Advertisement

அன்பரசன் எதிர்கொண்டது இன்னமும் சிக்கலான பிரச்சனை, நண்பர்கள் என்று அவனைச் சுற்றித் திரிந்தவர்களே, “என்ன மச்சி, பாக்கவே மாட்டென்ன, மொத்தமா முடிச்சிட்ட?”, “எப்படி இருந்தது?”, “அதான் லைசென்ஸ் கட்டிட்டல்ல, என்ஜாய் பண்ணாம.. ?” என்று நாராசமாக கேட்க, தரங்கெட்ட அந்த நண்பர்கள் குழுவையே மொத்தமாக தவிர்த்தான். ‘இடுக்கண் களைவதாம் நட்பு’, என்பதற்கு ஏற்றாற்போல் மெக்கானிக் நண்பனும் கண்ணனும் மட்டுமே அன்பரசனுக்கு ஆறுதலாக இருந்தனர்.
அவனுக்கு இன்னொரு பிரச்சனையும் வந்தது, தீயை எங்கு பார்த்தாலும், அறிவழகியின் அம்மா மணியம்மை எரிவது போலவே தெரிந்தது. நின்ற இடம் விட்டு அசைய முடியாது, நாடித்துடிப்பு அதிகமாகி, வியர்த்து ஒழுகி, அவனை அவனாகவே சமன் செய்வதற்கு முடியாமல் போனது. கண்ணன் இவன் கூடவே சுற்றியதால் இந்த விஷயம் வீட்டிற்கு தெரியாமல் இவர்களுக்குள்ளாகவே இருந்தது. ‘சிகிச்சை பெற்றுக்கொள்’ என்று கண்ணன் வலியுறுத்த, ‘தானா சரியாகும் விடு’  என்று விட்டான்.
ஏதோ ஒரு நாள் போனில் பேசும்போது சாதாரணமாக மாமா ‘தெரிந்த நிறுவனம் இருக்கிறது, வருகிறாயா?’, என்று கேக்க, உடனே கோவைக்கு கிளம்பி சென்று விட்டான். அதே நிறுவனத்தில் மாமாவின் உபயத்தில் சேர்ந்தும் விட்டான்.
வேலை செய்த நிறுவனத்தால், இவனது ஃபோபியா குறித்து மாமா குடும்பத்திற்கு தெரிய வர, மனநல சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டான். இதை மாமா, தங்கை கமலாம்மாவிடம் தெரிவித்து, அன்பரசன் கடைசி வருட படிப்பை முடித்ததும், கோவையிலேயே சிகிச்சை அளித்து அவனை சரி செய்தார். இவன் வேலை பார்த்த இடத்திலேயே, இவனது முனைப்பான செயல் திறனைக் கண்டுகொண்டு, வெளிநாட்டுக்கான வாய்ப்பையும் தந்தது.
இங்கே கோவையில் இப்படி நடக்க, சென்னையில் அறிவழகி கடைசி வருடத்திற்கு வந்து விட்டாள். இறுதித் தேர்வுகள் ஆரம்பிக்கும் முன்னரே, வங்கி போட்டித் தேர்வுக்கு  [probationary officer] பல விண்ணப்பங்கள் அனுப்பியும் வைத்தாள். இவன் கோவையிலிருந்து வருவதற்குள்ளாகவே அவளுக்கு வேலையும் கிடைக்க,  ஹைதிராபாத் சென்று விட்டாள்.
அறிவழகி மொத்தமாக அன்பரசன் வீட்டில் ஆறு மாதம் இருந்திருப்பாளோ என்னமோ? அறிவழகி பற்றிய விபரமெல்லாம் அன்பரசன் தெரிந்து கொள்வது தங்கை ப்ரவீனா மூலமாகத்தான். இருவரும் நல்ல தோழிகளாக இருந்தனர். ஆனால், இருவரும் அந்த  நட்புக்கோட்டை மீறி சொந்தம் என்று பேச முயற்சிக்கவில்லை.
அன்பரசன் வெளிநாடு செல்ல ஆயத்தமாக சென்னை செல்லும்போதுதான் அறிவழகியுடன் பேசி வாழ்க்கை பற்றி ஒரு தீர்மானமான முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தான்.
கோவையில் இருந்தபோது அவனது திடீர் திருமணம் பற்றி நிறைய யோசித்திருந்தான். அறிவழகியின் எண்ணத்தையும் கேட்டு இருவருக்குமான பந்தத்தை முடிவு செய்ய நினைத்திருந்தான். அறிவழகியை விட்டுவிடுவதென்பது முடியாத காரியம் என்பது இவனுக்கு திண்ணம், தவிர அப்பாவும் விட மாட்டார். ஆனால், விருப்பமின்றி கட்டாயத்தினால் ஒரு பெண் தன்னை கணவனாக ஏற்றுக் கொள்வது என்பது அவனுக்கு சரியாகப் படவில்லை.
இன்னுமொரு காரணம், அறிவழகியுடன் ப்ரவீனா நின்று எடுத்த ஸெல்ஃபியை தங்கை வாட்ஸாப் முகப்புபடமாக [ஸ்ஸப்பா…. முடில… profile picture/DP ] வைத்திருந்தாள். அதில் அறிவழகி மிக அழகாக தெரிந்தாள் [ஹ ஹ, என்ன ஒரு கண்டுபிடிப்பு] அவளைத் தொடர்பு எண்ணைத் தயங்கி தயங்கி நிற்க, அண்ணனது முகம் பார்த்தே ப்ரவீனா, அறிவழகி வேலை செய்யும் வங்கியின் நம்பரைக் கொடுத்து, ‘ஒரு வார்த்த அறிவுகிட்ட சொல்லிட்டு ஊருக்கு போ அண்ணா’ என்றாள்.
‘அவகிட்ட செல் இல்லையா என்ன?”,
“இங்க இருக்கும்போது அவங்க அம்மாவோட நம்பர் வச்சிருந்தா. அதை எஸ்தருக்கு குடுத்துட்டு  போஸ்ட் பெயிட் ஸிம் வாங்கினதும் கால் பண்றேன்னு சொன்னா. அதுவரைக்கும், பேங்க் லேன்ட் லைன் நம்பரை யூஸ் பண்ணிக்கறேன் ன்னு சொல்லிட்டா. கவலைப் படாத, ஞாயித்துக் கிழமை போன் பண்ணி அப்பாட்ட பேசுவா. அப்பாதான் ஹைதெராபாத் போயி ஹாஸ்டல் பாத்து வச்சிட்டு வந்தார்.”
“அதெல்லாம் சரி, ஒரு ஸிம் கார்ட் வாங்கித் தர முடியாதா?”, என்று சொல்லும்போது, அதிகாலையில் இருந்து வந்த கமலம்மா, பேச்சின் குறுக்கே வந்தார்.
“டே, அவகிட்ட நம்பர் இல்லன்னே, அவர்  இங்க வந்ததுக்கு அப்பறம்தான்  தெரியும், சும்மா எண்ணைல போட்ட கடுகு மாதிரி பொரியாம, நீ ஊருக்கு கிளம்பறதுக்கு ஏதோ பேப்பர்லலாம் தயார் செய்யணும்னு சொல்லிட்டு இருந்தல்ல அதை பாரு.”
மனது சமாதானம் ஆகாமல் “ம்ம்.”, என்று விசா நடைமுறைகளை கவனிக்க சென்றான். ஆயினும், வங்கி வேலை நேரத்தில், அவளுக்கு போன் செய்தான். அறிவழகியிடம் அப்போதுதான் முதன்முறையாக பேசினான், அன்பு.
“நான் அன்பரசன் பேசறேன்”.
“ம்ம்”, “சொல்லுங்க. “, ம்ம் – ல்  திகைப்பு & சொல்லுங்க-வில் தயக்கம் இருந்தது.
இவனுக்கும் சற்று டென்க்ஷனாகத்தான் இருந்தது.
“நல்லா இருக்கியா?”, என்று என்று கேட்டான். பேச்சை ஆரம்பிக்க வேண்டுமே?
“ம்ம். நல்லாருக்கேன்.”
“செல் இல்லையாமே, வாங்கிட்டயா?”
“இல்ல, இப்போதான் எங்க வாங்கணும்னு விவரம் கேட்டுருக்கேன், லீவ் நாள்ல போயி வாங்கிடுவேன்”,
“மூலைக்கு மூலை கடைல விக்கறான், இங்கயே வாங்கிட்டு போவேண்டியதுதான?”, தானாக குரல் உயர்ந்தது.
“இல்ல, இனி எது செலவு பண்ணினாலும் என் காசுலதான் வாங்கணும்னு.. எவ்ளோதான் மாமாவே செலவு பண்ணுவார், அதான்..”
அவர் செய்யக்கூடாது, தான் செலவு செய்ய வேண்டும் என்று சொல்கிறாளா? அல்லது நான் சம்பாதிக்கவில்லை என்று குத்துகிறாளா? என்று அன்பரசன் குழம்பினான். இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? பேச நினைத்தது மறந்து போயிற்று.
“….”
அறிவழகி சில நொடிகள் காத்திருந்து, “சரி, டெப்பாஸிட்க்கு நிறைய பேர் நிக்கறாங்க. வச்சிடறேன்”, வைத்து விட்டாள்.
விநாயகமோ, கடையை விரிவு படுத்தி, நிஜமாகவே பல்பொருள் அங்காடி ஆக்கும் முனைப்பில் இருந்தார். இன்னொரு கோடவுனையும் வாடகைக்கு எடுத்து தனது தொழிலில் முழு வீச்சில் இறங்கி இருந்தார். மொத்த விலையில், விளையும் இடத்தில் இருந்தே  தரமான பொருட்களை வாங்கி, இவரது அங்காடியின் முத்திரையோடு விற்பனை செய்வதில், அதிக லாபம் என்ற நோக்கில் ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்தார். அவரது அண்ணன் மகன் கண்ணன், இவர் இல்லாதபோது கடையில் இருந்து உதவியாக இருந்தான்.
அடுத்த முறை அறிவழகியுடன் பேசும்போது, ஸ்விஸ் விசாவிற்கான நேர்காணல் தேதி அன்பரசனுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவள் வேலையில் சேர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகி இருந்தது. அவளது அலைபேசி எண்னை ப்ரவீனாவிற்கு கொடுத்திருந்தாள், ஆனால் அந்த நம்பருக்கு எப்போது அழைத்தாலும் ஒன்று அனைத்து வைக்கப்பட்டிருந்தது இல்லையெனில் பிசியாக இருந்தது. என்னவென்று லேண்ட் லைனில் தொடர்பு கொண்டு கேட்ட அம்மாவிடமும் ஏதாவது ஒரு காரணம் கூறி சமாளித்தாள். தன்னையும் குடும்பத்தாரையும்  தவிர்க்கிறாளோ என்று அப்போதுதான் சந்தேகம் வந்தது.
ஆயினும், அவள் அளித்திருந்த வங்கியின் எண்ணில் அழைத்து பேசினான். அப்போதும் அறிவழகி விட்டேத்தியாக கடமையே என்று பேச, அன்பரசனுக்கு சந்தேகம் வலுத்தது. பின், ஒரு யோசனையாக, விடுதலைப் பாத்திரம் போல் ஒன்றைத் தயார் செய்து, கூடவே மனமொத்து பிரிய சம்மதம் என்ற விவாகரத்து அறிக்கையையும், அசல்  திருமண பதிவு சான்றிதழையும் வைத்து “உன் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்க மாட்டேன், இவைகளை தேவைப்பட்டால் உபயோகிக்கவும் அல்லது அழிக்கவும்” என்று எழுதி அறிவழகிக்கு பதிவுத் தபாலில் அனுப்பினான்.
அன்பரசன் வெளிநாடு சென்றபின், கடிதம் வந்ததா என தெரிந்துகொள்ள, அவளது எண்ணை அழைக்க, அந்த எண் உபயோகத்தில் இல்லை என்ற தகவலை IVRS மொழிந்தது. சற்று கடுப்பாகி, அடுத்து வங்கிக்கே முயற்சிக்க, முதல் முறை விடுப்பில் இருப்பதாக கூறினார் அந்த மேலாளர். ஒரு வாரம் கழித்து மீண்டும் அழைத்தபோது, அறிவழகி வேலையை விட்டு விட்டதாக  தெரிவிக்கப்பட்டது.
இந்த விஷயம் தெரிய வந்ததும், அங்கே சென்று என்னவென்று விநாயகம் துருவ, அன்பரசனிடமிருந்து கடிதம் வந்ததாகவும் அதன் பின் அறிவழகி வேலையை விட்டு விட்டு சென்று விட்டதாகவும் அவருக்கு சொல்லப்பட, வீட்டில் பிரளயமே வெடித்தது.
அன்பரசனை வீட்டுக்குள்ளே சேர்க்கக்கூடாது, சொத்தில் காலணா கூட அவனுக்கு தரமாட்டேன் என  பலவாறாக தந்தை திட்டியதாக அவனுக்கு தெரியவந்தது.
அவரின் வார்த்தைகளால், மனம் மிகவும் காயப்பட, வீம்பாக அவரது கடைகள், பண முதலீடு, சொத்துக்கள் என அனைத்தையும் தள்ளிவைத்து, வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததும், வேலை செய்துகொண்டே, தொழில் துவங்கினான். முதல் ஒரு வருடம் அவனுக்கு சோதனைக்காலம். அலுவலக வேலை நேரம் முடித்து, உதிரிபாகத் தயாரிப்பு / விற்பனை என தொழிலையும் கவனித்து … என்று அல்லாடிப் போனான். அப்போதுதான், மூர்த்தியை வேலைக்கு அமர்த்தினான். காண்ட்ராக்ட் முடியும்வரை வேலைசெய்து, அந்நிறுவனத்திடமிருந்து வெளிவந்த பின், தொழிலில் முனைப்பு கூட்ட, அன்றிலிருந்து இன்றுவரை ஏறுமுகம்தான்.
ஆனால், அப்பாவின் பாராமுகம் மட்டும் அப்படியே தொடர்கிறது. இப்போது அறிவழகி குறித்து தெரிவித்தாயிற்று, இனியாவது பேசுவார் என்று நம்பிக்கையுடன் , அமைதியாக உறங்கினான் அன்பரசன்.
மறுநாள் காலை அறிவழகிக்கு அழைத்து, அவள் அனுப்பிய போட்டோக்களுக்கு நன்றி  தெரிவித்து, அவள் புறப்பாடு பற்றி கேட்டறிந்தான். இன்னமும் இரண்டு நாளில் எல்.ஏ. விமானம் என்று தெரிவித்தாள்.பின் அக்ஷியுடன்  பேசி வைத்து விட்டான். சைட் வேலைகள் இனி இலகுவாக செல்லும் ஆகையால் அன்று இரவு சென்னைக்கு திரும்பினான்.
இரவு முழுவதும் காரில் பயணித்ததால், வீட்டிற்கு வந்ததும் உறங்கிவிட, காலை பதினோரு மணி சுமாருக்கு, அலைபேசி அழைத்தது. உறக்கத்தோடு எடுத்தவன், “ஹலோ”, என்க…
“அன்பு, ஒரு சின்ன ப்ராப்ளம், கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?”,  மறுமுனையில் அறிவழகி.

Advertisement