Advertisement

அத்தியாயம் 5
“பாய்ங்.. “, “ஹூம்……”,  என்ற விதவிதமான ஹாரன் ஒலிகள் பின்னாலிருந்து ஒலிக்க.. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அன்பரசன் நிகழ்காலத்துக்கு வந்தான்.
போக்குவரத்து நெரிசல் இல்லாத அந்த நெடுஞ்சாலையில்.. இவன் ஒருவன் மாத்திரமே மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தான். அதை உணர்த்துவதற்காகவே மற்ற வண்டிகளின் ஒலிப்பான் அடித்தது. காரணம் சில நேரங்களில் உறக்கக் கலக்கத்துடன் வாகனம் ஓட்டும் டிரைவர்கள் இப்படித்தான் வண்டியை மெதுவாக நடத்துவர்.
அன்பரசனும் மற்றவர்களை போல ஆக்சிலேட்டரை அழுத்தி நூறைத் தொட.. கார் பறந்தது. பண்பலையில் பாடலை கேட்பதற்கு வானொலியை உயிர்பித்தான். சிறிது நேரத்திற்கெல்லாம், அலைபேசி இசைக்க… ப்ளூடூத் வழியாகவே பேச இயலும் என்பதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லை என்ற காரணத்தாலும், காரை நிறுத்தாமல், தொடர்பு கொண்டான்.
“ஹலோ மாமா?”, வீட்டிலிருந்து அழைப்பு.
“சொல்லு சுசி..”
“மாமா உங்க ஆபிஸ்லேர்ந்து மூர்த்தி வந்தாரு, ரெண்டு லட்சத்துக்கு செக் கேட்டாரு, கொடுத்தேன்.”
“ஆங். சரி, வேறென்ன விஷயம்?”
“வேற ஒண்ணுமில்ல, இத சொல்லத்தான் போன் பண்ணினேன்”
“சரி அப்பா வந்துட்டாரா?”
“ம்ம். ஹால்ல சின்னவனோட மல்லுக்கட்டிட்டு இருக்காரு”
“ஹ ஹ, ரிமோட்டுக்கா? அவன் ஹங்காமா பாக்கறானா?”
“ஆமா, தினமும் நடக்கிற அதே கூத்துதான். பெரியமாமா நியூஸ் பாக்கணும்னு கேக்கறாங்க, இவன் அடம் பண்றான்”
சில நொடி யோசித்து, “சுசி, போன [phone] அப்பாட்ட குடு”,என்றான் சீரியஸாக.
“மாமா…”, என்று சுசி தயங்க… விநாயகம் அன்பரசனோடு பேசமாட்டார் என்பதைத்தான் சுசித்ரா, வந்ததிலிருந்து  இத்தனை வருடங்களாய் பார்த்துக் கொண்டிருக்கிறாளே?
அவளது தயக்கத்தை உணர்ந்தவனாக.. “அவர் பேச வேணாம், நான் பேசறதை மட்டும் கேக்க சொன்னேன்-னு சொல்லி, போனை அவர்ட்ட குடு”, என்றான்.
“ம்ம் “, என்று விட்டு.. மெட்டி ஒலி எழும்ப சுசி நடந்து செல்வது கேட்டது..
“மாமா.. அன்பு மாமாட்ட இருந்து போன்”, என்றபடி அலைபேசியை நீட்டினாள்.
அதுவரை பேரனோடு பேசி விளையாடிக் கொண்டிருந்தவர், முகம் கடுத்து.. “என்னவாம்?, எதுவாயிருந்தாலும் நீ கேட்டு சொல்லு. “, வார்த்தைகளில் கத்தி வீசினார்.
“மாமா.. நீங்க அவங்க பேசறதை கேட்டா போதுமாம்..”, மெதுவாக சுசித்தரா சொல்ல..
காரணமில்லாமல் இவ்வாறு மகன் சொல்ல மாட்டானே? என்ற யோசனையோடு, அரைமனமாய் போனை வாங்கி… “ம்ம்ம் “, என்றார்.
“அப்பா… நான் அந்த பொண்ணை பாத்தேன்பா”, ‘கண்டேன் சீதையை’என்று ராமரிடம் கூறிய அனுமாரைப் போல பட்டென விஷயத்தைக் கூறினான்.
அன்பரசன் சொன்னதை சில நொடிகளில் கிரகித்த விநாயகத்திற்கு . “நிஜமாவா? அறிவுதானா? நல்லா பாத்தியாடா? டேய்… என்ன ஏமாத்தனும்னு பொய்.. கிய் எதுவும் சொல்லலையே?”, மகிழ்ச்சி தாங்காமல் பட பட வென பொரிந்தார். மகனுடன் பேசக் கூடாது என்ற உறுதியெல்லாம் தகர்ந்து விட்டது. அவன் சொன்ன விஷயம் அப்படி…
அவரது குரலை கேட்ட அன்பரசனுக்கு கண்களில் நீர் திரையிட்டது. எத்தனை வருடங்கள் கழித்து இவனிடம் பேசுகிறார்? அதுவும் மிக உரிமையாய் ‘டா’ போட்டு?, “அப்பா…”, அவனுக்கும் குரல் கரகரத்தது. “ஆமாப்பா.. அழகிய நானே பாத்தேன், பேசினேன்பா. அது வெளிநாட்ல வேலைக்கு போயி செட்டில் ஆயிடுச்சுப்பா. வீடு நல்ல வசதிப்பா”, என்று இவன் கூற…
“டே.. கூட்டிட்டு வந்துடுடா… எம்மருமவள கையோட கூட்டிட்டு வந்துடு”, என்று அவர் உற்ச்சாகமாக உரத்து கூற, அருகில் இருந்த சுசித்தரா, மற்றும் அலைபேசியில் கேட்ட அன்பரசன் இருவருமே அதிர்ந்தனர்.
‘ஆங்…? அவ வந்தா.. அப்போ நான்? என் பசங்க?’, என்று சுசித்ரா மனதுக்குள் மிரள…
‘கூட்டிட்டு வர்றதா? அவ புருஷன்-கிட்ட என்னன்னு சொல்லி கூப்பிடறது?’, அன்பரசன் திகைக்க…
“என்னடா? என்ன பிரச்சனை சொல்லு? வேலையா? நோட்டீஸ் கொடுக்கனுன்னு யோசிக்குதா? எவ்வளவு காசுன்னாலும் ஈடு கொடுத்துடலாம்னு சொல்லு. இல்ல.. கண்டிப்பா வேலை பாக்கணும்னு சொல்லுதா? இங்க வந்து பாக்க சொல்லுடா. நம்ம ஊர்ல இல்லாத வேலையா?, நானே வாங்கித் தர்றேன்-னு சொல்லு “,
தயக்கமாக… “அதெல்லாம் இல்லப்பா”…. என்க,
அம்மாவின் இறப்புக்கு காரணமானவனின் மேல் கோபமிருக்குமோ? என நினைத்து, “ஓ. உங்கூட வர தயக்கமாயிருக்கும். நான் வர்றேன். இப்போவே வர்றேன்”, என்று பெரியவர் யோசனை பரபரவென எங்கெங்கோ செல்ல…
“அப்பா… அறிவழகிக்கு கல்யாணமாயிடுச்சு. இடுப்பொயரதுக்கு ஒரு குழந்தை கூட இருக்கு. “, என்றான் மெதுவாக.
“ஓஹ்…”,பொங்கிய பாலில் குளிர் நீர் தெளித்தது போல, சட்டென அமைதியான விநாயகம், சில நொடிகளை மவுனமாக கடந்து, “கல்யாணமாயிடுச்சா? ம்ம்.. சரி விடு”, என்றவர்… மீண்டும், “டேய்.. ஏதும் பொய் சொல்லலையேடா?”, மீண்டும் சந்தேகமாக கேட்டார்.
சற்றே கடுப்பானவன், “ப்பா.. நாளைக்கு போட்டோவே எடுத்து அனுப்பறேன்” என்றான்.
“டே டே.. வேணா வேணாம். நீ பாட்டுக்கு போட்டோ எடுக்கறேன்னு போயி.. அது அவங்க வீட்ல ஏதாவது வம்பாயிடப் போகுது.”என்றார் அவசரமாக.
“நீதான் நம்ப மாட்டேங்கிறியே?”, என்றான் சடைத்தபடி.
“ம்ப்ச் போட்டோல்லாம் வேணாம்”, என்றவர்.. “அது வேறென்னுமில்ல, நம்ம வீட்டு பொண்ணுன்னு நினச்சே பழகிட்டேம்பாரு, அதான். வேற இடத்துக்கு போச்சுன்ன உடனே கஷ்டமாயிடுச்சு”, “ஹூம்.. எப்படியோ நல்லபடியா இருந்தா சரி” ஒரு பெருமூச்சுடன் கூறியவர், “நீ எப்போ வருவ?”, என  சம்பிரதாயமாக கேட்டார்.
வெளியூரில் வேலை நிமித்தம் சென்றவர்களிடம் கேட்கப்படும் மிகச் சாதாரணமான கேள்விதான். பொதுவாக விநாயகம், அன்பரசனது இருப்பைக் குறித்து கவலையே பட மாட்டார். வர்றியா வா போறியா போ என்பது போலத்தான் இருக்கும் அவரது நடவடிக்கை. தேவைப்பட்டால் அவனைப் பற்றி மனைவி கமலா அல்லது மருமகள் சுசித்ரா விடம் கேட்டு தெரிந்து கொள்வார். மிகுந்த அவசரமென்றால், அவனது அலுவலகத்தில் வேலை செய்யும் மூர்த்தியிடம் கேட்டு தெரிந்து கொள்வார். அன்பரசனிடமே அவன் வருகை குறித்து அவர் கேட்பது இதுவே முதன் முறை, பேசுவதே வெகு நாட்கள் கழித்து எனும்போது, அவரின்  இந்த சிறிய அக்கறைப் பேச்சு, அன்பரசனை அசைத்தது. .
உணர்ச்சி மேலிட அன்பரசன், வார்த்தை வராமல்  தடுமாறினான். “ப்பா…”, என்றுவிட்டு செறுமி தொண்டையை சரி செய்து, “இன்னும் ஒரு வாரத்துல வர்றேன்ப்பா”.என்றான்.
அவருக்குமே மகன் அங்கே தடுமாறுவது தெரிந்தது, “ம். சரி”, என்று போனைத் துண்டித்தார். அவருக்கு அறிவழகிக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது என்பதை ஜீரணிக்க சற்று அவகாசம் தேவைப்பட்டது.
தவிர, கல்லூரியில் படிக்கும்போது பேசிய அன்பரசனின் குரலுக்கும் இப்போது பேசும் தன் மகனின் குரலிலும் இருந்த வித்தியாசம்? இப்போதைய பேச்சில், அதில் தெரிந்த நிதானத்தில், தெளிவு இருந்தது. முன்னமே வந்திருக்கக்கூடாதா இந்த தெளிவு? ஹ்ம். மனம் நொந்து, அமைதியாக படுக்கை அறைக்கு சென்றார்.
அவரையே பார்த்துக் கொண்டிருந்த சுசித்ரா, ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்க்க, அவர் படுக்க செல்வதை பார்த்தாள். இருவரின் பேச்சில் விஷயம் கிரஹித்தவளுக்கு, அறிவழகி திருமணமானவள் என்று கூறியதும்தான் உயிர் வந்தது. ஆனாலும் ஒரு வார்த்தை மாமா சொல்லி இருக்கலாம், என்ற எண்ணத்துடன் அவளும் அடுத்த வேலையை பார்க்கப் போனாள்.
அவ்விடம் தொடர்பு துண்டிக்கப்பட, அன்பரசன் இருள் கவிழ்ந்திருந்த சாலையை வெறித்தான். கடைசியாக அப்பா எப்போது என்னிடம் பேசினார்?
அன்று.. மருத்துவமனையில் இருந்தபோதா? ஆம்..அன்றுதான் என்னிடம் நாலு வார்த்தை சேர்ந்து பேசினார். அதன் பின் ஆம் இல்லை போன்ற பேச்சுக்கள் தான். தன் வாழ்க்கையை மட்டுமன்றி அறிவழகி, அவளது அம்மா அனைவரையும் மொத்தமாய் புரட்டிப் போட்ட  அந்த நாள்…
[கொசுவத்தி சுருள் போட்டுக்கோங்கப்பா, கூட கொஞ்ச ஸ்டாக் வச்சுக்கோங்க.. அப்பப்போ தேவைப்படும். ஹ ஹ [@harinidilip] நோ வெப்பன்ஸ்.. ]
மருத்துவமனையில் அன்பரசன் கண் விழித்த போது அந்தி சாய்ந்திருந்தது. தலை விண் விண் என்று வலித்தது. தடவி பார்த்ததில் தலையில் கட்டு போடப்பட்டிருந்தது தெரிந்தது. இரத்தப் பரிசோதனை முடிந்து, சலைன் ஏற்றி இருந்திருப்பார்கள் போலும், இடது கையில் வென்ஃபிளான் எடுக்கப்படாமல் இருந்தது. எழுந்திருக்க முயற்சித்தான், தலையை தூக்கும்போதே, பாரமாக இருந்தது. ஸ்பெஷல் வார்டு போலிருக்கிறது, இரண்டு நோயாளிகளுக்கு ஒரு பெரிய அறை என்று இருந்தது. இரு படுக்கைகளுக்கு நடுவே திரை மறைத்திருந்தது. எதிரே பெரிய டேபிளில் செவிலியர் இருவர் அமர்ந்து நோயாளிகளின் விபரங்களை பூர்த்தி செய்தபடி இருந்தனர். தலைதூக்கி பார்த்தவன், மீண்டும் படுத்து விட்டான்.
இவ்வளவு பலகீனமாக இருக்கிறேனா? எப்போது சாப்பிட்டேன்? என யோசித்தபோது, ‘நேற்று இரவு, பாட்டியின் போது, பொரித்தது, வறுத்தது என சைட் டிஷ் எடுத்ததுதான், பின், ஸ்டோருக்கு படுக்கப் போகும் வழியில், முதன் முறையாக டோப்  [புகையிலைக்கு பதிலாக கஞ்சாவை திணித்து விற்கப்படும் சிகரெட் ] ஒன்றை புகைத்ததும், மேகத்தில் பறப்பதுபோன்ற உணர்வும் வந்தது வரை தெரிந்தது.

Advertisement