கைகள் மிருதுவாக அவளை அணைக்க…. அவள் தலையின் மீது இதழ் பதித்தவனுக்கு அப்படி ஒரு சுகம். அதே நேரத்தில் இப்படி ஒரு சுகத்திற்காக ஏங்கிய இன்னொரு ஜீவனின் நினைவு வர…. மனதை கட்டுபடுத்துவதற்கு மிகவும் சிரமபட்டான்.

அன்று வகுப்பை எப்படியோ எடுத்து முடித்தவன், இதற்கு மேலும் அவன் மனம் அலைபாய்வதைக் கட்டுபடுத்த முடியும் என்று தோன்றாததால்….. அத்தைக்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு அங்கிருந்த காவல்காரனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

அன்றிலிருந்து ஹரிஹரனுக்கும் அனிதாவுக்கும் இடையே…. ஒரு பந்தமோ சொந்தமோ எதோ ஒன்று உருவாகியது. கிளாஸ் இல்லாத நாட்களிலும் அனிதா அவனைத் தேடி வர ஆரம்பித்தாள்.

அவள் வீடும் அருகிலேயே இருந்ததால்…. ஹரிஹரன் அங்கே வந்த நொடி அவளும் வந்துவிடுவாள். அவனைத் தொந்தரவு செய்யாமல் அவள் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து விளையாடி கொண்டிருப்பாள். ஹரிஹரன் வகுப்பு எடுத்து முடித்து நாற்காலியில் அமர்ந்த அடுத்த நொடி அவன் மடியில் இருப்பாள்.

ஹரிஹரன் இத்தனைக்கும் ரொம்பக் கலகலப்பாகப் பேசும் சுபாவம் கிடையாது. அளவாகத்தான் பேசுவான். மாணவர்களிடம் ரொம்பவும் இளக்கம் காட்டினால் அவர்கள் விளையாட்டுச் சேட்டையில் இரங்கி விடுவார்கள் என்பதால்… சிறிது கண்டிப்புடன் தான் இருப்பான். அப்படியிருந்தும் அவனிடத்தில் என்ன பிடித்ததோ….. அனிதா அவனுடன் ஒட்டிக்கொண்டாள்.

எல்லோருக்கும் அவள் மிகவும் இளையவள் என்பதால்… மற்ற மாணவர்கள் ஒன்றும் நினைத்துக்கொள்வது இல்லை…. ஆனால் அனிதாவுக்குத் தனிப்பட்ட சலுகை காட்டுவதில் அவனுக்கு விருப்பம் இல்லையென்றாலும்…. அந்தப் பிஞ்சு ஸ்பரிசத்தை இழக்கவும் மனமில்லை….

ஒரு காலத்தில் ஏங்கி தவித்த சுகம் இன்று தானாகக் கிடைக்கும் போது… ஏன் இழக்க வேண்டும்? அவள் கிளாஸ்க்கு வரும் வரையில் தானே…. என்று தன்னையே தேற்றிக்கொள்வான்.

மாத தொடக்கத்தில் வந்த அனிதாவின் தாத்தா அவனிடம் சென்ற மாதத்திற்கான கட்டணத்தைக் கொடுக்க… அதை ஹரிஹரன் வாங்க மறுத்தான்.

“சின்னக் குழந்தை சார்….. அவளுக்கு என்ன பீஸ் வாங்கிறது? இன்னும் ஒரு வருஷம் போகட்டும் பார்கலாம்.” என்றான்.

அனிதாவின் தாத்தா தயங்க…. “நான் பணத்துக்காக இதைச் செய்யலை…. எனக்கு வேற சொந்த தொழில் இருக்கு…. அதனால நீங்க எதுவும் நினைக்க வேண்டாம்.” என்று சொல்லி அவரைத் திரும்ப அனுப்பினான்.

உண்மையில் நான் தான் அனிதாவுக்குப் பீஸ் கொடுக்கணும். மனதில் சிறு அமைதியும், நிம்மதியும் வந்திருப்பது அவளால் அல்லவா… என நினைத்துக்கொண்டான்.

இரவு எழு மணிக்கு வீட்டிற்குள் நுழைந்த விஷ்வம் “அம்மா மீனா, நீ கேட்ட காய்கறிகள் எல்லாம் இதுல இருக்கு….” என்றதும்,

“இதோ வரேன்ப்பா…” என்று சமையல் அறையில் இருந்து குரல் வந்தது.

கைகளைத் துடைத்தபடி வெளியே வந்த மீனா நைட்டி அணிந்து ஒரு கொண்டை போட்டிருந்தாள். மெலிவான உடல் என்பதால்… அணிந்திருந்த நைட்டி பார்க்க பெரிதாக இருந்தது.

“என்னம்மா டிரஸ் இது? பெரிசா இருந்தா கொஞ்சம் தச்சாவது போடக் கூடாதா….”

“போங்கப்பா… இப்ப என்னை யாரு பார்க்க போறா?….” மீனாவின் குரலில் இருந்த வெறுமையைப் பார்த்து பெற்றவருக்கு மனம் கொதித்தது.

வாழ்க்கையை அலுத்துப்போனது போல் இது என்ன பேச்சு? என்று நினைத்தவர் “உனக்கு இருபத்தியேழு வயசுதான் ஆகுது…. உன் வயசுக்கு ஏத்த மாதிரி இரு மா…..” என்றார் மனம் தாளாமல்…. அவரை ஒரு அலட்சிய பார்வையால் அடக்கியவள், காய்கறிகளை ஆராய….

“இந்தா மீதி பணம்.” என்று அவர் கொடுத்ததை வாங்கிப்பார்த்த மீனா “என்னப்பா இவ்வளவு இருக்கு… அனியோட ஜெஸ் க்ளாஸ் பீஸ் கட்டலையா….” என்றாள்.

“அந்தச் சார் வாங்க மாட்டேனுட்டார் ம்மா….சின்ன குழந்தை தானே வேண்டாம்னுட்டார்.” என்று அவர் சொல்லிகொண்டிருக்கும் போதே உள்ளே வந்த அனிதா “அம்மா இன்னைக்கு சார் எனக்குப் புதுசா நிறையச் சொல்லிகொடுத்தார் மா….நானும் சாரும் கேம் விளையாடிணோமே…. நான் தான் ஜெயித்தேன்.” என்றாள் கண்கள் மின்ன…

மகள் ஜெயித்தாள் என்றது உண்மை இல்லை என்று தெரிந்தாலும் “அப்படியா…. என் செல்லம் அறிவாளி ஆச்சே…” என்று மகளைத் தூக்கி வைத்து மீனா கொஞ்சினாள்.

ஹரிஹரனை பத்தி பேச்சென்றால்… அனிதா நிறுத்தாமல் பேசுவாள் கேட்கத்தான் மீனாவுக்குப் பொறுமை இருக்காது. இன்றும் அது போல் அவள் ஆரம்பிக்க “அம்மாவுக்கு வேலை இருக்கு டா… அப்புறம்.” என்று மகளை டிவி பார்க்க அனுப்பிவிட்டு… தந்தையிடம் திரும்பினாள்.

“என்னப்பா இவ வரவர ரொம்ப அந்தச் சார் பத்தியே பேசுறா… யாரோ என்னவோ…. கிளாஸ் நேரம் மட்டும் போயிட்டு வரட்டும் மத்த நேரம் அனுப்ப வேண்டாம்.” என்றாள்.

“அவ வயசுக்கு என்னால அவளை ஒரு இடத்தில பிடிச்சு வைக்க முடியலை…. உன் அண்ணிக்கு இவ ரொம்ப நேரம் அஸ்வத்தோட விளையாடினாலும் பிடிக்கலை…. இப்ப அந்தத் தம்பி வந்ததும் அங்கேயே தான் விளையாடிட்டு இருக்கா… பார்த்தா நல்லவரா தான்மா தெரியிறார்…”

“இந்தக் காலத்தில எல்லாம் யாரையும் அப்படி நம்பி பெண் குழந்தைகளை விட முடியாதுப்பா… நாளைக்குச் சனிக்கிழமை தானே நான் சீக்கிரம் ஆபீஸ்ல இருந்து வந்துடுவேன். நானே நேர்ல போய் அவரைப் பார்த்திட்டு அப்படியே பீஸ் கொடுத்திட்டு வரேன்.”

மகள் சொல்வதும் உண்மை தான். இந்தக் காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை…. சின்னப் பிஞ்சு என்று நினைக்கலாமல் எத்தனை பேர் கழுகள் போலக் கொத்திவிடுகின்றனர். தினமும் தான் பேபரில் பார்க்கிறோமே என்று நினைத்தவர் “சரிம்மா கதவை தாழ் போட்டுக்கோ…. நான் கிளம்புறேன்.” என்று சென்றுவிட்டார்.

நமக்கு மட்டும் பார்த்ததும் யார் நல்லவர்? யார் கெட்டவர்ன்னு தெரிஞ்சிடுமா…. அப்படிக் கண்டுபிடிக்கத் தெரியாமத்தானே வாழ்க்கையைக் கோட்டை விட்டுட்டு நிற்கிறோம் என்று நினைத்தவள், மேலும் அதைப் பற்றி யோசிக்க விரும்பாமல் மகளைத் தேடிச் சென்றாள்.

“அனி குட்டி இங்க வாங்க…” என்றவள், மகளைத் தூக்கி மடியில் வைத்துக்கொள்ள….

“சார் கூட இப்படித்தாம்மா என்னை மடியில வச்சு தான் விளையாட சொல்லித்தருவார்.” என அனிதா திரும்ப ஹரிஹரனை பற்றி ஆரம்பிக்க… நாளை எப்படியும் சென்று அவனைப் பார்த்து விட வேண்டும் என்று நினைத்தாள்.

“அம்மா அனி குட்டிக்குக் குட் டச், பேட் டச் எல்லாம் சொல்லி குடுத்தேன் இல்ல…. யாரும் உன்னைப் பேட் டச் பண்ணலையே….” அவள் மெல்ல விசாரிக்க…

“இல்லையே இங்க… இங்க…. இங்க எல்லாம் தொட்டாதானே என்று ஒவ்வொரு இடமாகத் தொட்டு காட்டியவள், இங்க எல்லாம் யாரும் தொடலையே…” என்றதும் தான் மீனாவுக்கு நிம்மதியாக இருந்தது.

மறுநாள் சொன்னது போலவே மகளின் வகுப்பு நேரத்திற்குச் சென்றாள். சற்றுத் தொலைவில் இருந்து வரும் பெற்றோர்கள் பிள்ளைகளை உள்ளே அனுப்பிவிட்டு வகுப்பு முடியும் வரை வெளியே காத்திருந்து அழைத்துச் செல்வார்கள். அவர்களோடு சென்று அமர்ந்து மீனா மெதுவாக ஜன்னல் வழியாகப் பார்க்க….

அனிதா ஹரிஹரனின் மடியில் அமர்ந்து விளையாடியக்கொண்டு இருந்தாள். அவனின் ஒரு கை அவளை மென்மையாகச் சுற்றி இருந்தது. அவன் விளையாட்டில் தீவிரமாக இருக்க….மீனாவின் பார்வை ஹரிஹரனை ஆராய்ந்தது.

சராசரி உயரத்துடன் சிவந்த நிறத்தில் சுருளான கேசம், நெற்றியின் இருபக்கமும் மட்டும் சற்று ஏறி இருந்தது. வயது முப்பதுகளில் இருக்கும் என்று நினைத்தவளுக்குக் கண்டிப்பாகத் திருமணமாகி மனைவி குழந்தைகள் என்று இருப்பதால் தான் அனிதாவிடம் மிகவும் பாசமாக நடந்து கொள்கிறான் போல என்று நினைத்தாள்.

அவள் பார்த்துக்கொண்டிருந்த போதே எதேட்சையாக ஹரிஹரனும் அவளைப் பார்த்தான். யார் இப்படிப் பார்க்கிறது? என்று யோசித்தவன், அடுத்த நொடியே விளையாட்டில் கவனத்தைத் திருப்பினான்.

ஹரிஹரனின் கண்களில் கனிவு இருந்ததே தவிரக் கல்மிஷம் இல்லை. சரி இவனை நினைத்து இனி பயப்பட வேண்டியது இல்லை என்று நினைத்தவள், அருகில் இருந்தவரிடம் பேச ஆரம்பித்தாள்.

வகுப்பு முடிந்தும் அனிதா வெளியே வரவில்லை… அவள் தான் ஹரிஹரன் கிளம்பும் வரை அங்கிருந்து நகர மாட்டாளே…. மீனா அவளைத் தேடிக்கொண்டு உள்ளே சென்றாள்.

ஹரிஹரன் அவளை இன்று தான் முதல் முறை பார்க்கிறான். யாரென்று தெரியாமல் அவன் புருவத்தை உயர்த்திக் கேள்வியாகப் பார்க்க…. அப்போது அனிதா அம்மா என்று ஓடி வந்தாள்.

அனிதாவுடைய தாய் என்றதும் ஹரிஹரன் அவளை மிகவும் மரியாதையான பார்வை பார்த்து லேசாகப் புன்னகைக்க…. மீனா அவனைக் கண்டுகொள்ளாமல் அனிதாவை பார்த்து “போகலாமா…” என்றாள்.

ஹரிஹரனுடன் இன்னும் சிறிது நேரம் இருக்க ஆசை இருந்தாலும் தாய் அழைக்கும் போது மறுக்காமல் அவளுடன் அனிதாவும் கிளம்ப… வாசல் வரை சென்ற மீனா… ஒரு நொடி நின்று பின் திரும்பி வந்தவள், தன் கைப்பையைத் திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்து ஹரிஹரனிடம் நீட்ட…. அவள் எதற்குக் கொடுக்கிறாள் என்று புரிந்த போதும்,

“நான் தான் சொன்னேனே…. அனிதாவுக்குப் பீஸ் வேண்டாம்.” அவன் மறுக்க…. “உலகத்தில சும்மா கிடைக்கிறதுன்னு ஒன்னும் இல்லை…. அதோட பீஸ் குடுக்க முடியாத நிலையில நாங்க இல்லை.” என்றதும் மேலும் பேசாமல் வாங்கிகொண்டான்.

அனிதாவின் தாத்தாவிடம் பேசியது போல் அவனால் மீனாவிடம் பேச முடியவில்லை… ஏனென்றால் அவள் பார்வையில் அவ்வளவு கடினம் இருந்தது.

மீனாவுடன் அவர்கள் வீட்டு வாசல் வரை சென்ற அனிதா “நான் சார் கூட இருக்கப் போறேன்.” என்று திரும்ப ஹரிஹரனிடமே ஓட அவனும் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

ஓ… மகள் யாருடன் பழகுகிறாள் என்று பார்க்கத்தான் வந்திருப்பாங்களோ எனச் சரியாகக் கணித்தவன், ஏன் நான் என்ன அவ்வளவு மோசமானவனா? என்று மனதில் சிறு கோபமும் எழுந்தது.

ஹரிஹரன் இதுவரை அனிதாவின் குடும்பத்தைப் பற்றி எதுவும் அவளிடம் கேட்டது இல்லை…. அவள் இரண்டு வீடுகள் தள்ளி மாடியில் இருக்கிறாள் என்று தெரியும். அவள் தாத்தாவை தெரியும், பிறகு அவள் இதே பள்ளியில் படிக்கிறாள் என்று தெரியுமே தவிர வேறு ஒன்றும் அவளைப் பற்றித் தெரியாது.

வகுப்பு நேரம் என்பதால்….அவனுக்கு அவளோடு பேச முடியாது…. அவளும் அவன் அருகாமையை விரும்புவாளே தவிர…. பேசி எல்லாம் தொந்தரவு செய்ய மாட்டாள்.

அடுத்த வகுப்பும் முடிந்து கிளம்பும் போது “அனி குட்டியோட அம்மாவை இன்னைக்குப் பார்த்தாச்சு…. அப்பாவை எப்ப பார்க்கிறது?” ஹரிஹரன் கேட்க…..

“அப்பாவா…. எனக்கு அப்பாவே இல்லையே…..” என்று ஒரு குண்டை தூக்கி அவன் தலையில் போட்டது தெரியாமல் “பாய் சார்…” என்றபடி துள்ளி குதித்து அவள் வீட்டுக்கு அனிதா ஓடிவிட…. ஹரிஹரன் அதே இடத்தில் உறைந்து போய் நின்றான்.