Advertisement

அத்தியாயம் 20 பார்ட் 3
இரவு ஆறு மணி சுமாருக்கு ஸ்டோர் வீட்டினை அடைத்து விட்டனர், அறிவழகியும் அன்பரசனும். காரிலிருந்து இறங்கியதும், ” கொஞ்ச நேரம்  நில்லுடா, ஆரத்தி சுத்தணும்”, என்று கமலம்மா சொல்லி இருவரையும் வாசலிலேயே  நிறுத்த, ஆரத்தி கரைத்து எடுத்து வந்தது மாமியும், தருவும்.
“ஹே தரூ…, ஹையோ மாமி…, எப்பிட்றீ?”,  என்று மகிழ்ச்சியில் ஓடிச் சென்று தோழியை கட்டிக் கொள்ள,
“டீ.. அப்பறம் கொஞ்சிக்கலாம், போய் அன்பரசனோட நில்லு போ”, என்று மாமி விரட்டினார்.
“மாமீ..”, என்று அவரையும் கட்டி அனைத்து முத்தமிட,
“சீய். எச்ச பண்றடீ பொண்ணே”, செல்லமாக கடிந்து, அவரும் கமலம்மாவும் ஆரத்தி சுற்றினர். மாமி “லக்ஷ்மி ராவே மா இன்டிகி” பாட, கமலம்மா, “திருவிளக்கை ஏற்றி வைத்தேன் திருமகளே வருக, குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக”, பாடியதும் அன்பரசன் அறிவழகி இருவரும் உள்ளே சென்றனர்.
அக்ஷி அறிவழகியைப் பார்த்து ஓடி வந்து “பியூட்டிமா”, என்று கட்டி கொள்ள வர, “இரு, இரு குளிச்சிட்டு வர்றேன்”, அவளை நிறுத்த, பெரிய அக்ஷியை தரு கூட்டிக் கொண்டு உடன் வந்தாள். கண்கள் சின்னவளைத் தேட, சுதர்ஷன் கையில் தூங்கிக் கொண்டு  இருந்தாள் குழந்தை.
தருவிடம், “ஏண்டீ இப்படி குட்டிங்களை அலைக்கழிக்கற?”, என்று கடிந்தாள். சுதர்ஷனைப் பார்த்து, “நேத்து நைட் போயிட்டு இன்னிக்கு வர்றதுக்கு எதுக்கு போகணும், ஏர்லைன்காரன் ரொம்ப கஷ்டப்பறேன்னு உங்க கிட்ட கதறினானா?”, என்று நக்கலாக கேட்டாள்.
“அத அப்படியே திரும்பி உன் பிரென்ட் கிட்ட கேக்கவேண்டியதுதான? போயே தீருவேன்னு ஒரே அடம்”, என்று தருவைப் பார்த்து சொல்ல,
“யாரு? இவ..? அடம் பிடிச்சா? வேற யார்கிட்டயாவது சொல்லுங்க நம்புவாங்க, உங்க கிட்ட கேட்டுத்தான் மூச்சே விட்றாளோன்னு எனக்கு அப்பப்போ சந்தேகம் வரும், சரீ .. அத விடுங்க,  சாப்டீங்களா? பசங்க சாப்டாங்களா?”, என்று விசாரிக்க..
“நாங்க காலைலயே வந்து பழைய மனுஷங்களாயிட்டோம், நீ போயி ரெஃபிரஷ் பண்ணிட்டு வா”, என்றான் சுதர்ஷன்.
உள்ளே ஹாலில் அமர்ந்து விநாயகமும், மாமாவும் தீவிரமான ஆலோசனையில் இருப்பதை காண்பித்த தரு, “அநேகமா என் மாமனாரும் உன் மாமனாரும் பிசினெஸ் பார்ட்னர் ஆகப்போறாங்கன்னு நினைக்கறேன்”
“ஓ…. எப்படி?”
“அவர் நிலத்துல விளையுது, இவர் விளையறத விக்கறவரு .. அதான்…”
“எப்படியோ எல்லாரும் வந்து போக இருந்தா நல்லாருக்கும்”, என்றாள் யோசனையாக.
“அத விடு, எல்லாம் ஓகேதானே?”, என்று தரு கவலையுடன் வினவ,
மென்மையான சிரிப்புடன், “யா, யா, எல்லாமும் எல்லாரும் ஓகே”, என்றாள் அறிவழகி. அதற்குள் ரெஸ்ட் ரூம் வந்துவிட, “இரு, கசகசன்னு இருக்கு, குளிச்சுட்டு வந்துடறேன்”, என்றவள், “அச்சோ, என் டவல், மாத்து ட்ரெஸ் அந்த வீட்ல இருக்கு..”, என்றதும்,
“நான் ட்ரெஸெல்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன், போ குளி”
“ஓஹ்.. ச்சோ ச்சுவீட்.”, என்று அறிவழகி தருவின் கன்னம் கிள்ள வர,”மாம் மட்டும் தொடர? நான் தொட மாட்டே?”, என்று அக்ஷி கேட்க, ரெண்டு கையையும் உயர்த்தி, “ஸ்ஸ்.. ஸாரி , டூ மினிட்ஸ் குளிச்சிட்டு வந்து உன்ன தூக்கிக்கறேன்”, என்று உள்ளே சென்றாள்.
ஐந்து நிமிடத்தில் கதவைத் தட்டி துணிகளைக் கொடுத்து, தயாராகி வருமாறு சொல்லி அறைக்கதவடைத்து தரு வெளியேறினாள். இவளும் தயாராகி வர, “ஏன்டீ இவ்ளோ கிராண்டா?, சிம்பிளா காட்டன் குடுப்பன்னு பாத்தேன்”, என்று தருவிடம் பேசுவதற்குள், அக்ஷி அறிவழகியின் மீது ஏறி இருந்தாள். அவளை கொஞ்சி அவளுக்கு இணையாக பேசி முடித்து, சின்ன அக்ஷியை பார்க்கவென வர, அவள் இன்னமும் சுதாவின் மடியில் தூங்கிக்கொண்டிருக்க, முகத்தில் முத்து முத்தாய் வியர்த்திருந்தது. சுதர்ஷனுமே பாதி உறக்கத்தில் இருந்தான்.
“ஏன்டீ, ரூம்ல படுக்க சொல்ல வேண்டியதுதானே?”, தருவிடம் காய்ந்தபோதே, சுசி எதிரே வர, “சுசி அண்ணனை ரூம்க்கு கூடி போயிருக்கலாமில்ல”, என்று அவளிடம் கேட்டாள்.
“இன்னும் ஒரு மணி நேரத்துல ஊருக்கு போகணுமாம், படுத்தா நல்லா தூங்கிடுவாங்களாம், அவங்கதான் வேணாம்னு சொல்லிட்டாங்க”, என்றாள் சுசித்ரா.
திகைத்து, “என்னது? இப்பவே கிளம்பறாங்களா? ஏன்?”, திரும்பி பக்கத்திலிருந்த தருவிடம் கேட்க,
“மாமா, மாமிக்கு வெளி இடம் செட்டாகாது அறிவு, ரிட்டன் டிக்கெட் புக் பண்ணிட்டுதான் கிளம்பினோம்”, என்றாள் தரு.
“ரெஸ்டில்லாம இப்படி ஏன் அலையனும்?”, சின்ன பிள்ளைகளை கூட்டிக்கொண்டு அலைகின்றார்களே என்ற கோபம் வர, சற்று குரலுயர்த்தியே கேட்டாள் அறிவழகி.
“என்னன்னு கேட்டுட்டு கோவப்படலாமே?”, கணீரென பின்னாலிருந்து அன்பரசனின் குரல் வர..
“ம்ம். அதான் கேக்கறேன்”, அறிவழகிக்கு தானாகவே சத்தம் குறைய, திரும்பி குரல் வந்த திசையில் பார்க்க, குளித்து திருத்தமாய் உடுத்து அன்பரசன் மாடியிலிருந்து இறங்கி கொண்டிருந்தான்.
“அம்மா ஹாலுக்கு கூப்பிடறாங்க பாரு, உன்னையும்தான் தரு”, என்று இருவரையும் போகச் சொல்லி, சுதர்ஷன் அருகே சென்று, “சுதா, குட்டிய குடு, எழுந்துக்கோ, நேரமாச்சு”, என்றான்.
ஹாலில் காலையில் மாக்கோலம் போடப்பட்டிருந்த இடத்தில், இரண்டு மனைப்பலகைகள் போடப்பட்டு இருக்க, “போய் உக்காரு போ”, என்று தரு அறிவழகியிடம் சொன்னாள்.
“என்னடீ இதெல்லாம்?”
“உங்கண்ணன் தங்கச்சிக்கு சீர் செய்யறாங்களாம், அதுக்குத்தான் இந்த சூறாவளி சுற்றுப் பயணம்”, என்றாள் தரு.
“ம்ச், பசங்க பெரியவங்க உடம்பல்லாம் கெடுத்துக்கிட்டு இதென்ன ஃபார்மாலிட்டி ?”,
“நமக்கில்லடி, யாரும் பின்னால ஒண்ணுமில்லாம வந்தவ-ன்னு சொல்லகூடாதில்ல? அதுக்குத்தான். அட.. நீ சம்பாதிச்சதுதான்டி.. அதை சபைல முறையா தரப்போறோம் அவ்வளவுதான்”, என்று தரு சொல்லி சமாளித்து அறிவழகியை அமர வைத்தாள்.     .
அறிவழகியின் அருகே அமர்ந்த அன்பரசன், அக்ஷ்யாவை கையில் வைத்தவாறே அமர்ந்து கொண்டான். குண்டு கண்களை கொண்டு முழித்து முழித்து சுற்றும் முற்றும் பார்த்தது, அறிவழகியை ஈர்க்க, வந்ததிலிருந்து குழந்தையைப் பார்க்கவில்லை தவிரவும் சிறிது நேரத்தில் கிளம்பவும் செய்கிறார்கள் என்பதால், இந்த நேரத்தில் தான் வைத்துக் கொள்ளலாமே என்று நினைத்து,  “அச்சுவ எங்கிட்ட குடுங்க”, என்றாள்.
“உன் ஸாரி பாப்பாக்கு குத்தும், என்கிட்டயே இருக்கட்டும், இப்போ எழுந்திருச் சிடுவோம் “, என்று விட்டான் அன்பரசன். அவன் சொன்னாற்போல், சமிக்கி வேலைப்பாடுகள் அதிகம் இருந்த புடவையைத்தான் கட்டியிருந்தாள். எனவே அப்படியே இருந்து குட்டியின் சேட்டைகளை ரசித்தாள்.
சரசரவென ஏற்கனவே எடுத்து வைத்திருந்த சீர் வரிசைகள் இருவரின் முன் பரத்தப்பட்டன. பட்டுப் புடவையிலிருந்து, வெள்ளி சீர் வரிசைகள் அனைத்தையும் வைத்து விட்டு, அறையிலிருந்த நகைப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு தருவும் சுதர்சனும் வந்தனர்.
அந்த டப்பாவைத் திறந்து தாம்பாளத்தில் இருந்த வேஷ்டி புடவை செட் மீது வைத்து, அமர்ந்திருந்த இருவருக்கும் சந்தனம் குங்குமம் இட்டு, “எடுத்துக்கோங்க, மச்சா…ன்”, என்று சுதர்ஷன் சொல்ல, தருவைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்து, ‘இதெல்லாம் நான் சம்பாதிச்சதா?”, என்று மெல்லக் கேட்டாள்.
“என் ஷேர்ஸ் நீதானா டீல் பண்ணின?, நாலு வருஷமா நீ சொன்ன கம்பெனிகள்லதான் இன்வெஸ்ட் பண்ணினேன், ஒண்ணுக்கு மூணு பங்கு ரிட்டர்ன், இது ஜஸ்ட் உனக்கான கன்சல்டிங் ஃபீஸ் மா”, என்றான் சுதர்சன் முறுவலுடன்.
“வாங்கிக்க”, என்றான் அன்பரசன். அதற்கு மேலே எதுவும் பேசாமல் சீர் அனைத்தையும் வாங்கிகொண்டாள்.
“யாரோ என்ன சொன்னாங்க, சுதா சொல்லாம நான் மூச்சுக்கூட விடமாட்டேன்னு, இங்க என்ன நடக்குதாம்?”, அறிவழகியின் புடவையை சரி செய்வதுபோல  காதருகே வந்து தரு கிண்டல் செய்ய, “தனியா வாடி உன்னை வச்சிக்கறேன்”, அனைவர்க்கும் சிரிப்பதுபோல பற்களைக் காட்டி தருவிடம் உதடசைக்காது சொன்னாள்.
“கட்டிக்கிட்டவர விட்டுட்டு என்ன ஏன்டீ வச்சிக்கற?, டூத் பேஸ்ட் விளம்பரம் மாதிரி இருக்கு, வாய மூடு, பல்லு சுளுக்கிக்க போகுது”, என்ற கேலி செய்து தரு அச்சுவை எடுத்துக் கொள்ள, அன்பரசனுக்கு என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை ஆயினும், ஏதோ பரிகாசப் பேச்சு என்பது புரிந்தது.
தம்பதிகள்  இருவரும் எழுந்து பெரியவர்கள் அனைவரையும் ஒருசேர நமஸ்கரித்தனர். பின்னர் அறிவழகி, கண்ணன், சுசித்ரா, சுதா, தரு நால்வரையும்  கூப்பிட்டு, “நில்லுங்க”, என்று வணங்க நினைக்க.. பதறி, “ஏய், இதென்ன, அன்பு என்னைவிட பெரியவங்க.”, என்றாள் தரு. உடனே சுசி, சுதர்சனைக் காண்பித்து, “இவங்க மாமாவைவிட பெரியவங்கதான?, அப்ப விழலாம் தப்பில்ல”, என்றாள்.
“இப்படி சொல்லி சொல்லித்தான் ஓரொரு பண்டிகைக்கும் என்னை அவ கால்ல விழ வைக்கிறா எங்க அண்ணீ… “, என்று அன்பரசன் சிரித்தபடியே நமஸ்கரித்து எழுந்தான். அதே நேரம் கண்ணனைக் கூப்பிட்டு விநாயகம் ஏதோ விபரம் கேட்க, அவன் நகர்ந்தான்.
நேரம் பார்த்த தரு, “சரி சரி, சாப்டிட்டு ஓடணும், பத்தரைக்கு ஃப்ளைட், அக்ஷீ … “, குரல் கொடுக்க.. அவளோ ஆகாஷ் ஆஷிஷோடு ஐக்கியம்.
“வா, வா, நம்ம வீடு ஆளுங்க மட்டும்தான். ஹாலைக் க்ளீன் பண்ணிட்டு நானும், அறிவும் பரிமாறறோம், நீங்களெல்லாம் உக்காருங்க. கால் டாக்சி காரனுக்கு கண்ணமாமா பேசிட்டேன்-னு சொன்னாங்க, ஒரு முறை நினைவு படுத்துங்க”, சுசி பரபரத்தாள்.
புடவைத் தாம்பாளத்தட்டை தூக்க முடியாமல் தூக்கி, மாடி நோக்கி சுசித்ரா செல்ல ஆரம்பித்தாள். அன்பரசன் கண்ணனிடம் கால் டாக்சி குறித்து பேச வெளியே சென்றான்.
“ஆளுக்கு ஒரு வெயிட் எடுத்துபோனா ஈஸியா முடியுமில்ல”, என்று விநாயகம் சொல்லிவிட்டு கையில் வெள்ளிப் பாத்திரங்கள் அடங்கிய கட்டைப் பையைத் தூக்கிக் கொண்டு படி ஏறினார். அறிவழகியும் ஏனைய சாமானோடு பின் தொடர்ந்தாள்.
சுசித்ரா, “மாமாட்ட  சாவி கேளுங்க, ரூம் பூட்டியிருக்கு”, என்று அங்கிருந்தே குரல் கொடுத்தாள். வெளியிலிருந்து உள்ளே ஹாலுக்கு வந்த அன்பரசன், வேகமாக சாவி எடுத்துப் போக, அறை வாசலில் சுசித்ரா அப்பா, மற்றும் அறிவழகி கையில் சாமான்களோடு நிற்பதை பார்த்து, சட்டென அறையைத் திறந்தான். “என்னடா புதுப் பழக்கம், ரூமைப் பூட்டறது?”, என்று அதட்டிக் கேட்டு உள்ளே செல்ல, பெண்கள் பின் தொடர்ந்தனர்.
“இப்படித்தான் என் பழக்கம், இப்போ புதுசா மாத்த சொன்னா..? ஏன் நீங்க எடுத்துட்டு போயி நம்ம வீட்ல பத்திரமா வச்சுக்க வேண்டியதுதானே?”, என்றான் இடக்காக அன்பரசன். அறிவழகி ஏன் இப்படி என்பது போல பார்க்க, முகம் திருப்பினான். இத்தனை நாட்கள் தனியாக இருந்து பழகிய அன்பரசனுக்கு, இப்போது தொட்டதிற்கெல்லாம் கேள்வி என வரும்போது, சுருக்கென கோபம் வருவது புரிந்தது.
“ஏன்டா புழங்கற ஆளு இங்க இருக்கும் போது, அங்க எதுக்குடா வைக்கணும் ? ஏன் இது நம்ம வீடு இல்லையா?”, என்று கேட்டு மகனை முறைத்தார்.
அறைக்குள்ளே சென்றதும், “இதென்ன ஃசோபா இங்க இருக்கு?”, அவர் கேட்கும் போதே பின்னால் நுழைந்த அறிவழகி அதைத்தான் கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அன்பரசன், விநாயகம் இதைத்தான் கேட்பார் என்பதை யூகித்தித்திருந்ததால், “சுதா கொண்டுவந்ததுப்பா”, என்று சொல்ல..
“இல்லியே, சுதா ஃபிளைட்லதானே வந்தாங்க”, யோசனையோடு கேட்டு, “இது ரெண்டு மூணு நாள் முன்னால, டெம்போல வந்துச்சா?,கண்ணன் போயி அட்ரஸ் தெரில, காமிச்சிட்டு வர்றேன்னு சொல்லி…”, அவர் யோசனைக்கு போக..
‘ரெண்டு மூன்று நாட்களுக்கு முன்னால், என்றால் அப்போது நான் இங்க கையெழுத்திட வந்த அன்று அல்லது மறுதினம்.  அன்றே, என் பொருட்களெல்லாம் இங்கே வந்திருக்கிறது என்றால்?’, யோசனையோடு  அறிவழகி அன்பரசனைப் பார்த்தாள்.  முகம் பார்க்காமலேயே இவளிடமிருந்த நகைப் பெட்டியை அன்பரசன் வாங்க, அவனிடம் மிக மெல்லிய பதட்டம் இருந்தது.
அன்பரசன் விநாயகத்திற்கு பதிலுரைக்காது பொருட்களை பத்திரப்படுத்துவதில் முனைந்தான்.ஒன்றும் ஒன்றும் இரண்டு எனக் கணக்கு போட்டு தெளிந்து, “என்னை எப்படி இருந்தாலும் வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்-னு நினைச்சிட்டார் மாமா, அதான் எல்லாத்தையும் இங்க கொண்டு வர சொல்லிட்டார்”, என்று அறிவழகி பதிலுரைக்க..
“ஆனா, நீ ரிலீஸ்..,”, என்று சொல்ல வந்து, “நீ இங்க வர்றது இவனுக்கு எப்படி தெரியும்?”, என்று அன்பரசனைப் பார்த்து கேள்வி கேட்டு துருவ.. , அவன் இவர் பேசியதை கேட்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை.
அதில் கோபம் துளிர்க்க, “ஸ்ரீஜா வீட்டுக்காரங்க சொத்து கேட்டதும் உன்னாலதானா?”, என்று விநாயகம் கேட்டார்.

Advertisement