Advertisement

அத்தியாயம் 8
கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேர பிரயாணத்தில் LAX விமான நிலைய டெர்மினலுக்கு மூவரும் வந்து சேர்ந்தனர். கொரோனா அச்சத்தால், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை என தெளிக்கப்படும் கிருமிநாசினியின் வாசம் மூக்கைத் துளைத்தது. மாமிக்கு அந்த வாசம் குமட்டியது, அங்கேயே பணியாளர்கள் தரும் முக கவசம் வாங்கி அணிந்து கொண்டனர்.
உடல் வெப்பம் பரிசோத்திக்கும் தெர்மல் ஸ்கேனர் டெஸ்ட் முடித்து, லக்கேஜ்கள் வரும் வரை காத்திருந்து வெளியே வர இரண்டு மணி நேரமானது. அதன் பின்னரும்,லாஸ் ஏஞ்சல்ஸ் நிர்வாகம், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பதினான்கு நாட்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. அனைவரையும் முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு வற்புறுத்தி கேட்டுக்கொண்டது.
யாரும் கை குலுக்கி முகமன் தெரிவிக்காமல், மேற்கத்திய நாகரீக உடைகளில் இருந்த அந்த மக்கள் இந்திய மரபுப்படி வணக்கம் வைத்தது, வித்தியாசமாக இருந்தாலும், நம் பண்பாடு எத்தனை தொலைநோக்குடையது என்று பெருமிதம் கொள்ளச் செய்தது.
விமான நிலையத்தில் பத்தடிக்கு ஒரு கைகளை சுத்தம் செய்யும் திரவம்,  [ஸ்டெர்லியம்] மக்கள் உபயோகத்திற்காக வைக்கப்பட்டிருந்து.
டெர்மினலை விட்டு வெளியே வரும்போதே அன்பரசனின் கண்கள் அறிவழகியைத் தேடியது. அவள்தான் விமானநிலையத்திற்கு வந்து அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. நாங்களே வந்து விடுவோம், இரவு நேரத்தில் வீண் அலைச்சல் வேண்டாம் என்றாலும் கேட்காமல் அடமாக வருவேன் என்று விட்டாள்.
இரண்டு நிமிட தேடலில் கிடைத்தாள் பெண், கருநீல ஜீன்ஸ், வெளிர் நிற குர்தியுடன், நளினமாய் இருந்தாள். வடஇந்தியர்கள் போல், குனிந்து பெரியவர்கள் பாதம் தொட்டு வணங்கி மாமியின் அருகே சென்று நின்றாள். அன்பரசனை பார்த்து ஒரு சிறு புன்னகை. அவ்வளவே. அன்று திருப்பதியில், முதன்முதலாக இவனைக் கண்டதும் வந்த வானவில் மாற்றங்கள், குறைந்தது இவன் ஏன் வந்திருக்கிறான் என்ற கேள்விப் பார்வையாவது, ம்ஹும்,  முகத்தில் ஒன்றும் காணோம். அதிலேயே அன்பரசனின் வருகை அவளுக்கு முன்கூட்டியே தெரியும் என்பதும், அது அவளை எள்ளளவும் பாதிக்கவில்லை என்பதும்  அவனுக்குப் புரிந்தது.
“ஜர்னில ஏதும் ப்ராபளமில்லையே மாமி?”, அறிவழகி கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் இல்லடீம்மா,”,  அன்பரசனை காண்பித்து, “தோ, இவர் வந்தார், இவர் பின்னாலேயே நாங்களும் வந்துட்டோம். அவ்வளவுதான் தெரியும்”, என்றார் மாமி, வாய் கொள்ளா புன்னகையுடன்.
“அக்ஷி வரலியா?”, என்ற மாமியின் கேள்விக்கு, “இப்போ அவ தூங்கற நேரம், தவிர இங்க இன்ஃபெக்ஷன் ஆக வாய்ப்பிருக்கு, அதான் கூட்டிட்டு வரல”, என்ற பதில் பியூட்டியிடமிருந்து. நல்ல கோதாவரி தெலுங்கில் இருவரும் பேசினர்.
அன்பரசனின் பார்வை மட்டும் ஆராய்ச்சிப் பார்வையாக இருந்தது. அறிவழகியைத்தான் எடை போட்டுக் கொண்டிருந்தான். அதை அவளும் அறிந்தே இருந்தாள். இடது கையில் மெலிதான ப்ரேஸ்லெட், வலது கை கையில், கடிகாரமா காப்பா என்று பிரித்து அறியா வகையில், மெல்லிய பட்டையான ஒன்று மணிக்கட்டுடன் சேர்ந்து சற்று இறுக்கமாக இருந்தது, காதில் சிறிய ஒற்றை கல் தோடு, அவள் திரும்பும்போது அதன் ஒளிச்சிதறல், அதன் ஜாதி வைரம் என்று சொல்லாமல் சொன்னது. கழுத்தை சுற்றி ஸ்டோல் போட்டிருந்ததால் எதுவும் தெரியவில்லை. முடியை கிளிப் கொண்டு அடக்கி இருந்தாள். “கார பார்க்கிங் ல விட்டிருக்கேன், வீட்டுக்கு போலாமா?”, என்று மாமாவிடம் கேட்டு அவரை துரிதப்படுத்தினாள். அன்பரசனைத் தவிர்க்கும் அலட்சியம், மற்றவர்கள் கவனத்திற்கு வரவில்லை ஆயினும் அவனுக்குத் தெரிந்தது.
“இரும்மா லக்கேஜ் சரியா இருக்கா பத்திடறேன்”, என மாமி பயணப்பொதிகளை சரிபார்க்க துவங்க…
அன்பரசன் தன்னிச்சையாக அலைபேசியை எடுத்து, அவனை அழைத்திருந்த நிறுவனத்திற்கு அழைத்தான். சென்னையிலேயே,  இங்கு உபயோகிக்கவென ஸிம் கார்டு வாங்கியிருந்தான். மறுமுனை உயிர் பெற்றதும், இவனது தங்கும் ஹோட்டலின் அறை குறித்து விசாரித்தான். பதில் வந்தது, கூடவே வரை படமும் வந்தது.
“ஓகே நான் கிளம்புறேன் அப்புறம் பாக்கலாம்”, என பொதுவாக அவர்களிடம் கூற..
“அட என்னதிது? இத்தனை உபகாரம் பண்ணிட்டு, வீட்டுக்கு வராம போனா எப்படி?”, என்று மாமா சொல்லவும்,
“கண்டிப்பா ஒரு நாள் வர்றேன், ஆனா, இப்போ எனக்காக, என் கிளையண்ட் ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி இருக்கார். அங்க போய்ட்டு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, வந்த வேலையைப் பாத்துட்டு வர்றேன். வரும்போது போன் பண்றேன். நீங்களும் உங்க பையன் பேமிலிய ரொம்ப நாள் கழிச்சு பாக்கப் போறீங்க. டெலிவரி டைம் அது இதுன்னு பிசியா இருப்பீங்க. நான் எதுக்கு தொந்தரவா?”, என்று பேசியவனை குறுக்கிட்டு
“தொந்தரவல்லாம் இல்லப்பா”, என்றார் மாமா. [அவருக்கு நம் நாட்டு நினைவு போலும், மேலை நாடுகளில் தகவல் தராமல் அடுத்தவர் வீட்டிற்கு செல்வதென்பது அநாகரீகமான விஷயம்].
“மாமா, இது உங்களுக்கான நேரம். ப்ளீஸ் எதுவும் சொல்லாம என்ஜாய் பண்ணுங்க.”, தீர்மானமாக அதே சமயம் பணிவாக கூறினான்.
அவனது இந்த அமைதியான பேச்சு அறிவழகியை திரும்பி பார்க்க வைத்தது. அவளறிந்த அன்பரசன், பிரபல கதாநாயகனின் ரசிகன், டீக்கடையில் வெட்டி அரட்டை அடிக்கும் ஊதாரி, போதையில் ஊர் சுற்றித் திரியும் விட்டில்பூச்சி.
திருப்பதியில் கூட அவனிடம் பேசியது குறைவுதானே? இப்படி நயந்து பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை. ம். எப்படியோ திருந்தி நன்றாக இருந்தால் சரி, என்றெல்லாம் மனதுக்குள் அசைபோட்டு, மாமா, மாமிக்காக இத்தனை மெனெக்கெடல்கள் செய்தவனாயிற்றே, நாமும் ஏதாவது செய்வோம் என்ற எண்ணத்துடன், “ஓகே. உங்க ஹோட்டல் சொல்லுங்க, நாங்க போற வழில இருந்தா, அங்க ட்ராப் பண்ணிட்டு, நாங்க அக்ஷி வீட்டுக்கு போறோம்”, என்றாள்.
வரைபடம் காண்பித்து, “இங்கதான் போகணும்.பட், கேப் புக் பண்ணிக்கறேன்”, என்றான்.
“இது நாங்க போற வழிலதான்  இருக்கு, வாங்க போலாம்”, என்றவளுக்கு…
“இல்ல, நீங்க கிளம்புங்க”, என்று அன்பு மறுதலிக்க…
“ஹலோ உங்களுக்காக ஒன்னும் ஸ்பேஷலா போகல. வேஸ்டா ஒரு இந்திய ரூபாகூட அமெரிக்கால செலவாகக்கூடாதுகிறது எங்க கொள்கை. வாங்க”, என்று சிரித்தபடி சொல்லி, அவனது மறுப்பை அறிவழகி இலகுவாக முறியடித்தாள்.
அன்பரசன் முதன் முறையாக, அறிவழகியை சிரித்தபடி இருக்கும் இலகுவான மனநிலையில் பார்க்கிறான். தன்னைப் பார்த்ததும் முகம் கடுப்பாள் என்று எதிர்பார்த்திருக்க, இப்படியொரு வரவேற்பு இவன் எதிர்பாராதது. இன்னும் எத்தனை முதன் முறைகள் வரப்போகிறதோ? பார்க்கத்தானே போகிறான்.
அந்த பறந்து விரிந்திருந்த சாலைகளில் அறிவழகி காரை மிக லாவகமாக நடத்தி, அரைமணிநேர பயணத்தில் அவன் சொன்ன தங்கும் விடுதிக்கு வர… அதன் முகப்பிலேயே, “விடுதியின் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன”, என்பதை பெரியதாகவும், “கட்டிய தொகைகள் அவரவர் கணக்குக்கே திருப்பப்பட்டு வருகிறது.. மேலும் விபரங்களுக்கு XXXXXXX என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்”, என்ற வாசகத்தை சிறியதாகவும் நியான் விளக்கு அறிவித்தது.
காரில் இருந்தபடி அறிவிப்பைப் பார்த்த அன்பரசன் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான். அதில் குறிப்பிட்டு இருந்த நம்பரை தொடர்பு கொள்ள,”அறையை முன்பதிவு செய்தவரிடம் விபரங்கள் தெரிவித்தாயிற்று, மேலும் அதற்குண்டான தொகையும் திருப்பி செலுத்தபட்டு விட்டது” என்று கைவிரித்தது, ஹோட்டல் நிர்வாகம். அறிவழகி, அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று அவனைப் பார்த்திருந்தாள்.
அதற்குள் அன்பரசன் அலைபேசி ஒலி எழுப்ப, அதில் இவனது அறையைப் பதிவு செய்த வாடிக்கையாளர், ஹோட்டல் நிர்வாகம் கூறிய அதே தகவலை மறு ஒலிப்பரப்பு செய்தார். நாளைக்குள் வேறு ஏற்பாடு செய்ய முழுமூச்சுடன் முயற்சிப்பதாக உறுதியளித்தார். ஆனால், அன்பரசனுக்கு அவரது பேச்சில் முழு நம்பிக்கை வரவில்லை. காரணம், இந்த CoVid 19-ன் தாக்கம் அப்படியிருந்தது.
தீவிர யோசனையுடன் அமர்ந்திருந்தவனை பார்த்து, “அட வாப்பா,  நம்ம வீட்ல அடஜஸ்ட் பண்ணிக்கலாம்”, என மாமா வலியுறுத்தினார்.
அறிவழகி எதுவும் கூறாமல், சிந்தனை வயப்பட்டு காரைக் கிளப்பி நேரே சுதர்ஷன் வீட்டிற்க்கு சென்றாள். வாசலில் காத்திருந்த சுதர்ஷன் தாய் தந்தையை கண்டு உணர்ச்சி வசப்பட, “ஷ், சுதா..’, என்று கண்டித்து, மூவருமாக [அன்பு+அறிவு+சுதா] பயணப் பொதிகளை இறக்கி வீட்டுக்குள் வைத்துவிட்டு,  உள்ளே வருமாறு கூறிய பெரியவர்களிடம், “இவரை நான் என் அப்பார்ட்மென்ட் கூட்டிட்டு போறேன், தரு-கிட்ட நான் போன்-ல சொல்லிடறேன்”, என்று சுதாவிடம் சொல்லி, “மாமி, நல்லா ரெஸ்ட் எடுங்க நாளைக்கு பாக்கலாம்”, என்று கூறிவிட்டு, அன்பரசனை கண் ஜாடையில் காருக்கு செல்லுமாறு சொன்னாள்.
காரில் ஏறப்போன அன்பரசனைத் தடுக்க வந்த மாமியிடம் , “விடும்மா, அவ அப்படித்தான், ஒரு முடிவெடுத்தா அதிலேயே நிப்பா. நாளைக்கு வருவால்ல அப்போ பாத்துக்கலாம்”, என்று சமாதானம் செய்தான், அவரது மகன் சுதா என்ற சுதர்ஷன்.
அறிவழகி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்ததும், வண்டியை உயிர்ப்பித்து, :சாரி, உங்களை நான் போர்ஸ் பண்ணலை. காலைல அக்ஷி தூங்கி எழுந்ததும் நீங்க அங்க இருந்தா, உங்க கிட்டத்தான் க்ளோசா பழகுவா. அவங்க கூட ஒட்டமாட்டா. அது அவங்களுக்கு ரொம்ப ஏமாத்தமா இருக்கும். அதான் நாம கொஞ்சம் தள்ளி இருக்கனும்ன்னு கிளம்பிட்டேன். தப்பாயெடுக்காதீங்க,” வீதியில் கண்வைத்து ஓட்டிக்கொண்டே இவனிடம் பேசினாள்.
“சே சே, இட்ஸ் ஓகே. அதுவும் கரெக்ட்தான். பட் அக்ஷி அம்மா காணோமே?  அவங்களும் வாசல் வரைக்கும் வந்து மாமா மாமிய ரிஸீவ் பண்ணியிருக்கலாமே?”,
“இல்ல, அவளை பெட் ரெஸ்ட்-ல இருக்க சொல்லி டாக்டர் அட்வைஸ் பண்ணிருக்காங்க. நாளைன்னிக்கு பெயின் வருதோ இல்லையோ அட்மிட் பண்ண சொல்லிட்டாங்க.”
“ஓ அப்டியா?”, அன்பரசன் சொல்ல. அறிவழகியும் “ம்ம்” கொட்டி ஆமோதித்தாள். பின் இருவரும் அவரவர் சித்தனையில். நேரம் பதினொன்றை நெருங்கி இருக்க, அன்பரசனுக்கு இரு நாடுகளின் நேர வித்தியாசத்தாலும், தொடர் விமான பயணத்தாலும் ஜெட் லாக் இருந்தது. அறிவழகிக்கும் உறக்கம் கண்ணைக் கட்டியது.
அவளது அடுக்குமாடி குடியிருப்பு வந்ததும், “எலிவேட்டர் கிட்ட நில்லுங்க, கார் பார்க் பண்ணிட்டு வந்துடறேன்.”, என்று அன்பரசனிடம் சொல்லி விட்டு சென்றாள். அண்ணாந்து பார்க்கும்படி இருந்தது அந்த குடியிருப்பு. ஒவ்வொரு தளத்திலும் யார் யார் உள்ளார்கள் என்பதை அறிவிக்கும் தகவல் பலகை இருந்தது. அதிலும் இவள் பெயர் அறிவழகி அன்பரசன் என்றே குறிப்பிடப் பட்டிருந்தது.
பின் மின்தூக்கியிடம் வந்து அன்பரசன் காத்து நிற்க, அறிவழகியும் சற்று நேரத்தில் வந்துவிட, இருவரும் லிப்ட்-ல் ஏறி, அவளது தளத்திற்கான என்னை அழுத்தி காத்திருந்தனர். நல்ல வாசனைத் திரவியம் உபயோகிக்கிறாள் போலும், நறுமணம் மூக்கை குத்தாமல், சுகந்தமாக இருந்தது. அவளது செயல்கள் அனைத்தையும் அன்பரசன் அமைதியாக பார்த்திருந்தான்.
அவளது பிளாட் அடக்கமாக இருந்தது, 1BHK மாடல், சுமாரான அளவில் ஒரு கூடம், அட்டாச்ட் பாத்ரூமுடன் படுக்கையறை, சமையலறை என்று இருந்தது. தேவையான அறைகலன்களுடன் வீடு நேர்த்தியாக இருந்தது. ஹால் கொஞ்சம் கலைந்திருந்தது. இங்கிருந்து விமான நிலையம் புறப்பட்டிருப்பாள் போலும்.
அன்பரசனின் பெட்டியை ஹாலில் ஓரமாக வைத்து, “இது தான் என் வீடு, ஒரு அஞ்சு நிமிஷம் உக்காருங்க.”, என்று சொல்லி, அடுக்களை சென்றவள், இரு கண்ணாடி டம்பளர்களில் நீர் கொணர்ந்தாள். அதை மேஜையில் வைத்து விட்டு, “இந்த ரெக்லைனர்-ல நான் படுத்துக்கறேன். பெட் ரூம்ல நீங்க படுத்துகோங்க, தலைகாணி உரை, பெட்ஷீட் புதுசு எடுத்து வைக்கிறேன், மாத்திக்கோங்க.  பாத்ரூம் ஒண்ணுதான் இருக்கு, சோ அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். பட் நான் படுத்தா காலைல தான் எந்திரிப்பேன். தண்ணி குடிச்சிட்டு நீங்க போய் ரெஃப்ரஷ் ஆயிட்டு வாங்க.”, என்று படுக்கையறை சென்றாள்.
பெட்சீட், உரை எடுத்து வைத்து, இரவு உடை மாற்றிக்கொண்டு வந்தாள், பேண்ட் ஷர்ட் டைப், தலை முடியை விரித்து விட்டுஇருந்தாள். அந்த உடையில் இன்னமும் சிறுபெண்ணாக தெரிந்தாள். வெளியே செல்லும்போது போட்டு வந்த துணிகளை அழுக்குத் துணிகளுக்கான பையில் போட்டாள்.
“ஓகே, இப்போ நீங்க போலாம்”, என்று சொல்லி ரெக்லைனரில் அமர்ந்தாள். இவனும் கழிவறையை உபயோகிக்க வேண்டி இருந்ததால், எழுந்து அறைக்குச் செல்ல, அறிவழகி அதற்குள் அவளது படுக்கையை தயார் செய்துவிட, படுக்க ஆயத்தமானாள்.
அன்பரசனும் தன்னை சுத்தப் படுத்தி, டி ஷர்ட், ஷார்ட்ஸ் சகிதம் வெளியே வந்து, “டோர் லாக்-கே இல்ல, எப்படி பூட்டறது?”, அவனுக்கு இந்த மாதிரி பூட்டு புதிதாக இருந்ததால் அறிவழகியிடம் கேட்க,
“அது ஆட்டோமேட்டிக் லாக் ஸிஸ்டெம், கீ ஹோல்ல கீயை போட்டாதான் திறக்க வரும்”, என்றவரை சரி, அதன்பின், வெறுப்போடு அலட்சியமும் கலந்த முக பாவனையுடன், “பயப்படாதீங்க நீங்க இங்க தங்கறத, மானுபுலேட் (சூழ்ச்சியாக சித்தரித்தல்) பண்ணி எதையும்  சாதிக்க வேண்டிய அவசியம் எனக்கில்ல. சாவி அலமாரியில இருக்கு”, என்றாள். ஆனால் அவள் கண்களில் நீர் திரையிட்டிருந்தது.
வார்த்தைகளில் சாட்டை சொடுக்குவது எப்படி என்பதை அவள் பேச்சு புரிய வைத்தது.
இத்தனை வருடங்களாக அடக்கி அடக்கி வைத்திருந்த கோபத்தின் வெளிப்பாடாக வந்தது அவளது வார்த்தைகள். கேட்ட அன்பரசன் ஸ்தம்பித்து, அறிவழகியைப்  பார்க்க, சட்டென, கிட்சனுக்குள் நுழைந்து, கண் துடைத்து, முகம் திருத்தினாள். சிறிது நேரத்தில் கூடத்திற்கு வந்து, “கொஞ்சம் எமோஷ்னலாயிட்டேன், சாரி”, என்று விட்டு, “நீங்க போய் படுத்துகோங்க. குட் நைட்”, என்றாள் எதுவும் நடவாததுபோல்.
சாவி கொடுத்த பொம்மை போல படுக்கையறை சென்றவன், ‘அன்று நான்தானே வீடு மாறி இவள் வீட்டுக்கு சென்றேன்?, இவளை யார் சூழ்ச்சிக்காரி என்று சொன்னது?’, என்றெல்லாம் யோசித்தவன்,  இன்னமும் மனதுக்குள் எத்தனை ரணம் வைத்திருக்கிறாளோ? என்ற பயத்துடன், ஆம் நிச்சயமாக பயமேதான் வந்தது அன்பரசனுக்கு, படுக்கையில் படுத்தான். கண்ணோடு இமை மூடாமல், விட்டத்தை வெறித்தவாறு அறிவழகியைத்தான் யோசித்திருந்தான்.
பேசுவாளா? மனதில் இருக்கும் பாரங்கள் எல்லாவற்றையும் தன்னிடம் பகிர்வாளா? காரணம் தெரியாமல், அன்பரசனுக்கு கண்ணோரம் நீர்த்துளி கசிந்தது.

Advertisement