Advertisement

ஜெய் ஸ்ரீ ராம்
அத்தியாயம் 20 பார்ட் 2
இருவரின் முடிவிலா கொடும் பாலைப்  பயணம், பசுஞ்சோலையில் நிறைவுற்ற பெரு மகிழ்வின் வெளிப்பாடாய், அவர்களின் தன்னுயிர்த்தேடலாய் அமைந்த நீண்ட நெடிய முத்தம்.
மெல்ல விலகி, அறிவழகியின் முகம் பார்த்த அன்பரசன், “வாவ்”, என்றான். அன்பரசனின் கைச்சிறைக்குள் இருந்த அறிவழகி, வெட்கம் கூடிய சிறுநகையுடன், “ஐ லவ் யு”, என்றாள்.
அவனது அணைப்பை இறுக்கிய அன்பரசன், “I love you too”, என்று ஆத்மார்த்தமாய் கூறிவிட்டு, சில நொடியில் என்ன யோசித்தானோ, வாய் விட்டு சிரித்து, “இப்போ இத எல்லாரும் எல்லாருக்கும் சொல்றாங்க”, என்றான்.
கணவனது சிரிப்பு இவளையும் தொற்ற,  “ஆஹாங்?”, என்றாள்.
“ஆமாடா, யார் வேணா அவங்க அன்பை சொல்றதுக்கு லவ் யூ-ன்னு தான் சொல்றாங்க, நேத்து கூட எனக்கு ஒரு பொண்ணு லவ் யூ சொன்னா?”, என்றான் சிரிப்போடு.
பளிச்சென சிரித்து போலியாய் அதிர்ந்தவள் போல,  “ஆ!!, யாரவ?”, என்க..
புன்முறுவலுடன், “ஆகாஷோட கிளாஸ் மேட், திடீர்னு கடைல பாத்தேன், பெரிய க்ரேயான் செட் வாங்கி ப்ரெசென்ட் பண்ணினேன். லவ் யூ அங்கிள் சொல்லி, முத்தம் கூட கொடுத்தா”
அன்பரசனின் மார்பில் குத்தி, “ஐய, அது குழந்த”, என்றாள்.
“எஸ். அதான் சொல்றேன், குழந்தைங்களே லவ் யூ சொல்றாங்க, விடலை  பசங்க இன்னும் மோசம், அதுக்கு அர்த்தமே தெரியாம சொல்லிட்டு திரியறாங்க. சோ.., நீ வேற சொல்லு”, என்றான் விடாப்பிடியாய்.
சிறிது யோசித்து, “ம்ம். ஐயம் கமிட்டட் டு யு?”, என்றாள் கேள்வியாக .
“ம்..ஹூம், இதென்ன வேலையா committed-ஆ இருக்கறதுக்கு?, மேல, மேல சொல்லு”,
“ம்ம். obliged ?”, இப்போது அவனது எதிர்பார்ப்பு என்னவாய் இருக்கும் என்ற  குறுகுறுப்பு அதிகமாகி அறிவழகி கேட்க..
“ம்ம். கடமைப்பட்டு??, ரொம்ப ஃபார்மலா, ஒரு பதவிப் பிரமாணம் எடுத்துக்கறா மாதிரி இல்ல?”, என்றவன், “ஒரு க்ளூ தரேன்”, அவளது மூக்கைத் திருகி, குறும்பான சிரிப்புடன், “இத நீ எங்கிட்ட மட்டும்தான் சொல்ல முடியும்”, என்று அவன் சொல்ல..
அறிவழகி முதலில் குழம்பி  பின் முகம் வெட்கத்தில் ஜிவுஜிவுக்க “ஏய். ச்சீ.. ஏதாவது தப்பான வார்த்தையா?”, என்றாள்.
அன்பரசன், “ஹ ஹ ஹ”, என்று வாய் விட்டு சிரித்து, “எமோஷனை குறை, அதில்ல, இது.. எல்லார் முன்னாடியும் எப்பவும் சொல்லலாம், லவ், கடமை, கமிட்மென்ட்..”, அறிவழகியின் நெற்றியை முட்டி, “நீ நினச்சது, இன்னும் வேறெல்லாமும் இதுல வந்திடும், சோ இது அதுக்கும் மேல …”, என்றுரைக்க..
அறிவழகி தெரியவில்லை என்பது போல உதடு பிதுக்க…, இரு கைகளால் அவள் கன்னம் தாங்கிய அன்பரசன், நேர்பார்வையாக அறிவழகியை ஊடுருவி பார்த்து , உள்ளார்ந்து “I’m married to you”, என்றான்.தொடர்ந்து,
“என் கேரக்டர் உனக்கோ நீ எப்படினு எனக்கோ தெரியாது,  எதிர்பார்ப்பு, பிடித்தம், வெறுப்பு இப்படி எதுவுமே தெரிலைன்னாலும், இத்தனை வருஷம் பிரிஞ்சிருந்தும், நாம சேர்ந்திருக்கோம்னா அதுக்கு காரணம், இந்த எண்ணம் மட்டும்தான்”, என்று சொல்ல.., அறிவழகி அவனது  அன்பில் கரைந்து ஆமென்பதுபோல கண்மூடித் திறந்தாள்.
“இன்னொன்னும் இருக்கு, மேரேஜ்-ல லவ், கேர், obligation, கமிட்மென்ட், செக்ஸ் எல்லாத்தையும் விட, பிரதிபலன் எதிர்பார்க்காம.., நீ சொன்னியே, ‘இன்னொரு பொண்ண பிடிச்சிருந்தாலும், நாந்தான் உன் பொண்டாட்டி, லவ், லொட்டு லொசுக்கு மத்த எல்லாமும் தானா வரும்-ன்னு, அந்த நம்பிக்கையோட காலம் பூரா அன்பை கொடுக்கற தன்மை, அது மேரேஜ்-ல மட்டும்தான் சாத்தியம்”.
மெல்ல அவள் கழுத்திலிருந்த தாலியை வெளியே எடுத்து, “இந்த பந்தம்,  இதுக்கு ஒரு வேல்யூ இன்னமும் இருக்கறதாலதான், இன்னமும் நம்ம கல்ச்சர் உயிரோட இருக்கு.”, என்றான்.
“ஆனா, சேஃப்டி இல்லன்னு நிறைய நாள் இது எடுத்து லாக்கர்-ல வச்சிட்டு போயிருக்கேன்”, என்றாள் அறிவழகி.
தலையசைத்து இல்லையென்று மறுத்து, “ம்ப்ச். இது வெறும் அடையாளம் அழகி, இப்போ நம்ம கல்யாணத்துக்கு அம்மாவோட தாலியதான் கழட்டி கொடுத்தாங்க, கொஞ்சம் தயக்கம் இருந்ததுதான் ஆனா.., குடுத்தாங்கல்ல. இது இல்லன்னா அவங்க எங்கப்பாவோட வொய்ப் ன்னு இல்லாம போயிடுவாங்களா என்ன?”
“ஏன்? கையெழுத்து போட்டு, மோதிரம் மாத்தி கல்யாணம் பண்றதில்லையா? அதில்ல நான் சொல்றது, நம்ம உணர்வுகள் அதுல ஊறின எண்ணங்கள், இதுதான்.. இப்படித்தான் இருக்கணும்னு ஒரு கோட்பாடு, துணை-ன்னா பேணிப் போற்றுதலுக்குரியவள்ன்னு விதைக்கப்பட்டிருக்கு பாரு, அதைத்தான் நான் சொன்னேன்”
“அதனாலதான் உன்னை விபச்சார விடுதிக்கெல்லாம் போய்த்தேடினேன், எப்படி இருந்தாலும், என்னவாகி இருந்தாலும், உயிரோட இருந்தா போதும்னு உன்னைக் கண்டுபிடிச்சு, உனக்கு இஷ்டம்னா என்னை ஏத்துக்க சொல்லணும்னு  இருந்தேன்”, என்றான்.
தாகத்திற்கு சுனை தேடியவளுக்கு, பேரருவியாய், காட்டாற்று வெள்ளமாய் அன்பரசன் கிடைக்க.., அறிவழகி அவனில் கரைந்தே போனாள். கண்களில் நீர் பெருக.. உணர்ச்சி மேலிட, இப்போது இதழ் முற்றுகை அவளுடையதானது.
அவள் விலகியபோது, “இந்த நேரத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட்ல உன்னை பாத்த அன்னிலேர்ந்து காத்திட்டு இருந்தேன்”, என்றான் குரலும் பார்வையும் மாறுபட.
” ‘எப்போது ஒரு பெண் ஆணை எவ்வித கட்டாயமுமின்றி முத்தமிடுகிறாளோ அப்போது அவனை முழுதுமாக நம்புகிறாள் என்று அர்த்தம்’-ன்னு எங்கியோ படிச்சதா ஞாபகம்”, என்றான். அறிவழகி இளநகையுடன் பார்வை தழைத்தாள்.
அருகே அன்பரசனின் அலைபேசி  ஒலி எழுப்ப, அன்பரசன் சுதாரித்து பேசியை எடுத்து பார்க்க அதில் சுசித்ரா. “சொல்லு சுசி?”, என்றதும்..
“மாமா எங்க இருக்கீங்க?”
“ப்ச், உனக்கென்ன வேணும்?”
“ஆங். கதவை தொறக்கணும்”, அவள் இடக்காக இழுத்துப் பேச…
அன்பரசனுக்கு மட்டுமல்ல அருகிலிருந்த அறிவழகிக்கும் சுசித்ரா வெளியில் இருந்துதான் பேசுகிறாள் என்பது புரிந்தது. சிரித்துக் கொண்டே, “உன் ரூம் கதவுதான? திறந்துக்கோ. முடிலன்னா உன் பக்கத்துல கண்ணன் இருப்பானே அவனை திறக்கச் சொல்லு”, என்று அன்பரசன் சொல்ல, அறிவழகி வாய்மூடிச் சிரித்தாள்.
இவன் கிண்டல் புரிந்து “அய போங் மாமா, ஸ்டோர் வீட்டு வாசல்ல இருக்கேன், உங்க கார் பாத்தேன், அதான் போன் போட்டுட்டு உள்ள வரலாம்னு..”, என்று இழுத்தாள்.
“வாலு.. உள்ள வா”,என்றான். அதற்குள் அறிவழகி எழுந்து வாயிற்கதவை திறக்கச் செல்வதற்கும் சுசித்ரா உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. அறிவழகியின் சிவந்திருந்த முகத்தை பார்த்ததும், ‘இன்னமும் இவர்கள் சண்டை ஒயவில்லையா?’, என்று ஒரு கணம் யோசித்து அன்பரசனின் சிரித்த முகம் பார்த்ததும் முடிவை மாற்றிக் கொண்டாள்.
“அறிவு போய் மூஞ்சி கழுவிட்டு வா, டீ போடறேன்”, என்றுவிட்டு, “மாமா, பால் பாக்கெட் ரெண்டு இருக்கு, இப்போ ஒன்னு காய்ச்சிட்டு ஒன்னு நான் எடுத்திட்டு போறேன், புதுப்பால் சாயங்காலம் வரும் எடுத்துட்டு வர்றேன். நாளைக்கு பால் காய்ச்சும்போது திரிஞ்சு போக்கூடாதுனு அத்தை சொன்னாங்க”, என்று அன்பரசனிடம் சொல்லி அடுக்களை சென்றாள்.
அறிவழகி சுசித்ரா சொன்னபடி செய்யச் செல்ல, அன்பரசன், “சுசி டீ குடுச்சிட்டு நான் அப்டியே ஆபிஸ் கிளம்பறேன்”, என்றான் சத்தமாக.
“மாமோய். ஊருக்கே கேக்குது. சொல்ல வேண்டியவங்க கிட்ட நேராவே சொல்லி போறது?”, என்று சுசித்ரா கிச்சனில் இருந்தே பதிலுரைக்க..
அறிவழகி முகம் துடைத்து வந்தவள் கிச்சனை அடைத்து சுசித்ராவைப் பார்த்து சிரிக்க, “அங்க குங்குமம் இருக்கு வச்சுக்க”, என்றாள். ஒரு அலமாரியைக் காண்பித்து.
கிசுகிசுவென, “ராசியாயிட்டிங்க போல?”, என்று அறிவழகியிடம் கேட்க.., பதிலுக்கு அவள் சிரிப்போடு புருவம் உயர்த்தி, “நாங்க எப்போ சண்டை போட்டோம் ராசியாறதுக்கு?”..
“ஆங்…!”, என்று வாய் பிளக்க, அவளது திறந்திருந்த வாயை விரல் கொண்டு மூடி, கிண்டல் பார்வை பார்த்து, “எப்பூடி?”, என்றான் அறிவழகி.
சுசித்ராவும் சிரித்து,”ம்ம். ஜாடிக்கேத்த மூடிதான்”, என்று விட்டு, “இந்த fridge க்ளீன் பண்ணி வைக்கிறேன், அங்க இருக்கற டீயை மாமாக்கு குடுத்துட்டு, நீயும் எடுத்துக்க. அத்தை விளக்கு வைக்கறதுக்குள்ள வர சொன்னாங்க. வெரசா கிளம்பனும்.” என்றாள்.
“நீ குடிச்சிட்டியா?”
“ம்ம். அங்க அத்தக்கு போட்டு கொடுத்துட்டு, நானும் குடிச்சிட்டுதான் வந்தேன், சூடு ஆறரதுக்குள்ள மாமாக்கு கொண்டுபோய் கொடு”, அறிவழகியை அனுப்பினாள்.
தேநீருடன் ஹாலுக்கு செல்ல அங்கே நாற்காலியில் அமர்ந்திருந்த அன்பரசன், “இன்னும் இருபது நிமிஷம் வெயிட் பண்ண சொல்லுங்க, வந்துடறேன்”, என்று யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். மனைவியின் கையிலிருந்த ட்ரேயிலிருந்து ஒரு கப் எடுத்து, “சின்ன வேலை இருக்கு ஆபிஸ் போயிட்டு வந்துடறேன்”, என்றுவிட்டு அவசரமாக பானத்தை  குடித்து வாயிலை நோக்கி திரும்பிச் செல்ல, அவன் போவதை பார்த்தபடி இருந்த அறிவழகி பதறி, “ஸ்ஸ்.ஸ்ஸ்.”, என்றாள்.
அன்பரசன் போட்டிருந்த வெள்ளை இளம் சந்தன நிற சட்டையின் பின்புறம், அறிவழகியின் ஸ்டிக்கர் பொட்டு, குங்குமமும் கருப்பான அவளது ஐ லைனரும் கண்ணீரில் கரைந்து ஈஷிக் கொண்டு என்று கலவையாக அதில் அப்பி இருந்தது.
அறிவழகியின் ஸ்ஸ்-ல் திரும்பியவன்,என்ன என்பது போல் பார்க்க, சட்டை சட்டை, என்று  ஜாடை காண்பித்தாள். என்ன? என்று கையால் வினவியவனுக்கு பொட்டு என்று அறிவழகி சைகை காண்பிக்க, அன்பரசன் அதுவும் புரியாமல் விழிக்க.., அறிவழகி தலையில் அடித்துக் கொண்டு, அவன் கையைப் பிடித்து அறைக்கு இழுத்துச் செல்ல..
ரகசியமாக, “இப்போ இதுக்கு டைம் இல்லடி.. “, என்று கிண்டலாக சிரித்தவாறே அன்பரசன் சொல்ல..
அறை வாசலில் நின்று திரும்பி அன்பரசனை முறைத்த அறிவழகி, “கொன்றுவேன் …”, என்று பத்திரம் காட்டி மிரட்டி, “பொட்டு, குங்குமம், ஐ லைனர்-ல்லாம் முதுகுல ஈஷிட்டு இருக்கு. வேற சட்ட மாத்திட்டு போங்க”, எனக் கிசுகிசுப்பாக கூறி அவனை அறைக்குள் தள்ளினாள்.
“ஹே, இது வெறும் ஆபிஸ் ரூம், என் ரூம்க்கு மாடிக்கு போகணும்”, என்றான்.
அவசரமாக எங்கோ வருவதாக போனில் சொன்னது நினைவு வர,”நா போயி வேணா எடுத்துட்டு வரட்டுமா?”, என்று அறிவழகி கேட்க..
“நோ நோ நானே போறேன்”, என்றான் அன்பரசன் அவசரமாக.
எதற்கு இத்தனை பதற்றம்? என்று கேள்வியாக மனையாள் நோக்க, “மீட்டிங் போகணும், ரொம்ப பக்காவா போகணும், அதான்”, என்று சமாளித்து மாடிக்கு செல்ல படிகளை அடைந்தான். மேலே மாடியில் இரண்டு விஸ்தீரணமான படுக்கை அறைகள் மட்டுமே. ஒன்று இவன் உபயோகத்திலும் மற்றொண்டை உடற்பயிற்சி கலன்களை வைக்கும் அறையாகவும் உபயோகித்து வருகிறான்.
சட்டை கழற்றி அதிலிருந்த கறைகளை பார்த்தவன், “பியூட்டி..”, என்று சிரித்தவாறே வேறு சட்டை மாற்ற ஆரம்பித்தான். அறையின் கோடியில் இருந்த ஒன்றை, ஒருமுறை அவனது பார்வை ப்ரியமுடன் தொட்டுத் தழுவியது.
கீழே கூடத்தில், டீயை குடித்து முடித்து காலி டம்பளர்களுடன் கிச்சன் செல்ல, “அறிவு… “, என்று சுசித்ரா ராகம் பாட…..
“சொல்லு சுசி”,
ஒரு கட்டைப் பைக்குள் தேவையானவைகளை எடுத்துவைத்து விட்டு, அறிவழகியை குறுகுறுவெனப் பார்த்து, “கைய பிடிச்சு இழுத்தியா?”, என்று சுசித்ரா கேட்க… [ அவள்தான் அறிவழகி அன்பரசனை கூட்டிச் செல்வதை பார்த்தாளே?]

Advertisement