Advertisement

அத்தியாயம் 6
ஜாங்கிரியை பிய்த்துப் போட்ட மாதிரி இருந்த அறிவிப்புப் பலகையின் எழுத்துக்களில், சித்தூர் இனிதே வரவேற்றது. இன்னமும் கடந்த காலத்தில் இருந்து மீளாமல், அவனது இருப்பிடம் வந்து சேர்ந்த அன்பரசன், காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு, அவனது அறைக்கு சென்றான்.
பசித்தது, மதியம் அக்ஷியோடு திருப்பதி தேவஸ்தானத்தில் சாப்பிட்டதுதான், பின் பழைய நினைவுகளை அசை போட்டதில், சாப்பாடு கவனத்தில் வரவில்லை. முகம் காய் கால் சுத்தம் செய்துவிட்டு, ரூம் சர்வீஸுக்கு  அழைத்து சப்பாத்தி, டால் ஃபிரை, காய்கறி சலாட்  தருவித்து உண்டான். அலைச்சலில் உண்டான களைப்பினால், படுத்தவுடன் உறங்கிவிட்டான்.
மறுநாள் எழும்போதே, அன்பரசனைப் பார்க்க அவனது நிறுவனத்தின் சைட்-இன்ச்சார்ஜ் வந்து காத்திருந்தார். காலைக்கடன்களை  முடித்து விட்டு, “என்ன விஷயம், இவ்ளோ காலைல…?” என்று கேட்டான்.
“ப்ராஜெக்ட் ஈ.டி. இன்ஸ்பெக்ஷன் வர்றார், இன்னிக்கு மாஸ் ப்ரொடக்ஷன் இருக்குல்ல, பாக்கறதுக்கு வர்றார் போல. அதான் இன்ஃபார்ம் பண்ண வந்தேன்”, என்றார் அவர்.
“இதுக்கா இந்த நேரத்துல வந்தீங்க? போன்-ல சொல்லி இருக்கலாமே?”, எனவும்..
“போன் ஸ்விட்ச் ஆஃப், சார்”, என்ற பதில் கிடைத்தது.
“ஓஹ். நைட் சார்ஜ்-ல போட மறந்துட்டேன், சரி ஓகே. ஒர்க் எப்போ ஸ்டார்ட் ஆகும்?”, விபரம் கேட்டுக்கொண்டே அலைபேசியை சார்ஜ்-ல் போட்டு உயிர்பித்தான்.
“இன்னும் ஒன் அவர்ல ஸ்டார்ட் பண்ணிடனும் சார்”
“சரி. வந்துர்றேன்”, இன்று ஈ.டி. வந்து சைட்-டை பார்வையிட்டு அவர் திருப்தி ஆனால், அவர்கள் தரவேண்டிய நிலுவைத் தொகையைக் கேட்கலாம். உடனேயும் கிடைக்கும், என்ற வியாபாரக் கணக்குடன், அவனது அன்றைய தினம் தொடங்கியது. சொன்னபடி ஒரு மணி நேரத்தில் கிளம்பி சென்று விட்டான்.
ஒழுங்கற்ற கற்கள் நிரவிக் கிடந்த சாலைகளை, சீராக மினுமினுக்கும் அடர் கருமையான தார் சாலையாக அந்த இயந்திரம் சரசரவென மாற்றிக் கொண்டு வர, வேலை வேகமெடுத்தது. அங்கே மேற்பார்வைக்கென நிர்வாக இயக்குனரும் சற்று நேரத்தில் வர, அனைவரும் காரியத்தில் கண்ணாயினர். அன்றும் அதற்கடுத்த நாளும், வேறு எதைக் குறித்தும் யோசிக்க விடாமல்,  வேலை அன்பரசனை உள்வாங்கி கொண்டது.
வெறும் மேற்பார்வைதான் ஆனால் இயக்குனரே அருகில் நிற்பதால், ஏதேனும் தவறு ஏற்பட்டு தன் பேர் கெட்டுவிடக் கூடாதே என்ற சிறு பதட்டம் இருந்தது. அவர் ‘வெரி குட்’, சொல்லி, கை குலுக்கும்போதே, இனி அந்த நிறுவனத்தின் அடுத்தடுத்த ஒப்பந்தங்களில் இவனது பங்கு இருக்கும் என்பது நிச்சயமாக தெரிய, மகிழ்வாக உணர்ந்தான். வேலை நேரம் முடிந்ததும், கிளம்பி வசிப்பிடத்திற்கு சென்றான்.
அன்று இரவு நேரம் அறிவழகியிடம் இருந்து அக்ஷியின் சில புகைப்படங்கள் வந்தது, படத்தைப் பார்த்து, மெலிதாக சிரித்தான். நல்ல துடிப்பான குழந்தை, அறிவானவளும் கூட. அம்மாவைப் போலவோ? என நினைத்தவன், ‘அக்ஷி போட்டோஸ் மட்டும்தான்  அனுப்பி இருக்கா.. அவ  ஃபேமிலி போட்டோ கேட்டு இருக்கலாம்.’என்றும் யோசித்தான். ‘அடுத்தவன் பொண்டாட்டிய பாத்து என்ன பண்ணப்போற?’, மனம் இடித்துரைத்தது.
‘அடுத்தவன் பொண்டாட்டியாறத்துக்கு முன்ன, அவ என் பொண்டாட்டி’, முணுமுணுப்பாகக் கூறியவன், விரக்தியாய் முறுவலித்தான். அறிவழகி, ஒருகாலத்தில் என் மனைவி, தொட்டுத் தாலி கட்டிய, இல்லை.. இல்லை..  கழுத்தில் தாலி போட்டு மனைவியானவள். கணவன் மனைவி போல வேண்டாம் இருவரும் சாதாரணமாகவாவது என்றாவது பேசி இருப்போமா? குறைந்தது சேர்ந்து நின்றாவது இருப்போமா?’ யோசனை பின் நோக்கி சென்றது.
அன்பரசன் அறிவழகி திருமணம் நடந்த இரவு, அந்நிகழ்வு அமைதியைத் தந்ததாலோ என்னவோ, மறுநாள் அதிகாலையில் அறிவழகியின் அம்மா உறக்கத்திலேயே விடை பெற்றார்.
மருத்துவமனையிலிருந்தே இறுதி சடங்கிற்காக அவரது உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டது. சடங்குகளை ஊரிலிருந்து வந்திருந்த அறிவழகியின் சொந்தங்கள் செய்ய, சுற்று செலவுகளை விநாயகம் பார்த்துக் கொண்டார்.
சில உறவுகள், அவளது திருமணம் குறித்து அரைகுறையாக தெரிந்து கொண்டு வம்பு பேசினர்.  இன்னும் சிலர் கடமை தீர்ந்தது என்ற உணர்வோடு, இரண்டாம் நாளே அவரவர் ஊர்களுக்கு திரும்ப, அறிவழகியின் மாமா மட்டும் கூடவே இருந்தார். அவர், பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும்  நிறுவனத்திற்கு, பெயிண்டிங் காண்ட்ராக்டர். தற்போது அவரது ஜாகை மங்களூருவில்.  சுமாரான வருமானம் கொண்ட நடுத்தர வர்க்கம்.  அவர் விநாயகத்திடம், ” அறிவை எங்க ஊருக்கு கூட்டிட்டு போலாம்னு இருக்கேன். அது மனசு சரியாகறவரைக்குமாவது  எங்கிட்ட இருக்கட்டும்”, என்று அனுமதி கேட்க, விநாயகம் மறுத்து விட்டார்.
“இல்லீங்க, அது சரியா வராது, இனிமே அறிவழகிக்கு எதுனாலும் நாங்கதான் பாக்கணும், அப்பத்தான் நம்ம பையனுக்கும் பொறுப்பு வரும், இன்னும் பத்து நாள்ல காலேஜ் போயி நாலு பேரை பாத்து பேசினா நடப்புக்கு வந்துடும்.”
“அய்யா அது சின்ன பொண்ணுங்க….”, என்று அவர் தயங்க…
“தம்பி, எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு. பயப்படாம போங்க, அறிவு இனிமே எங்க சொத்து.”
“அது வந்து, சீர் சினத்தி ஏதாச்சும்… முழுசா இல்லனாலும், கொஞ்சம் கொஞ்சமா…”, என்று அவர் தயங்கி மறுக… தமக்கையின் இழப்பு,  மருமகளுக்கு திடீர் திருமணம் என்று அனைத்தும் எதிர்பாராமல் நடந்தால், அவர் கலங்கி போயிருந்தார்.
இதைக் கேட்ட விநாயகத்துக்கு தொண்டை அடைத்து பேச்சு வரவில்லை. கண்களில் நீர் திரையிட, “யோவ்,  எம்புள்ள பண்ணினத்துக்கு..”,என்று தழுதழுத்தவர், செருமி குரலை சரி செய்து, “நடு ரோட்ல, ஊரே பாக்க  உங்க அக்காவையும், அந்த பொன்னையும் பாத்து ‘இப்படித்தான் சம்பாதிக்கிறீங்களா’-ன்னு கேட்டாய்யா ஒரு பொம்பள. அதுக்கு நீ எங்களை வெட்ட வருவேன்னு பாத்தா, சீர் தரணுமான்னு கேக்கறேய்யா.”, என்று நெகிழ்ந்தவர், கண்களைத் துடைத்தபடி.. “உங்களால முடிஞ்சது செய்ங்க. இப்போல்ல, மெது மெதுவா, அதுங்க குடும்பம் காட்சின்னு ஆனதுக்கப்பறம் செய்ங்க”, என்று அவருக்கு விடை கொடுத்தார்.
அறிவழகியின் மாமா, அவளிடம் தன் கையில் இருந்த முப்பதாயிரத்தைக் கொடுத்து கிளம்புவதாக தலையசைக்க, அவளோ அவர் கைககளைப் பிடித்துக்கொண்டு அழுதாள். “மாமா, அம்மா இல்லாத நா இருந்ததே இல்ல மாமா..”, மேலும் தொடர முடியாமல் அவள் கேவி அழ, எஸ்தரும் கேத்தரினும் அவளை சமாதானம் செய்து அவரை வழியனுப்பினர். எனினும், அறிவழகியின் அழுகை நிற்க வெகு நேரமானது.
காரியம் முடியும் வரை, அறிவழகியை எஸ்தர் வீட்டில் தங்கியிருக்க அனுமதித்த விநாயகம், மறு நாள் அவளை வீட்டிற்கு அழைத்து வருவதாக முடிவெடுத்து, அதை கமலாம்மாவிடம் கூற, அவர் “வந்து.. நம்ம பையன் இப்போத்தான் படிச்சிட்டுதான் இருக்கான்,  தவிர நம்ம வீட்லயும் வயசுப் பொண்ணு இருக்கு, அதுக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு பாக்கும்போது, அன்பு பத்தி  ஒரு பேச்சு வருமில்ல?”, என்றார். அடுத்த அறையில் அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த அன்பரசன் காதில் இவர்கள் உரையாடல்கள் விழுந்தன. கை அனிச்சையாய் விளையாட்டில் இருக்க, மனம் முழுதும் பெற்றோர்கள் பேச்சில், கூடவே இனம் புரியாத பதட்டம்.
மனைவியை கோபமாக பார்த்து, “அதுக்கு.. அந்த பொண்ண அப்படியே விட்டுட சொல்றியா?”, என்று கேட்டார்.
“அதெப்பிடி முடியும்? அதுக்கா எட்டு சவரன்-ல தாலி போட்டது?”
“இப்ப என்னதான்டி சொல்ல வர்ற?”
“அந்த புள்ள படிப்பு முடியற வரைக்கும் ஹாஸ்டல்-ல தங்கட்டும், லீவு நாள்ல இங்க வந்து போகட்டும், அது படிப்பாளியாங்க, எதோ பேங்க் வேலைக்கு போகணும்னு ஆசையாம்.”, இவர்கள் பேசுவதை கேட்டிருந்த அன்பரசனுக்கும் அவளது வாங்கி வேலை கனவு குறித்து தெரியும், அவனது நண்பர்கள் குழாம் அதற்குத்தானே இருக்கிறது.
“ஏண்டி அம்மாவோட வீட்ல இருந்த பொண்ணை, ஹாஸ்டலுக்கு அனுப்பினா தவிச்சு போயிடாது?”
“அதெல்லாமில்ல, இங்க இருந்தாதான், அம்மா ஞாபகம் அதிகமா வரும், வேற இடம் போனா, மனசுக்கு மாறுதலாதான் இருக்கும். லீவு நாள்ல இங்க வந்துடட்டும்”, என்று அவர் ஆலோசனை வழங்க, அது விநாயகத்துக்கு சரியாகத்தான் பட்டது.  எப்படியும் இருவரும் படிப்பை முடிக்க வேண்டும், இங்கே இப்போது வந்தால் நிச்சயமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள சங்கடப் படுவார்கள். முக்கியமாக மகனுக்கு குற்ற உணர்ச்சி இருக்கும். காலம் இருவரின் காயங்களையும் மாற்றட்டும், என்று யோசித்தார் .
அதுவரை, அறிவழகி ஹாஸ்டலில் இருக்கட்டுமே?, நாம் அவ்வப்போது விடுதி சென்று அவளைப் பார்த்து வரலாம், விடுமுறை நாட்களில் இங்கே அழைத்து வந்துவிடவும் முடியும் என்று நாலையும் கணக்கிட்டு, மனைவியின் கருத்துடன் ஒத்துப் போனார். இதுகுறித்துப் அறிவழகியிடம் பேச, கேத்தரின் வீட்டுக்கு கணவனும் மனைவியும் தம்பதியாய் சென்றனர்.
அறிவழகியிடமும், எஸ்தர் வீட்டிலும் விபரம் கூற, அவள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றிருந்தாள். விநாயகம் அவளுக்கு விடுதிக்கு செல்வதில் விருப்பமில்லையோ என நினைத்து, “ஹாஸ்டல்-ல்லாம் பழக்கம் இல்லன்னு தோணுச்சுன்னா, நம்ம வீட்டிற்கு வந்துடும்மா.”, என்று அழைத்தார்.
அறிவழகியைப் பொறுத்தவரை, விநாயகம் முன்பின் பழக்கமில்லாதவர், அறிமுகமான முதல் நாளே மாமனார் என்று திடீர் சொந்தத்தை உருவாக்கிக் கொண்டவர். அவர் அருகிலிருக்கும் கமலாம்மா, வீட்டின் உரிமையாளர் என்றவரையில் தெரியும். அவ்வளவே. அவளின் அம்மா இறந்ததையே ஜீரணிக்க முடியாதவளுக்கு, சூழ்நிலை காரணமாக வந்த இந்த புதிய உறவுமுறை மனதில் ஒட்டாமல் அந்நியமாகவே இருந்தது. பட்டாம்பூச்சியாய் திரிந்து கல்லூரி படித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு, தொடர்ந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக வந்தால் அவளும்தான் என்ன செய்வாள்?
“இல்ல, அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல.”, தயங்கி தயங்கி வார்த்தைகள் வந்தது. ஆனாலும் மாமா என்று சொல்ல வரவில்லை.
நிலைமையை கையில் எடுத்த எஸ்தரின் அம்மா கேத்தரின், “நீங்க சொல்றதுதாங்க சரி, நாங்கூட இங்க எங்க வீட்லயே அறிவு பொண்ணை வச்சுக்கலாம்னுதான் நினச்சேன். ஆனா,
எதுத்தாப்புல இருக்கற அவங்க வீட்டைப் பாத்து பாத்து அழுதுகிட்டே இருக்கு. நாங்க வேற வீட்டுக்கு மாத்தி போலாம்னா.., தையல் கடை, வியாபாரம்னு நாலும் பாக்கவேண்டி இருக்கு.”, என்று அவரது கருத்தைக் கூறினார்.
அவரே தொடர்ந்து, “எப்படி இருந்தாலும் எம்பொண்ணு காலேஜ்ல இவளை தினமும் பாப்பாங்க . நீங்க ஏற்பாடு பண்ணுங்கம்மா, நாலு பொண்ணுங்களோட இருந்தா புத்தி வேற எதைப் பத்தியும் நினைக்காம இருக்கும்.” , என்றார் கமலம்மாவைப் பார்த்து.
அதன்படியே ஏற்பாடுகள் செய்யப்பட, அடுத்த சில நாளில் அறிவழகி எஸ்தரின் வீட்டிலிருந்து நேராக ஹாஸ்டல் சென்றாள். அது நல்ல வசதியான காற்றோட்டமுள்ள விடுதியாக இருந்தது, இவளது மனஇறுக்கத்தை சற்றே குறைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு வந்து கொண்டிருந்தாள் அறிவு. இரண்டாவது வருட தேர்வுக்கு [4th semester], இரண்டு மாதங்களுக்கும் குறைவாக இருந்ததால், வேறெதிலும் சிந்தனையைச் செலுத்தாமல் படிப்பில் தனது முழு கவனத்தை செலுத்தினாள்.
தேர்வு முடிந்ததும், விநாயகம் வந்து அவரது வீட்டிற்கு கூட்டிச்சென்றார். அறிவழகியை மருமகளாக அன்றி, மகளாகவே ஏற்றுக் கொண்டார் அவர். இன்றளவும் அவரது மனப்பான்மை அதுவே.
அதற்குள், அன்பரசன் தனது கடைசி செமஸ்டர் ப்ராஜெக்ட் செய்யவென, கோவையில் இருந்த மாமா வீட்டிற்கு, கண்ணனுடன் சென்று விட்டான்.  உண்மையில், அவனுக்கு தந்தையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை. விநாயகத்தின் கடைக்கு வருபவர்கள், அவருக்கு ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என்று நடந்த சம்பவத்தை மறக்க முடியாமல் ஆக்கினர். அவர் மனம் புழுங்கி, யாரிடமும் பேசுவதைக் குறைத்துக் கொண்டார்.
அவர் உள்ளே என்றால், இவன் வெளியே என்று கண்ணாமூச்சி ஆட்டம் இருவருக்குள்ளும் நடந்தது. அவர் இவனிடம் பேசுவதே ஒற்றை வார்த்தையாக இருந்தது, இவனோ ‘ம்ம்’, ‘சரி’ யைத் தவிர எதுவும் பேசுவதில்லை.
கமலமாவிற்கும் அதே நிலைதான், ஆனால் வீட்டிலிருப்பதால் அதிகம் தொல்லையில்லை. அன்பரசனின் தங்கை ப்ரவீனா, +2 மாணவி, கறார் குணம், பேச்சே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்பதாகத்தான் இருக்கும். அவளைப் பொருத்தவரை நடந்தது ஒரு விபத்து, அவ்வளவே. தோழிகளோ, அவர்களின் பெற்றோரோ அண்ணனைப் பற்றி விபரம் (வம்பு ) கேட்டால், ‘அண்ணா பத்தி எனக்கு தெரியாதுங்க, படிக்கறதுக்கே நேரம் பத்தல, அம்ரிதா இதெல்லாம் பேசுதா என்ன? அதா மேத்ஸ்-ல சென்டம் போச்சு. அவளை மிஸ் ரொம்ப திட்டினாங்க, சொல்லலையா?”, பேச்சை திருப்பும் சாமர்த்தியம் இருந்தது அவளுக்கு.

Advertisement