Advertisement

ஜெய் ஸ்ரீ ராம்
அத்தியாயம் 20 [final 1]
அன்பரசன் தந்த பேப்பரை வாங்கி படித்த அறிவழகி, “இது … ?”, என்ன கேட்பது? உண்மையா என்றா? ஆம் என்றால் இதை எப்படி எடுத்துக் கொள்வது? குழப்பத்தில் வார்த்தை வராமல் தடுமாறினாள். அவளது கையில் இருந்தது அவனது மனநல தகுதிக்கான சான்றிதழ். அதிலிருந்த விவரம் அவளைக் குழப்பி சற்றே அதிர்சிக்குள்ளாக்கியது.
அவளது குழப்பத்தை தீர்ப்பவனாக, இடவலமாக இல்லை என தலையசைத்தவனின் முகம் பாறைபோல் கடினமாக இறுகி இருக்க, “இது அந்த பொண்ணுக்காக ரெடி பண்ணினது”, என்றான்.
அன்பரசனுக்கு கவலைப்படுமளவுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை அறிந்ததும், அறிவழகியின் மனதில் நிம்மதி பரவ, “ஓஹ்? எதுக்கு?”, என்றாள்.
ஸ்ரீஜாவின் புகைப்படம் பார்த்து அவளோடு அலைபேசியில் பேசி, அதன் பின் நிச்சயம் செய்வது வரை வந்தவன், ஏன் இப்படி ஒரு சான்றிதழ் கொடுக்க வேண்டும்? அதுவும் அன்பரசன் மனோரீதியாக 90% குணமடைந்து விட்டதாகவும், எப்போதாவது அதீத அழுத்தம் ஏற்பட்டால் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல 10% வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கும் தவறான தகவலோடு? என்ற கேள்வி தொக்கி நிற்க, கூடவே ஏன் இவ்வளவு கடுகடுவென இருக்கிறான் என்ற பதற்றமும் மனதில் எழுந்தது.
அமர்ந்திருந்த அறிவழகியை ஒரு வினாடி கண்டனப் பார்வை பார்த்தவன், அருகிலிருந்த நாற்காலியை இழுத்து அமர்ந்து, தனது கைகளை பின்னந்தலையில் கோர்த்து  அதில் சாய்ந்து கொண்டான். கண்களை மூடி நிதானமாக, “வேறெப்படி இந்த நிச்சயத்தை நிறுத்தறது?”,என்றான் அன்பரசன்.
வார்த்தைகளில் நிதானமிருந்தது, ஆனால் அதை சொல்பவனின் குரலில் அத்தனை அடக்கப்பட்ட அழுத்தம்.. அன்பரசன் கோபத்தோடு இருப்பது தெரிந்து, அறிவழகிக்கு உதறல் அதிகரித்து நாற்காலியோடு ஒட்டிக் கொண்டாள். அருகே கண்மூடி கைகோர்த்து அமர்ந்திருந்தவனை மிரட்சியோடு பார்த்தாள்.
புருவம் நெறி பட, “எப்டியெப்படி? எனக்கு உன்மேல அக்கறை இருக்குன்னு தெரியுமா?, அம்மணிக்கு இப்பதான் தெரிஞ்சதா?”, மூச்சை இழுத்து விட்டவன்..
“அந்த அக்கறை அன்னிக்கே இருந்ததாலதான் உனக்கு பிடிச்சிருந்தா வா, இல்லன்னா இத விடுதலைப்பத்திரமா வச்சுக்கன்னு லெட்டர் அனுப்பினேன்?, நீ யாரையாவது லவ் பண்ணியிருந்தா, நம்ம கல்யாணம் உன் சந்தோஷத்துக்கு குறுக்க நிக்கக்கூடாதுன்னுதானே அந்த மேரேஜ் சர்டிபிகேட்டையும் சேத்து அனுப்ச்சேன்?”, வார்த்தைகளில் சாட்டை சொடுக்கினான். அன்பரசன் கண்மூடி பேசினாலும், அவனது வார்த்தைகள் இலக்கை சரியாக தாக்கியது.
அறிவழகிக்கு, ‘ஐயோ லவ்வா? நானா?’, என்று அதிர்ச்சியில் முதுகு தண்டுவடம் ஜில்லிட, முகத்தில் வியர்வை சடசடவென துளிர்க்க ஆரம்பித்தது. கூடவே, அவளது ஆராயும் புத்தி அன்பரசன் சொல்வது சரிதானே என்று கூறி இவளை குற்றவாளியாக்கியது.
சில நொடிகள் தன்னைத்தானே சமன்செய்து, அமைதியாக கண்களைத் திறந்த அன்பரசன், “இப்போ நீ என்ன பண்ண வந்த அறிவழகி? நானோ சொத்தோ எதுவும் வேணான்னு எழுதி குடுக்கத்தான?”, என்று அவளை பார்த்து கேட்டு, சில நொடி இடைவெளிவிட்டு, “என் நம்பர் இல்ல உன்கிட்ட? நா என்ன உன்னை மாதிரி எந்த காண்டாக்ட் டீடைல்ஸ் குடுக்காம ஓடிப்போயிட்டேனா என்ன?”, எனக் கேட்டு அறிவழகியின் கண்களை ஊடுருவினான்.
அறிவழகி மிடறு விழுங்கினாள். சிலரது கோபம் பயமுறுத்தும். சிலரது நிதானம் அச்சப்படுத்தும். அன்பரசனின் நிதானமான கோபம் அறிவழகியை வெலவெலக்க வைத்து, அவள் பதில் பேச முடியாமல் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.
மீண்டும் அதே துளைக்கும் பார்வையுடன், “எங்கம்மா முதநாள் உன்கிட்ட ரிலீஸ் டீட் கேட்டாங்க, அம்மணி அடுத்தநாளே ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு ரெடியா வந்து நிக்கற”.
” இப்ப பக்கம்பக்கமா டயலாக் பேசற நீ, எனக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாமே?”, அவள் புறம் தலையைத் திருப்பி, புருவம் உயர்த்தி, “ஏன் பண்ணல? கௌரவம். ம்ம்? அப்படித்தான?”
அவனது இருக்கையின் இருபுறமும் கைகளை கைதாங்கியில் (handrest) வைத்து, சாய்ந்த நிலையிலேயே, “கேட்டா என்ன சொல்லுவ? உங்களுக்கு ஸ்ரீஜாவை பிடிச்சிருக்குன்னு நினச்சேன்னு, அதான?, இதத்தான நா அன்னிக்கு பண்ணேன்?”
“நீங்க பண்ணினா தியாகம்? நாங்க பண்ணினா மோசம்? நல்லா இருக்குல்ல உங்க நியாயம்?”, கோணலாக சிரித்தபடி பகடி செய்தான். இதற்கு இவன் கன்னம் கன்னமாக நாலு அறை அறைந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அறிவழகிக்கு தோன்றியது.
“ஒருவேளை அந்த பொண்ணு மட்டும் போன்ல பேசலைன்னு வைச்சுக்கோ, நீ பாட்டுக்கு வந்த வேலைய முடிச்சுட்டு போயிருப்ப”.
“ஏற்பாடு பண்ண நிச்சயத்தை நான் நிறுத்தச் சொன்னா எங்கப்பா செருப்பால அடிப்பார். என்னடா காரணம்னு கேப்பார்.”
“நீ வருவியா மாட்டியான்னு தெரியாம எப்படி அவர்ட்ட உன்ன பத்தி பேசமுடியும்? அவரே இப்பத்தான் எங்கிட்ட நாலு வார்த்த சேந்தா மாதிரி பேசறாரு, அதான் ஸ்ரீஜா கேட்ட பிட்னஸ் சர்டிபிகேட்-டை வச்சே, அவளை அனுப்பிடலாம்னு இத ரெடி பண்ணினேன். சோ நீ வரலன்னாலும் இந்த ஒப்புத்தாம்பூலம் நிச்சயம் நடந்திருக்காது.”, என்றபடி எழுந்து நின்றவன்..
அறிவழகியின் அருகே வந்து அவளது நாற்காலியின் இரு பக்கமும் அவனது கைகளை வைத்து குனிந்து அவளை தீர்க்கமாக பார்த்து,  “என்ன கேட்ட? ஸ்ரீஜா என்னை சலனப்படுத்தியிருந்தா-ன்னு தான?”, பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்பினான். அறிவழகி நாற்காலியின் பின்புறத்தோடு முதுகை ஒட்டிக்கொண்டாள்.  “எனக்கும் சலனம் வரும்னு நான் தெரிஞ்சிக்கிட்டதே உன்ன தொட்டப்பதான்னா நம்புவியா?”, கேட்ட அன்பரசனின் மூச்சுக் காற்றின் வெப்பம் அவள் முகத்தில் அறைந்தது.
விருட்டென நிமிர்ந்து நின்றவன், “How dare you?”, என்று சொல்லி, அவளது கையைப் பிடித்து எழுப்பி நிறுத்தினான். “இத உனக்கு சொல்லணும்னு அவசியமில்லை, இது வரைக்கும் நினச்சதுமில்லை, ஆனா இப்படி ஒரு கேள்வி கேட்ட பாரு? வா”, கூடத்திலிருந்து கோப்புகள் இருந்த பீரோ அறையை நோக்கி நடந்து சென்றான். அறிவழகியும் ‘என்ன காத்திருக்கிறதோ?’, என்ற பயத்துடன் அவனைப் பின் தொடர்ந்தாள்.
வேகமாக பீரோவைத் திறந்து, மிக முக்கியமான ஃபைல்களை வைக்கும் பகுதியை சாவி கொண்டு திறந்து, அதிலிருந்த செய்தித்தாள்கள் கட்டை [news paper bundle] எடுத்து பின்னால் நின்ற அறிவழகியிடம் கொடுத்தான்.
“என்ன தெரியுமா இது?”
இல்லை என்று அறிவழகி தலையசைக்க, ” நீ காணாம போனதுலேர்ந்து ஆறு மாசத்துக்குள்ள, தற்கொலை, கொலை, ரேப் கேஸ்-ல செத்துப்போன பொண்ணுங்கள பத்தி வந்த நியூஸ்பேப்பர்ஸ், செத்து அடையாளம் கண்டுபுடிக்க முடியாத பொண்ணுங்களைப் பத்தின ரிப்போர்ட்ஸ்”, என்று அன்பரசன் சொல்லியதைக் கேட்டதும், அறிவழகிக்கு அந்த பன்டிலின் கனம் மனதில் ஏறியது.
“அது மட்டுமில்ல, விபச்சார விடுதில இருக்கிற பொண்ணுங்க போட்டோஸ்,அந்த பொண்ணுங்கள பத்தின டீடைல்ஸ் கிடைச்சா அது…”, என்றவுடன் அறிவழகியின் கையில் இருந்த அந்த பண்டல் நழுவியது. அதிர்ச்சியில் பேச்சு மறந்து போக, விழிகள் நிலைகுத்தி நிற்க, அன்பரசனைப் பார்த்தாள்.
அன்பரசனின் கண்கள் அதீத வேதனையை பிரதிபலிக்க, “எப்போ கலெக்ட் பண்ணினேன் தெரியுமா? ஸ்விஸ்-லேர்ந்து வந்ததும். நீ போன அந்த வருஷத்து பேப்பரையெல்லாம் பாத்து, ந்யூஸ் ரிப்போர்ட் எடுத்தவன் கைல கால்ல விழுந்து, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி, ஹாஸ்பிடல்க்கு போயின்னு, எய்ம்ஸ்-ல போயி டேட்டாபேஸ் வாங்கின்னு நாய் மாதிரி அலைஞ்சேன்”, என்றான்.
தொடர்ந்து.. “உயிரோட.. ?என்னவோ சொன்னியே என்னதது?”, விரக்தியான முறுவலுடன் கேட்டு, “ஆங்.. உயிரோட இருந்தோம், உயிர்ப்போட இருந்தோமா-ன்னு கேட்டல்ல?”,
அந்த அறையிலிருந்த ஷாண்ட்லியரை பார்த்து, “இல்லியே? நான் உயிரோட கூட இல்லியே? நடைபிணமா.. பொணங்களை, தப்பான பொண்ணுங்க இடத்துலன்னு எங்கேல்லாம் உன்னை தேடினேன் தெரியுமா?”
அன்பரசன் தன் முதுகை பீரோவில் சாய்த்து எதிரிலிருந்த அறிவழகியிடம், உயிரற்ற கண்களுடன், “தப்பு செஞ்சு தண்டனை அனுபவிக்கறதுங்கிறத ஒத்துக்கலாம், தப்பு செஞ்சேனா, செய்யலையான்னு தெரியாம, குற்றமா குற்றமில்லையானு தெரியாமலேயே தண்டனையை அனுபவிச்சது நானாத்தான் இருக்கும். கிட்டத்தட்ட ஒரு வருஷ ரெக்கார்ட் தேடினேன் unofficial -ஆ , கம்பளைண்ட் குடுக்க முடியாது, என் பொண்டாட்டி ஓடிப்போயிட்டான்னா சொல்ல முடியும்? ஒருவேளை போலீஸ் உன்னைக் கண்டுபிடிச்சு, அதனால உன்னோட புது லைஃப்க்கு பிரச்சனை வந்தா என்ன பண்றதுன்னு ஒரு thought.. குடுக்கல, ஓரொரு கேஸ் பாக்கறப்பவும் இது நீயா இருக்கக்கூடாதுன்னு வேண்டிகிட்டே போவேன்”, என்று அவன் சொன்னபோது, அவன் வேதனை உணர்ந்து அறிவழகியின் வயிறு குழைந்தது.
ஒரு பெருமூச்சோடு அந்த நினைவுகளை கடந்தவன், “இதுக்கு நடுல, அம்மாவும் மாமாவும் எனக்கும் சுசிக்கும் மேரேஜ்-க்கு பேசினாங்க,    அந்த டைம்ல கண்ணன் என்னைப் பாக்க கோயமுத்தூர் வந்து போக இருக்க, சுசியை அவனுக்கு பிடிச்சுப்போச்சு. எனக்குன்னு பேசி வச்சிருந்ததால சுசிகிட்ட அவனோட விருப்பத்தை சொல்லாம மறைச்சிட்டான்”, அவனுக்கும் பேசுவதற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் எவ்வித உணர்ச்சிகளும் இன்றி சொல்லிக் கொண்டிருந்தான்.
“எனக்கு இந்த ஏற்பாடு கண்ணன் மூலமா தெரிய வந்தபோது,  நான் கண்டிப்பா முடியாதுன்னு சொல்லப் போறேன்னு  சொன்னேன். அப்பத்தான் கண்ணன், ‘சுசிய  நான் கட்டிக்கறேன்டா, ஏதாவது பண்ணுடா-ன்னான்”.
“எப்படின்னு யோசிச்சேன், மாமா வீட்ல இருந்துதான சைக்கிரியாடிஸ்ட் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டேன்?, அத்தையோட  குணம் எனக்கு நல்லா தெரியும், என்னைப்பத்தி கொஞ்சம் சந்தேகமா சொன்னா போதும், சுசி லைஃப்-ல ரிஸ்க் எடுக்க மாட்டாங்க. எனக்கு ட்ரீட் பண்ணின டாக்டர்ட்ட இப்படி சொல்ல முடியுமான்னு கேட்டேன். முதல்ல முடியவே முடியாதுன்னுட்டு, ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணினதுக்கப்பறம் அத்தைகிட்ட ஓரளவுக்கு அதேமாதிரி சொன்னார்.”
“இங்க நம்ம வீடு கட்றதுக்கு வேற மாமா கண்டும் காணாம செலவு பண்ணிட்டு இருந்தாரா? அத்தைக்கு செம கோவம். நேர வீட்டுக்கு வந்து, பைத்தியக்கார பயலுக்கு கட்டி வைக்கவா என் பொண்ணை அருமை பெருமையா வளத்தேன்?, வீடு கட்ற மேஸ்திரியா என் வீட்டுக்காரரை மாத்திடீங்களே? கோடி கோடியா கொட்டி சென்னைல எம் பொண்ணு இருக்கபோறான்னு சூப்பர் மார்க்கெட் வாங்கினேனே?-ன்னு ஒரே சண்டை”.
“அப்பா, ஒரு பத்து நாள் டைம் கேட்டாருன்னு நினைக்கறேன். அதுக்குள்ள, வீடு கட்ட மாமா குடுத்த பணத்தை திருப்பி வட்டியோட குடுத்துட்டாரு. சூப்பர் மார்க்கெட்டை அத்தை பேருக்கு மாத்தி எழுதறேன்னு சொல்லி அந்த சண்டையை அப்படியே ஆஃப் பண்ணிட்டார்.”
“அப்போ கண்ணன், வேற எங்கியோ சுசியை கட்டிக் குடுக்கறதுக்கு எனக்கே குடுத்துடுங்கனு முறைப்படி கேட்டான். மாமாவும் அத்தையும் ஒத்துக்கிட்டாங்க. அப்பா, மார்க்கெட்டை அவனுக்கு எழுதி வச்சிட்டார்.  ஆனா, மொத்த சரக்கும் அவரோடதுங்கிறதால கண்ணன் அப்பாவை பார்ட்னரா சேத்துக்கிட்டான், அதுல வளந்து இப்போ, தனியா ரெண்டு கடை ஆரம்பிச்சுட்டான்”.
“என்னைத்தான் எங்கப்பா வீட்ல சேக்கலையே? தனியா இருந்தா என் கவலைதான அவங்களுக்கு வரும்? அதனால, சுசி கண்ணன் கல்யாணம் முடிச்சதும் கண்ணனை நம்ம வீட்டுக்கே வர சொன்னேன். அப்பாவும் அவனும் சரியா மாட்ச் ஆவாங்க. அப்பறம் ஆகாஷ் பிறந்ததுக்கப்பறம்தான் நான் வீட்டுக்கு வர ஆரம்பிச்சேன்”
“அம்மா அப்பாக்கு ஆகாஷ், ஆஷிஷ் ரொம்ப செல்லம். அவங்களுக்கு என் கவலை குறைஞ்சதுன்னா அது அந்த குட்டிங்களாலதான்”.
“அப்பப்போ அம்மா என்னைப் பத்தி பேசி அப்பாட்ட வாங்கி கட்டிப்பாங்க”.,
திரும்பி இன்னமும் பேப்பர் கட்டை தவறவிட்ட இடத்திலேயே நின்ற அறிவழகியை அர்த்தத்தோடு பார்த்து,  “கல்யாணத்தை பத்தி நினைச்சாலே, எனக்கான பொண்ணுன்னு ஒருத்தி, வெடவெடன்னு ஒல்லியா, லைம் யெல்லோ சுடி, அதுக்கு சம்பந்தமே இல்லாத கலர்ல துப்பட்டாவோட,  நான் தாலி போடும்போது, கண்ணெல்லாம் கலங்கி குழப்பமா பாத்த நீ மனசுல வரும்போது, எப்படி வேற பொண்ணுக்கு சரின்னு சொல்லுவேன், சொல்லு?”, என்று விட்டு அறையை விட்டு மெல்ல அவன் வெளியேறி நடக்க அறிவழகிக்கு என்ன உணர்கிறோம் என்பதே புரியாமல் அவனைத் தொடர்ந்தாள்.
“ஒருவேளை நீ செட்டில் ஆகியிருந்தா அது வேற. நான் மாறியிருப்பேன், ஆனா அது தெரியாதவரைக்கும் நான் குற்றவாளிதான்னு தோணும். எனக்குன்னு ஃபேமிலி அமைச்சுக்க கூடாதுனு ஒரு வைராக்கியம்.”
“அதுவும் இப்போ? நீ தனியா இருக்கன்னு தெரிஞ்சு?, ஹம்.?”, மெல்லிய நகையுடன்..
“என்னை இந்தப் பொண்ணுன்னு இல்ல அழகி, எந்தப் பொண்ணுமே சலனப்படுத்த முடியாது, ஏன்னா”, மெல்ல தலைதிருப்பி அவள் செய்ததுபோல் ஆள்காட்டிவிரலால் தலையைத் தொட்டுக்காண்பித்து, “நீ சொன்னியே,  I’m married to you-ன்னு இங்க ரெஜிஸ்டர் ஆயிடுச்சுன்னு, அது பொண்ணுங்களுக்கு மட்டும்தானா?” என்றுவிட்டு அடுத்த அடி எடுத்து வைக்க முயன்றவன், “ஹக்.. யேய் என்ன..?” தடுமாறினான்.
காரணம் அன்பரசனுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த அறிவழகி அவனை பின்புறமாக இறுக்க கட்டிக்  கொண்டிருந்தாள். அவள் தனது இரு கைகளையும் அன்பரசனின் இடை வழியே விட்டு அவனின் வயிற்றில் கோர்த்திருந்தாள்.
அறிவழகி சத்தமின்றி விம்மி விம்மி அழ, “ஹே!, அழறியா என்ன?”, என்று அன்பரசன் திகைத்துக் கேட்க. இல்லை என்பதுபோல அவன் முதுகில் முகத்தை ஈஷியபடி இடவலமாய்  தலையசைத்தவள் இன்னமும் அழுது கொண்டுதானிருந்தாள்.
அறிவழகியின் சன்னமான கேவல்கள் கேட்டு, அறிவழகியின் கையைப் பிடித்து முன்னே இழுக்க அன்பரசன் முயற்சிக்க, அவள் கிஞ்சித்தும் அசையாது நிற்க, எதற்கென தெரியாத அவளது அழுகையும் தொடர்ந்தது. சற்று நேரம் அழட்டும் என்று விட்டு, ஆதூரமாய் அவள் கைகளில் தன் கையைப் பொதிந்து கண்மூடிக் காத்திருந்தான். அவளது கேவல்கள் மெல்லத் தேய்ந்தபின், அறிவழகியை இழுத்து முன்னிறுத்தியவன், அவளது பின்னங்கழுத்தை பிடித்து, நெற்றியில் படர்ந்திருந்த சிகையை கோதிவிட்டு, “என்னாச்சுடா?”, என்றான்.
தனது கணவனின் குரலில் இருந்த காதல், அறிவழகியின் மெய் தொட்டது. மீண்டும் கண்களில் நீர் கோர்க்க.. “ஸாரி” என்று சொல்ல எத்தனித்து.., அவள் அவ்வார்த்தையை  ஆரம்பிக்கும்முன் “ஷ்”, என்று மறுதலித்தவன், அவள் இதழ் முற்றுகையிட்டான்.
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே
மறவாதே மனம் ;
மடிந்தாலும் வரும்
முதல் நீ ; முடிவும் நீ
அலர் நீ ; அகிலம் நீ
தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்…

Advertisement