Advertisement

பின் காலையில் அப்பா அடித்தது, மயங்கி விழுந்தது ஞாபகம் இருந்தது.  அப்பா, எப்போதோ சிறுவயதில் அவனை அடித்ததுண்டு, ஆனால் அன்பரசனுக்கு சற்று விபரம் தெரிந்தபின் கை நீட்டியதில்லை. பார்வையில் கண்டனத்துடன், வார்த்தையை சாட்டையாய் சொடுக்குவாறே தவிர, பிள்ளை செய்யும் தவறுகளுக்கு அடிக்கும் தந்தையில்லை இவர்.
இன்னமும் மதமதவென மூளையில்  போதையின் தாக்கம் இருந்தும், அவர் அடித்ததில் வலி இருந்தது. ஏன் அடித்தார்? என்று யோசிக்க ஆரம்பிக்கும்போதே, டாக்டர் வந்தார், இவனது அசைவை எதிரே அமர்ந்திருந்த நர்ஸ் தெரிவித்திருப்பார் போலும்.
“எப்படி இருக்கீங்க, அன்பு?”, என்றார்.
“தலை வலிக்குது, உடம்பும் வலிக்குது டாக்டர்”, என்றான்.
“ஆல்கஹால் எடுத்து, தொடர்ச்சியா வீட் [weed] எடுத்திருக்கீங்க. தல வலிக்காம என்ன பண்ணும்?”, என்று தீவிரமாக கூறியவர், அடி பட்டு தையல் போட்ட இடத்தை மெதுவாக அழுத்திபார்த்து வீக்கம் உள்ளதா என பரிசோதித்தார்.
“இன்னும் கிட்டினஸ் இருக்கா?”
“ஆமா. டாக்டர், தல சுத்துற மாதிரி இருக்கு.”
“அது நீங்க எடுத்த ட்ரக்-கோட எபெக்ட். இன்னிக்கு ஃபுல்லா இப்படித்தான் இருக்கும். படிக்கற வயசுல, டைவர்ஷன் வந்தா, வயசானதுக்கப்பறம் ஓய்வா இருக்க வேண்டிய நேரத்துல, மாடு மாதிரி உழைக்க வேண்டி இருக்கும், இன்ஜினியரிங் படிக்கிறீங்க.. இது கூட தெரியல”
“இல்ல. டாக்டர், ஒரு பார்ட்டி.. ஃப்ரென்ட் கொடுத்தான், மறுக்க முடில”.
” ஃப்ரென்ட் விஷம் குடுத்தா? வாங்கி சாப்பிடுவீங்களா? நீங்க கெட்டு போறதுக்கு மத்தவங்கள காரண காரியமா சொல்லாதீங்க.”, என்று தீவிரமாக சொல்லி…, “நீங்க எடுத்துக்கிட்ட மதுவோட தாக்கம் உங்க உடம்புல இன்னும் ஒரு வாரத்துக்கு இருக்கும். கேன்னபிஸ் தாக்கம், அதான் நீங்க அடிச்ச டோப் எபெக்ட் ஒரு மாசம் வரை இருக்கும். உங்கப்பா விநாயகம் முகத்துக்காக பாக்கறேன், இல்ல.. இப்போ கம்பி எண்ணிட்டு இருப்பீங்க”, சற்று கடுமையாகவே சொன்னார்.
கேட்டான் அன்பரசனுக்கு முகம் சிறுத்தது.
“ஒருநாள் நல்லா ரெஸ்ட் எடுங்க. தலைல அடி பட்டிருக்கு, ஸ்கேன்-க்கு  சொல்லிருக்கேன்.  பாத்துட்டு நாளைக்கு போலாம்”, என்றார்.
அன்பரசனுக்கு இன்னும் ஒருநாளா? என்று தோன்றியது. டாக்டர் சென்றபின் கமலாம்மா வர, “எங்கே போனீங்க? யாருமே பக்கத்துல இல்ல..”, என்று டாக்டர் மீது இருந்த கோபத்தை அவரிடம் காண்பித்தான்.
“அன்பு… யப்பா ராசா.”, என்று கதறி வந்த கமலாம்மா, அவன் முகத்தை தடவி வாஞ்சையாய் பார்த்தார். “எழுந்துட்டியாப்பா?”, என்று கேட்க..
” ம். ம். “, என்று அவர் கைகளை தட்டிவிட்டான்.
“இப்ப எதுக்கு இங்க என்ன கூட்டிட்டு வந்திருக்கீங்க?, அடிபட்டா தையல் போட்டு வீட்டுக்கு கூட்டிப் போக வேண்டியதானே? சும்மா போறவன் வர்றவன்ல்லாம் பேசறான்”, என்றவன் தொடர்ந்து..
“எங்க உங்க வீட்டுக்காரர்?, மாட்ட அடிக்கிற மாதிரி அடிச்சுட்டு.. பம்மிக்கிட்டு இருக்காரா? தலைக்கு மேல் வளர்ந்த புள்ளைய….”, அன்பரசன் முடிக்கும் முன்னே விநாயகம் உள்ளே வந்துவிட்டார்.
“நீ புள்ள இல்லடா நான் போன ஜென்மத்துல செஞ்ச பாவம்..”, என அவனைப்பார்த்து இரைந்து.., “கமலா.. அந்தம்மாவுக்கு சீரியஸா இருக்கு, ராத்திரி தாண்டாதுன்னு சொல்றாங்க. நீ கூட இரு வா”, என்றார்.
“யார்மா?, நம்ம சொந்தக்காரங்க யாராவது இங்க அட்மிட் ஆகி இருக்காங்களா?”, என்று கேட்டான்.
“உன்னால தான்டா உன்னால  தான் அவங்க இங்க வந்து இப்படி படுத்திருக்காங்க”, மீண்டும் சத்தம் போட்டவர், நின்றால் இன்னும் பேசுவோம் என்பது தெரிந்து அந்த அறையில் இருந்து வெளியேறினார்.
“என்னம்மா விஷயம் எதுக்கு இப்படி கத்தறாரு?”, என்று குழப்பமாக கேட்டான்.
“நேத்து நைட் நீ எங்க படுத்து இருந்த தெரியுமா?”
“ஸ்டோர்ல ஒருத்தங்க வட்டிக்கு வாங்கி, கடன் கட்ட முடியாம வீட்டை அப்படியே விட்டுட்டு,  ஊரை விட்டு ஓடிப் போனாங்களே.. அந்த வீட்ல தான் படுத்து இருந்தோம் ஏன் என்ன இப்ப அதுக்கு?”,
கமலா விசும்பி அழுதார், “இல்லப்பா இல்லை, நீ சுகந்தி வீட்டுக்கு போகாம.. அதுக்கு நேர் கீழே இருந்த அந்த பொண்ணு அறிவழகி வீட்டுக்கு போயிட்ட. அந்தப் பொண்ணுக்கு நீ வந்தது தெரியுமா தெரியாதான்னு,  எனக்கு தெரியல.”, மனம் கலங்கியபடி சொன்னார்.
இடியாய் இறங்கிய செய்தியை கேட்டதும் மனம் பதறி, “அய்ய. இல்லம்மா, நான் மட்டும் தனியா போகலையே? இன்னும் மூணு பெரும் சேர்ந்து தான போனோம்?”, என்று மறுதலித்தான்.
“இல்லடா, அவங்கல்லாம் மேல போயிட்டாங்க. நீ பூட்டிட்டு வர்றேன்னு சொன்னியாம். ஆனா வரவே இல்லன்னு பசங்க சொல்றாங்க.”
“காலையில சுகந்தி வீட்டு கதவு திறந்து இருக்கறத பாத்துட்டு, அவங்கதான் வந்துட்டாங்கன்னு நினச்சு  அந்த வட்டி பொம்பள ஸ்டோருக்கு வந்திருக்கு. மேல போயி அங்க அவங்க இல்லன்னு தெரிஞ்சு அந்தம்மா கீழே வந்தபோது.., நீ அந்த பொண்ணு வீட்டு கதவை திறந்து வெளியே வந்தியாம். அப்போதான், அறிவழகியோட அம்மாவும்.. தையல் கடையில் இருந்து வீட்டுக்கு வந்திருக்காங்க.”
“என்ன நடந்துச்சோ தெரில.அந்த பொம்பள கன்னா பின்னான்னு பேசிடுச்சாம். ஊரே கூடி போச்சாம்டா. சத்தம் கேட்டு இந்த பொண்ணும் வெளில வந்திருக்கு போல. ரொம்ப தப்பா பேசிடுச்சாம்பா”
“அப்பறம், இந்தம்மா [அறிவு அம்மா] வேலைக்கு போயிருக்கு. அந்த   இடத்துல தற்கொலைக்கு முயற்சி பண்ணினதா சொல்லிதான் இங்க கூட்டிட்டு வந்தாங்க, கொதிக்கிற எண்ணை,அப்படியே மேல கொட்டி.. தீ புடிச்சுகிச்சு-ன்னு சொல்றாங்க. என்ன பண்றதுன்னு தெரியாம, உங்கப்பா அந்தம்மா வைத்தியத்துக்கு செலவு பண்ணிட்டு பாத்துகிட்டு இருக்காரு. நல்லா ஆயிடும்னா பரவால்ல. ஆனா, தீக்காயம் ஆழமா இருக்கு, ராத்திரிக்கு தாண்டாதுன்னா, எல்லா பழியும் உம்மேலதானடா விழும்?”, என்று கண்ணீரும் கம்பலையுமாக சொல்லி முடித்தார்.
அன்பரசன், திக்ப்ரமை பிடித்ததுபோல அமர்ந்திருந்தான்.
அப்பா அவனை அடித்ததில் தப்பே இல்லை என்று இப்போது தோன்றியது. எப்படி இது நடந்தது? அந்த ஸ்டோர் வீட்டின் மெயின் கேட்டை பூட்டி விட்டு வருவதாக சொல்லி நண்பர்களை மேலே அனுப்பி இருப்பேனோ? ஏன்டா.. ஒருத்தனாவது நின்னு கூட்டிட்டு போயிருக்கக் கூடாது? மனதுக்குள் நண்பர்களை வைதவன், “அம்மா. நான் அவங்கள பாக்கலாமா? என்னை அறியாம, தெரியாம நடந்துச்சுன்னு சொல்லி மன்னிச்சிக்கோங்கன்னு கேட்டுடறேன்மா”, கிட்டத்தட்ட அழுதான்.
“உனக்கே உடம்பு சரியில்லையேப்பா?, ஏதாவது திட்டிட்டாங்கன்னா எனக்கு தாங்காதுடா”, என்றார் கமலா ஆற்றாமையுடன்.
“பரவால்ல மா.. தப்பு பண்ணினா.. இதெல்லாம் பழகித்தான் ஆகணும் கொஞ்சம் என்னை புடிசிக்க,  நான் சமாளிச்சு வர்றேன்”, என்று தீர்மானமாக கிளம்பினான்,
அங்கே பிராணவாயு குழாய் பொருத்தப்பட்டு, அறிவழகியின் அம்மா,  படுக்க வைக்கப்பட்டு இருந்தார். அவர் மேலே, கழுத்திலிருந்து கால்வரை உடலை மறைப்பதற்காக கண்ணாடி பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதன் மேலே துணி போர்த்தி இருந்தார்கள். . அவரோடு பிணைக்கப்பட்டிருந்த ஒயர்கள், திரையில் அவரது உடல்நிலையை எண்களாக காட்டின.
அவரது இடது கையைப் பிடித்துக்கொண்டு அறிவழகி அழுது கொண்டிருந்தாள். கண்ணீர் வரவில்லை, நீர் வற்றியிருந்தது போலும், மிகவும் துவண்டிருந்தாள். அவளுக்கு துணையாக,  பின்னால் எஸ்தரும், அவளது அம்மா கேத்தரினும் நின்றிருந்தனர். சற்று தள்ளியிருந்த நாற்காலியில் விநாயகம் அமர்ந்திருந்தார்.
அன்பரசனையோ, அவனை தோள் பிடித்து கூட்டி வரும் அவனது அம்மாவையோ, யாரும் கவனிக்கும் மன நிலையில் இல்லை. அந்த பெண்மணியை.. இவ்வாறான நிலையில் பார்த்தவுடன், அன்பரசனுக்கு வேதனை மண்டியது. ஐயோ.. என்னாலா? நான் செய்த ஒரு சின்ன தவறினாலா? இவருக்கு நான் என்னவென்று  ஆறுதல் சொல்ல முடியும்?  என்று மருகினான். மெல்ல நடந்து அப்பாவின் அருகே சென்று நின்று கொண்டான்.
அறிவழகியின் அம்மாவிற்கு உணர்வு வருவதும் போவதுமாக இருந்தது. ஒவ்வொரு முறை நினைவு வரும்போதும், மகளை பார்த்து எதோ பேச முனைந்தார். முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் போட்டிருந்த படியால், அவரால் பேச முடியவில்லை. இரண்டு நிமிடத்தில் மீண்டும் விழிப்பு வர, அறிவழகியின் கையில் இருந்து தனது கையை விடுவித்து மாஸ்க்-கை சிறிது நீக்கி, “அறிவு, அழுவாத, பயப்படாத, ஒன்னும் ஆகாது”, என்று விட்டு மூச்சு வாங்க…மீண்டும் மாஸ்க் போட்டுக் கொண்டார்.
கேத்தரின் அருகே வர, தோழியைப் பார்த்ததும் அவருக்கு அழுகை வந்தது. “அறிவை பாத்துக்க… கல்யாணம் காட்சி பண்ணாத..  ஒத்தப் புள்ளையா விட்டுட்டு போறேன்”, என்று குலுங்கினார். கேத்தரினும், எஸ்தரும் சேர்ந்து அழ, விநாயகம் அனைவரையும் கலைத்தார்.
அறிவழகியின் அம்மாவின் படுக்கை அருகில், ஒரு தீர்மானத்துடன் முன் வந்தவர்… “உன் பொண்ணை நான் பாத்துக்கறேன், தங்கச்சி.  இதோ இப்பவே உன் கண் முன்னாடியே, என் பையனுக்கும்  உன் பொண்ணுக்கும் கல்யாணம் நடக்குது பாரு”, என்று விட்டு நிமிர்ந்தவர், தீர்க்கமாக அன்பரசனைப் பார்த்தார். அவன் ஆமோதிப்பாக நடந்து வந்தான். கமலம்மா திகைத்துப் பார்க்க, ‘தாலிய கொடு’ என்றார் மனைவியைப் பார்த்து.
அவர் ஒரு அடி பின் நகர…, “இப்போ தர்லைன்னா.. நாளைக்கி நிரந்தரமாவே கழட்ட வேண்டியிருக்கும்”, மனைவிக்கு மட்டும் கேட்குமாறு உறுமினார். அவரின் கோபத்தை கண்டு பயந்தவர், ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களையும் மனதுக்குள் தியானித்து, அவரது திருமாங்கல்யத்தை கழட்டி அன்பரசனின் கையில் கொடுத்தார்.
மறு பேச்சில்லாமல், அறிவழகி அமர்ந்திருந்த பக்கமாக சென்ற அன்பரசன், அவர்களை சுற்றி இருந்தவர்களின் மனங்கள் மத்தளமாய் வாசிக்க, அத்தனை கண்களும்  நீரை அட்சதையாக சொரிய, தீ தின்ற உடலின் மீதமிருந்த அக்கினியை சாட்சியாக வைத்து, அவளை மனைவியாக வரிக்கும் வண்ணம் மாங்கல்யத்தை அணிவித்தான். மருத்துவமனையில் வாசலில் இருந்த சிறிய கோவிலில், எந்த பட்சி அமர்ந்ததோ, இல்லை தெய்வாதீனமோ, அந்த இரவு வேளையில், அங்கிருந்த கோவில் மணி அடித்தது.

Advertisement