Advertisement

அத்தியாயம் 9 1
கூடத்தில் சோஃபாவைச் சாய்த்து படுக்கையாக நீட்டி, அதில் படுத்திருந்த அறிவழகியின், மனம் அவளையே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. ‘அவன் சாதாரணமாகத்தான் தாழ் குறித்துக் கேட்டான், ஏன் நான் வசமிழந்தேன்? ஏன் கோபம் வந்தது?’,  ‘யார் என்ன பேசினாலும், எது வரினும், உணர்ச்சி வசப்படக் கூடாது என்ற என் தீர்மானம் எங்கே போயிற்று?’, என்ற யோசனையுடன் கண்மூடி அவளது கசப்பான கடந்த காலம் சென்றாள்.
“என்னாடியம்மா இது?, கமலம்மா பையன் உங்க வீட்லேர்ந்து வெளிய வர்றான்?”, அன்று அதிர்ச்சியாகத்தான் முதலில் பேச ஆரம்பித்தார் அந்த வட்டிப் பெண்மணி.
மணியம்மைக்கும் அது அதிர்ச்சிதானே?, பேச வார்த்தையின்றி அதிர்ந்து அவர் நிற்க,
“அடக் கிரகமே? இதுங்க பத்து பைசா கடன் வாங்காம குடித்தனம் பண்ணுதுங்களே-ன்னு நினச்சேன், இப்படித்தான் மினுக்கறாளுங்க போல.” என்ற அப்பெண்மணியின் அகங்காரமான கீச்சுக் குரலில்தான் விழித்தாள், அறிவழகி. வீட்டின் கதவு திறந்திருக்க, அம்மா எங்கே என்று பார்வையில் துழாவி, தலைமுடியை சீர்செய்தபடி வெளியே வந்தாள். வாசலில் அம்மா நின்றிருக்க, அந்த பெண்மணி இவர்களை பார்த்துத்தான் கத்திக் கொண்டிருந்தார். கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினரும் வெளியே வந்து கொண்டிருந்தனர்.
வாசலுக்கு வந்த அறிவழகி, வெளியே சத்தம் போடும் அவரைப் பார்த்து , முதலில் ஒன்றும் புரியாமல் விழித்தவள், அவளது இடப்புறம் திரும்ப அங்கே அன்பரசன் கண்கள் அரை மயக்கத்துடன் சொருக, தன்னுணர்வு இல்லாமல் நின்றிருந்தான். ‘இவன் ஏன் இந்த நேரத்தில் இப்படி இங்கே நிற்கிறான்?’, என்று சற்று ஒதுங்கி நிற்க, அதே நேரம் அப் பெண்மணியின் பேச்சின் அர்த்தம் மின்னலென மூளையைத் தாக்கியது.
பயப்பந்து வயிற்றில் உருளத் துவங்க, வாசலில் கிடந்த ஒரு ஜோடி ஆண் செருப்பும், அம்மாவின் காலில் இன்னமும் அவிழ்க்காது இருந்த செருப்பும், நடந்த நிகழ்வை அவளுக்கு உணர்த்த, விதிர்த்து அம்மாவைப் பார்த்தாள். அவர் இவளைத் தப்பானவளாக எண்ணிவிடக் கூடாது என்ற பரிதவிப்பு அந்தப் பார்வையில் இருந்தது.
மகளின் முகத்தை, அவள் கண்களில் இருந்த அதிர்ச்சியை மணியம்மை மிகச்சரியாகப் படித்தார். ‘ஐயோ, வகையாக மாட்டிக் கொண்டு விட்டோமோ?’, என்று துக்கிரித்தனம் செய்பவன் திகைப்பதற்கும், ‘ஐயோ தன்னை தவறாக நினைப்பார்களோ’, என்ற அப்பாவியின் பார்வைக்கும் வித்தியாசங்கள் அதிகம். தவிர, தன் மகளை அறியாதவரா அவர்?
“இது  மானமுள்ளவங்க இருக்கிற இடம். அரைவயிறு காவயிறுன்னு இருந்தாலும் தப்பு வழி போகாத இருக்கிறவங்க இந்த சனம், இங்க இந்த மாதிரி ஆளுங்க இருக்கக்கூடாது, என்ன நான் சொல்லுறது?, இப்படி இருந்தாக்கா உங்க மரியாதையும் மண்ணாப் போயிடும்”, இன்னமும் அடிக்குரலில் அப்பெண்மணி கூச்சல் போட்டுக் கொண்டுதானிருந்தார்.  இப்போது தெருவில் அதிக தலைகள் தென்பட்டன.
அங்கு அன்பரசன் நின்றிருந்த அரை மயக்க நிலையும் கூட அறிவழகிக்கு பாதகமாகப் போயிற்று. “பாருங்க, குடிச்சிட்டு நிதானத்துல இல்லாத புள்ளைய, வீட்டுக்கு கூட்டி போயி கூத்தடிச்சிருக்கா, இவ படிக்கப் போறாளோ…இல்ல…”, இப்போது அப் பெண்மணியுடன் வம்பு பேசுவதற்கு ஆட்கள் இருந்தனர்.
திக்ப்ரமை பிடித்தாற்போல் நின்றிருந்த மகளைப் பார்த்து, “அறிவு, நீ உள்ள போ”, என்ற மணியம்மை அறிவழகியை வீட்டிற்குள் நெட்டித் தள்ளியவர், திரும்பி அந்த வட்டி பெண்மணியை தீப்பார்வை பார்த்து,
“இந்தாம்மா, அதிகமா பேசாதீங்க, இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்”,என்று  பேச..
“எதும்மா தேவையில்லாத விஷயம், இங்க நான் அடிக்கடி வர்றவ, இதோ இவங்க  வீட்ல வட்டி வாங்க வர்றேன், தோ அந்த முக்கு வீட்டுக்கு வருவேன், நாடார் கடைக்கு வட்டி வாங்க, சாமா வாங்கனு வந்து போயிட்டு இருப்பேன், என்னைக் கேக்கக்கூடாதுன்னு  யாரயாவது சொல்லச் சொல்லு பாப்போம்?”, “பொண்ணை ஒழுக்கமா வளக்க துப்பில்ல, இதுல என்னை கேள்வி கேக்கக்கூடாதுனு சொல்றியா நீயி?”
“யாரு கண்டா, ஒருவேளை நீதான் மவளுக்கு சொல்லிக் கொடுத்தியோ என்னவோ?, வெக்கங்கெட்டதுங்க, நீயாச்சும் வூட்டுவேலைக்குத்தான் போறீயா….”, அதற்கு மேல் அந்த பெண்மணி பேசியது எதுவும் மணியம்மை காதுகளில் விழவில்லை, சுற்றி பார்த்தார், நேற்றுவரை சொந்தம் போல் பழகிய நன்கு தெரிந்த முகங்களில் கூட, அவநம்பிக்கை கீற்று தெரிய, மனம் வெறுத்துப் போனார்.
பொதுவாக மக்கள் இரண்டே ரகம்தான், ஒன்று சொல்புத்தி, மற்றொன்று சுயபுத்தி. அவ்வாறான சொல்புத்தியுடையவர்கள், ‘அப்படித்தானோ?’, என்ற சந்தேகத்துடன் மணியம்மையைப் பார்க்க, சுயபுத்தி உடைய வெகு சிலர், வட்டிப் பெண்மணியை எதிர்த்து பேசுவதற்கு தயங்கினர். ஒருவேளை, நாளை அவர் தயவு தேவைப்பட்டால், என்ற ஒரு தொலைநோக்கு (?) சிந்தனையோ அல்லது  ‘நமக்கெதற்கு வீண் வம்பு’, என்ற காரணமோ, அவர்கள் இந்த விவகாரத்திலிருந்து நகர்ந்து நின்றார்கள்.
தவிரவும் அங்கிருக்கும் பெரும்பான்மையான பலர் அப்பெண்மணியிடம் கடன் வாங்கியவர்கள்,  பூனைகள் போலடங்கி நடப்பார்’, என்ற பாரதியின் வார்த்தைகளை நிரூபிக்கும் முதுகெலும்பில்லாத கூட்டத்தினர்.
யாரேனும் ஒருவராவது ஆதரவாக குரல் கொடுப்பர் என்று நினைத்திருந்த மணியம்மை, கூட்டம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, சிறிது நேரம் அப்பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். போகப் போக அவரின் வார்த்தைகள் மிகவும் தரம் தாழ, அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல், “இந்தாம்மா, நீ என்ன வேணா பேசிக்க.., எனக்கு வேலை இருக்கு”, என்று பேச்சைக் கத்தரித்து அவரது வீட்டிற்குள் சென்று கதவை அறைந்து மூடினார்.
அவர் கதவை மூடிய வேகத்தில் தாழ்ப்பாளில் தொடுத்துக் கொண்டு நின்ற நாதங்கி ‘ணங்’, என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது. என்ன அது என கூர்ந்து பார்த்ததும், அம்மா மகள் இருவருக்கும், அன்பரசன் எப்படி அவர்கள் வீட்டினுள்ளே வந்தான் என்ற விஷயம் தெளிவாக புரிந்தது. அதை கண்டதும் அறிவழகிக்கு கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. அதுவே சொல்லாமல் சொல்லியது, அந்த பையன் வந்த சுவடே மகளுக்கு தெரியாது என்பதும், உபரியாக தவறுதலாக எதுவும் நடக்கவில்லை என்பதும்.
அந்நேரத்தில், இவர்கள் வீட்டு மாடியிலிருந்து கீழே வந்த அன்பரசனின் நண்பர்கள், அவனை கூட்டிக்கொண்டு வெளியேறினர். ஒருவனைத் தவிர மற்ற யாரும் நிதானத்தில் இல்லை. அவர்கள் மெயின் கேட் வரும் போது கூட்டம் நகர்ந்து வழி விட்டது. அன்பரசனின் பெரியப்பா மகன் கண்ணன், நண்பனின் அலைபேசி அழைப்புக்கிணங்கி,  வந்து அவனை வீட்டிற்குக்  கூட்டிப்போனான்.
கீழே முழங்காலில் தலை புதைத்து அழுது கொண்டிருந்த அறிவழகியை கோபமாக பார்த்து, “இப்ப என்ன ஆச்சுன்னு ஒப்பாரி வச்சிட்டு இருக்க நீயி? அவள்லாம் ஒரு மனுஷி, அது பேசறதெல்லாம் ஒரு பேச்சுன்னு?, போ போயி மூஞ்சிக் கழுவி பொட்டு வை”, என்று மிரட்டி, காலை வேலைகளில் மகள் மனத்தைத் திருப்பினார், மணியம்மை.
அடுப்பை பற்றவைத்து, அறிவழகிக்கு காஃபி கலந்து கொடுத்துவிட்டு தானும் குடித்தார், சற்று தெம்பு வந்தது போலிருந்தது. அறிவழகி அம்மாவின் முகத்தை முகத்தை பார்த்து, ஏதோ சொல்ல வர, “அறிவு இங்க வா”, என்று கூப்பிட்ட மணியம்மை, “நான் டீச்சர் வீட்டுக்கு போனும், அவங்க ரெண்டாவது பொண்ணுக்கு சீமந்தம், விசேஷத்துக்கு பலகாரம் செய்ய வர்றதா ஏற்கனவே சொல்லிட்டேன்,  போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன், அது வரைக்கும் அத இத யோசனை பண்ணாம அமைதியா இரு, இல்லையா கேத்தி வீட்டுக்கு போ, புரிஞ்சுதா?”, கண்டிப்பான குரலில் கூறினாலும் அதில் அக்கறை வெகுவாக இருந்தது.
“ம்ம்”, என்ற மகளின் முகம் இன்னமும் தெளிவடையாமல் இருந்ததை பார்த்து, சில நொடி நின்று பெருமூச்சுவிட்டு, மிருதுவாக, “நாம சரியா இருக்கோம்னு நமக்கு தெரிஞ்சா போதும்மா, ஊருக்கு நிரூபிக்கணும்னு அவசியமில்லை, போ, போயி இட்லிக்கு ஊத்தி வை, சட்னிக்கு தேங்கா இருக்கா பாரு, இல்லன்னா புளி வெங்காய சட்னி அரைச்சிடு”, ஆறுதலாக பேசினார்.
அதில் அம்மா தன் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்பது தெரிந்து  அறிவழகியின் மனஇறுக்கம் அகன்று நிம்மதியடைந்தாள். அவர் சொன்ன வேலைகளை மேற்கொள்ள அவள் நகர்ந்ததும், ‘ஊர் பேச்சுக்கு இப்படி பயப்படறாளே? இன்னும் என்னென்ன கேக்கவேண்டி இருக்கோ தெரிலையே?, அம்மா, எம்பொண்ண காப்பாத்துமா’, மணியம்மை மனதுக்குள் இறைவனிடம் புலம்பினார்.
ஒத்துக்கொண்ட வேலை நிமித்தம் அவர் கிளம்ப ஆயத்தமாக, குளிக்கச் சென்றார். பின் உடை மாற்றி, சமையலறையின் ஒரு பக்கத்தில் இருந்த காமாட்சியம்மனின் படத்தைப் பார்த்து வணங்கி, தினம் சொல்லும் “சுந்தரி சௌந்தரி ..”, என்ற காமாட்சி விருத்ததினை அனிச்சையாய் சொல்லியபடி விளக்கேற்றினார். கண்கள் அவரையுமறியாது கலங்க மெதுவாக அறிவழகிக்கு தெரியாமல் துக்கத்தை விழுங்கி விழுங்கி, விருத்தத்தை முடித்தார்.
“வாம்மா, சாப்பிடலாம்”, அதிசயமாக டிபன் சாப்பிட மகளை அழைத்தார். எப்போதும் காலை உணவை தாமதமாக எடுப்பது அவர் வழக்கம், அறிவழகி அதற்காக அவரை கடிந்ததும் உண்டு. இன்று இவர் சாப்பிட அழைக்காவிட்டால், அவளும் சாப்பிட மாட்டாள் என்பது தெரிந்து, சாப்பிட்டு விட்டு செல்ல தீர்மானித்தார். மகளும் மறுபேச்சின்றி சாப்பிட அமர, இருவரும் மௌனமாக உண்டு முடித்தனர்.
“கேத்தி வீட்டுக்கு வந்துடுச்சா பாரு, அங்கே போயி எஸ்தர் கூட இரு, நான் கிளம்பறேன், சரியா?”
“ம்ம்”, என்று அறிவழகி சொன்னதும், கிளம்பி விட்டார். தெருவில் நடக்கையில் இரண்டு மூன்று பேர் எட்டிப் பார்ப்பது தெரிந்தது. எதையும் கவனிக்காமல், எப்போதும் போல் நான்கு தெரு தள்ளியிருந்த அவர் வேலை செய்யும் வீட்டுக்கு சென்றார். அங்கே, விழாவிற்கான ஏற்பாடுகள், அலங்காரங்கள் செய்யப்பட்டு கூட்டம் அதகளப்பட, அமர்க்களமாக இருந்தது.
பக்க வாட்டு வாசலில் நுழைந்து நேராக பின்கட்டிற்கு சென்றார். அங்கே ஏற்கனவே நான்கு பேர் சமையலில் முனைப்பாக இருந்தனர். இவரை பார்த்ததும், “வாங்கமா,சீமந்தம் முடிச்சு போறவங்களுக்கு தாம்பூலத்தோட மைசூர் பாகும், காராபூந்தியும் ரெடி பண்ணிடுங்க போதும், ஒரு வாய் காப்பி குடிக்கறீங்களா?”
” ம்ம். வேணாம்மா, சாப்பிட்டுத்தான் வந்தேன், லதா எங்க வரலையா? “
“பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வர்றேன்னு சொல்லிருக்கா, இன்னும் அரைமணில வந்துருவா, அவ வந்துதான் பாக்கெட் போடணும், டிஃபனுக்கு வெளிலேர்ந்து ஆர்டர் பண்ணிட்டாங்க. சமையல் கிட்டத்தட்ட முடிஞ்சது, உலை வைக்க வேண்டியதுதான் பாக்கி, நான் பெரிய கேஸ் அடுப்பை கீழ வச்சிடறேன், நீங்க ஆரம்பிங்க.”
“ம்ம்”, என்று தேவையானவைகளை அருகில் எடுத்து வைத்துக்  கொண்டதும், அமர்ந்தவாறு வேலைகளை ஆரம்பித்தார் மணியம்மை, அரைமணி நேரத்தில், பாகு பதமாக சுருண்டு வர, நெய் தடவி வைத்திருந்த பெரிய சதுர ட்ரே-யில் பாகை கொட்டினார்.
நெய் வாசனை மூக்கைத் துளைக்க, அவ்வீட்டின் பெரிய மகளின் மகளான ஆறு வயது ஸ்வாதி, “பாட்டி, மைசூர்பாகு எப்போ ரெடியாகும்?”, என்று மணியம்மையின் முதுகுப்பக்கம் வந்து கேட்டது. அக்குழந்தை பிறந்ததிலிருந்து, இவருக்கு பரிச்சயம், எனவே வேற்றாள் என்ற வித்தியாசமின்றி நன்கு பழகுவாள்.
“இன்னும் கால் மணி நேரம் கழிச்சு வாடா, வெட்டினதும் முதல் பீஸ் உனக்குத்தான்.”, கத்தியால் சூடான கலவையை வெட்டியபடி சொன்னார். அவளும் சென்றுவிட, ட்ரேயை நகர்த்தி, பெரிய வாணலி வைத்து எண்ணையை அதில் ஊற்றினார்.
எண்ணெய் காய்வதற்குள், கடலைமாவினை பூந்திக்கு தகுந்த பதத்தில் கலந்து வைத்து,  சூடான எண்ணைக்கு சற்று மேல் இடது கையில் ஜல்லிக் கரண்டியை தயார் நிலையில் வைத்து, வலது கையால் மாவை எடுத்து தேய்க்க, ‘உஸ்ஸ்ஸ்’ சப்தத்துடன் பூந்தி பெரிய ஆரம்பித்தது.
“அறிவுக்கும் மைசூர்பாக் பிடிக்கும், என்ன செஞ்சுட்டு இருக்காளோ?, உக்காந்து மூலைல அழுதிட்டு இருப்பா.., ஹூம்.. தாப்பா லூசா இருக்கும்போதே பாக்காம விட்டது இப்படியா எம்பொண்ணு மேல வந்து விடியனும்?”, மனம் மகளிடம் போனது.
கூடத்தில் இருந்து சமையலறை நோக்கி வேகமாக வந்த சுவாதி, “பாட்டி, மைசூர்பாக் ரெடியா?”, ஓடிவந்ததில் நிலை தவறி, கவனமின்றி அமர்ந்திருந்த மணியம்மையின் முதுகில் ‘நச்’ சென மோத, அவரின் இரண்டு கைகளும் வாணலியின் விளிம்பில் பட்டு கொதி நிலையில் இருந்த திரவம் மேலே தெறிக்கப் போவதை அறிந்த மணியம்மை, நொடிக்கும் குறைவான நேரத்தில் சுவாதியை மறைத்தாற்போல் சட்டென நிமிர்ந்து எழுந்தார். அவர் நிமிரும்போதே, திரவம் கழுத்து, இடுப்பு, கால் என உடம்பு முழுமையும் பரவியது. மீதமிருந்த என்னையும் அடுப்பில் பட்டு, தீயை அணைக்க, எண்ணை பட்டு தீ அனைத்திருந்த பர்னரின் துளைகளில் இருந்து எரிவாயு வெளியேற ஆரம்பித்தது. அது திருமணம் போன்ற விழாக்களில் பயன்படுத்தப் படும் பெரிய பர்னர் கொண்ட அடுப்பு. வாயுக் கசிவு அதிகமாக இருந்தது.
திராவகம் பட்டாற்போல் உடல் எரிய ஆரம்பிக்க, திரும்பி சுவாதியை பார்த்திருந்ததால் அடுப்பை கவனிக்காது விட்டார் மணியம்மை. “சுவாதி, வெளிய போ”, என்று அலறி, அவளைக்  காயம் படாமல் காப்பாற்றி அனுப்புவதற்குள், நிலைமை கை மீறி இருந்தது. மேடையில் எரிந்த அடுப்பின் தீ கசிந்த எரிவாயுவோடு சேர்ந்து அவரின் சேலையில் பிடித்துக் கொள்ள, உடன் இருந்த பணியாளர்கள் திகைத்து சுதாரிப்பதற்குள் சேலை முழுமையும் தீ பரவி இருந்தது. அருகே இருந்த இரு சமையல் ஆட்கள், நீர் பிடித்து அவர் மேல் கொட்டினர். இந்த அரவம் கேட்டு, வீட்டின் உடமையாளர் வந்தார்.
அவர் பின்னால் சுவாதிக்குட்டியும் அவள் அம்மாவோட வந்தாள்.
“அய்யயோ, என்னாச்சு?”
“நான்தான் அவங்கள தட்டி விட்டுட்டேன் பாட்டி”, என்றாள் குழந்தை அழுது கொண்டே.
“ம்ச். அதெல்லாம் ஒண்ணமில்ல பாப்பா”, உடல் திகுதிகுவென காந்த, அதற்கு மேல் புத்தி யோசிக்க மறுத்தது, “அறிவு.. அறிவு..”, என்று முனக ஆரம்பித்தார் மணியம்மை.
“தோ கூப்பிடறேன்மா”, என்று முதலில் அம்புலன்சுக்கு அழைத்து, பின் அறிவழகிக்கு அழைத்தார் அந்த கீதா பாட்டி. ஐந்தாவது நிமிடத்தில் அறிவழகி வர, பின்னாலேயே அம்புலன்ஸும் வந்துவிட, “சின்ன ஆக்சிடென்ட், நீ அம்மா கூட ஹாஸ்பிடல் போம்மா, இங்க முடிஞ்ச உடனே  நாங்க வர்றோம், தப்பா எடுத்துக்காத அறிவு”, என்று விட்டு இருவரையும் பக்க வாட்டு வழியில் நின்ற அவசர ஊர்தியில் ஏற்றினார். வீட்டில் விஷேஷம் நடந்து கொண்டிருக்கிறதே? பாதியில் விட்டு செல்ல முடியாத நிலை அவருக்கு.
அங்கே மருத்துவமனையில் கமலம்மாவைத்தான் முதலில் பார்த்தால் அறிவழகி. அம்மாவிற்கு எப்படி இவ்வாறு நடந்தது என்பது தெரியாத குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் இருந்தவளுக்கு, அன்பரசனின் அம்மாவைப் பார்த்ததும் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. ‘இவங்களும் காலைல அந்தம்மா பேசினா மாதிரி பேசுவாங்களோ?’,என்ற பயம் வந்தது.
ஆனால், அப்படி எதுவும் நடக்காமல், மருத்துவமனையில் அன்பரசனின் அப்பா எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார். இரண்டு மணி நேரம் கழித்து வந்த கீதா பாட்டி, காலையில் இவர்கள் வீட்டில் நடந்த விஷயங்களையும் அறிந்து கொண்டே வந்திருந்தார். ஆறுதலாக நாலு வார்த்தை பேசிவிட்டு, “அடுப்படில வேலை பாக்கும்போது கவனம் அதுலதான் இருக்கனும், வேற குழப்பம் மனசுல வந்தா இப்படித்தான் ஏடாகூடமா ஏதாவது ஆகும்”, என்று முனகி, “விநாயகம் எல்லாம் பாத்துக்கறார்தான? ஆனாலும் கைச்செலவுக்கு இத வச்சுக்கோம்மா”, என்று அறிவழகியின் கையில் பத்தாயிரத்தை கொடுத்துச் சென்றார்.
அம்மாவுக்கு விபத்து நடந்தது தன்னால்தான் என்ற குற்றவுணர்வும் அறிவழகிக்கு சேர்ந்து கொண்டது. கேத்தரினும் எஸ்தரும் விஷயம் கேள்விப்பட்டதும் வந்து அவளுடனே இருந்தனர். இரவு வந்தது, அதற்குள் திக்கி திணறி நடந்தவைகளை மணியம்மை கேத்தரினிடம் விட்டு விட்டு கூறினார். எனினும் அவர்  மூச்சு விட சிரமப்பட, ஆக்சிஜன் பொருத்தப்பட்டதும், வலி நிவாரணி தந்து அவர் தூங்க வைக்கப்பட  நடந்த விபத்து, ‘மகளின் நடத்தை சரியில்லாததால் அன்னை தற்கொலை’ என  அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்டது.
பழக்கமில்லாத ரிங்டோன் ஒலிக்க, அதில் கண்விழித்த அறிவழகி, மேஜையில் இருந்த அன்பரசனின் அலைபேசியைப் பார்க்க, அதன் திரையில் சுசித்ரா இரு பிள்ளைகளோடு இருக்கும் புகைப்படம் ஒளிர்ந்தது.
தோழமைகளே, அடுத்த எபி நளை.. அதுல  LA …continues [வேற வழி இல்ல, நினைச்சாலும் இந்தியா வர முடியாது பாருங்க.]

Advertisement