அத்தியாயம் 3
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அறிவழகிக்கு, அலைபேசி அழைப்பில் விழிப்பு வந்தது, உறக்கம் இன்னமும் கலையாதிருக்க, கண்களைத் திறவாமல் கைகளால் அளைந்து, பேசியை எடுத்துப் பார்த்தாள். அதில் எண் மட்டுமே தெரிய, “யாரது காலங்காலைல?” சன்னமாக முனகியபடி.. “ஹலோ”, என்றாள்.
அவளது குரலில் இருந்த கரகரப்பில், தூக்கியவளை எழுப்பி இருக்கிறோம் என்பது புரிந்து, “ஹாய்.. இன்னுமா எந்திரிக்கல?”, என்றான் அன்பரசன்.
அவன் குரல் கேட்டதும், சட்டென உற்சாகம் முகிழ்க்க, சிறு முறுவல் ஒன்று ப்ரயத்தனமில்லாமல் அறிவழகியின் முகத்தில் வந்தமர்ந்தது. கண் விழித்தவள்… பேசியில் நேரம் பார்க்க, அது காலை எட்டு நாற்பது என்று காண்பித்தது.
“ஓ… குட் மார்னிங், நேத்து அலைஞ்சதுல ரொம்ப டையர்டு, அக்ஷி  இன்னும் தூங்கறா”, என்றாள்.
“டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? அப்பறம் கால் பண்ணட்டா?”
“இல்லல்ல. எழுந்தாச்சு, சொல்லுங்க. என்ன விஷயம்?”
“அக்ஷி தாத்தா பாட்டி வந்துட்டாங்களா-ன்னு கேக்கத்தான் போன் பண்ணினேன்.”
“ஆங்.. நைட்டே வந்துட்டாங்க. அநேகமா இன்னிக்கு மதியம் வரை ரெஸ்ட் எடுப்பாங்கன்னு நினைக்கிறேன். நாளைக்கு பூஜைக்கு தேவையான ஏற்பாடெல்லாம், சாயங்காலமா பண்ணுவாங்களா இருக்கும்.”, என்றாள்.
“பூஜையா ? என்ன பூஜை?”, என்று மறுமுனை கேட்க…,
“அது எதோ ஹோமம்… ம்ருத்யு ஹோமம் ன்னு, சுதர்சன்க்குன்னு என்னமோ சொன்னாங்க.”,
“ஓ.. கோவில்யா செய்யறாங்க?”, என்று கேட்டான். அவனறிந்தவரை, வருடா வருடம் ஆயுத பூஜை அன்று தனது நிறுவனத்திற்கு, தந்தையின் கடைகளுக்குச்  செய்யும் கணபதி ஹோமம் தெரியும், சுதர்சன ஹோமம் என்று யாரோ சொல்லி  கேள்விப்பட்டதுண்டு. அதுவும் அவரவர் தத்தமது வீடுகளில் /அலுவலகத்தில் செய்வதை பார்த்துள்ளான். திருப்பதியில் வைத்து ஹோமம் எதற்கு என்று அவனுக்கு புரியவில்லை.
“இல்லல்ல, இங்க இவங்களுக்குன்னு இருக்கிற மடம் இருக்கு. அங்க பரிகார ஹோமம், பூஜைல்லாம் பண்ணுவாங்கன்னு, இவங்க ஜோஸ்யர் சொல்லி இருக்கார்”
“ஓ…..”, என்றவனுக்கு .. மகன் இல்லாமல் மருமகளையும் பேத்தியும் வைத்துக்கொண்டு என்ன பரிகாரம்? அறிவழகியைத் திருமணம் செய்தற்கு தோஷநிவர்த்தி அதுபோலா? இத்தனை வருடங்களுக்கு பிறகா? என்றெல்லாம் யோசித்து , இதை எப்படி இவளிடம் கேட்பது? என்று சங்கடமாக உணர்ந்தவன்… “சரி வச்சிடறேன்”, என்று விட்டு  அழைப்பைத் துண்டித்தான்.
மனம் அவனது அனுமதியில்லாமலேயே அறிவழகிக்காக கவலைப்படத் தொடங்கியது. இங்கதான் நிம்மதியில்லாம இருந்தா-ன்னு பாத்தா, போன இடத்துலயுமா?. ஹூம்.. நெடிய மூச்சுடன் அடுத்த வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் அன்பரசனின் அலுவலகத்தில் பணிபுரியும் தினகர் வந்து விட, அவனுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கியபின், இருவருமாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் இருக்குமிடம் சென்றனர் .
அன்பரசன், அவர்களிடம் சம்பிரதாயமாக முகமன் தெரிவித்து, தினகரை அறிமுகப்படுத்தினான்.
“ஸார், சாரி, நான் இந்த பீல்டுக்கு புதுசு, பார்மாலிட்டி தெரியாம, எதோ பேசிட்டேன், மனசுல வச்சுக்காதீங்க.. “, என்று தினகர் ஒரேடியாக தழைத்து பேசி உரையாடலைத் துவங்க, அவர்களுக்கு ‘அடடே நல்ல மாதிரியா தெரியறானே?’ என்று தோன்றியது.
அதில் ஒருவர், “பரவால்ல தம்பி, நாங்களும் டிபார்ட்மென்ட் சேர்ந்த புதுசுல, காசு வாங்கமாட்டோம்னு விரப்பா நின்னவங்கதான். எங்களுக்கு மேல இருக்கறவங்க, அதுக்கும் மேல இருக்கறவங்கன்னு..  மாசாமாசம் இவ்வளவு வந்தாகணும்-னு கறாரா கேட்டா என்ன பண்ணமுடியும் சொல்லுங்க?, உங்க தலைல தான் விழுந்து எழ வேண்டியிருக்கு, எங்களுக்கே ட்ரான்ஸ்ஃபர், அரியர்ஸ் பணம்  உடனே வேணும்-னா, நாங்களும் கப்பம் காட்டித்தான் ஆகணும். இல்லன்னா, மெமோ, கண்ட இடத்துக்கு  ட்ரான்ஸ்ஃபர்-ன்னு சுத்த விடுவாங்க”, என்று நிஜம் சொன்னார்.
பேசி முடித்து, அவர்களுடன் சென்று இயந்திரங்களை காண்பித்து.. ஒருமுறை செயல் விளக்கம் கொடுத்து.. மாலை வரை நேரம் அனைவர்க்கும் சரியாக இருக்க.., ஒரு வழியாக அவர்கள் கிளம்பினார்கள். கூடவே தினகரும், அவனுக்காக பதிவு செய்த காரிலேயே அவர்களையும் கூட்டிக் கொண்டு சென்றுவிட்டான்.
அன்பரசன் அவனது அறைக்கு வந்து, இலகு உடைக்கு மாறி, தொலைபேசியில் ஹோட்டலின் உணவு பிரிவுக்கு அழைத்து, இரவு உணவு ஆர்டர் செய்தான்.
பின்னர் சாவகாசமாக தொலைக்காட்சியை உயிர்ப்பித்து, செய்தி சேனல்களை மேய்ந்தான். இடைவேளையில், சிறு பெண் ஒருத்தி, விளம்பரத்தில் வர… சட்டென அக்ஷி, அறிவழகி குறித்த நினைவு  தோன்ற.., கைபேசியை தேடினான். மேஜையில் இருந்த அதை எடுத்துப் பார்த்தால், மூன்று மிஸ்ட் கால்கள் என்ற தகவல் திரையில் தெரிந்தது.
அவற்றுள் இரண்டு, அறிவழகியிடமிருந்து வந்திருந்தது. பேசியை சைலண்ட் மோடில் போட்டிருந்ததால், அழைப்பு வந்தது தெரியவில்லை. அழைப்பு வந்த நேரம் பார்க்க, மாலை ஐந்து மணிக்கு ஒரு முறையும், இரவு  ஏழறைக்கு ஒரு முறையும் அறிவழகி அழைத்திருந்தாள்.
இப்போது நேரம் பார்த்தான். எட்டே முக்கால் தான் ஆகியிருந்தது, உறங்கி இருக்க மாட்டாள் என்ற நம்பிக்கையுடன், அவளை அழைத்தான்.
கடைசி ரிங்கில் அழைப்பு எடுக்கப்பட, “ஹலோ, ஹூ ஸ் திஸ்?”, என்றது அக்ஷி.
அவளது குரலில் உற்சாகமாகனவன், “ஐம் லவ்கிங் ஹியர், லிட்டில் வுமன்”, என்றதும் பேசுவது அன்பரசன் என அக்ஷிக்கு தெரிந்துவிட்டது.
(உரையாடல் இனி தமிழில்)
“ஹ ஹ ஹ “, என்றவள், ” லவ்கிங்,  சொல்லுங்க என்ன வேணும்?”, கலகலவென சிரித்து கொண்டே கேட்டாள்.
“உங்க பியூட்டிமா எங்க?”,
“பக்கத்து ரூம்ல தாத்தா பாட்டி கூட பேசிகிட்டு இருக்காங்க”
” சரி இன்னைக்கு நீங்க என்ன பண்ணிங்க எங்கல்லாம் போனீங்க?”
“மத்தியானம் வரைக்கும் தூங்கினோம், சாயங்காலம் பூரா ஷாப்பிங்.. ஒரே போர்”.
“சரி, நாளைக்கு என்ன பண்ண போறீங்க?”,
“நாளைக்கு காலைலே சீக்கிரம் எழுந்து பூஜைல கலந்துக்கனும்…, எனக்கு புகை ஒத்துக்காதா… சோ கொஞ்ச நேரம் ஹோமத்துல உக்காந்தா போதும்னு பாட்டி சொல்லிட்டாங்க”
“வாவ். அப்போ ஜாலிதான்”
” யா. ஊர் சுத்தி காமிக்கறேன்னு அழகிம்மா சொல்லி இருக்கா”, அக்ஷி சொல்லும்போதே கதவைத் திறக்கும் சப்தம் வர, “ஹாய் அள..கி “, என்றாள் கொஞ்சும் தமிழில்.
“யாருடா போன்ல?, அப்பாவா?”
“நோ நோ.. இட்ஸ் லவ்கிங் .. ஹ ஹ ஹ”, என்று அக்ஷி சிரிக்க…, இதைக் கேட்ட அன்பரசனும் சிரித்தான்.
அக்ஷி சொல்வது புரியாது திருதிருத்தவள்.. பேசியை வாங்கி தொடர்பில் இருப்பது யாரென பார்த்ததும், அக்ஷியின் ‘லவ்கிங்’ புரிய, அறிவழகிக்கும் மென்னகை இலங்கியது. “ஹலோ…”,
“மிஸ்ட் கால் பாத்தேன், ஸாரி வேலைல பிஸியா இருந்ததால பாக்கல”
“சே சே அதனாலென்ன பரவால்ல”
“சொல்லு எதுக்கு போன் பண்ணின?”
“உங்க பர்ஸ் இங்கயே விட்டுடீங்க, காணோம்னு தேடுவீங்களோன்னு தான் கால் பண்ணேன்.”
அப்படியா என்று யோசித்தவனுக்கு, தினகர் இருந்ததால் இன்று பர்ஸுக்கான தேவையே எழவில்லை, இல்லையென்றால் தெரிந்திருக்கும், என்று நினைத்தபடி, “மறந்துட்டேன், நாளைக்கு வந்து வாங்கிக்கறேன், எங்க வரட்டும்?”,என்றான்.
” ……..  மடத்துக்கு எட்டு எட்டரைக்கு வர முடியுமா ? அங்க வந்துட்டு கால் பண்ணுங்க, வந்து…  ஸாரி..  நானும் பர்ஸ் ஹாண்ட் பேக்-ல வச்சது ஞாபகமில்லாம…  “,
“பரவால்ல விடு, நான் நாளைக்கு அங்க வந்துட்டு கால் பண்றேன். பை”, இருபுறமும் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
மறுநாள் காலை … அன்பரசன், நேற்று அறிவழகி கூறிய இடத்திற்கு வந்ததும், அவளை அலைபேசியில் அழைக்க…, சில நிமிடங்களில், அக்ஷியுடன் மடத்தின் உள்ளிருந்து வந்தாள்.
இருவரும், மெரூன் நிறத்தில் ஓன்று போல பட்டுடுத்தி படிகளில் இறங்கி வர…, பார்த்தவனுக்கு மூச்சடைத்தது. வைத்த கண் வாங்காமல் அறிவழகியை பார்த்து, ‘அம்மாடி, இவ என்ன இப்படி இருக்கா?’, பெருமூச்சு விட்டான்.
அதிக வேலைப்பாடுகள் இல்லாத வஸ்த்ரகலா பட்டு, அதன் நிறத்திற்கு ஏற்றாற்போல் கழுத்தை ஒட்டி மெல்லியதாய் கழுத்தணி, காதணி, வளை செட். எப்போதும் அணியும் அதிக கனமில்லாத தாலிச் சங்கிலி. அவளணிந்திருந்த ஆடை, அணிமணியில் அதிக ஆடம்பரமில்லாத போதும், அதை அணிந்திருந்த நேர்த்தி வாவ் சொல்ல வைத்தது.
அறிவழகியிடமிருந்து பார்வையைத் திருப்பியவன் கண்களில் அக்ஷி நிறைய… கடைசி படியின் அருகே சென்று, வலது கையை மார்புக்கு குறுக்கேயும், இடது கையை பின்னால் வைத்து… இடை வரை குனிந்து, “குட் மோர்னிங். பியூட்டீஸ்”, என்று மேற்கத்திய முறைப்படி வரவேற்க.., அன்பரசன் அவளைப் பார்த்தவாறு சொன்ன பியூட்டீஸ்-ல்,  அறிவழகியின் முகத்தில் செம்மை படர்ந்தது. அக்ஷியும் பதிலுக்கு, பட்டுப் பாவாடையை விரித்துப் பிடித்து, தலை குனிந்து “மோர்னிங் லவ்கிங்”, என்றதும்.., அன்பரசனின் புன்னகை விரிந்தது. மூவருக்கும் முகம் மலர, அந்த குளிரும் வெயிலும் நிறைந்திருந்த காலை நேரம் மிக மிக ரம்மியமாய்.. அழகானதாய் துவங்கியது.
“ஹோமம்-ல்லாம்  முடிஞ்சதா?”, அன்பரசன் கேட்க…
“நோ.. நோ.. இப்போதான் ஆரம்பிச்சி இருக்காங்க, முடிய ஈவினிங் நாலு மணி ஆகுமாம், அதான் நாங்க வெளில வந்துட்டோம்”, பதில் வேகமாக வந்தது அக்ஷியிடமிருந்து.
“எங்க போறதா பிளான்?”, அன்பு…
“இங்க சும்மா லோக்கலாத்தான் போக முடியும், சாயங்காலம் இங்க வர சொல்லி இருக்காங்க, cab ஏற்கனவே பேசினது தான்,ட்ரைவர் கிட்டதான் கேக்கணும்-ன்னு இருக்கேன்”, என அறிவழகி பேசும்போதே…
“லவ்கிங், ஆர் யூ பிஸி?”, அக்ஷி குறுக்கிட…
“நோ…. நாட் அட் ஆல்… “, என்று அன்பு இழுக்க…
“தென் ஜாயின் வித் அஸ், ஷோ அஸ் சம் நைஸ் ப்ளேசஸ் அரௌண்ட்”.. சிறியவள் பட்டென கேட்டுவிட..  ‘இவனுக்கு என்ன வேலையோ, எங்களுக்கு டூரிஸ்ட் கைடா வான்னு கூப்பிடறாளே இவ?’, என நினைந்து பெரியவள் கைபிசைந்தாள்.
அன்பு தனது வேலையைக் குறித்து யோசிக்க ஒரு வினாடி எடுத்துக் கொண்டான். ஒரு அலைபேசி அழைப்பில் முடிந்து விடும் வேலைதான், தான் இருக்க வேண்டிய அவசியமில்லாததும் கூட. தவிர அக்ஷியுடன் இருப்பதற்கு கசக்குமா என்ன? என்று மனம் கூற, ‘அடேய் அக்ஷிக்காக மட்டும்தான் கூட போறியா?’ – இடித்த மனசாட்சியை புறம் தள்ளி.. ,  இவர்களுடன் செல்ல முடிவெடுத்தவன், ” லிட்டில் வுமன், நான் உங்கூட வர்றேன்.. பட் யூ ஷுட் கால் மீ அன்பு ஹியர் ஆஃ ப்டர் .. ஓகே?”
சின்னவள் குதித்தாள்… “யா ஸ்யூர். அன்…பூ..”, என்று அக்ஷியும்,
“பரவால்ல.., நாங்க பாத்துக்கறோம்…”, என்று அறிவழகியும் ஒரே நேரத்தில் சொல்லவும், அன்பரசன் கைகளைக் கட்டியபடி அறிவழகியைப் பார்த்தான். அக்ஷியும் அவளைத்தான் கண்டனமாக பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். இருவரின் பார்வையிலும் ‘ஏன்’ என்ற கேள்வி தொக்கி நின்றது.
“வேலை இருக்கும்போது, நாங்க உங்கள டிஸ்டர்ப் பண்ணகூடாதில்ல?”, சம்பந்தமே இன்றி சுய விளக்கம் தர, அருகே நின்றிருந்த அக்ஷி,  எதிரியை பார்ப்பதுபோல முறைக்க.. எதிரே நின்றவனோ.. சுவாரஸ்யமாக பார்வையிட்டான். ‘என் கூட இருந்தா இவளுக்கு என்ன பிரச்சனை?’  பதில், பியூட்டீஸ் என்று அன்பு விளித்தபோது அவள் முகம் காட்டிய நாணம் சொன்னது.  எதிரே இருக்கும் பெண் சலனப்படுகிறாள் என்றால், ஆணுக்கு உலகமே வசப்பட்டதான மகிழ்வு வருமாம். அன்பரசனுக்கு துளி கர்வம் கூட வந்தது.
அமைதியான ஆராய்ச்சிபார்வை, அறிவழகியை ஊடுருவ.. “சரி உங்களுக்கு ஓகேன்னா வாங்க”, என்று போனால் போகிறது, இது தனக்கு ஒரு விஷயமே இல்லை என்பதைப் போல முடித்தாள். அப்போது அவர்கள் முன்பதிவு செய்திருந்த கார் வர, அன்பரசனது காரை, முறையான பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு, இவர்களோடு சேர்ந்து கொண்டான்.
ஓட்டுனரோடு முன் இருக்கையில் அன்பரசன், பின்னால் அக்ஷியும், அறிவழகியும் அமர்ந்து கொள்ள, பயணம் தொடங்கியது. எங்கே செல்வதென அன்பு தீர்மானித்து விட்டபடியால், ஓட்டுனரை கலந்தாலோசிக்கவில்லை. வண்டி புறப்பட்டதும் ‘ம்யூஸியம் போங்க’, என்று சொன்னதோடு, இரண்டு தண்ணீர் பாட்டில்கள், சில நொறுக்குத்தீனிகளை வழியில் வாங்கி வைத்தான்.
இருபது நிமிடங்களில், அங்கு சென்று சேர்ந்து விட்டனர். டிரைவரின் முன் ஏதும் பேசாது அமைதியாக இருந்தவள், இறங்கி வண்டி நகர்ந்ததும் அன்பிடம் கேட்டாள். “ம்யூஸியம் கூட்டி வந்திருக்கீங்க?”
“ம்ம்..”
“அக்ஷிக்கு பிடிக்குமா ?”
“போயி பார்த்தா தெரிஞ்சிட்டு போகுது..”, என்று அக்ஷி கைகளை பிடித்தபடி, ” இந்த கோவில் நிறைய வருஷங்கள் முன்னால எப்படி இருந்தது, நம்ம ரெலிஜென் , ரோமன் எம்பையர் காயின்ஸ் பிரிட்டிஷ் எரா காயின்ஸ், பழைய கால வெப்பன்ஸ், அந்த காலத்து போட்டோஸ், ஸகல்ப்சர், டெம்பிள் ஃபார்மேஷன்,  எல்லாம் தெரிஞ்சிக்க போறோம். போலாமா?”, என்று கேட்ட படி உள் சென்றான்.
அங்கே சென்றதும், கைடு ஒருவர் வழிகாட்ட… அருங்காட்சியகத்தின்  ஒவ்வொரு பகுதியிலும், அக்கால புகைப்படங்கள், போர் கருவிகள் மற்றும் தளவாடங்கள், காஞ்சி பல்லவர்கள், தஞ்சை சோழர்கள், மதுரை பாண்டியர்கள் திருவேங்கட நாதனுக்கு கொடுத்த காணிக்கைகள்.. ஆபரணங்கள், ஹம்பி விஜயநகரை ஆண்ட மன்னர்களின் கொடைகள் … முக்கியமாக ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் அருளிய பல லட்சம் மதிப்புள்ள ஆபரணங்கள், வைர வைடூரியங்கள், எண்பதுக்கும் மேற்பட்ட சிலைகள், கோவில் நிர்மாணம், அதன் தாத்பர்யம், வைணவ வழிபாடுகள், அதன் சிறப்புகள் என்று எண்ணற்ற அற்புதங்கள் இருக்க.. அவற்றை வியந்து பார்த்துக் கொண்டே சென்றதில்… நேரம் போனதே தெரியவில்லை, மூவருக்கும்.
ஆயினும், மணி இரண்டை நெருங்கியதும், வயிறு பசியை உணர ஆரம்பித்தது. முழுவதையும் பார்க்க இயலவில்லை என்றாலும், நேரமாகிய காரணத்தால் அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே வந்தனர். அக்ஷி நடந்து நடந்து களைத்திருந்தாள். அவர்களது ட்ரைவர் வந்து சேரும்வரை, அன்பரசன் அவளை கைகளில் தூக்கிக் கொண்டான். நல்ல உணவகத்திற்கு செல்லலாம் அறிவழகி கூற, அன்பரசன் கூட்டிச்சென்றது திருமலை தேவஸ்தானத்தின் அன்னதானக் கூடத்திற்கு.
ஏனென்று கேள்வியாக அறிவழகி பார்க்க, அக்ஷியிடம் திரும்பி, “ஆயிரம் பேர் கூட உக்காந்து சாப்பிட்டு இருக்கியா?, எத்தனை பேர் எத்தனை விதமா சாப்பிடறாங்கன்னு, வேடிக்கை பாத்துட்டே சாப்பிடலாமா? எத்தனை வேகமா சாப்பிடனும்னு, சாப்பாடு போட்றவங்க  நமக்கு சொல்லித்தருவங்க, செமயா இருக்கும். போலாமா?”, என்று கேட்டு குழந்தையின் ஆவலைத் தூண்டி விட்டு, அவள் சரி என தலையசைத்ததும், ஒரு கால் செய்தான், [பேசியது உள்ளூர் ஆள் போலும், தெலுங்கில் பேசினான்] “இப்போ வரலாமா? இடம் ஃப்ரீ-யா இருக்குமா?”, என்றெல்லாம் கேள்வி கேட்டு தெரிந்து கொண்டு, ஒரு பெரிய கட்டிடத்தின் முன் கொண்டு விடும்படி ஓட்டுனரைப் பணித்தான்.
அவனும் அவ்வாறே செய்ய…, காரிலிருந்து இறங்கியவர்கள்… நகர்ந்து கொண்டிருந்த வரிசையில் சேர்ந்து கொண்டனர். வரிசை சீராக நகர, ஒரு பெரிய திருமண மண்டபம் அளவில் இருந்த கூடத்திற்கு வரிசை அழைத்து சென்றது. எதிரும் புதிருமாக எட்டு நெடிய வரிசைகள், ஒரு வரிசையில் குறைந்தது இருநூறு இருக்கைகள் இருக்கும்படி அமைந்திருந்தன, அதை அக்ஷி கண்களால் வியந்து பார்த்த போனாள்,
அவ்வரிசைகள் கிடுகிடுவென மனிதர்களால் நிறைய, இவர்களும் அந்த மனிதர்களுள் ஒன்றாயினர். ஒரே லயமாக, சில்வர் டம்ளர்கள் வைக்கும் சப்தம், இலை வைப்பது, பின் நீர் குவளைகள் வருவது, இலையை நீர் தெளித்து சுத்தம் செய்யுமாறு கூறி, இனிப்புடன் ஆரம்பித்த உணவு, சாதம், பருப்பு நெய் என்று வரிசை கட்டி வரத் துவங்கியது. அக்ஷி பெரியவர்கள் இருவருக்கும் மத்தியில் அமர்ந்திருந்தாள்.
அன்பரசன். அவளுக்கு மட்டும் கூடுதலாக பருப்பு, நெய் பரிமாற சொன்னான். மற்றவர்கள் உண்பதை பார்த்து, சிரியவளும் உணவினை ரசித்து புசிக்க ஆரம்பித்தாள். குட்டி குட்டி சொப்பு விரல்களில் அக்ஷி அவளது உணவை சாப்பிட்டு முடிக்கும் முன் சாதம் சாம்பார் என அடுத்தடுத்து வரிசை கட்ட… சாப்பிட திணறியது அக்ஷி மட்டுமல்ல, அறிவழகியும்தான்.  குறைந்த அளவில் சாம்பார் விட்டு, நெய் மறுமுறை கேட்டு வாங்கி, அக்ஷிக்கு பொரியலுடன் கொடுத்தான். இடையிடையே அன்பரசன், மற்றவர்கள் சாப்பிடுவதைக் குறித்து கமெண்ட்களை நகைச்சுவையுடன் கூற, சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது மதிய உணவு.
“எப்படி இங்க கூட்டிவர தோணிச்சு?”, கைகளை கழுவும் இடத்தில் அறிவழகி கேட்க..
“நம்ம வீட்ல, ரெண்டு வானரங்கள் இருக்கு, ஆகாஷ், ஆஷிஷ்ன்னு, எப்பவும் சாப்பிட அடம் பண்ணுவாங்க., ஹோட்டல் போனா பாதிக்கும் மேல வேஸ்ட் பண்ணுவாங்க, இங்க வந்தா சுத்தி சாப்பிடறவங்கள பாத்து, கமெண்ட் பண்ணின்னு ரொம்ப என்ஜாய் பண்ணி சாப்பிடுவாங்க. என்ன… கொஞ்சம் ஹைஜீனிக் கம்மின்னு எல்லாரும் சொல்லுவாங்க, எனக்கென்னவோ ஸ்பூன் சத்தம் கூட மத்தவங்களுக்கு கேக்காம அமைதியா ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடறத விட, எல்லாவிதமான மக்களோட, வளர்ற பசங்க இங்க சாப்பிடறது பெட்டர்-ன்னு தோணும்”, அக்ஷியை தூக்கிக் கொண்டு, குழாய் தண்ணீரில் கைககளை சுத்தம் செய்ய வைத்தான்
கைப்பையில் கர்சீப் தேடியபடி, அன்பரசன் கூறுவதை கேட்ட அறிவழகிக்கு, ஒரு இனிய கனவு கலைந்தாற்போல் இருந்தது. முகத்தை சாதாரணமாக வைக்க சிரமப்பட்டாள். கைக்குட்டையால் முகத்தை அழுந்த துடைத்து சமன் செய்தாள்.
சாப்பிட்ட பின், நடந்து செல்லும் தூரத்தில் இருந்த பூங்காவிற்கு சென்று மரத்தினடியில் பெட்ஷீட் விரித்து, அறிவழகி அமர்ந்து கொள்ள, அவள் மடியில் அக்ஷி படுத்து விட்டாள். காரின் டிக்கியில் இருந்த பெரிய குடையை விரித்து வைத்து விட்டதால் நல்ல நிழலும் குளுமையும் தந்தது. மிதமான வெயிலே இருந்தபடியால், காற்றும் மாருதமாக வீச, அக்ஷி அசந்து உறங்கி விட்டாள். எத்தனை நிமிடங்கள் அமைதியாக இருக்க முடியும்? ஏதாவது பேசித்தானே ஆகவேண்டும்? முடிவெடுத்து,  எதிரே இருந்த அன்பரசனைப் பற்றி தெரிந்து கொள்ள, “என்ன பண்ண்ணிட்டு இருக்கீங்க?”, என்று அறிவழகி கேட்டாள்.
“ஹாட் மிக்ஸ் பிளான்ட் தயாரிக்கிறேன்”, என்று கூறி, அது  என்ன இயந்திரம், எதற்காக உபயோகிப்பது என்பதையும் விளக்கி புரிய வைத்தான்.
“புது சூப்பர் மார்க்கெட் காம்ப்ளெக்ஸ் என்னாச்சு?”, என்றும் கேட்டாள், அவளது தலையெழுத்தை மாற்றிய விஷயமாயிற்றே?.
அன்பரசன் சின்ன தயக்கத்துடன், “அதை..  அப்பாவும், கண்ணனும் பாத்துக்கறாங்க, கண்ணன் உனக்கு தெரியுமில்ல?, பெரியப்பா பையன் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வருவானே?”
“ம்ம். தெரியும்”…, அக்ஷியின் தலையை ஒரு கையால் கோதியபடி பதில் சொன்னாள்.
“இப்போ அவன்தான் எல்லா கடையும் மேனேஜ்மேண்ட்….  ஃபுல்லா இங்கதான் இருக்கான் “
“……”, தூங்கும் அக்ஷியைத்தான் பார்த்திருந்தாள், தலை நிமிரவே இல்லை .
“எனக்கு அந்த பீல்ட் பிடிக்கலை, போ போ ன்னு  கட்டாயப்படுத்தினதாலயான்னு தெரில. படிப்பு முடிஞ்சதும் ஒரு வருஷம் வெளிநாடு போனேன், வேர்ல்ட் லெவல் ஹாட் மிக்ஸ் கம்பெனில ஒர்க் பண்ணினேன். இங்க வந்து நானே ஸ்பேர்ஸ் தயாரிக்க ஆரம்பிச்சு, இப்போ மெயின் பிளான்ட் தயாரிக்கிறேன். நெக்ஸ்ட் பேவர்[paver-இயந்திரத்தின் பெயர்], எல்லா கபாஸிட்டி பிளான்ட்-ன்னு டெவலப் பண்ணனும்னு யோசிச்சிட்டு இருக்கேன்.”, என்று அன்பரசன் தொடர்ந்தான்.
“ம்ம்ம்…. “, சில நொடி இடைவெளி விட்டு, “பிரவீனா-ல்லாம் எப்படி இருக்கா?”
“ப்ரவீணாக்கு கல்யாணம் ஆயிடுச்சி, மச்சான் ஷார்ஜா-ல இருக்காரு, இப்போ கன்சீவ் ஆயிருக்கறதால அம்மா அங்க போயி இருக்காங்க,”
அடுத்து இவளை பற்றித்தான் கேட்க வேண்டுமாதலால்.. இதயம் தடதடக்க, “சுசித்ரா ….?”, என்று மெதுவாக கேட்க…
“ம்ம். நல்லா இருக்கா. ஒரு நடை நம்ம வீட்டுக்கு வாயேன்…. அப்பா, நம்ம சுசி, ஆகாஷ் ஆஷிஷ் எல்லாரையும் பாக்கலாம்..”, சாதாரணமாக அன்பரசன் அழைக்க… உள்ளே திகு திகு வென எரிந்தது அறிவழகிக்கு. “ஆமாடா.. நீ உன் பொண்டாட்டி, புள்ளைங்க குடும்பமா சீராடிட்டு இருப்பீங்க.. அத நா வேற வந்து பாக்கனுமாக்கும்? உங்கம்மா சும்மாவே எனக்கு வயித்தெரிச்சல்னு பேசும், இன்னும் உன்னைப் பாக்க வேற வந்தேன்னு தெரிஞ்சுது…  கிழிச்சு தோரணம் கட்டிடும்.”, மனசுக்குள் புகைந்தாள்.
ரொம்ப நீளமா போறதால… இதோட முடிக்கிறேன்… வழக்கம்போல ஸ்பெல் செக் பண்ணல… ஹ ஹ.
அடுத்த எபி … விரைவில்….