Advertisement

அது குறித்து அன்று தேநீர்க்கடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதுதான், அறிவழகி எஸ்தரைப் பற்றி பேச்சு வந்தது, அப்போதுதான், இருவரையும் பார்த்தான், ஒருத்தியின் நெற்றியில் பொட்டு பளிச்சென பாந்தமாக இருந்தது. அழகிதான்,சுண்டியிழுக்கும் ரகமில்லை, ஆனாலும், முகத்தில் ஒரு நேர்த்தி… அறிவுக்களை தெரிந்தது. அன்புவின் பார்வை சில நொடி அவள் முகத்தில் தங்கி மீண்டது.
உடனே நண்பனின் டைம் பாஸ் என்ற பேச்சு வர… “சீ.. சீ.. டைம் பாஸ்க்கு பொண்ணுங்க  கூட பழகறதா?”, என்ற கோபம் வந்தது. அதன் பின் வேறு பேசி அனைவரின் கவனத்தையும் திருப்பி… கல்லூரிக்கு நேரமானதால்…  தேநீர்க்கடை கூட்டத்தை முடித்தான். நேரே வீட்டுக்கு சென்று, அவசரக் குளியல் போட்டு, காலை சிற்றுண்டி முடித்து,  கல்லூரிக்கு அவனது யமஹா-வில் அமர்ந்து, தலைக் கேசம் சிலும்ப கல்லூரி செல்லும்போது அவள் நினைவு வந்தது, “பொண்ணு அழகாத்தான் இருக்கு, அன்னிக்கு வாடகை இவங்கம்மாதான் குடுத்தாங்க, இவளை சரியா பாக்கல போல”, என்று தனக்குள் பேசியவனுக்கு, வெறும் ஈர்ப்பு மட்டும்தான்.
அறிவழகியைக் கண்ட இன்றும், இப்போதும் அதுவேதான், வெறும் ஈர்ப்பு மட்டும்தான், என நினைத்தவன், “இப்ப கொஞ்சம் கலராயிருக்கா”, ஹூம்.. பெருமூச்சு விட்டு, “எங்கேயிருந்தாலும் அவ நல்லா இருக்கணும்”, ஓட்டிக்கொண்டிருந்த காரின் ஸ்டியரிங்கைப் பார்த்து கூறினான்.
அவனின் சிந்தனையை கலைக்கும் விதமாக அலைபேசி அழைக்க, புருவம் முடிச்சிட, “ஹலோ யாரது?”,என்றான், காரணம் ஏதோ தெரியாத என்னிலிருந்து அழைப்பு, நேரமோ இரவு மணி பதினொன்றை நெருங்கி இருந்தது.
“நாங்க லீகல் மெட்டலார்ஜி வெயிட்ஸ் அண்ட் மேஷர்ஸ்- லேர்ந்து பேசறோம்”, கனத்த அதிகாரமான குரலில் ஒருவர் பேசினார்.
“சொல்லுங்க ஸார்”, சட்டென குரலில் பணிவு கலந்தான். இவர்கள் இந்த நேரத்திற்கு அழைக்கிறார்கள் என்றால் நிச்சயம் எங்கேயோ பிரச்சனை என்பதை மனம் தானாகவே கணக்கிட்டது.
லீகல்   மெட்டலார்ஜி துறை, என்பது அரசாங்கத்துக்கு சொந்தமான ஒரு அமைப்பு, எடைகள் மற்றும் அளவுகள் பயன்படுத்தும் எந்த ஒரு தயாரிப்பாளரும், இவர்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற பின்பே, அவர்களின் தயாரிப்பினை விற்பனைக்கு எடுத்து செல்ல முடியும். சீரான இடைவெளியில் அந்த லைசென்ஸ் புதுப்பிக்கபடவும் வேண்டும். தவறினால், அவர்களது எந்த தயாரிப்புக்களையும் [அவை எங்கிருந்தாலும்], நிறுத்தி வைப்பதற்கான அதிகாரம் இவர்களுக்கு உள்ளது.
“காலைலேர்ந்து உங்களுக்குத்தான் முயற்சி பண்ணிட்டு இருக்கோம். உங்க யூனிட்-டோட வெயிட்ஸ் அண்ட் மெஷர்ஸ் லைசன்ஸ் காலாவதி ஆயிடுச்சே தெரியாதா?”, என்று சாவதானமாக கூறி, வயிற்றில் புளியை கரைத்தனர்.
தென்னிந்தியா முழுவதும் இவனது நிறுவன தயாரிப்புக்கள், ஏறக்குறைய 52 இடங்களில் உள்ளன இந்த சித்தூர் யூனிட்,  எழுபத்தைந்து கிலோமீட்டர் சாலை பணிகளுக்கானது, அங்கு இவனது நிறுவனத்தின், தார் கலவை தயாரிக்கும் இயந்திரம் [ஹாட் மிக்ஸ் பிளான்ட்] அமைந்துள்ளது. அது ஒரு நாள் நிறுத்தப்பட்டாலும், தார் பாவும் [சாலையில் தார் கலவையை நிரவும்], இயந்திரத்திற்கு வேலை இல்லை. ஒன்றுடன் ஒன்றாக இந்த வேலை சம்பந்தப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அன்று மட்டுமல்ல, உரிமம் புதுப்பிக்கும்வரை  வேலை இருக்காது. வேலை தாமதமானால், அந்த பழி, தனது நிறுவனத்தின் தலையில் தான் விடியும், என்பது வரை தெளிவாக புரிந்தது.
ஆனால் ஏன்?, எங்கே தவறியது? சென்னையில், இருபத்திமூன்று பேரை வேலைக்கு வைத்து, சம்பளம்/படி/ இன்னபிற வசதிகளை செய்து கொடுத்த அன்பரசனுக்கு, முதலாளியாக மனம் கொதித்தது.  “இதைக்கூட பாக்காம, இவனுங்க ஆபிஸ்-ல உக்காந்து..  தேய்க்கிறானுங்களா?”,  மூர்த்தியிடம் பேச வேண்டும்.  ஆனால் இப்போதல்ல, முதலில் இவர்களை சரி கட்ட வேண்டும்.
“நான் திருப்பதிக்கு வந்திருக்கேன் ஸார், நீங்க எங்க தங்கி இருக்கீங்கன்னு சொல்லுங்க.. நேரா அங்கேயே வர்றேன், சௌத் இந்தியா மொத்தமும் நம்ம பிளான்ட்  இருக்கு, இதுவரைக்கும் இப்படி ஆனதேயில்லை. கொஞ்சம் பாத்து பண்ணுங்க ஸார்”, தழைந்தான்.
“ஓ.. தெரியுங்க. நம்ம ஜாஃபர் அலி சொன்னாரு, நீங்க நல்லா கவனிப்பீங்கன்னு….”, என்று மறுமுனையிலிருந்து பதில் வர… சட்டென ஒரு நிம்மதி பரவியது. ஜாஃபர், முதன் முதலில் உரிமம் வாங்கும்போது, அத்துறையில் பணியில் இருந்தவர், நேர்மையானவர், அவருக்கென எதுவும் கேளாமல், மற்றவர்கள் இத்தனை சார்ஜ் என்று கேட்டுவாங்கியவர், அரைமணி நேரத்தில் உரிமத்தை கையில் கொடுத்து வாழ்த்து சொன்னவர்.
அலைபேசியில் பேசிய இவர்கள் தேவை புரிந்துவிட்டவனுக்கு, ‘பணம்தான் செலவாகும், பரவால்ல அதனாலென்ன?, வேலை நிக்காது’, என்றுதான் தோன்றியது.
“ஆனா.. உங்க ஆபிஸ்ல மேனேஜ்மேண்ட் சரியில்லங்க. மூணு நாள் முன்னாடி போன் பண்ணி, விஷயத்தை சொன்னோம். ரெனீவல் பண்ணுங்கன்னு, ஆனா நாங்க எப்பவோ பேப்பர் கொடுத்துட்டோம்,  முறைப்படிதான் போவோம்னு, திவாகரோ சுதாகரன்னோ ஒருத்தன் தெனாவெட்டா பேசினான்”, என்று அவர் மேலும் உரைக்க… நூல் பிடிபட்டுவிட்டது.
இவர்கள் பணத்தோடு மரியாதையும் எதிர்பார்க்கிறார்கள். அய்யா சாமி உன்னைப் போல் உண்டா என்று வணங்கி, தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூழைக் கும்பிடு போட்டு தட்சிணை தரவேண்டுமென நினைக்கிறார்கள். அதெற்கென்ன?  கும்பிட்டால் போயிற்று, யாருக்கென்ன கேடு?
முட்டாள் தினகர், அங்கேயே வைத்து இவர்கள் கேட்பதை கொடுத்திருந்தால், குழப்பமே இருந்திருக்காது. இவர்கள், அங்கே ஒரு மடங்கு என்றால், இங்கே.. சித்தூர் வரை பயணித்து வந்ததால்.. என்னிடம் இருமடங்கு எதிர்பார்ப்பார்கள்.
“ஸார், அவன் புதுசுங்க. ஏதோ தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீஷ் பேசினா, எல்லாந்தெரிஞ்சிடுச்சின்னு ஒரு நினைப்பு வந்துடுது. நான் என்னான்னு கேக்கறேங்க, அடுத்த முறை இப்படி ஆகாது,ஏதும் பிரச்சனைன்னா, நீங்க எனக்கே போன் பண்ணுங்க ஸார். நான் உங்களை கலைல வந்து பாக்கறேங்க”, பாமரத்தனத்துடன் பணிவாக பேசி அவர்களது வசிப்பிடத்தை தெரிந்து கொண்டு, பேச்சை முடித்தான்.
அடுத்த நொடி, அலைபேசியில் அவனது விரல்கள், மூர்த்தியை அழைத்திருந்தது. நான்காவது ரிங்கில் தொடர்பில் வந்து, ” ஸார், என்ன சார் இந்த நேரத்துல?”, என்று கரகரப்பாக மூர்த்தி கேட்க..
“உங்கள மாதிரி ஆளுங்களை வேலைக்கு வச்சா.. ராத்திரி பகல் பாக்க முடியுமா என்ன?”, இவனது காய்ச்சும் குரலில்.. வெலவெலத்து, “என்ன ப்ராபளம் சார்?”, என்றார் முழு அலெர்ட்டில்.
“தினகர் நம்பர் கொடுங்க”, என்று இவன் வார்த்தையை கடித்து துப்ப…
“ஸார், கான் கால் போடறேன் சார்..”, என்று விட்டு அன்பரசனை ஹோல்டு செய்து, தினகரை அழைப்பில் இணைத்தார், மூர்த்தி.
“ஸார்.. “, என்று அவனது குரல் கேட்ட உடனே, “தினகரா?, மெட்டலர்ஜி ரெனீவல் ஆச்சா?”
“ஸா..ர்.. அது..”, அவன் தடுமாறினான், ” போன மாசமே பேப்பர்லாம் குடுத்து கட்ட வேண்டிய ஃபீஸ்-லாம் கட்டியாச்சு, ஆனா, இழுத்தடிக்கறாங்க, கேஷ் எதிர்பாக்கறாங்க போல இருக்கு”
“ஓஹோ, மூணு நாள் முன்னாடி டிபார்ட்மென்ட்-லேர்ந்து கால் வந்ததா?, என்ன பேசின அவன்கிட்ட?”
“ஸார், அவங்க வேலைய பாக்க நாம ஏன் சார் காசு தரணும்?”, என்று தினகர் மிக நியாயமாக கேட்க, அன்பரசனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
“மூர்த்தி, இவர் நா சென்னை வரும்போது இருக்க கூடாது.  செட்டில் பண்ணி அனுப்பிடுங்க”, மிக கடினமாக கூற…
“ஸார், ஸார்”, மூர்த்தி ஒருபுறம் …
“ஸா…….ர் “, என்று தினகர் ஒருபுறம் அலறி..,”லஞ்சம் கொடுக்கமாட்டேன்னு சொன்னதுக்காக டிஸ்மிஸ்ஸா?”, என்று அழாக்குறையாக கேட்டான்.
“இல்ல, அதுக்காக இல்ல, இன்னியோட நம்ம லைசன்ஸ் எக்ஸ்பயரி ஆயிடும்னு தெரிஞ்சும், வேலைய முடிக்காம இருந்தீங்க இல்ல அதுக்கு”,
“உங்களுக்கு இதோட சீரியஸ்னஸ் தெரில பாருங்க அதுக்கு…”,
“இன்னிக்கு சித்தூருக்கே வந்துட்டான், சீல் வைக்கறதுக்கு.. வச்சிருந்தா கம்பெனி பேரு நாறி போயிருக்கும். உங்க கொள்கை தப்பில்ல, ஆனா உன் கொள்கையால அடுத்தவன் பாதிக்கப்பட்டா? இருநூறு பேர் வயித்துல அடிப்பியா நீ? உன் கொள்கைக்காக? அவன்ட்ட லீகலா பாத்துப்போம்னு சொன்னியாமே பெரிய **ங்கி மாதிரி? நீ…  கம்பெனி நடத்தும்போது இத சொல்லு, நியாயம்.. ஏன்யா கழுத்தை அறுக்கறீங்க?”, கோபம் தலைக்கேற அன்பரசன் கத்தினான்.
அன்பரசனது நிலைமை, கேட்டுக்கொண்டிருந்த இருவருக்கும் தெளிவாக புரிந்தது, தினகர் மெளனமாக கேட்டுக் கொண்டிருக்க… “ஸார். சொல்லுங்க இப்போ என்ன பண்ணனும் ?”, என்று மூர்த்தி கேட்டதும்தான், நிதானத்திற்கு வந்தான்..
“கேஷ் ரெண்டு லட்சம் எடுத்திட்டு வாங்க, இப்போவே நைட்டோட நைட்டா… cab பிடிச்சு வாங்க.”, என்று அன்பரசன் துவங்க..
“ஸார், நான் வர்றேன் ஸார்”, என்று அதுவரை அமைதியாக இருந்த தினகர் குறுக்கிட…
“ம்ப்ச்..”, தனது ஒப்புதலின்மையை அன்பு தெரிவிக்க..
“இல்ல சார், என் தப்ப நானே தான் சரி பண்ணனும்”,என்றான் தினகர் தீர்மானமாக..
எந்த பதிலும் அன்பரசனுடமிருந்து வராது போகவே.. “நான் திரும்பி வந்தப்புறம் வேணா டிஸ்மிஸ் பண்ணிக்கோங்க ஸார்”, என்று மேலும் கூற.. மெல்லிய சிரிப்பு வந்தது, அன்பரசனுக்கு.
‘அவமானப்பட்டாலும் பரவாயில்லை, என்னால் ஏற்பட்ட பிரச்சனையை நானே தீர்க்கிறேன்’, என்ற அவனது குணம் பிடிபட்டது, பிடிக்கவும் செய்தது.
உடனே ஒப்புக் கொள்ளாமல், “சரி நீங்க கட் பண்ணுங்க. , நான் பேசிட்டு கால் பண்றேன்”, என்று விட்டு தொடர்பைத் துண்டித்தான்.
சில நொடிகளில், மூர்த்திக்கு அழைத்து அபிப்ராயம் கேட்க, “ஸார், நல்ல மாதிரி ஸார், வேலைல பக்கா, இதுலதான் கோட்டை விட்டிருக்கான், நான் பத்து நாள் இல்ல, அதனால சொல்ல மறந்திருப்பான், கை சுத்தம் சார்”, என தினகரக்கு நற்சான்று தர,
“அம்மா எப்படி இருக்காங்க மூர்த்தி?”, என்று கேட்டான். கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் மூர்த்தியின் தாயார். 
“உள்ள பூரா பரவிடுச்சுன்னு சொல்றாங்க ஸார், இன்னும் மூணு மாசம் தாண்டறது கஷ்டம்-ன்னு சொல்றாங்க”, கமறலாய் மூர்த்தி பதிலுரைக்க..
“ம்ப்ச். ஈஸி ஈஸி மூர்த்தி, நல்லா பாத்துக்கோங்க”, என்று விட்டு அழைப்பை நிறுத்தினான்.
பின், தினகரனுக்கு அழைத்து, சித்தூருக்கு வர சொல்லிவிட்டான்.
இனி இந்த பிரச்சனை ஒன்றுமில்லாமல் போய்விடும். ஆனால், தினகரிடம் கேட்டானே .. “உன் கொள்கைக்காக … அடுத்தவன் கஷ்டப்படணுமா?”, என்று. அது  கேட்ட அன்பரசனது மனதையே வாளாய் அறுத்தது.  நான் கஷ்டப்பட வச்சிட்டேனே? ஒரு உயிர பலி வாங்கிட்டேனே? என்ற மனஇறுக்கத்துடன், காரை சித்தூருக்கு விரட்டினான்.

Advertisement