Advertisement

“மாமா, அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல, அவங்க வீடு சுத்தமா சரி கிடையாது, இவங்களும் அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க, உங்க கிட்ட சொல்லி என்னை இங்க இருக்க வைக்கணும்னுதான் நினைச்சிருப்பாங்க, அதுக்குள்ள நானே வந்துட்டேன், தப்புங்கிறீங்களா?”, என்று படபடவென அறிவழகி பொரிய..      
விநாயகம் ஒருசில நொடி நிதானித்தார். பீரோவை சாத்திக்கொண்டிருந்த அன்பரசனின் முகம் கண்ணாடியில் தெரிய, அதில் சிரிப்பு இழையோடியது, அதில், இனி அவன் செயல்களுக்கு, அவனே பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாது மனைவி வந்துவிட்டாள் என்ற கர்வமும் இருந்தது.
அன்பரசன் பீரோவை பூட்டியபின் திரும்பி விநாயகத்தைப் பார்க்க, ‘என்னப்பா, போதுமா விளக்கம்?”,என்ற கேள்வி அதில் தொக்கி நிற்க,  சிரிப்பு வந்தது விநாயகத்திற்கு.
“தப்பில்லம்மா, தப்பேயில்லை, உன் புருஷன நான் ஒன்னும் சொல்லல”, என்று விட்டு, “டேய்.. நீ பண்ணின ஒரே நல்ல காரியம் இதான்”, என்று அறிவழகியை சுட்டி காண்பித்து சொல்லி கீழே சென்றார். அவர் மனதில் இனி மகனைப் பற்றிய கவலையை தள்ளி வைத்து விடலாம் என்ற தீர்மானம் வந்தமர்ந்து.
இருவர் மட்டுமே இருந்த அவ்வறையில், அன்பரசன் சிரித்தவாறே, “எங்கப்பாவ வாயடைக்க வச்சிட்ட நீ? பெரியாள்தான் போ “, என்றான்.
ஆனால், அறிவழகி சிறு முறுவலுடன், சோஃபாவைக் காண்பித்து, “எப்பிடி?”, என்றாள்.
“சுதாதான். வேறெப்படி? எல்.ஏ. ல சண்டை போட்டதுக்கப்பறம், சுதா என்கிட்டே பேசிட்டு இருந்தான். என்ன? உன்னைப் பத்திதான், நீ வேலைய விட்டது, இந்தியா கிளம்பறதுன்னு எல்லாம் சொல்லுவான். ஆனா, எனக்கு நாம சேர முடியும்னு நம்பிக்கையே இல்ல, என்னை உனக்கு சுத்தமா பிடிக்காதுன்னு சுதாகிட்ட சொல்லிட்டே இருப்பேன்”
“இந்தியாக்கு வந்ததும், சுதா ஒரு வாட்ஸாப் போட்டோ அனுப்பினான், ‘அறிவழகி இதுக்கு இதோட விலைய விட அதிகமா டியூட்டி கட்டி, எடுத்துட்டு வர வேண்டிய அவசியமென்ன?’-ன்னு மெசேஜ். அப்பத்தான் ஒரு நம்பிக்கை, நான் அங்க இருந்தபோது, இதலதான எப்பவும் கிடப்பேன்? சரி, கொஞ்சம் கொஞ்சம் நம்ம பொண்டாட்டிக்கும் ஏதோ இருக்கு-ன்னு தோணுச்சு.”
“அப்பத்தான் வீட்ல ஸ்ரீஜா போட்டோ அனுப்பி ஓகே வா? ன்னு கேட்டாங்க. அவங்களைப் பத்தி விசாரிச்சேன், money minded fellows. அந்த பொண்ணு கிட்ட பேசி, ரிலீஸ் டீட் வாங்கினா நல்லதுன்னு ஒரு வார்த்த சொன்னேன்”, சிரித்தவன், “ஆனா அவ கேடி, சொத்து வரைக்கும் கேட்டிருக்கா..”, என்று தொடர்ந்து..
“ரிலீஸ் டீட்க்கு ஒத்துக்கறத்துக்கு முன்னாடி, என்கிட்ட பேசுவ-ன்னு நினைச்சேன், இல்ல, சரி சுதா உன்கிட்ட பேசி சரி பண்ணிடுவான்னு நினைச்சா, நீ என்னடான்னா டிக்கெட் புக் பண்ணிட்டு அவனுக்கு சொல்ற. எங்க ரெண்டு பேருக்கும் செம்ம டென்ஷன், அவசர அவசரமா இந்த மெண்டல் ஹெல்த் சரியில்லைன்னு சர்டிபிகேட் ரெடி பண்ணினேன்”.
“நாக்பூர் ல இருந்து நான் வர்ற வரைக்கும், ஒரு நாள் தான? உன்னை சென்னைல நிறுத்தி வைக்க சொல்லி சுதாகிட்ட சொன்னேன். வந்த உடனே அப்பாகிட்ட பேசி உன்னை எப்படியாவது சம்மதிக்க வைக்க முடிவு பண்ணி…”, ஹூம்..  நல்லவேளை நீ அப்பாவை பாக்க போறேன்னு தெரிஞ்சதும், அப்பாடா ன்னு இருந்தது”.
ஆ வென வாய் பிளந்து கேட்டவள், “ஆனா, நான் வந்தது என்னவோ பிடிக்காத மாதிரியே இருந்தீங்க?”, என்றாள்.
பெருமூச்சுவிட்டு.. “ஆமா, உனக்கு உன்னை தெரியலையேன்னு கோபம் , என்னை வேணாம்னு நினைச்சிட்டியேன்னு….” என நிறுத்தியவனின் விழிகள் வேறெங்கோ வெறிக்க, ” கோபம், இப்பவும் அது இருக்கு, யாருக்கு தெரியும் எப்பவுமே இருக்குமோ என்னவோ?”, என்றான் விரக்தியாக.
தான் வாழ்ந்து சரி செய்யவேண்டிய விஷயமிது என்பதால், ஏதும் கூறாமல் அமைதியாக நின்றாள்.
“ஹ்ம்ம்.. அதனாலதான் உன்கிட்ட, ஏன் இங்க வந்தன்னு கேட்டேன். உனக்காகன்னு நீ சொன்னாலும் என்னை நீ சரியாதான்  ஃபீல் பண்ணியிருக்க, ஆனா அப்பறம் கேட்டபாரு ஒரு கேள்வி?, ஓங்கி ஒரு அப்பு அப்பலாமான்னு தோணுச்சு”, பல்லை கடித்து வார்த்தைகளைத் துப்பினான்.
“ஸாரி..”
விடு என்பதுபோல் கையசைத்து, “ம்ப்ச். என்ன பண்றது? என்னைத் தெரியாதில்லையா உனக்கு?, வெல், நீ சொன்னதுதான் செய்யலாம்னு இருந்தேன், உனக்கு என்னை பிடிக்கல-ன்னு நீ நினைச்சாலும், எம்மேல உனக்கு அக்கறை இருக்குங்கிறதால, உன்னை இங்க வரவைச்சேன். உன் திங்ஸ், சோஃபா எல்லாமும் நீ இங்க வந்த அன்னிக்கே புக் பண்ணி நைட்டோட நைட்டா வந்திடுச்சு. கட்டில் ஸ்டோரேஜ்-ல எல்லாம் வச்சிருக்கேன், சோஃபா மறைக்க முடியல”, மெல்ல சிரித்து,
“எங்கப்பா அவருக்கு தெரியாம எதுவுமே நடக்கக்கூடாதுன்னு நினைப்பார், ஏன் இடது பக்கம் போற? ஏன் தலைல ஸ்பைக் வைக்கற?-ன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பார். ரெண்டு பேரும் எப்போவும் முட்டிப்போம், அன்னிக்கு உங்கம்மா பாதிக்கப்பட்டதும், பேசறத நிறுத்திட்டார், நீ போனதும், என்னை மொத்தமா தலைமுழுக்கிட்டேன்னு சொன்னார்”, வலி மிகுந்திருந்தது அவன் வார்த்தைகளில்.
“ஆனா, அதுவும் நல்லதுதான், நான் தனியா இருந்ததாலதான், உன்னை தேடி அலைய முடிஞ்சது, நான் என்ன பண்ணிட்டு இருக்கேன் முதல்ல எப்படி இருந்தேன்னு சுய ஆராய்சசி செய்ய முடிஞ்சது. எல்லாத்துக்கும் காரணம், என்னோட நிதானம் தவறினதாலன்னு புரிஞ்சது. பிசினெஸ் ஆரம்பிச்சேன்.”
“திருப்பதி-ல  உன்னை பாத்ததும், செம கோபம், அதான் பேசும்போது, ஒரு போன் கூட பண்ணி தகவல் சொல்ல மாட்டியான்னும் கேட்டேன். ஆனா, நீ அடுத்தவன் வொயிஃப், உன்னைக் கோபிக்க எனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு-ன்னு விட்டுட்டேன்”
“தென் LA .. ப்ளா பிளா, அப்பறம் நடந்ததெல்லாம் உனக்கு தெரியும்”,என்று முடித்தான். அறிவழகி அமைதியாக கேட்டுக் கொன்டு நின்றிருந்தாள்.    
அதற்குள் கண்ணன், “இவங்க அட்ராசிட்டி தாங்கலையே? டேய், கீழ வாடா, சாப்பாடு வெயிட்டிங்”, என்று படிக்கட்டிலிருந்து கத்தினான். இருவரும் உடனே கீழிறங்கி சென்றனர். இருவருக்குமே முகம் சீரியஸாக இருக்க, அங்கிருந்த யாரும் கிண்டல் செய்யவில்லை.
அனைவரும் சாப்பிட்டு முடிப்பதற்கும், கால் டாக்சி வரவும் சரியாக இருந்தது. கண்கள் பணிக்க சுதர்ஷன், தரு, அக்ஷீஸ் , மாமா மாமி அனைவர்க்கும் விடை கொடுத்து அனுப்பி வைத்தாள் அறிவழகி.
ப்ரவீனா, “டயர்டா இருக்கு, தூங்கணும், வீட்டுக்கு போறேன்”, என்று சொல்ல..
“இங்கயே படு, அறிவு மாடிக்கு கூட்டிட்டு போ”, என்றான்.
“டே அண்ணா, மாடில்லாம் ஏற முடியாது, நம்ம வீட்ல விட்று போதும்”, என்றாள் தங்கை.
“நானும் துணைக்கு வர்றேன்டா, என்னையும் அங்க விட்று”
“ம்மா, நீ மட்டும் வா, கூடை கூடையா ஏதாவது எடுத்த, கடுப்பாயிடுவேன், நாளைக்கு மெதுவா எல்லாத்தையும் ஏறக்கட்டலாம், என்ன?”
“ஏன் நான் மட்டும் என்ன பாவம்  பண்ணினேன், என்னையும் பிள்ளைகளையும் கூட்டிப்போங்க  மாமா”, இது சுசித்ரா.
இடுப்பில் கைவைத்து, “கண்ணா”, என்று அழைத்து, அவன் வரவும், “இந்தா கார்  சாவி, எல்லாரையும் ஏத்திட்டு போ, வண்டிய அங்கேயே பார்க் பண்ணிடு, சின்ன வண்டிய இங்க வச்சிடறேன். நாளைக்கு நான் வந்து தேவைன்னா எடுத்துக்கறேன்”, என்று கூறி வளைய
தூங்கிவிட்டிருந்த ஆசிஷை தூக்கிக் கொண்டு, காருக்கு சென்று அனைவரையும் ஏற்றி அனுப்பி வைத்து, சின்ன காரை [கண்ணனுடையது], வீட்டினுள் வைக்க அன்பரசன் வந்தான்.
வீட்டில் பாத்ரூமிலிருந்து விநாயகம் வெளியே வந்து யாருமில்லையே என்று பார்க்க, அறிவழகி, “எல்லாரும் வீட்டுக்கு போயிட்டாங்க மாமா”, என்றாள்.
“ஓ, அப்ப நானும் கிளம்பறேன்”, என்று அவரது ஆக்டிவா சாவியை கையிலெடுத்தவர்,அறிவாசகியைப் திரும்பிப் பார்த்து  “புரிஞ்சி நடக்கறதுங்கிறது நல்ல விஷயம், அவனும் உன்னைப் புரிஞ்சிக்கணும், கஷ்டப்பட்டிருக்கான், கோவக்காரன், புரிய வை”, என்றார்.
“அவர் என்னை புரிஞ்சிக்கிட்டதாலதான் மாமா, நான் இங்க இருக்கேன்”, என்று உணர்ந்து சொல்ல, விநாயகம் சிறு முறுவலுடன் “நல்லாருந்தா சரி”, என்றார்.
அறிவழகி ‘வந்த உடனே அவரை எதிர்த்து பேசுகிறோம் என்று அவர் ஏதேனும் தவறாக எடுத்துக் கொண்டால்?’ என்ற நினைப்பில் சட்டென, “பெரியவங்க நீங்க இருக்கும்போது நாங்க நல்லாத்தான் மாமா இருப்போம்”, என்றாள் நெர்வஸான சிரிப்புடன்.
விநாயகம் விரியச் சிரித்து, “ம்ம். பொழச்சிப்ப”, என்று கூறி செருப்பை அணிந்து வாசலுக்கு வந்தவர், உள்ளே அன்பரசன் வருவதை பார்த்து, “நீ எங்கடா இங்க?”, என்றார்.
“காரை உள்ள நிறுத்திட்டு வரேன், எல்லாரையும் கண்ணன் அந்தக் கார்ல கூட்டிட்டு போயிட்டான்”, என்றான் அன்பரசன்.
“சரி சரி நானும் கிளம்பறேன், பூட்டிக்கோ.”, விநாயகம் சொல்லி போய்விட, அவர் சொன்னவாறே வெளி கேட்டையும் வீட்டையும் பூட்டியவன், ஹாலில் விழுந்திருந்த அட்சதைகளை துணி கொண்டு பெருக்கும் அறிவழகியின் கை பிடித்து தூக்கி தட்டாமாலை சுற்றினான்.
அவனது சிறுபிள்ளை போன்ற துள்ளலில் மகிழ்ந்து, “என்னங்க?”,
என்றாள் அறிவழகி.
“நான் கேட்டேன், நான் கேட்டேன், நீயும் அப்பாவும் பேசினது கேட்டேன்”, என்று கலகலத்து சிரிக்கும் கணவனையே பார்த்தவள், “ஓ ! “, என்றாள். “ரொம்ப கஷ்டப்பட்டிருக்கான், கோவக்காரன்-ன்னு தான சொன்னாரு.  யப்பா, ஒருவழியா தெரிஞ்சிக்கிட்டாரு”, என்றவன், “எப்படியெப்படி? நான் உன்னை புரிஞ்சதாலதான் நீ இங்க இருக்கியா? அய்யோ இத நீ சொல்லும்போது அவர் எப்படி ரியாக்ட் பண்ணினாருன்னு பாக்க முடியலையே”, என்று மேலும் மத்தாப்பாய் சிரித்தான் அன்பரசன்.
“தேங்க்ஸ், அவர் கிட்ட மட்டும் நல்லவன்னு பேர் வாங்க முடியலைன்னு குறை இருந்துகிட்டே இருந்தது. இப்போ அவர் பேசினது கேட்டதும் போச். இட்ஸ் கான்.”, என்று விட்டு “என்ன பண்ணிட்டு இருக்க?”, என்று தரையிறக்கினான். ஹாலை சுத்தம் பண்ணிடறேன். ஒரே அரிசியா கிடக்கு.”, என்று அறிவழகி சொன்னாள்.
“என்னது? க்ளீனிங்கா? , அதுஎல்லாம் நாளைக்கு ஆளுங்க வருவாங்க, அவங்க பாப்பாங்க, இந்த நேரத்துக்காக நான் எத்தனை நாளா வெயிட் பண்றேன்?”, என்று அவளை அள்ளிக் கொண்டான். அறிவழகி இதயத்தில் ரயில் ஓடியது.
மாடி அறைக்கு சென்றதும், நேரே சோஃபாவில் அவளை விட்டு, ஏ.ஸி.யை உயிர்ப்பித்து, “தள்ளி உக்காந்துகோ”, என்று சொல்லி அவள் சோஃபாவின் ஒரு மூலையில் அமர்ந்ததும், திவ்யமாக அவள் மடியில் படுத்துக்க கொண்டு, “சொல்லு சொல்லு, எல்லாமும் சொல்லு”, என்றான்.
அறிவழகிக்கு அவனது செயல்களில் சிரிப்பு வர, மெல்ல அவன் தலை கோதி, “என்ன சொல்லணும் சொல்லுங்க?”, என்றாள்.
“உன்னைப் பத்தி, நம்ம கல்யாணம் பத்தி, இங்க மத்தவங்க பேசினது பத்தி, உங்கம்மா பத்தி, ஹைதராபாத் பத்தி, பரோடா, பேங்க் வேல, ஷேர்ஸ் கத்துக்கிட்டது, அவ எவன்? ஆங். மார்டினஸ் பத்தி, இன்னும் என்னெல்லாம் எனக்கு உண்ணப்பத்தி தெரியாதோ எல்லாம் சொல்லு”
“ரொம்ப நீளமான கதையாச்சே!”,
“பரவால்ல, இப்படி இந்த சோஃபால உம மடில படுத்திட்டு பேசிட்டே இருக்கணும்னு அங்க உன் வீட்ல எத்தனை நாள் நினைச்சிருக்கேன் தெரியுமா?, எதிர்லதான் இருப்ப, ஆனா கம்ப்யூட்டர்-ல முழுகி போயிருப்ப, கடுப்பா வரும், வேணும்னே போன் பண்ணி மூர்த்திட்ட பேசுவேன், உன் கவனம் திரும்பிதான்னு, ம்..ஹூம்.”, என்றதும்.. மெதுவாக சொல்ல ஆரம்பித்தாள். ஊரார் பேசியது, ஹாஸ்டல் சென்றது, பேருந்தில் கிண்டல் செய்த இளைஞர்கள் பற்றி சொன்னதும், “நீ அப்பாட்ட சொல்லி இருக்கனும்? அவங்கள உண்டு இல்லன்னு ஆக்கியிருப்பார்”, என்றான்.
அறிவழகி அவர்களில் ஒருவனை பேருந்தில் அறைந்தது பற்றி சொல்ல, “நீ அடிச்சியா? ஓ அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ?” என்றவன், “உங்க ஆபிஸ் வந்து பாத்தேனில்லை ஒருநாள்? அன்னிக்கு நீ என்கூட செமையா சண்டை போடறா மாதிரி கனவு. ஆனா, அதுக்கப்பறம் நீ ஸ்ட்ரெய்ட் பார்வேர்ட், சண்டை போடற ஆளெல்லாம் இல்ல-ன்னு நினைச்சேன்”, என்றான்.
“அப்டியெலாம் இல்ல, சண்டை போடா ஆளில்ல, இப்போதான் நீங்க இருக்கீங்களே நல்ல தாராளமா, அமோகமா சண்டை போடுவேன். என்ன அப்படியெல்லாம் தப்பா எடுத்துக்காதீங்க”, என்றாள் அறிவழகி.
இன்னும் இன்னும் இவர்கள் கதைக்க, பேசி பேசி காயம் ஆற்ற காலம் கனிந்து விட்டது.
அன்பே தகளியா அறிவே நெய்யாகி
இயைபுறு சிந்தை இடுதிரியாகி – ஊனுருகி
அகச்சுடர் விளக்கு ஏற்றுமின் ஞாலத்தோரே
இறையுறை  ஆலயம் இதுவே காண்.
ஆணும் பெண்ணும் அகலும் நெய்யுமாயிருக்க, கருத்தொருமித்தலைத் இடுதிரியாக்கி, உள்ளுருகி இல்லமெனும் விளக்கினை  ஏற்றினால் இறைவன் அங்கே வாசம் செய்வான்.
இனிய இல்லறம் இறைவன் உறையும் ஆலயம்.
ஜெய் ஸ்ரீ ராம்.

Advertisement